Tuesday, June 14, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 19


தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 19

 

லட்சம் கனவு கண்ணோடு….
லட்சியங்கள் உன்னோடு….
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு....

    யார் யார் வாழ்வில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் காலம் தன் கடமையைச் செய்ய மட்டும் எப்போதுமே மறந்ததில்லை.
    இருபத்தெட்டாம் தேதி நவம்பர் மாதம்.
    வருணுக்கு வானொலி ஆறில் கடைசி நாள்.பழம்பாடல் நேயர் விருப்பத்தின் கடைசி பாடலை ஒலியேற்றியபோதே அவனுடைய கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தன.இனி மீண்டும் எப்போது இந்த வாய்ப்பு?
    அவனுக்கு வானொலி ஆறை விட்டுப்போவதில் பெரும் வருத்தம் இருக்கவே செய்தது.இருந்தபோதிலும் என்ன செய்வது?வாய்ப்புகள் தேடி வரும்போது அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா?கடைசியாக ஒரு முறை அங்கிருந்த பொருட்களை, தான் அமர்ந்திருந்த நாற்காலியை,கணினியை, ஒலிபெருக்கியை.... எல்லாவற்றையும் ஆசையாய் தடவிப் பார்த்துக் கொண்டான்.
   கடைசி பாடல் முடிந்து இறை அருள் ஒலிபரப்பானது.கடைசியாக பேச வேண்டிய வார்த்தைகளைத் தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டான் வருண்.அவனுடைய தொண்டை கட்டிக்கொண்டது.தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தான்.
    வாய்ப்பிருப்பின் மீண்டும் சந்திப்போம்,என்றென்றும் உங்கள் வருணன்,” கலங்கிவிட்டிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டே நேயர்களிடம் விடைபெற்றான்.
    அவனுக்குப் பிறகு நிகழ்ச்சியைத் தொடர்வதற்காக யோகேஸ்வரி வந்தாள்.வழக்கமாக அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு செல்பவளுக்கு அன்று வானொலி நிலையத்தில் அவனைக் கடைசியாய் எதிர்கொள்ளும் துணிவு இல்லை.எனவே அவன் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்காமல் போனாள்.
    ஒலிபரப்பு அறையைவிட்டு வெளியே வந்த வருண் கண்கலங்கியிருந்தான்.சக அறிவிப்பாளர்களும் அவன் பிரிவுக்காய் அழுதார்கள்.ஒன்றாய்ச் சேர்ந்து பணியாற்றியது. பசியாற்றியது யாவுமே அவர்களின் நினைவில் நிழலாடியது.வெளியில் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்.ஆனால் ஒரே வளாகத்தில் பார்த்துக்கொண்டது, அரட்டையடித்தது போன்று அது வருமா?” கனத்த மனதுடன் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று வந்தான்.
    உன் குரல் என் மகனோட குரல் மாதிரியே இருக்குன்னு சொல்வேனே? இனி எப்பய்யா உன் குரலைக் கேக்கப் போறேன்?”
   அவனுக்கு வழக்கமாக அழைத்துப் பேசும் மீனாட்சியம்மாளும் கண்கலங்கி அவனை அழவைத்தார்.
   கடைசி என்று வரும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?” என்று முன்தினம் நிகழ்ச்சி படைத்த வருண் அனுபவப்பூர்வமாய் அந்த வேதனையை அனுபவித்தான்.அவன் வீட்டை அடைந்த நேரம் அகல்யா அவனுக்குப் போன் செய்தாள்.
  எனக்கு என்னமோ மாதிரி இருக்கு வருண், அழுதாள் அவள்.
  நான் இப்பதான் அழுது முடிச்சேன்,நீ வேற ஏன் அகல்யா அழற?அழாதேடா,
  இனிமே எப்படி வருண்? என்னதான் இருந்தாலும் ரேடியோவுல உங்க குரலைக் கேட்டுக்கிட்டே தூங்கற அந்த சந்தோஷமான நேரத்துக்கு இணையா எதுவுமே வராதே?”
  என் குரல் இனி உனக்குதானே சொந்தம் அகல்யா,இன்னும் ரெண்டு வருஷம்.நீயும் உன் டிகிரியை முடிச்சிடுவே, தேன்மொழிக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துட்டு நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம்,அதுக்கப்புறம் தினமும் என் குரலை நேரடியாவே கேட்டுக்கிட்டு தூங்கலாம் நீ்,” வருண் அவளைச் சமாதானப்படுத்தினான்.
   எனக்கு இப்பவே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும் போல இருக்கு,” நிஜமாகவே அவளுக்கு அந்த ஏக்கம் வந்தது.வருண் சொன்ன மாதிரி அவனுடைய குரல் நேரில் தன்னைத் தாலாட்டி தூங்க வைக்கப் போகும் நாளை எண்ணி ஏங்கினாள் அவள்.

  • * * * * *
     வருணுடைய கடைசி நிகழ்ச்சியைத் தேன்மொழியும் கேட்டுக் கொண்டிருந்தாள்.அவளுக்கும் வருத்தமாக இருந்தது.வருண் வானொலி ஆறை விட்டு விலகப்போவது அவள் ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் அந்தப் பிரிவை நேரடியாக அனுபவிக்கும்போதுதான் அந்த வேதனையை உணர முடிந்தது அவளால்.அவள் வேதனைப்பட்டு கிடந்த சமயங்களில் அவனுடைய குரல்தான அவளுக்கு ஆதரவாக இருந்தது.வானொலியில் அவன் ஒலிபரப்பிய எத்தனையோ தன்முனைப்புப் பாடல்கள் அவளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
    இனிமே வருண் மாமா குரலை வானொலியில் கேட்க முடியாதாக்கா?” கயல்விழி வேதனைப்பட்டாள்.வருண் வானொலி ஆறிலிருந்து விலகுவதை அவளிடம் தேன்மொழி சொல்லவில்லை.சொன்னால் அவள் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பாள்.தேர்வுக்காக இரவில் கண்விழித்து படிக்கும்போது வருண் நிகழ்ச்சி படைக்க வந்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியோடு படிப்பவளாயிற்றே?”
    இனிமே நான் ராத்திரியில படிக்கும்போது வானொலியைத் திறக்க மாட்டேன்க்கா,” வருண் மீது கொண்டிருந்த அளவு கடந்த பாசம் அவளை அவ்வாறு பேச வைத்தது.அவளை ஆறுதல்படுத்தி அனுப்பிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள் தேன்மொழி.
   ஏழு வருடம் பழக்கமான வருண் மீதே இவ்வளவு பாசமாக இருக்கிறாளே? 19 வருடம் உடன் வளர்ந்த தன்மீது அவளுக்கு இன்னும் எவ்வளவு பாசம் இருக்கக்கூடும்,அவளை விட்டுவிட்டு சாகத் துடித்தாளே ஒரு காலத்தில்??டஒரு வேளை இவள் அப்போதே இறந்து போயிருந்தால் கயல்விழி என்னவாகியிருப்பாள்? இவள் அம்மா இறந்தபோது எப்படி குடும்பபொறுப்பு இவள் தலையில் விழுந்ததோ அந்த மாதிரி அப்பாவையும் வீட்டையும்  பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையை கயல்விழி ஏற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.இவளை மாதிரியே அவளும் ஒன்றும் தெரியாத அப்பாவியாய் வளர்ந்திருப்பாள்.இவளை மாதிரி அவளையும் எவனாவது காதலில் ஏமாற்றி….
   நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை,அம்மாவின் ஆசைப்படி கயல்விழி நிச்சயம் படித்து பட்டதாரி ஆகிவிடுவாள்.அந்த நம்பிக்கை தேன்மொழிக்கு இருந்தது.அதற்காகதானே இரவு பகல் பாராமல் இவ்வளவு பாடுபடுகிறாள்?
    ஒரு சிலர் காதலில் தோற்றதோடு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். ஆனால் இன்னும் சிலரோ வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவிலான ஒரு வாழ்க்கையைதான் வாழ்கிறார்கள்.தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்காக அவர்கள் தங்கள் வேதனைகளை உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
  இக்கால பெண்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள் என்றாலும் எல்லா பெண்களாலும் அது முடியாதே.தேன்மொழியும் அப்படிதான்.பிரியனால் ஏற்பட்ட அவமானத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ள இயலாமல் அன்றே இறந்திருக்க வேண்டியவள். பெருமளவு காயங்கள் குறைந்திருந்தாலும் அவளுக்கு ஏற்பட்ட அந்தத் தோல்வியும் ஏமாற்றமும் முழுமையாய் அவளைவிட்டு விலகப்போவதில்லை.ஆனாலும் தன் குடும்பத்திற்காக எல்லா காயங்களையும் மறந்துவிட தயாராகிவிட்டாள்.
   ஒரு காலத்தில் பிரியனுடைய காதல் மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்தது.ஆனால் இப்போது அப்படி அல்ல,வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் தன் இலட்சியங்களில் வெல்ல வேண்டும் என்ற வெறியும் அவளுக்குள் முதன்மையானதாக இருக்கிறது.
   பிரியனைவிட எல்லாவற்றிலும் சிறந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வாழக்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றெடுக்கத் தொடங்கிவிட்டது.அவளுக்கு நிச்சயம் நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும்.அதே வேளையில் தன்னுடைய எல்லா இலட்சியங்களிலும் நிச்சயம் வெல்வாள்.வாழக்கையில் யாவற்றையும் சாதிப்பாள்.நாமும் உடனிருந்து அவளுக்காக பிரார்த்திப்போம்.





முற்றும்…..

No comments:

Post a Comment