Wednesday, March 30, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 10


தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 10


 

என் ஆயுளின் அந்தி வரை
வேண்டும் நீ எனக்கு...
உன் தோள்களில் சாய்ந்திட
வேண்டும் நீ எனக்கு...

   அகல்யா வானொலிப் பெட்டியை தன் மெத்தையிலிருந்து எடுத்து நகர்த்தி வைத்தாள்,
     போதும் ரேணு. இனிமே நான் ரேடியோ எல்லாம் கேட்கப் போறதில்ல,
      ரேணூ வேண்டுமென்றே வெளியே எட்டிப் பார்த்தாள்.
     யாரை பாக்கற?”
     இல்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பைத்தியக்கார ரசிகை இருந்தாங்க,வருணுடைய குரலைக் கேக்கறதுக்காக முக்கியமான வகுப்பைக் கூட கட் பண்ணிட்டு லெக்ச்சரர்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டவங்க,அவுங்க எங்க போனாங்கன்னு பாக்கறேன்,”
     என்னா ஜோக்கா? ஹா ஹா ஹா சிரிச்சிட்டேன்,”
     அன்று முழுக்க வருண் மீதான அகல்யாவின் கோபம் தீரவேயில்லை,ரேணுவிடம் சொன்னபடி அவள் கடைசிவரை வானொலியைத் திறக்கவே போவதில்லை என்று சபதமிட்டிருந்தாள்.ஆனால் ரேணு வேண்டுமென்றே காதில் வாக்மேனைப் பொருத்திக்கொண்டு அவளைக் கடுப்பேற்றினாள்.
    உங்க வருண் மாமாவுக்கு இன்னிக்கு என்னா ஆச்சி சீனியர்?என்னென்னமோ உளறராரு? எல்லாமே ஊளைப் பாட்டா போடறாரு?நான் நெனைக்கிறேன் அன்னைக்கு உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்ததா சொன்னீங்கள்ய்? அதுதான் காரணம் போல்.
    வருணுக்கு உடல்நலம் ஏதும் சரியில்லையோ?” பதறிப்போய் வானொலியைத் திறந்தாள்.ரேணு சொன்னதுபோன்று வருண் வானொலியில் உளறிக்கொண்டிருந்தான்.அவனது குரலில் வழக்கமாக இருக்கும் துடிப்பும் உற்சாகமும் இல்லை.அவனுடைய வழக்கமான சிரிப்பு கூட காணாமல் போயிருந்தது. எதையோ தொலைத்தவன் போன்று ஒரு வித விரக்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
  
* * *
     மாலை மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது.வருணுடைய அறிவிப்புப் பணி முடிய இன்னும் சில வினாடிகளே இருந்தன.ஒரு நிமிடத்திற்கு முன்பு கூட தேன்மொழிக்குப் போன் செய்து பார்த்தான்.தொடர்பு கிடைக்கவேயில்லை.
     வருணுக்கு ஒருவிதத்தில் தான் தேன்மொழியிடம் கோபப்பட்டது நியாயமாகவே தோன்றியது.முன்பு அவள் அவளுடைய கதையை அவனிடம் சொன்னபோதே தேன்மொழி பிரியனிடம் கெஞ்சியதை வருண் வன்மையாக கண்டித்தான்.இவள் ஏன் இந்த அளவுக்குத் தாழ்ந்து போனாள் என்று அவள் மீதுதான் அவனுக்கு அதிக கோபம்.அவள் இன்னமும் பிரியனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.பிரியனை அவளுடைய மனதிலிருந்து முழுமையாக அகற்றிவிட துடித்தான்.
     தேன்மொழி மாற வேண்டும் என்று வருண் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? எவ்வளவு அறிவுரைகள் கூறியிருப்பான்? தன்முனைப்பு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவளை அழைத்துப் போயிருக்கிறான்.ஆனால் அவள் இன்னும் பழைய மாதிரிதானே இருக்கிறாள்? அவன் அவளுக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் வீண்தான் என்று அறியும்போது நிச்சயம் அவனுக்குக் கோபம் வரும்தானே? ஏதோ ஒரு கோபத்தில் ஒரு உரிமையில் திட்டிவிட்டால் இப்படியா அலைய வைப்பதுடூ ஆனாலும் அவள் எங்குதான் போயிருப்பாள்டூ்
    பல்வேறு குழப்பங்களுடன் அவன் அங்காசபுரியைவிட்டு வெளியே வந்தபோது அவனுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவைக்கும் இடத்தில் நின்றிருந்தாள் தேன்மொழி.அந்த இடத்தில் அவன் எதுவும் பேசவில்லை.தேன்மொழியைத் தான் வழக்கமாகப் போகும் பிரிக்பீல்ட்ஸ்; சீத்தாராம் உணவகத்திற்கு அழைத்துப் போனான்.
    வருண் வாங்கி கொடுத்த தோசையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து மீன்கறியில் தொட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
    நான் நேத்து போனை அடச்சி வெச்சிட்டு, வீட்டுப் போனோட வொயரையும் கழட்டி வெச்சிட்டேன்,” அவன் கேட்காமலேயே தலையைக் குனிந்தபடி வேறு திசையில் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
   நான் கூட நீ விஷத்த குடிச்சிட்டு எந்த ஆஸ்பத்திரியில படுத்து கிடக்கறியோன்னு நெனச்சேன்,” வருண் வேண்டுமென்றே நக்கலாகச் சொல்ல அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
   கண்டமாதிரி ஏசும்போது மட்டும் அதெல்லாம் தெரியலையா? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டு திரும்பி கூட பார்க்காம போனீங்க? என்னால உங்களுக்கு ஏன் கஷடம்? இனிமே என்னை நானே பாத்துக்குவேன்.அம்மா போன பிறகும் என்னால தனியே இருக்க முடிஞ்சது.பிரியன் போன பிறகும் என்னால தனியா இருக்க முடிஞ்சது.அதே மாதிரி நீங்க என்னைவிட்டுப் போனாலும் என்னால இருக்க முடியும்,”
   இதுதான் முதல்முறை.அவள் இவ்வளவு கோபமாக பேசி அவன் பார்த்தது.ஆனால் அவளுடைய அந்தக் கோபத்தை அவன் பெரிதும் இரசித்தான்.
   தேனும்மா, உன்னை நான் ரொம்ப ஏசிட்டேன்தான் ஒத்துக்கறேன்.ஏதோ ஒரு உரிமையில ஏசிட்டேன்.அதுக்காக இப்படிதான் செய்யறதா? ஒரு நாளு பூரா தவியாய் தவிக்க வெச்சிட்டியேமா?”
  அவன் அதிக சந்தோஷமாக இருக்கும்போது இப்படிதான் அவளை தேனும்மா என்பான்.
   அவள் சட்டென நிமிர்ந்தாள்.
   உங்ககிட்ட ஒன்னு சொல்லனும், சொல்லலாமா?”
   இது என்ன புதுசா அனுமதியெல்லாம் கேக்கற?”
   நீங்கதானே இனிமே உங்க கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க? உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் வேற..நான் தொந்தரவு பண்ணிட கூடாதில்லையா?
   நான் அந்த அர்த்தத்துல சொல்லலம்மா,சொல்லு,”
   என்னால பிரியனை மறக்க முடியலங்கறது உண்மைதான்.பிரியனுக்காக கெஞ்சி கதறனது உண்மைதான்.பிரியனை நெனச்சி நான் இன்னமும் அழறது கூட உண்மைதான்.ஆனா இப்ப அந்தப் பிரியனே நேர்ல வந்து என்னைக் காதலிக்கறதா சொன்னா கூட போடான்னு சொல்லிட்டு வந்துடுவேன்,
    அவள் அப்படி சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது.
    சரி, என் மேல கோபம் ஏதுமில்லையே?”
    அவள் இல்லை என தலையசைத்தாள்.
    அழுதியா?”
    அன்னிக்கு ஏற்கனவே அழுதுக்கிட்டு இருந்தேன்.நீங்க ஏசிட்டுப் போனதும் இன்னும் ரொம்ப அழுதேன்.எப்படி வலிச்சது தெரியுமா?” அவள் திடீரென மேசையில் தலைசாய்த்து அழுதாள்.
   வருணுக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை.அவளுடைய தலையில் கைவைத்து ஆறுதல் சொல்ல எண்ணி தன் கையை அவளை நோக்கி கொண்டு போனான்.தேன்மொழி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.வருண் என்ன நினைத்தானோ தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
  இரு வரேன்,” வருண் கை கழுவ எழுந்து போனான்.அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
  இரண்டு நாட்களா எப்படி அழுதுக்கொண்டிருந்தாள்?இப்போது அவளுடைய சோகமெல்லாம் போன இடமே தெரியவில்லை.எங்கிருந்து வந்தது இந்த புத்துணர்ச்சியும் குறும்பு பேச்சும்?வருண் அருகிலிருக்கும்போது தான் இன்னும் அதிக தன்னம்பிக்கையோடு இருப்பதாக தோன்றியது அவளுக்கு.
  வருண் அன்பானவன். பண்பானவன். பெண்களை மதிப்பவன். குறும்புக்காரன் வானொலியின் மூலம் மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் பிரபலமானவன். மலேசிய தொலைக்காட்சியின் தினசரி நிகழ்ச்சியின் வாயிலாக பிற இனத்தவர்களுக்கும் நன்கு அறிமுகமானவன். இப்படி எவ்வளவு பெருமைக்குரிய விசயங்கள் இருக்கின்றன வருணைப் பற்றி,அப்படிப்பட்ட ஒருவன் தனக்கு நண்பனாக கிடைத்தது பெரும் பாக்கியமென்றே கருதினாள் அவள்.
    வா தேனு. போகலாம்,”வருண் அவளை அழைத்துக்கொண்டு போனான்.
  
                                                    தொடரும் …….

Sunday, March 27, 2011

சிறுகதை - காதல்

காதல்
      

       காலையில் கண்விழித்தபோதே காதலும் கண்விழித்துக் கொண்டது.ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தது.பிறகு என் தோளில் ஏறி என்னைக் கட்டியணைத்துக் கொண்டது.விடாப்பிடியாய்ப் பிடித்து கீழே இறக்கிவிட்டேன்.முருங்கை மரத்து வேதாளமாய் மீண்டும் என்னில் ஏறிக்கொண்டது.
      ஐயோநீ என்னுடன் இருப்பது யாருக்கும் தெரியாது.இப்போதைக்கு யாருக்கும் தெரியவும் வேண்டாம்.இங்கேயே இரு என்று பணித்துவிட்டு காதலைத் தலையணைக்கடியில் ஒளித்து வைத்துவிட்டு குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன்.
     குளித்துக் கொண்டிருக்கும்போதே குளியலறைக் கதவைத் தள்ளிக் கொண்டு எட்டிப் பார்த்தது.
    ச்சே, வெட்கங்கெட்ட காதலே,” என்று திட்டியபடி குளிக்கலானேன்.
   நான் உடைமாற்றுவதை, தலைசீவுவதை, மேக்கப் போடுவதை எல்லாவற்றையும் உடனிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
    எல்லாம் முடிந்து மாடிப்படிகளில் இறங்கியபோது என் முதுகில் ஏறிக்கொண்டு வந்தது காதல்.பிளாந்தா தடவிய ரொட்டித் துண்டுகளை விழுங்கி, நான் ஹார்லிக்ஸ் குடிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
   மற்ற காதலைப் போன்று என் காதல் எனக்கு எந்த நோய்க்கிருமியையும் தந்ததில்லை.அது என்னிடம் வந்து சேர்ந்த பிறகுதான் நான் நிம்மதியாக உறங்குகிறேன்.நிறைய சாப்பிடுகிறேன்.சதா சந்தோஷக் கனவில் மிதக்கிறேன்.எறும்பைப் போன்று சுறுசுறுப்பாக இருக்கிறேன்.
     நான் சாப்பிட்டு முடித்து கார் சாவியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தபோது தானும் உடன் வரப்போவதாக அடம்பிடித்தது காதல்.
 ஐயோ வேண்டாம்,நீ என்னுடன் இருந்தால் என்னால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலாது>நீ என்னைத் தொந்தரவு செய்துக் கொண்டே இருப்பாய் என்றேன்.
  இல்லை இல்லை,” நான் அமைதியாக இருப்பேன்.என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.இருக்குமிடம் தெரியாமல் சமர்த்துப் பிள்ளையாய் இருப்பேன்,என்றபடி பரிதாபமாய்ப் பார்த்தது.
   உன்னை நம்பமாட்டேன்,” என்று மறுத்துக் கொண்டே காலணியை அணிகையில் என்னை முந்திக்கொண்டு காரை நோக்கி ஓடியது.அதைத் தடுத்து நிறுத்த வழியற்று இருந்தேன் நான்.
  என்ன சொன்னாலும் இந்தக் காதல் என் பேச்சைக் கேட்பதேயில்லை.எனக்குக் காதலை வெளியில் அழைத்துப் போக மிகவும் பயம்.அது வெளியே இருந்தால் அதற்கு நிறைய ஆபத்துகள் காத்திருப்பதாக எனக்குத் தோன்றும்.என்னவரின் வீட்டாருக்குக் காதலைப் பிடிக்கவில்லை,நான் தமிழ்ப்பெண் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்,ஆனால் இந்தக் காதல் கேட்பதில்லை.ஒரு தடவை என்னவரின் குடும்பத்தாரிடமிருந்து அடிபட்டுக் காயப்பட்டு கிடந்தது.சில நாள்தான்..மீண்டும் எல்லாவற்றையும் மறந்துவிட்டது,இதோ இப்போதுகூட அடங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் காதலை என்னதான் செய்வது?
  பயத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொண்டு காதலைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன்.கைகளைக் கட்டிக்கொண்டு படு பவ்யமாய் சாந்த சொரூபமாய் வந்தது.கொஞ்ச நேரம்தான் அதன் அடக்க ஒடுக்கமெல்லாம்.பத்து நிமிடத்திற்குள் அதன் குரங்கு சேட்டையை ஆரம்பித்துவிட்டது.பெல்ட்டை அவிழ்த்துப் போட்டுவிட்டு என்னை நெருங்கி வந்தது.ஹேன்பிரேக்கை இழுத்துப் பார்த்தது.கியர் பாக்ஸில் ஏறி இறங்கியது.உச்சக்கட்ட சேட்டையாய் ஸ்டியரிங்கின் மேல் ஏறிக்கொண்டு அசைத்தது.அது செய்த சேட்டையில் சற்று தடுமாறி எதிரே வந்த காரை மோதியிருப்பேன்.விளைவு காலையிலேயே ஓர் இந்திய ஆடவனிடம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.வீட்டில் காலையிலேயே மனைவியிடம் நன்கு வாங்கி கட்டிக்கொண்டு வந்திருப்பான் போலும்.ஒட்டுமொத்த எரிச்சலையும் என் மீது கொட்டி இசைமழை மாதிரி வசைமழையைப் பொழிந்துவிட்டுப் போனான்.
  இப்போது உனக்கு சந்தோஷமா?இதனால்தான் நீ என்னுடன் வருவதை நான் விரும்புவதில்லை, காதலைக் கடுமையாக திட்டிவிட்டேன்.அது முறைத்துக் கொண்டுவிட்டது.கார் ஸ்டியரிங்கை விட்டு அவசர அவசரமாக இறங்கியது.என்னிடம் கோபித்துக் கொண்டு காரின் பின்சீட்டில் போய் அமர்ந்து கொண்டது.
  நான் அலுவலகத்தை அடைந்து காரை நிறுத்திவிட்டு இறங்கினேன்.காதல் அப்போதும் என்னுடன் முறைத்துக் கொண்டு இறங்கி வராமல் காரிலேயே அமர்ந்திருந்தது.
  எப்படியோ போய்த் தொலை,” என்று திட்டிவிட்டு என்னுடைய பஞ்ச் அட்டையை எடுத்துக் கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.நான் அறைக்குள் நுழைந்த சற்றைக்கெல்லாம் என் போஸ் உள்ளே நுழைந்தார்.
  ஏழு மாத கொழுப்பைக் கர்ப்பம் சுமந்திருந்த அந்த மனிதர் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார்.அலுவலக நேரமோ எட்டு மணி நேரம்தான்.அவர் பத்து மணி நேரத்திற்குரிய வேலையைப் படடியலிட்டிருந்தார்.செயலாளினி ஆயிற்றேஅதனால் எரிச்சலை அடக்கியபடி மேல்வரிசை பற்கள் மட்டும் தெரிய அளவோடு புன்னகைத்துத் தலையாட்டி வைத்தேன்.
  இரவு முழுக்க உறங்கி கிடந்த கணினியை எழுப்பி மைக்ரோசோப்ட் எக்ஸெல்லைத் திறந்தேன்.என் அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.எழுந்து போய்த் திறந்தேன்.காதல் தன் எல்லா பற்களையும் காட்டியபடி நின்று கொண்டிருந்தது.என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டது.
  சரி சரி. எனக்கு நிறைய வேலை இருக்கிறது,சிரிக்காத ஊர்ல இருந்து வந்திருக்கற என்னோட போஸ் பாக்கறதுக்கு முன்னாடி உள்ளே வந்து உட்காரு,” காதலை என்னிடமிருந்து பிரித்தெடுத்துவிட்டு கணினியோடு ஐக்கியமானேன்.
   காதல் சில நிமிடம் அமைதியாக இருந்தது.பிறகு என் காதலரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனது.ஐந்து மணிக்குள் வந்துவிடும்படி பணித்துவிட்டு என்னுடைய வேலையைத் தொடர்ந்தேன்.
  சொன்னபடி சரியாக ஐந்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்த காதல் கையில் பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு வந்திருந்தது.நான் ஆவலாய்ப் பார்த்தேன்.மூட்டையைப் பிரித்துக் காட்டியது.உள்ளே நிறைய முத்தங்கள்.என்னவரிடமிருந்து மூட்டை நிறைய முத்தங்களை வாங்கி கொண்டு வந்திருந்தது.
  மூட்டைக்குள்ளிருந்த முத்தங்களை எடுத்து என் கன்னம்,நெற்றி, உதடு என்று முகம் முழுக்க ஒட்டி வைத்தது.
   போதும் போதும் முகம் முழுக்க எச்சிலாக்கிவிட்டாய்,” செல்லமாய்த் திட்டினாலும் அதைத் தடுக்கவில்லை நான்.
   மணி ஐந்தரையை நெருங்கியது.என் வேலை முடிந்துவிட்டிருந்தது.காதலை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.என்னவரைப் போய்ப் பார்த்துவிட்டுப் போகலாம் என என்னை வற்புறுத்தியது காதல்.
  சரி என்று காரை செலுத்தினேன்.திடீரென எதிரே ஒரு பேருந்து வந்தது.அதில் மதம், இனம், ஜாதி ,ஈகோ  எல்லாமே உட்கார்ந்திருந்தன.டிரைவர் சீட்டில் விதி உட்கார்ந்திருந்தது.புன்னகையற்ற முகத்துடன் பேருந்தைச் செலுத்தியபடி வந்து கொண்டிருந்தது.என்னவோ நடக்கப்போகிறது என என் உள்மனம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேகமாக வந்து என் காதலை மோதித் தள்ளியது.காதல் காருக்கு வெளியே தூக்கி எறியப்பட்டது.ஐயோ என பதறிக்கொண்டே காரை விட்டு இறங்கினேன்.காதல் காயப்பட்டுக் கிடந்தது.உடலெங்கும் காயம்.அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்தேன் நான்.என்னைப் பார்த்துக் கொண்டே துடிதுடித்தபடி உயிரைவிட்டது காதல்.

சில நாட்களுக்குப் பிறகு,,,,,,,,,,
     அலாரச் சத்தம் கேட்டு கண்விழித்தேன்.கட்டிலில் என்னைத் தவிர யாருமில்லை,மனம் வலித்தது.ஆனால் அழுவதற்குத் தெம்பில்லை.கண்ணீரும் மிச்சமில்லை.எழுந்தேன்,குளித்தேன்,உடைமாற்றிக் கிளம்பினேன்.எதுவும் சாப்பிட தோன்றவில்லை.காரைக் கிளப்பினேன்.மௌனமாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது என் பயணம் தனிமையில்



உதயகுமாரி கிருஷ்ணன்.

Sunday, March 20, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 9

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 9




 

தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சமேன் உன்னைத் தேடுது?
அழகே நீதான் எங்கே? எங்கே?
 
       குட்டித் தூக்கம் போட்டு எழுந்த அகல்யா துளசி சவர்க்காரத்தைப் போட்டு குளிரெடுத்து நடுங்கும் வரையில் குளித்தாள்.அரைமணி நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறியவள் அடுத்த முப்பதாவது நிமிடத்தில் புடுராயா பேருந்து நிலையத்தின் அருகே பத்தாங் பெர்ஜுந்தை போகும் 147-ஆம் எண் பேருந்துக்காக காத்திருந்தாள்,வருணும். யோகேஸ்வரியும் வழிநடத்தும் உல்லாச ஊர்வலம் நிகழ்ச்சி இரவு ஏழு முப்பதுக்கு பத்தாங் பெர்ஜுந்தை பொதுமண்டபத்தில் நடைபெறவிருந்தது,வருண் மீது பைத்தியமாக இருக்கும் அவள் வருணை நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று விரும்பிய ரேணுதான் அவளை வற்புறுத்தி அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாள்.அவள் கொஞ்சம் தாமதமாக வருவதாக சொன்னாள்.
     அகல்யா கருப்பு நிற பிளவுஸ், கருப்பு நிற பாவாடை அணிந்திருந்தாள்.கண்மை, நெற்றிப் பொட்டு, வளையல், கடிகாரம், சப்பாத்து எல்லாமே கருப்பு நிறத்தில்.
     ஹலோ, ஸ்வீட் கருப்பி மோட்டாரில் போன எவனோ கத்திவிட்டுப் போனான்.எதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தாள்.
    
     அகல்யா பத்தாங் பெர்ஜுந்தை பொது மண்டபத்தை அடைந்தபோது மாலை மணி ஆறுதான் ஆகியிருந்தது.வருணை அங்கு பார்த்துவிட்டாள்.இன்னமும் கூட்டம் வராத நிலையில் மண்டபத்தில் ஒரு சிலர் மட்டுமே அமர்ந்திருக்க அவளும் ஒரு மூலையில் அமர்ந்தாள்.கையில் எதோ ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த வருண் திடுமென அவளே எதிர்பாராத வகையில் அவளுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்.அவள் அவனை ஆவலாய் பார்த்தாள்.
   ரொம்ப வெளிச்சமா இருக்கீங்க,கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கறீங்களா?கண்ணு கூசுது,” வருண்தான் அவளிடம் அப்படி சொன்னான்.
   எவ்வளவு திமிர்?”அவள் முறைப்பதை காதில் வாங்கி கொள்ளாமல் கையில் வைத்திருந்த காகிதத்தைப் படித்துக் கொண்டிருந்தான் வருண்.
       
* * * * *
     அங்காசபுரி அலுவலகம் காலையிலேயே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.வருண் முதலாவது மாடியிலிருந்த லெட்டர் டிப்பார்ட்மெண்ட் டுக்குச் சென்று நம்மைச் சுற்றி அங்கத்திற்காக வந்திருந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு வந்தான்.அவ்வாரத்தில் நடக்கவிருந்த நிகழ்வுகளை முறையாக தொகுத்து கணினியில் பதித்து வைத்தான்.சுங்கைப்பட்டாணிக்குப் போயிருந்த அவன் அதிகாலை ஐந்து மணிக்குதான் வந்து சேர்ந்திருந்தான்.அவன் வந்த விரைவு பேருந்தின் இருக்கைகள் குறுகலாக இருந்ததால் உடம்பெல்லாம் பயங்கர வலி வேறு. அவனுக்கு இரவு எட்டு மணிக்கு வேலை.அதற்கு வேறு தயார் செய்ய வேண்டும்.
     வருண் நிகழ்ச்சிக்கு எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தபோது மாலை மணி ஐந்தாகிவிட்டிருந்தது.மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோது அவனுக்குத் தேன்மொழியிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது.அவனை உடனே வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.
    அப்படி என்ன முக்கியமான விசயமாக இருக்குமென்று யோசித்தபடி மோட்டார் சைக்கிளை காஜாங்கை நோக்கி செலுத்தினான்.அவன் அவள் வீட்டை அடைந்தபோது தேன்மொழி அழுதுக்கொண்டிருந்தாள்.
   சொல்லு தேன்மொழி. என்ன நடந்துச்சி? ஏன் இப்படி அழற?” அவ்வளவு களைப்பிலும் அக்கறையோடு விசாரித்தான்.
   நேத்து அப்பா ஈப்போவுக்குப் போயிருந்தாரு.பிரேமா அத்தை இந்த வாரம் வீட்டுக்கு வர்றதா அப்பாக்கிட்ட சொன்னாங்களாம்.”
   வருண் குறுக்கே பேசாமல் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்டுக்கொண்டிருந்தான்.
   பிரியனும் வர்றாராம்,எனக்குப் பிரியனை லலிதாவோட ஜோடியா பாக்கற சக்தி கிடையாது.அவர பாத்தா நான் கண்டிப்பா அழுதுடுவேன்.எனக்கு திரும்ப பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சி,” அவள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினாள்.
   வருண் அவள் ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கிறாள் என்றுதான் நினைத்திருந்தான்.அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குக் கோபம்தான் வந்தது.ஏற்கனவே தூக்கக் களைப்பாலும், அசதியாலு[ம் ஒரு மாதிரியாக இருந்த வருண் அவளைக் கோபமாகப் பார்த்தான்.
   உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டியா? இது ஒரு பெரிய பிரச்சனையா? உன்னை யாரு அவங்க வர்ற நேரத்துல வீட்ல இருக்க சொல்றது?
எங்கயாவது வெளிய போயிடு,இல்லன்னா உன் ரூம்குள்ளயே இருந்துக்கோ. வெளியே வராதே!         இதெல்லாம் பெரிய பிரச்சனையா? இதுக்குதான் என்னை வரச்சொன்னியா? எனக்கு எவ்வளவோ வேலை இருக்கு தெரியுமா?என்னமோ ஏதோன்னு பதறி போய் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்.
   அவன்தான் உன்னை வேண்டாம்னு கசக்கி, காயப்படுத்தி தூக்கி எறிஞ்சுட்டுப் போய்ட்டான்,இன்னும் அவனை நெனச்சே ஏன்..?நான் எவ்வளவு சொன்னாலும் நீ கேக்கவே மாட்டேங்கற? என் பேச்சுக்குத்தான் மதிப்பே இல்லையே? அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லற? போ. போயி அந்தப் பிரியனை நெனச்சி அழுதுக்கிட்டே இரு,எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்,” வருண் கோபமாகப் பேசிவிட்டுப் போய்விட்டான்.
    நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வந்து படுத்தவன் காலையில் பத்து மணிக்கு மேல்தான் எழுந்தான்.எழுந்ததுமே அவனுக்குத் தேன்மொழியின் ஞாபகம்தான் வந்தது.உடனே அவளுடைய கைத்தொலைபேசிக்கு அழைத்தான்.
   வீ ஆர் நோட் கெட்டிங் ரெஸ்போண்ட் போர் த நம்பர் யூ ஹேவ் டைல்ட்,ப்ளீஸ் ட்ரை அகேய்ன் லேட்டர்
    வருண் அவளுடைய வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தாலும் யாரும் எடுக்கவில்லை.
    அவன் கோபத்தில் அவளைத் திட்டிவிட்டானே தவிர அவளுக்காக அவன் மனம் வருத்தப்படவே செய்தது.அவள் நிச்சயம் அழுதிருப்பாளென்று அவனுக்குத் தெரியும்.அவளுடைய வீட்டிலோ. பூக்கடையிலோ போய்ப் பார்க்க கூட அவனுக்கு நேரமில்லை.பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சி வேறு இருந்தது.
   மீண்டும் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தான்,தொடர்பு கிடைக்கவேயில்லை.
   எங்கே போயிருப்பாள்,எப்போதும் இப்படி செய்ய மாட்டாளே?
    அவனுக்குள் ஒரு பயம் பூத்தது,.அவனால் தன் வேலையை ஒழுங்காக செய்யவே முடியவில்லை.அவனுடைய எண்ணங்கள் யாவும் தேன்மொழியைச் சுற்றியே இருந்தன.
    அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு ஏதும் சென்றுவிட்டாளா? ஒரு வேளை தான் நடந்து கொண்ட முறை சரியில்லையோ? எந்த விசயமாக இருந்தாலும் தன்னிடம்தானே முதலில் சொல்வாள்? அவளைப் போய் ஏசிவிட்டோமே?அதுவும் சற்று அதிகப்படியாகவே அவளைத் திட்டிவிட்டதாக தோன்றியது.திட்டிவிட்டு அவளுடைய முகத்தைக் கூட பார்க்காமல் வந்துவிட்டோமே?” வருண் பதறினான்,
    அவள் ஏற்கனவே அழுதுக் கொண்டிருந்தாளே? தானும் அவளை ஏசிவிட்டதால் அவள்..அவள்அவனால் அதற்கு மேல் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனம் தவியாய் தவித்தது.


                                            



தவிப்பு தொடரும் …..