Thursday, November 14, 2013

லவ்’ திரைப்படமும் என் சிறுவயது சல்மான்கானும்


லவ் திரைப்படமும் என் சிறுவயது சல்மான்கானும்

 


     ஓர் இரவில் அவள் அவனோடு தனித்து நின்றிருப்பாள் ஓரிடத்தில்.குறும்புத்தனமும்,குதூகலமும்,குழந்தைத்தனமும் நிறைந்த அவளின் பெயர் மேகி. அவனோ சாந்தமானவன்.சிறுவயதில் நடந்து முடிந்த ஒரு சோகம் அவன் முகத்தில் எப்போதும் உறைந்திருக்கும்.ஏதோ பேச எண்ணிய வேளையில் அவனுடைய நண்பன் ஒருவன் அழைக்க,அவளை அங்கேயே காத்திருக்க வைத்துவிட்டு தன் நண்பனுடன் செல்வான்.போன வேலை முடிய தாமதமாகவே அவன் அவளை மறந்தே போய்விடுவான்.மழை வேறு பெய்துகொண்டிருக்கும்.பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சாப்பிட போவான்.கடைக்காரர் அவனிடம் உணவு எல்லாம் தீர்ந்துவிட்டதாகவும் மேகி மட்டும் இருப்பதாகவும் சொல்வார்.மேகி என்ற வார்த்தையைக் கேட்டதும்தான் அவனுக்கு அந்தப் பெண்ணின் ஞாபகம் வரும்.பதறிப் போய் அவளைத் தேடி அதே இடத்திற்குப் போவான்.மேகி அந்த இடத்திலேயே மழையில் நனைந்து,குளிரில் நடுங்கியபடி காத்திருப்பாள் அவனுக்காக.எனக்கு மிக மிக இரசனையாக தோன்றிய அந்தக் காட்சி இடம்பெற்றது லவ் என்ற ஓர் ஹிந்தி திரைப்படத்தில்.

 

      பொதுவாகவே திரைப்படம் பார்ப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் எல்லாப் படங்களையும் நான் இரசித்துப் பார்த்துவிடமாட்டேன்.பாடல்கள் என்னை ஈர்த்தால்,படத்தின் ஆரம்பமோ,நடிகர்களோ கவர்ந்தால் மிகவும் இரசித்துப் பார்ப்பேன்.படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியோடும் என்னைப் பொருத்திக்கொண்டு மிக இரசனையோடு பார்ப்பேன்.தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி ஹிந்திப் படங்களையும் நான் விரும்பிப் பார்ப்பேன்.அப்படிப் பார்த்த படங்களில் என்னை வெகுவாய்க் கவர்ந்த ஒரு படம்தான் சல்மான்கான்,ரேவதி நடிப்பில்,சுரேஸ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த லவ் என்ற படம்.

     நடிகர் சல்மான்கான் பற்றி பத்திரிக்கைகளில் படித்திருந்தபோதும் திரையில் நான் முதன்முதலில் பார்த்தது அப்போதுதான்.வழக்கமான காதல் படம்தான்.ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனத்தில் ஆழப்பதிந்து போனது.

    படத்தில் ரேவதிக்கு துருதுரு பாத்திரம்.எப்போதும் ஏதாவது சேட்டை செய்து கொண்டே இருப்பார்.வாய் ஓயாது பேசுவது,அடிக்கடி மாத்திரையை விரும்பி சாப்பிடுவது என்று குறும்புக்காரியாக இருப்பார்.சல்மான்கானோ அப்படியே அவருக்கு நேரெதிர் பாத்திரம்.அவருடைய சிறுவயதில் நடந்த துயரமும்,அம்மாவின் மரணமும் அவரை சராசரி ஆண்கள் மாதிரி கலகலப்பாக இல்லாமல் அமைதியானவனாக மாற்றியிருக்கும்.ஒரு தடவை கடைக்கு பேனா வாங்க போகும் ரேவதி அது சிவப்புப் பேனாவா நீலப்பேனாவா என கண்டுபிடிப்பதற்காக முதுகு காட்டியபடி வெள்ளைநிற சட்டையில் நின்றிருக்கும் சல்மான் கானை நெருங்க அவர் வெடுக்கென திரும்ப ரேவதியின் குறும்பு கவர்ந்தாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருப்பார்.இப்படியே அறிமுகம் ஆனபின் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் ரேவதிக்கு சல்மான்கானை அதிகம் பிடித்துப்போய் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்.(நானும்தான்)சல்மான்கானுக்கு ரேவதியைப் பிடித்திருந்தாலும் அந்தச் சிறு வயது காயம் அவரைத் தடுக்கவே,ஆசைகளை மனத்தில் புதைத்துக்கொண்டு வெளியே காட்டாமல் இருப்பார்.

  அந்தச் சமயத்தில்தான் நான் மேலே குறிப்பிட்ட அந்த மழைக்காட்சி வரும்.தனக்காக மழையில் நனைந்து நின்றிருந்த ரேவதியின்பால் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு அவரை முத்தமிட நெருங்கும் வேளையில்,ரேவதி பயந்து போய் விலகிவிடுவார்.சல்மான்கான் அந்தக் கட்டத்தில்தான் ரேவதி மீதான காதலை உணர்வார்.

  தன் காதலை இதற்கு மேல் மறைக்கமுடியாது என உணரும் சல்மான்கான் இரவில் ரேவதியிடம் தொலைபேசி மூலம் தனது காதலைத் தெரிவிப்பார்.ரேவதிக்கு அந்த நொடி மிக மகிழ்ச்சியானதாய்த் தோன்றும்.சல்மான்கானைக் காத்திருக்க வைத்துவிட்டு தன் வீட்டிலுள்ள எல்லா விளக்குகளையும் எரியவிட்டுவிட்டு பிறகு மீண்டும் சல்மான்கானிடம் பேசுவார்.அந்தக் காட்சியும் என்னை மிக மிக கவர்ந்த காட்சி.அதன்பிறகு அவர்களின் காதல் தெரியவந்ததும்,ரேவதியின் கண்டிப்பான அம்மா அவர்களின் காதலை எதிர்க்க,காதலர்கள் போராடி கடைசியில் இணைவார்கள்.அந்தக் கடைசிக்காட்சியை நான் அழுதுக்கொண்டே பார்த்தேன்.

   ரேவதி கண்ணாடி சன்னலின் வழியே வெளியே குதிக்க முயலும்போது,உடைந்த கண்ணாடி அவரின் வயிற்றில் குத்தி மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்.அவருக்கு ஏற்கனவே கண்ட கண்ட மாத்திரைகளை விருப்பத்திற்குச் சாப்பிடும் பழக்கம் இருந்ததால் உயிர் பிழைப்பாரோ மாட்டாரோ என்வது சந்தேகமாக் இருக்கும்.சல்மான்கானுக்காக நானும் சேர்ந்து அழ,நல்லவேளையாக ரேவதி கண்விழித்துவிடுவார்.

    அந்தப் படத்தில் நடித்த சல்மான்கான் என்னை அதிகமாய்க் கவர்ந்தார்.அவரது உயரம்,குழந்தைத்தனமான முகம்,பெரிய பெரிய கண்கள்,மனதை மயக்கும் மெல்லிய சிரிப்பு என்று என்னைப் பாடாய்ப்படுத்திவிட்டார்.அவர் மீது காதல் பிறந்துவிட்டது எனக்கு.சிறு பெண்தானே?என்ன தெரியும்?

   அன்று முதல் என் கனவில் சல்மான்கான் வந்து கொண்டே இருந்தார்.லவ் படத்தில் பார்த்தமாதிரி அமைதியான குணத்தில் என்னை மிரட்டினார்.எப்படியாவது இந்தியாவுக்குப் போய் அவரை நேரில் பார்த்துவிடவேண்டும் என தோன்றியது.அந்த நினைவு என்னுள் பதிந்து போனதால் அன்றைய கனவில் நான் இந்தியாவில் சல்மான்கானோடு பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்தேன்.கண்விழித்துப் பர்த்து கனவுதான் என்றதும் அப்படி அழுதேன்.அந்தக் கனவுக்குப் பிறகு அவர் மீது இன்னும் பைத்தியமானேன்.ஏன் நான் இந்தியாவில் பிறக்கவில்லை என வருந்தினேன்.சல்மான்கானை வேறு நடிகைகளோடு படத்தில் பார்த்தால் தாங்கி கொள்ள முடியாமல் அழுதேன்.ஒருநாள் என் தோழி ஒருத்தி லவ் படக்காட்சி அடங்கிய சிறு புகைப்படத்தை எனக்குக் கொடுத்தாள்.வீடியோ கடையில் வேலை செய்த அவளுடைய மாமா மூலம் கிடைத்ததாக சொன்னாள்.அந்தக் கணம் அந்தத்தோழி எனக்குக் கடவுளாக தெரிந்தாள்.அந்தப் படத்தை யாரும் களவாடி விடுவார்களோ என்ற பயத்தில் பத்திரமாய் புகைப்பட ஆல்பத்தில் என் புகைப்படத்துக்குப் பின்னால் மறைத்து வைத்தேன்.தினமும் எடுத்துப் பார்த்து இரசித்தேன்.ஏக்கம் வரும்போதெல்லாம் அந்தப் படத்தைப் பார்த்தாலே அழுகை வரும்.சல்மான்கான் மீது இருந்த ஆசையால் குச் குச் ஹோத்தா ஹே படத்தில் எல்லாரும் ஷாருக்கான் கஜோலோடு இணைந்ததில் மகிழ,எனக்கு மட்டும் என் சல்மான்கானை ஏமாற்றிவிட்டார்களே என கோபம் வந்தது.

   நாளாக ஆக,சல்மான்கானின் மேல் இருந்த ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து,நிஜத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.அவ்வேளையில்தான் சல்மான்கான் மானை வேட்டையாடிய சம்பவம்,கார் ஏத்தி அப்பாவி மக்களைக் கொன்ற சம்பவம் என பரபரப்பாக வந்து கொண்டிருந்தது.சில சமயங்களில் நாம் மனிதர்களை வெளித்தோற்றம் பார்த்து கணிக்கும் கணிப்பு தவறாகித்தான் போகிறதல்லவா?நாம் போற்றும் மனிதரின் உண்மையான குணம் வெளிப்படும்போது நமக்கு அவர்களின் மீது கோபம் வருகிறது.அல்லது அவர்களின் மேல் இருந்த நேசம் குறைந்து போகிறது.ஆனாலும் நான் முன்பு அவரிடத்தில் இரசித்த விசயங்களை இப்போது மறுக்கக்கூடாது அல்லவா?அவரது உண்மையான குணம் என் சுபாவத்தோடு ஒத்துவரவில்லை என்பதற்காக முன்பு நான் அவரிடத்தில் இரசித்த விசயங்களையும்,நடிப்பாற்றல் திறமையையும் (அவை உண்மையானதாக இருக்கும் பட்சத்தில்) இப்போது மட்டம் தட்டினால் அது நியாயமில்லாததாகிவிடும் அல்லவா?அவ்வகையில் இன்றுவரையில் அந்தப் படத்தின் காட்சிகளும் என் சிறுவயது சல்மான்கானின் நினைவுகளும் நினைத்தால் இனிக்கவே செய்கின்றன.

 

உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

சுட்டிக் குமரனும் சில குட்டி தேவதைகளும் (தினக்குரல் 2012)


சுட்டிக் குமரனும்,சில குட்டி தேவதைகளும்

 

   குமரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்தான் முதன்முதலில் சந்தித்தேன்.செம்பனை ம்ர கொண்டைகள்,நீண்ட சடைகள்.இரட்டைக் கொம்புகள்,கழுத்தோடு ஒட்டிக்கிடந்த கூந்தல் ஆகியவற்றுக்குச் சொந்தமான ஒன்றாம் ஆண்டு தேவதைகளின் மத்தியில் கருத்த முகமும்,நீண்ட பெரிய விழிகளுமாய்,வரிசை தப்பாத அழகிய,பெரிய பற்கள் எல்லாம் தெரிய என்னைப் பார்த்து சிரித்த குமரன்தான் என்னை முதலில் ஈர்த்தவன்.

  முதலாம் ஆண்டுக்கு வகுப்பாசிரியையாக நியமிக்கப்பட்டிருந்தேன்.எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் எப்படி குழந்தைகளைக் கையாள்வது என எதுவும் தெரியாத நிலையில் அவர்கள் என் கண்களுக்கு மாணவர்களாக தெரியவில்லை.கட்டியணைத்து கொஞ்சுவதற்காக எனக்குக் கிடைத்த பொம்மைகள் போன்றுதான் தெரிந்தார்கள்.ஆண்கள்,பெண்கள் எல்லாருமே எனக்குத் தேவதைகளாகதான் தெரிந்தார்கள்.எந்தவொரு சம்பிரதாயத்தையும் பின்பற்றவில்லை நான்.அந்தக் குழந்தைகள் என் கையைப் பிடித்துக்கொண்டு உலா வந்தன.என் உடைகளை,தோடுகளை,வளையல்களைத் தொட்டுப் பார்த்து இரசித்தன.அசந்த வேளையில் பட்டென்று என் கன்னத்தில் முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு ஓடிப்போயின.எதையும் தடுக்கவில்லை நான்.பாட நேரத்தில் மட்டுமே அவர்கள் என்னிடம் நெருங்கி வந்து சேட்டை செய்யாமல் தடுத்தேன்.மற்ற நேரங்களில் அவர்களோடு நானும் குழந்தையாய் மாறிப்போயிருந்தேன்.அந்தக் குழந்தைகள் என்னிடத்தில் அன்பாய் இருப்பதைப் பார்த்து அவர்களின் பெற்றோரும் என்னிடத்தில் பிரியமாக இருந்தார்கள்.அடிக்கடி வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் சேர்த்து எதையாவது சமைத்துக் கொடுத்து அனுப்புவார்கள்.நான் எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்து உணவை ஊட்டிவிடுவேன்.சிரிப்போடு,காணாமல் போயிருந்த முன்வரிசைப் பற்கள் தெரிய அவர்கள் வாயை பிளந்து வாங்கி சாப்பிடும் அழகே அழகுதான்.

    மாணவர்கள் என்னிடத்தில் அன்னியோன்யமாய் இருந்தார்கள்.ஆண் மாணவர்களுக்குக் கழிவறைக்குப் போய் வந்தால் ஜிப் பூட்டத் தெரியாது,நான்தான் ஜிப் பூட்டிவிட்டு,இடைவார்பபட்டையை அணிவித்துவிடுவேன்.உடல்நலக்கல்விப் பாடம் முடிந்ததும் பெண்பிள்ளைகளை ஓர் அறையில் உடைமாற்ற சொல்லிவிட்டு ஆண்மாணவர்களை வகுப்பிலேயே உடைமாற்ற சொல்வேன்.ஆண்பிள்ளைகள்: உடனே வகுப்பறை கதவைச் சாத்திவிட்டு,”பார்த்து டீச்சர்,பொம்பளைப் பிள்ளைங்க பார்த்துடப்போகுதுங்க,” என்பார்கள்.ஆனால் நான் பார்த்தால் பரவாயில்லையாம்.அவர்களின் பெரிய மனுஷ தோரணை எனக்குச் சிரிப்பை உண்டாக்கும்.ஒரு தடவை வகுப்பறையில் ஒரே சத்தம்.ஏதும் பிரச்சனையோ என்று பயந்து போய் எட்டிப் பார்த்தால் ஒரு சிறுவன் மேசையின் மேல் ஏறி நின்று கொண்டு வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கைகளை மடக்கி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.அடுத்தக்கட்டமாக மேசையில் இருந்து குதிக்கவும் தயாராக இருந்தார்.அதை இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.இருங்கடா, கேமரா எடுத்துட்டு வந்து எல்லாரையும் இப்படியே படம் பிடிச்சி வகுப்புல ஒட்டி வைக்கிறேன்,” என்று சொன்னதுதான் தாமதம்,உடனே வெள்ளைநிற சீருடையை எடுத்து மறைத்துக்கொண்டும்,மேசைக்கடியில் பதுங்கியும்விட்ட அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்துவிடுகிறது.

     இப்படி எல்லா மாணவர்களும் என்னிடத்தில் நெருங்கி வந்தாலும் குமரன் மட்டும் என்னைச் சமீபித்து நிற்கவே மாட்டான்.என்னைப் பார்த்தால் பளீரென்று பற்கள் தெரிய சிரிப்பான்.கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொள்வான்.நான் வேண்டுமென்றே அவனைக் குறுகுறுவென்று பார்ப்பேன்.உடனே தலையைக் குனிந்து கொள்வான்.ஆனால் அதெல்லாம் கொஞ்சநாள்களுக்குதான்.அதன்பிறகு குமரன் என்னை அடிக்கடி கலாய்த்துக்கொண்டே இருந்தான்.

   என் கண்கள் கபில நிறத்தில் இருந்ததால் எனக்கு சந்திரமுகி என்று பெயர் வைத்திருந்தான்.தினமும் நான் அணிந்து செல்லும் உடையைப் பற்றி விமர்சனம் செய்வான்.ஒரு தடவை நான் கருப்பு நிற பாவாடை,சட்டை அணிந்து சென்றிருந்தேன்.என்னை நெருங்கி வந்தவன்,ஒருகணம் என்னை ஏற இறங்க பார்த்தான்.பிறகு, நல்லாதான் இருக்கு,” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே ஓடிவிட்டான்.பிரிதொருநாள் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகள் இருந்ததால் நான் விளையாட்டு உடையில் சென்றிருந்தேன்.குமரனுக்கு ஒரே கோபம்.

  நீங்க என்னா ஆம்பளைப் பிள்ளையா?ஏன் இப்படி சட்டை போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க?எனக்குப் பிடிக்கல என்பான்.அதே மாதிரி கால் பாதத்தை முழுமையாய் மறைக்கும் காலணி அணிந்தாலும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

  இந்த மாதிரி காலணி போடாதீங்க,பொம்பளைப் பிள்ளை மாதிரி வார் உள்ள செருப்பு போட்டுட்டு வாங்க,” என்று கோபமாக சொல்லிவிட்டுப் போய்விட்டான்.அன்று அவன் என்னைப் பார்க்கவே இல்லை.பெரும் கோபத்தில் இருந்தான்.

   சில சமயங்களில் வகுப்பறையில் குமரனின் சேட்டை தாங்க முடியாததாக இருக்கும்.கரும்பலகை அழிப்பானை எடுத்து முகத்தில் தேய்த்துக்கொள்வான்.முகம் நிறைய பௌசர் போட்டமாதிரி வெள்ளையாய் இருக்கும்,மற்ற குட்டி தேவதைகள் குமரனைப் பார்த்து சிரிக்கும்.எனக்கும் அவனைப் பார்த்து சிரிப்பு வந்துவிடும்,அடக்கிக்கொண்டு கண்டிப்பேன்,ஒருதடவை வகுப்பில் இருந்த ஒரு பெண்பிள்ளையை மாதிரி எப்படியோ இழுத்துப் பிடித்து அவனும் ஒரு செம்பனை கொண்டை போட்டிருந்தான்.

இப்படி எவ்வளவோ சேட்டைகள் செய்தாலும் குமரனின் மீது எனக்குக் கோபமே வரவில்லை.அவனுடைய செய்கைகள் எதுவுமே எனக்குத் தண்டிக்கக்கூடியதாகவோ,அதிகப்பிரசங்கித்தனமாகவோ தோணவில்லை.அவனுடைய குழந்தைமையை நான் அழிக்க விரும்பவில்லை.

   குமரன் வெகு அழகாய் படம் வரைவான்.இறைவனின் உருவபப்டங்களை அப்படியே பார்த்து வரைவான்.ஒரு தடவை நான் பள்ளிக்கு சேலை அணிந்து சென்றேன்.குமரன் என்னைப் பார்ப்பதும்,நான் பார்த்தால் தலையைக் குனிந்து கொள்வதுமாய் இருந்தான்.என்னடா செய்கிறான் என்று பார்த்தால் ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தான்.நான் அருகே போனதும் என்னிடம் காட்டாமல் ஒளித்து வைத்துக்கொண்டான்.இரண்டு தினங்களுக்குப் பின் குமரனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு குட்டிப் பெண் என்னிடம் சொன்னாள்.குமரன் அவளிடம் சொல்லி இருக்கிறான்.டீச்சர் அன்னைக்கு புடவையில ரொம்ப அழகா இருந்தாங்க,நானு மயங்கி போயிட்டேன்,அவங்களை அப்படியே படமா வரைஞ்சி என் ரூம்ல மாட்டி வெச்சிருக்கேன்,அன்னாடம் நான் அந்தப் படத்தைப் பார்ப்பேன்,” என்று சொல்லியிருக்கிறான்.

   குமரனிடம் அது குறித்து கேட்டபோது அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது.அவனுடைய வெட்கத்தை நான் வெகுவாய் இரசிப்பேன்.ஒரு தடவை வகுப்பில் இருந்த ஒரு மாணவி மற்ற மாணவர்களிடம்,”உதயா டீச்சர் என் சித்தி தெரியுமா?” என்று சொல்லி வைக்க வகுப்பு முழுக்க பரவிட்டது.குமரனுக்கு ஒரே கோபம்,அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவன் மூலம் எனக்கு விசயம் தெரிந்தபோது எனக்குக் கொஞ்சம் பதற்றமாகிவிட்டது,காரணம் அந்த மாணவிக்கு கல்யாணமாக வேண்டிய வயதில் ஒரு சிற்றப்பா இருந்தார்.அந்தச் சிற்றப்பா மீது அவளுக்கு அதிக பாசம்,ஏதும் தப்பாகிவிடப்போகிறது என்று உடனே வகுப்பில் எல்லா மாணவர்களின் முன்பும் இனிமேல் இப்படி விளையாட்டுத்தனமாக சித்தி,அத்தை என்றெல்லாம் சொலல்க்கூடாது என்று சொல்லிவைத்தேன்.அதன்பிறகே குமரன் இயல்பானான்.

   குமரனைக் கடைசியாய் கடந்த ஆண்டு பார்த்தேன்.வளர்ந்திருந்தான்.ஆனாலும் குழந்தைத்தனமும்,குறும்புத்தனமும் அவனைவிட்டு விலகாமல் இருந்தன.எனக்கு அவசர வேலை இருந்ததால் கொஞ்சநேரம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

   ஒன்றாம் ஆண்டு குழந்தைகளோடு நான் கழித்த அந்த அழகான நாள்கள் மிக இனிமையானவை.மீண்டும் ஒருமுறை அந்தக் குட்டி தேவதைகளோடு இன்புறும் காலம் வருமா என ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

 

உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

Wednesday, November 6, 2013

வளையல் பெண்ணின் வாலுப்பையனும் வசப்பட்ட வாகனமும்


  
     வளையல் பெண்ணின் வாலுப்பையனும் வசப்பட்ட வாகனமும்
 
 
 
         குத்தீட்டி குமுதா தன் அரிசிப் பற்களை நறநறவென கடித்தபடி தினக்குரல் அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.நான்கு நாள்கள் தீபாவளி ஷாப்பிங் போயிருந்த சமயத்தில் அவரது ஈட்டியை யாரோ துருப்பிடிக்கவைத்துவிட்டதே அவரது கோபத்திற்குக் காரணம். அந்தச் சம்பவத்திற்குக் காரணமான தண்ணி வண்டி தங்கையா தன் வண்டியோடு எங்கேயோ தலைமறைவாகி விட்டிருந்தார்.

   நடந்தது ஏதும் அறியாமல் விசிலடித்தபடி உள்ளே நுழைந்த வாலுப்பையனிடம் ஜனாதிபன் பாலன் நடந்ததைச் சொல்ல,தான் போய் குத்தீட்டி குமுதாவுக்கு வேறொரு புதிய ஈட்டி வாங்கி வருவதாக சொல்லிவிட்டு நாதன் கணேஷ்குமாரை அழைத்துக்கொண்டு பழமை வாய்ந்த ஓர் இரும்புக் கடைக்குப் புறப்பட்டார்.அவர் எதிர்பார்த்தமாதிரியே அற்புதமான ஈட்டி ஒன்று கிடைத்துவிட,அதைக் கையில் வைத்துக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுக்க,உடனே படம்பிடித்து ஃபேஸ்புக்கில் ஏற்றினார் நாதன்.ஈட்டிக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்படுகையில் அவர் கண்களில் ஒரு வினோதமான வாகனம் படவே,உடனே அதனருகில் சென்ற வாலுப்பையன் அந்த வாகனத்தைப் பற்றி கடைக்காரரிடம் கேட்டார்.

  அந்த வாகனம் தான் அந்தக் கடையை வாங்கும்போதே அங்கு இருந்ததாகவும் விரைவில் பழைய இரும்பு கடையில் அதை விற்கப்போவதாகவும் சொன்ன கடைக்காரரிடம் தான் அந்த வாகனத்தை இரு தினங்களுக்கு வாடகைக்கு எடுத்துச் செல்வதாக சொல்லி,பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் வாலுப்பையன்.

  கடகடவென பெரும் சத்தம் கேட்கவே,காதைப் பொத்திக்கொண்டே வெளியே வந்த ராஜசோழன் வினோதமான வாகனத்தைக் கண்டதும் குழப்பமானார்.வாலுப்பையன் ராஜசோழனோடு பி.ஆர்.ராஜனின் அறைக்குள் நுழைந்தார்;விசயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

 சார்,இது சாதாரண வாகனமில்லை சார்,நாம் நினைச்ச காலக்கட்டத்துக்கு நம்மைக் கொண்டு செல்லக்கூடிய டைம் மெஷின் என வாலுப்பையன் சொல்ல பி.ஆர்.ராஜன் ஆர்வமானார்.இவ்வருட தீபாவளிக்கு தினக்குரல் வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வண்ணம் ஏதாவது செய்யவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த அவர் சில வாசகர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து,அந்த வாகனம் மூலம் எண்பதாம் ஆண்டு காலக்கட்டத்திற்கு ஏற்றிச் சென்று தோட்டப்புறத்தில் தீபாவளி கொண்டாட வைக்கலாம் என திட்டம் போட்டார்.ராஜசோழன் உடனே விரைந்து அறிவிப்பை வெளியாக்கினார்.கௌரி மணியம் ஃபேஸ்புக்கிலும்,வாட்ஸ் அப்பிலும் விசயத்தைப் பரப்ப,ஆர்வமான அனைவரும் விரைந்து தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தனர்.அவர்களில் குலுக்கல் முறையில் சில வாசகர்கள் தேர்வாகினர்.

   தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே குறிப்பிட்ட திகதியில் அனைவரும் தினக்குரல் அலுவலகத்தின் முன் ஒன்று கூடியிருந்தனர்.எண்பதாம் ஆண்டு காலத்திற்குப் பயணிக்கப்போகிறோம் என்பதால் க.கண்ணன்,இல.நவரத்னம்,வேணுகோபால் பத்மினி,வேலு ராமரெட்டி,ஆர்.லோகநாதன்,சு.விக்னேஸ்வரன்,அ.நடராஜா,கோயாங் வசந்த்,செல்வராஜூ குமரன்,சு.ராமன்,ஆர்.தர்மராஜ்,கே.இளம்தமிழ்,பி.ஏ.ஜீவேந்திரன்,எல்.எம்.பூபாலன்,சிவாலெனின்,வே.ம.அருச்சுணன்,பாலகோபாலன் நம்பியார்,பாலசேனா,மு.குமாரவேல்,மு.சரவணமூர்த்தி,எஸ்.வாசன்,கோ.இராமசாமி,கு.உ.மகாலிங்கம் பத்மினி,சங்கரன் நாகப்பன்,கேம்.எஸ்.சரவணன்,கம்பத்து பையன்,மா.கதிரவன்,எஸ்.என் மணியம்,எல்.தர்மராஜா ஆகியோர் ஆகியோர் ரஜினி,கமல்,ராமராஜன்,மோகன் ஸ்டைலில் உடுத்திக்கொண்டு வந்திருந்தனர்.வாசகிகளான மீனாசெல்வம்,ச.தமிழரசி,ஸ்ரீ,பொன்.வனஜா,மனோன்மணி சுப்ரமணியம்,ஜெயந்தி விஸ்வநாதன்,பாரதி செல்லம்மாள்,பத்மினி மணியம்,திஷாந்தினி,எஸ்.மலர்,மலர்விழி ஆகியோர் நதியா,அமலா,ராதா,ரேவதி மாதிரி அழகாக உடுத்திக்கொண்டு வந்திருந்தனர்.பி.ஆர்.ராஜன்,ராஜசோழன்,எஸ்.பி.சரவணன் மூவரும் சகலகலா வல்லவன் பாணியில் தகதகவென உடுத்தியிருந்தார்கள்.

   புது ஈட்டி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் குத்தீட்டி குமுதா நதியா கொண்டை போட்டு ஈட்டி வடிவிலான சிறிய பின்னை கொண்டையில் சொருகியிருந்தார்.தலைமறைவாகயிருந்த தண்ணி வண்டி தங்கையா தன் லொடலொட வண்டியில் தினக்குரலின் வாராந்திர எழுத்தாளர்களான சுதந்திரன்,டாக்டர் ஜான்சன்,தினகரன்,புவனேஸ்வரன்,மலாக்கா முத்துகிருஷ்ணன்,மார்கரெட்,மீராவாணி,விமலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு வந்தார்.

  வாலுப்பையன் வந்ததும் அனைவரும் ஒவ்வொருவராக பிரமிப்போடு வண்டியில் ஏறி உட்கார ஆரம்பித்தார்கள்.ஓர் ஓரமாக குத்தூசியும் ஏறி அமர்ந்தது.யாரையும் குத்தாமல் உட்காரும்படி ராஜசோழன் அதை எச்சரித்து வைத்தார்.சங்கீதா ராமச்சந்திரன் அனைவரும் சரியாக இருக்கிறார்களா என எண்ணிப் பார்த்துக்கொண்டார்.நாகேந்திரன் வேலாயுதம் வாகனத்தில் இருக்கும்போது பயணிகள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்;வாகனத்தினுள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது போன்றவற்றை விளக்கினார்.தண்ணி வண்டி தங்கையா யாருக்கும் தெரியாமல் அந்த வாகனத்தின் பின்னால் தன் வண்டியையும் சேர்த்து கட்டியிருந்தார்.

     சரியாக காலை எட்டு மணிக்கு கண்ணாடிக் குவளைகள் விழுந்து நொறுங்கியமாதிரி ஒரு சத்தத்துடன் கால இயந்திர வாகனம் புறப்பட்டது.எங்கெங்கோ சுரங்கப் பாதைகளில் எல்லாம் புகுந்து புகுந்து,சில இடங்களில் உயரத்தில் பறந்தும் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார் வாலுப்பையன்.

  அரைமணி நேரத்தில் வாலுப்பையன் தன் வாகனத்தை நிறுத்தியபோது ஓர் அழகான தோட்டப்புறம் கண்ணுக்குத் தெரிந்தது.

 புதிய வானம்,புதிய பூமி என பாடியபடி வேலுராமரெட்டி முதலில் இறங்கினார்.அவரைத் தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.கடைசியாக இறங்கிய தண்டி வண்டி தங்கையா தன் வண்டி பத்திரமாக வந்து சேர்ந்ததா என்பதை உறுதி செய்து கொண்டார்.தாங்கள் 1985-ஆம் ஆண்டில் இருப்பதாக க.கண்ணன் சொன்னார்.ஸ்ரீ,மீனாசெல்வம்,மீராவாணி ஆகியோர் வீட்டிலிருந்து சுடசுட நாசிலெமாக் சமைத்து எடுத்து வந்திருந்தனர்.ஆண்கள் அருகிலிருந்த வாழைத்தோட்டத்திலிருந்து சில வாழை இலைகளைப் பறித்து வர,பெண்கள் உணவு பரிமாற ஆரம்பித்தனர்.உணவு உண்டபின் அந்தத் தோட்டத்திலிருந்த குடியிருப்புப் பகுதியை நோக்கிப் புறப்பட்டார்கள்.

   அனைவரும் ராஜசோழன் சொன்னபடி எண்பதாம் ஆண்டு உடையலங்காரத்திலேயே இருந்ததால் அங்கிருந்த தோட்டவாசிகளின் கண்களுக்கு எதுவும் வித்தியாசமாக படவில்லை.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இவர்கள் தங்கி கொள்ளலாம் என சொல்லிவிட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.தினக்குரல் குடும்பத்தினர் தாங்கள் எடுத்து வந்திருந்த பலகார வகைகளையும்,புத்தாடைகளையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.

   வாலுப்பையன் ஓடிப்போய் தன் கால இயந்திர வாகனத்தின் மேல் நிறைய புற்களையும்,புதரையும் போட்டு அது யார் கண்ணிலும் படாமல் மூடிவைத்தார்.அப்போதுதான் தண்ணிவண்டியைப் பார்த்தார்.அதற்குள் வாலுப்பையனுக்கு உதவுவதாக பொய்ச் சொல்லிவிட்டு வந்த தங்கையா அந்த விசயத்தை ராஜன் சாரிடம் சொல்லிவிடவேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொண்டார்.வாலுப்பையனும் பரிதாபப்பட்டு அந்த விசயத்தைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடாமல் இருந்தார்.

  அன்று மாலை அவர்கள் தோட்டப்புற வீடுகளுக்குச் சாயம் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.அனைவரும் சேர்ந்து செய்ய,சாயம் பூசும் வேலை விரைவில் முடிய,இரவில் தோட்டத்து மக்கள் எல்லாரும் தோட்டத்து தமிழ்ப்பள்ளி திடலின் அருகே ஒன்று கூடி ஒன்றாக பலகாரம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்கள்.

    தோட்டத்து இளைஞர்கள் பெரிய குழாயைப் பொருத்தி அப்போது பிரபலமாக இருந்த முதல் மரியாதை போன்ற படத்திலிருந்து பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.மின்சாரம் இல்லாத காரணத்தினால் இன்னும் சில இளைஞர்கள் கேஸ் விளக்கையும்,மண்ணெண்ணை விளக்கையும் ஏற்றிவைத்தார்கள்.வாசகர்களில் அந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் பெரிய பாட்டரியைப் பொருத்தி,டியூப்லைட்டைப் பூட்டினார்கள்.சில இளம் வாசகர்களுக்கு அது வித்தியாசமாகவும்,அதே வேளையில் பிரமிப்பாகவும் இருந்தது.தாங்கள் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாக பிறந்திருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

  உரலில் மாவு இடிக்கும்போது லோகநாதனும்,இளம்தமிழும் உதவிக்குப் போனார்கள்.அனைவரும் ஆளுக்கொரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய, தோட்டப்புற தீபாவளியை மீண்டும் அனுபவிக்கமாட்டோமா என ஏங்கி கிடந்த மூத்த வாசகர்களின் முகத்தில் பரவசமும்,உற்சாகமும் தெறித்தது.

  சரவண சிவனும்,புவனேஸ்வரனும் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் பயணக்கட்டுரை எழுதுவதற்காக தங்கள் குறிப்புப் புத்தகத்தில் எழுதிவைத்துக்கொண்டிருந்தார்கள். கம்பத்துப் பையனும்,கோயாங் வசந்தும்,தினகரனும் தோட்டத்துக் குழந்தைகளோடு சேர்ந்து ராக்கெட் பட்டாசு வெடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் கொளுத்திப் போட்ட ஒரு பட்டாசு கல்லுருண்டை பிடிப்பதில் மும்முரமாக இருந்த குத்தீட்டி குமுதாவின் கொண்டையில் பட்டு,கருகின வாசம் வரவே,கோபமான குமுதா இருப்பதிலேயே கெட்டியாக இருந்த ஒரு கல்லுருண்டையை எடுத்து அவர்களின் மேல் வீசினார்.அவர்கள் உடனே பானை மூடியை எடுத்து கேடயமாக குறுக்கே வைத்துக்கொள்ள,குமுதா அடுப்பில் இருந்த செங்கல்லைத் தூக்கினார்.பி.ஆர்.அவர்களைப் பார்த்து முறைத்ததும் அவர்கள் அடங்கிப் போனார்கள்.இந்தமாதிரி சண்டை போட்டால் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பப்போவதாக ராஜசோழன் எச்சரிக்க,அவர்கள் மூவரும் நல்ல பிள்ளையாக உட்கார்ந்து கொண்டார்கள்.

    எல்லாரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த பொழுதில் தண்ணி வண்டி தங்கையா தன் வண்டியை யாரும் கடத்திவிடப்போகிறார்கள் என்ற பயத்தில் யாருக்கும் தெரியாமல் கால இயந்திர வாகனத்தைத் தேடிப்போனார்.அதைக் கவனித்துவிட்ட ஆ.நடராஜன் அவரின் பின்னாலேயே செல்ல,அவரின் பின்னால் விக்னேஷ்வரன் சென்றார்.யாரோ தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்ற பதைபதைப்பில் தண்டிவண்டி தங்கையா அந்த வாகனத்தினுள் ஒளிந்து கொள்ள,நடராஜனும்,விக்னேஷ்வரனும் வண்டியில் ஏறினார்கள்.இருட்டில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள அவர்களின் கை தவறுதலாக ஒரு விசையில் பட்டதும் கால இயந்திரம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிந்திய காலக்கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.எப்படியோ போராடி வாகனத்தை நிறுத்தியபோது அந்தக் காலம் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்த மூவரும் பீதியில் உறைந்தார்கள்.அங்கே நிறைய அரக்கர்களின் நடமாட்டம் இருந்தது.அவர்களில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்த ஓர் அரக்கனைக் கண்டு மக்கள் பயந்து ஓடினார்கள்.அவனைக் கண்டதும்தான் தாங்கள் அந்தக் கால இயந்திர வாகனத்தில் நரகாசுரன் இன்னும் உயிரோடு இருக்கும் காலத்திற்குச் சென்றுவிட்டதை உணர்ந்தார்கள்.

  மீண்டும் வாகனத்தைச் செலுத்த முற்படுவதற்குள் நரகாசுரன் அவர்களைப் பார்த்துவிட்டான்.அந்த வித்தியாசமான வாகனம் அவனை ஈர்க்கவே, பூமி அதிர,அவ்வாகனத்தின் பின்னால் ஓடிவந்தான்.நடராஜா விரைந்து விசையை அழுத்த,வாகனம் மின்னல் வேகத்தில் பறந்தது.விக்னேஷ்வரன் வாலுப்பையன் வாகனத்தைச் செலுத்தியபோது கவனித்திருந்ததால் ஒரு விசையில் 1985 என டைப் செய்து,சில எண்களையும் எழுதினார்.

   வாகனம் மீண்டும் 1985-ஆம் ஆண்டில் இறங்க,பி.ஆர்.ராஜனும்.ராஜசோழனும் வாசகர்களோடு கவலை நிறைந்த முகத்தோடு காத்திருப்பது தெரிந்தது.நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி மூவரும் அவர்களை நெருங்கிப் போக,சட்டென தரை அதிர்ந்தது.கடகடவென இடி இடிப்பது போன்ற ஒரு சத்தத்தோடு நரகாசுரன் தண்ணிவண்டியின் பின்னாலிருந்து இறங்கினான்.அப்போதுதான் அவன் அந்த வண்டியை இறுகப்பற்றிக்கொண்டு தங்களோடு எண்பதாம் ஆண்டு காலக்கட்டத்திற்கு வந்துவிட்டதை அனைவரும் உணர்ந்தனர்.

   அவனது தோற்றத்தைப் பார்த்து பயந்து போன தோட்டத்து மக்கள் நடுங்கி ஓட தொடங்கினர்.தன் பெரிய மீசையை முறுக்கிவிட்டபடி பலகாரங்கள் இருந்த இடத்தை நெருங்கிய நரகாசுரன் முறுக்குகளையும்,ஓமப்பொடிகளையும்,

கல்லுருண்டைகளையும் வாய்க்குள் போட்டு நொறுக்கினான்.

   அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் எல்லாரையும் ஏற்றிக்கொண்டு கால வாகனத்தில் பறந்துவிடலாம் என எண்ணிய வாலுப்பையன் மறுகணம் தன் எண்ணத்தைக் கைவிட்டார்.நரகாசுரன் எண்பதாம் ஆண்டு காலத்திற்கு உயிரோடு வந்ததற்கு தங்கள் மீது தவறு இருந்ததாலும்,நரகாசுரனை அப்படியே விட்டுவிட்டு கிளம்பினால் பாவம் அன்பே உருவான அந்தத் தோட்டத்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நினைத்துப் பார்த்ததாலும் வாலுப்பையன் ஒரு முடிவுக்கு வந்தார்.அனைவரையும் அழைத்துப் பேசி,நரகாசுரனை எப்படி அழிக்கலாம் என  திட்டம் போட்டார்கள்.

   தினகரன் தாங்கள் எடுத்து வந்த நவீன வகை பட்டாசுகளைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாமே என சொல்ல,அனைவரும் விரைந்து பட்டாசுகளை எடுத்து வந்தனர்.பட்டாசுகளைக் கொளுத்தி நரகாசுரனின் மேல் போட்டனர்.அவனோ தன்னை கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் உணர்ந்து நெளிந்தபடி சிரிக்க ஆரம்பித்தான்.

  அவனை அழிக்க பூமாதேவி ஒருவரால் மட்டுமே முடியும் என வரம் இருப்பதால் மீண்டும் அந்தக் காலக்கட்டத்திற்கு அவனைக் கொண்டு போய் விட்டால் மட்டுமே அவனை வெல்வது சாத்தியமாகும் என கண்ணன் சொல்ல,பெண்களை விட்டுவிட்டு ஆண்கள் மட்டும் கால இயந்திர வாகனத்தில் நரகாசுரனை ஏற்றிக்கொண்டு போய் அவனது காலத்தில் விட்டுவிட்டு வர முடிவெடுத்தார்கள்.ஆண்கள் அனைவரும் வாகனத்தில் ஏறியபோதும் நரகாசுரன் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.உடனே வாலுப்பையனுக்கு ஒரு திட்டம் தோன்றவே,தான் செய்த கேக்கை எடுத்து நரகாசுரனிடம் காட்டினார்.அந்த அணிச்சலின் பின்னே இருக்கும் பயங்கரமான கதை தெரியாமல் மயங்கிய நரகாசுரன் அவர்களைத் தொடர்ந்து வந்து வண்டியில் ஏற,வாலுப்பையன் விரைந்து வாகனத்தைச் செலுத்தினார்.

   மீண்டும் வாகனம் நரகாசுரன் காலத்தை அடைய,உடனே தன் கையிலிருந்த கேக்கை தூக்கி வாகனத்தை விட்டு வெளியே எறிந்தார் வாலுப்பையன்.ஒரே தாவலில் நரகாசுரன் வெளியே எகிறி குதிக்க,வாகனம் ஒருமாதிரி ஆட்டம் காண,வாலுப்பையன் தன் ஓட்டுனர் இருக்கையிலிருந்து கீழே விழப்போனார்.

 ஐயோ,அம்மா!நான் கீழே விழறேன்,யாராவது பிடிங்களேன் என கத்த.மறுகணம் ஒரு கரம் அவரைத் தொட்டு எழுப்பியது.நிமிர்ந்து பார்த்தபோது கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தார்.இவ்வளவு நேரம் தான் கற்பனையில் இருந்தது தெரியவர,நிஜமாகவே அப்படி ஒரு வாகனம் இருந்தால் எப்படி இருக்கும் என மீண்டும் கற்பனையில் மூழ்கினார் வாலுப்பையன்.

 

Monday, November 4, 2013

சிண்டரெல்லாக்களின் மாய உலகம்


   
 
 
     குழந்தைகளின் உலகம் தனித்துவம் வாய்ந்தது.அந்த உலகத்தில் சிண்டரெல்லாக்களும் கூட வண்ண வண்ண கனவுகளைச் சுமந்தபடி துள்ளித் திரிகிறார்கள்.எங்கிருந்தாவது தேவதைகள் வந்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்காதா என்ற ஏக்கம் அவர்களைத் தாக்காமல் இருப்பதில்லை.வறுமை நிலையில் உடுத்திக்கொள்ள நல்ல துணியோ,உண்பதற்கு நல்ல உணவோ இல்லாமல் ஏங்கி கிடைக்கும் அடிவர்க்க குழந்தைகள் யாவருமே என் கண்களுக்கு சிண்டரெல்லாவாகதான் தெரிகிறார்கள்.

    இளமையில் வறுமை கொடியது என்பார்கள்.வறுமை குழந்தைகளின் இரசனைகளையும்,ஆசைகளையும்,எதிர்பார்ப்புகளையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்துவதில்லை.அவர்கள் கட்டுக்கடங்காத பணத்திற்கோ,அறுசுவை விருந்துக்கோ ஏங்குவதில்லை.அவர்களின் எதிர்பார்ப்பு சிறுசிறு விசயங்களில் அடங்கிவிடுகின்றது.அவற்றில் ஒன்றுதான் பண்டிகைக்கால எதிர்பார்ப்பு.

   எட்டு பேர் கொண்ட அந்தக் குடும்பத்தில் 6 பிள்ளைகள்.வறுமையின் காரணமாக முதல் மூன்று பிள்ளைகளை கெடாவிலுள்ள ஓர் ஆசிரமத்தில் விட்டுவிட்டார் திருமதி மலர்விழி.மீதமுள்ள மூவரும் பெண்குழந்தைகள்.எட்டு வயதில்,ஐந்து வயதில்,இரண்டு வயதில் இருக்கும் அந்தக் குழந்தைகளைக் காண சென்றிருந்தேன்.

  அடுக்குமாடி வீட்டில் மூன்றாவது மாடியில் இருந்த அவர்களின் வீட்டில் நுழைந்தபோது அந்தக் குழந்தைகளின் வறுமை நிலையை அவர்கள் உடுத்தியிருந்த உடைகளும்,வீட்டுச் சூழலும் பறைசாற்றின.

 
நான்காவது பெண்பிள்ளை ஹேமலதா இரண்டாம் ஆண்டில் பயில்கிறாள்.பள்ளியில் அவளுக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன.இலவச சாப்பாடும் கிடைக்கிறது.ஆனால் தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் வகுப்பில் மற்ற மாணவர்கள் பள்ளிகளில் விற்கப்படும் தீபாவளி வாழ்த்து அட்டைகளை வாங்கும்போது  இவள் மனதிலும் சஞ்சலம் ஏற்பட்டிருக்கிறது.தன் அம்மாவிடம் கேட்டிருக்கிறாள்.குடும்பம் இருக்கும் சூழலில் அதையெல்லாம் வாங்கமுடியுமா என மறுத்திருக்கிறார் இவளது அம்மா.

  வகுப்பில் உடன் பயிலும் பிள்ளைகள் தங்கள் வீட்டில் தங்களுக்கு நான்கு,ஐந்து புத்தாடைகள் வாங்கியிருப்பதாக சொல்ல,இவள் மனதில் மேலும் ஏக்கம் அதிகரித்திருக்கிறது.

  ஹேமலதாவின் வீட்டுக்குச் சென்றபோது என்னிடத்தில் அந்த விசயத்தைச் சொன்ன அவளது அம்மா அவளது தீபாவளி ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் தான் இல்லை என வருத்தமாக கூறினார்.அவளை அருகில் அழைத்து, இந்தத் தீபாவளி சந்தோசமா இருக்கனும்னா உனக்கு என்ன வேனும்?” என்றேன்.தனக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சுடிதார் வேண்டும் என்றாள்; விளையாடுவதற்கு கொஞ்சமாய் மத்தாப்பும் வேண்டும் என்றாள்.

  இளையவள் யோகதர்ஷினியை அழைத்து என்ன வேண்டுமென கேட்டபோது தயங்கி தயங்கி தனக்கு ஒரு புதிய சுடிதார் மட்டும் போதும்;வேறெதுவும் தேவையில்லை என்றாள்.



 இதுதான் குழந்தைகளின் மனம்.அறுசுவை விருந்தோ,பணமோ தந்துவிடாத மகிழ்ச்சியை அவர்களுக்கு புத்தாடையும்,மத்தாப்பும் கொடுக்கிறது.

    ஹேமலதாவின் தீபாவளிக் கொண்டாட்டத்தை அவள் எதிர்பார்த்தபடி அமைத்துக்கொடுக்க எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு குடும்பம் முன்வந்தது.(அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை).

   ஹேமலதாவின் வீட்டுக்கு சில பலகார மாவுகள்,மசாலைப் பொருள்கள்,முட்டை,அரிசி,சீனி,மைலோ ஆகியவற்றோடு அவர்களுக்குப் பிடித்தமான இளஞ்சிவப்பு நிற சுடிதார் வாங்கி கொடுப்பதற்கும் பணத்தை ஒதுக்கியிருந்தார்கள்.

  தீபாவளி நெருங்கும் சமயத்தில் ஒருநாள் அந்தப் பொருள்களோடு அவர்கள் கேட்ட இளஞ்சிவப்பு நிற சுடிதாரோடு அவர்கள் வீட்டின் கீழ் நிற்கையில்,”எங்களுக்கு புது சட்டை வாங்கிட்டு வந்திருக்கீங்களா?” என ஆர்வமாய் வந்து நின்றாள் இளையவள்.அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி.

  வீட்டுக்குள் நுழைந்ததும் அந்தக் குழந்தைகளிடம் அவர்கள் ஆசைப்பட்ட சுடிதாரைக் கொடுத்தேன்.அப்போது அவர்கள் அடைந்த பரவசத்தையும்,சந்தோசத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.உடனே ஓடிப்போய் அந்த உடையைப் போட்டுப் பார்த்தார்கள்.அந்தப் புத்தாடை அணிந்ததும் அவர்களின் தோற்றம் பன்மடங்கு பளிச்சென இருந்தது.துப்பட்டாவைக் கொஞ்சம் ஸ்டைலாக போட்டுவிட,நாணத்தோடும்,நன்றி உணர்வோடும் என்னைப் பார்த்த அந்தக் கணம் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.


    தேவதைகள் நிஜத்தில் பூமிக்கு வருவதில்லை.சிண்டரெல்லா குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களை மகிழ்விக்கும் தேவதைகளாக நாம் மாறினால் என்ன?

    ஜனநி ராம் என்ற சகோதரி கடந்த வருடம் திரு.சந்தியன் மற்றும் அவர்தம் மனைவியோடும்,தன் தோழிகளோடும் இணைந்து 100 ஏழைக்குடும்பங்களுக்கு தீபாவளி சமயத்தில் உதவியிருக்கிறார்கள்.செலவுகளை ஏற்றுக்கொண்ட ஒருவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட,இவர்கள் அந்தக் குடும்பங்களுக்கு உதவியிருக்கிறார்கள்.அந்தக் குடும்பங்களில் இருந்த ஏறத்தாழ 40 குழந்தைகளை துணிக்கடைக்கு அழைத்துச் சென்று நவீன பாணி சுடிதார் எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள்.அதைப் பெற்றுக்கொண்டபோது குழந்தைகளின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார் ஜனனி.ஒரு சிறுமி ஜனனியைக் கட்டியணைத்து தனக்கு அந்தப் புத்தாடை மிகவும் பிடித்திருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டிருக்கிறாள்.

  
சரி,எல்லா குழந்தைகளின் எதிர்பார்ப்பையும் நம்மால் பூர்த்தி செய்துவிடமுடியாது எனினும் ஒருவர் ஒரு குழந்தைக்கு என செய்தாலே போதுமே.பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியூட்ட முடியுமே?

     நீங்கள் ஆசிரியர் பணியில் இருந்தால் உங்கள் பள்ளியில் பயிலும் ஏதாவதொரு ஏழைக்குழந்தைக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து,மத்தாப்பு வாங்கி கொடுக்கலாம்.எத்தனையோ பள்ளிகளில் எத்தனையோ ஆசிரியர்கள்.ஒவ்வொருவரும் ஒரு பிள்ளைக்கு செய்தாலும் எத்தனையோ குழந்தைகளுக்கு அவர்கள் ஆசைப்பட்ட புத்தாடை கிடைக்குமே?

   ஆசிரியர்களை அடுத்து பெற்றோரும் உதவி செய்ய முடியும்?நீங்கள் ஓரளவு வசதி படைத்தவரா?உங்கள் பிள்ளைகளுக்கு நான்கைந்து புத்தாடைகள் வாங்கும்போது ஒருகணம் உங்கள் பிள்ளைகள் பயிலும் அதே வகுப்பில் ஓரிரு ஏழைக் குழந்தைகளும் பயிலக்கூடும்,அவர்களையும் ஒருகணம் நினைத்துப் பார்க்கலாமே?இன்று நாம் அவர்களுக்குச் செய்ததை எதிர்காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருக்கும்போது அடுத்தவர்களுக்கு செய்வார்கள்.

    தீபாவளி பண்டிகை என்பதே அடுத்தவர்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய ஒரு பண்டிகை.நம்மால் இயன்ற அளவு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.குழந்தைகளுக்குதான் பண்டிகை என்பதே.அவர்களின் வாழ்வில் முதலில் மகிழ்ச்சி எனும் தீபம் ஏற்றுவோம்.