Monday, January 14, 2013

சிறுகதை - கனவில் வந்த நரிகள் (மாற்றம் செய்யப்பட்டது)


             கனவில் வந்த நரிகள்
 
 
          சமீப காலமாய் என் கனவில் அடிக்கடி வந்துபோகும் நரிகள் இன்றிரவும் வருமோ என்ற பயத்தோடு போர்வைக்குள் ஒளித்திருந்தேன் என்னை.தடித்தும்,மெலிந்தும்,நீண்டும்,குறுகியும் பல பரிமாணங்களைக் கொண்டிருந்த அந்நரிகள் தொடர்ந்து வருவதன் நோக்கம் எனக்குப் புலப்படவேயில்லை.ஏதேனும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்குமா என யோசிப்பதும் ஏற்புடையதாக தோன்றவில்லை.காரணம் நரிகளுடன் ஒருபோதும் கொஞ்சிக் குலவி உறவாடியதில்லை நான்.கதைகளில் கூட வடையைத் திருடிக் கொண்டு போன திருட்டுத்தனம் நிறைந்த நரிகளையும்,கொக்கை ஏமாற்றி அகலமான பாத்திரத்தில் சுவையான பாயாசத்தை ஊற்றிக் கொடுத்து குடிக்கமுடியாமல் தவித்த அதன் தவிப்பைக் கண்டு மகிழ்ந்த சிறுபுத்தியும்,வில்லத்தனமும் மட்டும் நிறைந்த நரிகளையும் மட்டுமே படித்து அறிந்த காரணத்தினால் அவற்றின் மீது வெறுப்பு மட்டுமே படர்ந்து நாளடைவில் அவற்றின் முழு உருவமே மறந்து போன நிலையில் எனக்கும் நரிகளுக்கும் எந்தவித தொடர்பு இருந்துவிட முடியும்?      
       என் கனவில் வருபவை நிச்சயம் கலப்படமற்ற அக்மார்க் நரிகள்தானா?.ஒருவேளை நான் கனவில் காண்பது நரிகள் அல்லவோ? முன்பு ஒருமுறை ஏற்பட்ட காட்சிப்பிழையினால் தெரு ஓரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த சில நாய்களின் முகத்தைக் காலியாக்கி நரியின் முகத்தை நிரப்பிப் பார்த்து குழம்பியதுண்டு.ஒருவேளை அவ்வாறு நாய்களைத்தான் நரிகளாய்க் கற்பனை செய்து கொள்கிறேனோ? இல்லை ஒருவேளை அவை டிராகுலா கதையில் வந்த ஓநாய்களோ?. நள்ளிரவைக் கடந்தும் இளமையாய் இருந்த ஓரு மார்கழி இரவில் பயந்து நடுங்கி கொண்டே ‘இனிய உதயம்’ இதழில் வெளிவந்திருந்த டிராகுலாவின் தமிழாக்கத்தைப் படித்தபோது ஓர் அத்தியாயத்தில் ஓநாய்கள் பிரவேசமாகின.அவற்றின் அருகிலிருந்த கதாநாயகனைக் காட்டிலும் அவற்றின் கண்களுக்குப் புலப்படும் சாத்தியமே இல்லாமல் பாதுகாப்பான இடத்தில்,மெத்தையில் முகத்திற்கு முக்காடு போட்டுக்கொண்டு படித்துக்கொண்டிருந்த என்னை அதிகமாய்ப் பயமுறுத்திய அந்த ஓநாய்களை நரிகளோடு ஒப்பிட்டு அவ்வப்போது என்னை நானே குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்பியதுண்டு. ஆனாலும் டிராகுலா கதையில் வந்த அந்த மிருகங்கள் எப்போதுமே மூர்க்கத்தனம் நிறைந்த கொடூரமான முகத்தைக் கொண்டிருப்பதாகதானே கதாநாயகன் வர்ணித்தார்.அந்தக் கொடிய முகமும்,கோரப்பற்களும்,துளிகூட இரக்கம் இல்லாத பார்வையும் கூட எனக்குள் அமானுஷ்யமாய் உறைந்து போயிருக்கின்றனவே?என் கனவில் வருபவையோ முகம் முழுக்க சிரிப்பையும்,நட்புத்தனமான பார்வையையும் மட்டுமே அல்லவா கொண்டிருக்கின்றன?என்னிடம் நெருங்கி பழகி நட்பு பாராட்டவும் செய்கின்றனவே?.அப்படி எனில் அவை நிச்சயம் ஓநாய்கள் அல்லதாம் என்ற திண்ணம் மூளைக்குள் ஆழமாய்ப் பரவவே எனக்குள் பிறப்பெடுத்த அந்தச் சந்தேகத்தை மென்று விழுங்கி,குளிர்ந்த நீரைப் பருகி அடிவயிற்றுக்கு அனுப்பி சமாதி கட்டிவிட்டு உறங்க முற்பட்டேன்.
      இன்றாவது கனவில் நரிகளின் தொல்லையின்றி நிம்மதியாக உறங்கமுடியுமா என்ற எதிர்பார்ப்பு கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது. ச்சே,இந்த நரிகளால்தான் எவ்வளவு தொல்லை?எப்படி முயன்றாலும் கனவில் வரும் நரிகளைக் கட்டுப்படுத்தவோ குறைந்தபட்சம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவோ கூட என்னால் ஏதும் செய்யவியலா நிலமை.தூக்கத்தில் அணைத்தபடி படுத்திருக்கும் கரடி பொம்மைதான் கனவில் தன் உருவத்தையொத்த நரிகளை அழைத்துக்கொண்டு வருகிறதோ என அதையும் கட்டிலுக்கடியில் தூக்கி கடாசிவிட்டேன்.இருப்பினும்,கூட்டம் கூட்டமாய் வந்து போகும் நரிகளைக் கண்டு நடுங்கி,சுவரோரமாய்ப் பல்லிக்குப் போட்டியாய் ஒட்டிக்கொண்டு உறங்கிப்போகும்போது நித்திரையில் கிடைக்கும் ஒட்டுமொத்த இன்பத்தையும் மொத்தமாய் இழந்துவிடுவதால் இரவே வராமல் போனால் என்ன என்ற வெறுப்புணர்ச்சியும் தோன்றிவிடுகிறது. பெரும்பாலான நேரத்தில் பார்க்கும் யாவற்றையும் நான் படித்த கதைகளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் எனக்கு ”இரவு எப்படி தோன்றியது” என்ற கதையில்” பகல் மட்டுமே சூழ்ந்திருந்த நாட்டில் வாழ சிரமப்பட்டு தன் பிறந்தநாட்டிலிருந்து இரவை கோணிப்பையில் மூட்டையாய்க் கட்டிக்கொண்டு வரச்சொல்லிய பெண்ணின் மீது கோபம் கோபமாய் வந்தது.
      அவள் மட்டும் அம்மாதிரி செய்யாமலிருந்திருந்தால் இந்தப் பூமி நிச்சயம் வெறும் பகலை மட்டுமே கொண்டிருக்கும் என்பதில் அதை எழுதிய கதாசிரியரைவிட எனக்குதான் அதீத நம்பிக்கை. இரவு இல்லாமல் பகல் மட்டுமே நிரம்பியிருந்தால் உறக்கமும் வராது,கனவும் வராது.நரிகளுக்கும் என் கனவில் வந்து என்னை இம்சைப்படுத்த வேண்டிய தேவையும் இல்லாது போயிருந்து,நானும் இப்படி சில நாட்களாய் நரிகளின் புராணம் பாட வேண்டி இராது. அந்நரிகள் அப்படி ஒன்றும் என்னைத் துன்புறுத்தி விடவில்லைதான்.முகம் முழுக்க சிரிப்போடு என்னை மிக நெருக்கமாய்ச் சமீபித்து என்னைக் கொஞ்சிக் குலாவிக்கொண்டுதான் இருக்கின்றன.என் தலையை வருடி என் மீது அதீத அன்பு இருப்பதாய்க் காட்டிக்கொண்டிருக்கின்றனதான்.ஆனால் அந்தச் சிரிப்பும்,கெஞ்சலும்,கொஞ்சலும்தானே என்னை இப்படி நிலைகுலைய செய்கின்றன?இப்படி சிரித்துக்கொண்டேதானே சிறுமுயலை சிங்கராஜாவிடம் மாட்டிவிட்டன.என்னையும் இப்படி யாரிடமாவது மாட்டிவிட போகின்றனவா? இல்லை சிரித்துக்கொண்டே ஒருநாள் என் கழுத்தைக் கடித்து என் இரத்தத்தை உறிஞ்சிவிடப்போகின்றனவோ என்ற நடுக்கம் இரவில் அவை போனபின்பு மட்டுமல்ல நன்றாக பொழுது விடிந்த பின்பும் கூட எனக்குள் குறைவதே இல்லை. அக்கனவைக் காணும் நேரத்தைவிட மீண்டும் அதை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படும் பயம் இன்னும் அலாதியானதாக இருக்கின்றது.சிலவேளைகளில் வெறும் கனவாக இருந்தாலும் நம்மை பயமுறுத்ததானே செய்கின்றன.அதுவும் என்னைப் போன்று அடிக்கடி கற்பனையில் மாய உலகில் இன்பம் காணும் மனம் ஒரு விபரீதமான கனவு கண்டுவிட்டால் அக்கனவைப் பின்தொடர்ந்து அதிபயங்கரமாய் ஏதோ நடக்கப்போவதாய் மிகையாய்க் கற்பனை செய்துக்கொண்டு பயந்து நடுங்குவது இன்று நேற்றா நடக்கிறது?.   
        நினைவு தெரிந்த நாளிலிருந்து எத்தனை கனவுகள் மாதக்கணக்கில் என்னை அடிமைப்படுத்தி வைத்திருந்தன?நான் வசித்த தோட்டப்புறத்தில் என் வீட்டிலிருந்து முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் எதிரெதிரே இருந்த இரண்டு வரிசை வீடுகளுக்கிடையே ஓர் எலுமிச்சை மரம் இருந்தது.முட்களோடு கூடிய எலுமிச்சைக் காய்கள் காய்த்து தொங்கும்போது அந்த எலுமிச்சை மரம் மிக அழகானதாய்த் தோன்றும் எனக்கு.மரத்தையும்,அந்த எலுமிச்சைக் காய்களையும் ஆசையாய் வருடிப் பார்த்துவிட்டுதான் செல்வேன். அந்த எலுமிச்சை மரத்திலிருந்து ஒரு நாள் பாதி தலை கொண்ட ஒரு பேய் இறங்கி வந்து தோட்டத்திலிருந்த மக்களைச் சாகடிப்பதாய்க் கனவு கண்டதிலிருந்து அம்மரத்தைப் பார்த்தாலே பயந்து அலறி தலை தெறிக்க ஓடிய நாட்கள் எண்ணிலடங்கா.பள்ளி விளையாட்டுப் போட்டியின்போது ஓட்டப்பந்தயத்தில் கூட அவ்வளவு வேகமாய் ஓடியதில்லை நான். பின்னர் ஒரு நாளில் வெட்டி சாய்க்கப்பட்ட பின்பும் கூட அந்த எலுமிச்சை மரம் இருக்கும் இடம் வந்தால் தலையை இடது புறம் திருப்பிக்கொண்டுதான் போவேன்.அத்தகைய அதி தைரியசாலியும்,கற்பனாவாதியுமான நான் சில நாட்களாய்த் தவறாது கனவில் வந்து போகும் நரிகள் குறித்து பயப்படாமல் இருக்க முடியுமா?
       சிறுவயது கனவுகளெல்லாம் மீண்டும் என் நினைவில் வர ஆரம்பித்தவேளை கண்கள் சொக்க அப்படியே உறங்கிப்போனேன்.கனவில் மீண்டும் நரிகள் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கின.இம்முறை வழக்கமானவற்றோடு புதிது புதிதாக சில நரிகளும் வந்திருந்தன.சற்றே மூர்க்கமாய் என்னை உரச ஆரம்பித்தன.அவற்றின் உரசலில் உடல் கூச,என்னையறியாது வேகமாய் முனகிவிட்டேன் போலும்.கழிவறைக்குப் போவதற்காக எழுந்த தங்கை விளக்கைத் தட்டிவிட்டு என்னைத் தட்டி எழுப்பினாள்.நரிகள் ஓடிவிடவே,நான் கண்திறந்தேன். வழக்கம் போல ஏதோ ஒன்று என்னை அமுக்கியிருக்குமோ என்ற சந்தேகத்தைவிட,தன்னையும் அமுக்கிவிடுமோ என்ற பயம்தான் தங்கையின் முகத்தில் தென்பட்டது.அப்போது எதையும் கேட்கவில்லை என்றாலும் மறுநாள் காலையில் அம்மாவிடம் சொல்லிவிட்டாள். “நம்மை எது வந்து பயமுறுத்தினாலும் துணிஞ்சு,எதிர்த்து நின்னால் அது ஓடிப்போயிடும்,” பெரிதாய் எந்தத் திகிலையும் காட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு அறையைக் கூட்ட ஆரம்பித்தாள் அம்மா.   
       குளிக்கும்போது அவள் சொன்னதை நினைத்துப் பார்த்தேன்.ஏதோ ஓர் உண்மை புரிவதுமாதிரி இருந்தது.ஒருவேளை நான் பயந்து நடுங்குகிறேன் என தெரிந்துவிட்டதால்தான் அந்நரிகள் மீண்டும் மீண்டும் என்னிடம் வருகின்றனவோ?நான் எதிர்த்து நின்று மிரட்டினால் அஞ்சி ஓடிவிடுமோ?எவ்வளவு நாள்தான் பயந்து கொண்டே இருப்பது?கொஞ்சம் துணிந்துதான் பார்த்தால் என்ன? அன்று முழுக்க ஏதேதோ பாடல்களைக் கேட்டு எனக்குள் துணிச்சலை ஊற்றிக்கொள்ள முயன்றேன்.என்னை மாதிரி நிறைய மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் போய் நிற்பதாய் நரி ஒன்று கனவு கண்டால் எப்படி இருக்கும் என எனது அதீத கற்பனையில் நினைத்துப் பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் எதிர்பார்த்த இரவும் வந்தது.நரிகளுடன் துணிந்து பேசிவிடலாம் என தீர்மானம் செய்துக்கொண்டேன்.வெறுமனே வந்து போகாமல் தங்களின் வேலையைச் சீக்கிரம் செய்துமுடித்துவிட்டு என்னைவிட்டு விலகும்படி சொல்லிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். அந்தத் தீர்மானத்தோடு உறங்க சென்றேன்.
      மார்கழிப் பனியில் உடல் நடுங்க,போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அறை முழுக்க பார்வையைச் சுழல விட்டேன்;பக்கத்தில் தங்கை உறங்கிவிட்டிருந்தாள்.மின்னல் வடிவில் உடலை மடித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அமைதியாய்ப் பார்த்துக்கொண்டே உறக்கத்திற்காய்க் காத்திருந்தேன்.அவள் மெத்தை விளம்பரத்தில் நடிப்பவள் போன்று முகத்தில் பௌடர் கலையாமல் படுத்திருந்தாள்.இதே வேறொரு இரவாக இருந்திருந்தால் அவள் தூங்கும்போது கைத்தொலைப்பேசியிலிருந்து எழும் வெளிச்சத்தை அவள் முகத்திற்கு நேராய் பாய்ச்சி அவள் எந்த துலங்களையும் காட்டாமல் இருப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டு இருந்திருப்பேன்.ஏனோ எல்லாரும் தூங்கிவிட்டபிறகு அவர்களின் முகத்தில் மெல்லிய வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்ப்பதில் ஓர் இன்பம் எனக்கு.சில செயல்களுக்குக் காரண காரியம் எதுவும் இருக்காதல்லவா?அந்த மாதிரிதான் இதுவும்.ஆனால் இன்று அப்படி எதுவும் செய்ய தோன்றவில்லை. இதுநாள் வரை நரிகளின் மீதிருந்த பயத்தைச் சுருட்டி தலையணக்கடியில் வைத்துவிட்டு மீண்டும் அறை முழுக்க என் பார்வையைச் சுழலவிட்டபடி நரிகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.கண்கள் சொக்க ஆரம்பித்தன.தூங்கிவிடாமல் அரைத்தூக்கத்தில் விழிப்புடனேயே இருக்க முயன்றேன்.     
         என் காத்திருப்பை வீணாக்காமல் வந்து சேர்ந்தன நரிகள்.வழக்கம்போல் சிரித்த முகத்துடன் என்னை நெருங்கி வந்து உறவாட எத்தனித்தன.என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி முதல்முறையாக அவற்றை என்னிடமிருந்து தள்ளிவிட்டேன்.அதிர்ச்சியடைந்த நரிகளுள் ஒன்று சிரித்த முகத்துடன் ஆனால் மிக ஆவேசமாக மீண்டும் என்னை ஸ்பரிசிக்க வந்தது.அதற்கு ஈடு கொடுத்து போராட தயாரானேன்.அதன் பின்னால் நின்றிருந்த நரி ஒன்று அதைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க,என் மீது பாய தயாரானது முதலாவது நரி.நான் எழுந்து அமர்ந்தேன்.என் உடலில் ஒட்டிக்கிடந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பிய்த்து எடுத்து காலில் போட்டு மிதித்தேன்.பின் அந்நரியை நோக்கிச் சென்றேன்; மூர்க்கத்தனமாய்த் தாக்க ஆரம்பித்தேன்.எதிர்பாராத அத்தாக்குதலால் நிலைகுலைந்து போன அது சற்றே தடுமாறி போனது. எப்போதும் நரிகள் என்னை ஆக்கிரமிக்க தொடங்கும்போது நான் பேச்சற்று,செயலற்று கிடப்பேன்.பொதுவாகவே கெட்டகனவு காணும் எல்லாரும் எதிர்கொள்வதைப் போன்று எனக்கும் நான் எவ்வளவு கத்தினாலும் என் குரல் வெளியே யாருக்கும் கேட்காத மாதிரியே இருக்கும். இன்று அப்படி இல்லாமல் நான் திடீரென தாக்கியதும் அந்த நரி சற்று செயலிழந்து போனது.என் செயலைப் பார்த்து வியப்படைந்த ஏனைய நரிகளின் புன்னகை முகமும் மறைந்து போய்,சரியாக கணிக்கவியலாத உணர்ச்சியைத் தங்கள் முகத்தில் தேக்கியவாறு ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தன.    
        நான் சற்றும் தாமதிக்கவில்லை.எனக்கு மிக அருகில் நின்றிருந்த அந்த நரியைப் பிடித்து இழுத்தேன்.மிக அருகில் அதை உற்று நோக்கியபோது அதன் முகம் எனக்கு மிகப் பரிச்சயமான முகமாக தோன்றியது.சிறு குழப்பத்தில் இருந்த எனக்கு அந்த நரி முகத்தின் பின்னால் எனக்கு மிகப் பழக்கமான வேறு ஏதோ ஒரு முகம் மறைந்துகிடப்பதாய் நொடிப்பொழுதில் மின்னல் வெட்டு ஒன்று தோன்றி மறைய,எதிர்பாராத கணத்தில் அந்நரியின் மீது விழுந்து அதன் முகத்தில் கையை வைத்து அதன் முகத்தைக் கிழிக்க ஆரம்பித்தேன்.என்னை அலைக்கழிக்க விடாமல் உடனே என் கையோடு வந்தது நரிமுகம்..உள்ளே..உள்ளே....   
          அந்த நரிமுகத்தின் உள்ளே மறைந்திருந்தது வெகுவாய் நம்பியிருந்த என்னோடு ஈருடலும்,ஓருயிருமாய்ப் பழகி கடைசியில் என் முதுகில் குத்திய என் முன்னாள் தோழி ஒருத்தி.அவளை அடுத்து என்னிடம் சினேகம் பாராட்டிக்கொண்டே எனக்குப் பின்னால் குழி தோண்டிய முன்னாள் நண்பன் ஒருவன்.தொடர்ந்து ஆவேசமாய் அங்கிருந்து ஓடமுயன்ற எல்லா நரிகளின் முகத்தையும் கிழித்தெறிந்தேன்.ஒவ்வொன்றின் பின்னாலும் எனக்கு மிகப் பரிச்சயமான,துரோகம் சுமந்த மனித முகங்கள். அவை உணர்த்திய உண்மை என்னை ஓங்கி அறைந்தது.       
     இதுநாள் வரையில் என்னைச் சுற்றி மனித ரூபத்தில் இருந்தவை பெரும்பாலும் நரிகளே. என உணர்ந்தேன்.தீய நயவஞ்சக குணத்தைக் கொண்டிருந்த நரிகள்தாம் மனித முகத்தோடு என்னிடம் தூய்மையான அன்போடு பழகியதாய் நடித்திருக்கின்றன.என் குணத்துக்கும்,திறமைக்கும் ஈடு இணையே இல்லை என நெகிழ்ந்துகொண்டே,என் அன்பைப் பருகிக்கொண்டே அவை எனக்குப் பின்னால் நிறைய சதிவேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.அந்த உண்மை என்னை இரணமாய்க் கொன்றது.
     உண்மை வெளிபட்டுவிட்ட காரணத்தினாலோ என்னவோ அதன்பிறகு என் கனவில் நரிகள் வருவது நின்று போனது.இருந்தாலும் திருப்தியடையவில்லை நான்.கனவில் வந்த நரிகளின் முகத்திரையை மட்டும்தானே கிழித்திருக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இன்னும் எத்தனை எத்தனை நரிகளோ?எல்லாவற்றையும் கண்டுபிடித்து அழிப்பது சாத்தியமானதல்லவே? அதற்காக நானும் நரியாகி அவற்றுடன் நட்பு பாராட்டவும் முடியாது.நரிகள் என்னை அண்டாமல் இருக்க ஒரே வழி நான் சிங்கத்தின் முகத்தோலைப் போர்த்திக்கொண்டு அலைவதுதான்.அப்போதுதான் நரிகள் என்னை நெருங்க பயப்படும். சிங்கமாய் மாறிவிட தீர்க்கமாய் முடிவு செய்த பின் நிறைய சிங்கம் பற்றிய கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.இனி என் கனவுகளில் தினந்தோறும் சிங்கங்கள் வர ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்....
 
   உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்.. 11.12.12,செவ்வாய்,04:04 a.m

Tuesday, January 8, 2013

சிறுகதை- நல்லதோர் வீணை செய்தே...

                                 நல்லதோர் வீணை செய்தே………







என்ன இது உலகம் இவ்வளவு இருட்டாக இருக்கிறது?என் அம்மா எப்போதுதான் என்னை வெளியே கொண்டு வருவாளோ…? முணுமுணுத்துக் கொண்டே அம்மாவின் கருவறையில் குறுகி உட்கார்ந்திருந்தேன் நான்.
    “என் அம்மா ஏன் இன்னும் என்னை வெளியே கொண்டு வர மாட்டேன் என்கிறாள்?ஒருவேளை அவளுக்கு என்மேல் அலாதி பிரியமோ?அப்படிதான் இருக்கும்.ஏனென்றால் அடிக்கடி தன் வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொள்வாள்.என்னைக் கண்ணே மணியே என்று கொஞ்சுவாள்.எனக்காக நிறைய பொம்மைகள், துணிமணிகள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறாள்.ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி எனக்காக அழகிய தொட்டில் கூட பார்த்து வைத்திருக்கிறாள்.” “ஐயோ, எனக்கு இப்பவே வெளியே வந்துடனும் போல இருக்கே…? என் ஆசையைப் புரிந்து கொள்ளாத அம்மா மீது கிலோ கணக்கில் கோபம் கோபமாக வந்தது.ஓங்கி ஓர் உதைவிட்டேன்.அம்மா அழவில்லை,மாறாக சந்தோஷப்பட்டாள்.
      “ஐயோ, பயங்கரமா உதைக்கறாங்க,”இப்போதே அப்பாவிடம் புகார் செய்தாள்.
   “பொம்பள பிள்ளன்னு முடிவே பண்ணிட்டயா?எனக்கு பேரன்தான் வேணும்,” பாட்டி சொன்னதை அம்மா பொருட்படுத்தவேயில்லை.  
  “ஏன்தான் இந்தப் பாட்டிக்கு பொம்பள புள்ள வேணாமோ??? இருக்கட்டும் வெளிய வந்து இந்தக் கிழவிக்கு இருக்கு,” இப்போதே எனக்கு எதிரிப்படை முளைத்துவிட்டது.அதில் டோப் டென் வரிசைப்படி முதலிடம் என் பாட்டிக்குதான். இப்படியே கருவறையில் ரொம்ப நாட்கள் வாசம் செய்துவிட்ட பிறகு ஒருநாள் கடவுள் என்னிடம்,”இனி உனக்கு இங்கே இடமில்லை. உன்னுடைய வாடகை காலம் முடிந்துவிட்டது,” என்றார்.எனக்கோ கொள்ளை சந்தோஷம்.அன்று நள்ளிரவே தலைகீழாக பூமிக்கு வந்து சேர்ந்தேன்.  
    
நான் கண்விழித்தபோது உலகம் ஓர் அழகிய கவிதையாக தெரிந்தது எனக்கு. “வாவ் இந்த உலகம் இவ்வளவு அழகானதா?” கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை என்றாலும் சுற்றும் முற்றும் என் முட்டைக் கண்களை உருட்டி உருட்டி பார்க்க பிடித்திருந்தது.பசியே இல்லாவிட்டாலும் “வீல் வீல்” என்று கத்தி வேலை செய்யும் அம்மாவைத் தொந்தரவு செய்ய பிடித்திருந்தது.(அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம். யாரோ சொன்னாங்க) பாலைக் குடித்தவிட்டு வயிறு நிறைந்துவிட்டால் மீதப்பாலை வாயிலிருந்து துப்புவது எனக்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. அப்புறம் என் அம்மா என்னைக் கொஞ்சுவது அதிகம் பிடித்திருந்தது.அம்மாவும் அப்பாவும் இரவு நேரங்களில் என்னைப் பாடல் பாடிதான் தூங்க வைப்பார்கள்.அவர்களோடு சேர்ந்து நானும் அவ்வப்போது சில புரியாத இசையை இசைப்பதுண்டு.அப்பா கொஞ்சுவது பிடித்தாலும் அவ்வப்போது அவரது மீசை என்னைக் குத்திக் காயப்படுத்தியது.அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அம்மாவைப் போன்று அப்பாவுக்கும் மீசை இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன்.இப்படி நிறைய விசயங்கள் எனக்குப் பிடித்திருந்தன.கையைக் காலை உதைத்துக் கொண்டு ஆட்டம் போட பிடித்திருந்தது.(ஆனால் பாட்டியைப் பார்த்துவிட்டால் மட்டும் என் வாலோடு சேர்த்து கை காலையும் சுருட்டி வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் இருப்பேன்.அவ்வளவு பயம்.இல்லையென்றால் சாம்பிராணி புகையில் போட்டு அமுக்கிவிடுவாளே?அல்லது கசப்பான எதையாவது வாயில் ஊற்றி வைப்பாள்) அம்மா என்னைக் குளிப்பாட்டி, உடலில் லோஷன் தடவி, அழகுப்படுத்தி வாசமாக வைத்திருப்பாள்.குளியல், அலங்காரம் எல்லாம் முடிந்து அவள் என்னை மெத்தையில் கிடத்திவிட்டுப் போகும்வரை அமைதியாக இருப்பேன்.அவளுடைய தலை மறைந்த உடனேயே நெற்றிப் பொட்டையும்,கண்மையையும் அழித்து அலங்கோலமாக்கிவிட்டு அம்மா என்னை எட்டிப் பார்க்கும்போது ஒன்றுமே தெரியாத பிள்ளை மாதிரி முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொள்வேன்.  


       இப்படி நிறைய விசயங்களை எனக்குப் பிடித்திருந்தாலும் சில பிடிக்காத விசயங்களும் இருந்தன. எங்கோ புது இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று குஷியாக இருந்த எனக்கு பழி வாங்க மாட்டேன் என்ற தைரியத்தில் வலிக்க வலிக்க ஊசி போட்ட தாதியைப் பிடிக்கவில்லை.(யாராவது ஊசிகள் ஒழிப்பு தினத்தைப் பிரகடனப்படுத்தினால் என்ன?) அம்மாவின் பாதுகாப்பை மீறி என்னைக் கடித்துவிட்டு ஓடும் கொசுக்களைப் பிடிக்கவில்லை.என்றேனும் அந்தக் கொசுக்களைத் திருப்பிக் கடித்துவிட வேண்டுமென்ற வெறி தோன்றியது. என்னுடைய அடி அமின் பாட்டி (அதாங்க என் அப்பாவோட அம்மா) என்னைக் கதற கதற இட்டிலி அவிப்பதைப் போன்று சாம்பிராணி புகையில் முக்கி எடுத்தது பிடிக்கவில்லை.ஒருவேளை தூங்கினால் விட்டுவிடுவார்கள் என்று சில நேரங்களில் குளிப்பாட்டியவுடனேயே தூங்குவதுபோல் நடித்தும் பார்த்துவிட்டேன்.ம்ஹூம் பாட்டி ஏமாறவேயில்லை.சொலல்ப்போனால் என்னைச் சாம்பராணியில் அமுக்குவதற்கு அவருக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது. அடிக்கடி என்னைக் கொஞ்சும் சாக்கில் என் கன்னத்தைக் காயப்படுத்திய எதிர்வீட்டு அண்ட்டியையும் எனக்குப் பிடிக்கவில்லை.(இருங்க இருங்க…இன்னும் சில மாதங்களில் எனக்குப் பல முளைத்துவிடுமாம்,முதல் கடியே உங்களுக்குதான்)  
      இப்படியே நாளொரு சட்டையும் பொழுதொரு நாப்கினுமாய் வளர்ந்த நான் ஆறு மாதத்தை எட்டிப் பிடித்தேன்.அப்போதுதான் என் அப்பாவின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வந்தான்.எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை.அவன் தொட்டாலே எனக்கு அருவெருப்பாக இருக்கும்.அவனோ அடிக்கடி என்னைத் தூக்கி கொஞ்சுவான்.சில சமயங்களில் பக்கத்திலிருக்கும் தன் வீட்டிற்கும் என்னைத் தூக்கிக் கொண்டு போவதுண்டு.என்னை அவனிடம் கொடுக்காதீர்கள் என்று சொல்ல ஆசை.ஆனால் என்ன செய்வது?வாயைத் திறந்தாலே ஹா ஹூ என்று கராத்தே பாஷைதான் வருகிறது.சில சமயங்களில் வெறும் காற்றுதான் வருது.ஓட முடிந்தாலாவது அவனிடமிருந்து ஓடிவிடலாம்.நானோ இன்னும் நடக்கவே ஆரம்பிக்கவில்லை.இப்போதுதானே நாலு காலில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்?நடக்க ஆரம்பிக்கும்வரையில் அவன் தொல்லையைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படிதான் ஒருநாள் அப்பா வெளியூருக்குப் போயிருந்தார்.அம்மா சமைத்துக் கொண்டிருந்தார்.
    என்னைக் கொஞ்சுவதை விட்டுவிட்டு அப்படி என்ன சமையல் வேண்டி கிடக்கிறது?அதுவும் அந்தச் சாப்பாட்டையெல்லாம் எனக்குக் கொடுக்கப்போவதும் இல்லை.எத்தனை முறை ஆவலை அடக்கமுடியாமல் வெட்கத்தைவிட்டு வாயை பெரிதாக திறந்திருக்கிறேன்.உடனே பால்போத்தலை எடுத்து வாயில் வைத்துவிடுவார்கள்.எனக்கு அவமானமாகப் போய்விடும்.என்னைக் கீழே போட்டுவிட்டு சமைத்துக் கொண்டிருக்கிறாளே என்ற கோபத்தைவிட அதையெல்லாம் எனக்கு சாப்பிட கொடுப்பதில்லை என்ற கோபம் மேலோங்க என் பெருங்குரலைத் திறந்து கத்த ஆரம்பித்தேன்.
   என்னுடைய கெட்ட நேரம் அந்நேரம் அப்பாவின் நண்பன் வீட்டுக்கு வரவே,அம்மா என்னை அவனிடம் தூக்கிக் கொடுத்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டாள்.அவன் என்னைத் தன்னுடைய வீட்டுக்குத் தூக்கிப் போனான். அன்று அவனிடத்தில் ஏதோ ஒரு வித்தியாசம்.குடித்திருந்தான்.என்னைக் கொஞ்சிய விதமும் வேறு மாதிரி இருந்தது.திடீரென்று என்னை மெத்தையில் தள்ளி என் வாயில் பிளாஸ்டரை ஒட்டினான்.பிறகு என்னை ஏதேதோ செய்தான்.எனக்கு எதுவுமே புலப்படவில்லை.நான் இன்னும் மொட்டுதானே? “ஐயோ அம்மா…என்னைக் கொசு கடித்தாலே தாங்க மாட்டியே?இந்த மிருகம் என்னைக் கடிச்சி குதறுதே…எனக்கு உடம்பெல்லாம் வலிக்குதும்மா..”அவன் என் பிஞ்சு உடலைக் கண்டமாதிரி துவம்சம் செய்ய ஆரம்பித்திருந்தான்.  

     “அம்மா…சீக்கிரம் என்னை வந்து பாரும்மா,அம்மா….இனிமே நீ வேலை செய்யும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டேம்மா,நெத்திப் பொட்டையெல்லாம் அழிச்சி அலங்கோலமாக்க மாட்டேம்மா,நல்ல பிள்ளையா இருப்பேம்மா…என்னை வந்து தூக்கிட்டுப் போயிடும்மா,அம்மா….” என்னால் அதையெல்லாம் மனதில் நினைக்க மட்டும்தான் முடிந்தது.வாயைத் திறந்து பேச தெரியவில்லை.அம்மா என்ற வார்த்தையே என் வாயில் இப்போதுதானே தட்டுத் தடுமாறி வருகிறது. நான் வலியால் இடைவிடாமல் கதறினேன்.ஆனால் என் குரல் அவன் என் வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டருக்குள்ளேயே சிறைப்பட்டுப் போனது.நான் கதறிய கதறல் எனக்குள்ளேயே கரைந்து போனது.  
    “ஐயோ இந்த உலகம் இவ்வளவு கொடுமையானதா?இந்த மோசமான உலகத்தையா பார்க்க வேண்டுமென்று துடித்தேன்?இப்படி கன்னியாகும் முன்பே கற்பிழந்து போகவா அவசரப்பட்டு பிறந்தேன்?முன்னமே தெரிஞ்சிருந்தா அம்மாவின் கருவறைக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்திருப்பேனே? பாட்டி சொன்னது உண்மைதான்.நான் ஆண்பிள்ளையாக பிறந்திருக்கலாம்.ஐயோ அம்மா இப்போது வந்தால் கூட என்னைக் காப்பாற்றிவிடலாமே?ஒரே ஒரு தரம் என்னை வந்து எட்டிப்பாரேன்,அம்மா……..அம்மா…………………..   
       எனக்குப் புரியாமலேயே ஏதோ ஒன்று எனக்கு நடந்து முடிந்தபோது என்னுடைய பாதி உயிர் வெளியே வந்துவிட்டிருந்தது.சிறுநீர் கழித்து கழித்து புண்ணாகிவிடும். எனக்கு வலிக்கும் என்று அம்மா பார்த்து பார்த்து பவுடர் போட்டு வைக்கும் அந்த இடம் சிதைந்து போய் ரத்தக்களறியாய் இருந்தது.எனக்கு கத்த கூட தெம்பில்லை.அப்போது கூட காமவெறியில் சிக்கியிருந்த அந்த மிருகம் என்னை விடவில்லை.என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே இறந்துட்டேனே?எப்படி ரெண்டு தடவை இறப்பது?
 
  
  “அம்மா,சீக்கிரம் வந்து என்னைத் தூக்கிட்டுப் போம்மா….எனக்கு ரொம்ப வலிக்குதும்மா,இந்த மாதிரி ஒரு வலியை இதுவரைக்கும் நான் அனுபவிச்சதே இல்லம்மா. சீக்கிரமா வந்து என்னைத் தூக்கிட்டுப் போயிடும்மா,அம்மா…. “ஐயோ, நான் சாகப்போறேனா? யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்,என் அப்பா அம்மா ஆசைப்பட்ட மாதிரி நல்லா படிச்சி பல்கலைக்கழகம் போயி பட்டமெல்லாம் வாங்கனும்னு நெனச்சேனே?அதெல்லாம் நடக்காதா? அம்மா, சீக்கிரம் வாம்மா…அம்மா….அம்மா………..அம்மா…… சீ-க்-கி-ர-ம் வாம்மா….அம்மா அம்……மா அ...ம்மா.... அம்.
 
உதயகுமாரி கிருஷணன். பூச்சோங்