Tuesday, June 19, 2012

அப்பாவுக்குப் பிடித்த நானும் எனக்குப் பிடித்த நெத்திலி சம்பல் நாசிலெமாவும்

அப்பாவுக்குப் பிடித்த நானும் எனக்குப் பிடித்த
நெத்திலி சம்பல் நாசி லெமாவும்


    அப்பாவைப் பிறந்தது முதல் என்பதைவிட கருவில் இருக்கும்போதே நிச்சயம் எனக்குப் பிடித்திருக்கும்.அன்பான அந்தக் கரகரப்பான குரலைக் கேட்டே வளர்ந்திருப்பேன்.ஆனால் நாசி லெமாக் வை எப்போது எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது என என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.தமிழ்ப்பள்ளியில் பயின்றபோது,அது தோட்டப்புற பள்ளி என்பதால் இலவச உணவுத் திட்டத்தில் புதன்தோறும் நாசி லெமாக் வழங்கப்படும்.சில சமயங்களில் நாங்கள் நெத்திலி ஆய்ந்தும் கொடுத்திருக்கிறோம்.
     ஓய்வு நேர மணி அடிக்கும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது.என் பள்ளி மாணவர்கள் அன்று மட்டும் என்னைச் சீக்கிரமாக மணி அடிக்க சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.என் அம்மா இரண்டு வேலை செய்ததால் நான் சம்பல் கேட்கும்போதெல்லாம் மிளகாயை அரைத்து செய்து கொடுக்க அவரால் இயலவில்லை.நான் ஊறவைத்த மிளகாயை எடுத்துக்கொண்டு என் பெரியம்மாவின் வீட்டு அம்மியில் அரைத்துக்கொண்டு வருவேன்.பெரியம்மாவின் வீட்டு அம்மியில் அரைத்தால் அந்தச் சமையல் ருசியாக இருக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் பதிந்திருந்தது.
   தமிழ்ப்பள்ளியில் பயிலும்போதே நெத்திலி சம்பல் செய்யவும் கற்றுக்கொண்டேன்.மாதந்தோறும் சம்பள நாட்களில் அப்பா தோட்டத்துக் கடையில் நெத்திலி வாங்கி கொடுப்பார்.நான் சந்தோஷமாக சம்பல் செய்வேன்.அது கொதிக்கும்போது மிகவும் இரசித்துப் பார்ப்பேன்.என் அப்பா நான் சமைத்த சம்பலை இருசித்து சாப்பிடுவதையும் பெருமையாக பார்ப்பேன்.அப்பா என்னைக் கன்னத்தில் முத்தமிட்டு,ரொம்ப நல்லா இருக்குடா” என்பார்.
       அவ்வருட பள்ளி விடுமுறையில் அத்தை வீட்டுக்குப் போனபோது என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்த என் பதின்ம வயது அத்தையின் மகன்கள் நான் சமைத்த சம்பலை இருசித்துச் சாப்பிட்டார்கள்.பருவமடையாத அந்த வயதில் என் சின்ன மாமாவைத் திருமணம் செய்து கொண்டால் தினமும் அவருக்கு நெத்திலி சம்பல் நாசி லெமாக் செய்து கொடுக்கவேண்டும் என்று ஏதோ ஓர் ஆசை எனக்குள் தோன்றியது.அவர் வெளியே எங்காவது போய்விட்டால் அவருக்காக தனியாக எடுத்து வைத்துவிடுவேன்.
    நான் இடைநிலைப் பள்ளிக்குப் போனபிறகு,பள்ளிக்கு வெளியே ஒரு மலாய்க்கார மாது விற்கும் நாசி லெமாக் வை தினமும் வாங்கி சாப்பிடுவேன்.மாத இறுதியில் அப்பாவிடம் காசு இல்லாதபோது அந்தக் கடையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.நாளுக்கு நாள் நாசி மெலாக் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டுதான் இருந்ததே தவிர குறைந்தபாடில்லை.அதற்கு அப்பாவும் ஒரு காரணம். தாப்பா மார்க்கெட் அருகே ஒரு சீன மாது விற்கும் நாசி லெமாக் வெகு சுவையாக இருக்கும்.அப்பா பட்டணம் போகும் போதெல்லாம் எனக்கு அந்தச் சீன மாதின் நாசி லெமாக் வாங்கி வந்து கொடுப்பார்.தாப்பா பட்டணத்தில் எந்தக் கடையில் நாசி லெமாக் விற்கப்பட்டாலும் அப்பா உடனே எனக்காக வாங்கி விடுவார்.

 

   ஒரு தடவை கடுமையான மழை பெய்ததால் அப்பாவுக்கு வேலை இல்லை.அப்பா காலையிலேயே என்னைப் பட்டணத்திற்கு அழைத்துப் போனார்.அவர் வழக்கமாக பசியாறும் கடையில் பசியாறாமல் என் கையைப் பிடித்து என்னை வேறொரு கடைக்கு அழைத்துப் போனார்.ஏன் என்று யோசித்துக்கொண்டே அப்பா என்னிடம் கைகாட்டிய திசையைப் பார்த்தேன்.அங்கே வாழை இலையில் வெகு அழகாய் மடித்து வைக்கப்பட்ட நாசி லெமாக் பொட்டலங்கள்.நான் சந்தோசமாய் அப்பாவைப் பார்த்து சிரித்தேன்.அதன்பிறகு அப்பாவுடன் பட்டணம் போகும்போதெல்லாம் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டே அந்தக் கடையினுள் பெருமிதமாய் நுழைவேன்.என்னைப் பார்த்ததும் அந்தக் கடைக்காரி நாசி லெமாக் பொட்டலத்தை எடுத்து வைத்துவிடுவாள்.அங்கேயே பசியாற ஒன்று; எடுத்துக்கொள்ள ஒன்று என இரண்டு நாசி லெமாக் வாங்கி கொடுப்பார்.அதைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவுடன் கையைப் பிடித்துக்கொண்டு தாப்பா பட்டணத்தில் பல இடங்களைச் சுற்றிக்கொண்டிருப்பேன்.
    நான் தற்காலிகமாய் ஒரு கணினி மையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்தபோது அப்பா காலையிலேயே எனக்கு நாசி லெமாக் வாங்கி கொடுத்து அனுப்புவார். 2006- ஆம் ஆண்டில் எல்லாரும் பூச்சோங் வந்துவிட்டோம்.அப்பா தோட்டத்து முருகன் கோயிலை விட்டு வர மனமில்லாமல் ஓரிரு வருடம் கழித்து வந்துவிடுவதாக சொன்னார்.நான் ஏங்கி போனேன்.ஆனால் அப்பா மாதந்தோறும் இங்கு வந்துவிடுவார்.காலையிலேயே மார்க்கெட் சென்று அந்தச் சீன மாதிடம் எனக்குப் பிடித்த நாசி லெமாக் வாங்கி கொண்டு வருவார்.அவர் இங்கு வந்து சேர மணி ஒன்றுக்கு மேல் ஆகிவிடும்.அப்பா வரும்போதெல்லாம் என் மதிய உணவு எனக்குப் பிடித்த தாப்பா நாசி லெமாக் வாக இருக்கும். ஒரு தடவை அப்பா வந்த பேருந்து தாமதமாக வந்து சேர்ந்தது.அதற்குள் அவர் வாங்கி வந்த நாசி லெமாக் கெட்டுப் போய்விட்டது.என் முகம் வாடிப்போனது அப்பாவை உறுத்தியது போலும்.அதன்பிறகு அவர் நாசி லெமாக் வாங்காமல் தாப்பாவிலிருந்து நெத்திலி வாங்கி வர ஆரம்பித்தார்.அவர் வரும்போதெல்லாம் நான் நெத்திலி சம்பல் நாசி லெமாக் செய்வேன்.அப்பா எனக்கு ஊட்டிவிடுவார்.என் அண்ணனுக்கும் நான் செய்யும் செத்திலி சம்பல் நாசி லெமாக் ரொம்ப பிடிக்கும்.ஏனோ எனக்கு அப்பா தாப்பாவிலிருந்து வாங்கி வரும் நெத்திலி போட்டு சம்பல் செய்தால் மட்டுமே திருப்தியாக இருக்கும்.
     2008- ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்பா இனிமேல் இங்கேயே என்னுடன் இருப்பேன் என்றார்.எனக்கு அளவுக்கதிக மகிழ்ச்சி. அச்சமயம்தான் அப்பாவை முதல் தடவையாக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.எனக்குத் தெரிந்து அப்பா மருத்துவமனையில் இருப்பதைப் பார்த்ததே இல்லை.காய்ச்சல் என்று எந்த நோய்க்கும் அப்பா மருத்துவமனைக்குப் போனதே இல்லை.அப்பா குணமாகி வீட்டுக்கு வந்தார்.அன்று இரவு அவருக்குப் பிடித்த நெத்திலி சம்பல் நாசி லெமாக் செய்துகொண்டிருந்த போதுதான் அப்பா மாரடைப்பால் எதிர்பாராமல் ஒரு நிமிடத்திற்குள் என் கைகளில் தன் உயிரை விட்டார்.நான் செய்த நாசி மெலாக் வைச் சாப்பிடும் முன்பே அவர் உயிர் பிரிந்தது;எல்லாவற்றையும் தூக்கிக் கொட்டிவிட்டேன்
   அதன்பிறகு நாசி லெமாக் செய்யும்போதெல்லாம் எனக்கு அப்பாவின் நினைவு வரும்.தந்தையர் தினம்,அவர் மறைந்த தினம் போன்ற நாள்களில் யாராவது ஒரு பெரியவருக்கு நெத்திலி சம்பல் செய்து கொடுப்பேன்.என் அப்பா சாப்பிட்டது போன்ற ஒரு திருப்தி தோன்றும். இன்று வரையில் நான் நாசி மெலாக் வை விரும்பி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.ஆனால் என் ஒரு கையை அப்பா இறுக்கமாய்ப் பற்றியிருக்க,இன்னொரு கையில் பத்திரமாய் அடைக்கலமாகியிருந்த தாப்பா நாசி லெமாக்வை மிஞ்சும் சுவையில் எந்த நாசி லெமாக்வும் நிச்சயம் இருக்கப்போவதில்லை காரணம் வெறும் நெத்திலி,மிளகாய் என்பதைக் கடந்து அப்பாவின் அன்பும் நிறைந்து இருந்த நாசி லெமாக் அவை.....

 
உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்