Thursday, June 9, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 16

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 16

 

நிலாவே வா...செல்லாதே வா
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை....


       குழப்பங்கள் தலைவலியை உண்டுபண்ண சுடசுட காப்பியை அருந்திவிட்டு சோபாவில் கால்நீட்டி படுத்தான் வருண்.
      அவனுக்குத் தேன்மொழியின் மீது அப்படிப்பட்ட எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை.காதலில் காயப்பட்டு கண்முன்னால் கண்கலங்கி நின்றவளை எப்படியாவது தேற்றி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் அவன் இதுநாள் வரை போராடினான்.இன்று தன்னுடைய முயற்சியில் 90 சதவீதம் வெற்றியை அடைந்துவிட்ட வேளையில் இப்படியொரு இன்னல் வந்து சேரும் என்று அவன் சற்றும் நினைத்ததில்லை.
   தேன்மொழிக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்குமோ?
   தேன்மொழியுடன் தான் பழகும் விதம் எந்த சந்தர்ப்பத்திலும் அவளுக்குத் தன் மீது ஆசையை உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் வருண் எப்போதுமே கவனமாக இருந்தான்.அவளிடம் அவன் தப்பித்தவறி கூட எல்லை மீறி பேசியதி;ல்லை.அவளைத் தொட்டது கூட இல்லை.தேன்மொழியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அவனுக்கு வந்ததில்லை.அப்படியே வந்திருந்தாலும் அது பரிதாபத்தின் பேரில் எடுத்த முடிவாகத்தான் இருந்திருக்குமே தவிர காதலாக இருந்திருக்காது.இவ்வளவு கவனமாக இருந்தும் இப்படி ஒருசூழ்நிலை வந்துவிட்டதே?
  அகல்யாவிடம் தேன்மொழியைப் பற்றி சொல்லியிருக்கிறான்.ஆனால் தேன்மொழிக்கு அகல்யாவைப் பற்றி ஒன்றும் தெரியாது.நிறைவேறாத காதலால் காயப்பட்டு தேறி வந்திருப்பவளிடம் எப்படி சந்தோஷமாக தன்னுடைய காதலைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவன் எண்ணியதே அதற்கு காரணம்.
  தேன்மொழி இப்போதுதான் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்.ஆரம்பத்தில் ஒரு சிறிய பூக்கடையை வைத்து நடத்தியவள் பிறகு கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகமாக புழங்கும் சில இடங்களில் பூக்கடைகளை அமைத்தாள்.இதோ இன்னும் சில வாரங்களில் தன் அம்மாவின் பெயரில் ஒரு விற்பனை மையத்தையும் திறக்கப்போகிறாள்.
   அவளுடைய இந்த வெற்றிக்குத் தன்னுடைய வழிகாட்டுதல்தானே காரணம்.இந்நேரத்தில்  போய் எல்லாவற்றையும் அழிப்பதா?
   பல்வேறு குழப்பங்களினூடே உறங்கி போனான் வருண்.
   மறுநாள் அவனுக்கு ஒலிபரப்பு அறையில் வேலை இல்லை.அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு தேன்மொழியைப் பார்க்கப் போனான் வருண்.பூக்களுக்கு மத்தியில் உயிருள்ள பூவாய் அமர்ந்திருந்தாள் தேன்மொழி.நாற்காலியை நகர்த்தி வைத்துவிட்டு அவனும் அவளுக்கு அருகில் தரையிலேயே அமர்ந்தான்.
   விற்பனை மையம் சம்பந்தமாக அவனிடம் சில விசயங்களைக் கலந்தாலோசிப்பதற்காக அவள்தான் அவனை வரச்சொல்லியிருந்தாள்.அவள் முகத்தில் சந்தோஷம் களை கட்டியிருந்தது.
    ராமசாமி தன்னிடம் கேட்டதைப் பற்றி தேன்மொழி அறிந்திருப்பாளா?” 
    இவளிடம் அகல்யாவைப் பற்றி சொல்லலாமா?”
   மறுகணமே அவனுள் எச்சரிக்கை மணி அடித்தது.
  வேண்டாம்,ஏற்கனவே காதலில் தோற்றுப் போனவள்.ஒரு வேளை ராமசாமி அவளிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்து அவளுக்கும் இதில் சம்மதமென்றால் ?
    வருண்! அவன் காதருகே கத்தினாள் தேன்மொழி.
   என்னாச்சி வருண்?” பூக்களை மிக விரைவாக அடுக்கி சரமாக தொடுத்துக்கொண்டே அவனைக் கேட்டாள்.
   அப்புறம் வானொலி ஆறுல தீபாவளி நிகழ்ச்சிகள் எல்லாம் தயாராயிடுச்சா? பலகாரமெல்லாம் பையில கட்டி வெக்கிறேன்,எஸ்.பிக்குப் போறப்ப வந்து எடுத்துட்டுப் போங்க
  சரி. நீயும் உடம்பை ரொம்ப வருத்திக்காதே.போன வருசம் மாதிரி தீபாவளி சமயம்னு விடிய விடிய பூக்கடையிலேயே உட்கார்ந்து தூக்கத்தைக் கெடுத்துக்காதே,நேரத்தோடு படுத்து தூங்கு.
  சரி் என்றாள் புன்னகைத்தபடி.தன் நலனில் அவன் காட்டும் அக்கறை அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. வேகவேகமாக சரம் தொடுக்க ஆரம்பித்தாள்.வேறொரு சமயமாக இருந்திருந்தால் இவனும் மாலை கட்டுகிறேன் பேர்வழி என்று பூக்களின் காம்புகளையெல்லாம் அறுத்துப் போட்டிருப்பான்.இன்று அவன் மனநிலை அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை.
  வருண், அப்பா உங்க கிட்ட என் கல்யாணத்தைப் பத்தி பேசினாரா? நீங்க என்ன நினைக்கறீங்க?” எதை அவள் கேட்டுவிடுவாளோ என பயந்து கொண்டிருந்தானோ அதை அவள் கேட்டுவிடவே அவன் என்ன பதில் சொல்வதென்று விழித்தான்.
  நான் அவசரமா போகனும் தேனு,நாளைக்கு வந்து பார்க்கறேன்,” அவசர அவசரமாய் அவளிடம் விடைபெற்றான் வருண்.

* * * * *
   என்ன முடிவு எடுத்திருக்கீங்க வருண்?”
   தெரியல அகல்யா,”
   அப்படின்னா தேன்மொழியோட அப்பாக்கிட்ட நீங்க மறுப்பு சொல்லப் போறதில்லையா?” அகல்யா கோபமானாள்.
   தேன்மொழி ஏற்கனவே முதல் காதல் தோல்வியடைஞ்சி எவ்வளவு வேதனைப் பட்டுச்சின்னு எனக்குதான் தெரியும்,அது இன்னைக்கு வாழ்க்கைல இந்த அளவுக்கு முன்னேறியிருக்குன்னா அதுக்கு காரணம் நான்தான்.நான் கொடுத்த சந்தோஷத்தை நானே எப்படி திரும்ப பறிக்கறதுன்னுதான் குழம்பி போயிருக்கேன்.”
  இப்ப எனக்குப் புரியுது வருண்,தேன்மொழிக்காகதான் நீங்க என்னைவிட்டு விலகிக்கிட்டு இருக்கீங்க.ஏன் வருண், என்னோட காதலும் முதல் காதல்தானே? என்னால மட்டும் அந்தத் தோல்வியைத் தாங்கிக்க முடியுமா? தேன்மொழிக்கு நீங்க இருக்கீங்க,எனக்கு? நான் யார்கிட்ட போறது?
   வருண் பதிலேதும் பேசாமல் மௌனமாக இருந்தான்.
   உண்மையில் வருணுக்குப் பயம் ஏற்பட்டிருந்தது.சில வேளைகளில் சில காரியங்கள் நம்மை மீறி நடந்து விடக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றந.அப்படி ஏதாவதொரு சந்தர்ப்பம் அவனையும் மீறி அவன் வாழ்வில் நடந்துவிட்டால்….? அதனாலேயே அகல்யாவிடம் உறுதியாக எதையும் கூற முடியாத நிலையில் இருந்தான் அவன்.ஆனால் அவள் ஏதேதோ பேசினாள்.
   வருணுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.தேன்மொழியின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரையில் எப்படி காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்றுதானே அவன் விலகி நிற்கிறான்?இவள் என்னடாவென்றால் வருண் தேன்மொழியைத் திருமணம் செய்துக்கொள்ள போவதை போலல்லவா புலம்பிக்கொண்டிருக்கிறாள்?”
   நீங்களும் என்னை விளையாட்டுப் பொருளாதான் நினைக்கறீங்க? காதலிக்க ஆரம்பிச்சுட்டா எந்தப் பிரச்சனை வந்தாலும் கடைசி வரைக்கும் போராடனும்,அந்த உறுதி இல்லன்னா அப்புறம் எதுக்காக அவசரப்பட்டு உங்க காதலைச் சொன்னீங்க?” ஏற்கனவே நொந்து போயிருந்த அவனை வார்த்தைகளால் கொன்றாள் அகல்யா.
   என்னைக் காயப்படுத்தாதே அகல்யா,என்ன பதில் எடுக்கறதுன்னு நானே குழம்பி போயிருக்கேன்.கொஞ்ச நாளைக்கு என்னைத் தனியா விடு,குழப்பத்தில் அவனையும் அறியாமல் வந்து விழுந்தன வார்த்தைகள்.
   என்னோட காதலைப் பலிகொடுக்க துணிஞ்சிட்டீங்கல்ல? உங்களுக்கு வேனும்னு தோணும்போது காதலிக்கனும்,அப்புறம் உங்களுக்குப் பிரச்சனை வந்துட்டா நாங்க விலகிடனும். உங்களுக்கும் அந்தப் பிரியனுக்கும் என்ன வித்தியாசம்?டஎதுக்கு கொஞ்ச நாளைக்கு? ஒரேயடியா போயிடறேனே?”
  சாட்டை அடித்த மாதிரியான வார்த்தைகளால் அவன் மனதைப் புண்ணாக்கிப் போனாள் அகல்யா.

                                                  




தொடரும்………








 










No comments:

Post a Comment