Friday, June 10, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 17

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 17

 

கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே?


   நாட்கள் இரண்டு கடந்துவிட்ட பின்பும் அகல்யா கொடுத்து போன காயத்தின் வலி குறையவேயில்லை வருணுக்கு.அகல்யா பேசிப் போன வார்த்தைகள் வருணைக் காயப்படுத்தினாலும் அவள் மீது அவனுக்குக் கோபமே வரவில்லை.அவளுடைய மனநிலையிலிருந்து பார்த்தால் அவள் பேசுவதும் நியாயமாகவே தோன்றியது அவனுக்கு. பாவம் அகல்யா,தன்னால் அதிக காயப்பட்டுவிட்டாள்.
  ஒரு பெண்ணைக் காயப்படுத்தாமலிருக்கப் போய் இன்னொரு பெண்ணை அழவைத்துவிட்டாயே,” என்று மனம் உறுத்தியது.
  தன்னைப் பார்க்காமலேயே தன்னுடன் பேசாமலேயே தன்னைப் பற்றி எதையும் அறியாமலேயே நேசத்தை வளர்த்துக் கொண்டவள் என்றால் தன்மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் அவளுக்கு?தன் காதல் நிச்சயம் நிறைவேறும் என்று எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறாள்.அந்த நம்பிக்கையும் உறுதியும் தன் மீது தனக்கே இல்லாமல் போனதேன்?
  பாவம் அகல்யா,முதன்முதலில் அவன் அவளைப் பொருட்படுத்தாததுபோல் நடந்து கொண்டபோது எப்படி வாடிப்போனாள்.பிறகு இவன் தன் காதலை அவளிடம் சொன்ன அந்தக் கணத்தில் அவள் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் அழுகைதானே வந்தது?எந்நேரமும் இவனைப் பற்றியே யோசிப்பவள்,எப்போதும் எதையாவது செய்து அவன் மனதை நெகிழ வைத்துவிடுவாள்,ஒரு முறை அப்படிதான் திடீரென காலையிலேயே அவனைத் தேடி அங்காசபுரிக்கு வந்தாள்,அப்போதுதான் அறிவிப்புப் பணியை முடித்துக்கொண்டு வந்தவனுக்கு அவளுடைய வருகை இன்ப அதிர்ச்சியைத் தந்தது,
   உங்களுக்கு ஒன்னு கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்,சொல்லிவிட்டு பெரிய அஞ்சல் உறை ஒன்றை அவனிடம் நீட்டினாள்.
   இதுதானா?” வருண் அலட்சியமாய்ச் சொல்ல அதன் பொருள் புரிந்தவளாய் அவனைத் தலையில் குட்டினாள் அகல்யா.
   வருண் அந்த உறையைப் பிரித்துப் பார்த்தான்.உள்ளே லேமினேட் செய்யப்பட்ட ஒரு தாள் இருந்தது,வருணுடைய புகைப்படத்தை நடுவில் ஒட்டி. அதைச் சுற்றிலும் வர்ணமயமாக என்னவோ எழுதியிருந்தாள்.
   இதெல்லாம் என்ன?”
   அதுவா? நீல கலர்ல எழுதியிருக்கேனே? அடடா,ஹாஹாங்,ம், ம்ஹூஹூம்,அதெப்படி?’ இதெல்லாம் நீங்க அறிவிப்பு செய்யறப்ப அடிக்கடி பயன்படுத்தற வார்த்தைகள். அப்புறம் சிவப்பு வர்ணத்துல நெறயா ஸ்மைலி வரைஞ்சிருக்கேனே அதெல்லாம் உங்க சிரிப்புன்னு அர்த்தம்,கடைசியா கலர் கலரா எழுதியிருக்கேனே அதெல்லாம் நீங்க செய்த தவறுகள்.ஒரு நாளு தேதியைத் தவறுதலா சொல்லிட்டீங்க.இன்னொரு நாளு சூரியனைக் கண்ட பனிபோல என்ற பழமொழியைச் சொல்லிட்டு அது மரபுத்தொடர்னு சொன்னீங்க,இப்படி நீங்க உளறினதையெல்லாம் நோட் பண்ணி எழுதியிருக்கேன்,
   சரி ஏன் ஸ்மைலி மட்டும் நிறைய இருக்கு?நான் என்னா அதிகமாவா சிரிக்கிறேன்?”என்றhன் அப்பாவித்தனமாய்.
  உங்களுக்கே தெரியனும் அது,அதுவும் பொண்ணுங்ககிட்ட பேசும்போது ஒரேயடியா இளிப்பீங்களே?” அவள் வேண்டுமென்றே சொன்னாள்.
  இன்னொரு சமயம்....ஓ போதும் மனமே, வேண்டாம்.நிறுத்திவிடு அகல்யாவின் நினைவுகளை என்று மனதோடு போராடிக்கொண்டிருந்தான் வருண்.
   அகல்யாவும் பெரிய தியாகி போல் பேசிவிட்டு வந்துவிட்டாளே தவிர வருணை விட்டுக்கொடுக்க அவளுக்கு மனமேயில்லை.எந்த சூழலிலும் வருண் மீது அவளுக்குக் கோபமே வந்ததில்லை.உணர்ச்சிவசப்பட்டு அவள் பேசும்போது கோபப்படுவதுபோல் இருக்குமே தவிர அவளுக்கு வருண் மீது அளவு கடந்த பாசம்.

 
* * * * *
    அலமாரியிலிருந்த கண்ணாடி குவளைகளைத் துடைத்துக்கொண்டிருந்த தேன்மொழி பலத்த சிந்தனையில் இருந்தாள்.இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி.எல்லாருக்கும் சந்தோஷத்தைத் தரும் தீபாவளி.அவளைப் பொறுத்தவரையில் அவள் அம்மாவின் நினைவுகளை அதிகமாக்கும் நாள் அது.
  அவளுடைய தீபாவளி கொண்டாட்டமெல்லாம் அவள் அம்மா உயிரோடு இருந்த வரையில் மட்டும்தான்.இல்லத்தின் குதூகலத்தைக் கூட்டும் சக்தி அந்த பந்தத்திற்குதானே உண்டு.
  வீட்டைச் சுத்தப்படுத்துதல் முதல்கொண்டு பலகாரம் சுடுவது வரை எல்லாமே அம்மா கையில்தான்.கையில் பணமில்லாவிட்டாலும் கடனுக்காகவாவது இவளுக்கும் கயல்விழிக்கும் புத்தாடை வாங்கி கொடுத்துவிடுவாள்.இருவருக்கும் தலைவாரி கொல்லையில் பூத்திருக்கும் கனகாம்பரத்தைச் சூடி அழகு பார்ப்பாள்.
  எங்கே தவறு நடந்தது? அப்பாவின் அன்பை மீறி எப்படி அவளை அழைத்துப் போனான் இறைவன்.பாவம் அம்மா.தன்னையும் கயல்விழியையும் எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பாள்?
  அப்பா சொன்னார் இறக்கும்போது அம்மா அதிக கஷ்டப்பட்டாளாம்.பாவம் அந்நேரத்தில் கூட அவள் மனதில் என்னென்ன ஏக்கங்கள் இருந்தனவோ?இவள்  சின்ன பிள்ளையாய் இருந்ததால் குடும்ப பொறுப்பையெல்லாம் எப்படி இவளிடம் விட்டுவிட்டுப் போவது என்று எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள்? இருந்தபோதிலும்  தேன்மொழி நல்லபடியாக குடும்பத்தைப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை நிச்சயம் அவளுக்கு ஒரு துளியாவது இருந்திருக்கும்.இவளுக்கு அப்போது அதெல்லாம் புரியவேயில்லை.இவள் அப்போதுதான் இடைநிலைப்பள்ளியில் காலெடுத்து வைத்திருந்தாள்.அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லையென்று அப்பா மருத்துவமனைக்கு அழைத்துப் போவார்.மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கிவிட்டு பிறகு வீட்டுக்கு வந்துவிடுவாள்.
   இறுதியாய் அம்மாவை அப்பா மருத்துவமனைக்கு அழைத்துப் போனபோது கூட அம்மா எப்போதும் மாதிரி மூன்று நாளில் வந்துவிடுவாள் என்றுதான் எல்லாரும் நம்பினார்கள்.ஆனால் அவள் இரண்டே நாளில் வந்துவிட்டாள் வெறும் உடலாய்...
   ஏன் அம்மா எத்தனை முறை உன்னைப் பற்றி நினைத்தாலும் சலிப்பதில்லை,மீண்டும் மீண்டும் உன் சம்பந்தப்பட்ட யாவுமே என்னுள் வந்து கொண்டிருக்கிறதே? நீ இறக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?உன் மடியில் சாய்ந்து படுத்திருப்பேன்,சோறு ஊட்ட சொல்லியிருப்பேன்,வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்கொள்வேன்,
    ஆனால் சிலரது வாழ்க்கையில் மட்டும்தான் எப்போதும் நல்லது நடந்து கொண்டேயிருக்கிறது.பலருடைய வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. அது  இவளுக்குப் புரிகிறது.ஆனால் அந்தச் சிலரில் இவளும் இருந்திருக்கலாமே? ஒரு சிலருக்கு கேட்கும் எல்லாவற்றையும் தரும் இறைவன் இவளுக்கு ஏதாவது ஒன்றை கொடுத்திருக்கலாமே?அம்மாவையும் பறித்துக்கொண்டு காதலையும் பறித்துக்கொண்டு தன்னுடைய எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டானே? இதற்குமேல் எப்படி அவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்பது?
   இனி அவளுடைய வாழ்வின் சந்தோஷமும், திருப்தியும் வருண் சொல்லப்போகும் பதிலில்தான் இருக்கிறது.அவளுடைய இலட்சியங்கள் நிறைவேறுவதும் கூட வருணுடைய கையில்தான் இருக்கிறது,அவனுடைய முடிவை ஏற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டாள்.ஆனால் அவள் மனதில் இருப்பதை வருண் தெளிவாக கண்டு கொள்வானா? இவள் கேட்டபோது அவன் உடனே பதில் சொல்லாமல் நழுவியதைப் பார்த்தால்ஒரு வேளை அவனுக்கு அவள் அப்பா கேட்டதில் உடன்பாடில்லையோ?
    ஏழு வருடங்களாக அவளுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவன்.அவனுக்கு இவளுடைய மனதைப் பற்றி நன்றாக தெரியும்,நிச்சயம் இவளுடைய எதிர்பார்ப்புக்குப் பங்கமாக எதையும் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.வருண் அவளுக்கு நல்ல பதிலைச் சொல்வானா?






நம்பிக்கை தொடரும்…….









No comments:

Post a Comment