Saturday, May 10, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் கீதம் 29 : சின்னத்தாயவள் தந்த ராசாவே (தளபதி 1991)

   



    மார்கழியின் கடைசி தினத்தில் ஊரே போகிப்பண்டிகையின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.பதினான்கு வயது மங்கை ஒருத்தி மட்டும் பெரும் வலியோடு கிராமத்து மருத்துவச்சியின் வீட்டுக்கதவைத் தட்டுகிறாள்.எவனோ செய்த பாவம் அவள் வயிற்றில் கருவாய் விதைந்திருக்க,தான் வைத்தியம் பார்க்கமுடியாது என கதவை இழுத்து சாத்துகிறார் மருத்துவச்சி.

    வழியறியாத அந்தப் பெண் காட்டுக்குள் யாருடைய துணையுமின்றி போராடி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள்.அதன் அழுகுரல் காட்டைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கிறது.

  அவள் அதை ஒரு மஞ்சள் நிற துணியில் சுற்றி எடுத்துப்போய் ரயிலில் வைக்கோர் போரில் வைக்கிறாள்.நான் என்னா செய்வேன்?எனக்கு வேற வழி தெரியல,நீ நல்லா இருப்ப,” என மிகுந்த பாரத்தோடு சொல்பவள் அந்த சிசுவை ஆசைதீர முத்தமிட்டு ஒரு இரயில் பெட்டிக்குள் வைத்துவிட்டுப் போகிறாள்.ரயில் கிளம்பும்போது திடீரென அந்தப் பெட்டி திறந்து கொள்ள,சிசு தவறி விழுந்துவிடுமே என கத்திக்கொண்டே ஓடுகிறாள்.

     பச்சை வயிறு.அவளால் ரயிலுக்கு ஈடுகொடுத்து ஓடமுடியவில்லை.ஒரு கட்டத்தில் கத்த கூட தெம்பின்றி,உடல் வலியோடு,மனவலியும் சேர்ந்து கொள்ள(ல்ல),செய்வதறியாது பெரும் பாரத்தோடு தரையில் அமர்கிறாள்.குழந்தை பசியால் கத்தியவாறு ரயிலில் பயணிக்கிறது.அப்போது ரயில் புறப்படப்போகும் விசில் சத்தத்தோடு ஆரம்பித்து,சோகமான இசையில் தொடர்ந்து,ம்ம்ம் என்ற ஹம்மிங்கோடு சின்னத்தாயவள் தந்த ராசாவே,’ என்ற தாலாட்டாக ஜானகியம்மாளின் குரலில் ஒலிக்கிறது.

    ஒரு குழந்தை பூமிக்கு வந்திறங்கியவுடனேயே கிடைக்கவேண்டிய தாயின் ஸ்பரிஸமும்,அருகாமையும் அதற்குக் கிடைக்கவில்லை.வழியில் அந்த சிசு தவறி விழுந்து கொடூரமான முறையில் உடல் சிதைந்து இறந்து போக நேரிடலாம்.கடைசிவரை யார் கண்ணிலும் படாமல் பசியால் கத்தி கத்தியே இறந்து போகலாம்.யாரேனும் கெட்டவர்களின் கையில் கிடைத்து சித்திரவதைக்கு ஆளாகலாம்.இப்படி தன் நிலை அடுத்து என்னவாகும் என தெரியாமலேயே பசியால் அழுதழுது ஒரு கட்டத்தில் களைத்துப் போய் தூங்கியவாறு பயணிக்கிறது அந்த சிசு.அப்போது அதற்குத் துணையாக அந்தத் தாலாட்டு மட்டுமே ஒலிக்கிறது.

   ஒரு தாயின் பெருமையை,தாயின் அவசியத்தை இதைவிட நெகிழ்ச்சியாய் வேறு எப்படி காட்டமுடியும் திரையில்?எத்தனையோ அம்மா பாடல்கள் வந்தாலும் என் பால்யவயதில் இந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறெந்த பாடலிலும் உணர்ந்ததேயில்லை.

   மனதைக் கசக்கிப் பிழியும் இந்தப்பாடலின் பின்னே இருக்கும் சோகத்தை அறிந்து கொள்ள மனம் பரபரத்த சமயம் அது.எங்கள் வீட்டில் வீடியோ இல்லை.எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் இந்தப் படத்தின் முதல்காட்சியையும்,சின்னத்தாயவள் பாட்டையும் பார்த்தபோது எழுந்துவர மனமேயில்லாமல் அப்படத்தை முழுக்க பார்த்துவிட்டு எழுந்தேன்.கதை எனக்கு அவ்வளவாக புரியவில்லை என்றபோதும் அந்தக் குழந்தையை எண்ணி கலங்கினேன்.வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் திட்டு வாங்கினேன்.இதற்குமுன் அப்படி எந்தப் படத்தையும் அடுத்தவர் வீட்டில் தனியே போய் பார்த்ததில்லை என்பதால் இந்தப் பாடல் என்னை ஏதோ செய்திருக்கிறது என்பதை இசையை வெகுவாய் நேசித்த அம்மாவால் புரிந்துகொள்ள முடிந்ததால் என்னை அடிக்காமல் விட்டுவிட்டார்.

   அதன்பிறகு இன்றுவரையில் வானொலியில் கேட்கும்போதெல்லாம் உடல் சிலிர்த்து,கண்கள் கலங்கி,கதாபாத்திரமாக மட்டுமே வந்து போன ஓர் அப்பாவி சிசுவின் அழுகுரலை மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தி,கண்களை மூடியநிலையில் கத்திக்கொண்டே ரயிலில் போய்க்கொண்டிருந்த அந்த சிசுவின் பிம்பத்தையும் என் சிந்தையில் கொண்டுவந்து நிறுத்தி என்னைச் செயலிழக்க செய்யும் இந்தப் பாடலைத்தான் இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் அன்னையர் தின சிறப்புப் படைப்பாக வழங்க ஆசைப்படுகிறேன்.

  மணிரத்னம்,,இளையராஜா,வாலி,ரஜினி,மம்முட்டி ஆகியோரின் அற்புதமான கூட்டணியில் மகாபாரதத்து கர்ணன்,துரியோதனன்,அர்ஜூனன் ஆகியோரை பாத்திரமாகக் கொண்டு அமைந்த தளபதி திரைப்படமும்,அதன் பாடல்களும் தமிழ்த்திரையுலகில் நிச்சயம் ஒரு மைல்கல்தான்.இப்படத்தில் ராக்கம்மா கையைத் தட்டு,காட்டுக்குயிலு மனசுக்குள்ளே,சுந்தரி கண்ணால் ஒரு சேதி,யமுனை ஆற்றிலே,புத்தம் புது பூ பூத்ததோ(இப்பாடல் ஏனோ படமாக்கப்படவில்லை) இப்படி அனைத்துப் பாடல்களுமே அருமை.இப்படத்தின் பாடல்களின் சிறப்பைப் பற்றி ஏற்கனவே சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலைப் பற்றி புனையும்போது சொல்லிவிட்டதால் சின்னத்தாயவள் பாடல் ஒலிக்கும் சூழலையும்,அதன் பின்னணியையும் முதன்மைப்படுத்தி இக்கட்டுரையை வரைய விழைகிறேன்.

      ரயில் பெட்டிக்குள் பயணித்து வந்த சிசுவை அரிசி திருட வந்த சில சிறுவர்கள் எடுத்து ஆற்றில் விட,அது ஒரு மூதாட்டியின் கையில் கிடைக்கிறது.மனிதாபிமானத்தின் காரணமாக அச்சிசுவுக்கு சூரியா என பெயரிட்டு வளர்க்கிறாள்.தன் தாய் தன்னைப் பிறந்தபோதே வேண்டாமென வீசிவிட்டாள் என்ற கோபத்திலேயே வளரும் சூரியா (ரஜினி) அடிதடி,வன்செயல்களில் ஈடுபடுகிறான்.  அதே ஊரில் இன்னொரு பிரபல தாதாவான தேவாவோடு (மம்முட்டி) மோதல் ஏற்பட்டு கடைசியில் இருவரும் இணைபிரியா நண்பர்களாகிப் போகிறார்கள்.

   சிறுவயதில் கிடைக்கவேண்டிய தாய்ப்பாசத்தை இழந்து,வாலிப வயதில் காதலையும் இழந்து தவிக்கும் அவனுக்கு தேவாவிடமிருந்து மட்டும்தான் அன்பும்,கவனிப்பும் கிடைக்கவே,தேவாவை தன் உயிர் என கருதி அவனோடு பெரும்பாலான நேரங்களில் இருக்கிறான்.தேவாவின் தளபதியாய் எந்நேரமும் அவனோடு இருக்கிறான்.இருவரும் சேர்ந்து ஊரில் நியாயத்துக்காக போராடுகிறார்கள்.

      சூரியாவின் வாழ்க்கையைப் போன்று அவனது தாய் கல்யாணியின் (ஸ்ரீவித்யா)  வாழ்க்கையும் தனியே காட்டப்படுகிறது.அவள் ஒரு நல்லவரை (ஜெய்சங்கர்)கணவராக அடைந்து அர்ஜுன் (அரவிந்த்சாமி) என்ற இன்னொரு மகனையும் பெற்று,அவனை நன்கு படிக்கவைத்து கலக்டராக்குகிறாள்.ஆனாலும் தன் முதல் குழந்தையின் நிலையை எண்ணி அவள் வருந்தாதே நாளே இல்லை.

     விதி சூரியாவின் தாயை அவன் இருக்கும் ஊருக்கே அழைத்துவருகிறது.அர்ஜுனுக்கு கலெக்டர் வேலை கிடைத்ததும் அவன் தன் பெற்றோரோடு சூரியா இருக்கும் ஊருக்குப் பணியாற்ற வருகிறான்.
  சூரியா தன் தாயை முதன்முதலில் பார்ப்பதற்கு அவன் மனங்கவர்ந்த சுப்புலட்சுமிதான் காரணமாக இருக்கிறாள்.வீணை,நடனம்,சங்கீதம் என குடும்பப்பாங்காக இருக்கும் ஒரு மென்மையான பெண்ணான சுப்புலட்சுமியின் (சோபனா) மீது ஏற்படும் காதல் அவன் வாழ்வில் கொஞ்சம் வசந்தத்தை வீசுகிறது.அவளது குழந்தைத்தனத்தில் தன் கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறான்.ஒருதடவை அவள் சூரியாவை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச்செல்கிறாள்.அங்கு அவன் தாயும் வருகிறாள்.

   கோயிலில் கல்யாணிக்கு சற்று தள்ளி நின்றுகொண்டிருக்கும் சூரியாவையும்,தன் மனைவியையும் மாறி மாறி பார்க்கிறார் ஜெய்சங்கர்.அப்போது ரயில் புறப்படும் ஓசை கேட்க,சத்தம் வந்த திசையை நோக்கி கல்யாணியும்,சூரியாவும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்கிறார்கள்.கல்யாணியின் கண்கள் கலங்கி நிற்க,சூரியாவும் மனதில் ஓர் இறுக்கத்தை உணர்கிறான்.அப்போது சின்னத்தாயவள் பாடலின் ராகத்தில் இசை மட்டும் ஒலிக்கிறது.

   ஒருநாள் சூரியாவைச் சந்திக்க வரும் ஜெய்சங்கர் அவனிடத்தில் உண்மையைக் கூறிவிடுகிறார்.தன் தாய் என்ன காரணத்திற்காக தன்னைத் தூக்கி எறிந்தாள் என புரியாமல் அவளை வெறுத்துக்கொண்டிருந்த சூரியா தன் தாய் சூழ்நிலைக் கைதி என்ற உண்மையை அறிந்து கொண்டதும் கலங்கி நிற்கிறான்.ஜெய்சங்கரிடம் அந்த உண்மையைத் தன் தாயிடம் சொல்லவேண்டாமென கேட்டுக்கொள்கிறான்.அன்றிரவு முழுக்க தாய்ப்பாசம் அவனை உறங்கவிடாமல் செய்கிறது.மனதில் வெகுநாளாய் புதைந்திருந்த சோகம் அழுகையாய் பீறிட்டு வெளிப்படுகிறது.

   அவன் அழுவதைப் பார்க்கும் பானுப்பிரியாவின் குழந்தை தமிழழகி அவனிடம் போய் விசாரிக்கிறாள்.சூரியா தமிழழகியிடம் முன்னமே தன் தாயைப் பற்றி சொல்லியிருக்கிறான்.தான் பிறந்தபோது மிகவும் கருப்பாக இருந்ததால் தன் தாய் தன்னை மஞ்சள் துணியில் சுற்றி தூக்கி வீசிவிட்டதாய் சொல்லியிருக்கிறான்.எனவே ஆறுதலாய் கேட்ட குழந்தையிடம் தன் தாய் மிக நல்லவள் என்றும்,வேறு வழியின்றி தன்னை ரயிலில் விட்டுவிட்டதாகவும் சொல்கிறான்.

  
மறுநாள் பொழுது விடிந்ததும் சூரியா தன் தாய் வழக்கமாக வரும் கோயிலுக்குப் போய் அவளைப் பார்க்கிறான்.அப்போது இந்தப் பாடல் மீண்டும் ஒலிக்கிறது.

   கடைசிக்காட்சியில் அர்ஜுன் தன் மனைவியோடு சென்னைக்குக் கிளம்பும்போது தாங்கள் இனி சூரியாவுடனேயே இருக்கப்போவதாக சொல்லிவிட்டு அவன் கையைப் பற்றி,தோளில் சாய்ந்து கல்யாணி புன்னகைக்கும்போது மீண்டும் பல்லவி மட்டும் ஒலிக்கிறது.

   ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும் மீண்டும் ஒலிக்காதா என்ற ஆவல்தான் மேலோங்குகிறது.அந்த அளவுக்கு அற்புதமான இசையும்,காட்சியமைப்பும் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன.

  ரயில் இசையைப் பின்னணியாகக் கொண்டு இளையராஜா பல பாடல்களுக்கு இசையூட்டியுள்ளார்.பூவரசம்பூ பூத்தாச்சு,மஞ்சள் நிலாவுக்கு,தாலாட்டு கேட்காத பேர் இங்கு யாரு இப்படி பல பாடல்களுக்கு ரயிலின் இசையை அற்புதமாய் கோர்த்த ஞானி அவர்.இப்படத்தில் வயலின் இசையை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.
  பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை.இப்பாடல் முதலில் ஒலிக்கும்போது பெயர் ஓடுகிறது.அப்பாடல் காட்சியில் ரயிலில் குழந்தை கண்ணைத் திறக்காமலேயே அழுதுக்கொண்டே போகும் காட்சி நம் கண்களைக் கலங்கவைத்து பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

  இரண்டாம் முறை ஒலிக்கும்போது பொன்னிற ஆற்றின் பின்னணியில் ஸ்ரீவித்யா படிக்கட்டில் ஏறி கோயிலுக்குள் நுழையும் காட்சியில் தொடங்குகிறது.சூரியா தன்னைக் கவனைத்துக்கொண்டிருப்பதை அறியாமல் கண்கள் மூடி தாயவள் பிரார்த்திக்க,அருகில் நின்று அவரையே பார்த்துக்கொண்டிருப்பது,வாய்க்குள்ளேயே அம்மா என அழைத்துப் பார்ப்பது,தளர்ந்து போய் தூணில் சாய்வது,இறைவனின் சன்னதியில் தாயின் கூந்தலிலிருந்து விழுந்த அந்த ஒற்றை மல்லிகையைப் பரவசத்தோடு கையில் எடுத்து,உள்ளங்கையில் வைத்து மூடி,நெற்றியில் வைத்து வணங்குவது என்று ரஜினியின் செய்கைகள் நமக்குள்ளும் வலியை உணர செய்கின்றன.படபடவென பேசுவது,விறுவிறுப்பான நடை என ஸ்டைல் மன்னனாக இருக்கும் ரஜினியை இதில் முற்றிலும் வேறு விதத்தில் பார்க்கலாம்.

   இப்பாடலைப் பாடிய ஜானகியம்மாவின் குரலில் இருக்கும் சாந்தமும்,அன்பும் எந்தக் குழந்தையையும் தூங்கவைத்துவிடும் தாலாட்டாய் இனிமையாய் வருடிச் செல்கிறது.

  இப்படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியவர் வாலி.இப்பாடலை அவர் சின்னத்தாயவள் தந்த ராசாவே என தொடங்குகிறார்.பதினான்கு வயது இளம்தாய் பெற்ற ராசா அவன் என பொருள்படும் அந்த வரியின் பின்னே இன்னொரு சூட்சுமமும் உள்ளது.இளையராஜா ஐயாவின் தாயாரின் பெயர் சின்னத்தாய்.எனவே,சின்னத்தாய் தந்த ராசாதான் இளையராசா என் பொருள்படும் விதத்திலும் இப்பாடலைத் தொடங்கியிருக்கிறார் வாலி.

  பொதுவாக இம்மாதிரி சூழலில் இடம்பெறும் பாடல் பொதுவானதாக ஒலிக்கும்.தத்துவப்பாடலாகவோ,சோகப்பாடலாகவோ ஒலிக்கும்.ஆனால் இப்படத்திலோ குழந்தைக்கான தாலாட்டாக இப்பாடல் ஒலிக்கிறது.அக்குழந்தையின் தாயால் பாடமுடியாத தாலாட்டை யாரோ பாடி குழந்தையைச் சமாதானப்படுத்துவதுபோன்ற தொனியில் புனையப்பட்டுள்ளது பாடல்.

    விரும்பத்தகாத வழியில் தோன்றியதால் முள்ளில் தோன்றிய ராசா என்றும் அவனை வர்ணிக்கிறார்.தாயும் மகனை நினைத்து அழுகிறாள்.மகனுக்கும் தாய் தேவைப்படுகிறாள்.அதை முதல் சரணத்தில் தாய் அழுதாளே நீ வர,நீ அழுதாயே தாய் வர என்ற வரியில் அழகாய் வடித்திருக்கிறார்.அரவணைப்புக்கு ஏங்கி தவிக்கும் குழந்தையைச் சமாதானப்படுத்தும் விதத்தில் வார்த்தையை மட்டும்தான் கொடுக்க முடியும் என்பதால் தேயாத நிலா என்றெல்லாம் அவனைப் புகழ்ந்து பாடுவதாய் அமைந்திருக்கிறது பாடல்.அதேவேளையில் தாயின் நெஞ்சை மெத்தையாய் உணர்ந்து உறங்கவேண்டிய குழந்தையின் நிலையையும் எடுத்துச் சொல்கிறது.குழந்தைமேல் எப்போதும் வீசும் பால்மணத்தையும் விடவில்லை வாலிபக் கவிஞன்.

   அவன் வாலிப வயதில் கோயிலில் தாயைப் பின்தொடரும்போது ஒலிக்கும் வேளையில் சரணம் மட்டும் மாறி ஒலிக்கிறது.முதலில் ஒலித்த சரணத்தில் குழந்தையைத் தேற்றும் விதமாய் ஒலித்த வரிகள் இரண்டாம் முறை குழந்தை நல்லபடி இருக்கவேண்டுமே என்ற தாயின் தவிப்பை உணர்த்துவதாய் அமைந்திருக்கின்றன.குழந்தையைக் கருவிலோ,சிசுப் பருவத்திலோ பறிகொடுத்த எத்தனை தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்குமோ இந்தப் பாடல்.

    தாயின் அன்புக் கூட்டில் வாழும் குழந்தைதான் வாழ்க்கையின் பூரணத்தை அடைகிறது.தாய் என்பவள் மிக முக்கியமான உறவு.ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவது தாயின் கையில்தான் பெருமளவு இருக்கிறது.எவ்வளவு முரடனாக இருந்தாலும் தாயிடம் அவன் பணிந்துதான் போகிறேன்.அத்துணை சக்தி வாய்ந்த தாய்மையைப் போற்றுவதற்காகதான் அன்னையர் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.உதிரம் கொடுத்து,உயிர் கொடுத்த அன்னையை அவரின் கடைசிக்காலத்தில் அன்போடு கவனித்துக்கொள்ளவேண்டியது அனைத்து பிள்ளைகளின் கடமையாகும்.

   எனது ரசனைகளின் பிறப்பிடம் என் அம்மாதான்.பறவைகள் வளர்த்தது,நிறைய நூல்கள் வாங்கி வாசித்தது,அதிகமான இளையராஜா பாடல்களை வாங்கி குவித்தது,உடையலங்காரங்களில் அவருக்கிருந்த ஆர்வம் என என் அம்மாவிடமிருந்த ரசனைதான் எனக்குள்ளும் ஊற்றெடுத்தது.நான் வளையல்களை அவ்வளவு இரசனையாய் பார்த்ததும் அம்மாவிடத்தில்தான்.தோட்டக்காட்டில் வேலை செய்தாலும் எங்களை நல்லபடி படிக்கவைத்திருக்கிறார்.

    தாயின் தாலாட்டாக ஒலிக்கும் இப்பாடலை என் அன்னை திருமதி.இந்திராணி அவர்களோடு,இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து மடிந்துபோன அனைத்து அன்னையர்களுக்கும்,தாய்ப்பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.அனைத்து அன்னையருக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.



சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ
சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே



தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் எந்தன் நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உனை மெல்ல தாங்கிட
விழி மூடாதோ
சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே



பால்மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய்மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெயில் வீதியில் வாடக்கூடுமோ
தெய்வக்கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே
சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத்தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ
சின்னத்தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே