Thursday, October 31, 2013

முகநூல் உறவுகளின் தீபாவளிக் கொண்டாட்டம்


         எனது ஃபேஸ்பேஸ்புக் வட்டத்தில் சில உறவுகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம்  தீபாவளி பற்றிய சில துணுக்குகளைக் கேட்டு வாங்கினேன்.பலதரப்பட்ட பகிர்வுகளைக் கொடுத்து அசத்திவிட்டார்கள்.முதலாவதாக தேசியப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சுதாகரிடம் பேசினேன்.

 

 உதயா: முதலில் உங்க சின்ன வயசு தீபாவளிக் கொண்டாட்டம் பத்தி சொல்லுங்க சுதாகர்.

 

சுதாகர் : எல்லார் வீட்டிலும் செய்யறமாதிரி எண்ணெய்க் குளியல்,ஆட்டிறைச்சி,கோழிக்கறியோடு கூடிய இட்லி,தோசை,புத்தாடைகள் இப்படிதான் எனது கொண்டாட்டம்.எனக்கு ரொம்ப பிடிச்சமான விசயம்னா அக்கம் பக்கத்து வீட்டுக்குப் போறது (சிரிப்பு)

 

உதயா: ஏன் அது ரொம்ப பிடிக்கும்?உங்க வீட்ல இல்லாத பலகாரமெல்லாம் அவங்க வீட்டுல இருக்குமோ?

 

சுதாகர் : இல்லை,அவங்க வீட்டுல இருந்து அங்பாவ் எல்லாம் கிடைக்கும்,அதனால் (சிரிப்பு)என் சின்ன வயசுல ஒருதடவை தீபாவளி அன்னைக்கு சரியான காய்ச்சல்.படுத்த படுக்கையா இருந்தேன்.அந்தத் தீபாவளியை மறக்கவே முடியாது.

 

உதயா: சரி,இந்த வருடம் கொண்டாட்டம் எப்படி?ஏதும் ஷ்பெஷல் உண்டா?

 

சுதாகர் : எப்போதும் போல் வீட்டில் எல்லாருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுப்பேன்.இந்த வருசம் எங்க வீட்டுல ஒரு புது வரவு.என் தங்கை சுஹாவின் ஆண்குழந்தை நிதேஷ்.அவர்தான் ஷ்பெஷல்.

 

உதயா: குட்டிப் பையனுக்குதான் நிறைய புத்தாடை வந்திருக்கும் இல்லையா?

 

சுதாகர் : ஆமாம்,நானும் வாங்கி கொடுத்தேன்.அதேமாதிரி ஆதரவற்ற இல்லத்துல இருக்கும் ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கும் இந்த வருட தீபாவளிக்கு புத்தாடை எடுத்துக்கொடுக்கப்போறேன்.(உங்கள் நல்லமனம் வாழ்க சுதாகர்)

 

  அடுத்ததாக பள்ளி ஆசிரியையாக இருக்கும் தினக்குரல் வாசகி திருமகள் கிருஷ்ணனிடம் அவரது தலைதீபாவளி குறித்து கேட்டேன்.

 

திருமகள் : கடந்த வருசம் வரைக்கும் தீபாவளி என்றால் ஜாலியா இருப்பேன்.எனக்குதான் எல்லாரும் புத்தாடை எடுத்து கொடுப்பாங்க.இந்த வருடம் கல்யாணமாகிட்டதால பொறுப்பு அதிகமா இருக்கு.நானும் கணவரும் எங்க உறவினர்களுக்கு எல்லாம் உடை வாங்கினோம்.ஒவ்வொருவருக்கா தேடிப் பிடிச்சி வாங்கறது பிடிச்சிருந்துச்சி.புதிய அனுபவமா இருந்துச்சி.பலகாரம் எங்க அம்மா வீட்டுல கொஞ்சம் இங்கே கொஞ்சம் செஞ்சோம்.என் கணவர் சுகுமாருக்கு நல்லா முறுக்கு செய்ய தெரியும்னு கண்டுபிடிச்சிட்டேன்.(சிரிப்பு)அடுத்த வருசம் உங்களுக்கும் முறுக்கு செஞ்சு தரோம்.


 

உதயா: அடுத்த வருசம் நேரா வீட்டுக்கு வந்து நீங்க முறுக்கு சுடுறதை நேரடி ஒளிபரப்பு செய்திடறேன்.சரி, வேறு என்ன ஏற்பாடு செஞ்சிருக்கீங்க?

 

திருமகள் : இங்கே பூச்சோங்ல இருக்கற எங்க வீட்டுக்கும்,மலாக்காவுல இருக்கற எங்க வீட்டுக்கும் எனக்குப் பிடிச்ச பிங்க் நிற சாயம் பூசியாச்சு.(உங்கள் பிங்க் தலைதீபாவளி சிறப்பாக அமையட்டும் திருமகள்)

 

  எங்கள் வீட்டுக்கும் எனக்குப் பிடித்தமான ஊதாநிற சாயம் பூசினால் நல்லா இருக்குமே என நினைத்தபடி தினக்குரல் வாசகர் குளுவாங் விக்னேஷ்வரன் அண்ணாவிடம் அவரது மறக்கமுடியாத தீபாவளி பற்றி பேசினேன்.

 

விக்னேஷ்வரன் :2003-ஆம் ஆண்டு நான் பெந்தோங் தோட்டத்தில் துணை நிர்வாகியாய் வேலை செய்துக்கிட்டு இருந்தேன்.அப்போ நான் கட்டை பிரம்மச்சாரி.(வருத்தப்படாத வலிபர் சங்கமா அண்ணா?)நிறைய வேலைங்க இருந்ததால் எல்லாத்தையும் முடிச்சிட்டு தீபாவளிக்கு முதல்நாள்தான் ராத்திரி எட்டு மணிக்கு அரக்கப் பறக்க என் ஊரான குளுவாங்குக்குக் கிளம்பினேன்.என் காரின் பின்னால் டயர் பஞ்சராகிடுச்சி.அது தெரியாம நான் போய்க்கிட்டு இருந்தேன்.கெந்திங் குகையைத் தாண்டிச் செல்லும் வழியில் என் கார் அலச ஆரம்பிச்சிடுச்சி.காரை ஓரம் கட்டிப் பார்த்தால் பின்னால் டயரில் அறவே காத்து இல்லை.என்னடா சோதனை என நெனச்சிக்கிட்டு கார் டிக்கியைத் திறந்து பார்த்தால் அங்கே இன்னொரு சோதனை என்னைப் பார்த்து பல்லை இளிக்குது.(ஹா ஹா)என்னோட ஸ்பேர் டயரிலும் காத்து அறவே இல்லை.கும்மிருட்டு,காராக் நெடுஞ்சாலை பேய்க்கதைகளுக்குப் பேர் போன இடம் வேற.எனக்கு பயங்கரமாய் வியர்த்துக்கொட்ட ஆரம்பிச்சிடுச்சி.நண்பர்கள் யாரையாச்சும் உதவிக்கு அழைக்கலாம்னு பார்த்தா எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு எப்பவோ போயி சேர்ந்துட்டாங்க.என்ன செய்யறதுன்னு விழிச்சிக்கிட்டு இருந்த வேளையில் கடவுள் மாதிரி நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த வாகனம் என் முன்னாடி வந்து நின்னுச்சி.என் டயரை எடுத்துப் போய் பஞ்சர் ஒட்டி ஒருமணி நேரத்தில் எடுத்து வந்து என் காரில் பொருத்திய அந்த ரெண்டு பேரும் என் கண்ணுக்கு தெய்வமா தெரிஞ்சாங்க.அவங்களுக்கு நன்றி கூறி அன்பளிப்பா பணம் கொடுத்ததுக்கு வாங்க மறுத்துட்டாங்க.இது எங்கள் கடமை என சொல்லி,எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி பத்திரமா போகும்படி அனுப்பி வெச்சாங்க.நான் கிளம்ப ராத்திரி 11 மணியாகிடுச்சி.நான் குளுவாங்க் போய் சேர அதிகாலை நான்கு மணியாகிடுச்சி;எல்லாரும் எண்ணெய்க் குளியலுக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க.அவங்களோட ஆனந்தத்தைப் பார்த்ததும் என்னோட தூக்கமும்,களைப்பும் பறந்து போயி நானும் தீபாவளி மூட்டுக்கு மாறிட்டேன்.ஆனால் ஒன்னு இனிமேல் தூரப்பயணம் போகும் முன் காரில் எல்லாம் சரியா இருக்குதான்னுமுன்கூட்டியே பார்க்கனும் என முடிவு செய்து இன்றுவரைக்கும் பின்பற்றி வரேன்.

 

  விக்னேஷ் அண்ணாவின் கதை ஒரு மர்மக் கதையைப் படித்தமாதிரி பரபரப்பைத் தந்ததால் அடுத்து ஒரு நகைச்சுவையான விசயம் இருந்தால் நல்லா இருக்குமே என ஒருகாலத்தில் பிரபலமா எழுதி,இப்போது இடைவெளி விட்டிருக்கும் சகோதரி கவிதா வீரமுத்துவிடம் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தீபாவளி பொழுதுகளைப் பற்றி கேட்டேன்.


 

கவிதா : தீபாவளி என்றாலே என் மனம் அசைபோடுவது எனது தம்பி பாரியைத்தான்.. எல்லா ஏற்பாடுகளும் சுமூகமாக நடக்கும்.. எது இல்லை என்றாலும் முறுக்கு சுற்றுவதற்கும் (பிறகு 'சுடுவதற்கும்') அவருடைய மிகப்பிடித்தமான நெய் உருண்டைக்கும் ஆள் கட்டாயம் உதவிக் கரம் நீட்டுவார்.. ஆனால் மற்றதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்.மற்ற உருட்டல் மிரட்டல் வேலை எல்லாம் முடித்து விடுவோம்.. வீட்டு அலங்காரம் அவர் பொறுப்பு.. ஒரு வாரமாக அதையும் இதையும் வாங்கி அலங்கார வேலைக்கு ஆயத்தமாகிவிடுவார். ஆனால் முன்னமே செய்தால் கிக் இருக்காதாமே?ஆக தீபாவளி முதல் நாள் தான் அலங்காரம் என எழுதப்படாத விதி.அந்த நாளும் வரும். என் அம்மாவோ 2 கிலோ சிட்டுருண்டை தயார் செய்ய என்னை 'புக்' செய்திருப்பார்.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மலை போல குவிந்திருக்கும் மாவின் முன்னே பரிதாபமாக அமர்ந்து உருண்டை உருட்ட ஆரம்பிப்பேன்.அப்போது என் தம்பி இலேசாய் கொட்டாவி விடுவார் பாருங்க.எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றும்.சொல்லி வைத்தாற்போல அவரும் சரியா 11 மணியளவில் தூங்கிவிடுவார் பாருங்களேன்..! அப்புறம் என்ன??? சிட்டுருண்டையைப் பிடித்து பொரித்து அடுக்கி பிறகு அலங்காரம் செய்து கோழித்தூக்கம் போட்டுவிட்டு தீபாவளியன்று தூங்கி வழிவேன்.அஃது ஒரு காலம் அழகிய காலம்.. !




 

   தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆங்கில மொழி பயில,சிட்னி ஆஸ்திரேலியாவில் இருந்த பினாங்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி பிரவினா விஜயகுமாரிடம் அங்கு இருந்தபோது அவருடைய தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருந்தது என கேட்டேன்.

 

பிரவினா: 2011- ஆம் ஆண்டுதான் நாங்க சிட்னிக்குப் போனோம்.அந்த வருசம் தீபாவளி நெருங்கும்போது ரொம்ப கவலையா இருந்துச்சி காரணம் முதல் தடவையா பண்டிகையின்போது எங்க குடும்பத்தைவிட்டு பிரிஞ்சிருக்கவேண்டிய நிலை.தீபாவளி கொண்டாடும் மூட் இல்லாமல் இருந்தோம்.அப்புறம் யோசிச்சோம்.கவலையா இருந்து என்ன கிடைக்கப்போகுது?ஒருவேளை சிட்னியில் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு எங்களுக்குக் கிடைச்ச வாய்ப்பா அது இருக்கலாமில்லையா?அதனால் அங்குப் போயிருந்த மலேசிய மாணவர்களான நாங்கள் அன்னைக்குக் காலையில பாரம்பரிய உடையில கோயிலுக்குப் போனோம்.அன்று மாலை நாங்க எங்க வீட்டுல திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினோம்.அங்குப் படிச்சிக்கிட்டு இருந்த மத்த மலேசிய மாணவர்களை அழைச்சோம்.நாங்க நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தோம்.கோலம் போட்டு,வீட்டையும் அலங்கரிச்சிருந்தோம்.கோழிக்கறி,காய்கறி உணவு,சோறு,சப்பாத்தி எல்லாம் சேர்ந்து சமைச்சிருந்தோம்.மலேசியாவுல எங்க வீட்டுல இருந்து அனுப்பியிருந்த பலகாரத்தையும் வெச்சிருந்தோம்.முக்கியமான பலகாரமான முறுக்கும் இருந்துச்சி.எங்கள் மலாய்க்கார நண்பர்கள் ரொம்ப சந்தோசப்பட்டாங்க.அங்கே எங்களுக்கு அறிமுகமான சில மலேசிய குடும்பங்களையும் அழைச்சிருந்தோம்.நாங்கள் ஒன்னா சாப்பிட்டு,அரட்டையடிச்சிட்டு கூதூகலமா இருந்தோம்.ரெண்டு வருசத்துக்கு அப்புறம் இதோ இந்த வருசம் மலேசியாவில் எங்கள் தீபாவளி கொண்டாட்டம்.எங்கள் படிப்பும் முடிஞ்சிட்டதால் இன்னும் ஜாலியா இருக்கு.

 

  அந்த ஜாலியின் ஊடே கொஞ்சம் காரசரமான ஒரு விசயத்தையும் போட்டால் நல்லா இருக்குமே என் நினைத்தவேளையில் தெய்வம் போல் ஃபேஸ்புக் வந்தார் தேவன் ராம்நாதன்.என் இடுகைகளுக்கு விருப்பு அளித்துக்கொண்டிருந்தவரிடம் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டேன்.

 

உதயா: தேவன்,தீபாவளி நம் பண்டிகையே அல்ல,அதனால் தீபாவளி கொண்டாடாதீங்க என சிலர் இங்கே ரொம்ப தீவிரமா எல்லாரையும் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்களே,அது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?தீபாவளி கொண்டாடறது சரியா தப்பா என கேட்டேன்.

(அப்பாடா ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டாச்சு என்ற களிப்பில் கொஞ்சநேரம் எழுந்து நடந்துவிட்டு வருவதற்குள் தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார் தேவன்.

 

தேவன் : தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்பது சிலரின் கருத்து. தமிழ் பேசும் மக்கள் திராவிடர்கள் என அடையலாம் காணப்படுகின்றனர். திராவிடர்கள் வாழ்ந்த முறை இன்னமும் ஆய்வுகளுக்கு உட்பட்டும் விவாதிக்கப்படும் வருகின்றது. மலேசியாவைப் பொருத்தமட்டில் தீபாவளி தமிழர்களின் அடையாளமாக கருதப்படுகிறது. தமிழ் மெல்ல முடங்கிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் இது போன்ற பண்டிகைகளே நம்மை நாம் அடையலாம் காட்டிக்கொள்ள உதவுகின்றன. தீபாவளியை இந்நாட்டில் நாம் காலடி வைத்த நாளில் இருந்து கொண்டாடுகின்றோம்.அதையும் தமிழர்கள் பண்டிகை அல்ல என விட விழைந்தால் நம் அடையாளங்கள் யாவும் மிக எளிதில் பட்டுப்போகும். திராவிடன் தோன்றிய காலம் தொட்டு பரிணாம வளர்ச்சியில் தமக்கென அடையாளங்களை காட்டிக்கொண்டான். தமக்குத் தேவையானதையும் நன்மை பயப்பதையும் ஏற்றுக்கொண்டான். மதமும் இதை சார்ந்தே திராவிடனுடன் வளர்ந்து விட்டது. மதம் அடிப்படையில் கொண்டாடப்படும் இத்தீபத்திருநாளின் சாராம்சம் நன்மையை காட்டும் வேளையில் அந்த நன்மையை தற்கால இளையோரையும் உணர செய்ய நாம் அனைவரும் விழையவேண்டும். அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல், நம் திராவிட மொழியை மறவாமல் முன்னேறும் சிந்தையில் தீபம் ஏற்றினால் அணையாமல் எரியும் மலேசியா தமிழனின் வளர்ச்சி தீபம். அத்தீபம் தீபாவளியாகவே இருக்கட்டுமே.

 

 உதயா: வாவ்,வாழ்த்துகள் தேவன்.அழகுத் தமிழில் அருமையான விளக்கம்.இதன் மூலம் என் கேள்விக்கும் பதில் கிடைச்சிருக்கு.ஒரு புதிய கோணத்தில் சிந்திச்சி இருக்கீங்க. (உண்மைதான் நம் அடையாள அம்சங்களில் ஒன்றாக இருக்கும் தீபாவளியை நாம் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது?)

 

   அடுத்து என் கவனம் இரு வாரங்களுக்கு முன்பே மனசு முறுக்கு முறுக்கு சொல்லுது என ஃபேஸ்புக்கில் தன் வீட்டு முறுக்கையும் படம் பிடித்துப் போட்டிருந்த மின்னல் பண்பலையின் கவிதா கன்னியப்பாவின் மேல் பாய்ந்தது..


 

உதயா: அப்புறம் முறுக்கு செய்து முடிச்சாச்சா?

 

கவிதா : ம் நான் என் அம்மாவுக்கு உதவி செய்தேன்.செஞ்சு முடிச்சுட்டோம்,எனக்கு எப்போதும் எங்க வீட்டு முறுக்குதான் பிடிக்கும்.நாங்க பாரம்பரிய முறையில்தான் செய்வோம்.முறுக்கு சூப்பரா வந்திருக்கு.

 

உதயா: இந்த வருசம் தீபாவளிக்கு வேலையா?எப்படி?

 

கவிதா : இல்லை,நான் வருசா வருசம் என் ஊரான கிந்தாவேலிக்குப் போயிடுவேன்.என் சக அறிவிப்பாளர்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்க.தூரமா இருக்கறவங்களை அவங்க ஊருக்கு தீபாவளி கொண்டாட அனுப்பிட்டு,அவங்க வேலைல இருப்பாங்க.எனக்கு என் தோட்டப்புறத்துல அந்த அழகான இடத்துல தீபாவளி கொண்டாடதான் ரொம்ப பிடிக்கும்.இந்த வேளையில என் சக அறிவிப்பாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

 

 தன் ஊருக்குத் திரும்பி பெருநாள் கொண்டாடப்போகும் கவிதாவின் பேச்சில் தெரித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது.ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் நித்தியா கணேசனிடம் அவரது மறக்க முடியாத தீபாவளி அனுபவம் குறித்து கேட்டேன்.

 

 
நித்யா : ஐந்தாம் படிவத்தில் படிச்சிக்கிட்டு இருந்தப்போ நான்,பரிமளா,குமுதா,விக்னேஷ்வரி,மாதவி அஞ்சு பெரும் ரொம்ப நெருக்கமான நண்பர்களா இருந்தோம்.தீபாவளிக்கு எப்போதும் ஒவ்வொருவர் வீட்டுக்கும் போயி காலை உணவு சாப்பிட்டுட்டு கடைசியா மத்தியான சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வருவோம்.அப்படிதான் அந்தத் தீபாவளிக்கு காலையில குமுதா வீட்டுக்குப் போனோம்.அவங்க வீட்டுல நிறைய நாய் வளர்த்தாங்க.எனக்கு நாயின்னா ரொம்ப பயம்.என் மத்த தோழிங்க எல்லாம் வீட்டுக்குள்ள போயிட்டாங்க.குமுதா வீட்டு நாலு நாய்ங்க என்னைச் சுத்தி நின்னுக்கிச்சு.அதுங்க பார்த்த பார்வையிலயே செத்தேன் என நெனச்சேன்.நல்ல வேளையா குமுதாவோட அப்பா வந்து என்னை அந்த நாயிங்க கிட்டஇருந்து காப்பாத்தினாரு,அந்த வருசம் நாய்களோட கொண்டாடிய அந்தத் தீபாவளியை என்னால மறக்கவே முடியாது.

 

உதயா: ஒருவேளை உங்ககிட்ட அங்பாவ் கேட்டு வந்துருப்பாங்க போல.

 

நித்யா : ஹா ஹா இருக்கலாம்.

 

   இளையராஜா ஐயாவின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் அண்ணன் கடந்த வருடம் நடந்த தீபாவளி ரகளையைப் பகிர்ந்தார்.

 

பாலா : கடந்த வருசம் நாங்க தீபாவளியை பகாவ்ல என் மாமியார் வீட்டுல கொண்டாட முடிவு செய்தோம்.முதல்நாள் இரவு எல்லாரும் சேர்ந்து டோடோல் செய்ய திட்டம் போட்டோம்.ஆனால் மழையின் காரணமா நாங்க போய் சேரவே ராத்திரி மணி எட்டு ஆகிடுச்சி.என் அத்தை டோடோல் செய்யவேண்டாம் தம்பி,ரொம்ப நேரம் கிளறனும்,நேரம் பத்தாதுன்னு சொன்னாங்க.நான், என் மனைவி,மைத்துனர் மூனு பேரும்,”இது ரொம்ப சிம்ப்பள் மேட்டர்..எவ்வளவோ செஞ்சிருக்கோம்,இதைச் செய்யமாட்டோமா?” என நக்கல் அடிச்சுக்கிட்டே வேலையைத் தொடங்கினோம்.கார் நிறுத்தும் வளாகத்தில் அடுப்பு மூட்டி டோடோல் கிண்டினோம்.ஆரம்பத்துல நல்லாதான் இருந்துச்சி,ஆனால் போகப்போக கைவலியோடு தூக்கமும் சேர்ந்துடுச்சி.நேரமாக ஆக அகப்பையும் சட்டியும் ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்க ஆரம்பிச்சது.என் ரெண்டு மைத்துனர்கள் அதிகாலை ரெண்டு மணிக்கு ஓடிட்டாங்க.நானும் அப்படியே தூங்கி எழுந்து பார்த்தப்போ என் மாமாவும்,மத்த ரெண்டு மைத்துனருங்களும் என்னை மாதிரியே அகப்பையைப் பிடிச்சிக்கிட்டே தூங்கி இருந்தாங்க.மூனு மணிக்கு நானும் தூங்கிட்டேன்.கடைசிவரைக்கும் டோடோல் கிண்டி முடிச்சி,பைகளில் சுத்தி வெச்சது என் மனைவியும்,மாமாவும்தான்.காலையில் எழுந்ததும் என்னால் என் ரெண்டு கையையும் தூக்கவே முடியலை.என் மாமியார்,நீங்க எல்லாம் விடிய விடிய செஞ்சது டோடோலே இல்லை என சொல்லி சிரிச்சாங்க.சாப்பிட்டுப் பார்த்தப்போ எங்களுக்கும் அந்த உண்மை தெரிஞ்சது.உண்மையிலேயே எங்களுக்கு அது கலாட்டா தீபாவளிதான். (அடடா,டோடோல் போச்சே!!!)

  

      அடுத்ததாக துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி சித்ரா கோவிந்தசாமியிடம் அவரால் மறக்க முடியாத தீபாவளி பற்றி கேட்டேன்.

 

சித்ரா : என் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி கொண்டாட்டம் என்றால் 2004ஆம் ஆண்டு வந்த தீபாவளி ஆகும். அந்த வருடம் தீபாவளிக்கு மறுநாள் என் பிறந்தநாள். அதே ஆண்டு யூ.பி.ஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி எடுத்த மகிழ்ச்சியோடு என் பிறந்தநாளையும் கொண்டாடும் ஆர்வத்தில் இருந்தேன். பிறந்தநாளன்று அனைவரும் வாழ்த்து தெரிவிக்க என் தந்தையிடத்திலிருந்து எதிர்பாராவிதமாக தங்க மோதிரம் பரிசாக கிடைத்தது. தீபாவளி கொண்டாட்டத்தோடு என் பிறந்தநாள் விழா என இரு மடங்கு மகிழ்ச்சியோடு என் தீபாவளியைக் கொண்டாடினேன். இன்றும் என் விரல்களில் அந்த மோதிரத்தைக் காணும்பொழுது அப்பாவின் நினைவுகளுடன் அந்த தீபாவளி கொண்டாட்டம்தான் நினைவில் வரும்.

(பயில்பணி முடிப்பதில் தூக்கமின்றி பரபரப்பாக இருந்த சித்ரா சுருக்கமாக ஆனால் சுவையாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இன்னும் ஓர் ஆளைத் தேடினேன்.தினக்குரலின் வாலுப்பையனின் ஞாபகம் வந்தது.உடனடியாக பேசவேண்டும் என்றதும் வந்தார் தொடர்பில்.இந்த நேர்காணல் குறித்து சொன்னேன்.

 

உதயா: நீங்க சரியான வாலுவாச்சே?சமையலில் ஆர்வம் வேற.கண்டிப்பா ஏதாச்சும் சேட்டை செய்திருப்பீங்க,சொல்லுங்க நீங்க செஞ்ச ஏதாவதொரு தீபாவளி சேட்டையை.

 

வாலுப்பையன் : ஹா ஹா இன்னைக்குக் காலையில நடந்த ஒரு விசயம் இது.எங்க வீட்டுல தீபாவளிக்கு பலகாரம் செய்துக்கிட்டு இருக்காங்க.நான் என் பங்குக்கு என் அக்கா கூட கேக் செய்யலாம்னு ஆரம்பிச்சேன்.அக்கா மாவு ரெடி பண்ணிட்டு கடைக்குப் போய் முட்டை வாங்கிட்டு வந்துடறேன்னு போநாங்க.அவங்க வரதுக்குள்ள நம்ம வேலையைக் காட்டலாமேன்னு நான் கேக் செய்ய ஆரம்பிச்சிட்டேன்.ஐசிங் கேக் செய்யறதுக்குதானே ஐசிங் சீனி,இது சாதாரண கேக்குதானே,சாதாரண சீனி போதும்னு முடிவு செய்து,மாவை நல்லா அடிச்சி அவுன்குள்ள வெச்சி வேக வெச்சிட்டேன்.என் அக்கா வந்து பார்த்துட்டு பரவாலை,அதுக்குள்ள வேலையை ஆரம்பிசிட்டியேன்னு பெருமைப்பட்டாங்க.நேரம் ஆனதும் கேக்கை அவுன்ல இருந்து எடுத்தேன்.எடுக்கும்போது கேக் தலைகீழாதானே இருக்கும்?

 

உதயா: தெரியலையே எனக்கு?எனக்குத் தெரியாத விசயத்தையெல்லாம் கேட்காதீங்க,எனக்கு கேக் சாப்பிடத்தான் தெரியும்,எப்படி செய்வாங்கன்னு தெரியாது.

 

 வாலு : ஹ்ம்ம் சரி,தலைகீழாதான் முதலில் எடுப்பாங்க..அதோட மேல்பாகம் கீழே இருக்கும்.கவனமா எடுக்கனும்,ஏன்னா மேல்பாகம்தான் அழகா இருக்கனும்.சரின்னு எடுத்துட்டுப் பார்த்தாக்கா கேக் மேல வெள்ளை வெள்ளையா புள்ளி..பாக்கறதுக்கே அசிங்கமா இருந்துச்சி.சரி கொஞ்சமா சாப்பிட்டுப் பார்ப்போமேன்னு பார்த்தால் கேக் நறுக்கு நறுக்குன்னு இருக்கு.குறுக்கே வெட்டிப் பார்த்தா நடுவுல கேக் ஓட்டையா இருக்கு?

 

உதயா: அச்சச்சோ,நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமா?

 

வாலு:ஆமாம்,கேக் நடுவுல வேகவே இல்லை.அதுமட்டுமில்லை நான் போட்ட சாதாரண சீனிதான் ஒரு பக்கமா வெண்புள்ளி மாதிரி இருந்துருக்கு.அப்புறம் என்ன பண்ணறது.நடுவுல இருந்த ஓட்டையை கடையில் கப் கேக்கு வாங்கி வந்து பொருத்தி அடைச்சுட்டேன்

 

உதயா: கேட்கவே கொடுமையா இருக்கே,

 

வாலு: திரும்ப முயற்சி செய்வேன்.கேக் தீஞ்சாலும் சரி,இந்த முறை நடுவுல நல்லா வேகும்வரை அடுப்புல வெச்சிருப்பேன்.

(எனக்கு நடிகர் கவுண்டமணி சொல்லும் சத்திய சோதனை என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.வாசகர்கள் எவரும் வாபுப்பையனின் வீட்டுக்குப் போகவேண்டாம்;அப்படியே போனாலும் அவர் கையால் கேக் சாப்பிடும் விபரீத ஆசை மட்டும் வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 
 

Monday, October 28, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்:கீதம் 19:கேளடி கண்மணி பாடகன் சங்கதி (புதுப்புது அர்த்தங்கள் - 1989)


   கீதம் 19 : கேளடி கண்மணி பாடகன் சங்கதி (புதுப்புது அர்த்தங்கள்)
 
 
 
 
         என் அம்மாவுக்கு இளையராஜாவின் பாடல்கள் என்றால் கொள்ளை ஆசை.தோட்டப்புறத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்தாலும் மாதந்தோறும் இளையராஜாவின் பாடல் ஒலிநாடாவை வாங்கத் தவறியதேயில்லை.90-ஆம் ஆண்டுகளின் பல பாடல்களை அம்மா வாங்கி குவித்திருந்தார்.

   என் அம்மா வீட்டில் சிறிய வானொலி வைத்திருந்தார்.அதில் அம்மா வாங்கி வைத்திருக்கும் ஒலிநாடாவில் உள்ள பாடல்களைக் கேட்டு இரசிப்பதில் அலாதி இன்பம் எனக்கு.எங்கள் வீட்டு வரிசையில் இருந்த லில்லி அக்காளும் என்னோடு இணைந்து கொள்வார்.

  பதின்ம வயதின் இறுதியில் இருந்த லில்லி அக்காள் தினமும் இரவில் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்.இரவில் நிலா ஒளியில் வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில் அமர்ந்து அந்தச் சிறிய வானொலியில் இளையராஜா ஐயாவின் பாடல்களைக் கேட்டு இரசிப்போம்.அக்காள் அந்தப் பாடல்களை இரசித்துப் பாடுவார்.நான் ரேடியோவுல வர மாதிரியே பாடறேனா பாரு,” என்பார்.லில்லி அக்காளின் குரல் ஜானகியம்மாவின் குரல் மாதிரியே இருக்கும்.அந்தப் பாடல் எந்தப் படத்தில் ஒலித்தது,எந்தச் சூழலில் ஒலித்தது,அப்படத்தில் யாரெல்லாம் நடித்தார்கள் போன்ற விசயங்களையெல்லாம் லில்லி அக்காள்தான் எனக்கு சொல்வார்.

   லில்லி அக்காளுடன் கேட்டு இரசித்த பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இடம்பெற்ற கேளடி கண்மணி பாடல்.அந்தப் பாடலைக் கேட்க கேட்க எனக்கு பரவசமாக இருந்தது.சீக்கிரமாக நானும் லில்லி அக்காள் மாதிரி பெரிய பிள்ளையாகிவிடவேண்டும் என நினைத்துக்கொள்வேன்.தூங்கும்போதும் அந்தப் பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

  இன்றைய உதயகீதங்கள் தொடரில் லில்லி அக்காளுக்குப் பிடித்தமான கேளடி கண்மணி பாடலைப் பற்றி பகிர்வதில் மகிழ்கிறேன்.

  கே.பாலச்சந்தர் ஐயாவின் இயக்கத்தில் 1989-ஆம் ஆண்டு ரகுமான்,கீதா,சித்தாரா,ஜெயசித்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்புது அர்த்தங்கள்.இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார்.இப்படத்தில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே,குருவாயூரப்பா,எடுத்து நான் விடவா என் பாட்டை,எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடனும்,’ போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

  மணிபாரதி (ரகுமான்) புகழ்ப்பெற்ற பாடகன்.திரைப்படத்திலும் பாடல்களைப் பாடும் அவனுக்கு இரசிகைகள் அதிகம்.அவன் எங்குச் சென்றாலும் அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்கள்;கையொப்பம் கேட்டு வரிசையில் நிற்பவர்கள்,அவனது புகைப்படம் அட்டைப்படத்தில் வந்தால் யாருக்கும் தெரியாமல் முத்தம் கொடுப்பவர்கள் இப்படி பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு அவன் பிரபலமாக இருந்தான்.அவனது பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள் வெள்ளிவிழாவை எட்டின.

  பணக்கார திமிரும்,அகம்பாவமும் கொண்ட ஜெயசித்ராவின் மகளான கௌரி (கீதா) பணக்காரி என்ற இறுமாப்பு கொண்டவள்.ஒரு தடவை அவளுடைய தோழி தொலைக்காட்சியில் ஒலியும்,ஒளியும் நிகழ்ச்சிக்கு முன் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் மணிபாரதி தோன்றும்போது முத்தம் கொடுப்பதோடு, தான் அவனது தீவிர இரசிகை என்கிறாள்.

  பணத்தாசை பிடித்த கௌரிக்கு எப்போதும் மற்றவர்களால் அடைய முடியாததை தான் அடைந்துவிடவேண்டும் என்ற திமிர் அதிகம்.அவள் தன் அம்மாவிடம் தனக்கு மணிபாரதி வேண்டுமென கேட்க,அவள் அம்மாவும் சிறு நாடகம் ஒன்றை அரங்கேற்றி மணிபாரதியிடம் நல்ல பெயர் வாங்கி கொள்கிறாள்.மணிபாரதி தன் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்பும்போது அவனது குளிர்க்கண்ணாடியை எடுத்து மறைத்துவைத்துக்கொள்ளும் கௌரி அதைக் கொடுக்கும் சாக்கில் பெங்களூருக்கு விமானத்தில் பறந்து போய் மணிபாரதி தங்கியிருந்த விடுதியின் கதவைத் தட்டுகிறாள்.தன் கண்னாடியைக் கொடுப்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளே என்ற சின்ன உறுத்தலோடு அவன் நன்றி கூற,’அவ்வளோதானா?” என கேட்கும் அவள் அழுகையினூடே தான் அவனை அளவுக்கதிகமாக நேசிப்பதாக சொல்கிறாள்.அவள் அழுகையையும்,தொடர்ந்து வரும் கூச்சத்தையும் அவன் படம்பிடிக்க,இருவருக்கும் காதல் ஆரம்பமாகிறது;ஒருநாள் எல்லை மீறிவிடுகிறார்கள்.

  மணிபாரதியை உடனடியாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்தில் தன் அம்மாவை அனுப்பி கர்ப்பமாக இருக்கும் தன் மகளுக்கு நல்ல பதில் சொல்லவேண்டும் என கேட்கவைக்கிறாள்.

  மணிபாரதியை காதலோடு மணப்பது என்பதைக் காட்டிலும் பல பெண்கள் விரும்பும் அவனை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம்தான் அவளுக்குள் நிறைந்து இருக்கிறது.தொலைக்காட்சியில் மணிபாரதி தோன்றினால் ஆசையோடு முத்தமிடும் தோழியிடம்,தாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படத்தைக் காட்டி,இப்போ அவரு என் கைக்குள்ள என்கிறாள்.

  திருமணம் முடிந்து முதலிரவன்று கௌரி சொன்னது பொய் என அறியும் மணிபாரதிக்குக் கோபம் வருகிறது.இருந்தபோதிலும் நாளடைவில் அவன் கௌரியோடு ஒத்துப் போய்விடுகிறான்.

  ஆனால் கௌரியோ நாளுக்கு நாள் அவனை அதிகம் கட்டுப்படுத்த நினைக்கிறாள்.அவன் தனக்கு மட்டுமே முதலிடம் தரவேண்டும் என வம்பு செய்கிறாள்.அவனை எந்தப் பெண்ணும் இரசிக்கவும் கூடாது என சண்டை போடுகிறாள்.அவன் நிம்மதி கெடும் வண்ணம் நடந்து கொள்கிறாள்.

  தான் குளித்துவிட்டு வருவதற்குள் அவன் எங்கும் போய்விடக்கூடாது;யாரிடமும் பேசிவிடக்கூடாது என அவனை மெத்தையில் கட்டிப்போட்டு வைக்கிறாள்.

  தன் அன்பிற்கினியவனின் மேல் அதீத அன்பு வைக்கலாம்.தப்பில்லை.அவன் தன்னை விட்டுவிட்டு பிற பெண்களிடம் பேசினால் சிறு பொறாமை கூட கொள்ளலாம்.தவறில்லை.ஆனால் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகப்பட்டு,அடிமை மாதிரி ஒவ்வொரு கணமும் அவனை வாட்டி எடுத்தால் ஓர் ஆண்மகனால் எவ்வளவுதான் பொறுத்துப்போக முடியும்?அவன் மனதில் பெரும் வருத்தம் கொள்கிறான்.பாடலில் கூட அவனால் கவனம் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.

  தன் மனைவி அன்பானவளாக இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும் என அவன் ஏக்கம் கொள்கிறான்.சில சமயங்களில் தாங்கமுடியாமல் அவளிடம் முகம் காட்டிவிட்டாலும் அவள் காயப்பட்டுப்போனால் உடனே அவளிடம் சமாதானமாகிவிடுகிறான்.அவளோ அதிகாரப் போக்கு கொண்டவளாகவே இருக்கிறாள்.கோபம் வந்தால் அவன் மீது கறியை ஊற்றிவிடுகிறாள்.அவன் தேநீர் குடிக்கும்போது கோப்பையைத் தட்டிவிடுகிறாள்.ஒரு சினிமா நிகழ்ச்சியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நடிகை அவன் காதில் என்னவோ சொல்லி கிசுகிசுக்க,கௌரி முறைத்தபடி அந்த மண்டபத்திலிருந்து வெளியேறுகிறாள்.

  பொறுமையாக இருந்தாலும் சில வேளைகளில் அவள் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்ட அவன் தவறுவதில்லை.ஒரு தடவை வீட்டு சமையல்காரியின் மகளை தொலைபேசியைப் பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு அவள் சாவகாசமாக பேசுவதைப் பார்த்துவிட்டு,”இதென்னா எனக்குப் பிடிக்காத முதலாளித்துவம்?” என திட்டிவிடவே,அவள் கோபத்தில் வெடிக்கிறாள்.

 ஒரு வேலைக்காரி முன்னாடி என்னைக் கேவலப்படுத்தறீங்களா?” என அந்தச் சிறு பெண்ணோடு தொடர்புப்படுத்தி பேசுகிறாள்.

 அவளால் நிம்மதி இழக்கும் அவன் ஒருநாள் அவளிடம் சொல்லாமல் ஒரு விழாவுக்கு செல்கிறான்.அந்த விழாவில் அவனைக் கட்டியணைக்க வரும் ஒரு ரசிகையை அவன் பிடித்து தள்ளிவிட,அவள் அவன் கன்னத்தில் திடீர் முத்தம் கொடுக்க,அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கௌரி அதைப் பார்த்து கோபமாகிறாள்.

  அவன் இனிமேல் பாடவே கூடாது என கண்டிப்பாக சொல்ல,அவன் மறுக்கிறான்.அவள் கோபமாக அவனது புகைப்படத்தைக் கிழித்துப்போட்டுவிட்டு,அவன் பாடிய பாடல் குறுவட்டையும் உடைத்து எறிகிறாள்.மிகுந்த மனபாரத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பனின் வீட்டில் தங்குகிறான்.

  கௌரி பத்திரிக்கையாளர்களிடம் இனிமேல் தன் கணவன் பாடவே போவதில்லை என சொல்ல,அந்தச் செய்தி பத்திரிக்கையில் பிரசுரமாகிறது.கோபத்தோடு வீட்டுக்கு வந்து, வாக்குவாதம் செய்யும் கௌரியிடம்,”உனக்கு புருசனா இருக்கறது மட்டும்தான் என் வேலையா?: என கேட்டு,அறைந்துவிட்டு ஒலிப்பதிவு கூடத்திற்கு வருகிறான்.அதற்குள் அவன் தன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக அவன் மனைவி புகார் கொடுத்ததாக காவல் துறை அதிகாரி ஒலிப்பதிவு கூடத்திற்கே வந்து அ வனை விசாரித்துவிட்டுப்போக,அவனால் பாடவே முடியவில்லை.இன்னொருநாள் வந்து பாடிக்கொடுப்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.

  மறுநாள் டெல்லியில் தமிழ்ச்சங்க  கச்சேரி இருப்பதாக அவன் உதவியாளன் சொல்ல,அவன் மட்டும் தனியாக புறப்படுகிறான்.ஆனால் விமானத்தில் போகாமல் ஒரு பேருந்தில் ஏறி கோவாவுக்குப் புறப்படுகிறான்.அதே பேருந்தில் ஓடிவந்து ஏறுகிறாள் ஜோதி (சித்தாரா).

  அவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வரும் அவள் தன் கணவனின் சித்திரவதையில் இருந்து தப்பித்து வந்தவள்.அவள் ஏதோ இக்கட்டில் இருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொள்கிறான்.பேருந்து கொஞ்சநேரம் நிற்கும்போது கழிப்பறைக்குச் செல்லும் அவள் திரும்பி வருவதற்குள் பேருந்து புறப்பட்டுவிட,அவனும் அவளுக்காக பேருந்தில் இருந்து இறங்கிவிடுகிறான்.இருவரும் ஒன்றாக நடக்கிறார்கள்.அவள் எதற்கோ பயந்து வருகிறாள் என அவனுக்கும் புரியவே,அவள் மேல் இயல்பான பரிவு உண்டாகிறது.

   மழையில் நன்கு நனைந்துவிட்டதாலும்,இரவுப் பொழுது என்பதாலும் இருவரையும் குளிர் வாட்ட,ஆபத்துக்குப் பாவமில்லை என சொல்லி அவளைத் தன் குளிர் சட்டைக்குள் வந்து நுழைந்து கொள்ள சொல்கிறான்.கண்ணியமான முறையில் அவளும் தன் முதுகுப் பகுதியை அவன் நெஞ்சின் ஓரம் நுழைத்து குளிர்சட்டைக்குள் நுழைந்து கொள்கிறாள்.இருவரும் நடந்து போகும்போது தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள்.மழை நின்றுவிட்டாலும் இருட்டிவிட்டதால் விடியும்வரை அந்தப் பள்ளத்திலேயே இருக்கலாம் என்கிறான்.

  சேற்று மண்ணைக் குழைத்து அவள் விரல்களில் மருதாணி மாதிரி இட்டவாறு அவள் சோகத்தைப் பற்றி கேட்கிறான்.அவள் தன் கதையைச் சொல்கிறாள்.தன் கணவனே தன்னை துப்பாக்கி முனையில் காபரே நடனம் ஆடவைத்த அவலத்தைச் சொல்கிறாள்.அதையும் தாண்டி அவளை பணத்துக்காக இன்னொருவனுக்கு கூட்டிக்கொடுக்க நினைத்தபோது தாலியைக் கழற்றி விட்டெறிந்துவிட்டு அவனிடமிருந்து தப்பித்து ஓடிவந்த கதையைச் சொல்லி முடிக்கும் அவள் தன் கையில் அவன் இட்ட சேற்று மருதாணியைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறாள்.அவன் அன்பு அவளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது,அவனுக்கும் அதே நிலைதான்.அன்பும்,அமைதியும்,கனிவும் கொண்ட பெண்ணின் அருகாமை அவனை நிம்மதியடைய செய்கிறது.தன்னைப் போன்றே பலரது வாழ்க்கையிலும் சோகம் இருக்கிறது என புரிந்து கொள்ளும் அவனுக்குள் ஒரு நிம்மதி பிறக்கிறது.சிரித்த முகமய் இருக்கும் அவள் உடன் இருப்பதால் ஏதோ ஆனந்தம் உண்டாகிறது அவனுக்கு.

  மறுநாள் விடியலின்போது அவனது வாழ்வும் இதமாய் மலர்கிறது.பள்ளத்திலிருந்து சேறு பூசிய உடலோடு வெளியே வரும் அவர்களின் மேனியில் படும் மழைத்துளிகள் சேற்றைத் துடைக்கின்றன.வாழ்வில் இருந்த துன்பமும் துடைக்கப்பட்டதைப் போன்றதொரு விடுதலை உணர்வு இருவருக்கும் தோன்றுகிறது.இதுவரையில் மற்றவர்களை மகிழ்விக்க பாடியவன் முதன்முதலாக தனக்காக பாடுகிறான்.கானல் நீரால் தீராமல் இருந்த தாகம் கங்கை நீரான அவளால் தீர்ந்ததாக பாடுகிறான்.தான் தேடும் சுமைதங்கி அவள்தான் எனவும்,தன் மார்பில் தாயென அவனைத் தாலாட்டுபவள் அவள்தான் எனவும் அவன் அந்தப் பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகிறான்.அவனின் இதயகீதமாக எஸ்.பி.பாலா ஐயாவின் குரலில் ஒலிக்கும் அந்தக் கானத்தைக் கேட்டு நாமும் நம் கவலைகளை மறந்து,நம் சோகத்தைக் கலைத்துப்போட வந்த உறவுகளை எண்ணி குழந்தை மனதோடு குதூகலிக்கலாம் வாருங்கள்.

   .உங்கள் மனதுக்குப் பிடித்தமானவர்களை நினைத்துக்கொண்டு இந்தப் பாடல் வரிகளைப் பாடிப்பாருங்கள்.ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உண்டாகும் நிச்சயமாய்.எந்த எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடலைக் கேட்டாலும் எனக்குள் ஆனந்த ராகம் மீட்ட செய்யும் என் அன்பிற்கினியவனோடு,என் பால்ய வயது இரசனையில் இணைந்திருந்த லில்லி அக்காளுக்கும்,வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு சோகத்தோடும்,பிரச்சனையோடும் கடந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் சமர்ப்பணம்.

 


ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹ ஹா ஹ ஹ ஹா

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

ஆ ஆ ஆ ஆ

நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

 

எந்நாளும் தானே தேன் விருந்தாவது

பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்

இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா

எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்

கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீயிதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

 

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்

நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது

கால் போன பாதைகள் நான் போனபோது

கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

ஆ ஆ ஆ ஆ

நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நி..ம்..ம..தி