Monday, May 23, 2011

சிறுகதை - காதல்



சிறுகதை :

காதல்



       காலையில் கண்விழித்தபோதே காதலும் கண்விழித்துக் கொண்டது.ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தது.பிறகு என் தோளில் ஏறி என்னைக் கட்டியணைத்துக் கொண்டது.விடாப்பிடியாய்ப் பிடித்து கீழே இறக்கிவிட்டேன்.முருங்கை மரத்து வேதாளமாய் மீண்டும் என்னில் ஏறிக்கொண்டது.
     ஐயோ….நீ என்னுடன் இருப்பது யாருக்கும் தெரியாது.இப்போதைக்கு யாருக்கும் தெரியவும் வேண்டாம்,இங்கேயே இரு,” என்று பணித்துவிட்டு காதலைத் தலையணைக்கடியில் ஒளித்து வைத்துவிட்டு குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன்.
     குளித்துக் கொண்டிருக்கும்போதே குளியலறைக் கதவைத் தள்ளிக் கொண்டு எட்டிப் பார்த்தது.
    ச்சே, வெட்கங்கெட்ட காதலே என்று திட்டியபடி குளிக்கலானேன்.
   நான் உடைமாற்றுவதை, தலைசீவுவதை, மேக்கப் போடுவதை எல்லாவற்றையும் உடனிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
    எல்லாம் முடிந்து மாடிப்படிகளில் இறங்கியபோது என் முதுகில் ஏறிக்கொண்டு வந்தது காதல்.பிளாந்தா தடவிய ரொட்டித் துண்டுகளை விழுங்கி, நான் ஹார்லிக்ஸ் குடிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
   மற்ற காதலைப் போன்று என் காதல் எனக்கு எந்த நோய்க்கிருமியையும் தந்ததில்லை.அது என்னிடம் வந்து சேர்ந்த பிறகுதான் நான் நிம்மதியாக உறங்குகிறேன்.நிறைய சாப்பிடுகிறேன்.சதா சந்தோஷக் கனவில் மிதக்கிறேன்,எறும்பைப் போன்று சுறுசுறுப்பாக இருக்கிறேன்.

     நான் சாப்பிட்டு முடித்து கார் சாவியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தபோது தானும் உடன் வரப்போவதாக அடம்பிடித்தது காதல்.
 ஐயோ வேண்டாம்,நீ என்னுடன் இருந்தால் என்னால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலாது,நீ என்னைத் தொந்தரவு செய்துக் கொண்டே இருப்பாய்,” என்றேன்.
  இல்லை இல்லை, நான் அமைதியாக இருப்பேன்,என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது,இருக்குமிடம் தெரியாமல் சமர்த்துப் பிள்ளையாய் இருப்பேன்,என்றபடி பரிதாபமாய்ப் பார்த்தது.
   உன்னை நம்பமாட்டேன்,” என்று மறுத்துக் கொண்டே காலணியை அணிகையில் என்னை முந்திக்கொண்டு காரை நோக்கி ஓடியது.அதைத் தடுத்து நிறுத்த வழியற்று இருந்தேன் நான்.
  என்ன சொன்னாலும் இந்தக் காதல் என் பேச்சைக் கேட்பதேயில்லை.எனக்குக் காதலை வெளியில் அழைத்துப் போக மிகவும் பயம்.அது வெளியே இருந்தால் அதற்கு நிறைய ஆபத்துகள் காத்திருப்பதாக எனக்குத் தோன்றும்.என்னவரின் வீட்டாருக்குக் காதலைப் பிடிக்கவில்லை.நான் தமிழ்ப்பெண் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.ஆனால் இந்தக் காதல் கேட்பதில்லை.ஒரு தடவை என்னவரின் குடும்பத்தாரிடமிருந்து அடிபட்டுக் காயப்பட்டு கிடந்தது.சில நாள்தான்..மீண்டும் எல்லாவற்றையும் மறந்துவிட்டது.இதோ இப்போதுகூட அடங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் காதலை என்னதான் செய்வது?
  பயத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொண்டு காதலைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன்.கைகளைக் கட்டிக்கொண்டு படு பவ்யமாய் சாந்த சொரூபமாய் வந்தது.கொஞ்ச நேரம்தான் அதன் அடக்க ஒடுக்கமெல்லாம்.பத்து நிமிடத்திற்குள் அதன் குரங்கு சேட்டையை ஆரம்பித்துவிட்டது.பெல்ட்டை அவிழ்த்துப் போட்டுவிட்டு என்னை நெருங்கி வந்தது.ஹேன்பிரேக்கை இழுத்துப் பார்த்தது.கியர் பாக்ஸில் ஏறி இறங்கியது.உச்சக்கட்ட சேட்டையாய் ஸ்டியரிங்கின் மேல் ஏறிக்கொண்டு அசைத்தது.அது செய்த சேட்டையில் சற்று தடுமாறி எதிரே வந்த காரை மோதியிருப்பேன்.விளைவு காலையிலேயே ஓர் இந்திய ஆடவனிடம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.வீட்டில் காலையிலேயே மனைவியிடம் நன்கு வாங்கி கட்டிக்கொண்டு வந்திருப்பான் போலும்.ஒட்டுமொத்த எரிச்சலையும் என் மீது கொட்டி இசைமழை மாதிரி வசைமழையைப் பொழிந்துவிட்டுப் போனான்.
  இப்போது உனக்கு சந்தோஷமா?இதனால்தான் நீ என்னுடன் வருவதை நான் விரும்புவதில்லை, காதலைக் கடுமையாக திட்டிவிட்டேன்.அது முறைத்துக் கொண்டுவிட்டது.கார் ஸ்டியரிங்கை விட்டு அவசர அவசரமாக இறங்கியது.என்னிடம் கோபித்துக் கொண்டு காரின் பின்சீட்டில் போய் அமர்ந்து கொண்டது.


  நான் அலுவலகத்தை அடைந்து காரை நிறுத்திவிட்டு இறங்கினேன்.காதல் அப்போதும் என்னுடன் முறைத்துக் கொண்டு இறங்கி வராமல் காரிலேயே அமர்ந்திருந்தது.
  எப்படியோ போய்த் தொலை,” என்று திட்டிவிட்டு என்னுடைய பஞ்ச் அட்டையை எடுத்துக் கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.நான் அறைக்குள் நுழைந்த சற்றைக்கெல்லாம் என் போஸ் உள்ளே நுழைந்தார்.
  ஏழு மாத கொழுப்பைக் கர்ப்பம் சுமந்திருந்த அந்த மனிதர் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார்.அலுவலக நேரமோ எட்டு மணி நேரம்தான்.அவர் பத்து மணி நேரத்திற்குரிய வேலையைப் படடியலிட்டிருந்தார்.செயலாளினி ஆயிற்றேஅதனால் எரிச்சலை அடக்கியபடி மேல்வரிசை பற்கள் மட்டும் தெரிய அளவோடு புன்னகைத்துத் தலையாட்டி வைத்தேன்.
  இரவு முழுக்க உறங்கி கிடந்த கணினியை எழுப்பி மைக்ரோசோப்ட் எக்ஸெல்லைத் திறந்தேன்.என் அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.எழுந்து போய்த் திறந்தேன்.காதல் தன் எல்லா பற்களையும் காட்டியபடி நின்று கொண்டிருந்தது.என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டது.
  சரி சரி. எனக்கு நிறைய வேலை இருக்கிறது.சிரிக்காத ஊர்ல இருந்து வந்திருக்கற என்னோட போஸ் பாக்கறதுக்கு முன்னாடி உள்ளே வந்து உட்காரு,” காதலை என்னிடமிருந்து பிரித்தெடுத்துவிட்டு கணினியோடு ஐக்கியமானேன்.
   காதல் சில நிமிடம் அமைதியாக இருந்தது.பிறகு என் காதலரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனது.ஐந்து மணிக்குள் வந்துவிடும்படி பணித்துவிட்டு என்னுடைய வேலையைத் தொடர்ந்தேன்.
  சொன்னபடி சரியாக ஐந்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்த காதல் கையில் பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு வந்திருந்தது.நான் ஆவலாய்ப் பார்த்தேன்.மூட்டையைப் பிரித்துக் காட்டியது.உள்ளே நிறைய முத்தங்கள்.என்னவரிடமிருந்து மூட்டை நிறைய முத்தங்களை வாங்கி கொண்டு வந்திருந்தது.
 
மூட்டைக்குள்ளிருந்த முத்தங்களை எடுத்து என் கன்னம், நெற்றி, உதடு என்று முகம் முழுக்க ஒட்டி வைத்தது.
   போதும் போதும் முகம் முழுக்க எச்சிலாக்கிவிட்டாய்,” செல்லமாய்த் திட்டினாலும் அதைத் தடுக்கவில்லை நான்.
   மணி ஐந்தரையை நெருங்கியது.என் வேலை முடிந்துவிட்டிருந்தது.காதலை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.என்னவரைப் போய்ப் பார்த்துவிட்டுப் போகலாம் என என்னை வற்புறுத்தியது காதல்.
  சரி என்று காரை செலுத்தினேன்.திடீரென எதிரே ஒரு பேருந்து வந்தது.அதில் மதம், இனம்,ஜாதி ,ஈகோ  எல்லாமே உட்கார்ந்திருந்தன.டிரைவர் சீட்டில் விதி உட்கார்ந்திருந்தது.புன்னகையற்ற முகத்துடன் பேருந்தை செலுத்தியபடி வந்து கொண்டிருந்தது.என்னவோ நடக்கப்போகிறது என என் உள்மனம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேகமாக வந்து என் காதலை மோதித் தள்ளியது.காதல் காருக்கு வெளியே தூக்கி எறியப்பட்டது.ஐயோ என பதறிக்கொண்டே காரை விட்டு இறங்கினேன்.காதல் காயப்பட்டுக் கிடந்தது.உடலெங்கும் காயம்.அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்தேன் நான்.என்னைப் பார்த்துக் கொண்டே துடிதுடித்தபடி உயிரைவிட்டது காதல்.


சில நாட்களுக்குப் பிறகு…..
     அலாரச் சத்தம் கேட்டு கண்விழித்தேன்.கட்டிலில் என்னைத் தவிர யாருமில்லை.மனம் வலித்தது.ஆனால் அழுவதற்குத் தெம்பில்லை,கண்ணீரும் மிச்சமில்லை.எழுந்தேன்,குளித்தேன்,உடைமாற்றிக் கிளம்பினேன்.எதுவும் சாப்பிட தோன்றவில்லை,காரைக் கிளப்பினேன்.மௌனமாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது என் பயணம் தனிமையில்…..

உதயகுமாரி கிருஷ்ணன்.