Sunday, June 23, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் :கீதம்10 : குயில் பாட்டு


           குயில் பாட்டு (என் ராசாவின் மனசிலே)
 
 
 
 
 
     குயிலின் கீதம் தரும் இனிமையை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடமுடியாது.சிறுவயதில் தோட்டப்புறத்தில் ஆலமரத்திலிருந்து கூவிய குயிலின் ஓசை இன்னும் நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.தமிழ்ப்பள்ளியில் பயின்றபோது குயிலின் கீதத்தை மிக நெருக்கமாய் எனக்கே எனக்கானதாய் உணர்ந்ததுண்டு. மாலை வேளைகளிலும்,இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் அதிகாலைப் பொழுதிலும் கூவும் குயிலின் ஓசையில் ஏதோ ஒரு சோகம் கலந்திருப்பதைப் போன்று தோன்றினாலும் கேட்க கேட்க மனம் இதம் பெறுவதாய் உணர்ந்து இன்பமடைவேன்.அத்தகைய குயிலின் கீதத்தின் இனிமையைக் கொண்ட பாடல்களில் ஒன்றுதான் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே?”கணவனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் தள்ளிவைத்து தள்ளி வாழ்ந்த கிராமத்துப் பெண்ணொருத்தி புரிதலுக்குப் பின் தன் கணவனை எண்ணி மருகிப் பாடிய கீதம்.

  முதல் மரியாதை உள்பட பல எண்பதாம் ஆண்டு தமிழ்த்திரையிசைப் பாடல்களிலும்,படங்களிலும் குயிலின் கீதம் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது.என் ராசாவின் மனசிலே  திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலோ குயிலோசையில்தான் ஆரம்பமாகிறது.

  1991-ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாரிஜாத பூவே,குயில் பாட்டு,பெண்மனசு ஆழமென்று,சோலைப்பசுங்கிளியே போன்ற மனதை அள்ளும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.இப்படத்தில் இளையராஜாவின் பெயர் ராகதேவன் இளையராஜா என போடப்பட்டிருந்தது.

 உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தைத் தயாரித்து நாயகனாக நடித்திருந்தவர் ராஜ்கிரன்.அவரோடு மீனா,சாரதப்ரீத்தா,ராஜ்சந்தர்,ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

    படத்தில் இப்பாடல் சோகமான,மகிழ்ச்சியாக என இரு வகையாக ஒலிக்கிறது.ஆரம்பத்தில் படத்தின் பெயர் ஓடும்போது இளையராஜா ஐயாவின் குரலில் சோகமாய் ஆரம்பித்து,பின்னர் சொர்ணலதாவின் குரலில் மனதைப் பிசையும் இப்பாடல் பின்னர் ராஜ்கிரனுக்கும்,மீனாவுக்கும் ஒலிக்கிறது. 

     தொன்னூறுகளில் ராஜ்கிரண் அவர்கள் நடித்த எல்லா கிராமியப் படங்களுமே பெண்களை அதிகம் கவர்ந்ததோடு,கேட்பதற்கு இனிமையான பாடல்களையும் கொண்டிருந்தன.தன் தோற்றத்திற்குப் பொருந்தும் வகையில் தன் கதாபாத்திரத்தையும் கரடுமுரடான பலாப்பழத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இனிப்பான சுளைக்கு ஒப்பாக அமைத்திருப்பார்.இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.மாயாண்டி என்ற முரட்டுத்தனம் நிரம்பிய இளைஞன் பாத்திரத்தில் எந்நேரமும் சாராயத்தைக் குடித்துக்கொண்டு,தப்பு செய்பவர்களைக் கண்டபடி அடித்து துவம்சம் செய்யும் கோபக்காரனாக நடித்திருப்பார்.அவருடைய முறைப்பெண் சோலையம்மா பாத்திரத்தில் அழகான மீனா.

  சோலையம்மா இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்டவளாக இருக்கிறாள்.ஆற்றில் குளிப்பதற்கு பயந்து கொண்டு காலை மட்டும் நனைத்துப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு பயந்தாங்கொள்ளியான அவள் பிறந்தபோதே மாயாண்டிக்குத்தான் மணமுடிக்கவேண்டும் என பெரியவர்களால் நிச்சயிக்கப்படுகிறது.அவளுக்கோ மாயாண்டியைத் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமேயில்லை.அவனைக் கண்டாலே கண்கள் படபடக்க பயந்து நடுங்குகிறாள்.மென்மையான அவளுக்கும்,மாயாண்டிக்கும் பொருத்தமே இல்லாமல் இருப்பதாய் உணர்கிறாள்.

     ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட இட்டிலிகளை சிறு வாளி நிறைய சாம்பாரோடு ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் வாட்டசாட்டமான மாயாண்டிக்கோ சோலையம்மாளிடத்தில் கொள்ளைப்பிரியம்.அவளுக்கென காசு,பணம் சேர்த்து அழகான,பெரிய வீட்டையும் கட்டி வைக்கிறான்.அவள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் அவ்வீட்டில் குடித்தனம் தொடங்கவேண்டும் என விரும்புகிறான்.

  கஸ்தூரி பெரிய மனுசியாகிவிட,அவளுக்கு முறைமாமன் சடங்கு செய்வதற்காக வரும் மாயாண்டி ஓலைப்பாயைப் பின்னும்போது அவளுடைய வாசம் உணர்ந்து ஆசையாய் நோக்க,அவளோ அவனைப் பார்த்து பயத்தால் எச்சில் விழுங்குகிறாள்.

  இன்னொருநாள் திருவிழாவின்போது ஒருவன் சோலையம்மாளை கையைப் பிடித்து இழுக்க,அவனையும் அவனது ஆட்களையும் கண்டபடி துவம்சம் செய்துவிடுகிறான்.அந்த அடிதடியைப் பார்த்து மிரண்டு போகிறாள் சோலையம்மா.அவளிடம் மாமனுக்கு திருவிழா சாப்பாட்டைப் போடும்படி மாயாண்டியின் தாய் பொன்னுத்தாயி (ஸ்ரீவித்யா) கூற,பரிமாற போகும் சோலையம்மா பயத்தால் சோற்றுப்பானையை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்துவிடுகிறாள்.அவனே எல்லா சோற்றையும் கொட்டிக்கொண்டு,ஆட்டுக்கறியோடு சாப்பிடுவதையும்,நல்லி எலும்பைக் கடித்து நொறுக்குவதையும் கண்டு மிரண்டு நடுங்குகிறாள்.

  சாராயம்,அடிதடி,முரட்டு புத்தி,மூர்க்கக்குணம் என இருக்கும் அவனைத் திருமணம் செய்துகொள்வதற்குப் பதில் கிணற்றில் விழுந்து செத்துப்போய்விடுவதே மேல் என அழுகிறாள்.ஆண்களில் அவள் அப்பா உள்பட பலரும் மோசமானவர்களாக இருந்து திருமணத்துக்குப் பின் திருந்தி வாழ்க்கை நடத்துவதாகவும்,தன் மகன் மூர்க்கனாயிருந்தாலும் குணத்தில் ராமனை ஒத்தவன்.சோலையம்மாளைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைத்துப் பார்க்கமாட்டான் என ஏதேதோ சொல்லி அவள் மனதை மாற்றுகிறாள் பொன்னுத்தாயி.மூத்தவள் மணமாகாமல் இருந்தால்,இளையவளின் திருமணமும் பாதிக்கப்படும் என அவள் அம்மாவும் தன் பங்குக்கு சொல்ல,வேறு வழியின்றி மாயாண்டிக்குக் கழுத்தை நீட்டுகிறாள்.

  முதலிரவன்று அவள் பயந்து நடுங்கி கொண்டிருக்கையில்,மூச்சு முட்ட சாராயம் குடித்துவிட்டு உள்ளே நுழைபவன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பலகாரங்களை எல்லாம் துச்சமாக பேச,அவள் மேலும் மிரண்டு போகிறாள்.தள்ளி தள்ளிப் போகும் அவளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க,சாராய நாற்றமும்,அவன் மீது கொண்ட பயமும் சேர்ந்து அவளுக்குக் குமட்டிக்கொண்டு வர,அவன் மீதே வாந்தி எடுத்துவிடுகிறாள்.அவன் கோபத்தில் அவளை அறைந்து தள்ளிவிட்டு வீட்டைவிட்டுப் போய்விடுகிறான்.

  மறுநாள் இரவு அவனுக்குப் பயந்து கொண்டு தன் இளைய தங்கையை அழைத்து,தன்னோடு படுக்கவைத்துக்கொள்ளும் சோலையம்மா,கணவன் வந்ததும் கதவைத் திறக்கும்போது,தூங்கி வழியும் தங்கையை வற்புறுத்தி எழவைக்க,அக்காட்சியைக் கண்ட அவனுக்குக் கோபம் உண்டாக,வேதனையோடு வெளியே போய் படுக்கிறான்.ஆனால் அந்நேரம் பார்த்து இடி,மின்னலோடு கனத்த மழை பெய்ய,நனைந்து போய் வீட்டினுள் திரும்ப வருகிறான்.சோலையம்மாவைப் பார்த்ததும் உள்ளே இருந்த கோபம் வெளியில் வர,மூர்க்கத்தனமாய் அவளைப் பிடித்து இழுத்து,பலவந்தமாய் தொட்டுவிடுகிறான்.

 ஒரு பெண்ணை எப்படி மென்மையாக கையாள வேண்டுமென தெரியாமல் அவளது கைவளையல்களை உடைத்து,உடலில் சிறு காயம் படும் வண்ணம் அவன் நடந்து கொண்டது அவளுக்குள் கசப்பாய் பதிவாகிப்போகவே,அவனைக் கண்டாலே பயந்து,மிரண்ட பார்வையோடு தள்ளிப் போகிறாள்.

    அவள் கர்ப்பமடைந்திருப்பது அறிந்து அவன் ஆசையாக மாங்காய்,சாத்துக்குடி எல்லாம் வாங்கி வந்து கொடுத்தபோது கூட அவள் அதை வாங்கிகொள்ளாமல் விலகிப்போகிறாள்.அவன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவள் முகம் பார்த்து இருப்பதே போதும் என நினைக்கையில் ஒன்பதாவது மாதமாகிவிட்டதால் குழந்தை பிறக்கும்வரையில் தன் வீட்டில் வைத்துக்கொள்வதற்காக அவனிடம் அவன் மாமியார் அனுமதி கேட்க,அவன் மறுக்கிறான்.சோலையம்மாளுக்குக் கோபம் வந்து,தன் பெற்றோரிடம்,”இனிமேல் நீங்க எனக்கு செய்யவேண்டியது கருமாதி ஒன்னு மட்டும்தான் என வெடித்து புலம்புகிறாள்.அவர்கள் மௌனமாய் அங்கிருந்து வெளியேற,கேள்வி கேட்ட மாயாண்டியிடமும் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறாள்.அந்த வீடு தனக்கு சுடுகாடு மாதிரி என்கிறாள்.அவனை ஆத்திரமும்,அவமானமும் சூழ்ந்து கொள்ள,அவளை கைநீட்டி அடித்துவிடுகிறான்.

       அப்போது அங்கு வரும் பொன்னுத்தாயிக்கு இருவருக்குமிடையே நிகழ்ந்தவை தெரியவரவே,மனைவியிடம் எப்படி பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறாள்.சாராய நெடியோடு,மூர்க்கத்தனமாக நெருங்கினால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் மிரண்டுதான் போவாள் என சொல்லி,அவனிடம் அவளுக்கு என்ன தேவையோ அதை வாங்கி வரும்படி சொல்கிறாள்.மனம் தெளிவாகி அவன் புறப்பட்டு செல்ல,சோலையம்மாளை நெருங்கி அவளுக்கும் புத்திமதி சொல்கிறார்.அவன் முரடனாயிருந்தாலும்,மனைவியின் மேல் உயிரையே வைத்திருக்கிறான்; காட்டத்தான் தெரியவில்லை என்கிறாள்.மனைவி என்பவள் நினைத்தால்,தன் அன்பினால் அவனைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து திருத்திவிடமுடியும் என்கிறார்.அவள் மீது இருக்கும் தவற்றையும் சுட்டிக்காட்டி,அன்பால் அவனது குடிப்பழக்கத்தை நிறுத்தி,அவனை நல்லவனாக மாற்றவேண்டியது அவளுடைய பொறுப்பு என நிதானமாக எடுத்துக்கூற,வஞ்சி அவள் தன் அறியாமையை உணர்ந்து தெளிவு பெறுகிறாள்.

      கணவன் தனக்காக மல்லிகைப்பூ வாங்கி வர சென்றிருக்கிறான் என அறிந்தபோது அவள் முகத்தில் புன்னகை பூக்கிறது.தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் அவனை இனி அன்பாய்,ஒரு நல்ல மனைவியாய் கவனித்துக்கொள்ளவேண்டும் என எண்ணுகிறாள்.அப்போது சந்தோசமாக ஒலிக்கிறது குயில் பாட்டு.

  இப்பாடல் கணவனிடத்தில் ஆழமான நேசத்தை வெளிப்படுத்த எண்ணும் பெண்ணின் ஏக்கமும்,ஆவலும் ததும்பிய உணர்வின் வெளிப்பாட்டினை அழகிய வரிகளாகக் கொண்டுள்ளது.எப்படி குயிலின் கீதம் தரும் இதம் மாயாண்டிக்கு சோலையம்மாளை நினைவுப்படுத்துகிறதோ அதேமாதிரி அவளுக்கும் இன்பம் தோன்றுகையில் குயிலின் கீதம் மனதுக்குள் ஒலிக்கிறதாம்.குயிலே,நீ போய்விடு,இனி உன்னிடத்தில் இருந்து அவனுக்கு இன்பத்தையும்,இதத்தையும் தரப்போவது நான்தான் என்கிறாள்.நெருங்கவே விடாமல் தள்ளிவைத்து நடத்திய தன் அத்தை மகனின் மேல் தீராத அன்பை நெஞ்சில் சுமப்பாளாம்.அவன் வரும் பாதையில் மல்லிகைப்பூ மெத்தை விரிப்பாளாம்.அவன் உத்தரவு போடுவதற்கு முன்பே இவளே அவனுக்கு இன்பம் தர முந்தி நிற்பாளாம்.பிள்ளை தந்த ராசாவுக்கு ஒரு மனைவியால் கிடைக்கவேண்டிய அனைத்து சுகங்களையும் வாரிக்கொடுப்பாளாம்.அவன் தந்த பிள்ளை வயிற்றில் தாமரையாய் ஆட,அதைக் காத்து வளர்ப்பாளாம்.மௌனம் போனதாய் வேதம் பாடுகிறதாம் மனது.கணவனோடு வாழும் ஆசையோடு வாசல் தேடுகிறதாம் அவன் வரவை எண்ணி.இப்படத்தில் இளையராஜா ஐயாவோடு,கவிஞர் பொன்னடியான்,பிறைசூடன்,உஷா ஆகீயோர் பாடல்களை எழுதியுள்ளனர்.அவர்களில் இப்பாடலை எழுதியவர் யார் என கண்டறிய முடியவில்லை.

   இப்பாடல் காட்சியும் பாடலைப் போன்றே ரசிக்கவைக்கும்.எப்போதுமே சோகமுகத்தோடு,மிரண்ட விழிகளோடு வரும் மீனா,இப்பாடலில்தான் புன்னைகையால் மலர்ந்த முகத்தோடு இருப்பார்.மனம் தெளிவு பெற்றபோது பறவைகளின் கானம் காதில் விழ,மஞ்சள் பூசி தலையோடு குளித்து கணவனுக்காய் ஆசையோடு காத்திருப்பார்.அப்போது அழகாய் சூரியகாந்தி பூவின்மேல் அமர்ந்தபடி குயில் கூவ,மீனா பாட ஆரம்பிப்பது அழகான ஆரம்பம்.தான் தவறவிட்டதையெல்லாம் இப்பாடல் காட்சியில் (கற்பனையில்)செய்வார்.கால் பாதத்தை மட்டும் நனைத்தவர் ஆற்றில் இறங்கி சந்தோசமாக குளிப்பார்.பாவாடை,தாவணியில் மிக சந்தோசமாய் குதித்து ஓடுவார்.

      திருமணத்திற்கு முன்பும்,பின்பும் எதையெல்லாம் வெறுத்தாரோ அதையெல்லாம் ரசித்து செய்வார்.கணவனின் சட்டையை மார்பில் சேர்த்து அணைத்துப் பார்ப்பார்.கணவனுக்குப் பிடித்த நல்லி எலும்பைப் போட்டு பெரிய பானை நிறைய ஆட்டுக்கறி சமைப்பார்.திருமணத்தின்போது ஜோடியாக எடுத்த புகைப்படத்தை ஆசையாய் துடைத்து வைப்பாள்.மாட்டுவண்டி சத்தம் கேட்டதும் அவன் வந்துவிட்டானோ என துள்ளலோடு வாசலில் போய் நிற்பாள்.கடைசியாய் முதலிரவன்று அவனுக்காக மிரட்சியோடு காத்திருந்தவேளையில் அமர்ந்திருந்த பாயை பரணிலிருந்து எடுக்க முயலும்போது தவறிவிழுந்து இறந்தும் போய்விடுவார்.

        இப்பாடலைக் கேட்கும்போது மனதைப் பிசைய வைப்பதற்கு அக்காட்சியும் ஒரு காரணம்.இவ்வளவு ஆசையோடு பாடியவள்,அதையெல்லாம் செய்யமுடியாமல் அகாலமாய் மாண்டு போனாளே என்ற வருத்தம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை.மாநிறத்தில் கள்ளமில்லாத குழந்தை முகத்தோடு, அழகான கண்களோடு,சாந்தமான தோற்றத்தில் வந்துபோகும் மீனாவை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியவில்லை.

  தன் பதினெட்டு வயதில் இப்பாடலை இவ்வளவு உயிர்கொடுத்து பாடியுள்ளார் சொர்ணலதா.என் வயிற்றில் ஆடும் தாமரை என்ற வரிகளை இவர் குரல் குழைய பாடும்போது அந்தத் தாய்மையை நம்மாலும் உணரமுடிகிறது இவ்வுலகை மட்டும் மறைந்தாலும் அந்த இசைக்குயிலின் இந்தக் கீதத்திற்கு என்றுமே மரணமில்லை.

  பேஸ்புக் வலைத்தளத்தில் Beauty Of Music என்றொரு பக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஷா ஆலமைச் சேர்ந்த நண்பர் நாசர் (கவிரசிகன்) தன் தோழி கேரலின் நாயரோடு சேர்ந்து உருவாக்கியுள்ள,மதங்களைத் தாண்டிய இந்த இசைப்பக்கத்தில் மித்ராணி,முகுந்த்,லாலாநந்தா,மதன்,கேத்ரின்,ரின்னா,புவனேஸ்வரி,கோபால்,ஜெயந்தி,வாசுதேவன் பிள்ளை,நிலா,கதிர்,ஷான் ஆகியோர் இனிமையான பாடல்களையெல்லாம் குறிப்பாக எழுபதாம்,எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடல்களையெல்லாம் பகிர்ந்து வருகிறார்கள்.கவிரசிகன் தினக்குரலின் தீவிர வாசகரும் கூட.பலநாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்தப் பக்கத்தில் குயில் பாட்டு போன்ற பல இனிமையான பாடல்களைப் பார்த்து மகிழ்வதோடு பாடல் காட்சிகளையும் பகிரலாம்.

  எந்த எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடல்களைக் கேட்டாலும் எனக்குள் குயிலின் கீதம் தரும் இதத்தை உணரவைக்கும் என் அன்பிற்கினியவனுக்கும்,இசையால் முகநூல் நண்பர்களை இணைக்கும் பியூட்டி ஆப் மியூசிக் இசைக்குடும்பத்தினருக்கும் இந்தக் குயில் பாட்டு சமர்ப்பணம்.இனி குயில் கூவும்போதெல்லாம் இந்த வரிகள் உங்கள் நினைவில் வந்துபோகட்டும்.

 

 

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

இன்று வந்த இன்பம் என்னவோ?

அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ

குயிலே போ போ

இனி நான் தானே?

இனி உன் ராகம்

அது என் ராகம்..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

 

அத்தை மகன் கொண்டாட..

பித்து மனம் திண்டாட

அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓஓ

புத்தம் புது செண்டாகி

மெத்தை சுகம் உண்டாக

அத்தனையும் அள்ளிக்கொடுப்பேன்..ஓஓ

மன்னவனும் போகும் பாதையில்

வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்.

உத்தரவு போடும் நேரமே

முத்துநகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்.

மௌனம் போனதென்று புது வேதம் பாடுதே

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..

கீதம் பாடுதே..வாசல் தேடுதே..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

 

வானம் இங்கு துண்டாக,வந்த இன்பம் வீணாக,

இன்றுவரை எண்ணியிருந்தேன்..ஓஓ

பிள்ளை தந்த ராசாவின்

வெள்ளைமனம் பாராமல்

தள்ளிவைத்து தள்ளி இருந்தேன்.ஓஓ

என் வயிற்றில் ஆடும் தாமரை

கையசைக்க காலசைக்க காத்து வளர்ப்பேன்

கர்ப்பகத்து பொற்பாதத்துப் பூவினை

அற்புதங்கள் செய்யும் என்று சேர்த்து முடிப்பேன்

மௌனம் போனதென்று புது வேதம் பாடுதே

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..

கீதம் பாடுதே..வாசல் தேடுதே..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

இன்று வந்த இன்பம் என்னவோ?

அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ

குயிலே போ போ

இனி நான் தானே?

இனி உன் ராகம்

அது என் ராகம்..

 

 

 

Sunday, June 16, 2013

தந்தையர் தின சிறப்பு நேர்காணல் - அன்புள்ள அப்பா


 
          தாயானவள் குழந்தையைக் கருவில் சுமந்தால்,தந்தையானவர் குழந்தையை நெஞ்சில் சுமக்கிறார்.பார்வைக்குக் கண்டிப்பாக தெரிந்தாலும் தாய்மை குணம் கொண்ட தந்தையர்கள் இவ்வுலகில் நிறையவே இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட சில தந்தைமார்களைப் பற்றி என் நட்வு வட்டத்தில் சிலரிடம் கேட்டபோது பல சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
  
 
 

மோகனஜோதி சுப்ரமணியம்: எனக்கு என் அப்பா சுப்ரமணியம் சிம்மாதிரி நல்ல நண்பர் உதயா.என் அம்மா இறந்த பிறகு எனக்கு எல்லாமே என் அப்பாதான்.நான் அவர்கிட்ட எந்த விசயத்தையும் மறைக்கமாட்டேன்.நான் அவரை ரொம்ப உரிமையா வா,போ என்றுதான் அழைப்பேன்.என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அப்பா எனக்கு விதவிதமான கைபேசி வாங்கி கொடுப்பாரு.நான் பல்கலைக்கழகத்துல படிக்கிறேன்,ஆனால் என் அப்பாவுக்கு நான் இன்னும் பள்ளிச்சிறுமிதான்.காலையிலேயே ஃபோன் பண்ணி ஸ்கூல் போனியா என்று கேட்பாரு(சிரிப்பு).

 

உதயா: சரி,அப்பாவுடனான நெகிழவைக்கும் சம்பவம் ஏதும்

       இருக்கா?

 

மோகனா: நிறைய இருக்கு.எனக்கு என் அம்மா மேல ரொம்ப பாசம்.எனக்கு 18 வயசு இருக்கும்போது சிறுநீரக பாதிப்பால் அம்மா இறந்துட்டாங்க.அப்பா அம்மாவுக்காக நிறைய செலவு செய்தாரு தெரியுமா?அம்மா இறந்தபிறகு அப்பாவால தனியா வாழ்க்கையைத் தொடர முடியலை.இன்னொரு திருமணம் செய்துக்க விரும்புவதா எங்கள் எல்லாரையும் அழைச்சிப் பேசினாரு.என் அண்ணன்கள் ஒன்னும் சொல்லலை.ஆனால் நான் மட்டும் அப்பாக்கிட்ட நேராவே சொல்லிட்டேன்.அப்பா,நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காதே,எனக்குப் பிடிக்கல என சொல்லிட்டேன்.

 

உதயா: அச்சச்சோ ..

 




மோகனா: எனக்கு அம்மா இடத்துல வேற யாரையுமே வெச்சிப் பார்க்க முடியல உதயா.நான் சொன்னதை மதிச்சி அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துக்கல தெரியுமா?என்னை ரொம்ப செல்லமா பார்த்துக்கறாரு.நான் அவருக்கு அடிக்கடி லெட்டர் எழுதுவேன் தெரியுமா?

 

உதயா: என்னா எழுதுவீங்க?அவருக்குத் தெரியாமல் அவரோட படுக்கை அறையில வெச்சிடுவீங்களா?

மோகனா: நேராவே கொண்டு போயி கையில கொடுப்பேன்.”அப்பா,உன்னைப் பத்தி புகார்க்கடிதம் எழுதியிருக்கேன்,படிச்சிப் பாரு என சொல்வேன்.அப்பா படிச்சிப் பார்த்துட்டு கண் கலங்கிடுவாரு.

 

(அடுத்ததாக தமிழ்ப்பற்றோடு இருக்கும் நண்பர் ராஜ்மகனிடம் உங்க அப்பாவைப் பத்தி சொல்லுங்களேன் என்றேன்)

 

 
 

 ராஜ்மகன் :  நீங்க எம்டன் மகன் தமிழ்ப்படம் பார்த்திருக்கீங்களா உதயா?அதுல வரும் எம்டன் பாத்திரம்தான் என் அப்பா.

 

உதயா: ஹா ஹா,ஆரம்பமே சூப்பரா இருக்கே??

 

ராஜ்மகன் : என் அப்பா என்னை அடிக்காத அடி இல்லை.வெச்சு உரிச்சி எடுத்துடுவாரு.படிப்பு விசயத்துல பயங்கர கண்டிப்பு.எந்நேரமும் படிக்கனும்.வெளிய விளையாடக்கூட போக முடியாது.அவரைப் பார்த்தாலே அப்போது ரொம்ப பயமா இருக்கும்.

 

உதயா: அப்பா அப்படி இருந்ததால உங்கள் குழந்தைப் பருவத்து இன்பத்தையே இழந்துட்டதா ஒரு வருத்தம் உங்களுக்குள்ள இருக்கா ராஜ்?

ராஜ்: கண்டிப்பா உதயா,என் அப்பாக்கிட்ட என்னைக்காச்சும் கேட்கனும்,ஏன்ப்பா அவ்வளோ கண்டிப்பா இருந்தீங்க என.என் அப்பாவுக்கு மனசுக்குள்ள என் மேல ரொம்ப பாசம் இருக்கு உதயா.ஆனால் காட்டிக்க மாட்டாரு.நான் தூங்கும்போது வந்து கன்னத்துல முத்தம் கொடுப்பாரு.என்னைக்காவது என்னை ரொம்ப அடிச்சிட்டா அன்னைக்கு இரவுல வந்து என்னைத் தடவிக்கொடுப்பாரு.நான் எதிர்பார்க்காததையெல்லாம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுப்பாரு.இந்த வயசுல கூட என்னைத் தன்னோட மடியில உட்கார சொல்வாரு.நான் சின்ன வயசுல செய்த சேட்டைகளையெல்லாம் சொல்லி சிரிப்பாரு.எனக்கு நிறைய விசித்திரமான கதைகளையெல்லாம் சொல்லியிருக்காரு.

 

உதயா: உங்க அப்பாவோட தமிழ்ப்பற்று பற்றி சொல்லுங்க ராஜ்.

 

ராஜ்: என் அப்பா தன்னோட மார்புல பாரதியார் படத்தை பச்சை குத்தியிருப்பாருன்னா தெரிஞ்சுக்குங்களேன் எந்த அளவுக்குத் தமிழ்ப்பற்று நிறைஞ்சவருன்னு.அவர் நிறைய புத்தகங்கள் படிக்கறதைப் பார்த்துட்டு எனக்கும் வாசிக்கும் பழக்கம் அதிகமாகிடுச்சி.அப்பா இப்போ மியன்மார்ல இருக்காரு.அங்கே திருக்குறள் வளர்ச்சி அறக்கட்டளை ஆரம்பிச்சி தமிழுக்குத் தொண்டு செய்துக்கிட்டு இருக்காரு.என் வாழ்க்கைல எனக்கு ரோல் மோடல் என் அப்பாதான் உதயா.அப்பாக்கிட்ட உழைப்பு அதிகமா இருந்துச்சி.யார்க்கிட்டயும் கைகட்டி நிக்கக்கூடாதுன்னு சொந்தத் தொழில் செய்து முன்னேறியவரு.நேர்மையும்,நாணயமுமா இருப்பவரு.அவரை மாதிரியே நானும் இருக்கனும்னு ஆசைப்படறேன்.

 

உதயா: வருங்காலத்துல நீங்க உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட அப்பாவா இருப்பீங்க?

 

ராஜ்: நான் வருங்காலத்தில் என் பிள்ளைகளை அதிக பாசம் காட்டி வளர்ப்பேன்.ஆனால் தமிழ்,பண்பாடு என ஒழுக்கத்தோடு வளர்ப்பேன்.கண்டிப்பா தமிழின் சிறப்புகளையெல்லாம் சொல்லி வளர்ப்பேன்.பெண்பிள்ளைகளா இருந்தால் குழந்தையா இருக்கும்போதே நிறைய பட்டுப்பாவாடை சட்டை போட்டு பண்பாட்டோடு வளர்ப்பேன்.

 

(முகநூலில் தன் குரலால் கலக்கிக் கொண்டிருக்கும், கள்ளம் கபடமில்லாத தோற்றத்தில் கவரும் குட்டிப் பெண் அஞ்சலி கதிரவனிடம் அவரது தந்தையுடனான தருணம் குறித்து கேட்டேன்.)

 
 
 

அஞ்சலி: அப்பாவுடனான இனிய சம்பவங்கள் நிறைய இருக்கு அக்கா.

 

உதயா: அதுல ஏதாவது ஒன்னை சொல்லும்மா..

 

அஞ்சலி: ஒரு நாள் அன்பு அப்பா திரு.கதிரவன்கிட்ட  கேளிக்கையாக "அப்பா எப்போதும் அம்மாவே சமைக்கிறாங்க, நீங்க எங்களுக்கு சமைத்து கொடுக்கும் காலம் எப்போ வரும்?” என்று கேட்க அப்பா, “எனக்கு ரொம்ப நல்லாவே சமைக்க தெரியும்,” என்று சொல்லி கொய்தியாவ் கோரேங் செய்ய போய் அது குலைந்து போயிடுச்சி.இருந்தாலும் அந்த "முதல் முயற்சி சுவையாகத் தான் இருந்தது அக்கா .. ஆனாலும் அப்பாவுக்குத் திருப்தி இல்லை. அவர் எங்களுக்காக மற்றொரு நாள் மீன் குழம்பு  சிறப்பாக சமைத்து கொடுத்தார் ..இன்னொரு விசயம் இருக்குக்கா.

 

   என் வாழ்வில் இந்த நாள் மறக்க முடியாத நாள் என்றே சொல்லலாம் அக்கா.. நான் என் குடும்பத்தை பிரிந்து இருந்த நாட்கள் .. எனக்கு அப்பாவின் மீது அதிக பாசம் .அவருக்கும் கூட. அவரை பிரிந்து 4 நாட்கள் கெடாவில் ஒரு பயிற்சி பாசறையில் தங்கியிருக்க வேண்டியிருந்தது.அந்த நாள் மிகவும் மெதுவாக நகர்ந்தது.ஆனால்,மறுநாளே ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது.அப்பாவும் நான் தங்கியிருந்த இடத்திருக்கு வந்துட்டாரு.என்னைப் பிரிந்து அவராலும் இருக்க முடியல.குடும்பத்தில் ஒரே பெண்பிள்ளை அல்லவா? .என் மீது அதிக அக்கறையும் வைத்திருக்கிறார் .அவர் வந்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.நான்காவது நாள் பயிற்சி முடிந்து வீட்டுக்குக் கிளம்பினோம். ஒரே களைப்பு. நான் மகிழுந்தின் பின் பக்கம் அமர்ந்திருந்தேன்.அப்படியே தூங்கிட்டேன்.திடீருன்னு அப்பா என்னை எழுப்பினாரு.வீடு வந்துடுச்சின்னு எழுந்து பார்த்தபோதுதான் அப்பா எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தது தெரிஞ்சது.நாங்கள் வந்தடைந்த இடமோ பினாங்கு .அளவில்லாத மகிழ்ச்சி எனக்கு.அந்த நாள் என்னுடைய பிறந்த நாளும்கூட. பினாங்கில் சுற்றித் திரிந்தோம்.பிடித்த ஆடைகள் , உணவுகள், புத்தகம் எல்லாம் அப்பா வாங்கி கொடுத்தார்.அந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்.அப்பா எங்கள் மகிழ்ச்சிக்காக இப்படி எல்லாம் செலவு செய்கிறாரே?இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய போகிறேன் என்றென்னும் போது நாங்கள் பிறந்த நாளில் இருந்து இன்றைய காலம் வரை எங்களுக்காக செய்த செலவுகளுக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து கொடுத்தாலும் அவருக்கு நாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாது.இருந்தாலும் அவர் தலை நிமிர்ந்து வாழும்படி நடந்துக் கொள்ள வேண்டும்  என்ற நெறியோடு வாழ்கிறேன்.எனக்கு இப்படி பாசத்தையும் அறிவையும் ஊட்டுகிற அப்பா கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுறேன்க்கா..என் மனதில் என் அப்பாவுக்கு மட்டுமே முதல் இடம்.

 

(நெகிழ்ச்சியான பகிர்வுக்குப் பிறகு நகைச்சுவையாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.குறும்புச் சேட்டைகள் நிறைந்த பில்மோர் பாலசேனா அண்ணனிடம் நிச்சயம் தன் தந்தையுடனான நகைச்சுவையான தருணங்கள் அதிகம் இருக்கும் என நினைத்துக் கேட்டபோது,சில நிமிட மௌனத்திற்குப் பிறகு சொன்னார் இப்படி.)

 

பாலசேனா:என் அப்பா திரு.பெருமாள் பில்மோர் எஸ்டேட்டுல கங்காணியா இருந்தவரு மா. நான் திருமணம் ஆவதற்கு முன்பும் பின்பும் பசாருக்கு போயி ஒரு மீனோ, காய்கறியோ எதுவுமே வாங்க தெரியாது..கறிக்கு வாங்கறதுன்னா என்கூட அப்பாவைக் கூட்டிகிட்டு போவேன்.அப்பா என்னை மோட்டார் சைக்கிள் அருகே உட்கார சொல்லிவிட்டு போய் தமிழ்ப் பத்திரிக்கை வாங்கி வந்து  கொடுத்து படிக்க சொல்வாரு. அவர் மட்டும் பாசாருக்குப் போயி எல்லா சாமான்களையும் வாங்கி வருவார். நான் அதுவரை அங்கேயே பேப்பர் படிச்சிக்கிட்டிருப்பேன்.மீன், கோழி இறைச்சி எதையுமே என்னைத் தொடவிடாமல்,அந்த நாற்றமோ எதுவுமே தெரியாத நிலையில் என்னை வளர்த்தாரு. அவர் இறந்த பிறகு பாசாருக்குப் போயி அந்த மாதிரி கறிவகை,செலவுப் பொருட்களையெல்லாம் வாங்க நான் பட்ட கஷ்டம் இருக்கிறதே அப்பப்பா.என்னால மறக்கவே முடியாத ஒரு விசயம்னா என் கண் முன்னாலேயே அப்பா உயிர் விட்டதுதான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதை என்னால மறக்க முடியாதும்மா.. மனதில் கவலை வந்தால் அப்பாவைதான் நினைப்பேன்.. அழுவேன்.. இப்போதுகூட கண்ணீரோடுதான்..இப்போ என்னைச் சுற்றி அன்பான மனைவி,குழந்தைங்க எல்லாரும் இருந்தாலும் அப்பா இல்லாததால் என்னை அனாதையாதான் உணரறேன்மா.

 

 (பாலசேனா அண்ணாவிடம் இப்படி ஒரு சோகமான விசயத்தை எதிர்பார்க்காததால் அவருடைய வேதனையை நினைவுப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு அன்பு இதயம் பத்திரிக்கையில் பல படைப்புகளை வழங்கி வந்த ஆசிரியை ஸ்ரீஷாவிடம் பேசினேன்.)

 

 

ஸ்ரீஷா: என் அப்பா திரு.கங்காதரன் அவர்கள்தான் எனக்கு முதல் நண்பர் அக்கா.செம ஜாலி டைப்.நான் என் மேற்கல்வியைத் தொடர்வதற்கு ரொம்ப ஊக்கப்படுத்தறவர்.எனக்கு விரிவுரைஞர் ஆகனும் என்பதுதான் லட்சியம்.அதற்கு முதல் படியா நான் விண்ணப்பிச்சி,நேர்முகத் தேர்வுக்குப் போனதுல தொடங்கி என் ஒவ்வொரு படியிலும் உடனிருப்பவர்.என் தேர்வின்போது கண்விழிச்சி எனக்குப் படிச்சிக் கொடுப்பாரு.இன்றுவரையில் எனக்கு சமைச்சி ஊட்டியும் விடுவாரு.என் அம்மா பட்டப்படிப்பு படிக்கவும் அப்பா எனக்குத் துணையா இருந்தாரு.நிறைய பேர் பல்கலைக்கழகம் சென்று படிக்க தன்முனைப்பு கொடுத்து,உதவியிருக்காரு.

 

 உதயா: உங்க அப்பா செய்த ஏதாவதொரு வீர செயல் பத்தி சொல்லுங்களேன்.

 

 

ஸ்ரீஷா : என் அப்பா காவல் துறை அதிகாரியா இருப்பதால் வீரம் அதிகம்.சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புப் பகுதியில் விசாரிக்கறமாதிரி வந்து வீட்டுல திருடிட்டுப் போற கூட்டம் ஒன்னு இருந்துச்சி.ஒரு தடவை எங்களோட எதிர்வீட்டுலயும்,அப்புறம் எங்க வீட்லயும் வந்து விசாரிச்சாங்க.ஆனா அந்த வீட்டுல பேசினதும்,எங்க வீட்டுல பேசினதும் முரணா இருந்ததால அம்மா சந்தேகப்பட்டு அப்பாக்கிட்ட சொன்னாங்க.அப்பா அந்தப் பெண்ணை யோசனையாய்ப் பார்த்தவரு கொஞ்ச நேரத்துல தன் சக அதிகாரிகளோடு வந்து அந்தப் பெண்ணையும்,அவங்க கூட்டத்தையும் கைது செய்துட்டாரு.அந்த வருஷம் அப்பாவுக்கும்,அந்த சக அதிகாரிகளுக்கும் கௌரவிப்பு செய்யப்பட்டது.அந்த ரத்தம் ஓடறதால யார் தப்பு செய்தாலும்,எங்கே தப்பு நடந்தாலும் உடனே தட்டிக் கேக்கற பழக்கம் எனக்கு இருக்கு.

 

 

(தொடர்ந்து மண்வாசனை’,’கடந்து வந்த சுவடுகள் என்ற கட்டுரையின் மூலமும்,கவிதைகளின் வாயிலாகவும் தினக்குரல் வாசகர்களுக்கு அறிமுகமான,இருபத்தோரு வயதே ஆன குட்டிப்பையன்  தினகரன் குரோ சுகுமாறனோ இப்படி பகிர்கிறார்.)
 
 
 
 

   தினா : என் அம்மா இறந்தபோது எனக்கு பதினான்கு வயதுதான் ஆகியிருந்தது அக்கா.அப்பாவும்,அம்மாவும் ஒருநாள் கூட சண்டை போட்டு நான் பார்த்ததேயில்லை.என் அப்பா ஓர் அற்புதமான மனிதர் அக்கா.அவருக்குத் தமிழ்ப்பற்றும்,நாட்டுப்பற்றும் அதிகம்.அப்பா ஒரு மேடை அறிவிப்பாளர் அக்கா.குரோ சுகுமாறன் என்றால் நிறைய பேருக்குத் தெரியும்.அவர் நல்ல தமிழில்தான் பேசுவார்.தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவறாமல் வாங்கி படிப்பாரு.மின்னல் பண்பலைதான் விரும்பி கேட்பாரு.தினமும் வீட்டுக்குப் பின்னால வந்து போகும் பறவை,நாய்களுக்கெல்லாம் உணவு வாங்கி போடுவாரு.ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிறைய செய்வாரு.அவங்களுக்குப் பிறந்தநாள் வந்தால் பணம் செலவு பண்ணி கொண்டாடுவாரு.நான் எழுத்துத் துறையில் கால் பதிக்கறதுக்கு என் அப்பாதான் காரணம்.அவர் எனக்கு நிறைய தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்கும் ஆர்வத்தை வளர்த்துவிட்டாரு.

 

உதயா: உன் படைப்புகள் பத்திரிக்கைகளில் வரும்போது அப்பா அதிக பெருமைப்பட்டிருப்பாரே தினா?

 

தினா: ஆமாம் கா,எங்கள் பிறந்த ஊரான குரோவைப் பத்தி நான் எழுதிய மண்வாசனை கட்டுரை அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அக்கா.நிறைய பேர் அவரை அழைச்சி தினகரன் உங்க மகனா என கேட்டபோது அப்பாவுக்கு ரொம்ப பெருமையா இருந்ததாம்.அவருக்கு குரோ முருகன் கோயில் ரொம்ப பிடிக்கும்.தன் கடைசிக் காலத்தில் தன்னோட உயிர் அந்த இடத்தில்தான் பிரியனும்னு சொல்வாருக்கா.அந்தக் கட்டுரை அப்பாவுக்கு நான் கொடுத்த சிறந்த பரிசா நெனைக்கிறேன் கா.என் அப்பா பெருமைப்படறமாதிரி எழுத்துத் துறையில் நல்ல பெயர் வாங்கி தரனும் அக்கா.

 


    (அந்த ஆறு பேரும் தங்கள் தந்தையின் தியாகங்களையும்,அன்பையும் உணர்ந்து போற்றுபவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் எல்லா பிள்ளைகளும் அப்படி இருக்கிறார்களா என்ன?

   இன்று தந்தையர் தினம்.பல தந்தைமார்கள் தங்கள் அன்பு பிள்ளைகளோடு இன்புற்றிருக்கும் இந்தவேளையில் முதியோர் இல்லங்களில் பிள்ளைகளோடு வாழ்ந்த இனிமையான தருணங்களை நினைவில் சுமந்தபடி ஏக்கத்தோடு காத்திருக்கும் எத்தனையோ தந்தைமாரும் உண்டு.அவர்களைப் பற்றிய தன் கருத்தை நம்மோடு பகிரும்படி,கிள்ளானில் ஸ்ரீபாபா முதியோர் காப்பகத்தை நடத்திவரும் திரு.மோகன் பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன்.)

 

மோகன் : இங்கு இருக்கற தந்தைமார்களுக்கும் தந்தையர் தினம் பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும்.அந்தக் காலத்துல பிள்ளைகள் அதிகம் இருப்பாங்க.வறுமை நிலை வேற.ஆனால் எந்தச் சமயத்திலும் எந்த அம்மா,அப்பாவும் தங்களோட பிள்ளைகளைக் கொண்டு போய் எந்த ஹோம்லயும் விட்டதில்லை.அதிகமா உழைச்சி,எல்லா கஷ்டத்தையும் தாங்கிகிட்டு பிள்ளைகளை வளர்த்து ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வராங்க.ஆனால் பிள்ளைகள் ஏன் அதை நினைச்சிப் பார்க்கறதில்லை.வயதாகிட்டா அவங்களும் குழந்தை மாதிரிதான் என்பதை ஏன் புரிஞ்சுக்க மாட்டறாங்க?வயசான தாய்,தந்தைங்க தங்களோட பிள்ளைகள்கிட்ட எதிர்பார்க்கறது அன்பு ஒன்னை மட்டும்தான்.அதைக் கூட கொடுக்க முடியலன்னா எப்படி?என் அப்பா என்னோட ஒன்பது வயதுலயே இறந்துட்டாரு.அவரு இருந்திருந்தா எவ்வளவோ நல்லா வெச்சிக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு இருக்கும்.அப்பா இல்லாத கஷ்டம் தெரியாமல் அம்மா என்னை வளர்த்திருக்காங்க.இப்போ நான் ஆதரவு இல்லாமல் நிக்கற 25 பேரை வெச்சி பார்த்துக்கறேன்.ஒரு மகனா இருந்து அவங்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யறேன்.அவங்க இறந்துட்டா ஒரு மகனா நானே காரியம் செய்து கொள்ளி போடறேன்.மோட்சதீபம் ஏத்தறேன்.யாரோ ஒருத்தன் எனக்கு இருக்கற அக்கறை ஏன் பெத்த பிள்ளைகளுக்கு இல்லன்னு வருத்தமா இருக்கு.

 

உதயா: உங்களோட ஆதங்கத்தைக் கண்டிப்பா எழுதறேன் அண்ணா.சரி இந்த இல்லத்துல தந்தையர் தினத்துக்காக என்ன செய்யப்போறீங்க?

 

மோகன் : தந்தையர் தினத்தன்று கேக் வெட்டுவோம்.அப்புறம் இரண்டு வாரம் கழிச்சி இந்த இல்லத்துல கொஞ்சம் பெரிய அளவுல தந்தையர் தினத்தைக் கொண்டாடி அவங்களுக்குச் சிறப்பு செய்யலாம்னு இருக்கேன்.வெளியே இருந்து சிலரை அழைச்சுட்டு வந்து டான்ஸ் எல்லாம் செய்து தந்தைமார்களை மகிழ்ச்சிப்படுத்தலாம்னு இருக்கேன்.

 

(ரத்த சம்பந்தமே இல்லாத ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் அந்த அன்பும்,அக்கறையும் எல்லாருக்கும் இருக்கவேண்டும்.சுருங்கிப் போன கைகள் அடுத்தவேளை சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலை வேண்டாம்.இருக்கும்வரை நமது பெற்றோரை அன்போடு கவனித்துக்கொள்வோம்.தந்தையர் தினத்தன்று மட்டும்தான் என்றல்லாமல் ஒவ்வொரு நாளும் தந்தையிடம் அன்பைப் பகிர்வோம்.அனைத்து தந்தையருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துகள்.)

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி  இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

 


-          உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்