Wednesday, July 27, 2011

தொடர்கதை :உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 3

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 3
         
    கெண்டீனில் முதலாம் பருவ மாணவர்களே அதிகம் இருந்தார்கள்.சுவைபானம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று பூங்குழலியும் அவளுடைய தோழிகளும்.
      சாப்பாடு வாங்கற எடத்துலதான் தொல்லைன்னா இங்கயுமா? இனிமே சீனியர்களெல்லாம் சாப்பாடு வாங்கிய பிறகுதான் ஜுனியர்கள் வாங்கனும்னு சட்டம் கொண்டு வரனும்,” அரைமணி நேரமாய் காத்திருந்த கடுப்பில் கீதா புலம்பினாள்.
      ஏ மதி,” யாரோ கத்தினார்கள்.அந்தப் பெயரைக் கேட்டதும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.அப்படி என்னதான் இருக்கிறதோ அந்த மதிவதனனிடம்? எல்லா பெண்களும் உயிரை விடும் அளவிற்குகீதா எஸ்கோவாக இருந்ததால் ஜுனியர் மாணவர்களுக்கான அறிமுக வாரத்தில் அந்த மதிவதனனைப் பற்றி புகழ்ந்து தள்ளினாள்.குழு நடவடிக்கைகளில் மிகவும் துடிப்பாக ஈடுபடுகிறhனாம்.அதன்பிறகு சாரதா மூலம் அடிக்கடி மதிவதனனைப் பற்றிய பேச்சு எழுந்தது.அவளுடைய வகுப்புத் தலைவன் அவன்தானாம்.வகுப்பை அழகாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு பல ஆக்கரமான திட்டங்களைத் திட்டமிட்டு வைத்து விரிவுரைஞர்களிடம் நல்ல பெயரை வாங்கிவிட்டானாம்.
     பொதுவாக தமிழ் விரிவுரைஞர்களிடம் வந்த புதிதிலேயே நன்பெயரை வாங்குவது சாதாரண விசயமல்ல.அவனால் மட்டும் எப்படி அது சாத்தியமானது என்று ஆரம்பத்தில் அவளுக்கும் அவன் மீது வியப்பு இருந்ததுதான்.ஆனால் பிறகு அவளுடைய வியப்பு கோபமாக மாறிப்போனது.
   இறுதி வருடமென்பதால் பூங்குழலியும் அவளுடைய தோழிகளும் பினாங்கு தண்ணீர் மலை கோயிலுக்குத் தைப்பூசத்திற்குப் போய்விட்டு மறுநாள் இரதம் பார்க்க சுங்கைப் பட்டாணி முருகன் ஆலயத்திற்குப் போனார்கள்.அவனும் அவன் நண்பர்களோடு வந்திருந்தான்.கீதாதான் அவனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.ரத ஊர்வலத்தின்போது அவன் ஆடியது அவளுக்குப் பிடிக்கவில்லை.ஆசிரியராக இருந்துகொண்டு அவன் இம்மாதிரி நடந்து கொண்டது அவளுக்கு வெறுப்பை அளித்தது.அவள் முறைத்துப் பார்த்ததும் ஆடுவதை நிறுத்திவிட்டான்.அவளுக்கு முன்னால் தன் நண்பர்களோடு விரைவாக நடந்து போனவன் அங்கு அறிவிப்பு செய்து கொண்டிருந்தவர்களிடம் என்னமோ சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
    அடுத்து எம்.பி.சாவிலிருந்து வருங்கால ஆசிரியர்கள் பூங்குழலி எண்ட் கம்பெனி  வந்துகிட்டிருக்காங்க, திடீரென அந்த அறிவிப்பு எழவும் எல்லாரும் அவர்களையே பார்க்க பூங்குழலிக்கு வந்ததே கோபம்.அவளுக்குத் தெரியும் அது மதிவதனனுடைய வேலைதான் என்று.ஏனென்றால் சற்று முன்பு அந்த வழியே வந்தபோதுதான் அவனுடைய நண்பன் காணாமல் போய்விட,”சரவணா, எங்கடா இருக்க? உன்னோட மூனு பிள்ளைங்களும் அப்பாவைக் காணோம்னு அழுதுக்கிட்டு இருக்காங்கடா,” என்று குறும்பாய் அறிவிப்பு செய்தான் மதிவதனன்.
    அவனுக்கு நல்ல நேரம் போலும்.அவள் கண்ணில் படாமல் இருந்தான்.மேலும் அவளுடைய கல்லூரியில் எழுத்தாளர் சங்கத்தின் டிசம்பர் மாதச் சிறுகதைத் திறனாய்வு. அதைத்தொடர்ந்து ஷலங்காவியில் பெண்களுக்கான சாரணியர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி, பயில்பணிகள் என்று அவள் மிகவும் பரபரப்பாக இருந்ததால் அவனைப் பார்க்கவில்லை.
    பூங்குழலி, இந்தா கேரட் ஜுஸ் கீதா கொடுத்த கேரட் ஜுஸை வாங்கி கொண்டு காலியாய் இருந்த ஒரு மேசையில் அமர்ந்தாள்.
    பூங்குழலி, இன்னைக்கு அஞ்சு மணிக்கே டேவானுக்கு வந்திடுங்க,பேட்மிண்டன் ப்ராக்ட்டீஸ் பண்ணனும், அவளுடைய வகுப்புத் தோழி பிரேமா அவளிடம் சொல்லிவிட்டுப் போனாள்.
   அங்கு மதிவதனனைச் சந்திக்க நேரிடும் என்று முன்னமே தெரிந்திருந்தால் அவள் நிச்சயமாக போயிருக்க மாட்டாள்தான்.அவள் மாலையில் புறப்பாட நடவடிக்கைகள் இல்லாத சமயங்களில் பொதுவாக கூடைப்பந்து விளையாடப் போய்விட்டு ஆறு மணிக்கு மேல்தான் பூப்பந்து விளையாடப்போவாள்.பிரேமா காத்திருப்பாளே என்று ஐந்து மணிக்கெல்லாம் போய்விட்டாள்.
   அவள் அங்கு போனபோது ஜுனியர் மாணவர்கள் மட்டும்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பிரேமா இன்னும் வரவில்லை.பூங்குழலி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போதுதான் மதிவதனன் வந்து சேர்ந்தான்.
   என்கூட ஒரு கேம் விளையாடறீங்களா?” அவன் கேட்டதும் அவசரமாய் மறுத்தாள்.
   உங்களுக்குப் பயம்,ஜுனியர் மாணவன்கிட்ட தோத்துப் போயிட்டா என்ன ஆவறதுன்னு அப்படிதானே?”
    அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு இன்னும் ஆத்திரம்தான் வந்தது.அவளாவது தோற்றுப் போவதாவது? கல்லூரிகளுக்கான காகோம் போட்டி விளையாட்டாளர் அவள்.அவளைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமாவது அவனுடன் விளையாட வேண்டும் என்று கூந்தலை இறுக கட்டிக்கொண்டு அவனுடன் விளையாடத் தொடங்கினாள்.இரண்டு ஆட்டங்களில் அவள்தான் வெற்றி பெற்றhள்.அதன்பிறகு பிரேமா வந்துவிட்டாள்.அவளை அவனுடன் விளையாட சொல்லிவிட்டு அவள் ஓய்வெடுக்க வந்துவிட்டாள்.கூந்தலை அவிழ்த்து முடியைக் கோதிக்கொண்டிருந்த வேளையில் மதிவதனனும் அவள் அருகே வந்து அமர்ந்தான்.
    அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது.ஆனால் அதையும் மீறி எதுவோ ஒன்று அவனைப் பார்க்கத் தூண்டவே பார்த்தாள்.எப்படிதான் இவனுக்குக் குழந்தை முகம் வந்ததோ? ஒரு சாயலில் பார்க்கும்போது சிறுவயதில் அவளுக்கு மிகவும் பிடித்தமான சல்மான்கானின் ஆரம்பகால தோற்றத்தைப் பெற்றிருந்தான்.பச்சை நரம்புகள் தெரியும்படியான நிறம்.பெரிய பெரிய கண்கள்.செக்கச் செவேலென்ற உதடுகளில் சதா புன்னகை.சிரிக்கும்போது மோவாயின் கீழ் விழுந்த குழி அவனைக் குறும்புக்காரனாய்க் காட்டியது.ஆறடி உயரம் இருப்பான் போலும்.ஆனால் எடை கொஞ்சம் கம்மிதான்.
    கேள்விப்பட்டேன்,நேத்து ராத்திரி ரூம்ல பயங்கர ஆட்டமாம்? மதிவதனன் அப்படி கேட்டபோது அவளுக்கு ஆச்சரியமாகதான் இருந்தது.இவனுக்கு எப்படி தெரியும் என்று.சாரதாதான் சொன்னாளாம்.அவனே சொன்னான்.
   அன்னைக்குத் திருட்டுத்தனமா ரும்ல கரண்ட் கேத்தல்ல ரெடிமேட் பாயாசம் கூட காச்சனீங்களாம்,அப்புறம்…. அவள் விடுதி அறையில் செய்யும் சேட்டைகளையெல்லாம் அவன் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போக அவளுக்கு சாரதாவின் மீது பயங்கர கோபம்.பாவி மகள். இவனிடம் எல்லாவற்றையும் சொல்லி வைத்திருக்கிறாள்.பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாயிற்றே என்று மிரட்டி வைக்காமல் விட்டுவைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று யோசித்தாள்.
    மதிவதன் விளையாட போனபிறகு பிரேமாவிடம் சொல்லிவிட்டு நேராக நீலாவின் அறைக்குதான் போனாள்.தன்னுடைய தோழிகளுக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பிவிட்டுத்தான் போனாள்.அவர்கள் எல்லாரும் நீலாவின் அறைக்கு வந்தபோது சாரதா பேந்த பேந்த விழித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
    இப்படி பாவமா பார்த்தா விட்டுடுவோமா? நமக்குள்ள நடந்த விசயத்தையெல்லாம் வெளியில போயி அதுவும் ஓர் ஆண்கிட்ட சொல்லியிருக்க,உனக்கு தண்டனை கொடுக்காம எப்படி விடறது?” அவள் என்ன செய்யப் போகிறாளோ. என்று பயந்தபடி நின்றிருந்தாள் சாரதா.
   கேட்டுக்கோ, இன்னைக்கு ராத்திரி அண்ட்டிக்கிட்ட எங்க எல்லாருக்கும் நீதான் சாப்பாடு வாங்கிட்டு வரனும்.எனக்கும் நாசி லெமாவும், ரெண்டு வடையும்.இவங்களுக்கெல்லாம் என்ன வேணுமோ கேட்டுட்டு வாங்கிட்டு வா.அப்புறம் ராத்திரிக்கு நீதான் எங்க எல்லாருக்கும் தண்ணி கலக்கி தரனும்.நாளைக்கு சாயந்திரம் நாங்க ஓலாராகா முடிஞ்சி வரும்போது மரத்துல இருக்கற ஜம்புக்காயெல்லாம் பறிச்சி, கழுவி, வெட்டி உப்பு போட்டு தயாரா இருக்கனும்,சரியா?” பூங்குழலி அதட்டலாக கேட்க பயந்தபடி தலையசைத்தாள் சாரதா.




                                                     தொடரும் ……………

Tuesday, July 19, 2011

தொடர்கதை:உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 2

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 2

      அன்று முதலாம் பருவ மாணவர்களுக்கான பதிவு நடந்து கொண்டிருந்ததால் விரிவுரைஞர்கள் யாரும் வகுப்பிற்கு வரவில்லை.
      க்ளாஸ்,இந்த முறை அதிகமான ஆண்கள் இருக்காங்க,கே,டி,பி,எம் ல 66 பேரு,கே.பி.எல்.ஐ ல 4 பேரு,” பதிவு நடக்கும் இடத்திற்குத் திருட்டுத்தனமாக போய் வந்த சோனியாதான் சொன்னாள்.கே.பி.எல். ஐ பயிற்சிக்கு வந்திருக்கும் ஆண்கள்  நான்கு பேர் மட்டும்தான் என்ற உண்மை எத்தனை பேருடைய மனதை உடைத்திருக்குமோ என்று பூங்குழலி நினைத்து சிரித்துக் கொண்டாள்.பின்னே இம்முறையாவது தங்களை விட வயதில் மூத்த ஆண்கள் வருவார்கள்.துணை தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் ஏமாந்து போயிருப்பார்களே?
    வா பூங்குழலி, ஜுனியர்ஸை பாக்க போலாம்,” அவளுடைய தோழிகளின் அழைப்புக்கு இணங்கி அவளும் மண்டபத்திற்கு இறங்கினாள்.பார்க்கும் இடத்திலெல்லாம் இந்தியர்கள்தான் அதிகம் இருந்தார்கள்.அவளும் அவளுடைய தோழிகளும் மாணவிகளுக்குத் தங்கும் விடுதியைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.நீலாவின் அறைக்கும் ஒரு மாணவி வந்திருந்தாள்.பெயர் சாரதா என்றாள்.
    எங்க பிள்ளை ரொம்ப சாது,வீட்டை விட்டு எங்கயும் தூரமா போனதில்ல,பத்திரமா பாத்துக்குங்கம்மா அவளுடைய அம்மா பூங்குழலியிடமும் அவளுடைய தோழிகளிடமும் சொல்லிவிட்டுப் போனாள்.கடந்த வருடம் நீலாவின் அம்மாவும் இதையேதான் சொன்னாள்.
    சாரதா கல்லூரியில் புதிதாக கொடுக்கப்பட்ட வெள்ளை நிற டீ - சர்ட்.,மெரூண் வண்ண ட்ராக் அணிந்து கழுத்தில் ஸ்காப் கட்டிக்கொண்டு காலணியை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.அறிமுக வாரமென்றhல் இப்படிதான்.ஒரு வாரத்திற்கு காலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் நிறைய நடவடிக்கைகள் இருக்கும்.அவளும் அதை அனுபவித்தவளாயிற்றே,அதிலும் அவளுடைய தமிழ்த்துறை சீனியர்கள் மிக மிக கண்டிப்பானவர்கள்.வந்த முதல் நாளன்றே நன்னெறி வகுப்பின்போதே ஏகப்பட்ட திட்டு விழுந்தது அவர்களுக்கு.முன்னோடிகளைப் பார்த்தால் வணக்கம் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு.அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் கல்லூரியைச் சுற்றி ஓடவேண்டும்.ஒரு வினாடி தாமதமாக வந்தால் கூட தண்டனைதான்.இரவில் எல்லாம் முடிந்து களைப்பாக மெத்தையில் சாயும்போது தேவைதானா இந்த ஆசிரியர் தொழில் என்று நொந்து போயிருக்கிறாள்.ஆனால் இந்த இறுதி வருடத்தில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மிகவும் சுகமாகவே இருந்தது.
     ஆசிரியர் தொழிலை அவளுக்கு அதிகமாக பிடித்துப் போக காரணம் புகழேந்திதான்.அவள் இதுவரை எந்த ஆடவனிடமும் மனதைப் பறிகொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவன்தான்.அவனைப் பற்றி நினைக்கும்போதே சுகமாக இருந்தது.அவனைப் பார்த்து இரண்டு வாரமாகியிருந்தது.இவ்வாரம் வியாழக்கிழமை வகுப்பு முடிந்ததுமே கிளம்பிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
                 
                              * * * * *
     கை நிறைய புத்தகங்களைச் சுமந்து கொண்டு போன பூரணி புகழேந்தி எதிரில் வரும் நேரம் பார்த்தா அவற்றையெல்லாம் கீழே போட வேண்டும்?சிரித்துக் கொண்டே அவற்றையெல்லாம் எடுத்து அவளிடம் கொடுத்தவன் என்ன நினைத்தானோ வாங்க டீச்சர், நான் எடுத்துட்டு வர்றேன்,” என்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவளுடைய வகுப்பறை வரை வந்தான். 
    பூரணி நொந்து கொண்டே போனாள்.அவள் இந்தப் பள்ளிக்கு வந்து மூன்று வாரம்தான் ஆகியிருந்தது.இப்போதுதான் ஆசிரியர் பயிற்சியை முடித்துக்கொண்டு வந்தவள்.எனவே கொஞ்சம் தடுமாறினாள்.ஆனால் எப்போதுமே ஏன் புகழின் எதிரிலேயே தடுமாற வேண்டும்?
    பள்ளிக்கு வந்த முதல்நாளே புகழேந்தி என்ற பெயர்தான் அவள் காதுகளில் முதலில் விழுந்தது.கொஞ்சம் வயதான ஆசிரியராக இருக்கக்கூடும் என்றுதான் எண்ணினாள்.ஆனால் இருபத்தாறு வயது இளைஞனாக இருப்பானென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.தலைமையாசிரியரைச் சந்தித்துப் பேசிவிட்டு தனக்குக் கொடுக்கப்பட்ட வகுப்பைப் பார்க்க போய்க்கொண்டிருந்தாள்.ஐந்தாம் ஆண்டை கடக்க முற்பட்டபோது ஒரு மாணவனின் அழுகைச் சத்தம் கேட்க வகுப்பினுள் எட்டிப் பார்த்தாள்.
    அழுதுக்கொண்டிருந்த அந்த மாணவனுடைய தாயார் அவனிடம் ஏதோ சொல்ல அவர் எதிரிலேயே அந்தப் பையனைத் திட்டோ திட்டு என திட்டிவிட்டு அவனுடைய அம்மாவிடம் மன்னிச்சிடுங்க என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.அப்போதே அவளுக்கு அவனை அதிகம் பிடித்துப்போனது.இரண்டாவது தடவை அவள் அவனைப் பார்த்தபோது பாலர் பள்ளிச் சிறுமி ஒருத்தியிடம் என்னவோ விசாரித்துக் கொண்டிருந்தான்.அந்தச் சிறுமி பயந்து போய் அழ ஆரம்பித்துவிட்டாள்.புகழ் உடனே அந்தச் சிறுமியைத் தன்னோடு அணைத்து. முதுகைத் தட்டிக்கொடுத்தபடி சமாதானப்படுத்த அக்காட்சியைக் கண்ட பூரணிக்கு அவனை இன்னும் அதிகமாக பிடித்துப்போனது.கண்டிப்பும் அன்பும் ஒரு சேர கலந்திருக்கும் ஆண்களை எந்தப் பெண்ணுக்குதான் பிடிக்காது?அவளுக்கு அவனை அளவுக்கதிகமாகவே பிடித்தது.சீனியர் ஆசிரியை மூலம் அவனுடைய வயது முதல் அவன் சபாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தற்போது ராஜh மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டிருப்பது வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டாள்.
   அவனுடன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அவளே அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டாள்.ரெக்கார்ட் புத்தகம், மாணவர்களின் வருகைப் பதிவேட்டை எழுதும் முறை எல்லாவற்றையும் கல்லூரியில் கற்றுக் கொடுத்திருந்தாலும் வேண்டுமென்றே தெரியாத மாதிரி அவனிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாள்.ஏழு ஆசிரியர்கள் மட்டுமே போதிக்கும் சிறிய பள்ளி என்பதால் அவனுடன் பேசும் வாய்ப்பு அவளுக்கு அதிகம் கிடைத்தது.அதிலும் அவளுடைய வகுப்பிற்கு பக்கத்திலேயே அவனுடைய வகுப்பும் இருந்தது இன்னும் வசதியாகப் போய்விட்டது.
  அவளுக்கு அவனை அளவுக்கதிகமாகப் பிடித்தது.அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளுக்குப் பிடித்துப் போனது.அவன் வருகை பதிவேட்டில் ஒழுங்காக கையெழுத்து போடமாட்டான்.சில சமயங்களில் காரணமின்றி கோபமாக இருப்பான்.ஒரு தடவை அவனுடைய மாணவி ஒருத்தி கழத்துப் பட்டையைக் கட்டிக்கொள்ள தெரியாமல் அவனிடம் வர,பிறகு கட்டி விடுவதாக சொல்லி அனுப்பிட்டு அந்த மாணவியின் கழுத்துப் பட்டையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டான்.அது அவளுக்குப் பிடித்திருந்தது.அவனுடைய மாணவர்களை அவன் அடிக்கமாட்டான்.ஆனால் தலையில் கொட்டுவான்.அதுவும் அவளுக்குப் பிடித்தது.அவனுக்கே தெரியாமல் அவனை அதிகம் இரசிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.அவனைப் பார்த்தும் பாராததுபோல் போய்விட்டு அவன் தூரம் போனதும் அவனையே பார்த்துக்கொண்டிருப்பாள்.ஒரு நாள் அவனைப் பள்ளியில் பார்க்க முடியாமல் போனால் கூட ஏங்கி போவாள்.வார இறுதி ஏன்தான் வருகிறதோ என்று நொந்து போவாள்.அவள் பள்ளியில் எந்த மூலையில் இருந்தாலும் புகழ் அங்கேதான் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறான் என்பதில் அவளுக்குச் சந்தோஷம்.
    அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே அவளுக்குப் பிடித்துப் போனது.பச்சையா, சாம்பலா என தீர்மானிக்க முடியாத அவனுடைய வீரா காரை அவளுக்குப் பிடித்தது.அவனை நினைத்து தினமும் அவனுடைய காரை தீண்டிவிட்டுப் போக பிடித்தது.அவன் மீது கோபம் வந்தால் அவனுடைய காரை அடித்துவிட்டுப் போய்விடுவாள்.பின்னர் அவன் அவளுடன் நன்றாக பேசி பழக ஆரம்பித்த போது ஒரு தடவை அவன் அவளை பெயர் சொல்லி அழைத்தது பிடித்தது.தினமும் வீட்டில் அவனைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருந்தாள்.அவளுடைய அப்பாவிற்கே சந்தேகம் வந்துவிட்டது.பூரணி காதலிக்க ஆரம்பித்துவிட்டாளா என்று.தலைமையாசிரியர் அவருக்கு நல்ல பழக்கமென்பதால் அவரிடம் புகழைப் பற்றி விசாரித்து மனதுக்குத் திருப்தியாய் இருந்தால் அவனையே தனது மாப்பிள்ளையாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொண்டார்.

* * * * *

         ஓய்வு நேரத்தில் ஆசிரியர் அறையில் உட்கார்ந்து மாணவர்களின் பயிற்சிப் புத்தகத்தைத் திருத்திக்கொண்டிருந்தாள் பூரணி.புகழ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.ஒரு மாணவன் வந்து சிற்றுண்டிச் சாலையில் ஏதோ தகறாறு என்றான்.
  கொஞ்ச நேரம்யா, சாப்பிட்டு வந்துடறேன்,பொறுப்பாசிரியர் அங்கதான் இருப்பாங்க.அவங்ககிட்ட சொல்லு,” என்று அவனை அனுப்பி வைத்தான்.அந்த மாணவன் மீண்டும் வந்தான்.புகழ்தான் வரவேண்டும் என்றான்.
  எங்கிருந்து வந்தாயடா? எனை பாடு படுத்த,” புகழ் பாடிக்கொண்டே பாத்திரத்தை மூடிவிட்டு எழ. பூரணி சிரித்துக்கொண்டே வேலையைச் செய்தாள்.ஐந்து நிமிடம் கடந்திருக்கும்,யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.தேவதையைப் போன்று நி;ன்றிருந்த பூங்குழலி அவனிடம் புகழைப் பற்றி விசாரித்தாள்.அவள் பதில் சொல்வதற்குள் புகழ் வந்துவிட்டான்.பூங்குழலியைப் பார்த்ததும்...
   ஹாய் சாயாங்,” என்றபடி அவளுடைய தோள்மீது கையைப் போட்டு எங்கோ அழைத்துப் போனான்.கலங்கிய கண்களோடு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தன்னுடைய வகுப்பை நோக்கிப் போனாள் பூரணி.
                                                  



தொடரும் ……

Friday, July 8, 2011

தொடர்கதை : உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 1

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 1
                                             
    மார்கழி மாதத்துக் குளிருக்கு இதமாய் இருந்த சூடான தேநீரை துளி கூட மீதம் வைக்காமல் குடித்து முடித்துவிட்டு எழுந்தான் கௌசிகன்,ஜேக்கெட்டை இழுத்து இன்னும் இறுக்கமாக அணிந்துகொண்டு காரை நோக்கி நடந்தான்.
      அவன் கூலிம் பட்டணத்தை அடைந்தபோது மணி ஆறு நாற்பத்தைந்தை நெருங்கி கொண்டிருந்தது.பணியை முடித்துக்கொண்டு புறப்பட தயாரான இரவும், பணியாற்ற வந்திருந்த பகலும் சங்கமித்துக்கொண்ட அந்த வைகறைப் பொழுதின் அழகை இரசித்தபடியே காரை வீட்டின் முன் நிறுத்தினான்.பளிச் பளிச் என மின்னிய காரின் விளக்கு வெளிச்சத்தைக் கண்ட ராமுலம்மாள் சுவரில் மாட்டி வைத்திருந்த சாவியை எடுத்துக் கொண்டு வந்தாள்.
    ஏன்மா நான் வரேன்னு தூங்காம முழிச்சிக்கிட்டு இருந்தீங்களா?” அம்மாவை செல்லமாக கடிந்துகொண்டே காரினுள் இருந்த பொருட்களை வீட்டினுள் கொண்டு போனான்.
    மேரிக்கு கிறிஸ்மஸ் பலகாரம் செய்யறதுக்கு உதவி செஞ்சேன்,அப்படியே மணியாயிடுச்சி,”என்றவாறு அவனைத் தொடர்ந்தாள் அவன் அம்மா.
    குளித்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்ட கௌசிகன் ராமுலம்மாவை அழைத்துக்கொண்டு பட்டணத்திற்கு கிளம்பினான்.இன்னும் இரண்டு நாளில் கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் அவனுடைய தம்பி மதிவதனனுக்கு இருபத்தோராவது  பிறந்தநாள்.அவனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகதான் கௌசிகன் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
   கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சமயமென்பதால் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.இறுதி நேர ஷாப்பிங்கில் திளைத்திருந்தார்கள் பலரும்.ராமுலம்மாள் வாங்க வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பட்டியலிட்டுக்கொண்டு வந்திருந்ததால் அவனுக்கும் சுலபமாக இருந்தது.மறக்காமல் மதிவதனனுக்குப் பிடித்த சிப்ஸ்மோர் பாக்கெட் ஒன்றையும் வாங்கி கொண்டாள்.எல்லா பொருட்களும் வாங்கி முடித்தாகிவிட்டது என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் காரை கிளப்பினான் கௌசிகன்.
   ஏன்மா,பூங்குழலி இன்னைக்குதானே வர்றதா சொன்னுச்சி?”                                                                             
   அவன் கேட்டபோதுதான் அவளுக்கும் பூங்குழலி மதியமே வந்துவிடுவதாக சொன்னது நினைவுக்கு வந்தது.இந்நேரம் எங்கு வந்து கொண்டிருக்கிறாளோ என்றெண்ணியவாறு காரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.            

**************

    விரைவு பேருந்தில் தலைசாய்த்து உட்கார்ந்திருந்த பூங்குழலியின் எண்ணங்களோ மூன்றாண்டுகளுக்கு முன் பின்னோக்கி இருந்தன.

* * * * *
         இரவு மணி பதினொன்றாகியிருந்தது.பெண்களுக்கான தங்கும் விடுதியில் குழுமியிருந்தார்கள் அந்த ஐந்து பெண்களும்.முதலாவதாக உட்கார்ந்திருந்தவள் பூங்குழலி.அந்த இளவட்டங்களுக்குத் தலைவியும் கூட.இருபத்தோரு வயது நிரம்பிய அழகுப்பெண்.வெண்ணெய் நிறம்,சீரான குட்டையான கூந்தல்,எண்பதுகளில் பிரபலமான நடிகை நதியாவின் முகச்சாயல் கொண்டவள்.கூரான மூக்கு, முத்து முத்தான பற்கள்,மெலிந்த உயரமான உடல் என்று பார்த்த மாத்திரத்தில் மனதைக் கௌவும் அழகுடையவள்.அப்படிப்பட்ட பேரழகி இன்னும் எந்த ஆணின் வலையிலும் விழாமலிருப்பதற்கான காரணத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.அடுத்ததாக அமர்ந்திருப்பவள் சோனியா.அவளுக்குக் கிரீம் வடியும் முகம்.யாராவது கேட்டால் எனக்குப் பால் வடியற முகம்லா,” என்று கிண்டலடிப்பாள்.மாநிறமாக இருந்தாலும் அழகாக இருப்பாள்.இருந்தாலும் அழகு சாதனப்பொருட்களைப் போட்டு தன்னை அழகுப்படுத்திக்கொள்வதில் அதிக பிரியம் அவளுக்கு.என்ன செய்வது? ஆனந்தைக் காதலிக்கிறாளே? மூன்றாவதாக தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பவள் கேரலின்.அவளுக்கு எல்லாமே அவளுடைய அம்மாதான்.நான்காவதாக எதையோ சிந்தித்துக் கொண்டே அமர்ந்திருப்பவள் சரளா.எப்படியாவது இளம் வயதிலேயே நாவல் எழுதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற இலட்சியத்தில் இரவுகளைக் குறுகலாக்கிக்கொண்டிருப்பவள்.அவளால்தான் அந்த சி புளோக் தங்கும் விடுதியில் மின்சார கட்டணம் எக்கச்சக்கமாக எகிறிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை இதுவரை வார்டனுக்குத் தெரியாததால் தப்பித்தாள்.இறுதியாக உட்கார்ந்திருப்பவள் கீதா.மாதக்கடைசியில் அவர்களுக்கு மேகி் சப்ளை செய்பவள்.
      ஓ.கே. வேலையை ஆரம்பிக்கலாம்,” பூங்குழலி உத்தரவு கொடுத்தவுடன் விளக்கெண்ணெய், முட்டை, மைலோ தூள், உப்பு ரொட்டி, கோதுமை மாவு என்று இன்னும் என்னென்னவெல்லாம் கலக்க முடியுமோ அதையெல்லாம் வாளியில் கொட்டி தண்ணீரில் கலந்தாள் சோனியா.கீதா வாளியைக் கொண்டு போய் ஹாஸ்;டல் அறையின் குளியலறையில் ஒளித்துவைத்தாள்.
    நள்ளிரவு பன்னிரண்டு மணியானதும் பூங்குழலி முகத்தை மிக இயல்பாக வைத்துக்கொண்டு நீலவேணியைத் தனக்குத் துணையாக குளியலறைக்கு அழைத்தாள்.தன்னுடைய பிறந்தநாளைக் கூட மறந்து போகும் அளவிற்குத் தூக்கக்கலக்கத்தில் இருந்த நீலாவும் அவளுடன் போனாள்.பாத்ரூமை அடைந்ததும் ஏற்கனவே அங்கு காத்திருந்த சரளாவும், கேரலினும் வாளியைத் தூக்கி அதிலுள்ள தண்ணீரை நீலாவின் தலையில் ஊற்ற, சோனியாவும், கீதாவும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாட, பூங்குழலி அவளைக் கட்டியணைத்து வாழ்த்து சொன்னாள்.
   பச்சை முட்டையின் வாடையைத் தாங்க முடியாமல் நீலா குளியறைக்குள் நுழைந்தாள்.அவள் குளித்ததும் மாற்றிக் கொள்வதற்கான உடைகளை கொண்டு வந்து கதவில் போட்டுவிட்டு அவளுடைய அறையில் கேக், இனிப்புகளோடு காத்திருந்தார்கள் அந்த ஐந்து பெண்களும்.குளிரில் நடுங்கியபடி வந்த நீலாவுக்குப் புடவை கட்டிவிட்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்து அலங்கோலம் பண்ணி அதை புகைப்படம் வேறு எடுத்தார்கள்.இவ்வளவு நடந்தும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்தாள் நீலா.என்ன செய்வது?அந்த இரண்டாவது மாடியில் அவள் மட்டும்தானே ஜூனியர்?
   ஏய், எல்லாம் சும்மா விளையாட்டுக்காகதான், என்று அவள் தலையைக் கோதியவாறு ஒரு கேக் துண்டை எடுத்து நீலாவுக்கு ஊட்டினாள் பூங்குழலி.
   மற்ற கல்லூரிகளைக் காட்டிலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் அதிகம்.இது மாதிரியான குறும்புகள் அந்தக் கட்டுப்பாடுகளினூடே ஒரு வித கலகலப்பையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என்பது நீலாவும் அறிந்ததே.அதனால் அவள் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.அவர்களின் ஆட்டம், பாட்டமெல்லாம் விடுதியின் நான்கு சுவர்களுக்குள் மட்டும்தான்.வெளியில் இருக்கும்போது அவர்களின் செயல்கள் அனைத்தும் ஆசிரியர்கள் என்ற பிரதிபலிப்பை ஏற்படுத்தும் விதத்தில்தான் நடந்து கொள்வார்கள்.
   அதற்கும் காரணம் இருந்தது,சுங்கைப் பட்டாணி சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிக இந்திய மாணவர்களைக் கொண்டுள்ள கல்லூரி.தமிழ்ப்பிரிவில் மட்டும் 180 மாணவர்கள் இருந்தனர்.மேலும் இவ்வருடம் ஏறக்குறைய 150 மாணவர்கள் வருவதாக இருந்தது.தமிழ்ப்பிரிவிற்கு எந்தவொரு கலங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்த்துறை விரிவுரைஞர்கள் மிக கவனமாக இருந்தார்கள்.அக்கட்டுப்பாடுகள் ஒரு சிலருக்கு அவசியமற்றதாக தோன்றினாலும் பூங்குழலியும், அவளது தோழிகளும் அவ்வாறு எண்ணியதில்லை,
   பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து எல்லாரும் படுக்கப் போனபோது நள்ளிரவு மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது,
    காலையில் அவளை சரளாதான் எழுப்பினாள்,தாமதமாக படுத்ததால் பூங்குழலியால் எழுந்திரிக்க முடியவில்லை,
    ஏய்  பூங்குழலி, இன்னைக்கு ஜுனியர்ஸ் எல்லாம் வர்றாங்க, மறந்துட்டியா?” சரளா கத்திவிட்டுப் போனதும் உடனே எழுந்துவிட்டாள்.ஜுனியர் மாணவர்களைக் காணப்போகும் ஆர்வம் அவளுக்கு நிறையவே இருந்தது.சுறுசுறுப்பாக குளித்துக் கிளம்பினாள்.


தொடரும் ………………