Saturday, February 15, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 24 : சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி 1991)







வளையல் பெண்ணின் உதயகீதங்கள்
கீதம் 24 : சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி 1991)


     கலைகளை நேசிக்கும்,குடும்பப்பாங்கான,மிகவும் மென்மையான அழகி அவள்.ஒருநாள் அழுதுக்கொண்டே கோயில் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறாள்.அவள் எதிரில் முரட்டுத்தனம் நிரம்பிய அவன்."பிடிக்கலையா?"என்பான்.அவள் பேசாமல் இருப்பாள்.கோபத்துடன் அவளது முகவாய்க்கட்டையை விரல்களால் நிமிர்த்தி மீண்டும் கேட்பான்.'பிடிச்சிருக்கு' என்பாள் அழுதுக்கொண்டே.”அப்புறம் ஏன் அழுவுறே?” என்பான்.'தெரியலை' என்பாள் அழுதுக்கொண்டே.அவன் கை பட்டென்று தன் பிடியை விடும்.அந்த நொடியில் அந்த முரடனின் மனதில் தோன்றும் சாந்தத்தை அவனது முகமாறுதல் துல்லியமாகக் காட்டும்.அவள் உடனே அளவிலாத காதலோடு தன் முகத்தை அவனது காலில் புதைத்துக்கொள்வாள்..
    இரசனையான காதல் காட்சி அது.அழகியலும்,கவித்துவமும் மிளிர அரங்கேறும் அந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சியின் தொடர்ச்சியாக ஒரு பாடல் இடம்பெறும் சூழல்.அந்த அழகான காட்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அப்பாடல் புனையப்பட்டிருக்கவேண்டும் என ரசிகனின் மனதில் தோன்றும் எதிர்பார்ப்பு அதீதமானதாக இருக்கக்கூடும்.அந்த அதீத எதிர்பார்ப்பு கொண்ட ரசிகனின் இரசனைக்குள் பொருந்தி போகும் அளவுக்கு வெகு அற்புதமாய் இசை,குரல்,பாடல் வரிகள் என அனைத்திலும் சாலச்சிறந்ததாய் புனையப்பட்டிருந்த ஒரு பாடல்தான் சுந்தரி கண்ணால் ஒரு சேதி,சொல்லடி இந்நாள் நல்ல தேதி
  இப்பாடல் மேல் குறிப்பிடப்பட்ட சூழலுக்கு இனிமையை வாரித்தரும் வண்ணம் அமைந்திருக்கவேண்டும் என்ற கடப்பாட்டோடு மட்டும் அல்லாமல் படத்தில் அந்தக் காதல் நிறைவேறாமல் போகும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் வலியை மிக ஆழமாக இரசிகனுக்குள் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்பதையும் உத்தேசித்து புனையப்பட்டுள்ளது
நான் உனை நீங்கமாட்டேன் என்ற ராகத்தில் தொடங்கி,சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்ற ராகத்தில் முடியும் அந்தச் சோகமான இசை ரசிகனின் மனதில் ஏற்படுத்தும் வலி அதீதமானது.
   தளபதி என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் அது.1991-ஆம் ஆண்டு ரஜினிகாந்த்,மம்முட்டி,ஷோபனா,பானுப்பிரியாவின் நடிப்பில்,மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான படம் தளபதி.இப்படத்தில் பேசப்பட்ட விசயங்களில் இளையராஜாவின் இசையும் ஒன்று.படத்தின் அனைத்து பாடல்களையும் வாலிதான் எழுதியுள்ளார்.
 
    தளபதி படத்தின் பின்னணி இசையும்,பாடல்களும் வெளிவந்த காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவை.மார்கழிதான் கூடிப்போச்சி,சின்னத்தாயவள் தந்த ராசாவே,யமுனை ஆற்றிலே,ராக்கம்மா கையைத் தட்டு,காட்டுக்குயிலு மனசுக்குள்ளே,புத்தம் புது பூ பூத்ததோ என இப்படத்தின் எல்லா பாடல்களுமே கேட்க கேட்க திகட்டாதவை.இளையராஜாவின் சிறந்த இசையைக் கொண்ட படங்களில் தளபதி படம் தவிர்க்கமுடியாதது.இப்படத்தின் இசை தமிழ்த்திரையுலகில் ஒரு மைல்கல் என புகழப்படும் அளவுக்கு படத்தின் எல்லாம் பாடல்களுமே பட்டிதொட்டியெங்கும் புகழடைந்தன.அதிலும் ராக்கம்மா கையைத் தட்டு என்ற பாடலைப் பெற்றி பெருமைக்குரிய ஒரு விசயத்தைச் சொல்லியே ஆகவேண்டும்.
      BBC துவங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, BBC டாப் 10 பாடல்கள் என்ற ஒரு போட்டியை 2002ல் அறிவித்தது. இந்தப் டாப் 10 பட்டியலில் இடம் பெறவேண்டிய பாடல்களுக்காக இணைய தள ஒட்டெடுப்புக்கள், தொலைபேசி, பேக்ஸ் மற்றும் ஈ-மெயில் என பலவகைகளில் நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்கள் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் வாக்குகளை அளித்தனர்..சுமார் 7000 பாடல்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. கிட்டத்தட்ட 1,50,000 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இதில், ராக்கம்மா கையை தட்டு பாடல் 4 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

     கர்ணன் என்ற புராணக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.  தொப்புள் கொடி அறுக்கும் முன்னரே,தாயால் தூக்கி எறியப்பட்டவன் சூரியா (ரஜினி).தந்தை பெயரும் அறியாதவன் அந்த ரணத்தோடும்,அவமானத்தோடும் வளர்ந்து முரட்டு வாலிபனாகிறான்..
    அவன் கெட்டவனும் அல்லன்;எங்குத் தப்பு நடந்தாலும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துகொண்டு தண்டிப்பவன்.அந்த ஊரின் இன்னொரு பிரபல தாதாவான தேவாவின் (மம்முட்டி) நட்பு அவன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் கொடுக்கிறது.தேவாவுடன் சேர்ந்து சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தப்பு செய்பவர்களைத் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கிறான்.அவனுக்குள்ளும் ஒரு காதல் பூ பூக்கிறது.
   ஒரு தடவை ஆனந்தக்களிப்பில் நடனமாடிக்கொண்டிருக்கும் வேளையில் தேவதை மாதிரி பெண்ணொருத்தி கையில் விளக்கேந்தி கோயிலுக்கு வர,அவளது சாத்வீக அழகு அவனைக் கவர்கிறது.மிரண்ட விழிகளோடு,சேலை,ஜிமிக்கி,மல்லிகை,வெகுளித்தனமான பார்வை என இருக்கும் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது அவனுக்கு.அவளும் ஓரவிழியால் அவனைப் பார்க்கவே செய்கிறாள்.
   அதன்பிறகு ஒரு சிறுவனின் தாயாரின் மருத்துவ செலவுக்காக சுப்புலட்சுமி (ஷோபனா) எனும் அவளது தங்க காப்பை வற்புறுத்தி வாங்குகிறான். அவனது முரட்டுத்தனத்தில் கொடுக்கறேன்,” என சலித்துக்கொண்டே எடுத்துக்கொடுத்தாலும் அவனது நல்ல குணம் அவளைக் கவரவே செய்கிறது.அவன் மீண்டும் அந்தக் காப்பைத் திருப்பித் தரும்போது அதை அந்தப் பெண்ணிடமே கொடுத்துவிட சொல்கிறாள்.ஒருகணம் அவளை ஏறிட்டுப் பார்ப்பவன் அவளது பெயரைக் கேட்டுவிட்டு,”எதாவது நல்லது செய்யனும்னா உன் கையால செய்யி, என்கிறான்.
   அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது ஓடிவந்து அவனிடம் தன் கையைக் காட்டி தான் அந்தக் காப்பைக் கொடுத்துவிட்டதாக சொல்கிறாள்.அப்போது அங்கு ஒரு மூதாட்டி அவனை,”நீ நல்லா இருக்கனும்டா,” என வாழ்த்திவிட்டுப் போக,அவளும் அதே மாதிரி அவனை டா போட்டு பேசிவிட்டு ஓடிவிடுகிறாள்.பிறகு மீண்டும் ஓடிவந்து அவனது பெயரைக் கேட்டுப்போகிறாள்.அவளுக்குள்ளும் அவன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
  பிள்ளைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கும்போது பாடலில் வந்த ஆயற்பாடி கண்ணனாய் சூரியாவைக் கற்பனையில் காண்கிறாள்.ஏக்கம் அவளுள் படர,அவள் மனம் அவன்வசம் பறிபோய்விடுகிறது.
     ஒருநாள் அவன் நடு சாலையில் ஒருவனது கையை வெட்டுவதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்.
   அவளைத் தேடி வரும் சூரியா அவளிடம் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.அவளைக் காட்டிலும் இரண்டு வயதாவது கம்மியாக இருக்கும் அந்தப் பெண்ணைப் பலர் சேர்ந்து கற்பழித்த கொடுமையைக் கோபத்தோடு சொல்கிறான்.அந்தப் படிக்கட்டில் அவள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்.
 உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கு என்னை மாதிரி அடிதடி ஆள் எல்லாம் பிடிக்காதுதானே,” என கோபமாக சொல்லிவிட்டு எழும்வேளையில் அவள் அழ ஆரம்பிக்கிறாள்.அவன் மனம் கரைந்து போகிறது;அவளருகில் அமர்கிறான்.அவள் மீண்டும் அழ,அவனுக்குள் எரிச்சலும் எட்டிப்பார்க்கிறது.ஏன் அழறே?” என மிரட்டி கேட்டும் பதில் சொல்லாமல் அழுகிறாள்.ஆத்திரத்தோடு அவளது முகவாய்க்கட்டையைப் பிடித்து நிமிர்த்தி மீண்டும் கேட்கிறான்.
பிடிக்கலையா?’
பிடிச்சிருக்கு என்கிறாள் விம்மிக்கொண்டே.அவன் கை தளர்ந்து தன் பிடியை விடுகிறான்.
அப்புறம் ஏன் அழுவுற?” குரலில் கொஞ்சம் சாந்தம்.
தெரியலை என்கிறாள் மீண்டும் விசும்பியவாறு.
  அவன் மனம் நெகிழ்ந்து அவளைப் பார்க்க,அவள் உடனே உரிமையோடு அவன் காலில் தன் முகத்தைப் புதைத்துக்கொள்கிறான்.அவன் ஆதரவாய் அவளது தலை கோதுகிறான்.அப்போது எஸ்.பி.பாலாவின் குரலில்,”சுந்தரி கண்ணால் ஒரு சேதி,” என ஒலிக்கிறது இப்பாடல்.
   இப்பாடல் காட்சியானது அப்பெண்ணின் மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.நாட்டு மக்களின் நன்மைக்காக போருக்குச் சென்று உயிரைப் பணயம் வைத்து போராடும் ஒரு வீரனாய் அவனை அவள் கற்பனை செய்து கொள்கிறாள்.ஊரில் எந்தப் பிரச்சனை வந்தாலும் துணிந்து போராடுபவன் அவன் என்பதால் அவள் கண்களுக்கு காதலோடு இருக்கும் தன்னைக் காட்டிலும் அடுத்தவர்களைக் காப்பதே முக்கிய கடமை என உயிரைத் துச்சமென எண்ணி போர்க்களத்துக்குப் புறப்படும் கணவனாக அவனையும்,காதல் ஏக்கத்தோடு அவன் நினைப்பில் தவிக்கும் தாரகையாக தன்னையும் இந்தப் பாடலில் பெண்ணானவள் கற்பனை செய்து கொள்கிறாள்.
  சுகமான தருணத்தில் ஒலிக்கும்போது இனிமையாக இருந்த இப்பாடலின் சில வரிகளின் ராகம் மட்டும் சோகக்காட்சியில் வயலின் இசையில் ஒலிக்கிறது.
   அவள் அப்பா அடிதடியில் ஈடுபடும் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைக்க இயலாது என மறுத்துவிடுகிறார். அவளுக்கும்,கலெக்டருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட,அவள் அவனிடம் அந்த விசயத்தைச் சொல்கிறாள். சூரியா மனதில் பெரும் வலியொன்று உற்பத்தியான போதிலும் வெளியில் காட்டாமல் மறைத்து பேசுகிறான்.
  நானா உன் பின்னால சுத்தினேன்,நானா உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்?நானா உன் தோளில் சாய்ந்து அழுதேன்?” என அவன் கோபமாக கேட்க,அவள் ஏதோ சொல்ல வர,அவளைப் பேசவிடாமல் தடுக்கிறான்.அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க,”அழாதே,போ என கடும் கோபத்தோடும், உள்ளே புதைந்து கிடக்கும் வலியோடும் அவளைத் துரத்துகிறான்.அவள் போனபின்பு அந்தத் திசையைப் பார்க்க,நான் உனை நீங்கமாட்டேன் என்ற ராகத்தில் ஒலிக்கும் வயலின் இசையும்,சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற ராகத்தில் இசைக்கப்படும் புல்லாங்குழலின் இசையும் நமக்கும் வலி கொடுக்கின்றன.அவ்வளவு கொடிய அந்த வலியை வெறும் இசையாலேயே இவ்வளவு ஆழமாகக் காட்டிவிட முடியுமா என்ற பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது.அவள் திருமணமாகி போன பிறகு,ஒரு தடவை அவளது கணவனைத் தேடிப்போகும் வேளையில் சுப்புவைக் காண நேரும்போது மீண்டும் வயலின் இசையில் அந்தப் பாடலின் முக்கியமான வரியின் ராகம் ஒலிக்கிறது.
  அந்த சோகமான இசையை மட்டும் தனித்து கேட்கும்போது மனதில் இனம்புரியாத ஒரு வலி தோன்றி உயிர் வரை ஊடுருவுகிறது.



இந்தப் பாடலின் வரிகளைப் பற்றி ஒரு முழுக்கட்டுரையே எழுதிவிடலாம்.அந்த அளவுக்கு அற்புதமான வரிகளில் தாலாட்டியிருக்கிறார் வாலி.கணவன் போர்க்களத்தில் இருக்க,அவனை நினைத்து வாடும் பெண்ணின் ஏக்கத்தை தம் குரலில் அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜானகி.நீங்கமாட்டேன்,நீங்கினால் தூங்கமாட்டேன் என சொன்ன வாய்மொழியைக் காற்றில் பறக்கவிட்டாயோ, என வஞ்சி அவள் ஏக்கத்தோடு கேட்பதும்,அவன் மார்பில் தூங்க ஏங்குவதையும்,போர்க்களத்தில் நின்றாலும் நெஞ்சில் அவள் ஞாபகம்தான் என அவன் சொல்லும் இடமும் இரசனை ததும்பும் வரிகள்.பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?” அந்த வரிகளைப் பாருங்களேன்.மஞ்சத்தில் அவனோடு கூடிய பொழுதின் ஏக்கத்தைக் கூட விரசமின்றி எவ்வளவு அழகாக இப்பாடலில் புனைந்துள்ளார் வாலி. எனைத்தான் அன்பே மறந்தாயோ?” என அவள் கேட்க,”மறப்பேன் என்றே நினைத்தாயோ?” என அவன் பதிலுக்கு கேட்குமிடம் எனக்கு அதிகம் பிடித்த வரிகள்.அதேமாதிரி நான் உனை நீங்கமாட்டேன்;நீங்கினால் தூங்கமாட்டேன்,” என்ற வரிகளும் நான் அதிகம் முணுமுணுக்கும் வரிகள்.அந்த வரிகளில் பிடிவாதமான,மிரட்டலான அன்பு நிறைந்திருக்கிறது.வாள் பிடித்து  நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்,போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்,” என்ற வரிகள் அப்பெண் மீது அவன் கொண்டிருக்கும் ஆழமான அன்பையும்,உடல் வேறிடத்தில் இருந்தாலும் உள்ளம் அவளிடத்தில்தான் இருக்கிறது என்ற அவனது நிலையையும் அழுத்தமாக சொல்லிவிடுகின்றன.அவனது மெய்த்தீண்டலில் கோடிசுகம் பிறக்கும் என அவள் ஏக்கத்தோடு சொல்ல,போரில் பட்ட காயங்களோடு,மனக்காயங்களும் அவள் எதிரில் தோன்றினாலே மறைந்துவிடும் என அவன் சொல்ல,இப்படி இருவருக்குமிடையில் நிகழும் உரையாடல் போன்ற வடிவில் இப்பாடல் புனையப்பட்டுள்ளது சுகமான கற்பனை.
  இப்பாடல் காட்சியில் ஷோபனா வெகு அழகு.ஆற்றின் நடுவில் இருக்கும் அந்த ஓடமும்,அரண்மனையும் வெகு அழகு.
 வாலியின் வாலிபமான... வாளிப்பான வரிகள்... வருடும் ராசாவின் இசை....மயக்கும் பாலா, ஜானகியின் குரல்...மொத்ததில் காதலர்களின் தேசிய கீதம்... ரசிகர்களுக்கு தாலாட்டு!!!!!”  
    இந்தப் பாடலைப் பற்றி எழுதப்போவதாக பேஸ்புக் வளைத்தளத்தில் பகிர்ந்தபோது ஆர்.டி.எம்.வானொலி செய்திப்பிரிவைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் தண்ணிமலை இட்டிருந்த கருத்து அது. K.J. ஜேசுதாஸ் 8 டிரக்கை ராசாவுக்கு அறிமுகப்படுத்தியது இந்தப் படத்தில் தான். அதனால், அந்தப் படத்தின் பாடல்கள் இன்னும் துல்லியமாகக் கேட்கும், தளபதி திரைபடத்தின் முழு பாடலும் மும்பையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது... இந்தி பாடகி மித்திலியை பாட வைத்ததற்கு அதுவும் ஒரு காரணம், எனவும் பகிர்ந்திருந்தார்.
   சுதந்திரனும் தன் பங்குக்கு, தன் எல்லாப் படப்பாடல் பதிவையும் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில்தான் வைத்துக்கொள்ளும் இளையராஜா ஒரு சில திரைப்படப் பாடல் பதிவிற்குத் தான் அவர் மும்பாய் செல்வார் எனவும் அங்கு தன் இசை இன்னும் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும் என்பது அவரது எண்ணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.அவரது உதயகீதம், தளபதி, போன்ற திரைப்படப் பாடல்களில் அதன் வித்தியாசத்தை உணர முடியும். முக்கியமாய் இந்த சுந்தரி பாடலில் ஜப்பானிய மன்னனாக ரஜினி தோன்றும் காட்சியில் ஹார்மோனி ஆர்கெஸ்ட்ராவின் இசையைக் கொண்டு வந்திருப்பார் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
  

  பிரேம் ஆனந்த் தண்ணிமலை ஆர்.டி.எம் வானொலி செய்தி தொகுப்பாளர்.ஒரு நடிகராகதான் எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார்.கம்பீரமான தோற்றம் கொண்ட,நற்குணங்கள் நிரம்பிய,படித்த இளைஞர் பாத்திரத்திற்கு வெகு பொருத்தமாய் இருக்கிறாரே என அவரை வியந்து,இரசித்துப் பார்த்திருக்கிறேன்.அவரது நாடகங்கள் எனக்கு அதிகம் பிடிக்கும்.தொலைக்காட்சி நாடகங்களில் மட்டுமல்லாது வானொலி நாடகங்களிலும் தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.
  பேஸ்புக் வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பிரேம் ஆனந்த் சமயம் சார்ந்த பல விசயங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்.சக பெண்களிடம் கண்ணியமாக,பாசமாக,மா என அழைத்து பழகக்கூடியவர்.இந்தப் பாடலை என் மாயலோகத்து அன்பிற்கினியவனோடு பிரேம் ஆனந்த் தண்ணிமலை அவர்களுக்கும் சமர்ப்பிக்க விழைகிறேன்.உங்கள் தமிழ்ப்பணியும்,கலைச்சேவையும் இனிதே தொடரட்டும் பிரேம் ஆனந்த்.
   வாருங்கள் வாசகர்களே,அந்த இனிய கீதத்தை நாமும் பாடிப்பார்க்கலாம்.

: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நான் உனை நீங்கமாட்டேன்
   நீங்கினால் தூங்கமாட்டேன்
   சேர்ந்ததே நம் ஜீவனே
   சுந்தரி கண்ணால் ஒரு சேதி
   சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெ: வாய்மொழிந்த வார்த்தை யாவும்
    காற்றில் போனால் நியாயமா
  பாய் விரித்து பாவை பார்த்த
   காதல் இன்பம் மாயமா
ஆ: வாள் பிடித்து நின்றால் கூட
    நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
    போர்க்கலத்தில் சாய்ந்தால் கூட
    ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ:தேனிலவு நான் வாட
   ஏன் இந்த சோதனை
ஆ: வான்நிலவை நீ கேளூ
    கூறுமென் வேதனை
பெ:எனைத்தான் அன்பே மறந்தாயோ
ஆ: மறப்பேன் என்றே நினைத்தாயோ
பெ:என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ:சுந்தரி கண்ணால் ஒரு சேதி
   சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ:நான் உனை நீங்கமாட்டேன்
    நீங்கினால் தூங்கமாட்டேன்
    சேர்ந்ததே நம் ஜீவனே
:சுந்தரி கண்ணால் ஒரு சேதி
   சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ:என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெ:சோலையிலும் முட்கள் தோன்றும்
    நானும் நீயும் நீங்கினால்
    பாலையிலும் பூக்கள் பூக்கும்
    நான் உன் மார்பில் தூங்கினால்
  ஆ: ஆ... மாதங்களும் வாரமாகும்
      நானும் நீயும் கூடினால்
       வாரங்களும் மாதமாகும்
       பார்வை மாறி ஓடினால்
பெ: கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்
:காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
பெ:உடனே வந்தால் உயிர்வாழும்
ஆ:வருவேன் அந்நாள் வரக்கூடும்
   சுந்தரி கண்ணால் ஒரு சேதி
   சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ:என்னையே தந்தேன் உனக்காக
   ஜென்மமே கொண்டேன் அதற்காக
:நான் உனை நீங்கமாட்டேன்
   நீங்கினால் தூங்கமாட்டேன்
   சேர்ந்ததே நம் ஜீவனே
ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ:என்னையே தந்தேன் உனக்காக
   ஜென்மமே கொண்டேன் அதற்காக