Sunday, June 5, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 15


தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 15

 

ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ

    வருணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்து ஒரு வாரத்திற்கு மேலாகியிருந்தது.அந்த மழைச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் இன்னும் சந்திக்கவேயில்லை.அகல்யாவே அவனைத் தொடர்பு கொண்ட போதும் பிறகு அழைப்பதாகச் சொல்லி வைத்துவிடுகிறான்.அவனுடைய பிரச்சனை என்னவென்று அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை.ஒரு வேளை வேலைப்பளுவினால் தன்னை வந்து பார்க்க நேரமில்லாமல் இருக்கலாம்.ஆனால் தொலைபேசியிலாவது அழைத்துப் பேசலாமே என யோசித்தாள்.
  ஒவ்வொரு நாளும் அவனுடைய அழைப்புக்காக காத்திருந்து மனம் வலித்ததுதான் மிச்சம்.ஏன் இப்படியெல்லாம் செய்கிறான்,இப்படி விலகிப் போகத்தான் அன்று அப்படி நெருங்கி வந்தானா?அகல்யாவிற்குப் புரியவில்லை.இதற்கு முன்பு சில தடவை இருவருக்கும் ஊடல் வந்ததுண்டு.அதற்கெல்லாம் பெரும்பாலும் அகல்யாதான் காரணமாக இருப்பாள்.இரண்டு மூன்று தினங்களில் இருவரும் சமாதானமாகிவிடுவார்கள்.
   வருணுடைய பிறந்தநாளுக்குப் பிறகு கூட ஒரு தடவை இவள் ஏதோ செய்து வருணுடைய கோபத்தைக் கிளறிவிட அவன் கோபமாய்ப் போய்விட்டான். ரேணு ரேணு,. எனக்கு ஒரு உதவி பண்ணு,வருண் மாமாவுக்குப் போன பண்ணி நானு ஒரு வாரமா ஒழுங்கா சாப்பிடறதேயில்ல,அதுவும் நேத்துல இருந்து அறவே எதுவும் சாப்பிடல. அழுதுக்கிட்டே இருக்கேன்னு எனக்காக ஒரு பொய் சொல்லேன்,ப்ளீஸ்,” ரேணு வாங்கி வந்த பிரியாணி சோற்றை வாயில் திணித்துக்கொண்டே சொன்னாள்.அவளுடைய நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்தது.வருண் அன்று சாயந்திரமே அவளைப் பார்க்க  வந்துவிட்டான்.
   மறுநாள் அவளைக் கோயிலுக்கு அழைத்துப் போவதாக சொன்னான் வருண்.அவளுக்கு இன்னும் அவன் மீதான ஊடல் குறையவில்லை.போகவேண்டாம் என்றுதான் நினைத்தாள்.ஆனால் அன்றிரவு அவன் ஒலிபரப்பில் மலர்ந்த பாடல்கள் அனைத்தும் ஊடல் சம்பந்தப்பட்ட பாடல்களாகவே இருந்தன.
   முத்தாரமே உன் ஊடல் என்னவோ?, நிலாவே வா,கண்மணியே பேசு,  அன்பே சுகமா? என்று ஊடல் சம்பந்தப்பட்ட பாடல்களாகவே ஒலியேற்ற அவள் மனம் மாறி கோயிலுக்குக் கிளம்பினாள்.
    அகல்யாவின் ஊடல் தீர்ந்ததில் வருணுக்குப் பெருமகிழ்ச்சி.அதிலும் அவனுக்குப் பிடித்தமான நீலநிற சேலையை வேறு அணிந்திருந்தாள்.அவனுக்கு அவளைச் சேலையில் பார்க்க பிடித்திருந்தது.பிற இனத்தவர்களைப் போன்று இந்தியர்களும் வாரத்தில் ஒரு நாளாவது பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என்ற ஆதங்கம் அவனுக்கு நிறையவே உண்டு.அதனால் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் அங்காசபுரிக்கு ஜpப்பா அணிந்துதான் செல்வான்.அதனால்தான் அகல்யா சேலையில் இருந்ததைப் பெரிதும் இரசித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
    கோயிலிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் அகல்யா அவனைக் கோயிலுக்குப் பின்புறமாக வரச்சொல்லி அவன் காதில் கிசுகிசுத்தாள்.
   சரி, பயப்படாமல் வா,ஏதாவது ரெஸ்டாரண்டுல போயி புடவையை நல்லா கட்டிக்க என்றான்.
   ஐயோ, எனக்குப் புடவையை அட்ஜஸ்;ட் பண்ணக்கூட தெரியாது.நான் என்னா பண்றது?” அவள் அவஸ்தையில் இருந்தாள்.
   என்னமோ எனக்கு மட்டும் பத்து பேருக்குப் புடவை கட்டிவிட்ட அனுபவம் இருக்கறமாதிரி என்கிட்ட போயி கேக்கற?” அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
    தன்னுடைய அவஸ்தை அவனுக்கு விளையாட்டாகவே இருக்கிறதே என அவள் கோபப்பட்டதும் அவன் எங்கே அவள் மீண்டும் ஊடல் கொண்டுவிடுவாளோ என பயந்து அவன் சமாதானப்படுத்தி அழைத்துப் போனதும் அவள் நினைவிற்கு வந்தது.ஆனால் இம்முறை பொய்யாக எதையும் சொல்லி அவனை வரச்சொல்ல விரும்பவில்லை அகல்யா.அவனே தேடி வரட்டும் என்று விட்டுவிட்டாள்.

* * * * *

     மனதில் பெரிய பாரத்தோடு அங்காசபுரியின் வளாகத்தை அடைந்தான் வருண்.வானொலி ஆறு கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது.புதிய அறிவிப்பாளர்கள் ஆறு பேர் பணியில் சேர்ந்திருந்தார்கள்.அவர்களுக்கு வேலையைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு இளைய அறிவிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது.அத்தோடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வானொலி ஆறில் சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு தயாராகிக்கொணடிருந்தன.
    வருண், நாடக ஒலிப்பதிவுக்கு நேரமாச்சி, வா சக அறிவிப்பாளர்கள் அனிதாவும் அஞ்சுவும் அழைக்க ரெக்கார்டிங் அறைக்குப் போனான்.
    தீபாவளி ரகளை நாடகத்திற்கான ஒலிப்பதிவு நடந்து னொண்டிருந்தது.நகைச்சுவையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் நாடகம் என்பதால் ரெக்கார்டிங் அறையே கலகலப்பாக மாறிவிடும்.வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போதே எல்லாருக்கும் சிரிப்பு வந்துவிடும்,சிரித்துவிடுவார்கள்.அதிலும் வருணன்தான் முதலில் ஆரம்பிப்பான்.அவன் சிரிப்பதைப் பார்த்து மற்றவர்களும் சிரித்துவிடுவார்கள்.ஆனால் இன்று அவன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது சக அறிவிப்பாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
   எந்த ஊரு கப்பல் கவிழ்ந்திருச்சி வருண்?சங்கரன், நீங்க செய்தி வாசிக்கறப்ப  சொல்லவே இல்லையே? மறந்துட்டீங்களா?” முத்தையா அவனைச் சிரிக்க வைக்க முயன்றான்.அப்போதும் வருணன் அமைதியாக இருந்தான்,வசனங்களை உளறி வைத்தான்.
   என்னாச்சி வருண்? எப்போதும் ஒழுங்கா பேசிடுவீங்க? உங்க சிந்தனையெல்லாம்  வேற எங்கயோ இருக்கு போல?” தயாரிப்பாளர் சிரித்துக் கொண்டே கண்டிக்கவும் வருண் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு வசனங்களை முறையாக உச்சரித்தான்.
  ரெக்கார்டிங் முடிந்து அறிவிப்புப் பணியையும் முடித்துக் கொண்டு அவன் ஒலிபரப்பு அறையை விட்டு வெளியே வந்தபோது அகல்யாவிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது.
 உங்களுக்கு என்னைப் பத்தின அக்கறை இருக்கா இல்லையா?” என கேட்டிருந்தாள்.
  அவளுடைய கோபம் அவனுக்குப் புரிந்தது,ஆனால் அவனும் என்னதான் செய்வான்?செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கும்போது, புதிதாய் ஒரு பிரச்சனையும் உருவெடுத்துள்ள சமயத்தில் அவனால் எப்படி காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும்?
   வருண் வேறு ஏதாவது துறையில் இருந்துவிட்டாலும் பரவாயில்லை,தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன கஷ்டங்களோ நஷ்டங்களோ எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நேயர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டிய முக்கிய பணியில் அல்லவா அவன் இருக்கிறான்? ஒலிபரப்பு செய்துக்கொண்டிருக்கும் வேளையில் வேண்டியவர்கள் யாராவது இறந்து போனால்கூட உடனே விட்டுவிட்டு ஓடக்கூடிய பணி அல்லவே அவர்களுடையது?
   தன்னுடைய சொந்த பிரச்சனைகள் எதுவும் தன்னுடைய பணியைப் பாதித்துவிடக்கூடாது என்று விரும்பினான் வருண்.ஆனால் இப்போதே சில நேரங்களில் அவனால் அறிவிப்புப் பணியில் சரியாக கவனம் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.
   அன்று தோட்டப்புறத்திற்குச் சென்றிருந்தபோது ராமசாமி அவனிடம் சொன்ன ஒரு விசயம்தான் அவனுடைய இவ்வளவு குழப்பத்திற்கும் பிரச்சனைக்கும் மூலதனம்.அவர் மீது எந்த தப்பும் சொல்லமுடியாது,எல்லா பெற்றோருக்கும் தோன்றும் சராசரி ஆசைதான் அது.ஆனால் இவன் மனதில் ஒருத்தி இருக்கிறாளே?அவளுக்கு எப்படி துரோகம் செய்வது? இந்நேரம் தேன்மொழியிடமும் விசயத்தைச் சொல்லியிருப்பார்,அப்பாவின் மீது உயிரையே வைத்திருப்பவள் நிச்சயம் சம்மதம்தான் சொவ்வாள்.இவன் மறுத்தால் அவள் தாங்குவாளா?அவள் மனதைப் பாதிக்கும்படி நடந்து கொண்டால் பிறகு இதுநாள் வரை அவள் மீது காட்டிய அக்கறைக்கும் அன்புக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடுமே? அதற்குப் பதில் ஆரம்பத்திலேயே அவளை எப்படியோ போகட்டும் என்று விட்டிருக்கலாமே?
     குழம்பி போய் நின்றான் வருண்.


குழப்பம் தொடரும் ……………

No comments:

Post a Comment