Wednesday, June 1, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 13

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 13

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த துன்பம்….
காதலில் கண்ட இன்பம்…..

    அகல்யா வருணைப் பற்றி நினைத்துக்கொண்டே மழையில் நடந்தாள்.வருண் தன்னால் மழையில் நனையும்போது தான் மட்டும் எதற்காக குடையில் போகவேண்டும் என்று கையிலிருந்த குடையை மடக்கி எடுத்துக் கொண்டு மழையில் நடந்து கொண்டே போனாள்.மனம் முழுக்க வருண் நிறைந்திருந்தான்.இனம் புரியாத சந்தோஷமும் காரணமற்ற ஒரு கவலையும் அவளுள் கலந்திருந்தது.
   வீட்டை அடைந்ததும் தலையோடு குளித்துவிட்டு மெத்தையில் சாய்ந்தாள்.வருண் மீது என்றுமில்லாத அளவுக்கு அதிக ஏக்கமாக இருந்தது.அவனுடன் மழையில் நனைந்தது,அவன் தன் தோளில் கை போட்டு அவனுடைய தோளோடு அணைத்துக்கொண்டது யாவுமே நினைக்க நினைக்க இன்பமூட்டியது.
   இதுதான் முதல்முறை அவனோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடியது.ஏற்கனவே அக்டோபர் இரண்டாம் தேதி வருணுடைய பிறந்தநாளன்று அவனுடன் கோயிலுக்குப் போயிருந்தபோது அவளுடைய துப்பட்டா சங்கிலியில் மாட்டிக்கொண்டு அவள் சிரமப்பட்டாள். வருண்தான் அவளுடைய சங்கிலியை துப்பட்டாவிலிருந்து எடுத்துவிட்டான்.தன் கைவிரல்  அவள் உடலில் படாமல் மிகமிக கவனமாக, நிதானமாக எடுத்துவிட்டான்.அப்போதும் அவள் மனதில் ஒரு குறுகுறுப்பு வந்திருந்தது.ஆனால் இந்த அளவிற்கு இல்லை.
  இன்று அவன் நடந்து கொண்ட விதம் யாவும் அவள் மனதை என்னென்னவோ செய்கிறதே? ஏன் வருண் இப்படி செய்தான்? முதல் தடவையாக முத்தமிட வந்து விலகிக்கொண்டானே?ஒரு வேளை அவன் அவளை முத்தமிட்டு விட்டிருந்தால் கூட இவ்வளவு ஏக்கம் வந்திருக்காதோ அவன் மீது? அவனுடைய கண்ணியமே அவன் மீது அதிக காதலை ஏற்படுத்தியது அவளுக்கு.அவன் நெருங்கி வந்து விலகுவதே அவளது ஏக்கத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.
   அப்படி என்னதான் இருக்கிறது அந்த வருணிடம்? அவளுக்கே தெரியவில்லை.தன்னுடைய தோழிகள் எல்லாம் விஜய், மாதவன் என்று அக்கரை பிரபலங்களை நினைத்து உருக இவள் மாத்திரம் எப்படி வருணன் மீது இப்படி பித்துக்கொண்டு அலைய ஆரம்பித்தாளோ?
   பார்க்காத போதே ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய நினைவுகள் இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு.”வருண் எப்படிதான் இருப்பான்?இன்று என்ன வண்ணத்தில் சட்டை போட்டு வந்திருப்பான்? இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்? என்ன சாப்பிட்டிருப்பான்? என்று சதா அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பாள்.கனவில் வருணுடைய முகத்தைப் பார்ப்பது போன்று இருக்கும்.விடிந்து பார்த்தால் அந்த முகமே நினைவிற்கு வந்ததில்லை.பிறகு மக்கள் ஓசை பத்திரிக்கையில் அவனுடைய புகைப்படத்தைப் பார்த்தபோது முகத்தோடு சேர்த்து அவனை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.
   இப்போது நேரிலும் சந்தித்து காதலாகி கசிந்து உருகிய பின்னும் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பது குறையவேயில்லையே?  அவனை நினைத்துக் கொண்டே படுத்திருந்தாள்.
   மழையில் நன்றாக நனைந்துவிட்டதால் சளி பிடித்து காய்ச்சலாக மாறியது.
   என்னா சீனியர் ஏன் திடீர்னு காய்ச்சல்? வருண் என்னா பண்ணாரு உங்களை?” என்றாள் ரேணு குறும்பாக கண்களைச் சிமிட்டியபடி.
   இவளிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று சொன்னது எவ்வளவு தப்பாக போய்விட்டது என்று நினைத்தவள்,
   மழையில நனைஞ்சிட்டேன்,அதான்,மத்தபடி நீ நெனைக்கற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல,” என்றாள்.
   வருண் கோபத்துல உங்களைத் திட்டி அந்த பயத்துல உங்களுக்கு காய்ச்சல் வந்துடுச்சோன்னு நான் நெனைக்கறது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” கேலி செய்த ரேணுவைப் பொருட்படுத்தவில்லை அகல்யா.வேறொரு சமயமாக இருந்திருந்தால் பதிலுக்குப் பதில் அவளுடன் வாயாடியிருப்பாள்.ஆனால் இன்று யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கவேண்டும் போலிருந்தது. ரேணு கொண்டு வந்த பெனடோல் மாத்திரையை விழுங்கிவிட்டு போர்வையை இழுத்து தலையோடு சேர்த்து போர்த்திக் கொண்ட அகல்யா வருணுடைய புகைப்படத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டே உறங்கினாள்.
  வருண் அவளை நிம்மதியாக உறங்கவிடவில்லை. அவளைக் குடைபிடித்து எங்கெங்கோ அழைத்துப் போனான்.அவளுடைய தோளைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டான்.அவள் கன்னத்தை வருடினான்.திடீரென மழையில் நனைந்து ஓடினான்.நனவுகள் யாவும் கனவுகளாகவும் மாறி அவளைப் பாடாய்ப் படுத்தின.
* * * * *
    இடைவிடாது தும்மிக் கொண்டிருந்தான் வருண்.அவனுடைய மூக்கு சிவந்து போயிருந்தது,கயல்விழி அவனருகே அமர்ந்து அவன் ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கொண்டிருந்தாள்.தேன்மொழி சுடசுட மிளகுரசம் வைத்து எடுத்து வந்தாள்.
   சுடசுட குடிப்பா, கொஞ்சம் இதமா இருக்கும்,” தேன்மொழியிடமிருந்த கண்ணாடி குவளையை வாங்கி அவன் கையில் கொடுத்தார் ராமசாமி.அதை வாங்கி சுடசுட குடித்தான்.தொண்டைக்குள் இதமாய் இறங்கியது.குவளையைத் தேன்மொழியிடம் கொடுக்க வந்தவன் எதர்பாராத விதமாக மீண்டும் ஒரு முறை பலமாக தும்ம கண்ணாடி குவளை அவன் கையிலிருந்து தரையில் விழுந்து தெறித்தது.
  அம்பத்தி மூனு,” என்றபடி கலகலவென சிரித்தாள் கயல்விழி.
  போச்சி ராத்திரிக்கு நிகழ்ச்சி வேற இருக்கே?முதன்முதல்ல வானொலியில பேசினப்ப நேரத்தை சொல்லிட்டு இருமனீங்களே அந்த மாதிரி இன்னிக்கும் வணக்கம் சொல்லிட்டு…”தேன்மொழி சொல்லி முடிக்கவில்லை,அதற்குள் மீண்டும் பலமாய் தும்மினான் வருண்.
  அம்பத்தி நாலு,” என்று கயல்விழி சத்தமாய்ச் சிரிக்க தேன்மொழியும் ராமசாமியும் அவளுடன் சேர்ந்து கொண்டார்கள்.
   வரவர எல்லாருக்கும் என்னைப் பார்த்தா நக்கலா இருக்கு,” என்று சொல்லிக்கொண்டே விடைபெற்றான்.

   தும்மிக்கொண்டே அங்காசபுரியை அடைந்தான் வருண்.அவனது நிலையைக் கண்ட சக அறிவிப்பாளர் பிரேமலதா அவனுக்கு கோடரி சாப் தைலத்தைக் கொடுத்தாள்.எடுத்து மூக்கில் தேய்த்ததோடு கைக்குட்டையிலும் தைலத்தைத் தேய்த்து மூக்கில் வைத்து அழுத்திக்கொண்டான்.தும்மல் முழுமையாக நிற்கவில்லையென்றாலும் பெருமளவு குறைந்திருந்தது.
  எதுக்கும் மைக்கை அப்பப்ப அடைச்சி வெச்சிடுங்க வருண்,” உடனிருந்த சாந்தகுமாரி சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போனாள்.
   அவன் பயந்தபடி எதுவும் நடக்கவில்லையென்றாலும் தைலத்தால் மூக்கு எரிய ஆரம்பித்தது.எப்படியோ சமாளித்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்காசபுரியை விட்டு வெளியே வந்தான்.மனம் முழுக்க அகல்யா நிறைந்திருந்தாள்.
  இன்று ஏன் இப்படி தடுமாறிப் போனேன்?” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.அகல்யாவுடன் பழக ஆரம்பித்து ஆறு மாத காலத்தில் அவளிடம் நெருங்கி பழகியதேயில்லை.அவன் வாலிப பருவத்தில் இருக்கும் இளைஞன்தானே? அவன் மனதிலும் அவ்வப்போது சில ஏக்கங்கள் தோன்றுவதுண்டு.ஆனால் திருமணமாகும் வரை எதுவுமே நிச்சயமில்லையே? ஒரு வேளை நெருங்கி பழகிவிட்டு தனக்கேதாவது நேர்ந்தால் அகல்யா எப்படி தாங்கி கொள்வாள்? தேன்மொழி படும் வேதனைகளை நேரில் பார்ப்பவனாயிற்றே? அவள் இடத்தில் அகல்யாவை வைத்துப் பார்த்து தன் ஆசைகளுக்கு அணை போட்டு வைத்திருந்தான்.
   நல்லவேளை உடனே சுதாகரித்துக் கொண்டு விலக முடிந்தது,” என நினைத்துக்கொண்டவன் மோட்டார் பைக்கை காஜாங்கை நோக்கி செலுத்தினான்.
   வெகுநாட்களுக்குப் பிறகு தேன்மொழியின் வீட்டுக்கு இரவு உணவு உண்ண வந்திருக்கிறான் வருண்.இரவு நேரத்தில் அடிக்கடி தேன்மொழியின் வீட்டுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என்றுதான் அவன் பெரும்பாலும் இரவு நேரங்களில் அவளுடைய வீட்டுக்கு சாப்பிட வருவதில்லை.அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் தேன்மொழியைத் தப்பாக நினைத்துவிட கூடாது என்று அவன் எண்ணியதே அதற்கு காரணம்.இருப்பினும் தேன்மொழிக்காக வாரத்தில் இரண்டு மூன்று  நாட்களுக்காகவாவது அவள் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருவான்.
   அன்று அவனது வருகை வீட்டில் எல்லாரையும் சந்தோஷப்படுத்தியிருந்தது.மிளகுரசம், மீன்சம்பல், அப்பளம், பயிற்றங்காய் பிரட்டல், முட்டைப் பொரியல் என்று இரவு உணவை அமர்க்களப்படுத்தியிருந்தாள் தேன்மொழி.
   அக்கா, பயமாயிருக்குக்கா. எனக்கும் வைரஸ் பரவிட போகுது,”அவனை வம்பிழுப்பதற்காக வேண்டுமென்றே தட்டை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி அமரப் போன கயல்விழியைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான் வருண்.


தொடரும் …..

No comments:

Post a Comment