Saturday, July 13, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 11(14.07.2013)


  தேடும் கண்பார்வை (மெல்ல திறந்தது கதவு)
 
 
 
 
      
      தேடல் என்பது வாழ்வில் சுவையை சேர்க்கும் ஒரு சுகமான  சுமை.நேசம் கொண்ட இரு நெஞ்சங்களின் தேடலும்,அந்தத் தேடல் தரும் ஊடலும் அதன்பின் வரும் கூடலும் சுவாரஸ்யமானவை.அத்தகைய தேடலின் இன்பத்தையும்,ஏக்கத்தையும்,வலியையும் அழகாக கொண்டு புனையப்பட்டிருந்த படங்களுள் ஒன்றுதான் மெல்ல திறந்தது கதவு 

       1988- ஆம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், மோகன்,ராதா,அமலா நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் என் தந்தையைப் பெரிதும் கவர்ந்த திரைப்படம்.அவர்தான் எனக்கு இப்படத்தை வாங்கித் தந்தார்.ஏறத்தாழ முப்பது தடவைக்கு மேல் இப்படத்தைப் பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் என் கண்களுக்கு இரசனையாகவே தோன்றியது இப்படம்.அதிலும் அமலா வரும் காட்சிகள் யாவுமே மனதை அள்ளும் கவிதைகள்.

  எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவும்,இளையராஜா ஐயாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள சக்கரக்கட்டிக்கும்,”ஒரு ஆம்பளைப் பையன்,ஊருசனம் தூங்கிடுச்சி,குழலூதும் கண்ணனுக்கு,வா வெண்ணிலா,தில் தில் தில் மனதில்,தேடும் கண்பார்வை,” என அனைத்துப் பாடல்களுமே கேட்க கேட்க திகட்டாதவை.

  அந்தக் காலக்கட்டத்தில் முகம் பார்க்காத,வித்தியாசமான காதலைச் சொன்ன படம் இது.துளசிக்கு (ராதா) தன் மாமன் மகன் சுப்ரமணியத்தின் (மோகன்) மீது அளவுகடந்த நேசம்.அவன் ஊருக்கு வருவதாக கடிதம் வந்ததிலிருந்து இருப்பு கொள்ளாமல் தவிக்கிறாள்.நாட்டுப்புற பாடல்கள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ள வரும் அவன் அவளோடு அன்பாக பழகவே அவளும் அவன் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறாள்.அவள் தந்தையும்,தாயும் அடுத்தடுத்து இறந்துபோக அவள் சுப்ரமணியத்தின் வீட்டில் அடைக்கலமாகிறாள்.சுப்ரமணியத்தின் தந்தையிடம் துளசியை மணக்கமுடியாது என சொல்லிவிட,அவள் வேதனையோடு அங்கிருந்து புறப்படுகிறாள்.அவள் மூலம் தன் மகனின் வாழ்க்கையில் தொலைந்து போன வசந்தம் மீண்டும் வந்துசேரும் என நம்பியிருந்த அவன் அப்பா அவளது முடிவைக் கண்டு வேதனையடைகிறார்.அவன் துளசியை மணக்கமாட்டேன் என இவ்வளவு தீவிரமாக இருக்கிறான் என்றால் அவன் மனதில் என்ன விசயம் இருக்கிறது என கண்டுபிடி என்கிறார்.வீட்டுப் பணியாள் மூலம் அவன் தினமும் ஒரு மாளிகைக்குச் செல்வதாக அறிந்து ஒருநாள் அவனைப் பின்தொடர்கிறாள்.அம்மாளிகையில் பாட்டுச் சத்தம் கேட்க,ஒரு பெண்ணின் புகைப்படம் மாலை போடப்பட்டு இருப்பதைக் காண்கிறாள்.அவன் தன் கதையை அவனிடம் சொல்கிறான்.பின்னோக்கி நகரும் உத்தியில் கதை பயணிக்க தொடங்குகிறது.

   தன் தந்தை விரிவுரையாளராக இருக்கும் இசைக்கல்லூரியில் இறுதியாண்டு மாணவனாக பயிலும் சுப்ரமணி ஒருநாள் கல்லூரிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும்போது எதிரில் படிகளில் இறங்கி கொண்டிருந்த ஒரு முகமதியப் பெண்ணின் மேல் மோதிவிடுகிறான்.அவளுடைய புத்தகங்கள் சிதறி விழவே,எடுத்துக் கொடுப்பதற்காக நிமிர்கிறான்.அப்போது பர்தாவினுள் மூடப்பட்டிருக்கும் முகத்தில் சுற்றிச் சுழலும் அழகிய கண்கள் அவனை மயக்குகின்றன.அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அவள் (அமலா) பெயர் நூர்ஜஹான் என அறிகிறான்.

   அந்தப் பெண் அவன் சிந்தையில் நுழைந்து அவனைப் பாடாய்ப்படுத்துகிறாள்.அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கிறான்.அவன் நண்பர்களும் அவள் முகத்தைப் பார்த்ததில்லை என்கிறார்கள்.மறுநாள் இயற்கையான சூழலில் வகுப்புக்கு வெளியே பாடம் நடக்கும்போது நூர்ஜஹானை பாடச்சொல்லி அவனை வயலின் வாசிக்கவைக்கிறார்.அப்போது அவளது குரலைக் கேட்டு மயங்குகிறான்.அவனது தேடல் அதிகரிக்கிறது.எப்படியாவது அவளது முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என அவன் துடித்த வேளையில்,வாசனைத் திரவியத்தை முகர்ந்து பார்ப்பதற்காக நூர்ஜஹான் பர்தாவை விலக்கியபோது பார்த்துவிடும் அவன் நண்பர்கள் சுப்ரமணியிடம் அந்தப் பெண் வெகு அழகாக இருக்கிறாள் எனவும்,அவனுக்குதான் அவள் பொருத்தமாய் இருப்பாள் எனவும் கூற,அவன் தன் நண்பனின் மாமாவின் உதவியுடன் கல்லூரி நுழைவு பாரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அவளது புகைப்படத்தைக் கொண்டு அவள் முகம் எப்படி இருக்கும் என பார்க்க முயற்சிக்கிறான்.அப்போது அங்கு வரும் நூர்ஜஹான் வெடுக்கென அந்தக் கோப்பைப் பறித்துக்கொண்டு,”என் முகத்தைப் பார்க்கறதுக்காக நீங்க செய்யற இந்தக் காரியம் உங்களுக்கே அநாகரீகமா தெரியலையா?” என கேட்கிறாள்.அவன் மன்னிப்பு கேட்டுவிட்டு நகர்கிறான்.

  வீட்டில் நூர்ஜஹான் அந்தச் சம்பவத்தையே நினைத்துப் பார்த்து மகிழ்கிறாள்.

 என்கிட்ட கேட்டிருந்தா நானே என் படத்தைக் கொடுத்திருப்பேனே?முதன்முதலா உங்க மேல மோதினபோதே நான் என் மனசை உங்ககிட்ட பறி கொடுத்துட்டேனே?ஆனா நமம் காதல் வித்தியாசமா இருக்கனும்,என் முகத்தைப் பார்க்காமல் என் மனசைப் புரிஞ்சுக்கனும் முதலில் என தன் மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறாள்.

  மறுநாள் வகுப்பில் தன் பக்கத்தில் அவள் இல்லாதது கண்டு தவிக்கிறான்.அப்போது அவனுடைய விரிவுரையாளர் அவனிடம் ஒரு பாடலைப் பாட சொல்கிறார்.அவன் பாடமுடியாமல் தவிக்கிறான்.அப்போது சற்று தூரத்தில் நூர்ஜஹான் நடந்து வருவதைப் பார்த்ததும்,”வா வெண்ணிலா,உன்னைத்தானே வானம் தேடுதே என பாட ஆரம்பிக்கிறான்.

   முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

    திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

 

   என தன் எண்ணத்தை அந்தப் பாடலின் மூலம் வெளிப்படுத்த அவள் அதை நினைத்து நினைத்து மகிழ்கிறாள்.அவளின் தந்தை ஹிந்தி பண்டிதர் என அறிந்ததும் அவன் அவள் வீட்டுக்கு ஹிந்தி கற்கும் சாக்கில் போகிறான்.வழியில் குதிரையில் வந்த அவளிடமே வழி கேட்கிறான்.அவளுக்கு அந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கிறது.

  ஒருநாள் தன் தோழியைப் பார்ப்பதற்காக அவள் வீடு செல்லும் வேளையில் கனத்த மழை பெய்கிறது.தோழியும் வீட்டைப் பூட்டிவிட்டு எங்கோ போய்விடவே,நூர்ஜஹான் மழையில் திரும்பி நடக்கிறாள்.அவன் தன் காரில் ஏறிக்கொள்ள சொல்லியும் அவள் மறுத்துவிட்டு நடந்து போக,அவனும் தன் காரை நிறுத்திவிட்டு மழையில் நனைந்தவாறு நடக்கிறான்.வீட்டில் அவள் அவன் தனக்காக மழையில் நனைந்ததை எண்ணி எண்ணி இன்புறுகிறாள்.அவள் நேசம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

   அன்று மழையில் நனைந்ததால் அவனுக்கு ஜூரம் ஏற்படுகிறது.மருத்துவமனையில் இருக்கும் அவனைப் போய் பார்க்கவில்லையே என தோழிகள் கடிந்து கொண்டிருக்கும்போது எதிரில் அவன் வருவதைப் பார்த்ததும் தோழிகளிடம் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு அவன் அருகில் செல்கிறாள்.அவனிடம் பேச வாய் எடுக்கும்போது பாடல் பாடியபடி மழலைப் பட்டாளம் அவர்களைக் கடந்து போகிறது.கொஞ்சம் சோகத்துடன் அவன் நிற்க,மனம் முழுக்க ஏக்கத்தைச் சுமந்துகொண்டு,அதை வெளிப்படுத்தாமல் அவளும் மௌனமாக நிற்கும் காட்சி மிக அழகானது.

  இப்போ பரவாலிங்களா?” என அவள் கேட்க,”நல்லா இருக்கு என பதிலளிக்கிறான்.அதன்பிறகு இருவரிடத்திலும் பேச வார்த்தைகள் இல்லை.திரும்பி எதிரெதிர் திசையில் நடக்கிறார்கள்.கொஞ்சம் தூரம் போனதும் இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்க்கிறார்கள்.இருவர் மனதிலும் ஒருவர் மீதான ஏக்கம் அதிகரிக்கிறது.அப்போதுதான் சுப்ரமணியின் நண்பனின் நிச்சயதார்த்தம் நடக்கிறது.அந்த வீட்டில் காப்பி வழங்கப்பட,சுப்ரமணி வாயில் கப்பை வைக்கும்போது பக்கத்து வீட்டு பிறந்தநாள் விழாவில் ஒரு பெண் பாடும் குரல் கேட்கிறது.தன் நேசத்திற்குரிய பெண்ணின் குரலாக இருக்கிறதே என சந்தேகத்தோடு அவன் தன் நண்பனிடம் கேட்க,வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே,” என்ற பாடல் ஒலிக்கிறது.ஆவலோடு விரைந்து எழுந்து பக்கத்து வீட்டை நோக்கிப் போகிறான்.அங்கு அந்த விழாவில் பாடிக்கொண்டிருந்த நூர்ஜஹான் இவனைப் பார்த்ததும் உடனே துப்பட்டாவை எடுத்து முகத்தை மறைத்து கட்டிக்கொள்கிறாள்.

  முகம் பார்க்க நீயும் முடியாமல் நானும்

  திரைபோட்டு என்னை மறைத்தேனே நாளும்

  என அவன் பாடிய பாடலையே அவள் தன் நிலையில் இருந்து பாடுகிறாள்.தான் பாடிய பாடலைப் பாடி தனக்கும் அவன் மீது ஆசை இருப்பதை உணர்த்திவிட்ட பிறகும் அவள் தனது முகத்தைப் பார்க்கவிடவில்லையே என வருந்துகிறான்.அவன் நண்பர்கள் கூறிய ஆலோசனையின்பேரில் அந்தப் பிறந்தநாள் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த கடைக்குச் சென்று அந்த ஒளிநாடாவைக் கேட்கிறான்.அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.அந்த ஒளிநாடாவை நூர்ஜஹான் வாங்கி கொண்டு சென்றுவிட்டதாக கடைக்காரன் சொல்கிறான்.அவனால் இதற்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியும் என தோன்றவில்லை.நேரடியாக அவளைச் சந்திக்கிறான்.அப்போது இருவருக்குமிடையில் நிகழும் உரையாடல் வெகு ரசனையானதாக இருக்கும்.

     நூரி,நான் பாடுன அதே பாட்டை நீ பாடினப்போ நான் எவ்வளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா?உன் மனசுல எனக்கு இடம் இருக்கறதையும் நான் புரிஞ்சுக்கிட்டேன்,உன் மனசைப் புரிஞ்சிக்கிட்ட நான் உன் முகத்தை எப்ப பார்க்கறது?

   பார்க்கலாம்

எப்போ?”

நேரம் வரும்போது

அந்த நேரம் எப்போ வரும்?”

சீக்கிரமா

சீக்கிரமான்னா?”

அதான் சொன்னேனே சீக்கிரமான்னு

அதான் கேட்கிறேனே எப்போனு?”

நாளைக்கு காலையில ஏழு மணிக்கு போர்ட் ஹௌஸ்கிட்ட உங்களுக்காக காத்துக்கிட்டிருப்பேன்.இதுவரை என் முகத்தைப் பார்க்காத நீங்க நாளைக்கு நிச்சயமா பார்க்கலாம்,நான் வரேன்

 

நூரி,நாளைக்கு எனக்காக காத்துக்கிட்டு இருக்கற நீ நான் ஆசைப்பட்டு வாங்கின இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு வந்தீன்னா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்

நூரி,நாளைக்குக் காலையில உன்னைச் சந்திக்கறவரைக்கும் உன்னையே நெனச்சிக்கிட்டு இருக்கறமாதிரி ஏதாவது சொல்லேன்

ஐ லைக் யூ,ஐ ஆல்வேஸ் ட்ரீம் அபௌட் யூ,ஐ வாண்ட் டு பீ வித் யூ,ஐ காண்ட் லீவ் வித் அவுட் யூ,மோஸ்ட் ஆப் ஆல் ஐ லவ் யூ

 

   வீட்டுக்குப் போன நூர்ஜஹான் அவன் வாங்கி தந்த சேலையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்து மகிழ்கிறாள்.அங்கே அவனும் அவள் சொன்ன வார்த்தைகளை நினைத்துப்பார்த்துக்கொண்டே ஏக்கத்தோடு படுத்திருக்கிறான்.

   மறுநாள் அவன் சற்று சீக்கிரமாகவே அந்த இடத்திற்கு வந்துவிடுகிறான்.நூர்ஜஹான் அந்த இடத்தை அழகாக அலங்கரித்து வைத்திருக்கிறாள்.நூர்ஜஹான் உங்களை வரவேற்கிறாள் என்ற வாசகத்தோடு பூக்களால் அழகான கோலம் போட்டு வைக்கிறாள்.

   அவன் அவள் பெயரை உரக்க அழைக்கிறான்.உன் முகத்தைக் காட்டாமல் இன்னுமா ஏமாத்தற ?”என்கிறான்.நான் ஏழு மணிக்குதானே வர சொன்னேன்?உங்களை யாரு சீக்கிரமா வர சொன்னது?”என்கிறாள்.உன் முகத்தைப் பார்க்கனும்னு ஆசையில ராத்திரியெல்லாம் நான் தூங்கவே இல்லை என்கிறான்.நீங்க என்ன சொன்னாலும் சரி,ஏழு மணிக்குதான் என்னைப் பார்க்க முடியும் என்கிறான்.அப்போது ஒலிக்கிறது இந்தப் பாடல்.

  இந்தப் பாடல் காட்சியில் அமலா வெகு அழகாக இருப்பார்.சேலை,வளையல்,மல்லிகை என அம்சமாக இருக்கும் அவரது பொன்னிறமேனியும்,இணைந்திருக்கும் புருவங்களும்,அழகான முகமும் அந்தக் காலத்தில் எத்தனை இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தனவோ?அமலா இறந்துவிடுவார் என்பது ஆரம்பத்திலேயே நமக்குத் தெரிந்துவிடும் என்பதால் இந்தப் பாடலைக் கேட்கும்போதே மனம் பதற ஆரம்பிக்கும்.

     பொறுமை இல்லாத, ஆவலும்,ஏக்கமும் நிரம்பிய மோகனின் முகமும்,தன் அன்பிற்கினியவனுக்குத் தன் முகத்தைக் காட்டும் நேரம் நெருங்கிவிட்டதை எண்ணி பூரிப்பில் இருக்கும் அமலாவின் சிரித்த முகமும் இந்தப் பாடலைப் போன்றே நம் மனதில் தங்கிவிடுகிறது.இந்த அழகான பாடலில்,ஆபத்தையும் காட்டும் இசை கலந்து ஒலித்தாலும் பாடலோடு பொருந்தியே வருவது சிறப்பு.எஸ்.பி.பாலா ஐயாவின் ஏக்கம் வழிந்தோடும் தேன் குரலும்,ஜானகியம்மாவின் சமாதானப்படுத்தும் குரலும் இந்தப் பாடலை இவர்களைவிடவும் வேறு யாரேனும் சிறப்பாக பாடிவிடமுடியுமா என யோசிக்கவைக்கிறது.இப்பாடலை எழுதியவர் வாலி.

   அவ்வளவு நாள் காத்திருந்தவனுக்கு இன்னும் சில மணித்துளிகள் காக்க பொறுமை இல்லையாம்.தேடித்தேடி பார்த்து அவன் கால்களும் ஓய்ந்துவிட்டதாம்.சொன்ன வார்த்தை காற்றில் போய்விடுமோ என அவன் தடுமாற,அவனைச் சமாதானப்படுத்தி,இனி நாம் இணைந்து வாழப்போகிறோம் என பெண்ணவள் அவனைச் சமாதானப்படுத்த ம்ம் தேடலின் தருணங்களையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தும் இப்பாடலை இரசிக்காமல் இருக்கமுடியுமா?

      தமிழ்ப்பள்ளியில் தனது கல்வியை ஆரம்பித்து,இடைநிலைப்பள்ளியிலும்தொடர்ந்து,பல்கலைக்கழகத்திலும் தமிழ்மொழி இலக்கணத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று,இன்று உத்துசான் மலேசியா நிறுவனத்தில் (மலாய் மொழி)நிருபராக பணிபுரிபவர் பினாங்கைச் சேர்ந்த திரு குமாரா சபாபதி.தமிழ் படிப்பவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்லர் எனும் கருத்தை மெய்ப்பித்துக் காட்டிய அண்ணன் குமாரா சபாபதிக்கும் இன்று பிறந்தநாள்.இவர் எண்பதாம் ஆண்டு பாடல்களின் பரம இரசிகர்.

   இவ்வேளையில் எனக்குள் தேடலின் சுகத்தையும்,ஏக்கத்தையும் உணரவைக்கும் என் அன்பிற்கினியவனுக்கும்,அண்ணன் குமாரா சபாபதிக்கும்,மற்றும் எங்களோடு இணைந்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்காகவும் இந்தப் பாடல் வரிகள் சமர்ப்பணம்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

 

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமாகுமோ?

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

 

 

காணவேண்டும் சீக்கிரம்

என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம்

நம் சொந்தம் அல்லவா?

கண்ணாளனே நல்வாழ்த்துகள்

என் பாட்டில் சொல்லவா?

கனிவாய் மலரே

உயிர் வாடும்போது ஊடல் என்ன

பாவமல்லவா?

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

 

தேடித்தேடி பார்க்கிறேன்

என் கால்கள் ஓய்ந்ததே

வாராமலே இவ்வேளையில்

என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ

உன் காதல் உள்ளமே

நீ காணலாம் இந்நாளிலே

என் மேனி வண்ணமே

பிரிந்தோம் இணைவோம்

இனி நீயும் நானும் வாழவேண்டும்

வாசல் தேடி வா

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ

வெறும் மாயமாகுமோ?

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க