Saturday, August 31, 2013

சிறுகதை : அம்மாவின் சமையலறை பறவைகளின் சரணாலயம்


  சிறுகதை : அம்மாவின் சமையலறை பறவைகளின் சரணாலயம்
 
  
 பண்டைக்காலத்தில் பறவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம்.தங்கள் இனத்தவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை தங்கள் அரசனான கழுகாரை கடவுளிடம் அனுப்பி முறையிட வைத்தனவாம்.கழுகாரின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட கடவுள் மறுநாள் காலையில் அனைத்துப் பறவைகளையும் ஓரிடத்தில் கூடியிருக்க சொல்லி தேவதைகளிடம் வண்ணம் கொடுத்து அனுப்பினாராம்.முதலில் வந்து சேர்ந்த கிளிக்கூட்டத்திற்கு தேவதைகள் பச்சை,மஞ்சள்,நீலம்,சிவப்பு என பல வண்ணங்களைப் பூசினவாம்.கடலில் மீன் பிடிக்க சென்ற கொக்குகள் தாமதமாக வந்து சேர்ந்ததால் வண்ணம் தீர்ந்து போய்,அதனால்தான் அவை இன்றுவரையில் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றனவாம்.

    தண்ணீர் குடிக்க போனபோது சமையலறை சாளரத்தின் பின்னால் தரையில் கூட்டமாய் அமர்ந்து அம்மா போட்டிருந்த சோற்றைத் தின்றுகொண்டிருந்த புறா கூட்டத்தைப் பார்க்கையில் அவளுக்குச் சிறுவயதில் படித்த அந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது.

   தமிழ்ப்பள்ளி நூலகத்தில் சற்றே பழுப்பேறிய நிறத்திலிருந்த கதைக்களஞ்சியம் தொகுப்பில் அந்தக் கதையைப் படித்ததிலிருந்துதான் அவளுக்குப் பறவைகளின் மேல் ஈர்ப்பு உண்டானது.அதிலும் முதன்முதலில் வந்து சேர்ந்து நிறைய வண்ணங்களை வாங்கிக்கொண்ட பஞ்சவர்ணக்கிளிகளின் மீது கொள்ளை ஆசை உண்டானது.

  மாலை வேளையில் கீச் கீச் என கத்திக்கொண்டே வானில் பறந்து போகும் கிளிக்கூட்டங்களைப் பார்க்கையில் அவளுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும்.அவற்றை அருகில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு மட்டும் அவளுக்கு வாய்த்ததேயில்லை.மைனா போன்ற சில பறவைகள் வீட்டுப் பின்புறத்தில் அடிக்கடி உலாவியவண்ணம் இருக்கும்.அம்மா அவ்வப்போது அரிசி,சோறு போன்றவற்றைப் போட்டதால் அவை பசிக்கும்போதெல்லாம் சமையலறையை நோக்கி வரும்.ஆனால் கிளிகள் மட்டும் வந்ததேயில்லை.அவள் பார்க்கும்போதெல்லாம் உயரமாக பறந்து கொண்டேதான் இருந்தன அவை.அப்படியே ஒரு சில வேளைகளில் வந்தாலும் வீட்டின் பின்னால் துணிகளைக் காயப்போடும் கம்பிகளின் மீது அமர்ந்து எங்கிருந்தோ கொண்டு வந்திருந்த பழத்தைக் கொறித்துவிட்டு அவர்களின் வீட்டை எட்டிப் பாராமலேயே ஓடிவிடும்.


    கிளிகள் அதிக திமிர் பிடித்தவையோ என்ற எண்ணம் எழுந்தவேளையில் மீண்டும் கதைக்களஞ்சியம் தொகுப்பில் கிளி பிரதான பாத்திரமாக இருந்த ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது.கிளிகளின் மேல் எழுந்த எதிர்மறையான பிம்பம் கலைந்துபோய் மீண்டும் அவளுக்குக் கிளிகளின் மீது ஈர்ப்பு உண்டானது.அந்தக் கதையில் வந்த கிளியின் பெயர் பூஜினி.அந்தப் பாத்திரம் வெகுவாய்க் கவர்ந்ததால் அந்தப் பெயரும் அவள் நெஞ்சில் ஆழமாய்ப் பதிந்து போனது.அந்தப் பன்னிரண்டு வயதில் அவள் அதிகம் விரும்பும் பஞ்சவர்ணக்கிளி ஒன்று பூஜினி என்ற பெயரில் தன் வீட்டில் வளர்வதாய் கற்பனையில் நினைத்து இன்புற்றிருந்தவேளையில் அவளின் வீடு தேடி வந்து சேர்ந்தது தூக்கணாங்குருவி ஒன்று.

  யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் காரணமாக மதிய வகுப்பு நடக்கும் வேளையில் அவளது ஆண் நண்பர்கள் தமிழ்ப்பள்ளியின் எதிர்ப்புறம் இருந்த காட்டுக்குள் கொய்யாப்பழம் பறிக்கப்போவார்கள்.அப்படி ஒருநாள் காட்டுக்குள் தூக்கனாங்குருவியின் கூட்டைக் கண்டு அதிசயித்ததோடு கையோடு அதைத் தூக்கிக்கொண்டும் வந்துவிட்டார்கள்.அவளின் வகுப்பாசிரியை அவர்களைத் திட்டிவிட்டு அந்தக் கூட்டை எடுத்துப் பார்க்கையில் உள்ளே குஞ்சுப்பறவை ஒன்று இருந்தது.ஆங்காங்கே கொஞ்சம் முடியோடு,அவள் நெற்றிப்பொட்டை ஒத்த கருப்பு நிற கண்களோடு,இறக்கை கூட இன்னும் சரியாக முளைக்காத நிலையில் இருந்த அந்தப் குஞ்சுப்பறவையைப் பார்த்தபோது அவளுக்கு கீழ் லயத்திலிருந்த ஒரு வீட்டில் பார்த்து பிரமித்த ஒரு பெண் சிசுவின் தெய்வீகத்தன்மை நிறைந்த பிம்பம் நினைவுக்கு வந்துபோனது.அந்தப் பறவைக்குஞ்சை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சவேண்டும் போல் இருந்தது.

  இதை மறுபடியும் அவங்க அம்மாக்கிட்ட சேர்க்கமுடியாதே?யார் வீட்டுலயாவது குருவிங்க வளர்க்கறாங்களா?” ஆசிரியை மோகனஜோதி கேட்டபோது நான்கைந்து மாணவர்கள் கையைத் தூக்கினார்கள்.அவளுக்கு இதைவிட்டால் வேறொரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது என தோன்றியதால்,”எங்க அம்மாவுக்கு குருவிங்கள வளர்க்க தெரியும் ஐயை,” ஏதோ ஒரு நம்பிக்கையில் முதல்தடவையாய் ஆசிரியையிடம் பொய் சொன்னாள்.


     ஆசிரியை மோகனஜோதி அந்தப் பறவைக் குஞ்சை  தன் சுடிதார் துப்பட்டாவில் சுற்றி அவளிடம் கொடுத்தனுப்பினார்.வரும்வழியில் எங்கே அம்மா மறுத்துவிடுவாளோ என்ற பயம் எழவே செய்தது.ஆனால் அவள் அம்மாவோ ஆவல் பொங்க வாங்கி ஒரு கூடையில் போட்டு மூடினாள்.வீட்டிலிருந்த நொய் அரிசியை வாயில் போட்டு நொறுக்கி எடுத்து அந்தக் குஞ்சுக்கு ஊட்டினாள்.தண்ணீரை விரலில் தொட்டு அதன் வாயில் சொட்டு சொட்டாக விட்டாள்.பின்னர் விரைவாக உடைமாற்றி,மூன்று மணி பேருந்தில் பட்டணத்திற்குக் கிளம்பி போனவள் ஒரு புதிய வெள்ளை நிறக் கூண்டும்,இரு சிறிய குடுவைகளும்,பறவைகளுக்குப் போடவேண்டிய தீவனமும் வாங்கி வந்தாள்.

   சமையலறையைத் தாண்டி,அவர்களின் வீட்டுக்குள் வந்து சேர்ந்த முதல் பறவை தூக்கனாங்குருவிதான் என்றபோதிலும் கிளிகளின் மேல் இருந்த ஈர்ப்பின் காரணமாக அந்தப் பறவைக்கு பூஜினி என்ற பெயரைச் சூட்டினாள்.பூஜினி அவர்களின் வீட்டில் செல்லப்பெண்ணாய் வளர்ந்தது.தினமும் அதை அருகில் வேடிக்கை பார்ப்பது அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது.பள்ளியில் கூட பூஜினியின் நினைவாகவே இருந்தது.சக மாணவர்கள் அவள் வீட்டில் பறவையொன்று வளர்வதை ஆச்சரியமாக பார்த்தபோது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.வெறும் கபில நிறத்தில் மட்டுமே இருந்த பூஜினி தானே விரும்பிதான் அந்த வண்ணத்தைப் பெற்றிருக்குமோ அல்லது வரிசையில் கடைசியாய் நின்றதால் அந்த வண்ணம் கிடைத்ததோ என்று யோசித்தாள்.ஏனோ கதையில் சொல்லப்பட்டது போல் தேவதைகள் பூசிய வண்ணங்கள்தான் பறவைகளில் உடலில் நிலைத்திருக்கின்றன என அந்த வயதில் அவள் அதிகம் நம்பினாள்.கிளிகள்தான் பறவை இனத்தில் உயர்ந்தவை என்ற அவளின் எண்ணத்தைத் தன் சேட்டைகளால் உடைத்து எறிந்தது பூஜினி.

   திடீரென ஒரு புதிய குரல் சமையலறையின் பின்னால் கேட்கவே அவள் மனம் பூஜினியின் நினைவுகளிலிருந்து மீண்டது.இவ்வளவு இனிமையாய்க் கொஞ்சி கொஞ்சி பேசும் அந்தப் பறவை எப்படி இருக்கும் என பார்க்கும் ஆவலில் வெளியே எட்டிப் பார்த்தாள்.மஞ்சளும்,கபிலமும் கலந்த நிறத்தில் எப்போதோ சிறுவயதில் பார்த்த பறவையொன்று அங்கு அமர்ந்திருந்தது.

  ஏ மஞ்சள் அழகியே,நீதான் அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரியா?புதுசா வந்திருக்கியோ?”

  அது தேன்சிட்டு அத்திப்பூக்கள் தொடரைப் பார்த்து முடித்துவிட்டு வந்த அம்மா பக்கத்தில் வந்து நின்றவாறு சொன்னாள்.

 தேன்சிட்டு என்ற பெயரைக் கேட்டதும் அவளால் அந்தப் பறவையைத் தன் சிறுபிராயத்திலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.பூஜினிக்கு இரண்டு வயதானபோது ஒருநாள் அம்மா ரப்பர்க்காட்டில் கூட்டிலிருந்து விழுந்துவிட்டிருந்த ஒரு பறவையை எடுத்து வந்திருந்தாள்.வெகு அழகாய்,மிக இனிமையான குரலோடு இருந்த அந்தப் பறவையின் பெயர் தேன்சிட்டு என்றாள்.ஏனோ அந்தப் பறவையைக் காப்பாற்ற முடியவில்லை.மறுநாளே அது இறந்து போய்விட்டது.அம்மா நெடுநாள் அந்தத் தேன்சிட்டைப் பற்றி புலம்பியிருக்கிறாள்.

   அம்மாவுக்குதான் பறவைகளின் மீது எவ்வளவு பாசம்?எங்கே எந்தப் பறவை காயப்பட்டு விழுந்து கிடந்தாலும் உடனே வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவாள்.உரோமமே இன்றி வழவழப்பாக இருந்த பறவைகள் முதல் கண்கள் திறக்காத நிலையில் மரத்திலிருந்து விழுந்துவிட்ட கச்சான் குருவிகள் வரையில் எல்லாவற்றையும் காப்பாற்றி வளர்த்திருக்கிறாள்.கொஞ்சம் கூட சங்கோஜப்படாமல் சில பறவைகளுக்கு அதன் தாய்ப்பறவை போன்றே தன் வாயில் தீனியை வைத்துக்கொண்டு அவற்றின் அலகை தன் வாயில் நுழைத்து தீனி ஊட்டியிருக்கிறாள்.அம்மாவால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் முடிகிறது என அவள் வியந்து பார்த்ததுண்டு.

  
பூஜினிக்குப் பிறகு அம்மா கச்சான் குருவி,மைனா,மாடப்புறா போன்ற பலவித பறவைகளையும் வளர்த்துவிட்டாள்.கச்சான் குருவிகளுக்கு தன் மூன்று பிள்ளைகளின் பெயரைச் சூட்டி அழைத்தாள்.மைனாவுக்கு மணி என்ற பெயர்.புறாவுக்கு மீண்டும் பூஜினி என்ற பெயர்.அவளைப் பொறுத்தவரையில் பறவைகளும் குழந்தைகளே.அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாய் நினைத்துக்கொண்டாள்.

  ஒருமுறை பறவைகள் கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடி வருகையில் பறந்து வந்த பருந்து ஒன்று ஒரு சிட்டுக்குருவியைப் பிடித்ததைப் பார்த்த அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது.அறியாமையினால் அந்தப் பருந்தைப் பிடித்து அதன் இறக்கைகளின் நுனியை இலேசாக வெட்டிவிட்டாள்.பாவம் பறவைகளைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆதங்கத்தில் அந்தப் பருந்து இனி எப்படி பறந்து போய் இரை தேடும் என்பதை யோசிக்கவேயில்லை அவள்.சில வாரங்கள் கழித்து அவளுக்கு இடது கையில் கட்டி வந்து மருத்துவமனைக்கும்,வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தவேளையில் அந்தப் பருந்தின் இறக்கைகளை வெட்டியதால் ஏற்பட்ட வினை அது என நம்பினாள்.சாமி கும்பிடும்போது அந்தப் பருந்திடம் மனதார மன்னிப்பு கேட்டாள்.அதன்பின்னர் பறவைகளின் மீதான அவளுடைய கரிசனம் மேலும் அதிகரித்தது.

       அம்மா தன் படுக்கை அறையில்தான் பறவைகளைக் கூண்டில் வைத்திருந்தாள்.அறைக்கு மேலே நாலா பக்கமும் சிறுசிறு ஓட்டைகளைக் கொண்ட கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன.அம்மா அந்த ஓட்டைகளில் குறுக்கே ஒரு நீண்ட கழியை மாட்டி பறவைகளை அதில் மாட்டி வைத்திருந்தாள்.வீட்டுக்குள்ளும் சிட்டுக்குருவிகள் நிறைய வந்து போன வண்ணம் இருந்தன.அவை சுவரில் அசிங்கம் செய்துவிட்டும் போயிருந்தன.வாரந்தோறும் தண்ணீர் கொண்டு துடைத்தாலும் அவை மீண்டும் மீண்டும் அசிங்கம் செய்து கொண்டே இருந்தன.ஒருமுறை வீட்டுக்கு வந்து போன அத்தை வீட்டினுள் பறவைகளை வளர்ப்பதால் நோய் வரும் என்றாள்.பறவைகளின் எச்சம் பார்ப்பதற்கு அருவருப்பை தருகிறது என்றும் சாடினாள்.

  பதின்ம வயதில் இருந்த அவளுக்கு அத்தை தன் மகன்களின் முன்னிலையில் அப்படி சொன்னதும் அவமானமாகிவிட்டது.முதல் முறையாய் சிட்டுக்குருவிகளின் மேல் அவளுக்குக் கோபம் வந்தது.ஆனால் அம்மாவோ தன் முடிவில் உறுதியாய் இருந்தாள்.அத்தை இனி வீட்டுக்கு வராமலேயே போனாலும் பிரச்சனை இல்லை என தொடர்ந்து பறவைகளை வீட்டில் வைத்து வளர்த்தாள்.

   கொஞ்ச நேரம் இங்கேயே இரு,பூனை ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கு,அன்னைக்கே ஒரு சிட்டுக்குருவியைப் பிடிச்சிக்கிட்டு போயிடுச்சி அம்மாவின் குரல் இரண்டாவது முறையாக அவள் நினைவுகளைக் கலைத்தது.அவளுக்கோ அந்தப் பூனையின் மீது குற்றம் சொல்ல தோன்றவேயில்லை.

  நான் எப்படிம்மா பூனையைத் திட்டறது?நான் சின்ன சின்ன குருவியைதானே பிடிச்சிட்டுப் போறேன்,நீங்க அவ்வளோ பெரிய கோழியை வாங்கிட்டு வந்து கறி வெச்சி சாப்பிடறீங்களே?” என அந்தப் பூனை வாயிருந்தா நம்மளைக் கேட்காதாம்மா?” இளையவள் கேள்வியால் மடக்க, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.இதழோரம் சிறு புன்னகை பூக்க,தலையை ஆட்டிகொண்டே வரவேற்பறையை நோக்கிப் போனாள்.

   அம்மா போனதும் அவள் சமையலறையின் சாளரத்தை அகலமாக திறந்து வைத்தாள்.கருமை நிறத்திலிருந்த மைனா ஒன்று தன் காவி நிற வாயைத் திறந்தவாறு அவளை நெருங்கி வந்து நின்றது.உப்பு ரொட்டி ஒன்றைக் கொண்டுவந்து போட்டதும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொறித்து தின்ன ஆரம்பித்தது.அவளுக்கு மணியின் ஞாபகம் வந்தது.

  மணி இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர்களின் வீட்டில் வளர்ந்த மைனாவின் பெயர்.காவி நிறத்தில் பெரிய வாயைக் கொண்டிருக்கும் மைனாக்கள் ஊசிமிளகாயை வாயில் வைத்தால் மனிதர்களைப் போல் பேசும் என யாரோ சொல்லி வைக்க,அவளது பாட்டி மறுநாளே ஊசிமிளகாயை இரண்டாக பிளந்து அதன் வாயில் வைத்துவிட்டாள்.சாப்பிடுவதற்கு ஏதோ நீண்ட பழம் கொடுக்கிறார்கள் என்ற ஆவலில் பெரிதாய் வாயை திறந்த மணி அதன் பிறகு தன் வாயை மூடவேயில்லை.அம்மா வந்து பார்த்துவிட்டு பாட்டியிடம் சத்தம் போட்டுவிட்டு அந்த மிளகாயை அதன் வாயிலிருந்து எடுத்தாள்.அதன் பின்னரும் கூட இரண்டொரு தினங்களுக்கு மணி தன் வாயைப் பெரிதாக திறந்து வைத்துக்கொண்டேதான் இருந்தது.ஆனால் சில நாள்கள் கழித்து ஓரிரு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தது.பாட்டிக்கோ தான் ஊசிமிளகாயைக் கொடுத்ததால்தான் அது பேச ஆரம்பித்தது என்ற பெருமிதம் தாங்கவில்லை.

   மணி அவளின் வீட்டில் வளர்ந்த பறவைகளிலேயே மிக வித்தியாசமாக,அறிவாளியாக இருந்தது.அது இருந்த அறைக்குள் ஒரு குடுவையில் அம்மா உப்புரொட்டி போட்டு வைத்திருந்தார்.மணிக்கு உப்பு ரொட்டி என்றால் அதிக விருப்பம்.அறைக்குள் யார் நுழைந்து குடுவையைத் திறந்தாலும் மணிக்குத் தெரிந்துவிடும்.உடனே வாயைத் திறந்து கொண்டு கத்தும்.உப்பு ரொட்டி கொடுத்தால்தான் அமைதியாகும்.மனிதர்களைப் போல் ரொட்டி சாப்பிடுவதோடு அம்மா,பாட்டி என அழைக்கவும் கற்றுக்கொண்டுவிட்டது.சத்தத்தைக் கிரகித்து,உள்வாங்கி கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்த அது வீட்டினுள் ஒலித்த சத்தத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டது,அலாரம் அடிப்பதையும்,தொலைபேசி மணி ஒலிப்பதையும் உள்வாங்கி கொண்டு சில தினங்களில் அதே மாதிரி ஒலியை எழுப்பியது.

   அவள் வீட்டில் பிரத்தியேக வகுப்பு நடத்திக்கொண்டிருந்த சமயம் பிள்ளைகள் படிக்கும்போது உச்சரித்த எஃப் என்ற ஆங்கில எழுத்தை மட்டும் மனனம் செய்துகொண்டு விட்டது.பிள்ளைகள் படிக்கும்போது அது அடிக்கடி எஃப் என சொல்லிப்பார்த்தது.பிள்ளைகள் அதைக் கண்டு சிரிப்பை அடக்கமாட்டாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டனர்.பாட்டி’,’அம்மா’,ஹலோ என்ற வார்த்தையோடு போடா என திட்டவும்,’போடிபோடிபோடி என இடைவிடாது கத்தவும் கற்றுக்கொண்டு விட்டது.

   மணி அந்த வீட்டில் சுதந்திரமாய் பறந்து திரிந்தது.சொந்தமாய்க் கூண்டைத் திறந்து வெளியில் வந்து வீடு முழுக்க சுற்றிவிட்டு பின்னர் தானே சென்று கூண்டிற்குள் படுத்துவிடும் மணியை வீட்டில் எல்லாருக்கும் பிடித்துப் போனது.தங்கை புவனாவை அப்பா அழைப்பதுபோன்று போனா என தடித்த குரலில் ஒருநாள் தலைமாட்டில் அமர்ந்து எழுப்பியபோது அப்பாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

  ஒரு தடவை அம்மா ஈப்போவுக்கு தன் உறவினரின் திருமணத்துக்குப் போய் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டபோது மணி ஏங்கிப்போனது.மா மா என கத்தியவாறு அம்மாவின் அறை முழுக்க பறந்து கொண்டிருந்தது.சிறுவயதிலிருந்து வளர்த்ததாலோ என்னவோ அம்மாவை அது தன் அம்மாவாகவே எண்ணிக்கொண்டது போலும்.தன் கடைசிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது கூட அது அம்மாவைதான் தேடியது.மா மா என கத்திக்கொண்டே இருந்தது.

   வீடு முழுக்க வளைய வந்த மணி உடல்நலம் குன்றி தன் கூண்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தபோது வீடே வெறிச்சோடி போனது.அது முன்போல் பேசாமலிருந்தது.அடிக்கடி கூண்டுக்குள் மல்லாந்து விழ ஆரம்பித்தது.அதன் கால்களில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.அம்மா தினமும் பிரான்ச் ஆயில் எண்ணெய்யை அதன் காலில் தடவி வந்தார்.அப்போது கூட உப்பு ரொட்டியை எடுத்துக்கொடுத்தால் ஆவலோடு வாங்கி கொள்ளும்.கொஞ்சமாய் கடித்துவிட்டு போட்டு வைத்திருக்கும்.

    அப்படிதான் ஒருநாள் இரவெல்லாம் அம்மா,மா என கத்திக்கொண்டே இருந்துவிட்டு மறுநாள் கூண்டுக்குள் எட்டிப் பார்த்தபோது உப்பு ரொட்டி ஒருபுறம் சதுரவடிவில் கிடக்க,மணி அதன் அருகில் மல்லாந்து படுத்த நிலையில் தன் கால்களைப் பரப்பியபடி சலனமின்றி இறந்து கிடந்தபோது வேதனையைத் தாளமுடியவில்லை யாராலும்.கண்களில் குளம் கட்டி நின்ற கண்ணீரைத் துடைத்துவிட்டு மணியை வாரி எடுத்த அம்மா ஒருகணம் திறந்த நிலையில் இருந்த அதன் அலகை எடுத்து தன் கன்னத்தில் வைத்து கொஞ்சினாள்.பின்னர் வீட்டின் பின்னால் முருங்கை மரத்தினருகே குழி தோண்டி புதைத்துவிட்டு அந்த இடத்தில் ஒரு துண்டு உப்பு ரொட்டியை வைத்தாள்.தினமும் மணியைப் புதைத்த இடத்தில் ஒரு துண்டு உப்பு ரொட்டியை வைக்க தவறவில்லை அம்மா.தன்னை அம்மா என அழைத்து வளர்ந்த மணியின் மரணம் தந்த பாதிப்பால் இனி எந்தப் பறவையையும் வளர்க்கப்போவதில்லை என சொல்லிவிட்டாள்.சொன்னபடியே அதன்பிறகு எந்தப் பறவையையும் அவள் வளர்க்கவில்லை.மறுவருடமே பட்டணத்திற்கும் குடிபெயர்ந்து விட்டபிறகு மணியைப் பற்றிய பேச்சை அம்மா எடுக்கவேயில்லை.

       ஆனால் அம்மாவுக்கும்,பறவைகளுக்கும் இடையிலான பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.அம்மா இருக்கும் சமையலறையைத் தேடி புறாக்கள்,காக்கைகள்,மைனாக்கள்,சிட்டுக்குருவிகள் ஆகியவை தினமும் வந்து போய்க்கொண்டுதான் இருந்தன.பசி வரும் வேளையில் அம்மாவைத் தேடி வந்தால் நிச்சயம் உணவு கிடைக்கும் என்பது அந்தப் பறவைகளுக்கும் தெரிந்திருக்கிறது போலும்.

  பறவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கத்த ஆரம்பித்ததில் மீண்டும் அவள் சிந்தை கலைந்தது.சத்தம் வந்த திசையை நோக்கினாள்.சாளரத்தின் வெளியே அந்த மைனா கீழே விழுந்து கிடந்தது.அப்போதுதான் அதன் காலில் காயம் பட்டிருந்ததைக் கவனித்தாள்.அதற்குள் அம்மா ஓடி வந்துவிட்டாள்.


 மணி! என கத்தியவாறு சமையலறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்,அந்த மைனாவைத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள் தாய்மை உணர்வு பொங்கிய முகத்தோடு அவளைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள்.அம்மா மீண்டும் வீட்டில் பறவைகளை வளர்க்க தயாராகிவிட்டாள் என்பதை அந்தப் புன்முறுவல் உணர்த்தியது.


                                                                      உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்.
 

Saturday, August 17, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 15: வான்மேங்களே


       வான்மேகங்களே வாழ்த்துங்கள் (புதிய வார்ப்புகள் 1979)
 
 
 
 
 
 
     தமிழ்த்திரையிசையுலகில் எண்பதாம் ஆண்டு காலக்கட்டம் ஒரு பொற்காலம் என்பதை யாராலும் மறுத்துப் பேசமுடியாது.ஹிந்திப் பாடல்களையே பெருமளவில் விரும்பி கேட்டுக்கொண்டிருந்தவர்களை தமிழ்ப்பாடல்களைத் திரும்பி பார்க்கவைத்த காலம் அது.இளையராஜா எனும் அற்புத கலைஞரை நமக்குக் கொடுத்த காலம் அது.அந்தக் காலக்கட்டத்தில் வெளியான பாடல்களை இன்று கேட்டாலும் நம் இதயத்தினுள் இதமான ஓர் உணர்வை உணர முடிகிறது.

  அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வந்து கொண்டிருக்கும் போதிலும் எழுபதாம் கடைசியில் தொடங்கி தொன்னூறாம் ஆரம்ப காலக்கட்டம் வரையில் வெளிவந்த பாடல்களே என்றும் சாகாவரம் பெற்றவையாக மக்களால் போற்றப்படுவதற்கு அந்தக் காலக்கட்டம் தந்த இனிமையான சூழல் என்பதை என் பார்வையில் உணர்கிறேன்.

  ஆம் மலேசியாவில் தோட்டப்புற வாழ்க்கை இனிமையாக இனித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.இணையம்,அஸ்ட்ரோ என வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் இசை ஒன்றுதான் மக்களைப் பெரிதும் மகிழ்விக்கும் அம்சமாக இருந்தது.என் அம்மா உள்பட மூத்த தலைமுறையினரை கேட்டால் அந்தக் காலத்து இனிமை இப்போது இல்லை என்பார்கள்.

  தோட்டப்புற வாழ்க்கையின் இனிமையோடு பெரிதும் ஒன்றி போயிருந்ததால்தான் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பாடல்கள் பலரின் மனதில் இன்றும் நிரந்தரமாய் தங்கியிருக்கின்றன.

  என்னைக் கேட்டால் என் வாழ்வில் வசந்தகாலம் நான் பட்டுப்பூச்சியாய் பறந்து திரிந்த தொன்னூறாம் ஆண்டு காலக்கட்டம்தான் என்பேன்.தோட்டப்புற வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்ததால்தான் என்னால் எதனையும் இரசனையோடு அணுக முடிகிறது என நம்புகிறேன்.அதிலும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற அந்தக் காலக்கட்டம் இருக்கிறதே.வாழ்வின் வசந்த காலங்கள் அவை.தினம் கூவும் குயில்,பூமரங்கள்,கோயில், ஆகியவற்றோடு பள்ளிக்குப் பணியாற்ற வந்திருக்கும் ஆண் ஆசிரியர்கள் வரையில் எல்லாமும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை.என் பார்வையில் அந்தத் தோட்டப்புற வாழ்க்கையின் இனிமையோடு அதிகம் பொருந்தி போன ஒரு படம்தான் புதிய வார்ப்புகள்’.

  1979- ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் பாக்யராஜ் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம் இது.அவரே வசனம் எழுதியுள்ள இப்படத்தில் ரதி நாயகியாக நடித்திருந்தார்.கிராமத்தின் அழகிய சூழலை இப்படத்தில் கண்டு இரசிக்கலாம்.

  இளையராஜா ஐயாவின் இசையில் நம்தன நம்தன,வான்மேகங்களே,இதயம் போகுதே ஆகிய திகட்டாத கானங்கள் இடம்பெற்றிருந்தன.

  பள்ளிப் பருவத்தில் புதிதாய்,இளம் ஆண் ஆசிரியரைக் கண்டபோது மனம் குறுகுறுத்ததுண்டு எனக்கு.தோட்டத்தில் பெரும்பாலோர் சாதாரண அரைக்கால் சட்டை,வேலை உடை என இருக்கையில் முழுக்கை சட்டை,நீள காற்சட்டை,கழுத்துப் பட்டை,கடிகாரம் அணிந்து கம்பீரமாய் வந்து நின்ற ஆண் ஆசிரியர்கள் விபரம் புரியாத அந்த வயதில் எனக்குள் சிறு சலனத்தை ஏற்படுத்தியதுண்டு.ஏனோ அவர்கள் ஏசிவிட்டால் மட்டும் என்னால் தாங்கி கொள்ளவே இயலாது;தேம்பி தேம்பி அழுதுவிடுவேன்.கனவில் கூட அவர்களைக் கண்டு ஏங்கியதுண்டு.அத்தகைய ஈர்ப்பு பெரும்பாலும் எல்லா பால்ய வயது பெண்களுக்கும் இருந்திருக்கும்.அப்போது பதின்ம வயதில் இருந்த மூத்த பெண்கள் கூட பள்ளிக்கு வந்திருந்த ஆண் ஆசிரியர்களை மறைந்து பார்த்து இரசித்ததுண்டு.இப்படத்தை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது எனக்கு அந்த ஞாபகம்தான் வந்தது.கண்டிப்பாக இப்படம் வெளிவந்த அந்தக் காலக்கட்டத்தில் எத்தனை பெண்கள் படம் தந்த பாதிப்பில் தோட்டத்துப் பள்ளியில் இருந்த ஆண் ஆசிரியர்களின் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார்கள்?நிஜத்தில் தோட்டப்புறத்துப் பெண்களுக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் படத்தில் வந்ததுபோல் சுகமான காதல் எல்லாம் இருந்திருக்கும் எனவும் என் மனம் எண்ணிப் பார்த்தது.இனி இப்படத்தின் சுகமான காட்சிகளை கொஞ்சம் மீட்டுணர்ந்து வருவோமா?

     கிராமத்துப் பள்ளிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்த வாலிபன் ஒருவனுக்கும்,கிராமத்து அழகுப்பெண் ஒருத்திக்கும் இடையிலான காதலைச் சொன்ன படம் இது.

    புத்தகத்தில் மூழ்கியபடி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சண்முகமணி(பாக்யராஜ்) என்ற வாலிபன் ஒருவன் தன்னை மறந்து தாயமங்கலம் கிராமத்தைத் தாண்டி விடுகிறான்.வேறொரு கிராமத்தில் இறங்கி நடந்து போகும்போது வழித்துணையாக சமூகநல சேவகியோடு இணைந்து நடக்கிறான்.அவனை அதிசயமாய் பார்க்கும் கிராமத்து சிறுவர்கள் அவன் புதிதாய் வந்திருக்கும் ஆசிரியர் என அறிந்ததும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

  கோயில் தலைவர் அவனை வரவேற்று அவனைப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதைக் காட்டிலும் நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுப்பதே முக்கியமானது என்கிறார்.அவனும் தலையாட்டுகிறான்.

   அப்பள்ளியின் பெண் ஆசிரியை ஒருவருக்கு  மாணவர்கள் சக்கரவள்ளிக் கிழங்கு,கத்தரிக்காய் என தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையெல்லாம் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.இன்னொரு ஆசிரியையோ தன் கைக்குழந்தையையும் வகுப்பறையில் தொட்டில் கட்டி தூங்கவைத்துவிட்டு பாடம் நடத்துகிறார்.அந்தத் தொட்டிலை ஆட்டுவதற்கு ஒரு மாணவியை வேறு நியமித்திருக்கிறார்.அப்போது சண்முகமணி வெகு ஆர்வமாக சத்தம் போட்டு ஆத்திசூடி சொல்லிக்கொடுக்க,பக்கத்து வகுப்பு ஆசிரியை வந்து சத்தம் போடுகிறார்.இங்கே பக்கத்துல நாங்களும் இருக்கோம்,கொஞ்சம் ஞாபகத்துல வெச்சிக்குங்க,” என்கிறார்.அவருக்கு பயந்து சண்முகமணியும் சன்னமான குரலில் அறம் செய விரும்பு,ஆறுவது சினம் என பாடம் நடத்துகிறான்.

  ஒருநாள் சண்முகமணி ஆற்றங்கரைக்குச் சென்றபோது அவனிடம் படிக்கும் துரைசாமியின் அக்கா ஜோதி(ரதி) ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க வருகிறாள்.அப்போது அவளது இடுப்பிலிருந்த குடம் நழுவி உருண்டோட அவன் அதை கையில் எடுக்கிறான்.அவனைப் பார்த்ததும் அவளுக்குத் தன் தம்பி அவன் ஒரு பெண் ஆசிரியைக்குப் பயந்து கிசுகிசுப்பாக ஆத்திசூடி சொல்லித் தந்தது பற்றி சொன்னது நினைவுக்கு வர,சிரிப்பு வருகிறது.அவன் குடத்தை வைத்துவிட்டு நகர்ந்ததும் ஓடிப்போய் எடுக்கிறாள்.

 மறுநாள் அவள் கோயிலில் நவக்கிரகத்தைச் சுற்றிவிட்டு மரத்தடி பிள்ளையாருக்குச் சூட்டுவதற்காக பூ பறிக்க எத்தனிக்கையில் சண்முகமணி அங்கு அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறாள்.அவன் குனிந்த தலையோடு புத்தகத்தில் மூழ்கியிருக்க அவள் வேண்டுமென்றே கோயில் மணியைச் சத்தமாக ஒலித்துவிட்டு இறைவனை வணங்கிவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வருகிறாள்.அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கும் அவன் வேண்டுமென்றே அவளை அழைப்பதுபோல் கைகளை பலமாக தட்டுகிறான்.அவள் திரும்பி பார்த்ததும் ஒன்றுமே தெரியாததுபோல் சாமி கும்பிட ஆரம்பிக்கிறான்.அவள் அவனை தூணின் பின்னால் இருந்து திருட்டுத்தனமாக நோக்க,அவனும் அவளை நோக்குகிறான்.

  அடுத்த சந்திப்பில் ஆற்றின் குறுக்கே இருக்கும் மரத்தண்டு பாலத்தில் ஜோதி நடந்துவர,எதிரே அவனும் நடந்து வருகிறான்.ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் அவள் அவனை வழிவிடுமாறு கேட்கிறாள்.அவன் முரண்டு பிடிக்கிறா.தான் முக்கால்வாசி வந்துவிட்டதாகவும்,இடுப்பில் குடம் வேறு சுமந்து வருவதாகவும் சொல்கிறாள்.தனக்கு முன்வைத்த காலை பின் வைத்து பழக்கமில்லை என அவனும் அவளைச் சீண்டுகிறான்.மவளும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.உடனே அவன் தன் கையிலிருந்த கதைப்புத்தகத்திலிருந்து சில வரிகளைச் சத்தமாக படிக்கிறான்.

  நேரம் ஆக ஆக இருட்டிக்கொண்டே வந்தது என அவன் கதையை ஒருமாதிரி வாசிக்க,அவள் கோபமாகிறாள்.ஒரு பந்தயம் வைக்கலாம்,தோற்றுப்போனால் அவன் வழிவிடவேண்டும் என்கிறாள்.என்ன பந்தயம் என அவன் கேட்க,தான் சொல்வதைத் திருப்பி சொல்லவேண்டுமென சொல்கிறாள்.

  இவ்வளவுதானே?” என அலட்சியமாய் சொல்கிறான்.

  இது யார் தெச்ச சட்டை?இது தாத்தா தெச்ச சட்டை என்ற வரிகளைச் சொல்ல சொல்கிறாள்.அவன் சரியாக சொல்ல,வேகமாக மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும் என்கிறாள்.வேகமாய்ச் சொல்லும்போது அவன் உளறிவிட இருவரும் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரிக்கிறார்கள்.அப்போது கால் வழுக்கி விழப்போன அவள் மரத்தின் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் ஊசலாட,அவன் சட்டென்று அவளைத் தாங்கிப்பிடிக்கிறான்.அந்த முதல் ஸ்பரிஷம் இருவரையுமே தடுமாற வைக்கிறது.அவள் மிக அருகிலிருக்கும் அவன் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள்.இருவருக்குள்ளும் ஈர்ப்பு உண்டாகிறது.

  மறுநாள் காலையில் ஜோதியின் தம்பி பள்ளிக்கு நேரமாகிவிட்டது என புலம்புகிறான்.ஜோதி விறகு அடுப்போடு போராடி அவனுக்கு தோசை வார்த்து கொடுக்கிறாள்.சாப்பிட்டு முடித்த அவன் பள்ளிக்குப் போக தயங்குகிறான்.ஸ்கூலுக்கு மட்டம் போட திட்டம் போடறியா?” என அவள் அவனைத் திட்ட,அவன் புது வாத்தியாரு ரொம்ப கண்டிப்பானவரு,லேட்டா போனா திட்டுவாரு என அழுகிறான்.அவளை உடன் வந்து பள்ளியில் விட்டுவிட்டு போக சொல்கிறான்.தனக்குப் பிடித்தமானவனைப் பார்க்க அவளுக்கு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாளா?ஆவலோடு கிளம்புகிறாள்.அவன் வகுப்பில் நுழையும்போது தூண் ஓரமாய் ஒளிந்து நிற்கிறாள்.

ஏண்டா லேட்டு?” என ஆசிரியர் கேட்டதுமே அவன் அக்கா என அலறுகிறான்.

வந்ததே லேட்டு,இதுல சிபாரிசு வேறா?” என திட்டுகிறான்.

பிள்ளைங்களுக்கு அடிச்சி சொல்லிக்கொடுக்கக்கூடாது,அணைச்சி சொல்லிக்கொடுக்கனும்னு சொல்லு,” என்கிறாள்.அவன் புன்னகை பூக்கிறான்.

லேட்டா வந்ததுக்கு சரியான காரணத்தைச் சொல்லு என அவளைப் பார்த்தபடி அவனிடம் சொல்கிறான் சண்முகமணி.

வீட்ல இருக்கற ஈர அடுப்புக்கு அது தெரியலையே,” என்கிறாள்.அவன் எழுந்து அவள் பக்கம் நெருங்கி வருகிறான்.அப்போது நகர்ந்த அவள் தலை பள்ளிக்கூடத்து மணியில் இடித்துக்கொள்ள,” இது ஒன்னும் கோயில் மணி இல்லை,ஸ்கூல் மணி என்கிறான்.அவள் சிரித்துக்கொண்டே அங்கு இருந்து ஓடிவிடுகிறாள்.

  அதன்பின்னர் ஒருநாள் கோயிலில் அவன் படித்துக்கொண்டிருக்கும்போது பிள்ளைகள் சத்தம் போட்டுக்கொண்டிருக்க அவன் தன்னையறியாது சைலண்ட் என்கிறான்.

  இது ஒன்னும் பள்ளிக்கூடம் இல்ல,கோயில் என்கிறாள் பதிலுக்கு.அப்போது இதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

  பாடலின் ஆரம்ப இசையே மனதைத் தூண்டில் போட்டு இழுக்க ஆரம்பித்துவிடுகிறது.இசை,வரிகள்,மலேசிய வாசுதேவனின் குரல் எல்லாமே அற்புத கலவையாய் இருக்கிறது இப்பாடலில்.

 இப்பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகு அருமை.ரதி இது கோயிலு,பள்ளிக்கூடம் இல்லை என சொல்லிவிட்டு பார்க்கும்போது இப்பாடலின் ஆரம்ப இசை ஒலிக்க,பாக்யராஜ் அவரைப் பார்த்து மென்மையாக புன்னகைப்பார்.பள்ளியிலேயே தங்கிவிடும் பாக்யராஜ் சுகமாக பாய்,தலையணையில் படுத்து உறங்கி,கனவு காண்பதாய் இப்பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.சூரிய ஒளி இலைகளின் நடுவே காட்சி தருவதை அழகாய்ப் படம் பிடித்திருப்பார்கள்.பெண்ணவள் கோயில் மணியை ஒலித்து பாடலைப் பாட ஆரம்பிக்க,அவன் கைத்தட்டி அழைத்து பாடுவதாய் தொடங்கும் இப்பாடல்.சலசலத்து ஓடும் ஆற்று நீர்,இயற்கையாக தோற்றமளிக்கும் சூரியகாந்தி பூக்கள்,அடிவானம்,பச்சைப் பசேலென்ற புல்வெளி, அனைத்தும் அற்புதமாக அமைந்திருக்கும்.கோயிலில் மாலை கட்டி சூடுவேன் கண்ணா என அவள் பாடும்போது அவன் அவளை இறுக்கி அணைக்க,கிறங்கிப்போகும் அவள் குயிலோசை கேட்டதும் கண் மலர்த்தி பார்க்கும்போது மரக்கிளையில் குயில் தெரியும்.உடனே அவளும் கூ குக்குக்கூ என ஓசை எழுப்பிவிட்டு குயில் தங்களை வாழ்த்திப் பாடுவதாய் சொல்வாள்.பாடலின் ஊடே பள்ளி மணி ஒலிக்கப்பட்ட,சுகந்தமான கனவில் அது தன் மனம் கவர்ந்தவள் எழுப்பும் கோயில் மணி என்ற சுகமான கற்பனையில் அவன் தொடர்ந்து கனவில் மூழ்குகிறான்.அப்போது பள்ளி மாணவர்கள் கூட்டமாய் பாடம் படிக்க ஓடிவர,ரதியும் வெள்ளைச் சீருடை,சிவப்புப் பாவாடை அணிந்து ஒரு காலை மடக்கி உட்கார,அவன் ஆசிரியர் தோரணையில் பிரம்பு,கரும்பலகை சகிதம் அமர்ந்திருக்க,அமர்ந்து பார்க்க,பிள்ளைகள் அவளைத் தனித்துவிட்டு மறைந்துவிட,பள்ளியில் அவன் பாடல் சொல்வதைக் கேட்டு தான் ஆசை கொண்டதாக அவள் பாடுமிடம் அறிவார்த்தமான கற்பனையின் வெளிப்பாடு.அந்தக் காட்சியில் ரதி நடுவகிடு எடுத்து வழித்து சீவிய தலை,கனகாம்பரமும் மல்லிகையும் சேர்த்த பூச்சரம்,சிவப்பு வளையல்கள்,ஜிமிக்கி,பொட்டு என குடும்பப்பாங்காய் அழகாக இருப்பார்.பாடல் முடியும்போதே பள்ளிக்கு வந்துவிடும் பிள்ளைகள் ஆசிரியர் புன்னகை முகத்தோடு சுகமாய் தூங்கி கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.கனவு காணும்போது நிஜத்தில் நடப்பவையும் கனவில் சேர்ந்து வரும் இல்லையா?அதை அழகாக இப்பாடல் காட்சியில் கையாண்டிருக்கிறார் பாரதிராஜா.ஆரம்பம் முதல் இறுதிவரையில் இரசிக்கக்கூடிய வகையில் இப்பாடலின் இசையை வழங்கியிருக்கிறார் இளையராஜா.ரதிக்கும்,பாக்யராஜ்க்கும் இடையில் ஒலிக்கும் அந்தலாலலலலா லாலாலலா என்ற இசையே போதுமே.அவர் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் பாக்யராஜ் போன்றவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு நான் இசையமைக்க வேண்டியிருக்கிறது,” என தமாஷாக சொன்னதாகவும்,பின்னர் அவரின் திறமையைப் பார்த்து தான் சொன்ன அந்த வார்த்தைக்காக வருந்தியதாகவும் சொல்லியிருந்தார்.

 இந்த தேகம் மறைந்தாலும்

 இசையாய் மலர்வேன்

    என எஸ்.பி.பாலா ஐயா பாடிய வரிகள் நம் மலேசிய வாசுதேவன் ஐயாவுக்கும் பொருந்தும்.(இப்பாடல் கூட முதலில் எஸ்.பி.பாலா ஐயா பாடவேண்டிய பாடல்தான்.)அவரின் தேகம் மறைந்தாலும் குரல் மட்டும் காற்றில் கலந்து இது போன்ற இனிக்கும் கீதமாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

    உடன் இணைந்து பாடிய ஜானகியம்மாளையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.ஏக்கம்,கிறக்கம்,நேசம் அனைத்தையும் சரிவிகிதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.இப்பாடலை எழுதியவர் யார் என அறியமுடியவில்லை.

  அன்பிற்கினியவனுக்கும்,தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் என்னால் மறக்கவே முடியாத ஆண் ஆசிரியர்களுக்கும் இப்பாடல் வரிகள்.

 

பெண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்

        நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை

        வான்மேகங்களே...

ஆண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்

       நான் இன்று கண்டுகொண்டேன் சீதையை

       வான்மேகங்களே....

 

பெண் : பாலிலே பழம் விழுந்து

        தேனிலே நனைந்ததம்மா

        பாலிலே பழம் விழுந்து

        தேனிலே நனைந்ததம்மா

        பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா..

        கூ குக்குக்கூ

        குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆண்  : வான்மேகங்களே வாழ்த்துங்கள்...பாடுங்கள்

 

ஆண் : தென்றலே ஆசை கொண்டு

       தோகையை கலந்ததம்மா

      தென்றலே ஆசை கொண்டு

       தோகையை கலந்ததம்மா

        தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே

        மா அம்மம்மா நெஞ்சில் தீபம் ஏற்றும்

        நேரம் கண்டேன்

பெண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள்..பாடுங்கள்..

 

பெண் : பள்ளியில் பாடம் சொல்லி

       கேட்க நான் ஆசை கொண்டேன்

       பாவையின் கோயில் மணி

       ஓசை நீ கண்ணே

       டா டண்டண்டா

       சங்கின் ஓசை கேட்கும்

       நேரம் என்றோ

ஆண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்

பெண் : நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை

        வான்மேகங்களே...