Friday, July 8, 2011

தொடர்கதை : உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 1

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 1
                                             
    மார்கழி மாதத்துக் குளிருக்கு இதமாய் இருந்த சூடான தேநீரை துளி கூட மீதம் வைக்காமல் குடித்து முடித்துவிட்டு எழுந்தான் கௌசிகன்,ஜேக்கெட்டை இழுத்து இன்னும் இறுக்கமாக அணிந்துகொண்டு காரை நோக்கி நடந்தான்.
      அவன் கூலிம் பட்டணத்தை அடைந்தபோது மணி ஆறு நாற்பத்தைந்தை நெருங்கி கொண்டிருந்தது.பணியை முடித்துக்கொண்டு புறப்பட தயாரான இரவும், பணியாற்ற வந்திருந்த பகலும் சங்கமித்துக்கொண்ட அந்த வைகறைப் பொழுதின் அழகை இரசித்தபடியே காரை வீட்டின் முன் நிறுத்தினான்.பளிச் பளிச் என மின்னிய காரின் விளக்கு வெளிச்சத்தைக் கண்ட ராமுலம்மாள் சுவரில் மாட்டி வைத்திருந்த சாவியை எடுத்துக் கொண்டு வந்தாள்.
    ஏன்மா நான் வரேன்னு தூங்காம முழிச்சிக்கிட்டு இருந்தீங்களா?” அம்மாவை செல்லமாக கடிந்துகொண்டே காரினுள் இருந்த பொருட்களை வீட்டினுள் கொண்டு போனான்.
    மேரிக்கு கிறிஸ்மஸ் பலகாரம் செய்யறதுக்கு உதவி செஞ்சேன்,அப்படியே மணியாயிடுச்சி,”என்றவாறு அவனைத் தொடர்ந்தாள் அவன் அம்மா.
    குளித்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்ட கௌசிகன் ராமுலம்மாவை அழைத்துக்கொண்டு பட்டணத்திற்கு கிளம்பினான்.இன்னும் இரண்டு நாளில் கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் அவனுடைய தம்பி மதிவதனனுக்கு இருபத்தோராவது  பிறந்தநாள்.அவனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகதான் கௌசிகன் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
   கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சமயமென்பதால் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.இறுதி நேர ஷாப்பிங்கில் திளைத்திருந்தார்கள் பலரும்.ராமுலம்மாள் வாங்க வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பட்டியலிட்டுக்கொண்டு வந்திருந்ததால் அவனுக்கும் சுலபமாக இருந்தது.மறக்காமல் மதிவதனனுக்குப் பிடித்த சிப்ஸ்மோர் பாக்கெட் ஒன்றையும் வாங்கி கொண்டாள்.எல்லா பொருட்களும் வாங்கி முடித்தாகிவிட்டது என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் காரை கிளப்பினான் கௌசிகன்.
   ஏன்மா,பூங்குழலி இன்னைக்குதானே வர்றதா சொன்னுச்சி?”                                                                             
   அவன் கேட்டபோதுதான் அவளுக்கும் பூங்குழலி மதியமே வந்துவிடுவதாக சொன்னது நினைவுக்கு வந்தது.இந்நேரம் எங்கு வந்து கொண்டிருக்கிறாளோ என்றெண்ணியவாறு காரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.            

**************

    விரைவு பேருந்தில் தலைசாய்த்து உட்கார்ந்திருந்த பூங்குழலியின் எண்ணங்களோ மூன்றாண்டுகளுக்கு முன் பின்னோக்கி இருந்தன.

* * * * *
         இரவு மணி பதினொன்றாகியிருந்தது.பெண்களுக்கான தங்கும் விடுதியில் குழுமியிருந்தார்கள் அந்த ஐந்து பெண்களும்.முதலாவதாக உட்கார்ந்திருந்தவள் பூங்குழலி.அந்த இளவட்டங்களுக்குத் தலைவியும் கூட.இருபத்தோரு வயது நிரம்பிய அழகுப்பெண்.வெண்ணெய் நிறம்,சீரான குட்டையான கூந்தல்,எண்பதுகளில் பிரபலமான நடிகை நதியாவின் முகச்சாயல் கொண்டவள்.கூரான மூக்கு, முத்து முத்தான பற்கள்,மெலிந்த உயரமான உடல் என்று பார்த்த மாத்திரத்தில் மனதைக் கௌவும் அழகுடையவள்.அப்படிப்பட்ட பேரழகி இன்னும் எந்த ஆணின் வலையிலும் விழாமலிருப்பதற்கான காரணத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.அடுத்ததாக அமர்ந்திருப்பவள் சோனியா.அவளுக்குக் கிரீம் வடியும் முகம்.யாராவது கேட்டால் எனக்குப் பால் வடியற முகம்லா,” என்று கிண்டலடிப்பாள்.மாநிறமாக இருந்தாலும் அழகாக இருப்பாள்.இருந்தாலும் அழகு சாதனப்பொருட்களைப் போட்டு தன்னை அழகுப்படுத்திக்கொள்வதில் அதிக பிரியம் அவளுக்கு.என்ன செய்வது? ஆனந்தைக் காதலிக்கிறாளே? மூன்றாவதாக தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பவள் கேரலின்.அவளுக்கு எல்லாமே அவளுடைய அம்மாதான்.நான்காவதாக எதையோ சிந்தித்துக் கொண்டே அமர்ந்திருப்பவள் சரளா.எப்படியாவது இளம் வயதிலேயே நாவல் எழுதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற இலட்சியத்தில் இரவுகளைக் குறுகலாக்கிக்கொண்டிருப்பவள்.அவளால்தான் அந்த சி புளோக் தங்கும் விடுதியில் மின்சார கட்டணம் எக்கச்சக்கமாக எகிறிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை இதுவரை வார்டனுக்குத் தெரியாததால் தப்பித்தாள்.இறுதியாக உட்கார்ந்திருப்பவள் கீதா.மாதக்கடைசியில் அவர்களுக்கு மேகி் சப்ளை செய்பவள்.
      ஓ.கே. வேலையை ஆரம்பிக்கலாம்,” பூங்குழலி உத்தரவு கொடுத்தவுடன் விளக்கெண்ணெய், முட்டை, மைலோ தூள், உப்பு ரொட்டி, கோதுமை மாவு என்று இன்னும் என்னென்னவெல்லாம் கலக்க முடியுமோ அதையெல்லாம் வாளியில் கொட்டி தண்ணீரில் கலந்தாள் சோனியா.கீதா வாளியைக் கொண்டு போய் ஹாஸ்;டல் அறையின் குளியலறையில் ஒளித்துவைத்தாள்.
    நள்ளிரவு பன்னிரண்டு மணியானதும் பூங்குழலி முகத்தை மிக இயல்பாக வைத்துக்கொண்டு நீலவேணியைத் தனக்குத் துணையாக குளியலறைக்கு அழைத்தாள்.தன்னுடைய பிறந்தநாளைக் கூட மறந்து போகும் அளவிற்குத் தூக்கக்கலக்கத்தில் இருந்த நீலாவும் அவளுடன் போனாள்.பாத்ரூமை அடைந்ததும் ஏற்கனவே அங்கு காத்திருந்த சரளாவும், கேரலினும் வாளியைத் தூக்கி அதிலுள்ள தண்ணீரை நீலாவின் தலையில் ஊற்ற, சோனியாவும், கீதாவும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாட, பூங்குழலி அவளைக் கட்டியணைத்து வாழ்த்து சொன்னாள்.
   பச்சை முட்டையின் வாடையைத் தாங்க முடியாமல் நீலா குளியறைக்குள் நுழைந்தாள்.அவள் குளித்ததும் மாற்றிக் கொள்வதற்கான உடைகளை கொண்டு வந்து கதவில் போட்டுவிட்டு அவளுடைய அறையில் கேக், இனிப்புகளோடு காத்திருந்தார்கள் அந்த ஐந்து பெண்களும்.குளிரில் நடுங்கியபடி வந்த நீலாவுக்குப் புடவை கட்டிவிட்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்து அலங்கோலம் பண்ணி அதை புகைப்படம் வேறு எடுத்தார்கள்.இவ்வளவு நடந்தும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்தாள் நீலா.என்ன செய்வது?அந்த இரண்டாவது மாடியில் அவள் மட்டும்தானே ஜூனியர்?
   ஏய், எல்லாம் சும்மா விளையாட்டுக்காகதான், என்று அவள் தலையைக் கோதியவாறு ஒரு கேக் துண்டை எடுத்து நீலாவுக்கு ஊட்டினாள் பூங்குழலி.
   மற்ற கல்லூரிகளைக் காட்டிலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் அதிகம்.இது மாதிரியான குறும்புகள் அந்தக் கட்டுப்பாடுகளினூடே ஒரு வித கலகலப்பையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என்பது நீலாவும் அறிந்ததே.அதனால் அவள் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.அவர்களின் ஆட்டம், பாட்டமெல்லாம் விடுதியின் நான்கு சுவர்களுக்குள் மட்டும்தான்.வெளியில் இருக்கும்போது அவர்களின் செயல்கள் அனைத்தும் ஆசிரியர்கள் என்ற பிரதிபலிப்பை ஏற்படுத்தும் விதத்தில்தான் நடந்து கொள்வார்கள்.
   அதற்கும் காரணம் இருந்தது,சுங்கைப் பட்டாணி சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிக இந்திய மாணவர்களைக் கொண்டுள்ள கல்லூரி.தமிழ்ப்பிரிவில் மட்டும் 180 மாணவர்கள் இருந்தனர்.மேலும் இவ்வருடம் ஏறக்குறைய 150 மாணவர்கள் வருவதாக இருந்தது.தமிழ்ப்பிரிவிற்கு எந்தவொரு கலங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்த்துறை விரிவுரைஞர்கள் மிக கவனமாக இருந்தார்கள்.அக்கட்டுப்பாடுகள் ஒரு சிலருக்கு அவசியமற்றதாக தோன்றினாலும் பூங்குழலியும், அவளது தோழிகளும் அவ்வாறு எண்ணியதில்லை,
   பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து எல்லாரும் படுக்கப் போனபோது நள்ளிரவு மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது,
    காலையில் அவளை சரளாதான் எழுப்பினாள்,தாமதமாக படுத்ததால் பூங்குழலியால் எழுந்திரிக்க முடியவில்லை,
    ஏய்  பூங்குழலி, இன்னைக்கு ஜுனியர்ஸ் எல்லாம் வர்றாங்க, மறந்துட்டியா?” சரளா கத்திவிட்டுப் போனதும் உடனே எழுந்துவிட்டாள்.ஜுனியர் மாணவர்களைக் காணப்போகும் ஆர்வம் அவளுக்கு நிறையவே இருந்தது.சுறுசுறுப்பாக குளித்துக் கிளம்பினாள்.


தொடரும் ………………
  




2 comments:

  1. கதையைக் கதாசிரியர் நகர்த்துவதால், கதாபாத்திரங்கள் இயல்பாகப் பேசும் இடங்களை மட்டும் தவிர்த்து மற்ற இடங்களில் கதாசிரியர் இயல் தமிழ் நடமாட்டத்துடன் எழுதினால் மிகச் சிறப்பாக இருக்குமே! இலக்கண நடை தேவையில்லை; ஆனால் வலிமிகு வலிமிகா இடங்களைச் சரிசெய்யலாம். இந்த வழூஉச் சொற்களை மாற்றலாம். இப்படியாக.... மற்றபடி மிக நன்று.

    ReplyDelete