Thursday, March 14, 2013

அந்திம பறவைகளின் சரணாலயம்

இது மனிதக் காட்சி சாலை
இங்கு சில மிருகங்கள் வந்து போவதுண்டு...



     படித்ததில் என்னைக் கவர்ந்த வரிகள் அவை.அந்திமத்தின் பிடியில் தளர்ந்து போய்,கவனிப்பாரற்று முதியோர் இல்லங்களில் தஞ்சமாகும் மூத்த தலைமுறையினரைப் பற்றிய வரிகள்.அவர்களை அங்கு விட்டுவிட்டு எப்போதாவது மட்டுமே வந்து பார்க்கும் பிள்ளைகளைத்தான் மிருகங்கள் என சுட்டியிருப்பதாக (என் பார்வையில்) உணர்கிறேன்.முதுமையில் தனித்து விடப்படுவது கொடுமை எனினும்,முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் கூட ஒருவகையில் கொடுத்து வைத்தவர்கள்தாம் என்பேன்.காரணம் அவர்கள் சரணடையவும் பாதுகாப்பாய் ஓர் இடம் கிடைத்திருக்கிறதே.அப்படி ஒரு முதியோர் காப்பகத்தில் இருக்கும் சில பெரியவர்களின் வெறுமையை எழுத வாய்ப்பு கிடைத்தமைக்காக மகிழ்கிறேன்.
  கிள்ளான்,ஜாலான் மேருவில் அமைந்திருக்கிறது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சரணாலயம்.ஒரு ஞாயிறுப்பொழுதில் தன்னந்தனியாக மகிழுந்தில் புறப்பட்டேன்.பாதை தவறி எங்கோ மாட்டிக்கொண்டுவிட்டேன்.எங்கு இருக்கிறேன் என்றே தெரியாத நிலையில் கண்கள் கலங்க ஆரம்பித்தன.நல்லது செய்யதானே வந்திருக்கிறேன்,ஏன் எனக்கு இவ்வளோ கஷ்டத்தைக் கொடுக்கிறே என்று ஆஞ்சநேயரிடம் கோபப்பட்டு,அப்பாவையும் வேண்டிக்கொண்டு ஏதோ ஒரு பாதையில் போகையில் ஒருவழியாக கிள்ளான் மாவட்ட கல்வி அலுவலகத்தின் முன் போய் சேர்ந்தேன்.அந்த முதியோர் இல்லத்தை எனக்கு அறிமுகப்படுத்திய திரு.கலாதரன் என்னை அங்கேயே இருக்கும்படி சொன்னார்.காரில் காத்திருந்தபோது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் எதார்த்தமாக அந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது.முழுநிர்வாணமாக ஓர் ஆடவன் பேருந்து நிறுத்தத்தின் நாற்காலியில் படுத்திருந்தான்.பயந்து போய்,மீண்டும் கண்கள் கலங்க,அப்பாவை நினைத்து பிரார்த்தனை செய்த சமயத்தில் கலாதரன் ஐயா என் கார் கண்ணாடியைத் தட்ட நிம்மதியானேன்.திரு.கலாதரன் என்னை அந்த முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு கிளம்பினார்.
  நண்பகல் ஒரு மணியை நெருங்கி கொண்டிருந்ததால் அந்த இல்லத்திலிருந்த பதினான்கு முதியவர்களும் சாப்பாட்டு மேசையில் தயாராய் அமர்ந்திருந்தார்கள்.நான் வந்தபின் பரிமாறலாம் என காத்திருந்ததாக இல்ல நிர்வாகி மோகன் அண்ணாவின் தாயார் திருமதி தாமரை தெரிவித்தார்.சோறு,கோழி கிச்சாப்,மீன் பொரியல்,முட்டைக்கோசு என்று சுவையாக சமைத்திருந்தார்.(என் அண்ணன் மகன் நவிந்திரனின் பிறந்தநாள் என்பதாலும்,வெறுமனே பேட்டிக்காக செல்வது மனிதத்தை மீறும் செயல் என நினைத்ததாலும் அண்ணன்,அண்ணியும்,நானும் சேர்ந்து உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.)ஒவ்வொருவருக்கும் ஏற்றமாதிரி உணவைத் தட்டில் போட்டுக் கொடுக்க,முனியாண்டி என்பவர் அனைவருக்கும் கொண்டு போய் கொடுத்தார்.கொடுங்கம்மா,நான் போயி கொடுக்கறேன்,” என நானும் ஒரு தட்டை வாங்கி கொண்டு போய் ஒரு பெரியவரின் அருகில் வைத்தபோது அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.அந்தச் சிரிப்பில் நான் சற்று முன் அனுபவித்த கஷ்டமெல்லாம் காணாமல் போய்விட்டிருந்தது.
  அங்கு இருந்தவர்களில் வயதில் மூத்தவர் இவர்தான் என ஒரு பாட்டியைக் காண்பித்தார் திருமதி.தாமரை.நானும் அந்தப் பாட்டியைப் (81வயது) பார்த்தேன்.அவருக்கு உணவு கொண்டு போய் வைத்ததும்,”சாமி கும்பிட்டுட்டுதான் சாப்பிடனும்,” என்று முணுமுணுத்துக்கொண்டார்.
  எல்லாருக்கும் உணவு பரிமாறப்பட்டதும் சாமி கும்பிட சொன்னார் திருமதி.தாமரை.எல்லாரும்  சத்தமாக எதையோ உச்சரித்தார்கள்.ஒரு வார்த்தை கூட விளங்கவில்லை எனக்கு.அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்.இல்ல நிர்வாகி திரு.மோகன் அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட்டதால் அவருடைய தாயார் திருமதி.தாமரையிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
 இன்னைக்கு வேற ஒருத்தவங்கதான் சாப்பாடு கொடுக்கறதா இருந்துச்சி,கடைசி நேரத்துல அவங்களோட உறவினர் இறந்துட்டதால கேன்சல் ஆகிடுச்சி,ஒருவேளை இன்னைக்கு உன் கையால இவங்களுக்கு சாப்பாடு கிடைக்கனும்னு கடவுள் நினைச்சிருக்காரு போல,” என்று சொல்லி ஆரம்பித்தார் அவர்.(எனக்கு உடனே என் முகநூல் நண்பர்களின் ஞாபகம்தான் வந்தது.ஒரு முக்கியமான நேர்காணலுக்குப் போகிறேன்,வாழ்த்தி,பிராத்தியுங்கள் என முகநூலில் இடுகையிட்டுவிட்டுதான் கிளம்பினேன் காரணம் எனக்குத் தனியாக போய் பழக்கமில்லாத இடம்.அவர்கள் எனக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள்.நான் கலாதரன் சாருக்காக காத்திருந்த வேளையில் என்னை அழைத்த நண்பர் சுதாகரன்,என் நிலையறிந்ததும்,நான் நல்லபடி போய்ச் சேர்ந்து அந்தப் பெரியவர்களுக்குச் செய்ய நினைத்ததைச் செய்யவேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்ததாக சொன்னார்.அவர்கள் எல்லாருமே தினக்குரல் வாசகர்கள்தாம்.)







உதயா: எப்படி உங்கள் மகன் மோகன் அண்ணாவுக்கு இப்படியொரு முதியோர் இல்லம் நடத்தனும் என்ற ஆர்வம் வந்ததுன்னு சொல்லுங்கம்மா.

தாமரை : என் மகன் பள்ளியில படிக்கும்போதே ரோட்டுல பிச்சைக்காரங்க,தனியா இருக்கற பெரியவங்களைப் பார்த்தால் ரொம்ப பரிதாபப்படுவாரு.நான் பெரிய ஆளா வந்தால்,இந்த மாதிரி யாரும் இல்லாதவங்களையெல்லாம் கவனிச்சுக்குவேன்,” என்று அடிக்கடி சொல்வாரு.ஏதோ பரிதாபத்துல பேசறாரு என்றுதான் நெனச்சேன்,ஆனால் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அதே மாதிரி செய்ய ஆரம்பிச்சிட்ட்டாரு.

உதயா: மகன் இந்த மாதிரி முன்பின் தெரியாத வயசானவங்களையெல்லாம் கொண்டு வந்து கவனிச்சிக்கறேன்னு சொல்லறாரே என்று எப்போதாவது வருத்தப்பட்டிருக்கீங்களா?

தாமரை : நிச்சயம இல்லம்மா,என் மூனு பிள்ளைங்க மோகன்,பிரகாஷ்,கேசவன் எல்லாருமே இங்க இவங்களோட தேவைகளைக் கவனிச்சுக்கறாங்க.என் பிள்ளைங்க நல்லதுதானே செய்யறாங்க என்று நானும் தடுக்கல.கடவுளுக்குப் பயந்து வாழறவங்க நிச்சயமா இந்த மாதிரி சேவை உணர்வையெல்லாம் தடுக்க மாட்டாங்கம்மா.

உதயா: மோகன் அண்ணாவுக்குத் திருமணம் ஆகிடுச்சி இல்லையா?எப்படி இப்போதும் தொடர்ந்து செய்ய முடியுது இந்த மாதிரி சேவையை?

தாமரை: என் மருமகளும் நல்லா புரிஞ்சி நடந்துக்கறவங்க.ஆரம்பத்துல நாங்க எல்லாருமே இங்கேயே இந்த வயதானவங்க கூடதான் இருந்தோம்.என் மருமகள்தான் சமைச்சிக் கொடுப்பாங்க.குழந்தை பிறந்த பிறகு, மாதந்தோறும் இங்க வந்து போகற சுகாதாரப் பிரிவு அதிகாரிங்கதான் இந்த மாதிரி நிறைய வயசானவங்க இருக்கற இடத்துல கைக்குழந்தையை எல்லாம் வெச்சிருக்கறது நல்லதில்ல,குழந்தைகளுக்கும் நோய் வர வாய்ப்புண்டு என்று சொன்னதால,அதன்பிறகுதான் மகன் பக்கத்துலயே,தனியா ஒரு வீட்டை வாங்கினாரு.

உதயா: உங்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்குதா மா?

தாமரை: செலவுகளை என் மகன் தன் சம்பாத்தியத்துலதான் பார்த்துக்கறாரு.சீனர்கள் அடிக்கடி கோழி இறைச்சி வாங்கி கொண்டுவந்து கொடுத்துட்டுப் போவாங்க.சில சமயங்களில் யாராவது சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துட்டுப் போவாங்க.எப்படியோ சமாளிக்க முடியுது.இந்த வீடுதான் கொஞ்சம் பிரச்சனையா இருக்குது.கோனர் வீட்டுக்குப் போங்கன்னு கொஞ்சம் நச்சரிப்பு இருக்குது.ஆனால் கண்டிப்பா இடம் விசயத்துல அரசாங்கத்தோட உதவி கிடைக்கும்.சொல்லியிருக்காங்க.

(பேச்சைக் கொஞ்சநேரம் நிறுத்திவிட்டு அந்த முதியவர்களைப் பார்வையிட்டேன்.உணவை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் சிலர்.ஒருவர் நாற்காலியில் வழுக்கிக்கொண்டே மேசைக்கடியில் போய்விட்டிருந்தார்,இன்னொருவர் இறைச்சியை மட்டும் சாப்பிட்டுவிட்டு,சோற்றைத் தள்ளிவிட்டிருந்தார்.ஒருவர் என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவர்களில் சிலருக்கு வயோதிகத்தின் காரணமாக மனநிலை சற்று பாதிப்புற்று இருப்பதாக திருமதி.தாமரை சொல்லியிருந்தார்.



உதயா: எப்படிம்மா,இவங்களைச் சமாளிக்கறீங்க?

தாமரை: கொஞ்சம் சேட்டை செய்வாங்கதான்,ஆனாலும் என்னால சகிச்சுக்க முடியுது.அவங்க என்னா சுயநினைவோட,வேனுமுன்னா அப்படி செய்யறாங்க என நினைச்சுக்குவேன்.சில நேரங்களில் சிரிப்பாவும் இருக்கும் அவங்களோடு.படம் பார்க்கறதுக்காக டீவி வாங்கி கொடுத்துருந்தாரு.அதைப் போட்டு உடைச்சிட்டாங்க.
(அவர்கள் போட்டிப்போட்டு தொலைக்காட்சியை உடைத்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்த எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.)

உதயா: அடுத்த முறை டீவியை கைக்கு எட்டாமல் உயரமா வெச்சிடுங்க.

தாமரை: (சிரிப்பு) அதைத்தான் செய்யனும்.சில நேரங்கள்ல இவங்க இந்தமாதிரி சேட்டை செய்யறதாலதான் பிள்ளைங்க பார்க்கமாட்டறாங்களோன்னு தோனுது,நீ என்னம்மா நினைக்கறே?

உதயா: எப்படி இருந்தாலும் பெத்தவங்கதானே?உடல்நலம் சரியில்லன்னா மருத்துவமனையில சேர்க்கலாம்,மனநிலை சரியில்லன்னா அதற்குன்னு இருக்கற மருத்துவமனையில சேர்க்கலாம்,எப்படி பார்த்துக்க முடியாதுன்னு சொல்லறதுக்கு மனசு வருது.சின்னப் பிள்ளையா இருக்கும்போது அந்தப் பிள்ளைங்களுக்கு எவ்வளவு வியாதி வந்தாலும்,சேட்டை செய்தாலும் இவங்க விட்டுடலையே?சரி அப்படியே கஷ்டமா இருக்குன்னு இங்கு கொண்டு வந்து விட்டாலும் அவங்க சார்பா ஏதும் உதவி செய்யறாங்களா?பணம் கொடுத்துட்டு,அடிக்கடி வந்து பார்த்துட்டாச்சும் போறாங்களா?

தாமரை: இல்லம்மா,கொண்டு வந்து விட்டதோட சரி.

(ஏனோ எனக்கு அந்தக் கணத்தில் என் அம்மாவை நினைத்துப் பெருமையாக இருந்தது.என் அம்மா பாட்டிக்கு எல்லாம் செய்து மிகவும் பொறுமையாக கவனித்துக்கொள்வார்;சுத்தமாக வைத்திருப்பார்.)

உதயா: தீபாவளியை இங்குள்ளவங்க எப்படிம்மா கொண்டாடுவாங்க?தீபாவளியை இன்னும் நினைவு வெச்சிருக்காங்களா?

தாமரை: ம்ம் எல்லாம் தெரியும்.தீபாவளிக்கு எல்லாரையும் உட்கார வெச்சி,தலைக்கு எண்ணெய்த் தேய்ச்சி விடுவோம்.நடக்க முடிஞ்சவங்களைப் பக்கத்துல இருக்கற கோயிலுக்கும் அழைச்சிட்டுப் போவோம்.சில சமயம் இங்க தாமான்ல இருக்கறவங்க அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி சாப்பாடு கொடுப்பாங்க.என் மகன் பட்டாசு எல்லாம் வாங்கிட்டு வந்து இங்கே வெடிப்பாரு.ரொம்ப சந்தோஷமா பார்ப்பாங்க.

உதயா: சரிங்கம்மா,நான் சில பேருக்கிட்ட தீபாவளி பத்தி கேக்கறேன்.

(உண்மையில் நான் முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரியவர்கள் தாங்கள் தங்கள் பிள்ளைகளோடு சந்தோசமாக கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையைப் பற்றி கேட்டு எழுதிவிட்டு,இப்போது அவர்களின் மனத்தில் இருக்கும் ஏக்கங்களையும் பதிவு செய்யலாம் என நினைத்துதான் வந்தேன்.ஆனால் அவர்களால் தங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தை முழுமையாய் நினைவு கூர்ந்து சொல்ல முடியவில்லை.நானும் துருவி துருவி கேட்கவில்லை.என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்த 71 வயது தாத்தா திரு கண்ணியப்பனை முதலில் கேட்டேன்.

உதயா: தாத்தா,நீங்க இளமையா இருந்தப்போ தீபாவளியை எப்படி கொண்டாடுவீங்க?

கண்ணியப்பன் : தீபாவளிக்கு நல்லா தண்ணி அடிச்சிட்டு,ஜாலியா ஆட்டம் போடுவேன்.(சிரிப்பு)

உதயா: அச்சச்சோ,தாத்தாவுக்கு ரொம்ப குறும்புதான்.வேற என்னா செய்வீங்க தாத்தா?

கண்ணியப்பன்: எனக்கு எம்.ஜி.ஆர் படங்கள்னா ரொம்ப பிடிக்கும் மா..தீபாவளிக்கு எம்.ஜி.ஆர் படங்கள் வந்தால் உடனே போயி பார்த்துடுவேன்.நாடோடி மன்னன் படம் ரொம்ப ரசிச்சிப் பார்த்த படம்.

(அப்போது அங்கிருந்த ஒரு பாட்டியைக் காண்பித்து,அவர் கண்ணியப்பன் தாத்தாவின் மனைவி என்று திருமதி தாமரை அறிமுகம் செய்தார்.கணவன்,மனைவி இருவரும் கவனிப்பாரற்று ஒரு மாட்டுக்கொட்டகையில் இருந்தார்களாம்.மோகன் அண்ணன் பத்திரிக்கை மூலம் அந்த விசயத்தை அறிந்ததும் இருவரையும் அழைத்துவந்து கவனித்துக்கொள்கிறாராம்.)

உதயா: வாங்க பாட்டி,வந்து தாத்தா பக்கத்துல உட்காருங்க,ரெண்டு பேரையும் சேர்த்து படம் பிடிக்கிறேன்.
 (வற்புறுத்தலுக்குப் பின் பாட்டி தாத்தாவுக்கு அதிக இடைவெளிவிட்டு அமர்ந்தார்.)

உதயா: அச்சச்சோ என்ன இது,பாட்டி இவ்வளவு வெட்கப்படறாங்க?ஏன் தாத்தா? ( உடனே கண்ணியப்பன் தாத்தா சற்று நகர்ந்து பாட்டியின் அருகில் நெருங்கி உட்கார்ந்தார்.அங்கிருந்த எல்லாருக்கும் சிரிப்பு.இருவரையும் சேர்த்து படம்பிடித்தபோது ஒருகணம் இருவரும் மாட்டுக்கொட்டகையில் ஒன்றாய் அமர்ந்திருப்பது போன்று ஒரு காட்சி மனத்துக்குள் படமாய் ஓடி மறைந்தது.அடுத்ததாய்  பெரியவர் ஒருவரை அணுகினேன்.
 உதயா: உங்க வயசு என்ன தாத்தா?

 கணேசன்: 56

 உதயா: அப்படின்னா நீங்க எனக்கு தாத்தா இல்லை,அப்பா.....சொல்லுங்க உங்களால் மறக்கமுடியாத தீபாவளி எது?

கணேசன்: அம்மா,அப்பா இறந்தபிறகு அக்காள் வீட்டுல கொண்டாடின தீபாவளிதான் என்னால மறக்க முடியாது.(அவர் மீண்டும் மீண்டும் அதையே சொன்னபோது குழந்தைத்தனம் வெளிப்பட்டது.அவருக்குத் திருமணமே ஆகவில்லையாம்.அதனால்தான் அவர் மனத்தில் இளம் வயதில் தன் அக்காள் வீட்டில் கொண்டாடியே தீபாவளியே பசுமையாய் நிற்கிறதென்பதை உணரமுடிந்தது.)

(அடுத்ததாய் என் கண்ணில் பட்ட திருமதி மாரியம்மாவிடம் அவர் வாய் பேச முடியாதவர் என்பது தெரியாமல் பெயரைக் கேட்டுவிட்டேன்.அவருக்குச் சற்று மனநிலை பாதிப்பும் இருந்ததால் என்னிடம் சைகை மூலம், தாளை கொடு,நான் எழுதறேன்,” என கேட்டுக்கொண்டே இருந்தார்.அதற்குள் திருமதி தாமரை அவரைத் தடுக்கவே,என் பார்வை அந்த 81 வயது பாட்டியின்பால் சென்றது.)

உதயா: உங்க பெயர் என்னா பாட்டி?
(பாட்டி தன் பெயரை இப்சி என்றார்.எனக்குச் சரியாக் விளங்கவில்லை என்றதும் ஆங்கில எழுத்துகளில் கூட்டிச்சொன்னார்.பாட்டி நன்கு படித்தவரோ என கேட்கவே,திருமதி தாமரை அந்தப் பாட்டி ஆசிரியையாக இருந்தவர் என்றார்.உடனே மரியாதையோடு அவர் அருகில் அமர்ந்தேன்.

 உதயா: எந்தப் பள்ளியில ஆசிரியரா இருந்தீங்க பாட்டி?
இப்சி பாட்டி :என் அப்பா திரு.அப்பாதுரை காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில ஆசிரியரா இருந்தவரு.நான் பூச்சோங் எஸ்டேட்டு பள்ளியில ஆசிரியரா இருந்தேன்.இருபத்தேழு வயசுல திடீருன்னு கண்பார்வை தெரியாமல் போயிடுச்சி.ஆப்பரேஷன் பண்ணியும் பார்வை வரலே.அதுக்கப்புறம் அம்மா,அப்பாதான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க.

(என்னை இப்சி பாட்டியின் கதைப் பெரிதும் பாதித்துவிட்டது.மழை,நிலா,வானவில்,செடிகொடிகள் என பலவற்றை இரசிக்கும் என் கண்களை ஒருகணம் எண்ணிப் பார்த்தேன்.இப்சி பாட்டிக்கு நேர்ந்தது எத்தகைய இழப்பு என்பதை என்னால் மனப்பூர்வமாக உணரமுடிந்தது.பாட்டி கதையைத் தொடர்ந்தார்.


இப்சி பாட்டி: அவங்க இறந்தபிறகு தம்பி,தங்கைங்க கவனிச்சுக்கிட்டாங்க.அவங்க யாருமே உயிரோட இல்லை.என் அத்தை மகன் கொஞ்சநாளு பார்த்துக்கிட்டாரு,அவரு இறந்ததும் அவங்க மனைவி தன்னோட சொந்தக்கார பொண்ணு வீட்டுல விட்டாங்க.அந்தப் பொண்ணும் கஷ்டமான சூழலில் இருந்ததால என்னைக் கவனிச்சுக்க முடியல.இங்கே கோண்டு வந்து விட்டுட்டாங்க.

உதயா: உங்களுக்கு ஏதும் வருத்தம் இருக்கா பாட்டி?

இப்சி பாட்டி : இல்லம்மா,மனுசனுக்குத் தேவை சாப்பாடு,தங்கறதுக்கு ஓர் இடம்.அது ரெண்டும் எனக்கு கிடைச்சிருக்குதே என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லறேன்.

(இப்சி பாட்டியின் பேச்சில் கனிவும்,அன்பும்,பணிவும்,பொறுமையும்,பக்குவமும் தென்பட்டது.அவருடைய கண்கள் நன்றாக இருந்திருந்தால் அவரை மாதிரியே எத்தகைய  சிறந்த பண்புகளை உடைய மாணவர்களை அவர் உருவாக்கி இருப்பார் என உணரமுடிந்தது.
  மேலும் சிலரைப் படம் பிடித்தேன்.ஒருவர் ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்தார்.கேமரா தயாரானதும் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டவர் திறக்கவேயில்லை.மறுபடி கண்களைத் திறந்தவுடன் பட்டென்று பிடித்துவிட்டேன்.இன்னொருவர் கேமராவைப் பார்த்து முறைத்தார்.இன்னும் ஓரிருவர் வெறுமனே எந்த உணர்ச்சியையும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நான் விடைபெற்றேன்.தீபாவளிக்கு அங்கு வரும்படி அழைப்பு விடுத்தார்கள்.
 கண்டிப்பா வரேன்.உங்களுக்கு கடிக்கறதுக்கு நிறைய முறுக்கு எடுத்து வரேன் தாத்தா என கண்ணியப்பன் தாத்தாவிடம் சொன்னதும் அவருக்கு ஒரே சிரிப்பு.இப்சி பாட்டி மென்மையான குரலில் நன்றி கூறி வாழ்த்தினார்.நான் கேட் அருகே வந்ததும் கண்ணியப்பன் தாத்தா கோல் ஊன்றியபடி என்னை வழியனுப்ப வந்தார்.தோற்றத்தில் வேறுபட்டிருந்தாலும் ஒருகணம் என் அப்பாவின் பாசத்தை உணர்ந்தேன்..மழைத்தூறலில் நனைந்து கொண்டே புறப்பட்டேன்.மழையோடு சேர்த்து கண்ணியப்பன் தாத்தாவும்,இப்சி பாட்டியும் என்னில் கலந்தார்கள்.

  நாம் வாழும் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல.ஒரு நொடியில் என்ன வேண்டுமானாலும் நடந்து நம் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போடக்கூடும் என்பதை மீண்டும் ஒருமுறை நேரடியாய்க் கண்டு உணர்ந்தேன்.அப்படிப்பட்ட நிலையில்லா வாழ்க்கையில் பணத்தை மட்டுமே சேர்த்துக்கொண்டு போவதில் என்ன பயன்?அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுக்கலாமே?ஸ்ரீ பாபா காப்பகத்திற்கு உதவி செய்ய நினைப்பவர்கள் 016-2922500  என்ற எண்ணில் திரு.மோகனைத் தொடர்பு கொள்ளலாம்.




 ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்
   

Saturday, March 2, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்

    


கீதம் 2 : மழையும் நீயே






         ஓர் ஆணுக்கும்,ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் அறிமுகம் காதலாய் மலரும் தருணம் மிக இன்பமானது.மனைவியை இழந்து தனிமையில் இருக்கும் ஆணும்,திருமணத்தில் நாட்டமில்லாமல் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் ஈடுபாடு கொண்டு காதல் கொள்ளும் தருணத்தை அழகன் திரைப்படத்தில் வெகு இரசனையோடு சொல்லியிருப்பார் கே.பாலச்சந்தர்.மரகதமணியின் இசையில் இப்படத்தில் நிறைய இனிமையான பாடல்கள்.அவற்றில் ஒன்றுதான் மழையும் நீயே’.

     மனதில் இருக்கும் காதலை இருவருமே உணர்ந்தபோதிலும் வாய்விட்டு சொல்லிக்கொள்ளவில்லை.அதுவே ஒரு பெண்ணுக்கு எத்தகைய ஏக்கத்தையும்,வேதனையையும் கொடுக்கும்.அந்தச் சமயத்தில் அந்த ஆணை இன்னொரு பெண்ணோடு பார்த்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு கோபமும்,விரக்தியும் தோன்றும் என்பதை அப்பாடலில் வெகு அழகாய் காட்டியிருப்பார்கள்.மனதில் வெகு ஆழமாய் அழகன் மீது நேசம்,வாய்விட்டு சொல்லமுடியாமல் தவிக்கும் தவிப்பு,அவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டதும் ஏற்படும் கோபமும்,பொறாமையும்.படபடவென பொரிந்து தள்ளிவிட்டு,அவனும் கோபத்தில் திட்டிவிட்டு காதலைச் சொல்லிவிட்டதும் ஏற்படும் பரவசம்,மகிழ்ச்சி,சந்தோச கண்ணீர்,தாபம் அனைத்தையும் ஒருசேர இப்பாடல் கொண்டிருக்கும்.1991- ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில்,இப்பாடல்மம்முட்டி(அழகப்பன்),பானுப்பிரியாவுக்காக(பிரியா) ஒலிக்கும்.இப்பாடல் ஒலிக்கும் காட்சியே வெகு இரசனையானதாய் இருக்கும்.
   மம்முட்டியைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் செல்வார் பானுப்பிரியா.மம்முட்டியின் உறவினர் வேண்டுமென்றே கதையைத் திரித்துக்கூற பானுப்பிரியா கோயிலுக்குப் போவார்.அங்கே மம்முட்டியையும்,கீதாவையும் ஒன்றாகப் பார்த்ததும் கோபம் பற்றிக்கொண்டு வரும்.அந்தக் கோபத்தை மம்முட்டியின் மகள் மீது காட்டும் காட்சி சிரிப்பைதான் வரவழைக்கும்.மம்முட்டி தனது மகளை பானுப்பிரியாவிடம்தான் நடனம் கற்றுக்கொடுக்க அனுப்பியிருப்பார்.பானுப்பிரியா திட்டி அனுப்பியதும் அந்தப் பெண்பிள்ளை அழுதுக்கொண்டே மம்முட்டியிடம் போய்ச் சொல்வாள்.இனிமே டான்ஸ் கிளாஸ் வரவேண்டாம்னு சொல்லி என்னைத் திட்டி அனுப்பிட்டாங்கப்பா என அந்தக் குழந்தை அழுதுக்கொண்டே சொல்ல,கோபமாய் பானுப்பிரியாவைத் தேடிப்போவார் மம்முட்டி.
       பானுப்பிரியா கோபமாய் நடனம் ஆடிக்கொண்டே மூச்சிறைக்க படபடவென பொரிந்து தள்ளிவிடுவார் மம்முட்டியிடம்.யாரிடமும் மயங்காமல் இருந்த தான் மம்முட்டியின் மீது வைத்துவிட்ட காதலை தனது முட்டாள்தனம் போல அவர் சுட்டிக்காட்டவே மம்முட்டிக்கும் கோபம் வந்துவிடும்.அவர் பேசி முடித்ததும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைக்க விரும்பும் மம்முட்டி,”ஆனால் உன்னை மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டு எல்லாம் என்னால பேசமுடியாது,” என ஆரம்பித்து தன் விளக்கத்தைக் கொடுத்துவிட்டு தன் மனதில் இருக்கும் காதலையும் கோபமாகவே சொல்லிவிட்டு படியில் இறங்கிப் போக முற்படுவார்.அப்போது,”ஒருத்தர் மேல ஒருத்தர் பொறாமையா இருக்கிறது கூட காதல்தான் என  பானுப்பிரியாவின் குரல் கேட்கும்.நின்று பார்ப்பார்.பானுப்பிரியாவின் கண்களில் கோபம்,அழுகை,கொஞ்சல்,காதல்,கண்ணீர்,இலேசான புன்னகை எல்லாமே கலந்து தென்படும்.மம்முட்டிக்கும் சிரிப்பு வந்துவிட,கனிவாய் காதல் பார்வை பார்க்க,பானுப்பிரியா வேகமாக ஓடிப்போய் அருகில் நெருங்கியதும் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்பார்.மம்முட்டி பானுப்பிரியாவின் கையைப் பிடித்து இழுக்க,பானுப்பிரியா மம்முட்டியின் மோதி நிற்க,மம்முட்டி அவரை அணைத்துக்கொள்வார்.உடனே ஒலிக்கும் மழையும் நீயே என்ற பாடல்.வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி.பாலாவின் குரல் இதமாய்த் தாலாட்டும்.
    கோபமாய்ச் சுடுபவளும் நீதான்,மழையாய்க் குளிர்விப்பவளும் நீதான் என்ற உவமையோடு பானுப்பிரியாவின் கோபத்தையும்,அன்பையும்  எடுத்துரைக்கும் அப்பாடல்.அப்பாடல் காட்சியில் இருவரும் காதலை வெளிப்படுத்திவிட்ட சந்தோசத்தில் மனம் முழுக்க குதூகலத்தோடு வீட்டுக்குப் போகும்போது பானுப்பிரியா மம்முட்டிக்குப் பரிசாக அனுப்பிவைத்த பியானோ வீட்டில் இருக்கும்.அதில் இசையைவிட இனிமையானவருக்கு என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும்.அன்பிற்கினியவர்களிடமிருந்து வரும் பரிசு தரும் ஆனந்தத்துக்கு ஏதும் ஈடாகக்கூடுமோ?உடனே வாசித்துப் பார்ப்பார்.பதிலுக்கு தன் அன்பை காட்ட பானுப்பிரியாவுக்கு  ஒரு காரை வாங்கி அனுப்புவார்.அதில் என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும்.மனம் கவர்ந்தவனின் வாசகம் வஞ்சி அவளை நெகிழவைக்க,ஏக்கத்தோடு கண்கலங்க அந்தக் காரை முத்தமிடுவாள்.இப்படி அப்பாடல் ஆரம்பிக்கும் முன் தொடங்கி,பாடல் காட்சி முழுவதிலும் இரசனையான அம்சங்கள் அதிகமாய் வெளிப்படும் இப்பாடலை யாருக்காவது பிடிக்காமல் போகுமா?தென்றல் கூட தனிமை நினைவில் அனலாய்ச் சுடுகிறதாம்.விரகதாபத்தையும்,ஏக்கத்தையும் கூட இவ்வளவு கவித்துவமாக,ஆபாசமின்றி வரிகளிலும்,காட்சியிலும் காட்டமுடியுமா?காட்டியிருக்கிறார் வைரமுத்து.என் அன்பிற்கினிய ஜீவனோடு சேர்த்து மம்முட்டியின் தீவிர ரசிகர் பாலசேனா அண்ணாவுக்கும்,மற்றும் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்காகவெல்லாம் இந்தப் பாடல் வரிகள்.




மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?


இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே..
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே..
பார்க்காமல் மெல்ல பார்த்தாளே...
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே..
அதுதானா மோக நிலை?
அடடா இதுதான் சொர்க்கமா?
இது காமதேவனின் யாக சாலையா?
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா


கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்..
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய்..முடிவாய்..
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்.
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?




உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங் (02.03.2013,சனி)