Saturday, April 13, 2013

தவறுகள் உணர்கிறோம் 4 - நவீந்திரனும் மிதிவண்டியும்

       நம் தவறுகளை உணரவைப்பதற்கு நம்மைவிட பெரியவர்களால்தான் முடியும் என்பதல்ல.பால்மணம் மாறா பச்சைக் குழந்தை கூட நம் தவறுகளை உணரவைக்கும்.அவ்வகையில் இவ்வாரம் என் அண்ணனின் இரண்டரை வயது மகன் நவீந்திரன் என் தவற்றை உணர வைத்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
   என் அன்புத் தந்தையின் மறைவில் என் வாழ்வில் வசந்தத்தை முற்றிலுமாய் இழந்துவிட்டதாய் உணர்ந்தேன்.வீட்டுக்குள் ஏதோ ஒரு வெறுமைப் பரவிக்கிடந்த அந்த கருப்பு நாள்களிலிருந்து என்னை மீட்டு வந்த தேவதை அவன்.என் அப்பாவின் பிரதிநிதியாய் என் வாழ்வின் வசந்தத்தை மீட்டுக்கொண்டு வந்த அவனிடத்தில் எங்கள் வீட்டில் எல்லாருக்குமே அலாதிப் பிரியம் இருந்தது.அவனுடைய ஒவ்வொரு அசைவையும் இரசித்து நாள்களைக் கடந்தோம்.
  நவீந்திரனுக்கு கார்,மோட்டார் சைக்கிள்,மிதிவண்டியின் மீது அதிக ஆசை.அவனுடைய முதலாம் பிறந்தநாளின்போதுதான் நான் முதன்முதலாக அவனுக்கு ஒரு மிதிவண்டி வாங்கி கொடுத்தேன்.அவன் அந்த மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டுதான் போனான்.சில நாள்கள் கடந்ததும் அவனுக்கு மேலும் ஒரு மிதிவண்டி வந்து சேர்ந்தது.என் அண்ணன்,அண்ணி வாங்கி கொடுத்தனர்.அந்த மிதிவண்டியையும் அவன் ஓட்டாமல் தள்ளிக்கொண்டு சென்றான்.சில தினங்கள் கழித்து,மிதிவண்டியில் ஏறி உட்கார்ந்து கால்களால் நகர்த்திக்கொண்டு செல்ல ஆரம்பித்தான்.தினமும் மிதிவண்டி ஓட்டவில்லையென்றால் அவனுக்குத் தூக்கமே வராது.அவனுடைய ஒவ்வொரு அசைவும் குழந்தைகளின் உலகத்தை எனக்குக் காட்டியது.குழந்தையின் உலகில் என்னவெல்லாம் முக்கியம் என்பதை எனக்குக் கற்றுத்தந்தது.குழந்தையின் மன இயல்புகளை,குழந்தைகளைக் கையாளும் முறையை அவன் மூலம் நாங்கள் அனைவரும் கற்றுக்கொண்டிருந்தோம்.ஒவ்வொருநாளும் வீட்டை விட்டு வெளியே சென்றால் எப்போது வீட்டுக்குத் திரும்பி வந்து அவனைப் பார்ப்போம் என்று இருக்கும்.வீட்டுக்கு வந்ததும் உடனே அவனைத் தூக்கிக் கொஞ்சினால்தான் நிம்மதியாக இருக்கும்.
  வீட்டுக்குள்ளேயே இருக்கும் நவீந்திரன் எப்போதுமே நான் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்ததுமே வெளியில் எட்டிப்பார்க்க துடிப்பான்.பகல் நேரமென்றால் வெளியே கொஞ்ச நேரம் இருக்க வைத்துவிட்டு,உள்ளே அழைத்து வருவேன்.இரவு நேரத்தில் உடனே வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திவிடுவேன்.அவனும் தொல்லை செய்யமாட்டான்.
   அந்தமாதிரிதான் ஒருநாள் நான் வெளியே போய்விட்டு இரவில் வீடு திரும்பினேன்.நவீந்திரன் உடனே வெளியே வர துடித்தான்.வெளியில் கை காட்டி என்னென்னவோ சொன்னான்.அப்போதெல்லாம் அவனுக்குச் சரியாக பேச வராது.பிக்கலு, பிக்கலு என கத்தினான்.நான் அவன் வெளியே செல்ல ஆசைப்படுகிறான் என்றெண்ணி அவசர அவசரமாய் வெளிக்கதவைச் சாத்திவிட்டேன்.அன்று நவீந்திரன் அதிக பிடிவாதம் பிடித்தான்.எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை.விடாமல் அழுதுக்கொண்டே இருந்தான்.அப்படியே உறங்கியும்விட்டான்.
   இரவு படுக்கும்போது என் அம்மா சொன்னார் என் அண்ணன் நவீந்திரனுக்குச் சிவப்பு நிறத்தில் ஒரு புதிய மிதிவண்டி வாங்கி வந்திருப்பதாகவும்,அதை வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் நிறுத்தி வைத்துவிட்டதாகவும் சொன்னார்.அப்போதுதான் எனக்கும் உண்மை புரிந்தது.அந்தப் புதிய மிதிவண்டியைப் பார்க்கவேண்டும் என்றுதான் வெளியே விடும்படி என்னை வற்புறுத்தி அழுதிருக்கிறான்.மிதிவண்டியைதான் (bicycle) ‘பிக்கலு பிக்கலு என சொல்லியிருக்கிறான்.என் மனம் வேதனையடைந்தது. என் அம்மாவும் வேலையாக இருந்ததால் அவன் மிதிவண்டிக்காகதான் அழுகிறான் என்ற உண்மையை அவரும் உணரவில்லை.

  பாவம் பிள்ளை.அவனுக்குப் பிடித்தமான ஒரு பொருள்.அவனுக்கென்றே வாங்கினார்கள் என்றும் தெரியும்.பெரியவள் நானே எனக்குப் பிடித்தமாதிரி ஏதாவது உடையோ,பொருள்களோ வாங்கிவந்தால் அடிக்கடி அதை எடுத்துப் பார்த்து மகிழ்பவள் எனில்,குழந்தை அவன்.அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?அத்தை வந்து கதவைத் திறந்ததும் வெளியே போய் அந்த மிதிவண்டியைப் பார்க்கவேண்டும் என்றோ,வீட்டுக்குள் எடுத்து வந்துவிடவேண்டும் என்றோ எண்ணியிருப்பான் தானே?நான் கதவை இழுத்துச் சாத்திவிட்டதும் அவன் மனம் எப்படி பாடுபட்டிருக்கும்?
  இந்த அத்தைப் பிசாசு என் புதிய மிதிவண்டியை எடுத்துக்கொடுக்கவே இல்லையே,” என்று என் மீது வருத்தம் கொண்டுதானே தூங்கியிருப்பான்?பாதி இரவில் விழிப்பு வந்தால் அதை நினைத்து விசும்புவானே என்ற குற்ற உணர்வும் ஏற்பட்டது.இனிமேல் குழந்தைகள் அழுதாலோ,அடம்பிடித்தாலோ வழக்கமான ஒன்று என விட்டுவிடாமல் அவர்களின் மனதில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முற்படவேண்டும்.அறியாமையில் நாம் செய்யும் தவறு குழந்தைகளின் மனத்தைப் பாதித்துவிடக்கூடாது என தீர்மானித்தேன்.
   மறுநாள் வீட்டுக்கு வந்தபோது அம்மா அந்த மிதிவண்டியை வீட்டினுள் வைத்துவிட்டிருந்தார்.ஆனந்தமாக ஓட்டிக்கொண்டிருந்த நவீந்திரன் என்னிடம் அந்த மிதிவண்டியைக் காட்டி சந்தோசப்பட்டான்.அவன் முகம் முழுக்க சிரிப்பும்,குதூகலமும் நிறைந்திருந்தது.அத்தைக்குத் தெரியாதுமா,சோரி,: என கேட்டு அவன் நெற்றியில் முத்தம் வைத்தேன்.


உதயகுமாரி கிருஷ்ணன்

 தொடரும்.....
                                                                               

Friday, April 12, 2013

தவறுகள் உணர்கிறோம் 3: நள்ளிரவில் அழவைத்த பூனை


    இந்த வாரமும் என் தவறை உணர வைத்த ஓர் உயிரைப் பற்றிதான் பேசப்போகிறேன்.இந்த முறை மனித உயிரல்ல,ஒரு பூனையின் உயிர் எனக்கு என் தவற்றை உணர்த்தியது.நான் தமிழ்ப்பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது.
 அது தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளி.என் வீட்டுக்கு அருகில்தான் இருந்தது.எனக்கு என் பள்ளியை மிகவும் பிடிக்கும்.பள்ளி முடிந்தபின் கொஞ்சநேரம் விளையாடிவிட்டுதான் வீடு திரும்புவோம்.எங்களுக்கு மதியம் வகுப்பு இருக்கும்.அதே மாதிரி மாலையில் ஐந்து மணிக்கு மேல் தினமும் எங்களின் தலைமையாசிரியர் பள்ளிக்குப் பூப்பநது விளையாட தன் நண்பர்களோடு வருவார்.எங்களுக்குக் கொஞ்சநேரம் கணிதப் பாடம் கொடுப்பார்.பிறகு எங்களை விளையாட விட்டுவிடுவார்.என் வகுப்பறையின் பின்னால் உடல்நலக்கல்விப் பாடத்திற்காக அடுக்கு அடுக்காக இருக்குமே?அந்த மெத்தை இருந்தது.தனித்தனியே நகர்த்தி வைக்கக்கூடிய நான்கு அடுக்குகள்,கடைசி அடுக்கில் மெத்தை இருக்கும்.அதைதான் ஆக மேலே அடுக்கவேண்டும்.நாங்கள் மாலையில் திடலில் கண்டபடி ஓடிப்பிடித்து விளையாடிவிட்டு வகுப்பறைக்கு வந்து அந்த மெத்தையில் அமர்ந்து ஓய்வெடுப்போம்.
   எங்கள் பள்ளி தோட்டப்புற பள்ளி என்பதால் பள்ளியில் நிறைய காய்கறிகளும்,பப்பாளிப் பழமரங்களும் இருந்தன.சில வேளைகளில் நாங்கள் அடைகாத்து வைக்கும் பப்பாளிப் பழங்களை வேறு யாராவது திருடிக்கொண்டு போய்விடுவார்கள்.எனவே பப்பாளிப் பழங்களைப் பழுக்கும் முன்னரே பறித்து,அந்த அடுக்குகளின் அடியில் மறைத்துவைப்போம்.மதிய வகுப்பின்போது அந்தப் பப்பாளிப் பழத்தை வெட்டிச் சாப்பிடுவோம்.சில வேளைகளில் கத்தி கிடைக்காவிட்டால் அரைக்காயாய்ப் பழுத்திருக்கும் பப்பாளிப் பழங்களை தேங்காய் உடைப்பதுபோன்று உடைத்தும்,கழுவிச் சாப்பிட்டிருக்கிறோம்.
  ஒருதடவை பறித்து வைத்த பப்பாளிப் பழங்களை விடுமுறை சமயமென்பதால் அப்படியே மறந்துவிட்டோம்.விடுமுறை முடிந்து பள்ளி திரும்பியபோது பந்தப் பப்பாளிப் பழங்கள் கருப்பு நிறத்தில் அழுகிப்போய்,பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்தைத் தந்தன.அன்றுமுதல் அந்த அடுக்கில் பப்பாளிப் பழங்களை மறைத்துவைக்கக்கூடாது என்று வகுப்பாசிரியை சொல்லிவிட்டார்.அதன்பிறகு அது பூனையின் வீடாகிப்போனது.
   சில நாள் நானும் என் இன்னொரு தோழியும் வழக்கதைவிட சற்று அதிகமாக பள்ளியிலிருந்து விளையாடிவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்திருந்தோம்.அந்தச் சமயத்தில்தான் அப்பூனை அந்த மெத்தையின் அடியில் அதாவது கடைசி அடுக்கில் குட்டி போட்டிருந்தது.எனக்குப் பூனைகளை ஏனோ பிடிக்காது.எனவே,நானும் தோழியும் கலைந்திருந்த அந்த அடுக்குகளை ஒன்றாக அடுக்கி,அந்தப் பூனைக்குட்டிகள் கண்ணுக்குத் தெரியாதவண்ணம் ஒன்றாகப் போட்டுவிட்டு மேலே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.அப்படியே மறந்தும்விட்டோம்.
  இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீடு திரும்பினோம்.குளித்து,சாப்பிட்டுவிட்டு,பாடம் படித்துவிட்டு உறங்க சென்ற வேளையில் திடீரென பூனைக்குட்டிகளின் ஞாபகம் வந்தது.அப்போதுதான் கலைந்திருந்த அந்த அடுக்குகளை ஒன்றாக மூடிவைத்து,அதன்மேல் அமர்ந்திருந்ததும்,மறுபடி கலைத்துப்போடாமல் வந்துவிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது.உள்ளே பூனைக்குட்டிகள் இருந்தனவே.எப்படி தாய்ப்ப்பூனை உள்ளே நுழைந்து குட்டிகளுக்குப் பாலூட்டும்?காற்று இல்லாமல் பூனைக்குட்டிகள் இறந்துவிடுமோ?என் அண்ணனிடம் சொன்னேன்.மணி பதினொன்றைத் தாண்டிவிட்டதால் எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.கண்டிப்பாக பூனைக்குட்டிகள் காற்று இல்லாமலும்,தாய்ப்பால் இல்லாமலும் இறந்துவிடும் என்றார் அண்ணன்.அப்பாவும் அன்று வீட்டில் இல்லை.
    பயமும்,குற்ற உணர்வும் என்னைத் தாக்கியது.அப்பா இருந்திருந்தால் அந்நேரத்திற்குக் கண்டிப்பாய்ப் பள்ளிக்கு ஓடிப்போய்,அந்த அடுக்குகளை நகர்த்திவைத்துவிட்டிருப்பேன்.பேசாமல் தனியே போய்விடலாமா என்று கூட தோன்றியது.ஆனால் சுவாரஸ்யமாய் பேசிக்கிடந்த பேய்க்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்ததால் அமைதியாக படுத்திருந்தேன்.நெடுநேரம் உறக்கமில்லை.எப்படியோ உறங்கிப் போனேன்.
  காலையில் கண்விழித்ததுமே எனக்குப் பூனைக்குட்டிகளின் ஞாபகம் வந்தது.விரைந்து குளித்து,பள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரமாக ஓடினேன்.பக் பக்கென்று அடித்துக்கொள்ளும் மனத்தோடு,முதல்வேலையாக அந்த அடுக்கை நகர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் உள்ளே தாய்ப்பூனையும்,குட்டிகளும் ஒன்றையொன்று அணைத்தவாறு படுத்திருந்தன.ஒருகணம் என் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.அப்போதுதான் அந்த அடுக்குகளில் சிறுசிறு ஓட்டைகள் இருப்பதைக் கவனித்தேன்.அந்த ஓட்டையின் வாயிலாக தாய்ப்பூனை உள்ளே நுழைந்திருப்பதையும்,காற்றோட்டம் இருந்ததையும் அறிந்து நிம்மதியடைந்தேன்.அதன்பிறகு வெகுநேரம் பள்ளியில் விளையாடுவதை நிறுத்திக்கொண்டேன்.என்றாவது நேரமாகிவிட்டதென்ற அவசரத்தில் என்னை அறியாமல் மீண்டும் அந்தத் தவற்றைச் செய்துவிடக்கூடாதில்லையா?


உதயகுமாரி கிருஷ்ணன்

தொடரும்.....





Wednesday, April 10, 2013

தவறுகள் உணர்கிறோம்

தவறுகள் உணர்கிறோம்  -    2

   இரண்டாண்டுகளுக்கு முன் சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் சிலநாள் பணிபுரிந்தேன்.நிறைய ஆண்கள் ஆசிரியர்களாக இருந்த பள்ளி அது.ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் எனக்கு எல்லாரையும் நினைவில் வைத்துக்கொள்ள சற்று சிரமமாகவே இருந்தது.அவ்வேளையில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஓர் ஆசிரியரைப் பார்த்தேன்.(அவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.) ஏனோ எனக்கு அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது.பள்ளிக்குப் புதிது என்பதால் நான் அலுவகத்திற்குச் செல்லும் படியைத் தவறவிட்டு வேறொரு கட்டிடத்திற்குள் நுழைந்துவிடுவேன் அடிக்கடி.ஒருமுறை அப்படிதான் நான் நடந்து போய்க்கொண்டிருந்தபோது எதிரே அந்த ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.கைகளைக் கட்டியவாறு குறுகுறுவென்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர்,”ம்ம்ம் இந்தப் பக்கம்,” என்று கரகரப்பான குரலில் புன்னகையற்ற குரலில் அலுவலகத்துப் படியைக் காட்டினார்.நான் வெடவெடத்துப் போனேன்.முதல்முறையாக ஏன் அவரைக் கண்டால் இவ்வளவு பயம் வருகிறது என யோசிக்க ஆரம்பித்தேன்.
   அதன்பிறகு அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஓடி ஒளிந்துவிடுவேன்.அச்சமயத்தில்தான் அங்குள்ள சில ஆசிரியர்கள் என்னிடத்தில் அவரைப் பற்றி சொன்னார்கள்.அவருடைய குடும்பத்தில் நடந்த சில பிரச்சனையால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,சில வேளைகளில் அவர் நிதானமின்றி எதையாவது செய்துவிடுவார் என்றும் என்னை எச்சரித்தார்கள்.அவர் பல ஆண்டுகள் அந்தப் பள்ளியில் வேலை செய்துவிட்டதாகவும்,அவருடைய வயது மற்றும் சேவை கருதி அவரைப் பள்ளியில் போதனை தவிர்த்து மற்ற வேலைகளைக் கொடுத்து வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.ஏற்கனவே அவரைக் கண்டால் பம்மிவிடும் நான் அந்த விசயத்தைக் கேள்விப்பட்ட பிறகு இன்னும் உஷாரானேன்.அந்த வேளையில்தான் நான் பத்திரிக்கைகளுக்கு எழுதுவேன் என்ற விசயம் ஓர் ஆசிரியை மூலம் எல்லாருக்கும் தெரிய வந்து,அந்த ஆசிரியருக்கும் தெரியவந்தது.அவர் என்னைத் தேடி வந்து நேர்காணல் செய்தார்.நான் அவஸ்தையில் நெளிந்தேன்.அவருக்குப் புத்தகம் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.நிறைய எழுத்தாளர்களை அறிந்து வைத்திருந்தார்.எனக்கு அவரது நிலை பரிதாபத்தை உண்டு பண்ணியதால்,அவரைப் பார்த்தால் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போவேன்.குஷியாகிப் போன அவர் என்னிடத்தில் உரிமையாக தேடி வந்து பேச ஆரம்பித்தார்.ஒரு தடவை எனக்குப் பிடித்த வளையல் வாங்கி வந்து தந்தார்.என்னைப் பார்த்தால் என் உச்சந்தலையில் கையை வைத்து,”கோட் பிளெஸ் யூ மை சாய்ல்ட் என்று வாழ்த்திவிட்டுப் போவார்.என் அப்பா மாதிரிதானே என்று நானும் அதைத் தடுக்கவில்லை.
   அந்தப் பள்ளி ஆசிரியர்கள் என்னிடத்தில் வெகு அன்பாய் இருந்தார்கள்.சில சீனியர் ஆசிரியைகள் என்னைக் கன்னத்தில் செல்லமாய்த் தட்டி கொஞ்சிவிட்டும் போவார்கள்.அதையெல்லாம் பார்த்த அந்த ஆசிரியர் ஒருநாள் அதே மாதிரி திடீரென என்னைக் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் செல்லமாக என் கன்னத்தில் தட்டிவிட்டுப் போய்விட்டார்.அதை ஓரிரு ஆசிரியர்கள் பார்த்துவிடவே,என்னை எச்சரித்தனர்.அவர் சில சமயங்களில் நிதானமின்றி நடந்து கொள்வார்,ஜாக்கிரதை எனவே,நான் பழையபடி அவரைப் பார்த்தால் பதுங்க ஆரம்பித்தேன்.
  அப்போதுதான் ஷா ஆலம் தமிழ்மணிமன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய நல்லதோர் வீணை செய்தே என்ற சிறுகதையும் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,தொகுப்பில் இடம்பெற்றது.நூல்வெளியீட்டு விழா குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தபோது கூட்டத்தோடு சேர்ந்து கேட்டுக்கொண்டார் அவரும்.
  நூல் வெளியீட்டுப் பிறகு அந்த மண்டபத்தில் அமர்ந்தபோது என்னமோ பெரிய மனுஷி மாதிரி என்னிடமும் சிலர் வந்து கையொப்பம் பெற்றார்கள்.நான் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தபோது என் பின்னாலிருந்து யாரோ புத்தகத்தை நீட்ட,அதிலும் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தபோது என் தலையில் கைவைத்து வாழ்த்திய அந்த ஸ்பரிசத்தை அடையாளம் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தபோது அந்த ஆசிரியர் அங்கு இருந்தார்.பள்ளியிலிருந்து வந்த ஒரே ஜீவன்.எப்போதோ வாய்மொழியாக நான் சொன்ன விசயத்தை நினைவு வைத்திருந்து,மறவாமல் வந்து,பணம் கொடுத்து நூலையும் வாங்கியிருக்கிறார்.முதல்முறையாய் என்னவோ போலிருந்தது.எம் குடும்பத்தினரிடம் அவரை அறிமுகம் செய்தேன்.
  அந்தச் சம்பவம் எனக்கு என் தவற்றை உணர்த்தியது.அவரா மனநலம் சரியில்லாதவர் என ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்?பணம் கொடுத்து,நூல் வாங்கி தமிழுக்கு ஆதரவு தரும் அவரைவிட சிறந்தவர்களாய் அவரைக் குறை சொல்பவர்கள் இருந்திட முடியுமா?ஒருவேளை என் அப்பாவுக்கு இப்படி ஒரு குறை இருந்தால் இப்படிதான் ஓடி ஒளிவேனா?முதல்முறையாய் அவர் விசயத்தில் என் தவற்றை உணர்ந்தேன்.அதன்பிறகு அவரிடத்தில் அக்கறையாகவும்,அன்பாகவும் நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.அப்போதுதான் அவரிடத்தில் இருந்த பல நல்ல விசயங்களை அறிந்தேன்.அவர் கிள்ளானில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு வாரந்தோறும் காலை உணவு வழங்கி வருகிறார்.அவரைப் போன்றே குடும்பத்தினரின் ஆதரவு இல்லாத அவ்ர்களுக்காக அவர் நிறைய பணம் ஒன்றும் செலவு செய்துவிடவில்லைதாம்.ஆனால் கொடுக்கவேண்டும் என்ற அவரது மனசு?.அங்கு 25 பேர் இருந்தார்கள்.வாரந்தோறும் 25 இடியப்பம் வாங்கி கொண்டு போய்க் கொடுத்துவிடுவாராம்.மாதம் ஒன்றுக்கு எழுபது முதல் எண்பது வெள்ளி மட்டுமே செலவு செய்வதாக கூறினார்.அவருடைய நல்ல மனதை நான் போற்றினேன்.அவரிடத்தில் இருந்த அந்த நலல் விசயத்தை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன்.
    அப்பள்ளியில் இருந்த ஓர் ஆசிரியை சொன்னதுபோல இப்போது அவர் இப்படி இருக்கலாம்.ஆனால் ஒருகாலத்தில் அவர் எவ்வளவு சிறப்பான நிலையில் இருந்தாரோ,அதற்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும்.அவரை யாராவது மிக அன்பாக கவனித்துக்கொண்டால் அவர் முழுமையாக அந்த மனச்சிதைவிலிருந்து மாறிவிடுவார் என நம்பினேன்.அதனால் அவரிடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மிகவும் அன்பாக பழகினேன்.நான் அந்தப் பள்ளியில் இல்லாதபோதும் என்னை அலைபேசியில் அழைத்துப் பேசுவார் சில சமயம்.கடந்தாண்டு என்னுடைய அப்பா என்ற சிறுகதைக்குப் பரிசு கிடைத்தபோது அந்த நிகழ்வுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை என வருத்தப்பட்டார்.மலேசிய சிவசங்கரி என்று வேண்டுமென்றே கலாய்ப்பார்.ஒருமுறை அவர் எத்தனையோ வருடங்களுக்கு முன் சேமித்து வைத்திருந்த,பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த(பழுப்பேறிய நிறத்தில் இருந்தது) கதைகளின் தொகுப்பைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார்.இன்றுவரையில் பத்திரமாக வைத்திருக்கிறேன் அதை..


  - உதயகுமாரி கிருஷ்ணன்


தொடரும்....




Sunday, April 7, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்

கீதம் 4

விழியில் விழுந்து இதயம் நுழைந்து’  (அலைகள் ஓய்வதில்லை)





    எனக்கு மட்டும் சொந்தம் உனது
    இதழ் கொடுக்கும் முத்தம்
      
    அந்தப் பாடல் வரிகளை வெறுமனே படிக்கும்போது நம் கற்பனையில் தோன்றும் பிம்பம் வேறு.தாபத்தில் ஏங்குபவர்களின் உணர்ச்சி என நினைக்க தோன்றும்.ஆனால் அதே வரிகளை பாடலாக கேட்கும்போது அல்லது கேட்டபிறகு நம்முள் விரியும் பிம்பம் வேறு.முத்தம் என்ற தொடுதல் இன்பத்தை முக்கியமாக கருதி வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல அவை.ஓர் ஆணின் மீது அளவு கடந்த நேசத்தைச் சுமந்து நிற்கும் ஒரு பெண்ணின் உரிமைக்குரல்.ஏக்கம்,பிடிவாதம்,பொறாமை,சோகம்,
அளவு கடந்த அன்பு அனைத்தையும் குழந்தைத்தனம் இழைய வெளிப்படுத்தும் வார்த்தைகளாகதான் என் பார்வையில் அந்த வார்த்தைகள் பதிவாகியிருக்கின்றன.அந்தப் பாடலை நூற்றுக்கணக்கில் கேட்டு மகிழ்ந்ததில் அப்பாடல் முழுமையாய் என்னுயிரில் கலந்துவிட்டது.ஒருத்தி தான் நேசிப்பவனிடத்தில் சிறுகுழந்தை போன்று உரிமையோடு தேம்பும் விசும்பல் போன்றுதான் அந்த வரிகள் என்னுள் மிக ஆழமாய்ப் பதிந்திருக்கின்றன.
     ஆர்.டி.பாஸ்கரின் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா திரைக்கதை,வசனம் எழுதி இயக்கிய அருமையான காதல் படம் அலைகள் ஓய்வதில்லை ஜூலை மாதம் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில்தான் நடிகர் கார்த்திக்கும்,ராதாவும் அறிமுகமானார்கள்.அப்படத்தில் இளையராஜா இசையமைத்து,வைரமுத்து எழுதிய பாடலான விழியில் விழுந்து,இதயம் நுழைந்து,உயிரில் கலந்த உறவே என்ற பாடலில் இடம்பெற்ற வரிகள்தாம் அவை.இதே படத்தில் காதல் ஓவியம்,தரிசனம் கிடைக்காதா,ஆயிரம் தாமரை மொட்டுகளே,வாடி என் கப்பக்கிழங்கே போன்ற பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
   இனி விழியில் விழுந்து பாடலின் சுவையில் திளைப்போம்.மிக மிக இனிமையான இப்பாடலை நன்கு உள்வாங்கி இரசிக்கவேண்டுமென்றால் படம் தொடங்கி,கார்த்திக்,ராதாவுக்குள் காதல் மலரும் தருணங்களையும் நாம் கொஞ்சம் அசை போட்டாக வேண்டும்.
    பிராமண குடும்பத்தைச் சேர்ந்த விடலைப் பையன் விச்சு(கார்த்திக்).அவன் அம்மா சங்கீதம் சொல்லிக்கொடுத்து சம்பாதித்து அவனை வளர்க்கிறாள்.அவனோ விடலைப் பையன்களுக்கே உரிய குறும்போடு நண்பர்களோடு ஊரைச் சுற்றி திரிகிறான்.அதே ஊரில் செல்வாக்கு நிறைந்த கிறிஸ்துவ குடும்பம் டேவிட்டுடையது.(தியாகராஜன்)அவனுடைய தங்கைதான் மேரி(ராதா).பட்டணத்தில் படித்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பும் மேரியிடம் வம்பு செய்வதில் விச்சுவுக்கும்,அவன் நண்பர்களுக்கும் தனி மகிழ்ச்சி.பார்க்கும் இடங்களிலெல்லாம் அவளைக் கேலி செய்கிறார்கள்.திமிர்ப்பேட்டை ராணி என பழிப்பு காட்டுகிறார்கள்.ஒரு தடவை அவளுடைய ஒலிப்பதிவு கருவியை எடுத்து அதில் கவிதையைப் பதிவு செய்கிறான் விச்சு.அப்போது சண்டை போட்டாலும் இரவில் தூங்கும்போது அந்தக் கவிதையைக் கேட்டு புன்னகை வருகிறது அவளுக்கு.
    ஆனால் விச்சுவுக்கோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளை வாரிவிடவேண்டும் என்ற ஆசை.அதற்கேற்றாற்போல் ஒருநாள் விளையாட்டில் தோற்றுப்போனதற்குத் தண்டனையாக ராதா பாடவேண்டிய சூழல்.ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா என அவள் பெருங்குரலெடுத்து கத்த,விச்சுவின் பட்டாளம் குஷியாய் அவளை நெருங்குகிறது.அவளுடைய குரலைக் காட்டிலும் கழுதையின் குரல் தேவலை என்றெல்லாம் பாடி அவளை அழவைக்கிறார்கள்.இரவில் தூங்கும்போது அவள் அவமானத்தால் கண்ணீர் வடிக்கிறாள்.
  மேரியை,விச்சுவின் அம்மாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்புகிறார் டேவிட்.தன் வீட்டில் மேரியைப் பார்த்ததும் சும்மா இருப்பானா விச்சு?மேரி பாடும்போது வேண்டுமென்றே ஒரு கழுதையை இழுத்துக்கொண்டு வந்து வீட்டின் பின்னால் நிறுத்தி வைத்து,அடித்து கத்த வைக்கிறான்.அவன் செய்வது மேரியின் மனதைப் புண்படுத்துகிறது.அந்த வைராக்கியத்தில் விச்சுவின் அம்மா சொல்லிக்கொடுத்தவற்றை நினைவில் எந்நேரமும் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறாள்.ஒரு தடவை தரிசனம் கிடைக்காதா?” என்ற பாடலைப் படித்துக்கொடுக்கும்போது விச்சுவின் அம்மாவுக்கு இருமல் வந்துவிட,மேரி தொடர்ந்து பாடுகிறாள்.அந்தக் குரலின் இனிமையிலும்,தெய்வீகத்திலும் மயங்கி விச்சு கூட எழுந்து வந்துவிடுகிறான்.
    அவனுக்கும் சங்கீத ஆர்வம் இருந்த காரணத்தால் அவனை மேரி பாடிய பாடல் என்னவோ செய்கிறது.அவள் மேல் அவனுக்குக் காதல் பிறக்கிறது.மேரி கண்டு கொள்ளாமல் போனாலும் தொடர்ந்து முயன்றதில் அவளுக்கும் அவன் மேல் காதல் பிறக்கிறது.அவர்களின் காதல் மேரியின் அண்ணி எலிஸியின் (சில்க்) காதில் விழுகிறது.விச்சுவின் அம்மாவிடம் இனி தங்கள் வீட்டில் வந்து பாடல் சொல்லிக்கொடுக்கும்படி சொல்லிவிடவே,விச்சுவால் மேரியைப் பார்க்க முடியாமல் போகிறது.மேரிக்கு ஒரு கடிதம் எழுதி,அதை தன் அம்மாவின் ஹார்மோனியப் பெட்டியில் செருகி வைக்கிறான்.
  மேரியின் வீட்டில் விச்சுவின் அம்மா அலைபாயுதே என்ற பாடலைச் சொல்லிக்கொடுக்க,சுரத்தே இல்லாமல் பாடுகிறாள் மேரி.அவள் எண்ணங்களும் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கிடக்கிறது..திடீரென ஹார்மோனியப் பெட்டிக்குள்ளிருந்து விச்சுவின் கடிதம் வந்து விழுகிறது.எடுத்துப் பார்க்கிறாள்.
     

     விழியில் விழுந்து
     இதயம் நுழைந்து
     உயிரில் கலந்த உறவே

என்ற வரிகள் கண்ணில் பட,விச்சு கடற்கரையில் நின்று பாடுவதைக் கற்பனை செய்பவள் அடுத்த வரிகளை வாய்விட்டுப் பாடிவிட, சம்பந்தமில்லாமல் அவள் பாடுவதைப் பார்த்து விச்சுவின் அம்மா அதிர்ச்சியாக,அவள் வெட்கத்தில் அசடு வழிகிறாள்.அடுத்த காட்சியில் இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் கடற்கரையில் காத்திருக்கும் காதலனைச் சந்திக்க ஓடிச் செல்கிறாள்.அப்போது இப்பாடல் சந்தோசமாக ஒலிக்கிறது.சுகமான இப்பாடல் காட்சியில் இருவதும் தினமும் பொன்னிற ஒளியில்,அந்தி மயங்கும் வேளையில் சந்தித்து மகிழ்கிறார்கள்.இவர்களைப் போன்றே இரவும்,பகலும்,அலையும்,கடலும் கூட உரசிக்கொள்கின்றனவாம்.முதல் சரணத்தோடு நின்று மீண்டும் சில காட்சிகளுக்குப் பிறகு சோகமாக ஒலிக்கிறது இப்பாடல்.

   மேரியின் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.தான் தேர்வு எழுதப்போகும்போது அம்மா சொல்லியும் கூட, இந்த தேங்காய் நமக்கு இரண்டு வாரத்துக்கு கறிக்கு உதவும் என மறுத்துவிட்டுப் போகும் விச்சு,மேரிக்காக கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுகிறான்.மேரி கேட்கும்போது அசடு வழிந்தபடி உண்மையைச் சொல்கிறான்.அவள் தேர்வில் தேர்ச்சியடைந்துவிட்டால் மேற்படிப்புக்காக அவள் வீட்டில் மீண்டும் பட்டணத்தில் அனுப்பி விடுவார்கள்.அவளைத் தினமும் பார்க்கமுடியாமல் போய்விடும்.எனவே அவள் தேர்வில் தோல்வி அடைந்துவிடவேண்டும் என வேண்டிக்கொண்டதாய் அவன் சொல்ல,சிரித்துவிடும் அவள் தானும் அதையே வேண்டிக்கொள்கிறாள்.ஆனால் எதிர்பாராவிதமாக மேரி தேர்வில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவிட,அவள் காதலைத் தடுக்கும் எண்ணத்தில் சில்க் தன் கணவனிடம் சொல்லி,மேரியை கல்லூரிக்கு அனுப்பிவிட திட்டமிடுகிறாள்.
       மேரி அழுதுக்கொண்டே தன் நிலை குறித்து கடிதம் எழுதி,ஹார்மோனியப் பெட்டியில் வைத்து அனுப்புகிறாள்.மேரி மேல்படிப்புக்குச் செல்வதால் இனி சங்கீத வகுப்பு தேவையில்லை என சொல்லி,தட்சணை எல்லாம் கொடுத்து விச்சுவின் அம்மாவை அனுப்பி வைக்கிறான் மேரியின் அண்ணன்.வழியில் ஒரு கல்லில் சிக்கி,மாட்டு வண்டி தடுமாற,மேரி எழுதிய காகிதம் விச்சுவின் அம்மாவின் கண்களில் படுகிறது.எடுத்துப் படித்துப் பார்ப்பவள் அதிர்ந்து போகிறாள்.விசயம் வெளியே தெரிந்தால் தன் மகனைக் கட்டி வைத்து அடிப்பார்களே என்ற எண்ணத்தில் கடிதத்தைக் கிழித்து எறிகிறாள்.அது விழியில் விழுந்து,இதயம் நுழைந்து,உயிரில் கலந்த உறவே என ஒவ்வொரு வார்த்தையாக துண்டு துண்டாக போய் விழுகிறது.அவள் கடற்கரையில் காத்திருக்க,அவன் கடிதம் காணாமல் ஏங்கி நிற்கிறான்.மீண்டும் அப்பாடல் தொடர்கிறது.உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம் என்ற வரிகள் ஒலிக்கும் நேரத்தில் கார்த்திக் எதையோ உணர்பவனாய் அவளைத் தேடி ஓடுகிறான்.அதாவது அவளது உயிர் உருகும் சத்தம் அவனுக்குக் கேட்டுவிட்டதாம்.எத்தனை சுகமான கற்பனை?

  இப்பாடலின் ஒவ்வொரு வரியும் ஜீவனுள்ளவை.ஒரு பெண்ணுக்கு தான் நேசிக்கும் ஆண்மகன்தான் மிகச் சிறந்தவனாக தோன்றுவான்.எந்த விசயமாக இருந்தாலும் அவனிடம்தான் சொல்ல தோன்றும் முதலில்.யாராவது ஏசிவிட்டாலோ,அடித்துவிட்டாலோ,காயப்படுத்திவிட்டாலோ அன்புக்குரிய அவனிடம்தான் முதலில் முறையிட தோன்றும்.இந்தப் பாடலும் அப்படிதான்.கடிதத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் வரிகளாய் அமைந்திருக்கிறது. முதலில் சங்கீத ஸ்வரங்களில் ஆரம்பித்து,ஸாஸ நிநி என ஆரம்பிக்கும் ஸ்வரத்தில் அதே ராகத்தில் இளையராஜாவின் குரலில் விழியில் விழுந்து என ஆரம்பிக்கும்போதே மனதை வருட ஆரம்பித்துவிடுகிறது இப்பாடல். பொதுவாக ஆணின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளுக்கு ஆண் பாடகர்கள்தாம் குரல் தருவார்கள்.இப்பாடலில் விச்சு எழுதிய வரிகளை மேரி பாடுவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால் பெண்குரல் சசிரேகாவின் குரலே அதிகம் ஒலிக்கிறது.தகத்தோம் என்ற ஜதியில் மீண்டும் ஆண்குரல் வருகிறது.

   இப்பாடலின் பல்லவியில் அந்திப் பொழுதில் கடற்கரையில் காத்திருப்பதாக தூது விடும் வகையில் அமைந்திருக்கின்றன வரிகள்.முதல் சரணத்தில் விச்சு அவளை வர்ணிக்கிறான்.அவள் பட்டு உடுத்தினால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறுமாம்.அவள் மல்லிகையைச் சூடிக்கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வந்துவிடுமாம்.எத்தனை அழகான வரிகள் அவை?முதல் சரணம் முடியும்வரையில் காதல் ஏக்கத்தையும்,அபத்தங்களையும் இரசனையோடு சொல்லும் வரிகள் அதற்குப் பின் வலிகள் சுமந்து வெளிப்படுகின்றன.தன்னை கல்வி கற்க அண்ணன் வெளியூர் போக சொல்வதை காதலனிடம் சொல்கிறாள்.துடிக்கும் தன் நிலையை கரையில் எடுத்துப்போட்ட மீனோடு ஒப்பிடுகிறாள். பெண்களுக்கே உரிய குணங்களில் ஒன்று எந்த விசயமாவது அழவைத்துவிட்டால் உடனே நேசத்திற்குரிய ஆணுக்கு நாம் அழுதது தெரியவேண்டும்.அவன் நம்மை ஆறுதல் படுத்தவேண்டும். என்ற எதிர்பார்ப்பு.பின்னர் நாம் அழுதது தெரிந்துவிட்டதே என்று எழும் மெல்லிய கூச்சம் கூட அவன் மீதான நேசத்தையும்,உரிமையையும் அதிகப்படுத்தும்.இந்தப் பாடலில் மேரியும் அப்படிதான் அழுது முடித்த விழிகளோடு காத்திருப்பேன் என காதலனுக்குச் சொல்கிறாள்.அதேவேளையில் எது நடந்தாலும் தன் ஆணை வேறு எந்தப் பெண்ணுக்கும் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியோடு இருப்பதை,தனக்கு அவன் மீது இருக்கும் ஆழமான அன்பை,உரிமையை,ஏக்கத்தை,சோகத்தை,பொறாமையை எல்லாம் எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம் என்ற ஒரே வரியில் சொல்லிவிடுகிறாள்..இப்போது சொல்லுங்கள்??அந்த வரிகள் முத்தத்திற்காக ஏங்கும் மனநிலையைக் குறிப்பவையா??உன்னை வேறு எவளும் தொட்டுவிடக்கூடாது என்று தேம்பிக்கொண்டே ஒருத்தி பாடுவதுபோன்றதொரு பிம்பத்தை இப்போது உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா?இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் மட்டுமல்ல,இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் வைகறைப் பொழுதில் கூட இப்பாடலைக் கேட்டபடி உங்கள் அன்பிற்கினியவர்களை நினைத்துப் பாருங்களேன்.அவர்களின் மீதான ஏக்கம் பலமடங்கு கூடும் என்பது திண்ணம்.இப்பாடலை எழுதி முடித்த இந்தப் பொழுது வரையில் என் நினைவில் நிறைந்திருக்கும் என் அன்பிற்கினியவனோடு சேர்த்து உங்களுக்கும் இந்தப் பாடல் வரிகள்.

ஸ க ம ப நி ஸா..
ஸா நி ப ம க ஸ..
மமபா பப பா.. கமப கமக ஸா..
நிநிஸ காக கஸஸா.. நிநிஸ காக மமபா..
ஸாஸ நிநி பாப மாம காக ஸாஸ நிநி ஸா

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே



உன் வெள்ளிக் கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னல்களும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்.




விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க காலை செல்ல
அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை
கரையில் தூக்கிப் போட்டான்.


விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்


 உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்


Friday, April 5, 2013

தவறுகள் உணர்கிறோம்



                                           தவறுகள் உணர்கிறோம் -  1

தெய்வம் வாழ்வது எங்கே???
தெய்வம் வாழ்வது எங்கே??
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்.....


   சிம்புவின் நடிப்பில் என்னை மிகவும் கவர்ந்த படமான வானம் திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல் அது.தாம் செய்த தவறுகளை உணரும் மனத்தில்தான் தெய்வம் வாழ்கிறது.நம் தவறுகளை எப்போது உணர்கிறோம்?உணர்ந்ததையும் சில வேளைகளில் மறைக்கிறோம்தானே? பிரிவு,உயிர் பிரியும் நேரம்,நமக்கு ஏற்படும் இழப்பு,கால ஓட்டம் ஆகியவைதான் நம் தவற்றை நமக்கு உணர வைக்கும் நானும் சில தவறுகளைச் செய்து உணர்ந்து வந்திருக்கிறேன்,தவறுகளை உணர்ந்த தருணங்களை உங்களோடு பகிர விழைகிறேன்.
     என் அனுபவங்களின் வாயிலாக நான் கண்டதில் முதன்மையாய் ஒரு மனிதனை அவனது தவறுகளை உணரச்செய்வது உயிர்’.ஓர் உயிர் பிரியும் அல்லது பிரியப்போகும் தருணத்தை உணரும்போது எந்த மனிதனும் தான் செய்த தவற்றையெண்ணி துடிக்கிறான்.
   ஒன்றாம் ஆண்டுக்கு ஆசிரியையாக சிறிது காலம் பணியாற்றியபோது நடந்த சம்பவம் இது.என் வகுப்பு மாணவர்கள் வெகு சுட்டி.என்னிடத்தில் மிக நெருக்கமாகவும்,அன்பாகவும் பழகுவார்கள்.எனக்கும் அதற்குமுன் அனுபவம் இராததால் முழுமையாய்க் குழந்தைகளைக் கையாளத் தெரியாத நிலை.வகுப்பில் சூரியா என்றொரு சிறுவன் இருந்தான்.ஒருநாள் தேர்வு சமயத்தில் சூர்யா பச்சை நிறத்தில் இருந்த ஒரு மூக்குக் கண்ணாடியைப் பள்ளிக்கு எடுத்து வந்திருந்தான்.அவனுடைய முகத்தைப் பெருமளவு நிறைத்திருந்த அக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு அவன் செய்த அலப்பறை இருக்கிறதே அப்பப்பா... அஃதிலும் தேர்வு நேரத்தில் அவன் அந்த மாதிரி செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஏற்கனவே சில மூத்த ஆசிரியர்கள் நான் குழந்தைகளை அதிகமாய்க் கொஞ்சிக்கொண்டிருப்பதாக குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டிருந்தார்கள்.எனவே சூரியாவை கண்ணாடியைப் புத்தகப்பையில் வைத்துவிட்டு தேர்வைக் கவனிக்க சொன்னேன்.அவன் என் பேச்சைக் கேளாமல் தொடர்ந்து அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு வகுப்பறையைச் சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தான்.நான் சூரியாவின் கண்ணாடியைக் கழற்றி கரும்பலகையின் மத்தியில் மாட்டப்பட்டிருந்த ஆணியில் மாட்டி வைத்துவிட்டேன்.சூரியா அழவும் இல்லை,கத்தவும் இல்லை.தேர்வெழுதி முடித்தபிறகு எடுத்துக் கொடுப்பதாக சொல்லிவிட்டதால் அமைதியாக எழுதினான்.ஆனால் அடிக்கடி எழுந்து வந்து கரும்பலகையை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தது அந்தக் குட்டி உருவம்.அதற்குள் என் பாடம் முடிந்துவிடவே,வேறொரு வகுப்புக்குச் சென்றுவிட்டேன்.அந்தக் கண்ணாடியைப் பற்றி அப்படியே மறந்தும்விட்டேன்.
   பள்ளி முடிந்து நெடுநேரம் ஆனபிறகே ஞாபகத்திற்கு வந்து,வகுப்பறையைப் போய்ப் பார்த்தபோது அந்தக் கண்ணாடி அங்கு இல்லை.கடைசியாக வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியையும் தான் எடுத்துக்கொடுக்கவில்லை என்றார்.அக்கண்ணாடியை வேறு யாரோ எடுத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்தேன்.மனம் கொஞ்சம் உறுத்தியது.பிள்ளை அந்தக் கண்ணாடிக்காக எப்படியெல்லாம் ஏங்கியிருப்பான் என யோசிக்கையில் மனம் கனத்தது.வீடு திரும்பும் வழியில் அதே மாதிரியான பச்சைநிற கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்தேன்,மறுநாள் கொடுத்துவிடலாம் என்று.
  மறுநாள் சூரியா பள்ளிக்கு வரவில்லை.அதற்கடுத்த மூன்று நாளும் வரவில்லை.என்னவாகியிருக்கும் என யோசித்துக்கொண்டிருந்தபோது சூரியாவின் அம்மா என்னை அழைத்தார்.அழுதுகொண்டே அவர் சொன்ன விசயத்தைக் கேட்ட நான் துடித்துப் போனேன்.சூரியாவுக்குத் திடீரென காய்ச்சல் அதிகமாகி பரிசோதித்ததில் அவனுக்கு டிங்கி காய்ச்சல் கண்டிருப்பதை அறிந்திருக்கிறார்கள்.சூரியா மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக அவன் அம்மா அழுதபோது எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.சூரியா இறந்துவிடுவானோ என்ற பயம் என்னை ஆக்ரமித்தது.வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக பூஜை அறையில் மண்டியிட்டு அழுதேன்.நெடுநேரம் கண்கலங்க அவனுக்காக பிரார்த்தனை செய்தேன்.
   தொடர்ந்து இரண்டு நாள்கள் என்னால் சரியாக தூங்கவோ,சாப்பிடவோ முடியவில்லை.கழுத்து வலிக்க கண்ணாடியை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்த அந்தக் குட்டிப்பையனின் உருவம் என் கண்ணுக்குள் வந்து என்னை இம்சைப்படுத்தியது.வெறும் இரண்டு வெள்ளி பொருளாக இருந்தாலும் அந்தக் கண்ணாடி அவனை எந்தளவுக்கு கவர்ந்திருக்கக்கூடும்?எடுக்க முடியாத தூரத்தில் இருந்த கண்ணாடி அவனை எந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கும்.கண்டிப்பாக வீடு திரும்பும்போது நான் வந்து எடுத்துக்கொடுத்துவிட மாட்டேனா என ஏங்கியிருப்பான் தானே?ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் மீதான அவனுடைய கடைசி பதிவு எப்படி இருந்திருக்கும்?நான் கண்ணாடியை வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பறித்து,கரும்பலகை ஆணியில் மாட்டிவைத்த காட்சிதானே அவனுக்குள் கடைசியாய்ப் பதிவாகியிருக்கும்?
  குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று தின்றது.அறிந்து செய்யவில்லையென்றாலும் ஒரு பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு பெரிய ஏமாற்றத்திற்குள்ளாக்கி காயப்படுத்தியிருக்கிறேன்,அதைத் திருத்திக்கொள்வதற்கு எனக்கொரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.நல்லவேளையாக அதிர்ஷ்டவசமாக சூரியா டிங்கி காய்ச்சலிலிருந்து மீண்டுவிட்டான்.அவன் குணமாகி பள்ளிக்கு வந்ததும் நான் செய்த முதல் வேலை,அவன் தலையை வருடிக்கொடுத்து,அவனிடம் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்டு,அவனுக்காக வாங்கி வைத்த கண்ணாடியைக் கொடுத்ததுதான்.அந்தக் கண்ணாடியைப் பார்த்தபோது அவன் அடைந்த பரவசம் என் குற்ற உணர்ச்சியைப் போக்கி,என்னை மகிழ்ச்சிப்படுத்தியது.




உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

தொடரும்....