Tuesday, June 14, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 19


தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 19

 

லட்சம் கனவு கண்ணோடு….
லட்சியங்கள் உன்னோடு….
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு....

    யார் யார் வாழ்வில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் காலம் தன் கடமையைச் செய்ய மட்டும் எப்போதுமே மறந்ததில்லை.
    இருபத்தெட்டாம் தேதி நவம்பர் மாதம்.
    வருணுக்கு வானொலி ஆறில் கடைசி நாள்.பழம்பாடல் நேயர் விருப்பத்தின் கடைசி பாடலை ஒலியேற்றியபோதே அவனுடைய கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தன.இனி மீண்டும் எப்போது இந்த வாய்ப்பு?
    அவனுக்கு வானொலி ஆறை விட்டுப்போவதில் பெரும் வருத்தம் இருக்கவே செய்தது.இருந்தபோதிலும் என்ன செய்வது?வாய்ப்புகள் தேடி வரும்போது அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா?கடைசியாக ஒரு முறை அங்கிருந்த பொருட்களை, தான் அமர்ந்திருந்த நாற்காலியை,கணினியை, ஒலிபெருக்கியை.... எல்லாவற்றையும் ஆசையாய் தடவிப் பார்த்துக் கொண்டான்.
   கடைசி பாடல் முடிந்து இறை அருள் ஒலிபரப்பானது.கடைசியாக பேச வேண்டிய வார்த்தைகளைத் தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டான் வருண்.அவனுடைய தொண்டை கட்டிக்கொண்டது.தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தான்.
    வாய்ப்பிருப்பின் மீண்டும் சந்திப்போம்,என்றென்றும் உங்கள் வருணன்,” கலங்கிவிட்டிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டே நேயர்களிடம் விடைபெற்றான்.
    அவனுக்குப் பிறகு நிகழ்ச்சியைத் தொடர்வதற்காக யோகேஸ்வரி வந்தாள்.வழக்கமாக அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு செல்பவளுக்கு அன்று வானொலி நிலையத்தில் அவனைக் கடைசியாய் எதிர்கொள்ளும் துணிவு இல்லை.எனவே அவன் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்காமல் போனாள்.
    ஒலிபரப்பு அறையைவிட்டு வெளியே வந்த வருண் கண்கலங்கியிருந்தான்.சக அறிவிப்பாளர்களும் அவன் பிரிவுக்காய் அழுதார்கள்.ஒன்றாய்ச் சேர்ந்து பணியாற்றியது. பசியாற்றியது யாவுமே அவர்களின் நினைவில் நிழலாடியது.வெளியில் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்.ஆனால் ஒரே வளாகத்தில் பார்த்துக்கொண்டது, அரட்டையடித்தது போன்று அது வருமா?” கனத்த மனதுடன் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று வந்தான்.
    உன் குரல் என் மகனோட குரல் மாதிரியே இருக்குன்னு சொல்வேனே? இனி எப்பய்யா உன் குரலைக் கேக்கப் போறேன்?”
   அவனுக்கு வழக்கமாக அழைத்துப் பேசும் மீனாட்சியம்மாளும் கண்கலங்கி அவனை அழவைத்தார்.
   கடைசி என்று வரும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?” என்று முன்தினம் நிகழ்ச்சி படைத்த வருண் அனுபவப்பூர்வமாய் அந்த வேதனையை அனுபவித்தான்.அவன் வீட்டை அடைந்த நேரம் அகல்யா அவனுக்குப் போன் செய்தாள்.
  எனக்கு என்னமோ மாதிரி இருக்கு வருண், அழுதாள் அவள்.
  நான் இப்பதான் அழுது முடிச்சேன்,நீ வேற ஏன் அகல்யா அழற?அழாதேடா,
  இனிமே எப்படி வருண்? என்னதான் இருந்தாலும் ரேடியோவுல உங்க குரலைக் கேட்டுக்கிட்டே தூங்கற அந்த சந்தோஷமான நேரத்துக்கு இணையா எதுவுமே வராதே?”
  என் குரல் இனி உனக்குதானே சொந்தம் அகல்யா,இன்னும் ரெண்டு வருஷம்.நீயும் உன் டிகிரியை முடிச்சிடுவே, தேன்மொழிக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துட்டு நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம்,அதுக்கப்புறம் தினமும் என் குரலை நேரடியாவே கேட்டுக்கிட்டு தூங்கலாம் நீ்,” வருண் அவளைச் சமாதானப்படுத்தினான்.
   எனக்கு இப்பவே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும் போல இருக்கு,” நிஜமாகவே அவளுக்கு அந்த ஏக்கம் வந்தது.வருண் சொன்ன மாதிரி அவனுடைய குரல் நேரில் தன்னைத் தாலாட்டி தூங்க வைக்கப் போகும் நாளை எண்ணி ஏங்கினாள் அவள்.

  • * * * * *
     வருணுடைய கடைசி நிகழ்ச்சியைத் தேன்மொழியும் கேட்டுக் கொண்டிருந்தாள்.அவளுக்கும் வருத்தமாக இருந்தது.வருண் வானொலி ஆறை விட்டு விலகப்போவது அவள் ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் அந்தப் பிரிவை நேரடியாக அனுபவிக்கும்போதுதான் அந்த வேதனையை உணர முடிந்தது அவளால்.அவள் வேதனைப்பட்டு கிடந்த சமயங்களில் அவனுடைய குரல்தான அவளுக்கு ஆதரவாக இருந்தது.வானொலியில் அவன் ஒலிபரப்பிய எத்தனையோ தன்முனைப்புப் பாடல்கள் அவளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
    இனிமே வருண் மாமா குரலை வானொலியில் கேட்க முடியாதாக்கா?” கயல்விழி வேதனைப்பட்டாள்.வருண் வானொலி ஆறிலிருந்து விலகுவதை அவளிடம் தேன்மொழி சொல்லவில்லை.சொன்னால் அவள் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பாள்.தேர்வுக்காக இரவில் கண்விழித்து படிக்கும்போது வருண் நிகழ்ச்சி படைக்க வந்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியோடு படிப்பவளாயிற்றே?”
    இனிமே நான் ராத்திரியில படிக்கும்போது வானொலியைத் திறக்க மாட்டேன்க்கா,” வருண் மீது கொண்டிருந்த அளவு கடந்த பாசம் அவளை அவ்வாறு பேச வைத்தது.அவளை ஆறுதல்படுத்தி அனுப்பிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள் தேன்மொழி.
   ஏழு வருடம் பழக்கமான வருண் மீதே இவ்வளவு பாசமாக இருக்கிறாளே? 19 வருடம் உடன் வளர்ந்த தன்மீது அவளுக்கு இன்னும் எவ்வளவு பாசம் இருக்கக்கூடும்,அவளை விட்டுவிட்டு சாகத் துடித்தாளே ஒரு காலத்தில்??டஒரு வேளை இவள் அப்போதே இறந்து போயிருந்தால் கயல்விழி என்னவாகியிருப்பாள்? இவள் அம்மா இறந்தபோது எப்படி குடும்பபொறுப்பு இவள் தலையில் விழுந்ததோ அந்த மாதிரி அப்பாவையும் வீட்டையும்  பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையை கயல்விழி ஏற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.இவளை மாதிரியே அவளும் ஒன்றும் தெரியாத அப்பாவியாய் வளர்ந்திருப்பாள்.இவளை மாதிரி அவளையும் எவனாவது காதலில் ஏமாற்றி….
   நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை,அம்மாவின் ஆசைப்படி கயல்விழி நிச்சயம் படித்து பட்டதாரி ஆகிவிடுவாள்.அந்த நம்பிக்கை தேன்மொழிக்கு இருந்தது.அதற்காகதானே இரவு பகல் பாராமல் இவ்வளவு பாடுபடுகிறாள்?
    ஒரு சிலர் காதலில் தோற்றதோடு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். ஆனால் இன்னும் சிலரோ வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவிலான ஒரு வாழ்க்கையைதான் வாழ்கிறார்கள்.தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்காக அவர்கள் தங்கள் வேதனைகளை உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
  இக்கால பெண்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள் என்றாலும் எல்லா பெண்களாலும் அது முடியாதே.தேன்மொழியும் அப்படிதான்.பிரியனால் ஏற்பட்ட அவமானத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ள இயலாமல் அன்றே இறந்திருக்க வேண்டியவள். பெருமளவு காயங்கள் குறைந்திருந்தாலும் அவளுக்கு ஏற்பட்ட அந்தத் தோல்வியும் ஏமாற்றமும் முழுமையாய் அவளைவிட்டு விலகப்போவதில்லை.ஆனாலும் தன் குடும்பத்திற்காக எல்லா காயங்களையும் மறந்துவிட தயாராகிவிட்டாள்.
   ஒரு காலத்தில் பிரியனுடைய காதல் மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்தது.ஆனால் இப்போது அப்படி அல்ல,வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் தன் இலட்சியங்களில் வெல்ல வேண்டும் என்ற வெறியும் அவளுக்குள் முதன்மையானதாக இருக்கிறது.
   பிரியனைவிட எல்லாவற்றிலும் சிறந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வாழக்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றெடுக்கத் தொடங்கிவிட்டது.அவளுக்கு நிச்சயம் நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும்.அதே வேளையில் தன்னுடைய எல்லா இலட்சியங்களிலும் நிச்சயம் வெல்வாள்.வாழக்கையில் யாவற்றையும் சாதிப்பாள்.நாமும் உடனிருந்து அவளுக்காக பிரார்த்திப்போம்.





முற்றும்…..

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 18

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 18

 
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே….
கண்களில் ஏனிந்த கண்ணீர்
அது யாராலே…???

         தேன்மொழி வருணின் வருகைக்காக காத்திருந்தாள்.வருண் சொல்லப்போகும் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தாள்.மனதில் ஒரு கவலையுடனேயே அவனை நெருங்கினாள் வருண்.
         என்னா முடிவு எடுத்திருக்கீங்க வருண்?”
         வருண் தடுமாறினான்.தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவனுக்கு.
         முதல்ல உன் முடிவைச் சொல்லு தேன்மொழி,
         எனக்கு இன்னும் ரெண்டு வருசத்துக்கு கல்யாணம் வேண்டாம்னு தோணுது வருண்,
         அவளுடைய பதில் அவன் மனதில் கொஞ்சம் நம்பிக்கை ஊற்றியது.அந்த இரண்டு வருட கால அவகாசத்தில் தேன்மொழிக்குத் தன் நிலையை நிதானமாக எடுத்துச் சொல்ல வாய்ப்பிருந்தாலும்  இருக்கக்கூடும் என்ற சிறிய நம்பிக்கைதான் அது.
          எதுக்காக ரெண்டு வருசம்னு கேட்க மாட்டீங்களா?”
          எதுக்கு?”சுரத்தேயில்லாமல் கேட்டான்.
          கயல்விழியோட மேல்படிப்புக்கு எல்லா வசதியையும் செஞ்சி கொடுக்கனும்,அப்புறம் புதுசா இன்னொரு வியாபாரமும் தொடங்கலாம்னு திட்டம் வெச்சிருக்கேன்,”
          சரி. உன் விருப்பப்படியே செய்யலாம்,”
          குழந்தையைப் போல் துள்ளி குதித்தாள் தேன்மொழி.
          ரொம்ப நன்றி வருண்,அப்பா என்கிட்ட கல்யாணப் பேச்சை எடுத்ததும் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா?அதுவும் உங்ககிட்ட சொல்லி எனக்கு மாப்பிள்ளை பாக்க தேட போறதா சொன்னதும் இன்னும் பயந்து போயிட்டேன்,
          என்ன? திரும்ப சொல்லு,” அவனுக்கு அவள் சொன்னது சரியாக விளங்கவில்லை.
          ராமசாமி அவளிடம் சொன்னதை அப்படியே சொன்னாள்.
          அப்பாவுக்கு நான் பழசையெல்லாம் மறந்து மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை.நீங்க சொன்னாதான் நான் கேட்பேனாம்,அதனால உங்களையே எனக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்க சொல்ல போறதா சொன்னாரு,” அதிர்ச்சியும் பிரமிப்பும் ஒரு சேர நின்றான் வருண்.
         என் மனசுல என்னென்ன ஆசை இருக்கு என்று தெரிஞ்சிக்காம நீங்க என்னைக் கல்யாணத்துக்குத் தயாராக சொல்ல மாட்டீங்க என்ற நம்பிக்கை இருந்தாலும் லேசா பயமும் இருந்துச்சி,நல்லவேளை என் மனசை புரிஞ்சிக்கிட்டீங்க,ஆனா சத்தியமா பிரியனுக்காக மட்டும் நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லல.எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் கொஞ்சம் இருக்கு.அதுக்கு என் கல்யாணம் தடையா அமைஞ்சிட கூடாது,
        தேனும்மா நீ சொல்றதெல்லாம் நெஜமா?” உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்தான் வருண்.
        அப்படியானால்....அப்படியானால்……?”
        எனக்கு எது நல்லது கெட்டது எல்லாமே என்னைவிட உங்களுக்குதான் நல்லா தெரியும்,அதனால நீங்களே எனக்கு மாப்பிள்ளை பாருங்க,”
        ரொம்ப நன்றி தேனும்மா,” என்று முதன்முதலாய் அவளுடைய கையில் தன் கையை வைத்து அழுத்தி சொன்னான்.
        தான் மனம் மாறி திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதுதான் அவனுடைய சந்தோஷத்திற்குக் காரணம் என்று தேன்மொழி நினைத்துக்கொண்டாள்.
        இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ன?” அன்று தேன்மொழியின் அப்பா சொன்னதை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்தான்.
        தேன்மொழி உன்மேல ரொம்ப பாசம் வெச்சிருக்கா வருணா,அவளோட வாழ்க்கை நல்லபடியா அமையறது உன் கையிலதான் இருக்கு, இப்படிதானே அவர் அன்று அவனிடம் சொன்னார்.இவன்தான் அதை தப்பாக நினைத்துவிட்டான்.
        ஐயோ தேன்மொழி உன்னைப் பற்றி முழுவதும் அறிந்து வைத்திருக்கிறேன் என்றாயே? உன் மனதிலிருப்பதைத் தப்பாக எண்ணிவிட்டேனே?”
        தேன்மொழியின் மனதில் இவன் மீது எந்த ஆசையும் இல்லை,களங்கப்படாத மனதுடன் மிக மிக தெளிவாகவே இருக்கிறாள் அவள்.
        நல்லவேளை,அவசரப்பட்டு அவளிடம் எதையும் சொல்லித் தொலைக்கவில்லை.தேன்மொழியைப் பற்றி இவன் நினைத்தது அவளுக்கு கடைசிவரை தெரியாமல் போய்விட்டது.தெரிந்திருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?என்னைப் பற்றி நீங்கள் அறிந்தது இவ்வளவுதானா என்று அவள் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இவன் எப்படி தாங்கியிருப்பான்?
       அகல்யா இந்த விசயத்தைக் கேள்விப்பட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்?
        :உன் வருண் உனக்குதான் அகல்யா,
        வருணுக்கு அகல்யாவை நேரில் பார்த்து எல்லாவற்றையுமம் சொல்லவேண்டும் போல் இருந்தது.கொஞ்ச காலத்திற்கு அவளுடைய கோபம் தீரும் வரை அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் வருண் இரண்டு நாட்களாக அவளைப் பார்க்காமல் இருந்தான்.தொலைபேசியிலும் அவளைத் தொடர்புக் கொள்ளவில்லை.
        இப்போது உடனே அவனைச் சந்தித்து எல்லாவற்றையும் சொல்லவேண்டும் போலிருந்தது.அவளைத் தேடிப்போனான்.மினிமார்க்கெட்டில் நின்றுகொண்டு அவளுக்குப் போன் செய்தான்.அவளுக்குப் பதில் ரேணுதான் வந்தாள்.அகல்யா தலைவலியால் படுத்திருப்பதாகச் சொன்னாள்.
       வருணுக்கு அகல்யாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தாலும் பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் வீடு என்பதால் தயங்கினான்.அவனது தயக்கத்தை ரேணு புரிந்து கொண்டாள்.
       பரவால வருண் சார், என்னை உங்க தங்கச்சி மாதிரி நெனைச்சுக்குங்க,வீட்டுக்குப் போயி அகல்யாவைப் பாருங்க.எனக்கு இப்ப க்ளாஸ் இருக்கு,நான் போறேன்,” ரேணு கிளம்பியதும் அகல்யா தங்கியிருந்த வீட்டுக்குப் போனான் வருண்.
       முகமெல்லாம் வெளுத்துப் போய் இருந்தாள் அகல்யா.தன்னால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் அவளுடைய இந்த நிலைக்குக் காரணம் என அவனுக்குப் புரிந்தது.அவளது நெற்றியில் கைவைத்தான்.அவள் அவனுடைய கையைத் தட்டிலிட்டாள்.
      இந்த பொய்யான அக்கறையெல்லாம் வேண்டாம் வருண்,நான்தான் உங்க மேல உயிரையே வெச்சிருந்தேன்.ஆனா நீங்க அப்படி இல்ல. எனக்கு வேனும்னா உங்ககிட்ட சொல்றதுக்கு ஆயிரம் விசயங்கள் இருக்கலாம்.ஆனா உங்களுக்கு என்கிட்ட சொல்றதுக்கு ஒரு விசயம் கூட இல்ல.உங்க மனசுல எத்தனையோ விசயங்களுக்கு அப்பால்தான் நான் இருக்கேன்,”
  நீங்களும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்,ஆனா இப்ப என்னவோ நான் என் வாழ்நாள்ல உங்களை சந்திக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு தோனுது,” உடம்புக்கு முடியாத பட்சத்திலும் கோபமாகவே பேசினாள் அவள்.
       நான் பழைய மாதிரியே இருந்துக்கறேன்,இனிமே உங்க அழைப்ப எதிர்பார்க்க மாட்டேன்.உங்க வருகையை எதிர்பார்க்க மாட்டேன்.பழைய மாதிரி உங்க போட்டோவை என் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உங்க குரலைக் கேட்டுக்கிட்டே தூங்கிடுவேன்.எவ்வளவு தைரியமான பொண்ணு தெரியுமா நானு? உங்க விசயத்துல மட்டும் கோழையாகிடறேன்,” அவள் கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது.முதல் தடவையாக அவள் அழுவதைப் பார்க்கிறான் வருண்.
       சற்று முன்னர் கோபமாக பேசியவளா இவள்?”
       மண்டு, எல்லாவற்றையும் சொந்தமாக கற்பனை பண்ணிக்கொண்டு அழுகிறாள்.”
      அழுதுக்கொண்டிருந்த அவளை மெல்ல நிமிர்த்தி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.கட்டுப்பாடுகள் தளர அவளை நிமிர்த்தி வெப்பமாயிருந்த கன்னங்களிலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
     நான் உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன் வருண்,உங்களை என்னால யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது,” அவளது கண்ணீர்த்துளி அவனுடைய சட்டையை நனைத்தது.அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் வருண்.தன்னுடைய உடல் வெப்பத்தை அவனும் உணரும் அளவுக்கு அவனோடு இறுக்கமாய் ஒட்டிக்கொண்டாள் அகல்யா.







தொடரும் …………….. 
    
             

Friday, June 10, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 17

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 17

 

கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே?


   நாட்கள் இரண்டு கடந்துவிட்ட பின்பும் அகல்யா கொடுத்து போன காயத்தின் வலி குறையவேயில்லை வருணுக்கு.அகல்யா பேசிப் போன வார்த்தைகள் வருணைக் காயப்படுத்தினாலும் அவள் மீது அவனுக்குக் கோபமே வரவில்லை.அவளுடைய மனநிலையிலிருந்து பார்த்தால் அவள் பேசுவதும் நியாயமாகவே தோன்றியது அவனுக்கு. பாவம் அகல்யா,தன்னால் அதிக காயப்பட்டுவிட்டாள்.
  ஒரு பெண்ணைக் காயப்படுத்தாமலிருக்கப் போய் இன்னொரு பெண்ணை அழவைத்துவிட்டாயே,” என்று மனம் உறுத்தியது.
  தன்னைப் பார்க்காமலேயே தன்னுடன் பேசாமலேயே தன்னைப் பற்றி எதையும் அறியாமலேயே நேசத்தை வளர்த்துக் கொண்டவள் என்றால் தன்மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் அவளுக்கு?தன் காதல் நிச்சயம் நிறைவேறும் என்று எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறாள்.அந்த நம்பிக்கையும் உறுதியும் தன் மீது தனக்கே இல்லாமல் போனதேன்?
  பாவம் அகல்யா,முதன்முதலில் அவன் அவளைப் பொருட்படுத்தாததுபோல் நடந்து கொண்டபோது எப்படி வாடிப்போனாள்.பிறகு இவன் தன் காதலை அவளிடம் சொன்ன அந்தக் கணத்தில் அவள் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் அழுகைதானே வந்தது?எந்நேரமும் இவனைப் பற்றியே யோசிப்பவள்,எப்போதும் எதையாவது செய்து அவன் மனதை நெகிழ வைத்துவிடுவாள்,ஒரு முறை அப்படிதான் திடீரென காலையிலேயே அவனைத் தேடி அங்காசபுரிக்கு வந்தாள்,அப்போதுதான் அறிவிப்புப் பணியை முடித்துக்கொண்டு வந்தவனுக்கு அவளுடைய வருகை இன்ப அதிர்ச்சியைத் தந்தது,
   உங்களுக்கு ஒன்னு கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்,சொல்லிவிட்டு பெரிய அஞ்சல் உறை ஒன்றை அவனிடம் நீட்டினாள்.
   இதுதானா?” வருண் அலட்சியமாய்ச் சொல்ல அதன் பொருள் புரிந்தவளாய் அவனைத் தலையில் குட்டினாள் அகல்யா.
   வருண் அந்த உறையைப் பிரித்துப் பார்த்தான்.உள்ளே லேமினேட் செய்யப்பட்ட ஒரு தாள் இருந்தது,வருணுடைய புகைப்படத்தை நடுவில் ஒட்டி. அதைச் சுற்றிலும் வர்ணமயமாக என்னவோ எழுதியிருந்தாள்.
   இதெல்லாம் என்ன?”
   அதுவா? நீல கலர்ல எழுதியிருக்கேனே? அடடா,ஹாஹாங்,ம், ம்ஹூஹூம்,அதெப்படி?’ இதெல்லாம் நீங்க அறிவிப்பு செய்யறப்ப அடிக்கடி பயன்படுத்தற வார்த்தைகள். அப்புறம் சிவப்பு வர்ணத்துல நெறயா ஸ்மைலி வரைஞ்சிருக்கேனே அதெல்லாம் உங்க சிரிப்புன்னு அர்த்தம்,கடைசியா கலர் கலரா எழுதியிருக்கேனே அதெல்லாம் நீங்க செய்த தவறுகள்.ஒரு நாளு தேதியைத் தவறுதலா சொல்லிட்டீங்க.இன்னொரு நாளு சூரியனைக் கண்ட பனிபோல என்ற பழமொழியைச் சொல்லிட்டு அது மரபுத்தொடர்னு சொன்னீங்க,இப்படி நீங்க உளறினதையெல்லாம் நோட் பண்ணி எழுதியிருக்கேன்,
   சரி ஏன் ஸ்மைலி மட்டும் நிறைய இருக்கு?நான் என்னா அதிகமாவா சிரிக்கிறேன்?”என்றhன் அப்பாவித்தனமாய்.
  உங்களுக்கே தெரியனும் அது,அதுவும் பொண்ணுங்ககிட்ட பேசும்போது ஒரேயடியா இளிப்பீங்களே?” அவள் வேண்டுமென்றே சொன்னாள்.
  இன்னொரு சமயம்....ஓ போதும் மனமே, வேண்டாம்.நிறுத்திவிடு அகல்யாவின் நினைவுகளை என்று மனதோடு போராடிக்கொண்டிருந்தான் வருண்.
   அகல்யாவும் பெரிய தியாகி போல் பேசிவிட்டு வந்துவிட்டாளே தவிர வருணை விட்டுக்கொடுக்க அவளுக்கு மனமேயில்லை.எந்த சூழலிலும் வருண் மீது அவளுக்குக் கோபமே வந்ததில்லை.உணர்ச்சிவசப்பட்டு அவள் பேசும்போது கோபப்படுவதுபோல் இருக்குமே தவிர அவளுக்கு வருண் மீது அளவு கடந்த பாசம்.

 
* * * * *
    அலமாரியிலிருந்த கண்ணாடி குவளைகளைத் துடைத்துக்கொண்டிருந்த தேன்மொழி பலத்த சிந்தனையில் இருந்தாள்.இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி.எல்லாருக்கும் சந்தோஷத்தைத் தரும் தீபாவளி.அவளைப் பொறுத்தவரையில் அவள் அம்மாவின் நினைவுகளை அதிகமாக்கும் நாள் அது.
  அவளுடைய தீபாவளி கொண்டாட்டமெல்லாம் அவள் அம்மா உயிரோடு இருந்த வரையில் மட்டும்தான்.இல்லத்தின் குதூகலத்தைக் கூட்டும் சக்தி அந்த பந்தத்திற்குதானே உண்டு.
  வீட்டைச் சுத்தப்படுத்துதல் முதல்கொண்டு பலகாரம் சுடுவது வரை எல்லாமே அம்மா கையில்தான்.கையில் பணமில்லாவிட்டாலும் கடனுக்காகவாவது இவளுக்கும் கயல்விழிக்கும் புத்தாடை வாங்கி கொடுத்துவிடுவாள்.இருவருக்கும் தலைவாரி கொல்லையில் பூத்திருக்கும் கனகாம்பரத்தைச் சூடி அழகு பார்ப்பாள்.
  எங்கே தவறு நடந்தது? அப்பாவின் அன்பை மீறி எப்படி அவளை அழைத்துப் போனான் இறைவன்.பாவம் அம்மா.தன்னையும் கயல்விழியையும் எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பாள்?
  அப்பா சொன்னார் இறக்கும்போது அம்மா அதிக கஷ்டப்பட்டாளாம்.பாவம் அந்நேரத்தில் கூட அவள் மனதில் என்னென்ன ஏக்கங்கள் இருந்தனவோ?இவள்  சின்ன பிள்ளையாய் இருந்ததால் குடும்ப பொறுப்பையெல்லாம் எப்படி இவளிடம் விட்டுவிட்டுப் போவது என்று எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள்? இருந்தபோதிலும்  தேன்மொழி நல்லபடியாக குடும்பத்தைப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை நிச்சயம் அவளுக்கு ஒரு துளியாவது இருந்திருக்கும்.இவளுக்கு அப்போது அதெல்லாம் புரியவேயில்லை.இவள் அப்போதுதான் இடைநிலைப்பள்ளியில் காலெடுத்து வைத்திருந்தாள்.அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லையென்று அப்பா மருத்துவமனைக்கு அழைத்துப் போவார்.மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கிவிட்டு பிறகு வீட்டுக்கு வந்துவிடுவாள்.
   இறுதியாய் அம்மாவை அப்பா மருத்துவமனைக்கு அழைத்துப் போனபோது கூட அம்மா எப்போதும் மாதிரி மூன்று நாளில் வந்துவிடுவாள் என்றுதான் எல்லாரும் நம்பினார்கள்.ஆனால் அவள் இரண்டே நாளில் வந்துவிட்டாள் வெறும் உடலாய்...
   ஏன் அம்மா எத்தனை முறை உன்னைப் பற்றி நினைத்தாலும் சலிப்பதில்லை,மீண்டும் மீண்டும் உன் சம்பந்தப்பட்ட யாவுமே என்னுள் வந்து கொண்டிருக்கிறதே? நீ இறக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?உன் மடியில் சாய்ந்து படுத்திருப்பேன்,சோறு ஊட்ட சொல்லியிருப்பேன்,வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்கொள்வேன்,
    ஆனால் சிலரது வாழ்க்கையில் மட்டும்தான் எப்போதும் நல்லது நடந்து கொண்டேயிருக்கிறது.பலருடைய வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. அது  இவளுக்குப் புரிகிறது.ஆனால் அந்தச் சிலரில் இவளும் இருந்திருக்கலாமே? ஒரு சிலருக்கு கேட்கும் எல்லாவற்றையும் தரும் இறைவன் இவளுக்கு ஏதாவது ஒன்றை கொடுத்திருக்கலாமே?அம்மாவையும் பறித்துக்கொண்டு காதலையும் பறித்துக்கொண்டு தன்னுடைய எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டானே? இதற்குமேல் எப்படி அவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்பது?
   இனி அவளுடைய வாழ்வின் சந்தோஷமும், திருப்தியும் வருண் சொல்லப்போகும் பதிலில்தான் இருக்கிறது.அவளுடைய இலட்சியங்கள் நிறைவேறுவதும் கூட வருணுடைய கையில்தான் இருக்கிறது,அவனுடைய முடிவை ஏற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டாள்.ஆனால் அவள் மனதில் இருப்பதை வருண் தெளிவாக கண்டு கொள்வானா? இவள் கேட்டபோது அவன் உடனே பதில் சொல்லாமல் நழுவியதைப் பார்த்தால்ஒரு வேளை அவனுக்கு அவள் அப்பா கேட்டதில் உடன்பாடில்லையோ?
    ஏழு வருடங்களாக அவளுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவன்.அவனுக்கு இவளுடைய மனதைப் பற்றி நன்றாக தெரியும்,நிச்சயம் இவளுடைய எதிர்பார்ப்புக்குப் பங்கமாக எதையும் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.வருண் அவளுக்கு நல்ல பதிலைச் சொல்வானா?






நம்பிக்கை தொடரும்…….