Saturday, June 4, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 14

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 14


 

நான் சுவாசிக்கும் மூச்சினிலே
சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்

     வருணும் கயல்விழியும் பண்ணும் அமர்க்களத்தை இரசித்தவாறு உணவைப் பறிமாறினாள் தேன்மொழி.சண்டை போட்டுக் கொண்டாலும் கயல்விழி வருணுக்கு அதிக செல்லம்.அவளைப் பன்னிரண்டு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் இன்னமும் அவன் கண்களுக்கு அவள் சிறுமியாகதான் தெரிகிறாள்.அடிக்கடி அவனிடம் தலையிலேயே குட்டு வாங்குவாள்.அவளுடைய பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் வருண் கண்டிப்பாக வரவேண்டுமென அடம்பிடிப்பாள்.வருங்காலத்தில் வருண் மாதிரியே வானொலி அறிவிப்பாளர் ஆகவேண்டும் என்பது கயல்விழியின் கனவாக இருந்தது.
    தேனும்மா, கயலு அறிவிப்பாளரா வானொலியில் சேரப்போகுதுன்னு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே நான் வானொலியை விட்டு விலகிப்போயிடுவேன்ப்பா,என்று கயல்விழியைக் கடுப்பேற்றுவான் வருண்.
    வருண் மாமா, இந்த வார கடைசியில பழைய எஸ்டேட்டுக்குப் போலாம்னு இருக்கோம்,நீங்களும் வருணும் வருணிடம் சொல்லிக்கொண்டே ரசத்தை உறிஞ்சி குடித்தாள்.
    தேன்மொழி இதைப் பற்றி தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே என வியந்தான் வருண்.கோலாலம்பூருக்கு மாறிப் போனதிலிருந்து இன்றுவரை அவள் அவளுடைய பழைய தோட்டப்புறத்திற்குப் போனதேயில்லை.அங்கு போனால் பழைய நினைவுகள் அவளைத் துன்புறுத்தக் கூடும் என்று அவள் அஞ்சியதுதான் அதற்குக் காரணம்.
   தேனு,  அவன் கேட்க வந்ததைப் புரிந்து கொண்டவளாய் அவளே பேசினாள்.
   ஆமாம் வருண்.அது நான் பிறந்து வளர்ந்த இடம்,எங்க அம்மாவோட நினைவுகள் இருக்கற இடம்.எனக்கு அங்க போகனும்னு ஆசையா இருக்கு,” தயங்கி தயங்கி சொன்னாள்.
  ஆனா அங்க போனா பழசையெல்லாம் நினைச்சி அழ மாட்டே இல்ல?”
  அதனாலதான் நீங்களும் வரணும்னு ஆசைப்படறேன்.நீங்க என் கூட இருந்தா நிச்சயமா அழமாட்டேன்,” சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்த்தாள்.அவன் பதில் சொல்வதற்குள் அவனுடைய கைத்தொலைபேசி அலறியது.
   டேய் ஹரி. நீ இன்னும் உயிரோடதான் இருக்கியாடா?”வேலை விசயமாக மூன்று வருடத்திற்கு ஜப்பானுக்குச் சென்றிருந்த ஹரி நெடுநாட்களாக தொடர்பு கொள்ளாத எரிச்சலில் கத்தினான் வருண்.
   ஆனால் எதிர்முனையில் ஹரி சொன்ன விசயம் அவனுடைய கோபத்தைக் குறைத்தது.கைத்தொலைபேசியை அடைத்துவிட்டு தேன்மொழியிடம் திரும்பினான்.
    போலாம் தேனு,கண்டிப்பா வரேன்,ஹரி நேத்தே ஜப்பான்ல இருந்து வந்துட்டானாம்,அவனும் நம்ப கூட வருவான்,” என்றான் வருண் உற்சாகமாய்.
* * * * *

    ஹரி ஜப்பானில் நடந்ததையெல்லாம் வருணிடம் சொல்லிக்கொண்டு வர தேன்மொழி மௌனமாக வேடிக்கை பார்த்தவாறு வந்தாள்.கயல்விழியிடமும் தன்னுடைய தோட்டத்தைப் பார்க்கப்போகும் ஆவல் நிரம்பவே இருந்தது.
   தோட்டப்புறத்தை அடையும்போதே அதன் மாற்றத்தை தேன்மொழியால் உணர முடிந்தது.ஏழு வருட காலத்தில் தோட்டம் பெருமளவு மாறிப்போயிருந்தது.பழைய பலகை வீடுகள் உடைக்கப்பட்டிருந்தன.ரப்பர் மரங்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டிருந்தன.பெரும்பாலான மக்கள் தோட்டத்தைவிட்டு பட்டணத்திற்கு மாறிவிட்டிருந்தார்கள்.முருகம்மா பாட்டியும் இரண்டு வருடங்களுக்கு முன்பே தன் மகனுடைய குடும்பத்தில் போய் தங்கிவிட்டிருந்தாள்.
    அவளுடைய வீடு சிலந்தி வலைகளால் நிறைந்து போயிருந்தது.மனதில் பெரிய வலி ஒன்று தோன்றி மறைந்தது தேன்மொழிக்கு.அவளுடைய சந்தோஷம்,துக்கம் எல்லாவற்றையும் பார்த்த வீடு.அவளுடைய அம்மா இறந்து போனதும் அந்த வீட்டில்தானே?
   தான் ஏதும் தவறு செய்துவிட்டோமோ என யோசித்தாள்.ஒவ்வொரு வருட திருவிழாவிற்கும் ராமசாமி அங்கு வந்துவிடுவார்.தேன்மொழிதான் பிடிவாதமாக வர மறுத்துவிடுவாள்.இனிமையான நினைவுகள் என்றால் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க தோன்றும்.ஆனால் தேன்மொழி அந்தத் தோட்டத்தைவிட்டு போகும்போது மனம் நிறைய எவ்வளவு வேதனைகளைச் சுமந்து போனாள்.தன்னுடைய வேதனைகளையும் அவமானங்களையும் மறப்பதற்கு அவளுக்குக் கால அவகாசம் சற்று தேவைப்பட்டது.ஆனால் இப்படி ஏழு வருடங்களாகும் என்று அவள் கூட நினைத்தே பார்க்கவில்லை.  
்அக்கா, ஆத்துக்குப் போயிட்டு அப்படியே கோயிலுக்கும் போயிட்டு வரலாம்க்கா,” கயல்விழி இன்னும் அந்த ஆற்றை மறக்கவில்லை.
   வருணும் அந்த ஆற்றைப் பார்க்கும் ஆவலில் இருந்ததால் எல்லாரும் அங்கு போனார்கள்.ஆற்றில் நீரே இல்லாமல் வற்றிப்போய் சேறு மட்டும்தான் இருந்தது.ஒரு காலத்தில் எவ்வளவு உபயோகமாக இருந்த ஆறு என்று வருத்தப்பட்டாள் தேன்மொழி.குழாயில் தண்ணீர் வராமலிருக்கும் காலங்களில் எல்லாரும் அந்த ஆற்றில்தான் குளிப்பார்கள்; துணி துவைப்பார்கள்.இறுதியாக அந்த ஆற்றில் குளித்தது கூட அவளுக்கு நன்றாக நினைவிலிருந்தது.
   1987-ஆம் ஆண்டு,அவள் இரண்டாம் ஆண்டை முடித்துவிட்டு பள்ளி விடுமுறையில் இருந்த சமயம்,குழாயில் தண்ணீர் வரவில்லையென்று எல்லாரும் குடும்பத்தோடு அந்த ஆற்றை நோக்கித்தான் படையெடுத்தார்கள்.அப்போது அம்மாவும் இருந்தாள்.கயல்விழி இரண்டு வயது குழந்தையாக இருந்தாள்.அம்மா அவர்கள் இருவரையும் ஆற்றில் குளிப்பாட்டிவிட்டது யாவும் நினைவிலிருந்தது.அன்றுதான் மக்கள் திலகம் எம்,ஜி,ஆர் மறைந்த நாளும் கூட.அம்மா இவளைக் குளிப்பாட்டிவிட்டு கயல்விழியைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும்போதுதான் கீழ் லயத்திலிருந்த லட்சுமியின் கணவன் ஓடி வந்து சொன்னான் அந்த விசயத்தை.
  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தோட்டத்து மக்கள் எல்லாரையும் பெரிதும் பாதித்துவிட்ட செய்தி அது,அங்கேயே பலர் துக்கம் தாளாமல் அழ ஆரம்பித்துவிட்டார்கள்.ராமசாமியும் பதறிவிட்டார்.தீவிர ரசிகராயிற்றே? உடனே எல்லாரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார்.
  பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்த தேன்மொழியை நெருங்கினான் வருண்.அவனிடம் அந்தத் தோட்டத்தில் நடந்த விசயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தாள் தேன்மொழி.அவள் சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அதில் புதைந்து கிடக்கும் வேதனைகளையும் அவனால் உணர முடிந்தது.திடீரென அமைதியாகிவிட்டாள் தேன்மொழி.நிகழ் காலங்கள் கடந்த காலங்களாக மாறிக்கொண்டிருக்கும் பொழுதிலெல்லாம் எவ்வளவு சந்தோஷங்களை இழக்க நேரிடுகிறது?பேசாமல் சிறுபிள்ளையாகவே இருந்திருக்கலாமென தோன்றியது தேன்மொழிக்கு.வளர வளர எவ்வளவு சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது?
  தேனு, ஏன் ஒரு மாதிரியாவே இருக்க? இதுக்குதான் நான் பயந்தேன்
  இல்ல வருண்,கொஞ்ச நேரத்துல ஓ,கே ஆயிடுவேன்,சில ஞாபகங்கள் வேதனையைக் கொடுத்தாலும் அதுலயும் ஒரு சுகம் இருக்கற மாதிரியே தெரியுது.பழைய நினைவுகளை நினைச்சுப் பாக்கும்போது மனசு ரொம்ப கவலையாயிடுது,ஆனா நெனைக்காம இருக்கவும் முடியல,
   சரி வா கோயிலுக்குப் போயிட்டு வரலாம், அவளை அழைத்துப் போனான்.
   கோயிலைப் பார்த்தபோது பிரியனின் ஞாபகம்தான் வந்தது.
   தான் இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்று கூட தோன்றியது,வராமலிருந்திருந்தால் இப்படி அம்மாவையும் பிரியனையும் நினைத்து வருத்தப்பட்டிருக்க வேண்டாமே?
   ஞாபகங்கள் வலிமையானவை,எங்கு ஒளிந்து கொண்டாலும் அவற்றிலிருந்து நம்மை ஒளித்துக் கொள்ள முடியாது என்ற உண்மை தேன்மொழிக்குத் தெரியாமலில்லை.ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும்போது அந்த ஞாபகங்கள் பல மடங்கு வலிமை பெற்று துன்புறுத்துவதைப் போலிருந்தது.வருணைத் தேடினாள்.அவன் படிக்கட்டில் அமர்ந்திருந்தான்.அவனுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தாள் தேன்மொழி.

தொடரும்….


No comments:

Post a Comment