Wednesday, July 2, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 33 :ஓ பட்டர்பிளை பட்டர்பிளை:(மீரா 1992)

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்
கீதம் 33 : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை (மீரா 1992)


    பள்ளிப் பருவத்தில் எனக்கு சனிக்கிழமைகள் பிடித்தமானவையாக இருந்தன.பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கலாம் என்ற காரணத்திற்காக மட்டுமல்ல.தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் போடுவார்களே அதனால்.

    வீட்டில் வீடியோ வசதி இல்லாத அந்தக் காலத்தில் எனக்குத் தொலைக்காட்சி பார்ப்பதென்றால் அதுவும் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆசை.சனிக்கிழமைகளை வெகு ரசனையோடு எதிர்கொள்வேன்.வெள்ளிக்கிழமையே என் கொண்டாட்டம் தொடங்கிவிடும்.படம் பார்க்கும்போது சாப்பிடுவதற்காக வெள்ளி இரவே தேங்காய்ப்பூ கேண்டி செய்து வைப்பேன்.

     மறுநாள் அதிகாலை ஆறு மணிக்குள் எழுந்துவிடுவேன்.வெந்நீரில் இதமாய் குளித்துவிட்டு பொழுது விடிவதை வீட்டுக்கு வெளியே நின்று ரசிப்பேன்.பின் விரைவாக வீட்டுவேலைகளையெல்லாம் முடித்துவிட்டு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்ப்பேன்.தமிழ்ப்படம் ஒளியேறப்போகும் நேரத்திற்காக வெகு ஆவலோடு காத்திருப்பேன்.

   தமிழ்ப்படம் ஒளியேறும் அந்தத் தினத்தில் எல்லாமே இனிமையாக இருக்கும் எனக்கு.அன்றுதான் கச்சான் பூத்தே விற்கும் அண்ணன் மோட்டார் சைக்கிளில் வருவார்.அம்மா வாங்கி கொடுக்கும் கச்சான் வகைகளைக் கொறித்துக்கொண்டே தமிழ்ப்படங்களைப் பார்த்த பொழுதுகள் என் வாழ்வின் ரசனைமிக்க பொழுதுகள்.அப்படியோர் ரசனையான பொழுதில் நான் பார்த்த ரசனையான படம்தான் மீரா’.

    எனக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்துப்பூச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் இப்படம் என்னுள் ஆழமாய்த் தங்கிப்போனது.வீட்டிலிருந்த பழைய இந்தியன் மூவி நியூஸ் பத்திரிக்கையில் வெளிவந்திருந்த ஐஸ்வர்யா,விக்ரம் படத்தையெல்லாம் வெட்டி நான் பாடல் வரிகளைச் சேமித்து வைக்கும் புத்தகத்தில் ஒட்டிவைத்திருந்தேன்.படத்தின் கதையை எனக்குப் புரிந்த விதத்தில் என் நாள்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன்.அந்த அளவுக்கு என்னைக் கவர்ந்தது மீரா படம்.

  விக்ரம்,ஐஸ்வர்யா,சரத்குமாரின் நடிப்பில் 1992-ஆம் ஆண்டில் காதலர் தினத்தன்று வெளிவந்த மீரா படத்தில் இளையராஜாவின் இசையில் பள்ளிப்பாடம்’,’ஒய்யா புது ரூட்டுலதான்’,’லவ்வுன்னா லவ்வு’,’பனிமலை’,’ஓ பட்டர்பிளை ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அனைத்துப் பாடல்களிலும் ஒய்யா புது ரூட்டுலதான் மற்றும் ஓ பட்டர்பிளை பாடல்கள்தான் முதல்நிலை.படத்தின் கதை வழக்கத்தைவிட மாறுபட்ட கதையாகும்.

  மீரா (ஐஸ்வர்யா) கல்லூரியின் அழகு தேவதை.அழகு,கவர்ச்சியோடு,பணமும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் இறுமாப்போடே வலம் வருபவளின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் ஜீவா (விக்ரம்).அவனது சேட்டைகள் யாவும் அவளை எரிச்சலுற செய்கின்றன.

  அவனது சேட்டைகளைப் பொறுக்கமுடியாமல் அவனை எச்சரித்து அனுப்புகிறாள்.அவன் மீது புகார் கொடுக்க,கல்லூரியைவிட்டு நீக்கப்படுகிறான்.அப்போதும் அவன் திருந்தவில்லை.

 அவளது தந்தை வெளியூருக்குப் போய்விட்ட ஒரு மழைப்பொழுதில் அவளது வீட்டின் முன் வந்து நிற்கிறான்.என்னை நினைக்கும்போதெல்லாம் இந்த அடிதான் ஞாபகத்திற்கு வரனும்,” என சொல்லிவிட்டு ஒரு கட்டையால் அவனை அடிக்க,பதிலுக்கு அவளை இழுத்து,”இனி என்னை நினைக்கும்போதெல்லாம் இந்த முத்தம்தான் நினைவுக்கு வரனும்,” என சொல்லி முத்தமிட்டு தள்ளிவிடுகிறான்.மல்லாந்து படுத்துக்கொண்டே அழுபவள் கொஞ்சநேரம் கழித்து ஆவேசமாய் எழுந்து,”நீ கொடுத்த முத்தத்தைத் துப்பிட்டேன்,என்கிட்ட பணம் இருக்கு,உன்னை என்ன செய்யறேன் பாரு,” என திட்டிவிட்டுப் போகிறாள்.

  ஜீவா நடந்துகொண்ட விதம் அவள் மனதைக் காயப்படுத்த,கோபத்தோடு அந்த இருட்டில் காவல்நிலையத்திற்கு நடந்து போகிறாள்.ஜீவா மேலுள்ள கோபத்தில் கரிசனையாய் கேட்ட ஆட்டோக்காரனிடமும்,”போலிஸ்ல புடிச்சி கொடுத்துடுவேன்,” என கத்திவிட்டுப் போகிறாள்.அப்போது அவள் இரண்டு கொலைகளைப் பார்க்க நேரிடுகிறது;அந்தக் கொலையைப் பற்றி தகவல் சொல்வதற்காக காவல் நிலையத்திற்குப் போகிறாள்.அங்கே அந்தக் கொலைக்காரனே காவல்துறை அதிகாரியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறாள்.

  புலம்பிக்கொண்டே வீட்டுக்கு வருபவள் தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்புகிறாள்.அப்போது அந்தக் கொலைக்கார கும்பல் அவளைத் தேடி வீட்டுக்கே வருகிறது;வேலைக்காரியை அடித்து,மீராவைப் பற்றி விசாரிக்க,அங்கே வரும் ஜீவாவிடம்,”மீராவுக்கு ஏதோ ஆபத்து என சொல்கிறாள் அந்த வேலைக்காரி.

  ஒரே இரவில் அடுத்தடுத்து சந்தித்த அதிர்ச்சியான சம்பவங்கள் மனதைப் பாதிக்க,ஆண்கள் மீதே ஒட்டுமொத்த வெறுப்புடன் மதுரைக்குப் போகும் பேருந்தில் ஏறுகிறாள் மீரா.துணையாக போகும் ஜீவாவிடம் பொரிந்து தள்ளுகிறாள்.அத்தனைக்கும் காரணம் அவன்தான் என கோபப்படுகிறாள்.அவளைச் சமாதானப்படுத்துவதற்காக அவன் செய்யும் சேட்டைகள் யாவும் அவளுக்கு எரிச்சலைதான் உண்டு பண்ணுகின்றன.அவன் இருந்தால் தான் பேருந்தில் ஏறப்போவதில்லை என சண்டை போட,ஓட்டுனர் இருவரையும் பேருந்தைவிட்டு இறக்கிவிட்டுப் போகிறார்.

  அட்டை போல் ஒட்டிக்கொண்டே வரும் ஜீவாவை விட்டு விலகியபோது அந்தக் கொலைக்கார கும்பல் அவளைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து கலவரமாகிறாள்;மீண்டும் அவனிடமே வந்து சேருகிறாள்.இரவில் வேறு வழியின்றி ஒரு மாதின் வீட்டில் தங்குவதற்கு இடம் கேட்கிறான்.

  அந்தப் பெண் மீராவிடம் சிடுசிடுவென எரிந்து விழுந்துவிட்டு,ஜீவாவிடம் குழைந்து குழைந்து பேச,மீராவின் முகத்தில் எள் வெடிக்கிறது.இரவில் தூங்கும்போது அவனிடம் கோபத்தைக் காட்டுகிறாள்.போர்வையைக் கொடுத்தால்,”நீயே வெச்சுக்க,” என கடுப்போடு சொல்கிறாள்.

ஏதாவது பேசேன்,” என்கிறான்.

உன்கிட்ட பேசறதுக்கு என்ன இருக்கு?” என முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு திரும்பி படுக்கிறாள்.அப்போது அங்கு சுவரில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் படத்தைப் பார்க்கிறான்.

  ஏய்,உனக்கு பட்டர்பிளை பிடிக்குமா?” என்கிறான்.

  எங்க எங்க?” என ஆசையாய் கேட்கிறாள்.

இதோ என்றதும் ஆசையாய் பார்க்கிறாள்.

  புடிக்குமாவா?என் காலத்து பொண்ணுங்க எல்லாருக்கும் பட்டர்பிளைன்னா ரொம்ப பிடிக்கும்,” என்கிறாள்.

 அவன் அவளைப் பார்க்கிறான்.

  என்ன பார்க்கறே,ஆனா உன்னைப் புடிக்காது என வெடுக்கென சொல்லிவிட்டு தூங்கிப்போகிறாள்.

 ஜீவா அந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து,”ஓ பட்டர்பிளை,நீயாவது எங்களைச் சேர்த்து வெய்யேன்,” என்கிறான்.மறுநாள் அவன் எழும்போது,குளித்து முடித்த மீரா செடியின்மேல் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியை முத்தமிடுவதைப் பார்க்கிறான்;பாடுகிறான்.அப்போது இப்படி சுகமாய் ஒலிக்கிறது பாடல்.

ஆ: ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
    ஏன் விரித்தாய் சிறகை
    வா வா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
    ஏன் விரித்தாய் சிறகை
    அருகில் நீ வருவாயோ
    உனக்காக திறந்தேன் மனதின் கதவை...
பெ: ஆ ஆ ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
     ஏன் விரித்தாய் சிறகை
     வா வா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
     ஏன் விரித்தாய் சிறகை..
     எனையும்தான் உனைப்போலே வடித்தானே
     இறைவன் இணங்கும் தலைவன்..

ஆ: நெருங்கும்போது அகப்படாமல் பறந்துபோகிறாய்
     நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
பெ: ஹஹா உனக்கு யாரும்
     தடைகள் இங்கு விதிப்பதில்லையே
      ஹஹா எனக்கும் கூட
      அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே
ஆ: உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
     எனை நீ இணைசேரும்
     திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
பெ: ஹா ஹா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை

பெ: மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
    உந்தன் மனதைக் கொஞ்சம்
    இரவல் கேட்கும் எனது நெஞ்சமே
ஆ: ஹா ஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
    பதில்கள் இல்லையே
     விரகதாபம் அனலை மூட்டும்
     பருவம் தொல்லையே
பெ: உனை நான் கொஞ்சத்தான்
     மடிமேல் துஞ்சத்தான்
    தினம் நான் எதிர்பார்க்கும்
    திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆ: ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
    ஏன் விரித்தாய் சிறகை
பெ: வா வா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
     ஏன் விரித்தாய் சிறகை
ஆ:அருகில் நீ வருவாயோ
    உனக்காக திறந்தேன் மனதின் கதவை.
பெ: ஹாஹா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை



     இப்பாடலில் அந்தப் பெண் வண்ணத்துப்பூச்சியை ரசித்து பாட,அந்த ஆணோ அவளையே அந்த வண்ணத்துப்பூச்சியாய் எண்ணி பாடுவது அழகு.இனிமை நிறைந்த இப்பாடலைப் புனைந்தவர் வாலி.

   பாடலின் ஆரம்ப இசையே மனதை வருடி,பாடலைத் தொடர்ந்து கேட்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது.

  இப்படத்தின் இயக்குனர் பி.சி.ஸ்ரீராம் என்பதால் இப்பாடல் காட்சியும் வெகு அழகு.மீரா வண்ணத்துப்பூச்சி சிறகை விரிப்பதுபோன்று தாவணியைக் காற்றில் படரவிடுவது கவிதைத்தனமான காட்சி.அதிகாலைப் பொழுதின் இருளில் பார்வையில் படும் குளம்,அன்னங்கள்,வண்ணத்துப்பூச்சிகள் என ஒட்டுமொத்த அழகையும் இப்பாடலில் காட்டியிருக்கிறார்.

   குதூகலமாய் ஒலிக்கும் ஆஷா போன்ஸ்லேயின் குழந்தைக் குரலோடு சேர்ந்து ஒலிக்கும் எஸ்.பி.பாலா ஐயாவின் குரல் விக்ரம் குரலோடு அற்புதமாய் பொருந்திப்போகிறது.ஏக்கத்தை அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.குறிப்பாக விரகதாபம் என்ற சொல்லை உச்சரிக்கும்போது..

   இப்பாடல் எனக்குள் ஏதேதோ எண்ணங்களை வாரி இறைத்தது.வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போதெல்லாம் வாய் இந்தப் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தது.என் பாடல் தொகுப்பில் இந்தப் பாடலும் வந்து சேர,தினமும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.இந்த நொடி வரையில் மனதில் ஆழமாய் பதிந்து போன இப்பாடலை இசைக்கல்வி பாட நேரத்தில் என் இரண்டாம் ஆண்டு செல்லங்களுக்கும் சொல்லித் தந்தேன்.அவர்களுக்கும் இப்பாடல் அதிகம் பிடித்துப்போனது. 

    
இதே பாடல் பின்னர் படத்தில் சோகமாகவும் ஒலிக்கிறது.எங்குச் சென்றாலும் துரத்திவரும் கொலைக்காரர்களுக்கு பயந்து எங்கெங்கோ ஓடிக்கொண்டே இருக்கும் மீராவும்,ஜீவாவும் கடைசியில் ஒரு சிறுவனின் வீட்டில் அடைக்கலமாகிறார்கள்.அதைத் தெரிந்து கொண்ட கொலைக்காரனின் ஆட்கள் அங்கும் வந்துவிட,அவளைக் காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்படுகிறான்.மீராவை அந்தச் சம்பவம் அதிகம் பாதித்துவிட,வாய்விட்டு கதறி அழுகிறாள்.எப்போதும் குறும்பும்,கலகலப்புமாய் இருப்பவள் சோகத்தின் உச்சத்தில் வாடிப்போய் கிடக்க,அவளை ஆறுதல் படுத்தும் விதத்தில் பாடுகிறான் ஜீவா.   

  அந்தி சாயும் பொழுதில் அழுது அழுது துவண்டு போயிருக்கும் பெண் அவளை மடியில் கிடத்தியும்,தோளில் சாய்த்துக்கொண்டும்,அவள் கூந்தலை வருடி,தலையிலும்,கன்னத்திலும் முத்தமிட்டு,தேற்றும் விதம் அழகியல் ததும்பும் கவிதை.வாருங்கள் அந்தச் சோக கீதத்தையும் பாடிப்பார்க்கலாம்.
 

ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி
படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை

இருவர் வாழ்வில் இணையும்போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும்போது
கலையும் மேகங்கள்
இலை உதிர்ந்தபின்பு மீண்டும் பூக்கும்
வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதிப் பார்க்கும்
இளமைக் கோலங்கள்
இனிமேல் சொர்க்கம்தான்...அது நம் பக்கம்தான்
இணைந்தே புதுப்பாடல் இசைப்போம் உயிரே
பட்டர்பிளை பட்டர்பிளை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை

அணைகள் தாண்டி அலைகள் பாயும்
நதிகள் அல்லவா?
துணிவு என்னும் துணையைக் கொண்டு
விதியை வெல்ல வா
இங்கு இனிமை பாதி கொடுமை பாதி
மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும்
சிறிய வானிலே
கலங்கும் கண்ணென்ன வலிக்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும் திருநாள் வரலாம்
பட்டர்பிளை பட்டர்பிளை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி படிப்பேன்
புதிதாய் இனிதாய் கவிதை

அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை


Sunday, June 29, 2014

சிறுகதை : நாசிலெமாக்



      காவியாவின் வலது கை நாசிலெமாக் பொட்டலங்களை இறுக பற்றியிருந்தது.அவள் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட திருப்தி இழையோடியது.நீண்டு பெரிதாக இருந்த கபில நிற விழிகளில் ரசனை நிரம்பி வழிந்தது.எதிரில் தென்பட்ட மனிதர்களையும்,அவர்களின் செய்கைகளையும் ஒரு கதாசிரியைக்கே உரிய கவனத்தோடு கூர்ந்து கவனித்துக்கொண்டே நாசிலெமாக் அங்காடியைவிட்டு நடந்தாள்.

   உயர்ந்து,குள்ளமாய்,தடித்து,மெலிந்து,சற்றே பெரிய கண்களோடு,சப்பை மூக்கோடு இப்படி பல பரிமாணங்களில் கூட்டத்தில் கலந்திருந்த மனிதர்கள் யாவரும் தங்களுக்குள் ஓராயிரம் கதைகளைப் பதுக்கிவைத்திருப்பதாய் அவளுக்குத் தோன்றியது.தனக்குள் சிரித்துக்கொண்டே நடந்தாள்.

  வழியெங்கிலும் பலவித உணவுக்கடைகள்.எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே நடந்தாள்.நாசிலெமாக்வைக் காட்டிலும் வேறெதுவும் அவளது கவனத்தை ஈர்ப்பதாக இல்லை.வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும்,சற்றே பெரிய குழந்தையான பாட்டிக்கும் சில தின்பண்டங்கள் வாங்கவேண்டியிருந்ததால் சில உணவு அங்காடிகளைப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.

   நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் கரும்புத் துண்டுகள் பட்டதும் நின்று வாங்கினாள்.அங்கேயே ஓர் ஓரமாக நின்று கரும்புச் சாறைப் பருகிய காவியாவை எதிரில் வந்த இளைஞர் பட்டாளமொன்று விழிகளால் பருகிக்கொண்டே கடந்தது.

  காவ்யா உயரமான,மெலிந்த தேகத்தோடு துருதுருவென இருந்தாள்.இளஞ்சிவப்பு நிற சட்டையும்,வெள்ளை நிற கால்சட்டையும் அணிந்திருந்தாள்.காதுகளில் பூனைக்குட்டி வடிவிலான இளஞ்சிவப்பு நிற காதணிகள் தொங்கி கொண்டிருந்தன.அவற்றை வியப்பாய் பார்த்த குழந்தையொன்று அவளது காதணிகளை ஆசையாய் தொட்டுப் பார்த்தது.அந்தக் குழந்தையின் கன்னத்தில் செல்லமாய் ஒரு தட்டு தட்டிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.பக்கத்தில் இருந்த அங்காடியில் வீட்டிலிருக்கும் அண்ணனின் குழந்தைகளுக்கு அப்பம்பாலும்,அவித்த சோளமும் வாங்கி கொண்டாள்.

   வடை பொரியும் வாசம் அவளது மூக்கைத் துளைத்தது.அந்த அங்காடிக்குள் நுழைந்தாள்.பெரிய இருப்புச் சட்டியில் அந்த வயதான மாது மின்னல் வேகத்தில் வடை மாவைத் தட்டிப்போட்டுக்கொண்டிருந்ததை வழக்கம்போல் வியப்பாக பார்த்துக்கொண்டே அம்மாவுக்கும்,பாட்டிக்கும் கொஞ்சம் வடைகளை வாங்கி கொண்டாள்.இவள் எப்படி நாசிலெமாக் பைத்தியமோ,அதேமாதிரி அவளுடைய பாட்டி வடை பைத்தியம்.பல்லெல்லாம் விழுந்துவிட்ட நிலையில் ஒரு வடையைச் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டாலும் பாட்டி வடை கேட்பதை நிறுத்துவதேயில்லை.

     வடை வாங்கிகொண்டு திரும்பியபோது அதே வரிசையில் சில அங்காடிகளில் நாசிலெமாக் பொட்டலங்கள் இருந்ததைக் கவனித்தாள்.ஆனால் கபில நிற வழுவழுப்பான காகிதத்தில் மடித்துவைக்கப்பட்டிருந்த  அந்த நாசிலெமாக் வகைகளில் எதுவுமே அவளது சிந்தையை ஈர்க்கவில்லை.ஆலேங் கடை போடாத ஒரு நாளில் அவள் இங்கு வாங்கி சுவைத்துப் பார்த்து வெறுத்திருக்கிறாள்.ஏனோ நாசிலெமாக் சுவையாக இல்லையென்றால் வாழ்க்கையின் விரக்தி நிலையை எட்டிவிட்டாற் போன்றதொரு எண்ணம் அவளை அலைக்கழிக்கும்.

   
காவியா நாசிலெமாக்வைச் சுவைக்கும் விதம் வேறு மாதிரியானது.ஒவ்வொரு பருக்கையையும் ரசித்து உண்பவள் அவள்.முதலில் கச்சான்,வெள்ளரித்துண்டுகளையெல்லாம் சாப்பிட்டுவிடுவாள்.அடுத்து முட்டையின் வெள்ளைக்கருவைச் சாப்பிடுவாள்.பிறகு கொஞ்சம் சம்பலை மட்டும் எடுத்து சோற்றில் வைத்து சாப்பிடுவாள்.கடைசியாக ஒரு பிடி சோறு மட்டும் எஞ்சியிருக்கும்போது நிறைய சம்பலைப் போட்டு,அதில் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுமுடிப்பாள்.சாப்பிட்டு முடித்தபிறகும் அந்த நாசிலெமாக்வின் சுவையைக் கற்பனையில் வரித்தவாறு இருப்பாள்.

   அப்படி நாசிலெமாக் சாப்பிடுவதையே ஒரு கலையாக வைத்திருந்ததால் அவளுக்குத் தன் ஏழு வயதில் தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட நாசிலெமாக் முதல்,கடந்த நான்கு தினங்களுக்கு முன் சக ஆசிரியை ஒருவர் சமைத்துக்கொடுத்த இறால் சம்பல் நாசிலெமாக் வரை ஒவ்வொரு வயதிலும் அவள் சாப்பிட்ட நாசிலெமாக் எந்தெந்த சுவையில்,எந்தெந்த வடிவத்தில் இருந்தன என்பதை உடனே கற்பனையில் கொண்டு வந்துவிட முடிந்தது.

    சம்பாதிக்க ஆரம்பித்து மகிழுந்து வாங்கிய பிறகு அவள் செய்த முதல் வேலை எந்தெந்த கடையில் நாசிலெமாக் விற்கிறார்கள் என ஆராய்ந்ததுதான்.அப்படி ஆராய்ந்து கண்டுபிடித்ததில் பூச்சோங் பட்டணத்தில் இரண்டு இடங்களில் விற்கப்படும் நாசிலெமாக்தான் அதீத சுவை கொண்டவை என கண்டுபிடித்திருந்தாள்.ஒன்று பூச்சோங் பெருமாள் கோவில் வளாகத்தில் சனிக்கிழமைகளில் குணா அண்ணன் விற்கும் சைவ நாசிலெமாக்.இரண்டாவது பதினான்காவது மைல் இரவுச் சந்தையில் ஆலெங் விற்கும் நாசிலெமாக்.

   இரவுச் சந்தைக்கு வந்தால் அவளுக்கு எப்போதும் ஆலெங் விற்கும் நாசிலெமாக்தான் பிடிக்கும்.அவளது கடையில்தான் விதவிதமான சம்பல் வைத்து நாசிலெமாக் கிடைக்கும்.நெத்திலி,கோழி,இறால்,இரட்டைச் சிப்பி நத்தை,பித்தாய் என பல வகையறாக்களில் கண்ணாடிப் பாத்திரத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் சம்பல் வகையைப் பார்க்கும்போதே இவளுக்கு நாவில் எச்சில் ஊறும்.

  பழைய நாளிதழில் வாழை இலையை வைத்து,ஒரு சிறிய கோப்பையில் தேங்காய்ப்பால் சாதத்தை அளந்து அள்ளிப்போட்டு,அதன் நடுவில் சம்பலை வைத்து,ஓரத்தில் பொரித்த நெத்திலியோடு கச்சான்களைத் தூவி,அவித்த முட்டையை அதன்மேல் கவிழ்த்துவைத்து,ஓர் ஓரமாய் வெள்ளரித்துண்டுகளை அடுக்கி,வெகு லாவகமாக அந்த நாளிதழைக் கூம்பு வடிவில் அவள் மடித்துக்கொடுப்பதே ஒரு கலையாக தோன்றும் காவியாவுக்கு.எப்போதடா அந்த நாசிலெமாக்வைச் சாப்பிடுவோம் என்ற ஆவலைச் சுமந்தபடி வீட்டுக்கு விரைவாள்.வீட்டுக்குப் போய் பிரிக்கும்போது பார்ப்பதற்கே ஆசையைத் தூண்டும் ஆலேங் நாசிலெமாக்வுக்கு ஈடாக அந்த இரவுச் சந்தையில் மலாய்க்காரர்களின் நாசிலெமாக் கூட இருக்கமுடியாது என்பது காவியாவின் கணிப்பு.

   காவியா தன் கையில் இருந்த நாசிலெமாக் பொட்டலங்களைப் பெருமை பொங்க பார்த்தாள்.

  சீக்கிரமாய் என்னைப் பிரித்து சாப்பிடேன் என அவை அழைப்பு விடுத்ததுபோல் தோன்றியது.

  இரவுச் சந்தையில் வாங்குவதற்கு வேறெதுவும் இருக்கவில்லை அவளுக்கு.வெறும் நாசிலெமாக் வாங்குவதற்காகவே வீட்டிலிருந்து அரைமணி நேரத்திற்கு மகிழுந்தைச் செலுத்தி,பத்து சமிக்ஞை விளக்குகளைக் கடந்து இந்த இரவுச் சந்தைக்கு வருவதில் அவளுக்கு அலுப்பேதும் தோன்றியதேயில்லை.

   காவியா தனது மகிழுந்தை சாலையின் எதிர்ப்புறத்தில் கடைவீடுகளின் வரிசையில் நிறுத்தியிருந்தாள்.பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த வாகனங்களை வெகு கவனத்தோடு கவனித்து சாலையைக் கடந்தாள்.காரை அடைந்ததும் மணி பார்ப்பதற்காக வலது கையை உயர்த்தினாள்.அப்போது நாசியருகே நெருங்கி வந்த நாசிலெமாக் பொட்டலங்களிலிருந்து எழுந்த சுகமான வாசம் அவளைக் கிறங்கடித்த வைத்தது.அரைமணி நேரத்தில் வீட்டையடைந்து,கை கால் அலம்பிவிட்டு அந்தப் பொட்டலத்தைப் பிரித்து உண்ணும்போது கிடைக்கக்கூடிய இன்பத்தைக் கற்பனையில் வரித்தவாறு கார்க்கதவைத் திறந்தாள்.வடைகள்,அப்பம்பால்,சோளம் போன்றவற்றை மகிழுந்தின் பின்புற இருக்கைக்குக் கீழே வைத்தவள் நாசிலெமாக் பொட்டலங்களை மட்டும் மேலும் இறுக்கமாகக் கட்டி தனது இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு மகிழுந்தைச் செலுத்தினாள்.

  முன் தினம் நாசிலெமாக்வுக்காக நடந்த சண்டையை எண்ணிப்பார்த்தாள்.முன் தினம் ஏனோ காலையில் எழுந்ததுமுதல் அவளுக்கு நாசிலெமாக் சாப்பிடவேண்டும் போலிருந்தது.ஆனால் நாசிலெமாக் வாங்க அவளுக்கு நேரமே கிடைக்கவில்லை.சரி இரவில் வாங்கி கொள்ளலாம் என லக்‌ஷ்மிமித்ரா உணவகத்துக்குப் போனாள்.நாசிலெமாக் முடிந்துவிட்டதாய் சொன்னமாத்திரத்தில் பொசுக்கென்று அழுகை எட்டிப் பார்த்தது.கண்களில் கண்ணீர் வழிந்தோட கோபத்தோடு வீட்டுக்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் இருந்தாள்.அவளது நிலைமை புரியாமல் நண்பனொருவன் கைபேசியில் சீண்டிவிட,அவனைத் திட்டிவிட்டு அதே கோபத்தோடு கைபேசியை கட்டிலுக்கடியில் வீசிவிட்டு படுத்து உறங்கியும்விட்டாள்.

    மற்றவர்களுக்கு வேண்டுமானால் நாசிலெமாக் உணவுப்பொருளாக இருக்கலாம்.ஆனால் காவியாவைப் பொருத்தவரையில் நாசிலெமாக் என்பது உணர்வுப்பொருள்.கிடைக்கவில்லையென்றால் அவளைப் பட்டென்று அழவைத்துவிடவும்,கிடைத்துவிட்டால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கவைக்கும் ஆற்றலும் நாசிலெமாக்வுக்கு மட்டும்தான் இருந்தது.


  ஏதேதோ சிந்தனையில் மகிழுந்தைச் செலுத்திக்கொண்டிருந்த காவியா எதிர்பாரா தருணத்தில் குருட்டுத்தனமாய் அவளை முந்திக்கொண்டு விரைந்த மோட்டார்சைக்கிளை மோதிவிடாமலிருக்க,திடீரென காரை நிறுத்தினாள். அப்போது பக்கத்து இருக்கையிலிருந்த நாசிலெமாக் பொட்டலங்கள் கீழே விழப்போக,அதைக் கைகளால் பற்றியவள் தன்னையறியாமல் எண்ணெய்யை மிதிக்கவே,மகிழுந்து பாய்ந்து போய் சாலைத் தடுப்பு சுவரில் மோதியது.


   அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காவியாவின் தலையில் பட்ட அடி பலமாக இருந்ததால் அவள் சுயநினைவின்றி இருப்பதாக சொன்னார்கள்.அவள் கோமா நிலையை அடையும் சாத்தியமும் இருப்பதாக சொன்னவர்கள் இருபத்து நான்கு மணி நேரம் காலக்கெடுவும் கொடுத்திருந்தார்கள்.

  அந்த அறைக்குள் தன்னைப் பார்ப்பதற்காக நுழைபவர்கள் பேசிக்கொள்ளும் எல்லாவற்றையும் காவியாவால் கேட்க முடிந்தது.ஆனால் அவளால் கண்களைத் திறக்கவோ,உதடுகளை அசைக்கவோ இயலவில்லை.எத்தனையோ முறை சொல்லிட்டேன்,மெதுவா ஓட்டுன்னு,கேட்டால்தானே அவள் அம்மாவின் அழுகுரல் கேட்டது.

   இவள் வேகமாக காரைச் செலுத்தியதால்தான் விபத்து நேர்ந்திருப்பதாக எண்ணியிருக்கிறார்கள் போலும்.அதுவும் நல்லதுதான்.நாசிலெமாக்வுக்காகதான் இந்த விபத்து நடந்தது என அறிந்தால் அவளது உறவினர்களும்,நண்பர்களும் அவளை மட்டமாக பேசக்கூடும்.ஒரு நாசிலெமாக்வுக்காகவா இப்படி என ஏதும் நினைத்துவிட்டால் அது அவமானம்தானே?

   நாசிலெமாக்வுக்காக அவமானப்படுவது ஒன்றும் அவளுக்குப் புதிதில்லைதான்.

  இடைநிலைப்பள்ளியில் கால் எடுத்துவைத்த பருவத்தில் பள்ளியின் அருகே ஒரு மலாய்க்கார பெண்மணி நாசிலெமாக் விற்பாள்.மாணவர்கள் என்பதால் அவள் அம்பது சென்னுக்கு விற்பாள்.ஆனால் அந்த ஐம்பது சென் கொடுத்து கூட அந்த நாசிலெமாக்வை வாங்கமுடியாமல் இருக்கும் சமயங்களில் அவளுக்கு ஏனோ வெகு அவமானமாக இருக்கும்.

  மாதக்கடைசியில் அவளது அப்பாவிடம் கொடுப்பதற்கு காசிருக்காது.அது மாதிரி தருணங்களில் அவள் அந்த நாசிலெமாக் கடையை வெகு ஏக்கத்தோடு பார்த்துவிட்டு நகர்வாள்.சில வேளைகளில் காசு வைத்திருக்கும் மற்ற தோழிகள் வாங்கும்போது இவளும் உடன் இருக்கவேண்டியிருக்கும்.நீ வாங்கலையா?ஏன் காசில்லையா?” என அம்மாது விசாரிப்பாள்.அப்போதெல்லாம் இவள் அவமானத்தால் கூனிக்குறுகிப்போவாள்.இப்படி நாசிலெமாக்வுக்காக அவள் பட்ட அவமானங்கள் அதிகம்.

   தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டில் பயின்றபோதே அவமானங்கள் அவளுக்குப் பழகிவிட்டிருந்தனதான்.நாசிலெமாக்வின் மீதிருந்த மோகத்தால் அவள் அந்த வயதிலேயே சம்பல் செய்ய கற்றுக்கொண்டாள்.அம்மியில் மிளகாய் அரைத்து செய்யும் சம்பலில்தான் ருசி அதிகம் என பக்கத்துவீட்டு லில்லி அக்காள் சொல்லிவைக்க,அவள் மிளகாயை ஊறவைத்து எடுத்துக்கொண்டு தன் பெரியம்மாளின் வீட்டுக்கு வருவாள்.அவள் வீட்டில் அம்மி இருந்தாலும் பெரியம்மாள் வீட்டு அம்மியில் அரைத்தால்தான் ருசி என அவள் நம்பியிருந்தாள்.

     அவளுடைய வீட்டில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய்யைதான் பயன்படுத்தினார்கள்.கச்சான் எண்ணெய்யில் சம்பல் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் எனவும் லில்லி அக்காள் சொல்லியிருந்ததால் மிளகாயை அரைத்துக்கொண்டு கிளம்பும்போது பெரியம்மாவிடம் ஒரு கண்ணாடிக்குவளையில் கொஞ்சம் கச்சான் எண்ணெய்யும் கேட்டு வாங்கி கொண்டு எடுத்துப்போவாள்.அப்போதெல்லாம் கொஞ்சம் அவமானமாக இருக்கும்.இருந்தாலும் நாசிலெமாக்வுக்காக எல்லா அவமானத்தையும் தாங்கி கொள்வாள் அவள்.

   அவளுக்கும்,நாசிலெமாக்வுக்கும் உள்ள பந்தத்தை அடுத்தவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.அதனால்தான் நாசிலெமாக்வை வைத்தே அவளைக் கிண்டல் செய்வார்கள்.சில கேலிகள் அவளை அழவைத்திருக்கின்றன.

    காவியா எந்நேரம் வேண்டுமானாலும் மூளைச்சாவை அடையலாம் என்ற நிலையிலிருந்தாள்.அப்படி ஒன்று நடப்பதற்குள் நாசிலெமாக்வுடனான தருணங்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுவந்து நிறுத்திவிடவேண்டும் என்ற போராட்டத்தில் இருந்தாள் காவியா.அவளது நினைவுகள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தன.

    தமிழ்ப்பள்ளியில் புதன்கிழமைகளில் நாசிலெமாக் கொடுப்பர்கள் என்பதால் அன்று மட்டும் விடுமுறை எடுக்காமல் போனது,செவ்வாய்க்கிழமைகளில் பள்ளிமுடிந்து இலவச உணவு சமைக்கும் மாதுவுக்கு களிப்போடு நெத்திலி ஆய்ந்து கொடுத்தது,இவள் பூச்சோங் வந்துவிட்டபிறகு,வேலையின் காரணமாக மாதத்திற்கொரு முறை மட்டும் வந்து போகும் அப்பா தாப்பாவிலிருந்து அவளுக்குப் பிடித்தமான நாசிலெமாக்வை அலுக்காமல் வாங்கி வந்து கொடுத்தது,கடைசியாக இவள் நாசிலெமாக் சமைத்தபோது அதைச் சாப்பிடும் முன்னமே அப்பா திடீரென மரணமடைந்தது அனைத்தும் அவளது நினைவில் முட்டிமோதி நின்றது.இவள் நாசிலெமாக்வை விரும்பி சாப்பிடுவதற்கு அப்பாதானே முழுக்காரணம்.

 

    கையில் காசிருக்கும்போதெல்லாம் எந்தக் கடையில் நாசிலெமாக் சுவையாக இருக்கும் என ஆராய்ந்து வங்கி தந்தவராயிற்றே.அது அப்பாவின் அன்பு கலந்த உணவாயிற்றே.நகைச்சுவைக்கு செய்வதாய் எண்ணிக்கொண்டு நாசிலெமாக்வை வைத்து அவளை மிக மட்டமாக வர்ணித்த அவள் தோழிக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?

  .காவியா ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்தபோது நாசிலெமாக் கிடைக்காமல் இருந்த வருத்தத்தையும் இணைத்திருந்தாள்.அதை அவள் தோழி கேலி செய்து நட்பு வலைத்தளத்தில் எல்லாரும் பார்க்கும்படி எழுதியிருந்தாள்.அவள் தந்தை இன்னமும் உயிரோடிருப்பதால் இவளது வலியை அவளால் அறியமுடியாதுதான்.

    நாசிலெமாக் என்பது இவள் அப்பாவின் அன்பு கலந்திருக்கும் உணவு என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அதே நாசிலெமாக்வுக்காக இன்று சாகும் நிலையை அடைவாள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

     அவள் மீண்டும் நாசிலெமாக் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள்.காரிலிருந்த நாசிலெமாக் என்னவாகியிருக்கும்?அதை சாப்பிடும் முன்னமே இப்படி ஒரு விபத்து நிகழ்ந்தது நியாயமில்லையே என அவளுக்குப் பட்டது.தனக்கு எதுவும் நேர்வதற்குள் நாசிலெமாக் சாப்பிட்டுவிடவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

     எந்த நாசிலெமாக்வுக்காக அந்த விபத்து நடந்ததோ அதே நாசிலெமாக்வைப் பற்றி அவள் நினைவில் இருந்த விசயங்கள் கொஞ்சங்கொஞ்சமாய் மங்கி கொண்டிருந்தன.இருப்பினும் அவள் மனம் நாசிலெமாக்வுக்காக ஏங்க ஆரம்பித்தது.சிறுவயது முதல் சாப்பிட்ட நாசிலெமாக் யாவும் நினைவில் வந்து நின்றது.அவளது ஆசையைப் புரிந்துகொண்டு யாரேனும் நாசிலெமாக் வாங்கி வந்து ஊட்டினால் தேவலாம் போலிருந்தது.தட்டுத்தடுமாறியாவது தன் ஆசையை சொல்லிவிட நினைத்தாள்.ஆனால் எவ்வளவு முயன்றும் கண்களைத் திறக்கவோ,உதடுகளை அசைக்கவோ அவளால் இயலவில்லை.

     திடீரென அவளது விழிகளுக்குள் ஏதோ வெளிச்சம் பாய்வதைப் போலிருந்தது.தூரத்தே கண்கூசும் ஒளி படர்ந்திருக்க,நடுவில் அவளது தந்தை கையில் நாசிலெமாக் பொட்டலங்களோடு நின்று கொண்டிருப்பதை அவளால் காணமுடிந்தது. அவள் ஆசைப்படுவதை எல்லாம் அந்தத் தீர்க்கதரிசியால் மட்டும்தானே உடனே குறிப்பறிந்து நிறைவேற்ற முடியும்.அதனால்தான் அவளுக்குப் பிடித்தமான நாசிலெமாக்வோடு வந்து நிற்கிறார் போலும்.மனதில் ஆவல் பொங்க அவரை நோக்கி கைகளை நீட்டினாள் அவள்.

     கணினித் திரையில் அவளது நாடித்துடிப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது.......


முற்றும்.


          ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்