Tuesday, March 1, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 4

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 4



 

ஒயாமலே மழை தூறலாம்
போகாதய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை

     லிட்டல் இந்தியா உணவகம்,தனபால் கேட்ட அயிட்டங்களைக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு மற்றவர்களைக் கவனிக்கப் போனான் வருண்,அவன் இந்த உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது,
     இருபது வயது நிரம்பிய வருண் போலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பயின்று வரும் மாணவன்.சுங்கைப் பட்டாணியைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள அவன் தாமான் பெர்த்தாமாவில் உள்ள தன் அண்ணனின் வீட்டில் தங்கியிருந்தான்.கல்லூரிச் செலவை ஈடுகட்ட திங்கள் முதல் வெள்ளி வரை கல்லூரி முடிந்ததும் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரையில் அந்த உணவகத்திலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஈப்போ ரோயல் கிளப்பிலும் வேலை செய்து வருகிறான்.சரி வருணை இன்னொரு அத்தியாயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.இப்போது பிரியனைப் பார்க்கலாம்.
     வேலை முடிந்து வந்த பிரியன் தேன்மொழியைத் தேடிப் போனான்.தேன்மொழி குழந்தைக்குப் பவுடர் பூசி,உடைகளை மாற்றி படுக்கப் போட்டாள்.அது கையையும், காலையும் உதைத்துக்கொண்டு விளையாடியது.குழந்தையின் அருகில் வந்து அமர்ந்த பிரியன் குழந்தையைக் கொஞ்சும் சாக்கில் அவளுடைய கைவிரல்களை மெல்ல வருடினான்.
    கடந்த சில தினங்களாகவே பிரியன் இப்படிதான் நடந்து கொள்கிறான்,அவள் வேலை செய்யும்போது சத்தமில்லாமல் பின்னால் வந்து அவள் கண்களைக் கட்டுவது, கையைப் பிடித்து இழுப்பது என்று அவனுடைய சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயின,அமைதியாக இருந்து கொண்டே அவன் செய்யும் சில்மிஷங்கள் அவள் மனதை அலைபாய வைத்தது.கன்னி மனம் அவனுடைய குறும்புகளை இரசித்து அனுமதித்தது.
   அவளுக்குப் புரிந்து போனது பிரியன் தன்னை விரும்புகிறான் என்று.பத்தொன்பது வயதில் ஹார்மோன்கள் செய்த சதியால் அவளும் அவன் வசம் தடுமாறினாள்.வீட்டு வேலைகள் செய்வதிலும், குடும்ப பொறுப்பைச் சுமப்பதிலும் மட்டுமே தன் வாழ்க்கை அடங்கியிருப்பதாக எண்ணியவளின் வாழ்க்கையில் திடீர் திருப்பமாய் பிரியனின் காதல்.அவளுடைய வாழ்க்கையில் இதமான காதல் காலம் வெண்சாமரம் வீசத் தொடங்கியிருந்தது.
   தேன்மொழிக்குப் பிரியனின் மீது அதிக நம்பிக்கை.அவன் இயற்கையிலேயே அதிக அமைதி,கூச்ச சுபாவமுள்ளவன் வேறு.தேன்மொழியுடன் வெளியே போகும்போது பெண்கள் எதிரில் வந்தால் கண்டுகொள்ளவே மாட்டான்.அவளைத் தவிர வேறு யாரிடமும் நெருக்கமாகப் பழகியதில்லை என்பான்.அவனுடைய அந்தக் குணம் அவளுக்குப் பிடித்திருந்தது.அவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணம் அவள் மனதில் ஆழப்பதிந்தது.
   பிரியனுடைய வீட்டிலும் எல்லாருக்கும் தன்னைப் பிடித்திருப்பதால் எந்தப் பிரச்சனையும் வராது என்றே நினைத்திருந்தாள்.ஆனால் அந்த எண்ணத்தைக் குலைக்கும் வகையில் வந்து சேர்ந்தாள் பிரியனின் தங்கை அபிராமி.அபிராமிக்கு ஏனோ தேன்மொழியைப் பிடிக்கவில்லை.அவள் தேன்மொழியைவிட இரண்டு வயது பெரியவள்.வட மலேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்தாள்.
   தேன்மொழி அபிராமியிடம் எவ்வளவு அன்பாகப் பழகினாலும் அவள் தேன்மொழியிடம் வெறுப்பாகவே இருந்தாள்.அடிக்கடி தேன்மொழியை எஸ்டேட் என்று அழைத்து அவமானப்படுத்தினாள்.
   தேன்மொழிக்கு அது அவ்வளவாக வருத்தத்தைத் தரவில்லை.காரணம் அவள் இடைநிலைப் பள்ளியில் பயிலும்போது சிலர் அவளை அந்த மாதிரி கூப்பிட்டு அவளுக்குப் பழகிப்போயிருந்தது.
  என்ன செய்வது// பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.என்றாவது மின்விசிறியை அடைத்துவிட்டு தோட்டப்புறத்தின் இயற்கையான காற்றை சுவாசித்து புளகாங்கித்திருப்பார்களா? தேங்கி நிற்கும் மழை நீரில் கப்பலை மிதக்கவிட்டுப் பார்த்திருப்பார்களா? சம்பள நாட்களில் திரை கட்டி திரையிடப்படும் தமிழ்ப்படத்தை வெட்ட வெளியில் பார்த்து ரசித்திருப்பார்களா?இல்லை மழை விட்ட பிறகு அந்த மண்வாசனையையாவது நுகர்ந்து பார்த்திருப்பார்களா? வாழ்வின் சந்தோஷத்தையெல்லாம் நான்கு சுவற்றுக்குள்ளேயே அடக்கி வாழும் ஒரு சில இயந்திர மக்களுக்கு எப்படி தெரியும் தோட்டப்புற அருமை?
   பிரியனுடைய அக்கா கோமதியும்,பிரியனும் அவளிடம் அன்பாகப் பழகுவதால் அவளுக்கு அபிராமியின் கிண்டலும், கேலியும் அவவ்ளவு பெரிதாக தெரியவி;ல்லை.இருந்தபோதிலும் சில சமயங்களில் அபியுடன் பிரேமாவும் சேர்ந்து கொள்வது அவள் மனதை வாட்டவே செய்தது.
  பிரேமா தோட்டப்புறத்தில் இருந்து வந்தவள்தானே? அவளுடைய கணவன் சிங்கப்பூருக்கு வேலைக்குப் போனபிறகு வந்த வசதிதானே இது?அதற்கு முன் பால்மரக் காட்டில் கழுத்துக் கோடு வெட்டியவள்தானே? தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள்? நிகழ்கால இன்பத்தில் கடந்த காலத்தை அடியோடு மறந்து போவது எவ்வகையில் நியாயம்?
   என்ன நடந்த போதிலும் பிரியனுக்காக எல்லாவற்றையும் தாங்கி கொள்ள முடியும் என்றே அவளுக்குத் தோன்றியது.எவ்வளவு மனக்க‌ஷ்டங்கள் வந்தபோதிலும் பிரியன் மீது தான் கொண்டுள்ள காதலை என்றென்றும் மறக்க இயலாது என்ற நிலையில் இருந்தாள் அவள்.பிரியன் அவளைத்தான் மணம் புரிவேன் என்று உறுதியாக இருக்கும்போது எதற்காக கலங்க வேண்டும்?
  இப்போதெல்லாம் அவளுக்குப் பிரியனுடைய வீடு அதிகம் பிடித்துப் போனது.ஒரு சில வேளைகளில் அப்பாவையும்,கயல்விழியையும் கூட மறந்து போனாள்.பிரியனுக்கும் அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.
  தேனு. நீ பேசாம இங்கயே ஏதாவது கம்பெனியில வேலை செய்துக்கிட்டு இருந்திடேன்,எஸ்டேட்டுல போயி நீ என்னா வேலை செய்யப் போற?” அவள் சந்தோழூமான மனநிலையில் இருக்கும்போது அவளுக்குத் தூபம் போட்டான் பிரியன்.
  எனக்கு ஆசைதான்,ஆனா அப்பா….”
  நீ கொஞ்ச நாளைக்கு கம்பெனியில வேலை செய்யி,அப்புறம் அப்பாவை வேலை விட்டு நிப்பாட்டிட்டு இங்கயே ஒரு வீடு சேவாவுக்குப் பாத்து கூட்டிட்டு வந்துடலாம்.எப்படி? நான் கண்டிப்பா உனக்கு உதவி செய்யறேன்,சரின்னு சொல்லேன்,
  மகுடி இசைக்கு கட்டுப்பட்ட பாம்பாய் அவன் கரும்புப் பேச்சில் கரைந்து போனவள் சம்மதம் சொன்னாள்.அவள் சம்மதம் தெரிவித்ததில் மகிழ்ந்து போய் அவள் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தான் பிரியன்.
  இன்னைக்கு ராத்திரி நான் உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்,”
  எங்க?”
  சிம்பாங் பூலாய்க்கிட்ட மலை உடைக்கிற இடத்துக்கு/ அங்குள்ள ஒரு மலையை உடைக்கறப்ப காளி உருவம் தெரிஞ்சதாம்.ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேலதான் தெளிவா தெரியுமாம்,அம்மா, அபி எல்லாரும் வராங்க,நீயும் வா் அவளைக் கெ(கொ) ஞ்சி சம்மதிக்க வைத்தான்.

  அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது மணி இரவு பதினொன்றரை ஆகியிருந்தது,அதற்குள் அங்கே நிறைய பேர் இருந்தார்கள்.சிலர் ரோட்டோரத்திலேயே அமர்ந்திருந்தார்கள்.
   தேன்மொழி பிரியனுடன் நின்றிருந்ததைக் கண்ட அபிராமி கோபத்தோடு அருகில் சென்றாள்,
  இங்க கூட அண்ணனை விடமாட்டீங்களா?” என்றவள் பிரியனை வற்புறுத்தி தனக்குக் குளிர்பானம் வாங்கி தருமாறு எங்கோ அழைத்துப் போனாள்.
                                                          
                                                     தொடரும் ….

















No comments:

Post a Comment