Tuesday, March 15, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 8

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 8

இணைவது எல்லாம் பிரிவதற்காக….
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக….
மறந்தால்தானே நிம்மதி….


 

      மார்ச் 2004 - இன் கடைசி வெள்ளிக்கிழமை.அழகிய நிலாக்கால நேரம்.சில்வண்டுகளின் ரீங்காரத்தில் உலகமே அமைதி பூண்டிருந்த நள்ளிரவு நேரம்.வானொலி ஆறை செவிமடுத்துக் கொண்டிருந்த தேன்மொழி நெஸ்காப்பி கலக்கி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
     இத்துடன் வணக்கம் கூறி உங்களிடமிருந்து விடைபெற்று கொள்வது அமரன்.நள்ளிரவு பன்னிரண்டு மணி தொடக்கம் உங்களைச் சந்திக்க வரும் அறிவிப்பாளர் வருணன்,
    அசதி கலந்த முகத்தோடு சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவாறு அறிவிப்பாளர் அமரன் விடைபெற்றுக் கொள்ள ஸ்டுடியோவில் தயாராக நின்றிருந்த வருண் தன் அறிவிப்புப் பணியைத் தொடர்ந்தான்.தேசிய கீதம், செய்திகளுக்குப் பிறகு விருமாண்டிஷ படப்பாடலோடு இரவின் மடியில் நிகழ்ச்சியைத் தொடங்கினான்.
    வருணுக்கு ஏற்கனவே துள்ளலும், துடிப்பும் நிறைந்த இனிமையான குரல்.வானொலியில் கேட்கும்போது அவனுடைய குரல் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக ஆனால் கவர்ச்சியாகவே இருந்தது,ஓர் ஆணுக்கு உரிய கம்பீரமான குரல் அவனது.ஆரம்பத்தில் உள்ளதைவிட இப்போது அவனுடைய அறிவிப்புப் பணிகள் இன்னும் சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது தேன்மொழிக்கு.
   தேன்மொழி பிரியனை எப்படி மறப்பது என்று தவித்துக் கொண்டிருந்த வேளையில் அவளுடைய அப்பாவின் பழைய கால நண்பர் ஒருவரின் அழைப்பில் கோலாலம்பூருக்கு வந்து அவருடைய பூக்கடையைக் கவனித்துக் கொண்டாள்.அவர்கள் கோலாலம்பூருக்கு வந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வருண் வானொலி அறிவிப்பாளருக்கான நேர்முகத் தேர்வுக்காக கோலாலம்பூர் வந்திருந்தான்.புதிய இடம்,தெரிந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் தங்க இடமின்றி தவித்தான்.
    தேன்மொழிக்குத் தன்மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை என்னும் பட்சத்தில் எப்படி அவள் வீட்டில் தங்குவதென்று பேசாமல் இருந்தான்.ஆனால் அந்நேரம் பார்த்து தேன்மொழி அவனுக்குப் போன் செய்ய அவளிடம் மறைக்கமுடியாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.அவள் உடனே அவனைத் தன் வீட்டுக்கு வரச்சொன்னாள்.
    அன்றிரவு அவன் தேன்மொழியின் வீட்டில்தான் தங்கினான்.அவனுக்குப் பெரிய விருந்தே சமைத்து பரிமாறிவிட்டாள்.வெயிலில் அலைந்த அலுப்பில் நல்ல பசி போலும்.தட்டில் போட்டதை துளி கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தான்.அவளுக்கே பாவமாக போய்விட்டது.
   மன்னிச்சிடுங்க வருண்
   எதுக்கு?” அவன் புரியாமல் கேட்டான்.
   எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கீங்க, இனிமே உங்களை நம்பறேன்.ஆனா உங்களை மட்டும்தான் நம்புவேன்,
   அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குச் சிரிப்பு.அவளுக்கு இன்னும் சரியாக மனிதர்களை எடை போடும் பக்குவம் வரவில்லை.தன்னுடைய பார்வையில் பட்ட மனிதர்களை மட்டும் வைத்து இந்த உலகத்தை எடை போட்டிருக்கிறாள்,இப்போதுதானே பட்டணத்திற்கு வந்திருக்கிறாள்,இனி புரிந்து கொள்வாள் என்று நம்பினான்.
   மறுநாள் காலை தேன்மொழி சீக்கிரமாக எழுந்து அவனுக்குக் காலை உணவு  தயாரித்துக் கொடுத்து வாழ்த்து சொல்லி அனுப்பினாள்.
   வருணுக்கு விமானப் பணியாளர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை.அதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்பதால் அப்பாவின் ஆசைப்படி அறிவிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்தான்.
   நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் ஐநூறு பேர் வந்திருந்ததால் தனக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்றுதான் நினைத்தான்.ஆனால் தேர்வாகியிருந்த இருபத்தாறு பேரில் அவனும் ஒருவனாக இருந்தான்.அதன்பிறகுதான் வருண் நிரந்தரமாக கோலாலம்பூருக்கு வந்தான்.அங்காசபுரியின் பின்னால் இருக்கும் அப்பார்ட்மெண்டில் சில பல்கலைக்கழக மாணவர்களோடு தங்கியிருக்கிறான்.
 
*        *       *
   வானொலி கேட்டுக்கொண்டே இருந்த தேன்மொழி அப்படியே உறங்கிவிட்டிருந்தாள்.திடீரென வானொலி அலறியபோதுதான் திடுக்கிட்டு எழுந்து சத்தத்தைக் குறைத்தாள்.வருண் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு போய்விட்டிருந்தான்.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி காலை ஆறரையாகியிருந்தது.வருண் காலையில் பத்து மணிக்கு வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தான்.விரைவாக வேலைகளை முடித்துவிட்டு அவனுக்காக காலை உணவையும் தயாரித்து வைத்தாள்.
      சொன்னபடி வருண் காலை பத்து மணிக்கெல்லாம் வந்துவிட்டான்.கயல்விழி அப்போதுதான் தூங்கி எழுந்து வந்தாள்.
     கயலுக்குட்டிக்கு இப்பத்தான் பொழுது விடிஞ்சதா?” அவளை வம்புக்கிழுத்தான்.
     போங்க வருண் மாமா. நான் படிச்சிட்டு ஆறு மணிக்குதான் படுத்தேன்,
     வருண் தேன்மொழியுடன் பேசியிருந்துவிட்டு அவள் சமைத்த காலை உணவை உண்டான்.
     இருபத்தாறு வயதாகும் வருண் உயரமாக, ஒல்லியாக, மாநிறமாக இருந்தான்.அடர்த்தியான நெருக்கமான புருவங்கள். சிரிக்கும்போது கூடவே சேர்ந்து சிரிக்கும் கூர்மையான கண்கள். பிடித்து இழுத்துப் பார்க்கலாமா என்ற ஆசையைத் தூண்டிவிடும் நீளமான மூக்கு. வரிசை தவறாத பற்கள்.. இதுதான் வருண்.
     நான் கிளம்பறேன் தேனு. ராத்திரி உல்லாச ஊர்வலம் முடிந்ததும் எஸ்.பி போறேன்.நாலு நாள் கழிச்சிதான் வருவேன்.பழசயெல்லாம் நெனச்சி வேதனைப்பட்டுக்கிட்டு இருக்காதே,எல்லாத்தையும் மறந்துடு்,” வழக்கமாக சொல்லும் அறிவுரையைக் கூறிவிட்டு போனான்.
* * *
   அகல்யா கடுகடுவென இருந்தாள்.அவளுடைய கோபத்திற்கான காரணம் வேறு யாருமில்லை. அவளுடைய மனம் கவர்ந்த அறிவிப்பாளர் வருண்தான்.முன்தினம் இரவு ஹலோ ஆர்,டி,எம் நிகழ்ச்சிக்காக ஒரு கல்லூரி மாணவியைப் பேட்டி எடுத்திருந்தான்.அந்த மாணவியின் பெயரைக் கேட்டவுடன் வித்தியாசமான பெயர். ஆனால் அழகான பெயர் என்று பாராட்டினான்.அகல்யாவுக்கு அது பொறுக்கவில்லை.போதாக்குறைக்கு அந்த மாணவி கல்லூரியில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு நடனமாடப் போவதாக கூறியபோது சிறப்பாக ஆடனும்,” என்று வேறு வாழ்த்தினான்.
    போச்சி சீனியர். உங்க மாமாவுக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சி போலிருக்கு.அந்தப் பொண்ணு எப்படி டான்ஸ் ஆடுதுன்னு போயி பாக்கப் போறாரு,” அவளுடன் ஒன்றாக தங்கியிருக்கும் பல்கலைக்கழக ஜுனியர் மாணவி ரேணு அவளை வேண்டுமென்றே வெறுப்பேத்தினாள்.
    அகல்யாவின் முகம் மேலும் சிவந்தது.
    போயி பாக்கட்டுமே யாரு வேண்டான்னாங்க?” வெறுப்போடு மெத்தையைத் தட்டிப் போட்டாள்.தலையணைக்கடியிலிருந்து வருணுடைய புகைப்படம் கீழே விழுந்தது.ஒரு மாத இதழிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
   இன்னிக்கு என் பக்கத்துல படுக்க வேண்டாம்,தனியா கீழ படுங்க் வருணுடைய புகைப்படத்தை கீழே வைத்துவிட்டு. போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டு படுத்தாள்.
   சீனியர், வேனும்னா வருணை என் பக்கத்துல படுக்க வெச்சிக்கட்டுமா?” ரேணு கடுப்படித்தாள்,
  அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, வருணுடைய புகைப்படத்தை எடுத்து முகத்தில் நான்கு குத்து விட்டு அலமாரியினுள் வீசிவிட்டுப் படுத்தாள் அகல்யா.
  

                                                    தொடரும் ……..



No comments:

Post a Comment