Sunday, March 20, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 9

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 9




 

தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சமேன் உன்னைத் தேடுது?
அழகே நீதான் எங்கே? எங்கே?
 
       குட்டித் தூக்கம் போட்டு எழுந்த அகல்யா துளசி சவர்க்காரத்தைப் போட்டு குளிரெடுத்து நடுங்கும் வரையில் குளித்தாள்.அரைமணி நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறியவள் அடுத்த முப்பதாவது நிமிடத்தில் புடுராயா பேருந்து நிலையத்தின் அருகே பத்தாங் பெர்ஜுந்தை போகும் 147-ஆம் எண் பேருந்துக்காக காத்திருந்தாள்,வருணும். யோகேஸ்வரியும் வழிநடத்தும் உல்லாச ஊர்வலம் நிகழ்ச்சி இரவு ஏழு முப்பதுக்கு பத்தாங் பெர்ஜுந்தை பொதுமண்டபத்தில் நடைபெறவிருந்தது,வருண் மீது பைத்தியமாக இருக்கும் அவள் வருணை நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று விரும்பிய ரேணுதான் அவளை வற்புறுத்தி அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாள்.அவள் கொஞ்சம் தாமதமாக வருவதாக சொன்னாள்.
     அகல்யா கருப்பு நிற பிளவுஸ், கருப்பு நிற பாவாடை அணிந்திருந்தாள்.கண்மை, நெற்றிப் பொட்டு, வளையல், கடிகாரம், சப்பாத்து எல்லாமே கருப்பு நிறத்தில்.
     ஹலோ, ஸ்வீட் கருப்பி மோட்டாரில் போன எவனோ கத்திவிட்டுப் போனான்.எதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தாள்.
    
     அகல்யா பத்தாங் பெர்ஜுந்தை பொது மண்டபத்தை அடைந்தபோது மாலை மணி ஆறுதான் ஆகியிருந்தது.வருணை அங்கு பார்த்துவிட்டாள்.இன்னமும் கூட்டம் வராத நிலையில் மண்டபத்தில் ஒரு சிலர் மட்டுமே அமர்ந்திருக்க அவளும் ஒரு மூலையில் அமர்ந்தாள்.கையில் எதோ ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த வருண் திடுமென அவளே எதிர்பாராத வகையில் அவளுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்.அவள் அவனை ஆவலாய் பார்த்தாள்.
   ரொம்ப வெளிச்சமா இருக்கீங்க,கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கறீங்களா?கண்ணு கூசுது,” வருண்தான் அவளிடம் அப்படி சொன்னான்.
   எவ்வளவு திமிர்?”அவள் முறைப்பதை காதில் வாங்கி கொள்ளாமல் கையில் வைத்திருந்த காகிதத்தைப் படித்துக் கொண்டிருந்தான் வருண்.
       
* * * * *
     அங்காசபுரி அலுவலகம் காலையிலேயே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.வருண் முதலாவது மாடியிலிருந்த லெட்டர் டிப்பார்ட்மெண்ட் டுக்குச் சென்று நம்மைச் சுற்றி அங்கத்திற்காக வந்திருந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு வந்தான்.அவ்வாரத்தில் நடக்கவிருந்த நிகழ்வுகளை முறையாக தொகுத்து கணினியில் பதித்து வைத்தான்.சுங்கைப்பட்டாணிக்குப் போயிருந்த அவன் அதிகாலை ஐந்து மணிக்குதான் வந்து சேர்ந்திருந்தான்.அவன் வந்த விரைவு பேருந்தின் இருக்கைகள் குறுகலாக இருந்ததால் உடம்பெல்லாம் பயங்கர வலி வேறு. அவனுக்கு இரவு எட்டு மணிக்கு வேலை.அதற்கு வேறு தயார் செய்ய வேண்டும்.
     வருண் நிகழ்ச்சிக்கு எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தபோது மாலை மணி ஐந்தாகிவிட்டிருந்தது.மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோது அவனுக்குத் தேன்மொழியிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது.அவனை உடனே வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.
    அப்படி என்ன முக்கியமான விசயமாக இருக்குமென்று யோசித்தபடி மோட்டார் சைக்கிளை காஜாங்கை நோக்கி செலுத்தினான்.அவன் அவள் வீட்டை அடைந்தபோது தேன்மொழி அழுதுக்கொண்டிருந்தாள்.
   சொல்லு தேன்மொழி. என்ன நடந்துச்சி? ஏன் இப்படி அழற?” அவ்வளவு களைப்பிலும் அக்கறையோடு விசாரித்தான்.
   நேத்து அப்பா ஈப்போவுக்குப் போயிருந்தாரு.பிரேமா அத்தை இந்த வாரம் வீட்டுக்கு வர்றதா அப்பாக்கிட்ட சொன்னாங்களாம்.”
   வருண் குறுக்கே பேசாமல் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்டுக்கொண்டிருந்தான்.
   பிரியனும் வர்றாராம்,எனக்குப் பிரியனை லலிதாவோட ஜோடியா பாக்கற சக்தி கிடையாது.அவர பாத்தா நான் கண்டிப்பா அழுதுடுவேன்.எனக்கு திரும்ப பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சி,” அவள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினாள்.
   வருண் அவள் ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கிறாள் என்றுதான் நினைத்திருந்தான்.அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குக் கோபம்தான் வந்தது.ஏற்கனவே தூக்கக் களைப்பாலும், அசதியாலு[ம் ஒரு மாதிரியாக இருந்த வருண் அவளைக் கோபமாகப் பார்த்தான்.
   உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டியா? இது ஒரு பெரிய பிரச்சனையா? உன்னை யாரு அவங்க வர்ற நேரத்துல வீட்ல இருக்க சொல்றது?
எங்கயாவது வெளிய போயிடு,இல்லன்னா உன் ரூம்குள்ளயே இருந்துக்கோ. வெளியே வராதே!         இதெல்லாம் பெரிய பிரச்சனையா? இதுக்குதான் என்னை வரச்சொன்னியா? எனக்கு எவ்வளவோ வேலை இருக்கு தெரியுமா?என்னமோ ஏதோன்னு பதறி போய் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்.
   அவன்தான் உன்னை வேண்டாம்னு கசக்கி, காயப்படுத்தி தூக்கி எறிஞ்சுட்டுப் போய்ட்டான்,இன்னும் அவனை நெனச்சே ஏன்..?நான் எவ்வளவு சொன்னாலும் நீ கேக்கவே மாட்டேங்கற? என் பேச்சுக்குத்தான் மதிப்பே இல்லையே? அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லற? போ. போயி அந்தப் பிரியனை நெனச்சி அழுதுக்கிட்டே இரு,எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்,” வருண் கோபமாகப் பேசிவிட்டுப் போய்விட்டான்.
    நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வந்து படுத்தவன் காலையில் பத்து மணிக்கு மேல்தான் எழுந்தான்.எழுந்ததுமே அவனுக்குத் தேன்மொழியின் ஞாபகம்தான் வந்தது.உடனே அவளுடைய கைத்தொலைபேசிக்கு அழைத்தான்.
   வீ ஆர் நோட் கெட்டிங் ரெஸ்போண்ட் போர் த நம்பர் யூ ஹேவ் டைல்ட்,ப்ளீஸ் ட்ரை அகேய்ன் லேட்டர்
    வருண் அவளுடைய வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தாலும் யாரும் எடுக்கவில்லை.
    அவன் கோபத்தில் அவளைத் திட்டிவிட்டானே தவிர அவளுக்காக அவன் மனம் வருத்தப்படவே செய்தது.அவள் நிச்சயம் அழுதிருப்பாளென்று அவனுக்குத் தெரியும்.அவளுடைய வீட்டிலோ. பூக்கடையிலோ போய்ப் பார்க்க கூட அவனுக்கு நேரமில்லை.பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சி வேறு இருந்தது.
   மீண்டும் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தான்,தொடர்பு கிடைக்கவேயில்லை.
   எங்கே போயிருப்பாள்,எப்போதும் இப்படி செய்ய மாட்டாளே?
    அவனுக்குள் ஒரு பயம் பூத்தது,.அவனால் தன் வேலையை ஒழுங்காக செய்யவே முடியவில்லை.அவனுடைய எண்ணங்கள் யாவும் தேன்மொழியைச் சுற்றியே இருந்தன.
    அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு ஏதும் சென்றுவிட்டாளா? ஒரு வேளை தான் நடந்து கொண்ட முறை சரியில்லையோ? எந்த விசயமாக இருந்தாலும் தன்னிடம்தானே முதலில் சொல்வாள்? அவளைப் போய் ஏசிவிட்டோமே?அதுவும் சற்று அதிகப்படியாகவே அவளைத் திட்டிவிட்டதாக தோன்றியது.திட்டிவிட்டு அவளுடைய முகத்தைக் கூட பார்க்காமல் வந்துவிட்டோமே?” வருண் பதறினான்,
    அவள் ஏற்கனவே அழுதுக் கொண்டிருந்தாளே? தானும் அவளை ஏசிவிட்டதால் அவள்..அவள்அவனால் அதற்கு மேல் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனம் தவியாய் தவித்தது.


                                            



தவிப்பு தொடரும் …..

No comments:

Post a Comment