Sunday, March 6, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 6

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 6




 

அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்?
உறவை மனதில் வளர்க்குதே,,
கடைசியில் உசிரைக் கொல்லுதே???

     லலிதாவுடன் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த பிரியன் பாக்கெட்டினுள் அதிர்ந்த கைத்தொலைபேசியை வெளியே எடுத்து ஹலோ என்றான்.எதிர்முனையில் தேன்மொழி பேசினாள்.
   இன்னும் தூங்கலையா?” அவள்தான் கேட்டாள்.
    இந்த நேரத்துல தூங்காம நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க?”
    உங்ககிட்ட பேசனும் போல இருந்துச்சி்
    நானு இப்ப முக்கியமான ஆளுகூட இருக்கேனே?”
    முக்கியமான ஆளா? யாரு?” தயங்கி தயங்கி கேட்டாள்.
    என்னோட வருங்கால மனைவி லலிதா கூட,” சொல்லிவிட்டு கைத்தொலைபேசியைத் துண்டித்துவிட்டான்.
    தேன்மொழி அதிர்ந்து போனாள்.அவளால் பிரியன் சொன்னதை நம்ப முடியவில்லை.கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தன.மீண்டும் அவனுக்குப் போன் செய்தாள்.
   நீங்க விளையாட்டுக்குத்தானே சொல்றீங்க?”
   எதுவுமே விளையாட்டு இல்ல தேன்மொழி,புரிஞ்சுக்கோ
   அப்ப ஆரம்பத்துல என்கூட பழகினதெல்லாம்…?” அவளால் பேச கூட முடியவில்லை.
   அவன் பதிலேதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான்.
   தேன்மொழிக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.மீண்டும் போன் செய்தாள்.இம்முறை லலிதா போனை எடுத்தாள்.
   பிரியன் இஸ் நோட் அரௌண்ட் ஹியர்ஆங்கிலத்தில் ஸ்பீக்கினாள்.
   தேன்மொழி தவித்தாள்.நடப்பதெல்லாம் நிஜம்தானா? இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? அவளுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.வேறு வழியின்றி பிரேமாவை எழுப்பி ஸ்கூலுக்கு அழைத்து வந்தாள்.அவளிடம் விசயத்தைச் சொன்னாள்.அவள் பதறிப்போவாள் என்றெண்ணிய தேன்மொழிக்குத்தான் ஏமாற்றம்.
    என்னை என்னா பண்ண சொல்ற? நான் கூட அவன் உன்னை விரும்பினா உன்னையே கட்டிவெச்சிடலாம்னுதான் நெனச்சேன்.ஆனா பிரியனுக்கு லலிதாவைத்தான் பிடிச்சிருக்கு அவ எவ்வளோ பெரிய பணக்காரி தெரியுமா? பிரியன் மேல உயிரையே வெச்சிருக்கா. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவனுக்கும் வியாபாரத்துல பணப்பிரச்சனை வராதுன்னு நானும் சரின்னுட்டே பிரேமா சர்வசாதாரணமாக சொன்னாள்.
   வேண்டாம்மா, நான்தான் இப்ப சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேனே? என்னாலயும் அவருக்கு உதவி செய்ய முடியும்மா? அவள் கெஞ்சினாள்.
   மாசம் ஐநூறு வெள்ளி சம்பளத்துல என்னா பெரிய உதவி செஞ்சிட முடியும்? சொல்ல சொல்ல ஏன் பிடிவாதம் பிடிக்கிற? அவனுக்கு உன்ன பிடிக்கலேன்னா நான் என்னா பண்ண முடியும்? இரு அவனையே உன்கிட்ட பேச சொல்றேன்,” பிரேமா பிரியனுக்குப் போன் செய்தாள்.
   தேன்மொழி குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தாள்.பிரேமா பிரியன் அவளை அழைப்பதாகச் சொல்லி ரிஸீவரை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள்.
   உனக்கு எத்தனை முறை சொல்றது? ஏன் எல்லாரையும் தூங்கவிடாம தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்க? நீ என்னா கெஞ்சினாலும் என் மனசு மாறப்போறதில்ல.போனை வெச்சிட்டுப் படுத்து தூங்கு
   ஏன் திடீர்னு இப்படி அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் தொடர்பைத் துண்டித்துவிட்டான்.
   சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து தன் மனதில் இடம் பிடித்த பிரியனா இப்படி மாறிப்போனான்? மற்ற பெண்களிடம் பேசவே பிடிக்கவில்லை என்று சொல்லி சொல்லியே அவள் மனதில் இடம் பிடித்த பிரியனா இப்படி?” எதனால் இப்படி மாறிப்போனான்? தான் கொஞ்சம் அழுதாலே தாங்க மாட்டானே? அவனா இன்று இப்படி அழவைக்கிறான்?”
   அவளுக்கு இன்னமும் அவன் மீதான நம்பிக்கை போகவில்லை.பிரேமாவிடமும், பிரியனிடமும் மாறி மாறி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.காலில் விழாத குறைதான்.
  இதுக்கு மேல போன் பண்ணாதே, பிரியன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் போன் செய்து கொண்டே இருந்தாள்.
   ஏன் அடம் பிடிக்கற? என் மேல உனக்கு அவ்வளவு வேறயா? வேனும்னா ஒரு நாள் பூரா என்கூட …. அவன் சொன்ன அந்த வார்த்தையில் அவள் உயிரோடு செத்துப்போனாள்.போன் ரிஸீவர் கையிலிருந்து நழுவுவதைக் கூட உணராமல் பிரமை பிடித்ததைப் போல் தரையிலேயே அமர்ந்துவிட்டாள்.
   எவ்வளவு மட்டமாகப் பேசிவிட்டான்? ஓரளவுக்குதான் பணிந்து போக முடியும் என்பதை மறந்து அவன் மீது உள்ள அன்பினால் பெண்மைக்கான வரம்பை மீறி கெஞ்சியதன் விளைவு.ஒரு பெண்ணுக்கு இதைவிட பெரிய அவமானம் என்று வேறென்ன இருக்க முடியும்? தேன்மொழி நிலைகுலைந்து, கூனி குறுகிப் போனாள்.அமைதியாக,மென்மையாக இருந்தே பழகிவிட்ட அவளுக்கு அவர்களை எதிர்த்துப் போராடத் தெரியவில்லை.அவளால் அழ மட்டும்தான் முடிந்தது.அழுதாள்.அழுதுக்கொண்டே இருந்தாள்.பொழுது விடிந்ததும் பிரியனின் வீட்டை விட்டே கிளம்பிவிட எண்ணினாள்.ஆனால் பொழுது விடிவதற்குள் அவள் பட்ட பாடு
   காதல் வலி இவ்வளவு கொடுமையானதா? இந்த உலகில் இனி தனக்கென்று எதுவுமே இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தி புண்பட்ட மனதை மேலும் ரணமாக்கிப் பார்க்கிறதே?
   ?சாதாரண தலைவலி வந்தால் கூட பிரியனிடம் சொல்லி அழவேண்டும் போல் இருக்கும்.அவனே காயப்படுத்தினால் யாரிடம் சொல்வது? ஐயோ உயிரைக் குடிக்கும் இந்த வலியை எப்படி தாங்குவேன்?” துடித்துப் போனாள் அவள்.
   ஒரு வழியாக பொழுது விடிந்தது.தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் தேன்மொழி.தாமான் ரிஷாவில் யாரையோ இறக்கி விட்டுவிட்டு திரும்பிய டாக்சியில் ஏறிக்கொண்டாள்.டாக்சியின் கண்ணாடி ஓரமாய் அமர்ந்திருந்த தேன்மொழி வேதனையின் உச்சத்தில் இருந்தாள்.எவ்வளவு விரைவில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது? நடந்ததெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.பினாங்கு போன சில மாதங்களில் பிரியன் தன்னை விட்டு கொஞ்சங்கொஞ்சமாய் விலகிப் போனது வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தால் என்றல்லவா அவள் இதுநாள் வரை எண்ணியிருந்தாள்.இப்போதுதானே புரிகிறது.ஆக அவன் திடீரென்று மாறிவிடவில்லை.
   இப்போது கூட பிரியன் அவளைத் தேடி வந்து எல்லாமே விளையாட்டுதான். அவளைச் சீண்டி பார்க்கவே அப்படி நடந்து கொண்டதாகச் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்? காயப்பட்ட மனம் நடக்கப் போகாத ஒன்றை கற்பனை செய்து பார்த்து ரணத்தை ஆற்றிக் கொள்ள நினைத்தது.மனித மனம் எப்போதுமே இப்படிதானே? சந்தோஷமான விசயம் என்றால் உடனே ஏற்றுக் கொள்ளும்.துக்கமான விசயமென்றால் கனவாகவோ பொய்யாகவோ இருக்கக்கூடாதா என்று ஏங்கித் தவிக்கும்.
   தன் மனவேதனையை யாரிடம் சொல்வது? மடியில் படுத்து அழ அம்மா கூட இல்லையே அவளுக்கு அம்மா இல்லையென்ற குறை அப்போதுதான் அவளைப் பெரிதாக வாட்டியது.
  டாக்சி ஈப்போ பேருந்து நிலையத்தை அடைந்ததும் பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கியவளுக்கு வழி தெரியவில்லை.பிரியன் சொன்னது போல் அவள் காட்டுப் பூச்சிதானே? மற்றவர்களின் முன் அழக்கூடாதென்ற வைராக்கியமெல்லாம் அவளுடைய உணர்ச்சிப் பூர்வமான, இளகிய மனதின் முன் தோற்றுப் போக கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றத் தொடங்கியது.
   மேடான் கிட் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தை விட்டு வந்து கொண்டிருந்த வருண் அழுதுக்கொண்டே நின்றிருந்த தேன்மொழியைப் பார்த்துவிட்டு அவளை நெருங்கினான்.


                                                  தொடரும் …….


No comments:

Post a Comment