Tuesday, March 8, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 7

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 7

காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்,,
என் கண்ணீர் வழியே உயிரும் நனைய
கரைமேல் கரைந்து கிடக்கிறேன்..







 

     கையில் பிடித்திருந்த துணிபேக்கை பக்கத்து நாற்காலியில் வைத்துவிட்டு தன் இடது கையை அந்த நாற்காலியின் மேல் வைத்திருந்த வருண் தன் எதிரில் அமர்ந்திருந்த தேன்மொழியையே கண் இமைக்காமல் பார்த்தான்.வரமாட்டேன் என்று அடம்பிடித்த அவளை வற்புறுத்தி இந்த உணவகத்திற்கு அழைத்து வருவதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது,
      கடைக்காரர் அவன் கேட்ட சூடான நெஸ்காப்பியை எடுத்து வந்து வைத்துவிட்டுப் போனார்.தேன்மொழி இன்னும் அழுவதை நிறுத்தவில்லை.
      ஹலோ,நெஸ்காப்பி குடிச்சுட்டு அழுகையைத் தொடரலாமே
      மற்றவர்களைப் போல் பரிதாபப்படாமல், உருகாமல் இயல்பான நகைச்சுவையுடன் அவன் அப்படி சொன்னது அவளுக்கு வித்தியாசமாக தெரியவே அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்,வருண் நெஸ்காப்பியை அவளருகே நகர்த்தி வைத்தான்.அழுது அழுது களைத்துப் போயிருந்த அவளுக்கு சூடாக எதையாவது அருந்த வேண்டும் போலிருக்க, நெஸ்காப்பி கிளாஸைக் கையில் எடுத்து ஊதி ஊதி குடித்து முடித்தாள்.தன்னுடைய நெஸ்காப்பியையும் அவளை நோக்கி நகர்த்தி வைத்தான் அவன்.

     பேருந்து கம்பாரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது,வருணுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த தேன்மொழி உறங்கிவிட்டிருந்தாள்.வருணுக்கு அவளைப் பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்துவிட்டிருந்தது.கண்களில் இனி கண்ணீரே மிச்சமில்லை என்னும் அளவுக்கு அழுது ஓயந்துவிட்டிருந்த தேன்மொழி அவனிடம் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டிருந்தாள்.
    அவனுக்கு அது ஒரு வகையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது.அவள் அதிக கூச்ச சுபாவமுள்ள பெண் என்பதை அவளைப் பார்த்த முதல்நாளே கண்டுகொண்டான்.ஆனால் இன்று தன்னிடம் கூச்சமில்லாமல் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறாள் என்றால் அவள் எந்த அளவுக்கு விரக்தி அடைந்திருப்பாள் என்று அவனால் உணர முடிந்தது.
    வருண் மட்டும் என்னவாம்.. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட அவனுக்கு சுங்கைப்பட்டாணி தாமான் செஜாத்தியிலுள்ள ஷபார்க் அவென்யூஷ ஹோட்டலின் கிளை ஹோட்டலில் வரவேற்பாளர் வேலை கிடைத்திருந்தது,இந்நேரம் காதில் வாக்மேனைப் பொருத்திக்கொண்டு வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க வேண்டியவன்,தன்னிடம் பேசியே பழகிராத ஒரு பெண்ணுக்காக முன்பின் தெரியாத ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறான்.
   அவளுடைய வீடு பீடோரில் ஏதோ ஒரு தோட்டப்புறத்தில் இருப்பதாகச் சொன்னாள்.அவளுக்கு வீட்டுக்குச் சொந்தமாகப் போகத்தெரியாது என்பதாலும்,விரக்தியின் விளிம்பிலிருப்பவள் ஏதாவது செய்துக்கொள்ளக் கூடும் என்ற ஐயத்தாலும் அவன் அவளுக்குத் துணையாகப் போய்க்கொண்டிருக்கிறான்.
   கம்பார், தாப்பா பேருந்து நிலையங்களில் இறங்கியதும் யார் யாரையோ கேட்டு ஒரு வழியாக அவளை அவளுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு உடனடியாக கிளம்பிவிட்டான் வருண்,போகுமுன் மறக்காமல் தன்னுடைய தொலைபேசி எண்களையும் கொடுத்துவிட்டுப் போனான்,
   வருண் போனதும் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள் தேன்மொழி,கொஞ்ச நேரம் ம(றை)றந்திருக்கும் சோகத்தைக் கூட தனிமை நினைவு படுத்திவிடுமே.. பிரியன் ஏன் இப்படி செய்தான்? செவ்வனே இருந்த அவளை ஆசை காட்டி மையலை வளர்த்தவன் அவன்தானே? அவளுக்கு ஆண்கள் மீதே ஒட்டுமொத்தமாக வெறுப்பு வந்தது.வருண் மீதும் அவளுக்கு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது.தன் வாழ்க்கையில் என்னவோ பெரிய சோகம் ஒன்று நடந்து முடிந்துவிட்டது போலவும் இதற்கு மேல் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற கு(கி)றுக்குப் புத்தியில் இருந்ததாலும் வருண் அவளை ஏமாற்றி ஏதாவது செய்துவிடுவானோ என்று கூட யோசிக்கவில்லை அவள்.அதே சமயம் அந்நேரத்தில் யாராவது தன் பக்கத்தில் இருந்தால் தேவலாம் போல இருந்ததும் அவள் அவனை நம்பி வந்ததற்கொரு காரணம் எனலாம்.
   அமைதியாக இருந்த பிரியனே தப்பானவனாக இருக்கும்போது முன்பின் பழகிராத பெண்களிடம் கூட குறும்பு பண்ணும் வருண் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பான் என்று அவள் நினைக்காமல் இல்லை.இதை அவனிடம் நேரடியாகவே கேட்டும்விட்டாள்.
   நீங்க கூட எனக்கு உதவி செய்யறமாதிரி நடிச்சி என்னை ஏமாத்த பாக்கறீங்கதானே?” அவனுடைய நெஸ்காப்பியையும் குடித்துவிட்டு, மீசையை மாதிரி மேல் உதட்டில் பட்டிருந்த நுரை, சோகமான முகத்தோடு அவள் அப்படி கேட்க. அவன் வாய்விட்டு சிரித்தே விட்டான்.பிறகு சொன்னான்.
   ஆமாம்,நெஸ்காப்பியில மயக்க மருந்து கலந்துட்டேன்,” அவள் சோகமாக இருப்பதால் சேட்டை பண்ணி அவளைச் சிரிக்க வைக்க வேண்டும் என்றுதான் அவன் அப்படி குறும்பாகப் பேசினான்.மற்றபடி அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாளே என்று.ஆனால் அவளை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டுப் போகும்போது ஒன்று சொன்னான்.
   நான் பெண்கள்கிட்ட குறும்பா பழகறவன்தான்,ஆனா யார்கிட்டயும் ரெட்டை அர்த்த வசனத்துல பேசியதில்ல.யார் மனசுலயும் ஆசையைத் தூண்டி விடற மாதிரியும் பேசியதில்ல.என்னை மாதிரி பையன்கள நம்பலாம்.ஆனா பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன்னு விலகி விலகிப் போறவனத்தான் நம்பவே கூடாது,”
   அவன் சொன்னது யாவும் உண்மைதானே?அவளுக்கு நடந்ததை நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.திடீர் திடீர் என ஏதாவது செய்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.சுவரோரமாய்ப் போய் ஒட்டிக்கொண்டு அழுதாள்.ஏன் தனக்கு மட்டும் எப்போதும் இப்படி நடக்கிறது?
   அக்கா, வந்துட்டியா? சீக்கிரம் கதவைத் திற கயல்விழிதான் கத்தினாள்.ஒரு வேளை முருகம்மா பாட்டிதான் அவளிடம் தேன்மொழி வந்துவிட்ட விசயத்தைச் சொல்லியிருக்க வேண்டும்.கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்.
   அக்கா, பசிக்குதுக்கா,ஏதாச்சும் வாங்கிட்டு வந்தியா? அப்பாக்கிட்ட காசு இல்லாததுனால இன்னிக்கு ஸ்கூலுக்குப் பட்டினியாதான் போனேன்,
   தேன்மொழிக்கு ஒரு கணம் என்னவோ போலிருந்தது.தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்தனுப்பி கடையில் சாடின் டின்னும் ஒரு கிலோ பச்சரிசியும் வாங்கி வரச்சொல்லி சமைத்தாள்.பசியோடு இருந்த தங்கை சாப்பிடுவதையே பார்த்தாள்.
   நல்ல ருசியான உணவுக்காக அலையும் வயதில் என்ன கிடைத்தாலும் பரவாயில்லை என்று சாப்பிடும் தங்கையைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.யாருக்காக இல்லாவிட்டாலும் அவளுக்காகவாவது  நடந்ததையெல்லாம் மறக்க வேண்டுமே?”
   தேனு,” அவள் அப்பா வேலைவிட்டு வந்துவிட்டிருந்தார்.
   ஏன்மா திடீர்னு வந்துட்ட? முருகம்மா பாட்டி சொன்னப்ப கூட நான் நம்பவே இல்ல,”அவருடைய கைகள் அவள் தலையை ஆதரவாக கோதின.
    பாவம் அப்பா.அம்மா இறந்தபிறகு தேன்மொழியையும், கயல்விழியையும் வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஷடப்பட்டிருப்பார்? வேலைக்காட்டில் எத்தனை அட்டைகளாலும் கொசுக்களாலும் ரத்தம் உறிஞ்சப்பட்டிருப்பார்?எத்தனை மூட்டை உரம் தூக்கியிருப்பார்? போதும், தன்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் அப்பாவை பற்றிதான் இனி நினைக்க வேண்டும்.
   மனதில் நினைக்கும்போது எல்லாமே சுலபமாகதான் இருந்தது.ஆனால் செயல்படுத்தும்போது….?
   எவ்வளவு முயன்றhலும் பல சமயங்களில் பழைய சம்பவங்கள் அவள் நினைவில் வந்து துன்புறுத்தும்.அதுமாதிரியான சமயங்களில் வருண்தான் அவளுக்கு ஆறுதல்.அவனுக்குப் போன் செய்து அழுவாள்.வாழ்க்கையில் எதுவுமே பிடிக்கவில்லை என்பாள். சாகப்போகிறேன் என்பாள்.வருண் அவளுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறுவான்.சில நாட்கள் அமைதியாக இருப்பாள்.மீண்டும் ஆரம்பித்துவிடுவாள்.முதல் காதலையும், முதல் ஸ்பரிசத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன?”


                                                  தொடரும் ……




No comments:

Post a Comment