Sunday, February 27, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 3

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 3





 

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்….
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்….

     தேன்மொழிக்கு நடந்ததை எல்லாம் நினைக்க ஆச்சரியமாகவே இருந்தது,எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத தன் வாழ்வில் இந்த பிரியன் எங்கிருந்து வந்தான்? அவனுக்கும் தனக்கும் இடையில் இருப்பது என்ன உறவு?அந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை என்பதைவிட அவள் தேட முயற்சிக்கவில்லை என்பதே நிஜம்.
     தேனு,நாளைக்குக் காலையில சீக்கிரமா வந்திடு்,” அவள் போகுமுன் பிரியன் அவளிடம் விண்ணப்பம் விடுத்தான்.
     ஆனால் தேன்மொழி மறுநாள் சற்று தாமதமாகதான் கோயிலுக்கு வந்தாள்.பிரியன் முதலிலேயே வந்துவிட்டிருந்தான்.வந்ததுமே அவன் கண்கள் முதலில் தேடியது தேன்மொழியைத்தான்.அவளைப் பார்த்தவுடன்தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.அவள் சிறிய பார்டர் போடப்பட்ட சந்தன நிற சேலையை அணிந்து வந்திருந்தாள்.அவளுடைய அப்பாவும், தங்கையும் காலையிலேயே ஆற்றங்கரைக்குப் போய்விட்டார்கள்.தேன்மொழி அர்ச்சனை தட்டை வாங்கிகொண்டு சுவரோரமாய் முதுகைச் சாய்த்து அமர்ந்தாள்.
     பிரியன் அன்று முழுவதும் அவள் அருகிலேயே இருந்தான்.அவள் தன்னை விட்டு எங்கும் போவதை அவன் விரும்பவில்லை.கச்சான் பூத்தே கடையில், கோயிலில்,பந்தி பரிமாறப்படும் இடத்தில் இப்படி எல்லா இடத்திலும் அவன் மனம் அவளைத் தேடி ஏங்கியது.தேன்மொழிக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.அவள் இயல்பாகத்தான் இருந்தாள்.
    ஒரு வழியாக திருவிழா, மஞ்சள் நீராட்டு, ரத ஊர்வலம் எல்லாம் முடிந்து பிரியன் ஈப்போவுக்குத் திரும்பும் நாளும் வந்தது,தேன்மொழியிடம் தனியாக பேச வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் போய் ஏக்கத்தோடு திரும்பினான்,

* * *
     பிரியன் ஈப்போவிற்குத் திரும்பி ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள்
    தேன்மொழி ரசம் வைப்பதற்காக இடிக்கல்லில் பூண்டையும், மிளகையும் இடித்துக் கொண்டிருந்தாள்.வாசலில் ஒரு கார் வந்து நின்றது.யாரென்று எட்டிப் பார்த்துவிட்டு மீ்ண்டும் சமையலைத் தொடர்ந்தாள்.
    ஹாலில் உட்கார்ந்திருந்த பிரியனுக்கோ இருப்பு கொள்ளவில்லை.ஆசையாய்ப் பார்க்க வந்தால் முகம் காட்டமாட்டேன் என்கிறாளே என்று தேன்மொழியின் மீது கோபம்.தேன்மொழி வேண்டுமென்றே காப்பியைக் கூட கயல்விழியிடம்தான் கொடுத்து அனுப்பினாள்.பிரியன் இனி ஒரு வினாடி கூட காத்திருக்க முடியாது என்பதுபோல முகம் கழுவிவிட்டு வருவதாக பொய்ச் சொல்லிவிட்டு சமையலறையினுள் நுழைந்தான்.
    புளியைக் கரைத்துக் கொண்டிருந்த தேன்மொழி எதார்த்தமாக திரும்பியபோதுதான் பிரியன் தன்னைக் கோபத்தோடு வெறிப்பதைப் பார்த்தாள்.என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் பிரியன் அவளுடைய கரங்களைப் பற்றினான்.
    ஒனக்கு நெஜமா ஒன்னும் புரியலியா..இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?நான் தானா ஒரு பொண்ணுக்கிட்ட போயி பேசறேன்னா அது நீதான், என்றான்.சம்பந்தமில்லாததைப் போல் அவன் ஏதேதோ உளற,அவள் திகைத்து நிற்க. பிரேமா உள்ளே நுழைந்தாள்.
   தேனு, நான் உன்னைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்.சீக்கிரம் கிளம்பு.பிரேமா அவளை அவசரப்படுத்தினாள்.
   அதன்பிறகுதான் தேன்மொழிக்கு விசயமே தெரிந்தது.பிரியனுடைய அக்கா கோமதிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.தலைப்பிரசவம் என்பதால் பிரேமாதான் பார்த்துக் கொள்கிறாள்.தேன்மொழி எஸ்.பி.எம் தேர்வெழுதிவிட்டு வீட்டில் இருப்பதால் இரண்டு மாதத்திற்கு அவளை வீட்டு வேலைகளுக்கு உதவியாக அழைத்துப் போகலாம் என்றுதான் பிரேமா வந்திருக்கிறாள்.
   தேன்மொழியால் உடனே எந்த முடிவும் சொல்ல இயலவில்லை.பிரியன் ஒரு விதத்தில் அவளை ஈர்த்து வைத்திருப்பது உண்மைதான் என்றாலும் எப்படி தன் அப்பாவையும். தங்கையையும் விட்டுவிட்டு பழக்கமில்லாத வீட்டில் இருப்பது?
    இராமசாமிக்கு முதலில் அவளை அனுப்புவதில் அவ்வளவாக விருப்பமில்லை.காரணம் அவள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவள்.ஒரு சாதாரண சின்ன விசயம் கூட அவளை எளிதில் காயப்படுத்திவிடும்.ஆனால் இரண்டு மாதம்தானே சீக்கிரம் ஓடிவிடும் என்று பிரேமாதான் அவரை வற்புறுத்தி பணிய வைத்தாள்.

* * *
     தேன்மொழி பிரியனின் வீட்டுக்கு வந்து இரண்டு வாரமாகிவிட்டிருந்தது.இதுவரை பிரியனின் வீட்டில் எல்லாரும் அவளை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள்.ஆனாலும் தேன்மொழிக்குத் தன் வீட்டின் மீதான ஏக்கம் மேலும் மேலும் வலுத்ததே தவிர குறையவில்லை.முருகம்மா பாட்டி இரண்டு மாதத்திற்கு தான் சமைத்துக் கொடுப்பதாக சொன்னார்தான் இருந்தாலும் அவளுக்கு மனது கேட்கவில்லை.
      பிரியனின் வீட்டில் மீன்,கோழி என்று விதவிதமான உணவு வகைகள்.ஆனால் அவளால்தான் சாப்பிட முடியவில்லை.அங்கே அப்பாவும்,தங்கையும் சாதாரண காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்க தன்னால் மட்டும் எப்படி கோழியும், மீனும் சாப்பிட முடியும்?எப்போது இரண்டு மாதம் முடியும்? தன் வீட்டுக்குப் போகலாம் என்றுதான் அவள் மனம் ஏங்கியது.
     அவளுக்குப் பிரியனின் குடும்பத்தைப் பிடித்த அளவுக்கு அவனுடைய வீட்டையும், பட்டணத்து வாழ்க்கையையும் பிடிக்கவில்லை,தோட்டப்புற சூழலிலேயே வாழ்ந்து பழகிவிட்ட அவளுக்குச் சில விசயங்கள் புரியாமலும்,பிடிக்காமலும் இருந்தன.
    நினைத்த நேரத்தில் சில பொருட்களைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய பொருட்களை வாங்கி போட்டுக்கொண்டு பெருமையடித்த  அவர்களின் ஆடம்பரத்தனம் பிடிக்கவில்லை.ஒரு தடவை மழை வந்து அவள் அம்மா பயன்படுத்திய பழைய குடை சாக்கடையில் அடித்துப் போனபோது அந்தக் குடைக்காக அவள் அப்படிதான் அழுதாள்.உயிரில்லாத பொருட்களுக்குக் கூட உணர்வுகள் இருப்பதாக அவளுக்குத் தோன்றும்.பிரியன் அதனாலேயே அவளைக் கிண்டல் செய்வான்.
    இப்படியே கிண்டலும், கேலியுமாக அவர்களின் உறவு இயல்பாக வளர்ந்தது.பிரியன் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துப் போனான்,அவ்வாரம் வெள்ளிக்கிழமை அவளை முதன்முதலாக தாமான் பொர்த்தாமாவிலுள்ள நாகம்மா கோயிலுக்கு அழைத்துப் போனான்.அந்தக் கோயில் பார்க்க சிறியதாக இருந்தாலும் கலையம்சத்தோடு உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.அங்கிருந்த அம்மன் சிலைகள் யாவும் நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக அமைந்திருந்தன.தேன்மொழிக்கு அந்தக் கோயிலை மிகவும் பிடித்துப் போனது.
    மறுவாரம் பிரியன் கோலாலம்பூருக்குப் போய்விட்டதால் தேன்மொழி அக்கோயிலுக்குத் தனியாக வந்தாள்.அர்ச்சனை செய்துவிட்டு கையில் தேங்காயை எடுத்துக்கொண்டு கோயிலை வலம் வந்தாள்.தலையைக் குனிந்து கொண்டே வந்ததால் எதிரே சில்வர் வாளிகளில் கச்சான் மற்றும் பொங்கல் சோற்றைத் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்த ஹரியையும், வருணனையும் கவனிக்காமல் வருண் மீது மோதினாள்,அவள் மோதிய வேகத்தில் அவள் கையிலிருந்த தேங்காய் ஹரியின் காலில் விழுந்தது.காலைப் பிடித்துக் கொண்டு வலியால் துடித்த அவன் நிமிர்ந்தபோது அவள் அங்கில்லை.
   எல்லாமே நொடிப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டதால்  அவர்கள் இருவரும் தன்னைச் சரியாக கவனித்திருக்க மாட்டார்கள் என்றே அவள் நம்பினாள்.ஆனால் கச்சானைப் பரிமாறிக்கொண்டே வந்த ஹரி அவளைப் பார்த்ததும் உடனே அடையாளம் கண்டுகொண்டான்.
   ஏ பொண்ணு, நீதானே என் காலுல தேங்காயைப் போட்ட? என் கால் விரல்ல ஒரு விரலு துண்டா போச்சி தெரியுமா?” ஹரி கோபமாக கேட்டதும் அவள் பயந்து போய் அவனுடைய கால்விரல்களைப் பார்த்தாள்.
  என்னா அஞ்சி வெரலும் அப்படியே இருக்குன்னு பாக்கறீங்களா? அவனுக்கு ஆறு வெரலுங்க வருண் தன் பங்கிற்கு அவளைப் பயமுறுத்தினான்.
   வருண் எதுக்கும் கையில் தேங்காய் எதுனா வெச்சிருக்கான்னு பாத்துடு,”
   அவர்கள் இருவரும் விளையாட்டுக்காகதான் அப்படி சொன்னார்கள்.ஆனால் தேன்மொழி அதை நிஜமென்று நம்பி பயந்து போனாள்,அவளுடைய கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்த் துளி வாழையிலையில் வருண் வைத்துவிட்டுப் போன  பொங்கல் சோற்றில் கலந்தது.வருண் அதைப் பார்த்துவிட்டான்,
    பொங்கல் சோறு உப்பு கரிச்சா என் தப்பில்லைங்க,” பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்ட வருண் அவளிடம் அப்படி சொல்லிவிட்டு பின்னால் திரும்பி சிரித்துக் கொண்டே போனான்.
  
                                                   தொடரும் ,,,,,,,,,,,,,,,


No comments:

Post a Comment