Friday, March 4, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 5

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 5


 

நினைக்காத நேரமில்லை - உன்னை
நினைக்காத நேரமில்லை
இரவும் பகலும்….
இமை ஏனோ மூடவில்லை..

      பிரியன் வாங்கி கொடுத்த குளிர்பானத்தைக் கஷ்டப்பட்டு உள்ளிறக்கினாள் தேன்மொழி.சற்று முன் அபி நடந்து கொண்ட விதத்தை எண்ணி மனம் வருந்தியிருந்தாள் அவள்.பிரியன் அவளுடைய முகவாட்டத்தை அறிந்துதான் அவளை அந்தக் குளிர்பானம் விற்கும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தான்.
     என் மேல கோபமா?” அவளுடைய முகவாயை நிமிர்த்தியபடி கேட்டான்.அவள் வேண்டுமென்றே பொய்க்கோபம் காட்டினாள்.
     தோ பாரு தேனு, யார் என்னா சொன்னாலும் என் மனசு என்னைக்கும் மாறப்போறதில்ல.இன்னும் ரெண்டு நாள்ல அபி கோமதி அக்கா கூட போயிடும்.அதுக்கப்புறம் உனக்கென்ன கவலை? நான் நாள் முழுக்க உன்கூடதானே இருக்கப்போறேன், இன்னும் கோபமா?” கேட்டுவிட்டு அவளுடைய தலையை வருடி கொடுத்தான்.
    அவனுடைய தீண்டலில் அவளுடைய கோபம் விலகியது.பிரியனின் கையைப் பற்றிக்கொண்டு நடந்தாள்.அவள் மனதில் உற்சாக துள்ளலொன்று உற்பத்தியாகியிருந்தது,தன் கடைக்கண் பார்வையைப் பிரியனின் மேல் போட்டாள்.
    பிரியன்தான் எவ்வளவு வசீகரமானவன்? பெயருக்கேற்றவாறு பிரியமானவன்.தன் கரத்தைப் பற்றியிருந்த அவனுடைய கைவிரல்களைப் பார்த்தாள்.ஓர் ஆணுடைய கைவிரல்கள் கூட இவ்வளவு நளினமாக இருக்குமா என்ன?
    அவனுக்குத்தான் தன்மீது எவ்வளவு அன்பு? அவனைப் போய்ச் சந்தேகப்பட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
    நள்ளிரவு நேரமென்பதால் காற்று குளுகுளுவென வீசியது.அவளுக்கு உடனே தோட்டப்புற ஞாபகம் வந்தது.
    தோட்டத்தில் அப்படிதான்.காற்று சிலசிலுவென வீசும்.அவள் தமிழ்ப்பள்ளியில் படித்தபோது இந்த மாதிரி காற்று வீசும் சமயங்களில் பழைய கோயில் இருந்த இடத்திற்குத் தன் தோழிகளுடன் போய்விடுவாள்.அங்குதான் பெரிய அரசமரம் ஒன்று வளர்ந்திருந்தது.காற்று வேகமாக வீசும்பொழுது அந்த அரசமரத்து கிளைகள் அசைய, அதிலிருந்து இலைகள் பறந்து வந்து விழும்.அவளுக்கும் அவளுடைய தோழிகளுக்கும் அந்த இலைகளை கீழே விழாமல் பிடிப்பதில் பெரிய போட்டியே நடக்கும்.ஓடி ஓடி பிடிப்பார்கள்.
   சில்லென்று வீசிய குளிர்க்காற்று அவள் அணிந்திருந்த தளர்வான பஞ்சாபி உடையில் நுழைந்து அவள் சிந்தனையைக் களைத்தது.அவளுக்குக் குளிரெடுத்தது.பிரியனுடைய கைகளை இறுக பற்றிக்கொண்டு நடந்தாள்.அவனுடைய  கைகளில் இருந்த கதகதப்பான வெப்பம் அவள் கைகளில் பரவி ஒரு வித சுகத்தைத் தந்தது.மேலே அண்ணாந்து பார்த்தாள்.வானில் நிலவோடு ஆங்காங்கே ஓரிரண்டு நட்சத்திரங்களும் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.அந்த அழகிய சூழலில் அவனுடைய கைப்பிடிக்குள் இருக்க அவளுக்குப் பிடித்திருந்தது.
    ஏய் என்ன யோசனை? கையை விட்டுட்டு ரோட்டைப் பார்த்து நட,நாம கிட்ட வந்துட்டோம் என்ற பிரியன் அவளிடமிருந்து கொஞ்சம் விலகிக் கொண்டான்.
    பிரியனுடன் மீண்டும் ஒரு நாள் இதே மாதிரி எங்காவது வரவேண்டும்.அவனுடன் கைகோர்த்து கொண்டு விடிய விடிய நடக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டானது.
    ஆனால் அந்த வாய்ப்பு ஒரு இக்கட்டான சூழலில் வாய்க்குமென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.
    பத்துகாஜாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் பொதுத்தொடர்புத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த பிரியனை அவனுடைய நிறுவனம் பினாங்கிலுள்ள கிளை நிறுவனத்திற்கு மாற்றல் செய்திருந்தது.ஒரே வாரத்தில் அவன் கிளம்பியாக வேண்டும்.
   பிரியனுக்குப் பினாங்கு போவதில் அவ்வளவாக விருப்பமில்லை.ஆனால் அதிக சம்பளத்தோடு மானேஜிங் டைரக்டராக பதவி உயர்வும் கிடைத்திருப்பதால் கிடைத்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென்று பினாங்கு போக தீர்மானித்தான்.
  பினாங்கிற்குக் கிளம்ப போகும் முதல்நாள் பழைய நிறுவனத்தில் ஏதோ வேலை இருப்பதாகச் சொல்லி அவளையும் பத்துகாஜாவிற்கு அழைத்துக் கொண்டு போனான்.வரும் வழியில் அவளை கெல்லி கோட்டைக்கு அழைத்துப் போய்க் காட்டினான்.முழுமையாக கட்டி முடிக்கப்படாத அந்தக் கோட்டையின் சரித்திரத்தை அவன் சொல்லிக்கொண்டே போக அவள் வியப்பாக கேட்டுக்கொண்டிருந்தாள்.அவள் இதற்கு முன் இது மாதிரியான இடத்திற்கெல்லாம் வந்ததில்லை.அந்தக் கோட்டையைப் பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
   தேனு,” பிரியன் அவளை அழைத்தான்.
   உன்னை விட்டுட்டு எப்படி போறதுன்னே தெரியல,பேசாம இங்கயே இருந்திடவா?”
   அவளைப் போகவேண்டாம் என்று சொல்ல அவளுக்கும் ஆசைதான்.ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டு பேசாமல் இருந்தாள்.
   என்ன ஒன்னும் பேச மாட்டேங்கற?என்னைப் பிரியப் போற ஏக்கமா?” என்றவன் திடீரென அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.அந்த அணைப்பில் அவள் உறைந்து போனாள்.தன் ஆயுள் காலம் முழுவதும் பிரியனை நினைத்துக் கொண்டே இருக்க அந்த அணைப்பே போதுமென்றிருந்தது அவளுக்கு.
   இன்னிக்கு முழுக்க நான் உன்கூடவே இருக்கப் போறேன்
   பிரியன் சொன்ன மாதிரியே அவளை நிறைய இடங்களுக்கு அழைத்துப் போனான்.மாலையில் கோயிலுக்கும் அழைத்துப் போனான்.அவர்கள் வீடு திரும்ப இரவாகிவிட்டது.மறுநாள் காலை சீக்கிரமே எழ வேண்டும் என்பதால் பிரியன் உடனே படுத்துவிட்டான்.
   மறுநாள் காலையிலேயே பிரியன் கிளம்பிவிட்டான்.அவன் இல்லாமல் ஏதோ ஒன்றை இழந்தது போலானாள் தேன்மொழி.அடுத்த நாளே அவனுடைய அக்கா கோமதியும், அபியும் கிளம்பிவிட்டார்கள்.ஆரம்பத்தில் தேன்மொழிககுப் போரடித்தது.ஆனால் மறுவாரமே அவளுக்குக் கையுறை கம்பெனியில் வேலை கிடைத்தது.
   தினமும் பன்னிரண்டு மணிநேர வேலை.வேலை முடிந்து வருவதற்குள் களைத்துப் போய்விடுவாள்.ஆனால் எவ்வளவு களைப்பாக இருந்தபோதிலும் பிரியனைப் பற்றி நினைக்க மட்டும் அவள் தவறியதேயில்லை.நித்தமும் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் எத்தனையோ தடவை கம்பெனி வேனில் ஏறும்போது தலையை இடித்துக் கொண்டு வலியால் துடித்திருக்கிறாள்.இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் பிரியனைப் பற்றி நினைப்பது அதிகரித்துக் கொண்டுதான் போனதே தவிர குறைந்தபாடில்லை.
    
    விளையாட்டு போல் ஒன்றரை வருடங்கள் ஓடி மறைந்திருந்தன.அன்று தேன்மொழி வேலைக்குப் போகவில்லை.பிரேமாவுடன் சேர்ந்து தன் வாடகை வீட்டைப் பார்க்கச் சென்றிருந்தாள்.வீடு அவளுக்குத் திருப்தியளிக்கும் வகையில் இருந்தது.அடுத்த மாத ஆரம்பத்தில் அப்பாவையும், தங்கையையும் அழைத்து வந்துவிடலாம் என்று முடிவெடுத்தாள்.அந்த விசயத்தை உடனே பிரியனிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்து அவனுடைய கைத்தொலைபேசிக்கு அழைத்தாள்.தொடர்பு கிடைக்கவில்லை.இப்போதெல்லாம் அப்படிதான்.பிரியன் அடிக்கடி தொலைபேசியை அடைத்து வைத்துவிடுகிறான்.புதிதாக பகுதி நேர வியாபாரமொன்றைத் தொடங்கியிருப்பதால் அவனுக்கு நேரம் கிடைக்கவே குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று சொல்லியிருந்தான்.
    ஒரு வழியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் தொடர்பு கிடைத்தது.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.அவனுக்கு விடுமுறை என்பதால் அவன் கண்டிப்பாக விழித்திருப்பான் என்றெண்ணிதான் அந்த நேரத்திலும் தைரியமாக அழைத்தாள்.
    ஓரிரு தடவை மணி ஒலித்ததுமே பிரியன் போனை எடுத்துவிட்டான்.
    இன்னும் தூங்கலையா?” அவள்தான் கேட்டாள்.
    இந்த நேரத்துல தூங்காம நீ என்னா செஞ்சிக்கிட்டு இருக்க?” அவன் அவளைக் கேள்வி கேட்டான்.
    
            
          
                                                     தொடரும்……










No comments:

Post a Comment