Saturday, April 13, 2013

தவறுகள் உணர்கிறோம் 4 - நவீந்திரனும் மிதிவண்டியும்

       நம் தவறுகளை உணரவைப்பதற்கு நம்மைவிட பெரியவர்களால்தான் முடியும் என்பதல்ல.பால்மணம் மாறா பச்சைக் குழந்தை கூட நம் தவறுகளை உணரவைக்கும்.அவ்வகையில் இவ்வாரம் என் அண்ணனின் இரண்டரை வயது மகன் நவீந்திரன் என் தவற்றை உணர வைத்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
   என் அன்புத் தந்தையின் மறைவில் என் வாழ்வில் வசந்தத்தை முற்றிலுமாய் இழந்துவிட்டதாய் உணர்ந்தேன்.வீட்டுக்குள் ஏதோ ஒரு வெறுமைப் பரவிக்கிடந்த அந்த கருப்பு நாள்களிலிருந்து என்னை மீட்டு வந்த தேவதை அவன்.என் அப்பாவின் பிரதிநிதியாய் என் வாழ்வின் வசந்தத்தை மீட்டுக்கொண்டு வந்த அவனிடத்தில் எங்கள் வீட்டில் எல்லாருக்குமே அலாதிப் பிரியம் இருந்தது.அவனுடைய ஒவ்வொரு அசைவையும் இரசித்து நாள்களைக் கடந்தோம்.
  நவீந்திரனுக்கு கார்,மோட்டார் சைக்கிள்,மிதிவண்டியின் மீது அதிக ஆசை.அவனுடைய முதலாம் பிறந்தநாளின்போதுதான் நான் முதன்முதலாக அவனுக்கு ஒரு மிதிவண்டி வாங்கி கொடுத்தேன்.அவன் அந்த மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டுதான் போனான்.சில நாள்கள் கடந்ததும் அவனுக்கு மேலும் ஒரு மிதிவண்டி வந்து சேர்ந்தது.என் அண்ணன்,அண்ணி வாங்கி கொடுத்தனர்.அந்த மிதிவண்டியையும் அவன் ஓட்டாமல் தள்ளிக்கொண்டு சென்றான்.சில தினங்கள் கழித்து,மிதிவண்டியில் ஏறி உட்கார்ந்து கால்களால் நகர்த்திக்கொண்டு செல்ல ஆரம்பித்தான்.தினமும் மிதிவண்டி ஓட்டவில்லையென்றால் அவனுக்குத் தூக்கமே வராது.அவனுடைய ஒவ்வொரு அசைவும் குழந்தைகளின் உலகத்தை எனக்குக் காட்டியது.குழந்தையின் உலகில் என்னவெல்லாம் முக்கியம் என்பதை எனக்குக் கற்றுத்தந்தது.குழந்தையின் மன இயல்புகளை,குழந்தைகளைக் கையாளும் முறையை அவன் மூலம் நாங்கள் அனைவரும் கற்றுக்கொண்டிருந்தோம்.ஒவ்வொருநாளும் வீட்டை விட்டு வெளியே சென்றால் எப்போது வீட்டுக்குத் திரும்பி வந்து அவனைப் பார்ப்போம் என்று இருக்கும்.வீட்டுக்கு வந்ததும் உடனே அவனைத் தூக்கிக் கொஞ்சினால்தான் நிம்மதியாக இருக்கும்.
  வீட்டுக்குள்ளேயே இருக்கும் நவீந்திரன் எப்போதுமே நான் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்ததுமே வெளியில் எட்டிப்பார்க்க துடிப்பான்.பகல் நேரமென்றால் வெளியே கொஞ்ச நேரம் இருக்க வைத்துவிட்டு,உள்ளே அழைத்து வருவேன்.இரவு நேரத்தில் உடனே வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திவிடுவேன்.அவனும் தொல்லை செய்யமாட்டான்.
   அந்தமாதிரிதான் ஒருநாள் நான் வெளியே போய்விட்டு இரவில் வீடு திரும்பினேன்.நவீந்திரன் உடனே வெளியே வர துடித்தான்.வெளியில் கை காட்டி என்னென்னவோ சொன்னான்.அப்போதெல்லாம் அவனுக்குச் சரியாக பேச வராது.பிக்கலு, பிக்கலு என கத்தினான்.நான் அவன் வெளியே செல்ல ஆசைப்படுகிறான் என்றெண்ணி அவசர அவசரமாய் வெளிக்கதவைச் சாத்திவிட்டேன்.அன்று நவீந்திரன் அதிக பிடிவாதம் பிடித்தான்.எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை.விடாமல் அழுதுக்கொண்டே இருந்தான்.அப்படியே உறங்கியும்விட்டான்.
   இரவு படுக்கும்போது என் அம்மா சொன்னார் என் அண்ணன் நவீந்திரனுக்குச் சிவப்பு நிறத்தில் ஒரு புதிய மிதிவண்டி வாங்கி வந்திருப்பதாகவும்,அதை வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் நிறுத்தி வைத்துவிட்டதாகவும் சொன்னார்.அப்போதுதான் எனக்கும் உண்மை புரிந்தது.அந்தப் புதிய மிதிவண்டியைப் பார்க்கவேண்டும் என்றுதான் வெளியே விடும்படி என்னை வற்புறுத்தி அழுதிருக்கிறான்.மிதிவண்டியைதான் (bicycle) ‘பிக்கலு பிக்கலு என சொல்லியிருக்கிறான்.என் மனம் வேதனையடைந்தது. என் அம்மாவும் வேலையாக இருந்ததால் அவன் மிதிவண்டிக்காகதான் அழுகிறான் என்ற உண்மையை அவரும் உணரவில்லை.

  பாவம் பிள்ளை.அவனுக்குப் பிடித்தமான ஒரு பொருள்.அவனுக்கென்றே வாங்கினார்கள் என்றும் தெரியும்.பெரியவள் நானே எனக்குப் பிடித்தமாதிரி ஏதாவது உடையோ,பொருள்களோ வாங்கிவந்தால் அடிக்கடி அதை எடுத்துப் பார்த்து மகிழ்பவள் எனில்,குழந்தை அவன்.அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?அத்தை வந்து கதவைத் திறந்ததும் வெளியே போய் அந்த மிதிவண்டியைப் பார்க்கவேண்டும் என்றோ,வீட்டுக்குள் எடுத்து வந்துவிடவேண்டும் என்றோ எண்ணியிருப்பான் தானே?நான் கதவை இழுத்துச் சாத்திவிட்டதும் அவன் மனம் எப்படி பாடுபட்டிருக்கும்?
  இந்த அத்தைப் பிசாசு என் புதிய மிதிவண்டியை எடுத்துக்கொடுக்கவே இல்லையே,” என்று என் மீது வருத்தம் கொண்டுதானே தூங்கியிருப்பான்?பாதி இரவில் விழிப்பு வந்தால் அதை நினைத்து விசும்புவானே என்ற குற்ற உணர்வும் ஏற்பட்டது.இனிமேல் குழந்தைகள் அழுதாலோ,அடம்பிடித்தாலோ வழக்கமான ஒன்று என விட்டுவிடாமல் அவர்களின் மனதில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முற்படவேண்டும்.அறியாமையில் நாம் செய்யும் தவறு குழந்தைகளின் மனத்தைப் பாதித்துவிடக்கூடாது என தீர்மானித்தேன்.
   மறுநாள் வீட்டுக்கு வந்தபோது அம்மா அந்த மிதிவண்டியை வீட்டினுள் வைத்துவிட்டிருந்தார்.ஆனந்தமாக ஓட்டிக்கொண்டிருந்த நவீந்திரன் என்னிடம் அந்த மிதிவண்டியைக் காட்டி சந்தோசப்பட்டான்.அவன் முகம் முழுக்க சிரிப்பும்,குதூகலமும் நிறைந்திருந்தது.அத்தைக்குத் தெரியாதுமா,சோரி,: என கேட்டு அவன் நெற்றியில் முத்தம் வைத்தேன்.


உதயகுமாரி கிருஷ்ணன்

 தொடரும்.....
                                                                               

No comments:

Post a Comment