Wednesday, April 3, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்

கீதம் 3 : நினைவோ ஒரு பறவை




    நினைவுகள் மிக வலிமையானவை.நினைத்த நேரத்தில் நம்மைச் சிரிக்கவைக்கவும்,அழவைக்கவும்,ஏங்கவைக்கவும் நினைவுகளால் மட்டுமே முடியும்.நம்மைவிட்டுப் பிரிந்து போனவர்களாகவே இருப்பினும் மீண்டும் நம்மிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பவை நினைவுகளே.நினைவுகள் நம் கட்டுக்குள் இயங்குபவை.அத்தகைய இன்ப நினைவுகளை மையமாகக் கொண்டு மலரும் பாடல்களில் ஒன்று நினைவோ ஒரு பறவை.
        நடிகர் கமல்,ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் அக்டோபர் 1978-ஆம் ஆண்டு திரை கண்ட சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது.இளையராஜாவின் இசையின் கவிஞர் வாலி எழுதி,கமல்ஹாசனும்,எஸ்.ஜானகியும் பாடிய பாடல்.
   சிறுவயதில் சுயநலம் நிறைந்த பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் எதிர்நோக்கும் பாதிப்புகளும்,அந்தப் பாதிப்புகள் அவன் வாழ்வில் எத்தகைய கொடிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதே இக்கதையின் சாரம்.பெண்கள் மீது ஏற்பட்ட எதிர்மறையான கருத்துப் பதிவால் பெண்களைக் கற்பழித்து,கொன்று,புதைத்துவிடும் குரூர எண்ணம் கொண்டவனாக கமல் சிறப்பாக நடித்திருப்பார்.கொலை செய்யப்பட்ட பெண்களைப் புதைக்கும்போது ஒரு ரோஜாச்செடியை நட்டுவைத்துவிட்டு,மறுநாள் அந்தச் செடியிலிருந்த ரோஜாவை தோட்டக்காரன் பறித்துக்கொண்டு வந்து கொடுக்க,அதை தன் சட்டையில் வைத்துக்கொண்டு கமல் கிளம்புவது குரூர புத்தியின் வெளிப்பாடு.இப்படிப்பட்ட படத்தில் மனதுக்கு குளிர்ச்சி தருவது ஸ்ரீதேவியும்,இனிமையான இரு பாடல்களும்.இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு’,’நினைவோ ஒரு பறவை ஆகிய இரண்டு பாடல்கள்தான் இப்படத்தில் இடம்பெறுகின்றன.இனி நினைவோ ஒரு பறவை பாடல் இடம்பெறும் சூழலைப் பார்க்கலாம்.

      ஒரு தடவை கார் கதவைத் திறந்தபோது எதிர்பாராமல் கதவின் மேல் மோதி நிற்கும் ஸ்ரீதேவியைப் பார்க்கும்போதே கமலின் மனதுக்குள் சிறுவயதில் தன் தப்பை மறைக்க,கமலைப் பலிகடாவாக்கிய ஒரு வாலிபப்பெண் வந்து போகிறாள்.அம்மாதிரி காட்சிகள் தோன்றுவது கமல் அடுத்து செய்யபோகும் கொலைக்கு அஸ்திவாரம் என்பதால் கமலுக்கு ஸ்ரீதேவி மேல் ஏற்பட்டது காதல் என கூற முடியவில்லை.(அவரின் ஆழ்மனதில் ஸ்ரீதேவி தன் மனைவி என்ற எண்ணம் பதிந்திருப்பது வேறு விசயம்).
   ஸ்ரீதேவியிடம் தன் வேலையை உடனே காண்பிக்க வழியின்றி போகிறது கமலுக்கு.காரணம் வழக்கமாக அவர் சந்திக்கும் பெண்களில் இருந்து ஸ்ரீதேவி மாறுபட்டு,இழுத்துப் போர்த்திக்கொண்டு குடும்ப பாங்காக இருக்கிறார்.எனவே காதல் என்ற போர்வையை அவர் பயன்படுத்த வேண்டியுள்ளது.ஸ்ரீதேவி வேலை செய்யும் கடையில் கைக்குட்டை வாங்கிப் போகிறார்.இரண்டாம் முறை கைக்குட்டை வாங்க போகும் கமல் ஸ்ரீதேவியின் இடுப்பில் இருப்பது போன்ற கைக்குட்டைதான் வேண்டும் என்கிறார்.மூன்றாவது தடவை கடைக்குப் போகும்போது ஸ்ரீதேவி கைக்குட்டையை வெட்டி வைத்துவிட,வேண்டுமென்றே வாங்காமல் போகிறார்.இப்படி அந்த நான்கு சந்திப்புகளிலேயே ஸ்ரீதேவியின் மனதில் பதிந்துவிட,அடுத்ததாய் மழையில் மாட்டிக்கொண்ட ஸ்ரீதேவியை வீட்டில் கொண்டு போய் விடும்போது தன் காதலையும் சொல்லிவிடுகிறார்.ஸ்ரீதேவி மறுக்காமல் ஒப்புக்கொண்டாலும் திருமணத்திற்கு முன் எல்லை தாண்டக்கூடாது  என்பதில் உறுதியாக இருக்கும் அவரிடத்தில் கமலின் லீலைகள் எடுபடவில்லை.விளைவு திருமணம் செய்து மனைவி என்ற பெயரில்தான் வீட்டுக்கு அழைத்துப் போக நேரிடுகிறது.அந்த அழகிய மாளிகையில் உறைந்திருக்கும் விபரீதம் புரியாமல் காலெடுத்து வைக்கிறார் ஸ்ரீதேவி.அவளை அடையும் முதல் முயற்சியின்போது முன்பு அவரால் கொலை செய்யப்பட்ட  சித்ராவின் அண்ணன் அவருடைய அலுவலகத்திற்கு வந்திருப்பதாய் தகவல் வர,எரிச்சலோடு கிளம்பி போகிறார்.இரண்டாவது முறையும் த்ன்னைக் காட்டிக்கொடுத்துவிடும் சாட்சியான பாக்யராஜுடன் இருக்கும் கணக்கைத் தீர்த்துக்கொள்வதற்காக அவசரமா வெளியே செல்லவேண்டியிருக்கிறது.ஸ்ரீதேவியிடம் இன்றிரவு நீதான் எனக்கு உணவு என சொல்லிவிட்டுப் போகிறார்.தனிமையில் இருக்கும் ஸ்ரீதேவி கணவன் பேசிய குறும்பு வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறாள்.அவள் மனதில் ஏக்கம் பிறக்கிறது.அவன் நினைவில் கரைகிறாள்.அவளது நினைவுகள் பாடலாய் வருகின்றன.
   ம்ம்ம்ம்ம் என்ற ஜானகியின் மெல்லிய ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் இப்பாடலில் உச்சஸ்தாயில் பா..ப.ப.ப...  என்ற ஒரு ஹம்மிங்கும் வரும்.அந்த ஹம்மிங் கூட பறவை என்ற சொல்லில் ஆரம்பிக்கும்.பறவைச் சிறகை விரித்து பறக்க துவங்குவது ஓர் உணர்வு இப்பாடலில் உள்ளதாக இணையத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.உச்சஸ்தாயில் சென்று மீண்டும் பறக்கும் அது கலக்கும் தன் உறவை என்ற வரிகளில் அது மெல்ல கீழ்ஸ்தாயில் இறங்குகிறது.
  இப்பாடலைப் பாடிய கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் உச்சஸ்தாயில் ஓர் ஆங்கிலப் பாடலைப் பாடியிருக்கிறார்.அதைக் கேட்ட இசைஞானி அதைப்போன்றே ஹம்மிங்கை பா..ப..ப ப.. என போட்டு இப்பாடலை கமலைப் பாடவைத்திருக்கிறார் என்ற தகவலை கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.இப்பாடலில் முதல் சரணத்தில் ரோஜாக்களில் பன்னீர்த்துளி வடிகின்றதே என்ற வரியில் வடிகின்றதே என்ற வரியை மட்டும் தனியாக உன்னிப்பாக கேட்டுப்பாருங்களேன்.கமலின் குரல் கூட கிறக்கத்தில் வழிவது போன்று இருக்கும்.பாடல் காட்சியும் மிக அழகானதாய் அமைந்திருக்கும்.மெத்தையில் படுத்தவாறு கமலை நினைத்து ஸ்ரீதேவி பாட ஆரம்பிக்கும்போது அறைக்கதவு திறக்க,கமல் ஸ்லோமோஷனில் ஓடிவருவார் அறைக்குள்.பாடல் காட்சிகளில் கமலும்,ஸ்ரீதேவியும் செல்லும் குதிரை வண்டியில் குதிரை முதற்கொண்டு,அவர்கள் பாடும் பூங்காவிலுள்ள கோலம்,நிழற்குடை,ஓடம் இப்படி பாடல்காட்சியில் வந்து போகும் அனைத்துமே வண்ணமயமாக,அழகாக ஜோடிக்கப்பட்டிருக்கும்.கமல் கோட்,சூட்,கண்ணாடி,தொப்பி என அசத்தலாகவும்,ஸ்ரீதேவி வெள்ளை நிற கவுன்,பாவாடை என அழகான உடையில் மனதை ஈர்க்கும் பார்வையிலும்,குழந்தைச் சிரிப்பிலும் மனதை அள்ளிப்போவார்.பாடலினூடே கமல் தன் மூக்குக்கண்ணாடியை ஒற்றை விரலால் நகர்த்துவது கூட எதார்த்தமாக,ஸ்டைலாக இருக்கும்.அதேமாதிரி பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அறைக்குள் வந்து, கமல் மனமில்லாமல் வெளியே சென்று,தயங்கி நின்று திரும்பி பார்த்து மீண்டும் உள்ளே வர நினைக்கையில்,அவர் உள்ளே வரமுடியாமல் கதவு சாத்திக்கொள்ளும்.அக்கதவு நினைவுகளுக்கான(மனக்கதவு) குறியீடாகதான் என் பார்வையில் தோன்றுகிறது.பாடல் வரிகளைப் பற்றி சொல்லவேண்டுமானால் வாலிபக் கவிஞன் வாலி அசத்தியிருப்பார்.சலங்கை ஒலி திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து தகிட தமித பாடலில் என்பேனா’,’என் பேனா என்ற வார்த்தை ஜாலத்தில் அசத்தியிருப்பார்.அப்பாடலுக்கு முன்பே வெளிவந்த இப்பாடலின் முதல் சரணத்தில் வாலி பருகாத தேன்’,’பருகாததேன்என்ற வார்த்தையைப் பிரித்துப்போட்டு விளையாடியிருப்பார்.இப்பாடலின் இரண்டாவது சரணத்தில் சரணத்தில் பனிக்காலத்தில் நான் வாடினால்,உன் பார்வைதான் என் போர்வையோ என நாயகி கேட்க,அணைக்காமல் குளிர்காய்வதாகவும்,அதற்காக மடி சாய்வதாகவும் நாயகன் பதில் சொல்கிறார்.இப்படி வெகு ஆழமான உள் அர்த்தங்கள் நிறைந்திருக்கும் இப்பாடல் வரிகள் வயது வந்தோர் ரசிக்கக்கூடிய கவிதை.இப்படி இரசிக்கத்தக்க பல விசயங்கள் அடங்கியுள்ள இனிமையான இப்பாடலை ஒரு மழைப்பொழுதில் மனதுக்குப் பிடித்தமானவர்களை நினைத்துக்கொண்டு, ஒரு கப் தேநீரைச் சுவைத்துக்கொண்டே கேட்டுப்பாருங்களேன்..மனம் மயங்காமல் இருக்கிறதா என..என் அன்பிற்கினியவனோடு சேர்த்து கமல் இரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் வரிகள்....

     
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை..
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை..


ரோஜாக்களில் பன்னீர்த் துளி
வடிகின்றதே..அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்..
அதை இன்னும் நீ பருகாததேன்...
அதற்காகதான் அலைபாய்கிறேன்
தந்தேன்..தரவந்தேன்..
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை..


பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர்காய்கிறேன்
அதற்காகதான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீதான் இனி நான் தான்..
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை..





 


No comments:

Post a Comment