Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 9 பூங்குழலியை அமர சொல்லிவிட்டு ‘பீஷ்ஷா’ ஆர்டர் செய்யப் போயிருந்தான் மதி.அவனுடைய கைத்தொலைபேசி ஒலிக்கவே எடுத்து ‘ஹலோ’ சொன்னாள்.கௌசிகன்தான் அழைத்திருந்தான்.மதி ‘பீஷ்ஷா’ ஆர்டர் செய்து கொண்டிருப்பதாக சொன்னாள். “பரீட்சை நெருங்கி கிட்டிருக்கற சமயத்துல பீஷ்ஷா சாப்பிடறது ரொம்ப முக்கியமா போச்சா அவனுக்கு?’ திட்டிக்கொண்டே அழைப்பைத் துண்டித்துவிட்டான். மதி வந்ததும் கௌசிகன் திட்டியதைச் சொன்னாள். “அவருக்கு நான் பீஷ்ஷா சாப்பிட வந்ததால கோபமா இருக்காது சீனியர்.அவரை விட்டுட்டு என்கூட சாப்பிட வந்திருக்கீங்கன்னு கோபமா இருக்கலாம்,” சொல்லிவிட்டு அவள் என்ன சொல்கிறாள் என்று பார்த்தான்.அவள் அவன் சொன்னதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.எதையோ நினைத்து புன்னகைத்தாள். “என்ன? பீஷ்ஷா’வைக் கத்தியால் துண்டாக்கிக் கொண்டே வினவினான். “அன்னிக்கு ஒரு நாளு நீயின்னு நெனச்சி உன் அண்ணனைத் திட்டினதை நெனச்சேன்,” என்றாள். மதி வீட்டுக்குப் போனபொழுது கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டான்.பூங்குழலியிடம் வேண்டுமென்றே சொல்லவில்லை.அவள் அழைத்தபோது கௌசிகன் எடுக்க, குரலை அடையாளம் காண முடியாமல் மதி என்று நினைத்து என்னென்னவோ பேசிவிட்டாள்.போதாக்குறைக்கு,”உன் அண்ணனை மாதிரியே உனக்கும் ரொம்ப திமிர்,” என்று வேறு திட்டிவிட்டாள்.அவளுடைய நல்ல நேரம் கௌசிகனிடம் பெரிதாக வாங்கி கட்டிக்கொள்ளவில்லை. “நான் மதியோட திமிர் பிடிச்ச அண்ணன்தான் பேசறேன்,” என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டான் கௌசிகன். “ஆனா மதி உன் அண்ணன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா திட்டியிருப்பேன்,” அவள் சொன்னபோது அவன் கொஞ்சம் பயந்துதான் போனான்.தான் ஆசைப்படுவது நடக்காமல் போய்விடுமோ என்று. “சரி விடுங்க. உங்க கோர்ஸ் பத்தி எதுவும் நியூஸ் வந்ததா?” மதி பேச்சை மாற்றினான். “கீதாவும், சரளாவும்தான் அதிகமா புலம்பிக்கிட்டு இருக்காங்க,அந்த ‘இண்ட்டெல்’ கோர்ஸ் நடக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க,” “உங்களுக்கு எப்படி சீனியர்?” “எனக்கு கோர்ஸ் சீக்கிரமா முடிஞ்சிட்டாலும் பரவால்லன்னு தோனுது,ஆனா எனக்கென்னவோ அநேகமா இண்ட்டல் கோர்ஸ் கண்டிப்பா நடக்கும்னுதான் தோனுது மதி. அவள் நினைத்த மாதிரியே இண்ட்டல் பயிற்சி நவம்பர் ஒன்பதாம் தேதி வரை நடப்பது உறுதி செய்யப்பட்டது.முதலில் நவம்பர் பத்தாம் தேதி வரை நடப்பதாக இருந்தது.தீபாவளி சமயமென்பதால் வெகு தொலைவில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பயிற்சியை ஒன்பதாம் தேதி மதியமே முடித்துவிட திட்டமிட்டிருந்தது கல்லூரி நிர்வாகம். “போறப்ப கூட நிம்மதியா விடமாட்டாங்களா?” ஸ்டூடண்ட் வெப்சைட் செய்யறதுக்குள்ள தலையே வலிக்குது் வழக்கம்போல,” கீதாதான் முதலில் தன் புலம்பலை ஆரம்பித்தாள். ‘இண்ட்டல்’ என்பது கணினி சம்பந்தப்பட்ட பயிற்சி என்பதால் கணினிக்கூடத்திலேயே நடந்தது,’பவர்பொயிண்ட்’ முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்காக இணையத்தில் ஒரு சிப்பம் தயாரிக்க வேண்டும்.மணிக்கணக்காக கணினியின் முன் அமர்ந்திருந்ததால் தலை வலித்தது.ஆனால் கேரலின் உற்சாகமாக செய்தாள்.அவளும் சரளாவும் நான்காம் ஆண்டிற்கான அறிவியல் பாடத்தை எடுத்துக் கொண்டார்கள்.இணையத்திலிருந்து விதவிதமான மிருகங்களின் படத்தை எடுத்து அகப்பக்கத்தைச் சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.பூங்குழலியும் கீதாவும் உலக அதிசயங்கள் என்ற தலைப்பை எடுத்திருந்தார்கள்.கணினித்திரையில் தாஜ்மஹாலை அழகாக ஜொலிக்கவிட்டிருந்தார்கள்.சோனியாவோ எதையும் செய்யாமல் இணையத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டும், மற்றவர்கள் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். “இன்னைக்குதான் ஒரு மணிக்கெல்லாம் முடிஞ்சிடுமே,பட்டர்வொர்த் போலாமா? எனக்கு ரெயின்போ காலனி பாக்கனும்னு ஆசையா இருக்கு,படம் ரொம்ப டச்சிங்கா இருக்காம்” - சோனியா, மதி ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்க்கப்போகலாமென அவளை வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.அதனால் அவனையும் அழைத்தாள். “வேண்டாம் சீனியர். நீங்க அந்தப் படத்தை என்கூட பாக்க வேண்டாம்,”அவன் மறுத்துவிட்டான். தியேட்டருக்குப் போய் அந்தப் படத்தைப் பார்த்தபோதுதான் அவன் வர மறுத்தன் காரணம் அவளுக்குப் புரிந்தது.எவ்வளவு நல்ல கதையம்சமுள்ள படமென்றாலும் இப்படிப்பட்ட காட்சிகளை வைத்து வீணடித்துவிடுகிறார்கள்,” என நொந்துபோனாள். “பினாங்குல கண்டிப்பா தீபாவளி களை கட்டியிருக்கும்,வெள்ளிக்கிழமை போலாமா?” சரளாவுக்கு பூங்குழலி சொன்னதில் அவ்வளவாக உடன்பாடில்லை.இன்னும் சில தினங்களில் கல்லூரி வாழ்க்கை நிறைவடைய போகிறது.எஞ்சியிருக்கும் நாட்களில் சுங்கைப் பட்டாணியை நன்றாக வலம் வந்துவிட வேண்டும் என நினைத்தாள்.அவள் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை.நீலா அவர்களுக்கென்றே ஒன்பதாம் தேதி கிளம்புவதாக சொல்லிவிட்டாள்.மாலை நேரங்களில் கோயில், இந்திய உணவகங்கள்,துணிக்கடைகள் என்று எல்லா இடத்திற்கும் போய் வந்தார்கள்,எட்டாம் தேதி இரவு கடைசி கடைசியாக சுங்கைப் பட்டாணியின் ஒட்டுமொத்த அழகையும் இரசித்துவிட்டு வரவேண்டும் என்று மதியமே கிளம்பிவிட்டார்கள்,மதி தேர்வின் காரணமாக அவர்களுடன் வரவில்லை, ‘சென்ட்ரல் ஸ்குவேர்’ விற்பனை மையத்தில் இதுநாள் வரை தாங்கள் சுற்றிய இடங்களையெல்லாம் ஏக்கத்தோடு மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள்.இறுதியாக முத்தையாஸ் நிறுவனத்திற்கு வந்தார்கள்.நிறைய மத்தாப்பு வாங்கினார்கள்.முத்தையாஸ் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.இந்திய இளைஞர்கள் கடையின் முன்புறம் ஒரு நவீன நடனத்தையும் வழங்கினார்கள்.தீப்பெட்டி வாங்குவதற்காக மீண்டும் கடைக்குள் நுழைந்த சரளா வெளியே வரும்போது அறிவிப்பு செய்து கொண்டிருந்த ஓர் அறிவிப்பாளர் அவளை அழைத்து ஒலிபெருக்கியில் பேச சொன்னார்.பதட்டத்தின் காரணமாக சரளா ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு வந்துவிட்டாள்.கேரலினுக்கு திடீரென ஒரு யோசனை எழ அறிவிப்பாளரை நோக்கிப் போய் அவரிடம் என்னவோ சொன்னாள்.மறுகணம் அந்த அறிவிப்பாளர் கேரலினுடைய கைகளில் மைக்கை கொடுத்தார். “எல்லாருக்கும் வணக்கம்.நாங்க எம்.பி.சா-ல இருந்து வந்திருக்கோம்.இன்னைக்குதான் எங்களுக்கு கடைசி நாளு.எங்களோட படிப்பு முடியுது.நாளைக்கு நாங்க எல்லாரும் கிளம்பறோம்.இந்த ஊரை விட்டு போறதுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.எம்.பி.சா மக்கள் எல்லாருக்கும் எங்களோட தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கறோம்,குட் பை சுங்கைப் பட்டாணி்!” பேசி முடித்துவிட்டு வந்த கேரலினை சூழ்ந்து கொண்டு பாராட்டினார்கள் மற்ற ஐந்து பெண்களும். அன்றிரவு அவர்கள் கல்லூரிக்குத் திரும்பி குளித்து நைட்டியை அணிந்துகொண்டு கீழே இறங்கியபோது நள்ளிரவு பன்னிரண்டு மணியாகியிருந்தது.விடுதியில் பாதி பெண்கள் உறங்கிவிட்டிருந்த வேளையில் மத்தாப்புக்களைக் கொளுத்தி குழந்தைகளைப் போன்று குதூகலித்தார்கள்.அவர்களுடைய தீபாவளி கொண்டாட்டம் அன்றே தொடங்கிவிட்டிருந்தது.நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். “அக்கா, அடுத்த வருசம் நீங்க எல்லாம் இல்லாம நான் எப்படிக்கா தனியா இருப்பேன்?நீலா கண்கலங்கியபோது அவர்களுக்கும் அழுகை வந்துவிட்டது.இனி மீண்டும் எப்போது இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம்? இனிமேல் அவர்கள் ஆசிரியர்கள்.விளையாட்டுத் தனத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இளைய சமுதாயத்தின் வளர்ச்சியில் பங்காற்ற வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்க போகிறவர்கள்.இதுவரை அனுபவித்த சந்தோஷமான, இனிமையான கல்லூரி வாழ்க்கை இனி மீண்டும் எப்போது? மறுநாள் காலை பதினோரு மணிக்குமேல்தான் அவர்களுடைய பயிற்சி முடிந்தது.கட்டியணைத்து குட்பை சொல்லிக்கொள்ள கூட அவகாசமின்றி கைநிறைய பொருட்களையும், மனம் நிறைய வேதனைகளையும் சமந்து கொண்டு எம்.பி.சாவை விட்டு வெளியேறினார்கள் அந்தக் கல்லூரி மலர்கள்.

No comments:

Post a Comment