Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 7 சாரதா கொண்டு வந்து கொடுத்த உணவுப் பொட்டலத்தைப் எடுத்துப் பார்த்தாள் பூங்குழலி.உணவுப்பொட்டலத்தில் ஒரு காகிதத்தில் எதையோ எழுதி வைத்திருந்தான்.எடுத்து படித்தாள். “சோரி சீனியர்,என் மேல இன்னும் பாசம் இருந்தால் உணவை வீணாக்காமல் சாப்பிடவும்,நாளை காலை சந்திப்போம்.” அவன் எழுதியதைப் படித்தவுடன் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது.பத்தொன்பது வயதில் எவ்வளவு பக்குவமாய், முதிர்ச்சியாக நடந்து கொள்கிறான்.தனக்குதான் கொஞ்சம் அவசர புத்தி. மறுநாள் சபைகூடலின் போது அவளுக்காக காத்திருந்தான்.சிற்றுண்டிச்சாலையில் ஒன்றாக பசியாறினார்கள்.அதன்பிறகு அவர்களுடைய நட்பு வழக்கம்போலவே தொடர்ந்தது.அவர்களுடைய கூட்டத்தில் அவனும் ஒருவனாகிப் போனான்.ஆனால் எவ்வளவு பழகியும் அவன் அவளை ‘சீனியர்’என்றே அழைத்து வந்தான். புகழேந்தியின் திருமணத்திற்கு அவனும் வந்திருந்தான்.அவனைத் தன் வீட்டிலுள்ள எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.அவன் அவளுடைய குடும்பத்தாரிடம் மிகவும் இயல்பாக பழகினான்.வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்றான்.கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். “இன்னும் கொஞ்சம் சாம்பார் கொண்டு வாங்க.” பம்பரமாய் பரிமாறினான். மணமகளின் வீட்டு விருந்திலும் அவன் கலந்து கொண்டான்.பூங்குழலி விருந்துக்கு முதலில் சுடிதார் அணிவதாக இருந்தாள். “இன்னைக்காச்சும் அடக்க ஒடுக்கமா புடவை கட்டிட்டு வாங்களேன் சீனியர்,” சொல்லிவிட்டு அவள் முறைக்கவும் தூரப் போனான். “அடப்பாவி நில்லு ஓடாதே, எருமைமாடு்!” அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள். “பரவால பூங்குழலி. எனக்குப் பதிலா உன்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க இன்னொரு சகோதரன் கிடைச்சுட்டானே,” புகழும் சந்தோஷமாய்ச் சொன்னான்.ஆனால் அவன் சகோதரன் என்று சொன்னதும் மதிவதனனுடைய முகம் கொஞ்சம் மாறிப் போனது.பூங்குழலி அதைக் கவனிக்கத் தவறவில்லை.வந்திருந்தவர்கள் எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபிறகுதான் அவளும் மதியும் சாப்பிட உட்கார்ந்தார்கள். “மதி, நீ ஏன் என்னை அக்கான்னு கூப்பிட மாட்டேங்கற? எனக்கு நீ என்னை அக்கான்னு கூப்பிடறத கேக்க ஆசையா இருக்குப்பா,” என்று கெஞ்சினாள். மதியின் முகம் மாறிப்போனது.ஒன்றும் பேசாமல் இருந்தான். “நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம்,நான் உன்னைத் திட்டவோ, உன்கிட்ட கோபிக்கவோ மாட்டேன்,சத்தியமா,” அவன் கையில் சத்தியம் செய்தாள். அவன் அமைதியாகவே இருக்க, மீண்டும் நச்சரித்தாள். “ஐயோ சீனியர்,ஓர் ஆண் பெண்கிட்ட பழகுனா அந்த உறவு சகோதரியாவோ காதலியாவோ மட்டும்தான் இருக்கனுமா? அதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பந்தமா அது இருக்கக் கூடாதா? எந்த உறவுக்குமே நட்புதான் முதல்ல தேவை.நட்பு நல்லா வளர்ந்த பிறகு அது எந்த உறவா மாறினா சிறப்பா இருக்கனும்னு நாமே தீர்மானிச்சிக்கலாம்.” அவனுடைய பதில் அவளுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாவிட்டாலும் அவள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. “பூங்குழலி, இங்க வாம்மா” அம்மா அழைக்கவும் அவள் எழுந்து போனவளையே பார்த்தான் மதி. “என்னை மன்னிச்சிடுங்க சீனியர். உங்க கிட்ட என் மனசுல இருக்கறத சொல்ல முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன்,அவசரப்பட்டு சொல்லி உங்க நட்பை இழக்க விரும்பல,” பூங்குழலி அம்மாவின் முன் போய் நின்றாள். “நானும் அப்பாவும் கிளம்பறோம்,நீ உன் அண்ணிக்குத் துணையா படுத்துக்க” “சரிம்மா,” என்று பூரணியின் அறையை நோக்கிப் போனாள்.அவள் அண்ணன் எதிரே வந்தான். “பூங்குழலி, கொஞ்ச நேரம் பூரணியை வெளியே வரச்சொல்லேன்,பேசனும்” “அதெல்லாம் முடியாது, நீ இப்படியெல்லாம் செய்வேன்னுதான் அம்மா என்னை அண்ணிக்கு காவலா விட்டுட்டுப் போயிருக்காங்க,நாளைக்கு சேர்த்து பேசிக்க,” சிரித்துக் கொண்டே போய்விட்டாள். “மறுநாள் புறப்படுவதைப் பற்றி கேட்கலாமென நினைத்தால் பூங்குழலி தப்பாக எடை போட்டுவிட்டாளே,” என நொந்தபடி மெத்தையில் சாய்ந்தான் புகழேந்தி.நள்ளிரவில் பூரணி அவனைத் தேடி வந்தாள்.தூக்கம் வரவில்லையென அவனிடம் கதை அளந்தாள். “பூரணி, ஒரு பாட்டுப் பாடேன்,கேட்டுட்டே தூங்கறேன்,”அவன் கேட்க அவள் பாடினாள். “அணிலே அணிலே ஓடிவா” திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.அவள் அங்கில்லை.உறவினர்களின் பேச்சு சத்தம் கேட்டது. “ச்சே கனவு,” சிரித்துக்கொண்டே உறங்கிவிட்டான். மறுநாள் பூரணியைப் பார்க்கும்போது கனவில் அவள் பாடியது நினைவிற்கு வந்தது.சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் புகழ். பூரணியும் புகழும் வீட்டுக்கு வந்தபோது அம்மா வாசலில் ஆரத்தியோடு தயாராக இருந்தாள்.பூங்குழலி அவர்களைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.மதி அவளைப் பார்த்தான். “பூங்குழலி மருமகளாக வரும்போது அம்மாவும் இப்படிதானே அவளுக்கு ஆரத்தி எடுப்பார்கள்?” நினைத்துக்கொண்டே இருந்தவனைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். “நேத்து நீ சொன்னதுல எனக்கும் சம்மதம்,எந்த உறவும் இல்லாம சாதாரண நட்போட பழகலாம்,” அவன் கையில் பழக்கூடையைக் கொடுத்து உள்ளே வைக்க சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.அவன் கையோடு சேர்த்து மனமும் கனத்தது. “உண்மையில் என் மனதில் இருப்பது என்னவென்று தெரிந்தால்…” “என்னா அங்கயே நிக்கற,சீக்கிரம் உள்ள வா” அவனை இழுத்துக்கொண்டு உள்ளே போனாள். “அண்ட்டி, நாளைக்கு நான் இவங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போகட்டா?” அவளுடைய அம்மாவிடம் தயங்கி தயங்கி கேட்டான். “கூட்டிட்டுப் போப்பா. புகழ் நாளைக்கு ‘ஹனிமூன்’போயிடுவான்.பூங்குழலிக்கும் போரடிக்கும்,” அவள் அம்மா உடனே சம்மதித்தாள். பூங்குழலி கல்லூரியில் படிக்கும்போது வீட்டுக்கு வராத வார இறுதி நாட்களில் அருகிலேயே உள்ள அவளது தோழிகளின் வீட்டுக்குச் சென்று வருவாள்.அவள் மீது இருக்கும் நம்பிக்கையால் அவளுடைய வீட்டில் யாரும் அவளுக்குத் தடை சொன்னதில்லை.எனவேதான் மதிவதனன் கேட்டபோதும் அவள் அம்மா மறுக்கவில்லை. மறுநாள் அவளுடைய தந்தை அவர்கள் இருவரையும் புடுராயாவில் ‘பஸ்’ ஏற்றிவிட்டார்,பட்டர்வர்த்தில் இறங்கி கூலிம் பேருந்து எடுத்து அவர்கள் வீடு போய்ச் சேர மாலை நான்கு மணியானது.பூங்குழலிக்கு திடீர் தயக்கம்.ஆனால் சாவித்திரியைப் பார்த்ததும் அந்த தயக்கம் காணாமல் போனது.மதியின் அம்மாவுக்கு இவளுடைய அம்மாவைப் போன்றே சாந்தமான முகம்.நன்றாக உபசரித்தார்.மதி ஏற்கனவே அவனுடைய குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறான்.சாவித்திரிக்கு இரண்டு மகன்கள் மட்டும்தான்.கணவர் பல வருடங்களுக்கு முன்பே மலேரியா காய்ச்சலில் இறந்துவிட்டார். “சாப்பிடும்மா,நீ வரேன்னு மதி நேத்தே கேசரி செஞ்சி வெக்க சொன்னான்.உனக்கு ரொம்ப பிடிக்குமாமே? வெக்கப்படாம சாப்பிடு்,” கேசரி தட்டை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அவர்கள் இருவரும் சமையலறையைவிட்டு ஹாலுக்கு வந்தபோது சாவித்திரி யாரோ ஓர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார். “என் அண்ணன் கௌசிகன்,” அவள் காதில் கிசுகிசுப்பாய் சொன்னான். பூங்குழலியை அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போனான் மதி.பூங்குழலியைப் பார்த்ததும் எழுந்து கொண்ட கௌசிகன் இறுகிய முகத்துடன் ஹாலை விட்டு வெளியேறினான். தொடரும் ……………

No comments:

Post a Comment