Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 5 ஒரு வழியாக காலை ஆறு மணிக்கு கேரலினை அனுப்பி வைத்துவிட்டு. கல்லு}ரிக்குக் கிளம்பினார்கள் நான்கு பெண்களும்,நீலா தன் வகுப்பு மாணவனிடம் சொல்லி ‘வேன்’ பேசியிருந்தாள்.மதியம் வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்கள்.பாவம் கேரலின்.அழுது அழுது வீங்கிய முகத்துடன் துவண்டு இருந்தாள்.அவர்களைப் பார்த்ததும் அழுது அரற்ற ஆரம்பித்துவிட்டாள்.அம்மாவின் புகைப்படத்தின் முன் கதறினாள். “பாருங்கம்மா. என்னோட கூட்டாளிங்க எல்லாரும் உங்கள பாக்க வந்திருக்காங்க” பூங்குழலி கேரலினைக் கட்டியணைத்துக் கொண்டாள். “மாசாமாசம் எங்கம்மாவ பாக்க ஓடிடுவேன்,இனிமே எங்க போயி அவங்கள பாக்கப் போறேன்?” “கேரலின், இது வாழ்க்கைல எல்லாரும் சமாளிக்க வேண்டிய கட்டம்,எல்லாருக்கும் வரும்,என்ன உனக்கு எங்களைவிட கொஞ்சம் சீக்கிரமா வந்துடுச்சி,எனக்கு உன்னோட வேதனை புரியுது,நீ ஏன் யாரும் இல்லன்னு நெனைக்கற? எங்களோட அம்மா,அப்பா எல்லாரும் உனக்காக இருக்காங்க,” என்னதான் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாலும் அவளுடைய அடிமனதில் தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது என்று தெரியும்.அவளுக்கு எல்லாமே அவளுடைய குடும்பம்தான். அவ்வார வியாழக்கிழமை திடுதிப்பென வீட்டுக்கு வந்து நின்றவளைப் பார்த்து அதிர்ந்து போனான் புகழேந்தி.அவளுடைய அருமை அண்ணன்.பயில்பணி இருப்பதால் வரமாட்டேன் என்று சொன்னவள் திடுமென வந்ததில் அவனுக்கு ஒரே சந்தோஷம்.ஓடி வந்து அவளுடைய கையைப் பற்றி அவளை வீட்டுக்குள் அழைத்துப் போனான். “என்னடா? முகமெல்லாம் வாட்டமா இருக்கு?” அவள் தலையைக் கோதிக்கொண்டே விசாரித்தான் அவன். பூங்குழலி அவனிடம் கேரலினைப் பற்றி சொன்னாள். “தெரியல புகழ். எனக்கு அப்பவே உங்கள எல்லாம் பாக்கனும் போல இருந்துச்சி” தன் தங்கையை நினைத்து நெகிழ்ந்து போனான் அவன்.அவள் எப்பவும் இப்படிதான்.சில சமயங்களில் கல்லூரியில் பகல் நேரத்தில் தூங்கும்போது திடீரென விழிப்பு வந்தால் வீட்டை நினைத்து அழுவாள்.அதிலும் அம்மா,அப்பாவைவிட அவளுக்கு அவள் அண்ணன் மேல்தான் அதிகப் பிரியம்.அவள் உயிரே அவன்தான்.அவளைவிட அவன் ஐந்து வயது மூத்தவன்.ஆனால் அவனை அவள் அண்ணா என்று அழைத்ததே இல்லை.அவனுக்கும் அதுதான் பிடித்திருந்தது.அவனுடைய உலகமே பூங்குழலிதான்.அதனால்தான் தனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் கூட பூங்குழலி பார்த்துக் கொடுக்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என்று அவளிடம் வாக்கு கொடுத்திருந்தான்.அவளும் அவன் பார்த்துக் கொடுக்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன் என்று சொல்லிவிட்டாள். பூரணியை அவன் நேசிப்பது நிஜம் என்றாலும் தன் தங்கைக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளையும் மறந்துவிட தயாராக இருந்தான். பூங்குழலி அவளுடைய அம்மாவும், அப்பாவும் வந்ததும் ஓடிப்போய் அவர்களைக் கட்டியணைத்து அழ அரம்பித்துவிட்டாள், “ஐயையோ. என்ன சாயாங் இது?அழுது என் மானத்தையே வாங்கறியே? நான் உன்னை இப்படியா அழுமூஞ்சியா வளர்த்தேன்?’ அவளைத் தோளில் சாய்த்து வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றான் புகழேந்தி.அவளிடம் பூரணியைப் பற்றி சொன்னான்.அவளுக்குப் புகழைப் பற்றி நன்றாகத் தெரியும்.ஒரு நல்ல அண்ணனாக மட்டுமல்ல, நல்ல மகனாகவும் இருப்பவன்,அவன் கண்டிப்பாக தப்பான பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவன் பூரணியை மணக்க சம்மதம் சொன்னாள், அவனுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்காமல் மறுநாள் பூரணியின் தந்தை அவனிடம் வரன் பேச வரவே. திருமணம் நிச்சயமானது,ஆனால் பூரணியிடம் உடனே இந்த விசயத்தைச் சொல்ல வேண்டாமென கேட்டுக்கொண்டான், மறுநாள் பூரணியைப் பார்க்கும்போது அவனுடைய மனம் குறுகுறுத்தது,தன்னைப் போலவே இவளும் தன்னைத் திருட்டுத்தனமாக இரசித்திருக்கிறாளே என்ற வியப்பு அவனுள் தோன்றி மறைந்தது.வீட்டில் ஒரு விசேஷம் என்று பொய் சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்துப் போய் எல்லாரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தான்.பூங்குழலி அவனுடைய தங்கை என்று அறிந்தபோது தன் அவசர புத்தியை எதிலாவது அடிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.மாலையில் அவளை அவனே அவளுடைய வீட்டில் கொண்டு போய் விடுவதாகச் சொன்னான்.காரில் போகும்போது கேட்டான். “உனக்கு என்னை மட்டும் பிடிச்சா பத்தாது பூரணி.என் வீட்ல உள்ளவங்களைப் பத்தியும் நீ தெரிஞ்சிக்கனும்னுதான் உன்னை மொதல்ல எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனேன்.உன்னால என் குடும்பத்துல உள்ளவங்களோடு ஒத்துப் போக முடியும்னு தோனுதா? எனக்கு எப்பவுமே என் அம்மா, அப்பா, தங்கை ரொம்ப முக்கியம்.உனக்கு அது வருத்தத்தைத் தராதுன்னு நீ நெனச்சா திங்க கிழம ஸ்கூலுக்குப் புடவை கட்டிட்டு வா” அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு கிளம்பினான். வீட்டை அடைந்த பூரணி துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருந்தாள்.அவளுடைய புகழ் அவளை நேசிக்கிறான் என்பதில் பெரும் பூரிப்பு அவளுக்கு.இனி அவனைத் தயங்கி தயங்கி இரசிக்க வேண்டியதில்லை.அவனுடைய குழந்தைச் சிரிப்பை,உற்சாகமாக இருக்கும்போது ஒரு மாதிரி தலையைச் சாய்த்து நடக்கும் அவனுடைய நடையை எல்லாவற்றையும் அருகிலிருந்தே இரசிக்கலாம்.அவள் ஆசைப்பட்ட மாதிரி காலையில் சீக்கிரமாக எழுந்து அவன் வேலைக்குப் போகும்போது அவனுக்கு கழுத்துப் பட்டை கட்டிவிட்டு,செல்லமாக அவன் கன்ன்தில்…..எதையெதையோ நினைத்து பூரித்துக் கொண்டிருந்தாள் பூரணி. பூங்குழலியிடம் புகழ் பூரணியிடம் பேசியதை சொன்னபோது அவன் தலையிலேயே குட்டினாள். “அறிவிருக்கா உனக்கு? ஏன் இப்படி செஞ்ச? எப்படி பாத்தாலும் அவங்களுக்குதானே உன்மேல உரிமை அதிகம்?’ “எனக்கு அம்மா, அப்பாவை இருபத்தாறு வருசமா தெரியும்,உன்னை இருபத்தோரு வருசமா தெரியும்.பூரணியை ரெண்டு மாசமாதான் தெரியும்,” சொல்லிவிட்டு அவன் வெளியே கிளம்பி போய்விட. புகழை நினைத்து பெருமிதப்பட்டாள் அவள். “முருகா, யாராலயும் என் அண்ணாவை நான் இழந்துட கூடாது,எனக்கு வரப்போற அண்ணி நல்லவங்களா இருக்கனும்,”தன் இஷ்ட தெய்வத்திடம் மனமுருக பிரார்த்தித்தாள். அவளது பிரார்த்தனை வீண் போகவில்லை.குணத்திலும் அவனுக்கு ஈடாகவே இருந்தாள் பூரணி.புகழ் மீது அதிக பிரியம் அவளுக்கு.புகழ் ஒரு நாள் போன் செய்யாவிட்டாலும் கூட சாப்பிடாமல் அழுவாளாம்.புகழ் இதை வீட்டில் சொல்லி சொல்லி சிரிப்பான்.வேண்டுமென்றே அவளுக்குப் போன் செய்யாமல் விட்டுவிடுவான்.ஐந்தாம் மாத இறுதியில் பள்ளி விடுமுறையின்போது அவர்களின் திருமணத்தை நடத்திவிட தீர்மானித்தார்கள் பெரியவர்கள். * * * கேரலின் ஓரளவிற்கு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாள்.சில சமயங்களில் அவள் சோகமாய் இருக்கும்போது ஏதாவது சேட்டைகள் செய்து அவளது கவலைகளை மறக்க வைத்துவிடுவார்கள்.அவளைத் தனியாக இருக்கவே விடமாட்டார்கள்.எப்போதும் போல் அவர்களுடைய சேட்டைகள் நான்கு சுவர்களுக்குள் அரங்கேறி கொண்டுதான் இருந்தன. பரபரப்பான ஐந்தாம் பருவத்தை மேலும் பரபரப்பாக்க கல்லூரியின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழாவும்,பட்டமளிப்பு விழாவும் வந்து சேர்ந்து கொண்டது.அதைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்களுக்குக் கல்லூரியில் ஆடல்,பாடல் கொண்டாட்டங்கள் ஏற்பாடாகி வந்தன.பூங்குழலியும், கீதாவும் கலை கலாச்சார பிரிவில் இருந்ததால் தமிழ்த்துறை மாணவர்களின் சார்பாக நடனம் ஆடவிருந்தார்கள்.எப்போதும் ஏன் கோலாட்டமே ஆடிக்கொண்டிருக்க வேண்டுமென்று சற்று வித்தியாசமாக பங்கரா நடனத்தைப் படைக்க பயிற்சி செய்தார்கள்.காலையிலிருந்து ஒன்றரை மணி வரை வகுப்பு.திங்கள், புதன் கிழமைகளில் மதியம் இரண்டு முதல் நான்கு வரை புறப்பாட நடவடிக்கை. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மாலை ஐந்து முதல் ஆறு முப்பது வரை விளையாட்டு.சில சமயங்களில் இரவு நேரங்களில் ஏதாவது நிகழ்வுகள் இருக்கும்.அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே பங்கரா நடனப் பயிற்சியையும் மேற்கொண்டார்கள் அவர்கள். தினமும் மாலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து வரை நடனப் பயிற்சி செய்வார்கள்.பங்கரா நடனம் விறுவிறுப்பான நடன அசைவுகளைக் கொண்டிருப்பதால் ஆடி முடித்த பின் கால்கள் பயங்கரமாக வலிக்கும்.இரவில் படுக்கும்போதுதான் அந்த வலியின் வேதனையே தெரியும்.ஆனால் அவ்வளவு வலிகளையும் மீறி ஏதோ ஒரு சந்தோஷம் இந்த ஐந்தாம் பருவத்தில் நிறைந்திருப்பதாகவே தெரிந்தது.

No comments:

Post a Comment