Saturday, September 15, 2012

உன்னால்தானே நானும் வாழ்கிறேன் - அத்தியாயம் 6 முன்ஷி மண்டபத்திற்கு எதிரே இருந்த கல் நாற்காலியில் மதிவதனனுக்காக காத்திருந்தாள் பூங்கழலி.அவளுக்கு இரவு நேரங்களில் அங்கு அமர்ந்திருக்க மிகவும் பிடிக்கும்.பச்சை பசேலென்ற மரங்கள்,வெட்ட வெளியில் வானம் அழகாக தெரியும்.இரவு நேரங்களில் காற்று அங்கு சிலுசிலுவென வீசும்.அவளும் அவளுடைய தோழிகளும் பெரும்பாலான சமயங்களில் உணவு வாங்கி கொண்டு அங்கு அமர்ந்துதான் சாப்பிடுவார்கள்.காற்றோட்டமாக சாப்பிட்டுவிட்டு கதை அளக்கும்போது உள்ள சுகமே தனிதான். ஆரம்பத்தில் சுங்கைப் பட்டாணியை அவளுக்குப் பிடிக்கவேயில்லை.வெகு தூரமாக இருக்கிறதே என்ற வருத்தம்.ஆனால் நாளடைவில் அந்த ஊரின் அமைதி அவளுக்குப் பழகிவிட்டிருந்தது.வாரத்தில் ஒரு நாளாவது பட்டணத்திற்குப் போய்விடுவார்கள்.’சென்ட்ரல் ஸ்குவேர்’தான் அவர்கள் வழக்கமாக போகும் இடம்.அங்கு ஏதாவது தமிழ்ப்படம் திரையிடுகிறார்கள் என்றால் போதும். கூட்டமாக கிளம்பிவிடுவார்கள்.புதன்கிழமை அரை கட்டணம் என்பதால் மாலையில் சீருடை இயக்கம் முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள்.ஆறு மணி காட்சியைப் பார்த்துவிட்டு இரவில் சீனர்களின் ஒட்டுக்கடையில் இரவு உணவை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.அந்த சந்தோஷம் எல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு மட்டும்தானே என்று அவள் ஏங்கி கொண்டிருக்கும்போதே அவளுடைய கைத்தொலைபேசி சிணுங்கியது,மதிதான் அழைத்திருந்தான்.இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொன்னான். “வரட்டும். இன்று அவனிடம் உறுதியாக கேட்டுவிட வேண்டும்” எப்படி கேட்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த சில நாட்களாகவே மதி அடிக்கடி அவளைத் தேடி வந்தான்.தினமும் காலையில் சபைகூடல் முடிந்ததும் அவளுக்காக காத்திருப்பான்.இரவிலும் அவள் உணவு வாங்க போகும்போது செயற்கை காளானருகே அவளுக்காக காத்திருந்தான். “இது எதுல போயி முடியப் போகுதோ தெரியல” - சோனியா “எல்லாம் எசைமெண்ட்காகதான் இருக்கும் வேற என்னா?”- சரளா “பூங்குழலி, எனக்கென்னவோ அந்தப் பையன் உன் மேல பிரியப்படறான் போல,எதுக்கும் பாத்து நடந்துக்கோ,”கேரலின் அவளை எச்சரித்தாள். “பூங்குழலி, எனக்கும் மதி உன்கூட நல்ல விதத்துல பழகறமாதிரி தெரியல,” என்றாள் கீதா. “எதை வெச்சி அப்படி சொல்லற?” “அவன் உன்னை ரொம்ப ரசிக்கிறான்,உனக்குத் தெரியுதோ இல்லையோ? பாக்கற எங்களுக்கு நல்லாவே தெரியுது,” மதி தன்னை இரசிக்கிறானோ என்ற எண்ணம் அவளுக்கும் ஏற்கனவே தோன்றியிருந்ததுதான்.ஏனென்றால் சில சமயங்களில் அவள் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவன் அவளை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பான்.இன்று எப்படியும் அவனிடம் இது குறித்து விசாரித்துவிட வேண்டுமென்று நினைத்துதான் காத்திருக்கிறாள். “ஹாய் சீனியர், ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?” கேட்டுக்கொண்டே அவளுடைய பக்கத்தில் அமர்ந்தான்.” அவள் ஒரு கணம் அமைதியாக இருந்தாள்.மதிவதனனுக்கு அவளைவிட இரண்டு வயது குறைவு.அவளை எப்போதும் ‘சீனியர்’ என்றுதான் அழைப்பான்.வயது குறைந்தவன்தானே என்ற தைரியத்தில்தான் அவள் அவனுடன் நன்றாகப் பழகினாள்.அவனுடைய பயில்பணிகளில் எல்லாம் உதவினாள்.ஆனால் அவளுடைய தோழிகள் சொல்வதை எல்லாம் கேட்கும்போதுதான் இந்த பயமே வந்துள்ளது. “என்னா சீனியர். ஒன்னுமே பேசமாட்டேங்கறீங்க?” “நீ என்கிட்ட எந்த அர்த்தத்துல பழகற மதி?” பட்டென்று கேட்டுவிட்டாள். “எனக்கு எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல,” என்றான். “நீ என்னை விரும்பறியா?” கோபப்பட்டாள். “நான் அப்படி சொல்லலியே?” என்றான் அவசரமாய். “அப்படின்னா என்னை அக்கான்னு கூப்பிடு,நான் உன்னைவிட வயசுல பெரியவதானே?” “என்னால உங்கள அக்கான்னு கூப்பிடமுடியாது சீனியர்,உங்கள அக்காவா ஏத்துக்கறதுல எனக்கு விருப்பமில்ல,” “அப்படின்னா நீ என்கூட தப்பான அர்த்தத்துலதானே பழகற? என்னை அக்கான்னு கூப்பிட முடியலன்னா இனிமே என்கிட்ட பேசாதே,” அவள் கோபமாய் எழுந்து போய்விட்டாள்.அதன்பிறகு அவன் அவள் கண்களில் படவேயில்லை. கோபப்பட்டு திட்டிவிட்டாலும் அவளால் மதியை மறக்க முடியவில்லை.சில நாட்கள்தான் பழகினாள் என்றாலும் மதியை அவளுக்கு அளவுக்கதிகமாய்ப் பிடித்திருந்தது.அவனுடைய கிண்டல் பேச்சு, குறும்புத் தனம் எல்லாவற்றையும் அவள் இரசித்தாள்.இரண்டு நாட்களாக அவன் கண்ணில் படாமல் அவள் எதையோ பறிகொடுத்ததைப் போலிருந்தாள். அன்று உணவு வாங்கும்போது அவன் அவள் எதிரே வந்தான்.அவளைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றான். “சோரி மதி,கொஞ்ச நேரம் எனக்காக காத்திரேன்,நான் உன்கூட பேசனும்,”என்று சொல்லிவிட்டு அண்ட்டியிடம் உணவு வாங்கப் போனாள். அவள் உணவு வாங்கிவிட்டு வரும்போது அவன் செயற்கை காளானருகே உட்கார்ந்திருந்தான். “எனக்குத் தெரியுது உனக்குக் கோபம்னு ஆனா புரிஞ்சுக்கோயேன்,எனக்கு உன்கூட பேசாம, பழகாம இருக்க முடியல,ஆனா நான் உன்னை ஒரு சகோதரன் மாதிரிதான் நேசிக்கிறேன் மதி.எனக்கு தம்பி இல்லையேங்கற ஏக்கமே உன்கூட பழகனப்புறம்தான் வந்தது,” “பயப்படாதீங்க. நானும் உங்ககிட்ட தப்பான அர்த்தத்துல பழகல,சந்தேகத்தோட நீங்க என்கூட பழகறது எனக்கு வேதனையா இருக்கு,அதுக்கு நீங்க என்கிட்ட பழகாமலேயே இருந்திடலாம்” சொல்லிவிட்டு எழுந்து போக முற்பட்டான். “பரவால போ,இன்னும் எத்தனை நாளு நீ என்கூட பேசப் போற? இப்பவே நாலாம் மாசம்,இன்னும் ரெண்டு மாசத்துல நாங்க பிராக்ட்டிக்கம் போயிடுவோம்.அது முடிஞ்சி வந்ததும் ஒரு மாசம் இருக்கப்போறேன்.அதுக்கப்புறம் உன்னை நான் பாக்கவா போறேன்?ரொம்ப பழகிட்டு பிரிஞ்சி போறதைவிட இப்பவே பிரியறது கொஞ்சம் பெட்டர் இல்லையா?” அழுதுக்கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டாள் அவள்.உணவை கூட அங்கேயே வைத்துவிட்டு ஓடிவிட்டாள். விடுதியை அடைந்தபிறகு ஜீன்ஸைக் கழற்றி நைட்டியை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டாள்.மதியிடம் என்னவோ இருப்பது உண்மைதான்.இல்லையென்றhல் அவன் பேசாமல் போனதற்காக இந்த அளவுக்கு வருத்தப்படுவாளா? “பூங்குழலி, உனக்கென்ன மதி மீது காதலா?’ குருட்டுத்தனமாய் கேள்வி கேட்ட கீதாவை எதை கொண்டாவது அடிக்க வேண்டும் போலிருந்தது. ஒரு பெண் ரத்த சம்பந்தமில்லாத ஓர் ஆணுக்காக உருகினால் அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா? இவர்களின் சிந்தனை மாறவே மாறாதா?மதிவதனன் மீது அவளுக்கு எப்படி இவ்வளவு பாசம் வந்ததென்று அவளுக்கே தெரியவில்லை.மதிவதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு.ஆனால் இவர்கள் எல்லாம் நினைப்பது போன்று அவளுக்கு அவன் மீது ஈர்ப்போ காதலோ அல்ல.அதையெல்லாம் தாண்டிய ஏதோ ஒரு பந்தம்.அவளுக்கே புரியாத பந்தம்.மதிவதனனைப் பார்த்தால் அவளைவிட இளையவன் என்று யாரும் எண்ணமாட்டார்கள்தான். ஆனால் இவளுக்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு குழந்தையைப் பார்ப்பது போன்றதொரு எண்ணம்தானே ஏற்படுகிறது,அவனை அக்கறையாய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தானே அவளுள் மேலோங்கி நிற்கிறது,அவளுடைய அண்ணன் புகழ் அவளிடம் நண்பனைப் போல் பழகுவான்,அவனை நினைத்து உருகுவதைப் போல்தான் மதி மீதும் அவள் உயிராய் இருக்கிறாள். “சீனியர், மதி இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு,” உணவுப்பொட்டலத்தை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள் சாரதா. தொடரும் ……………

No comments:

Post a Comment