Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 10 இரண்டு தினங்களில் தீபாவளி என்பதால் கோலாலம்பூர் பட்டணமே களை கட்டியிருந்தது.புகழ் பூங்குழலியை பிரிக்பீல்ட்ஸ் அழைத்துப் போனான்.வாங்க மறந்திருந்த சில பொருட்களை வாங்கினான். “அவனுக்கு இவ்வருடம் தலை தீபாவளியல்லவா?” பூங்குழலிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.புகழ் தீபாவளியன்று தங்களுடன் இருக்கமாட்டான் என எண்ணும்போது கவலையாக இருந்தது. ஆனால் அவனுடைய மாமனாரும், மாமியாரும் மிக நல்லவர்கள்.புகழை குடும்பத்தோடு சன்வே வந்து அவர்களுடைய வீட்டில் தீபாவளித் திருநாளைக் கொண்டாட பணித்தார்கள்.பூரணியின் அன்பும், பொறுமையும், பணிவும் எங்கிருந்து வந்தது என அவனால் உணர முடிந்தது, தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா, பாட்டிக்குப் படையல் போட்டுவிட்டு உடனே சன்வே கிளம்பிவிட்டார்கள் எல்லாரும்,அவ்வருட தீபாவளி மிகமிக சந்தோஷமாக இருந்தது அவர்களுக்கு.அவளுடைய குடும்பத்தைப் போலவே பூரணியின் குடும்பமும் ஜாலியான குடும்பமாக இருந்தது. இந்த சமயத்தில் மதியும் தன்னோடு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினாள் பூங்குழலி.கல்லூரியின் கடைசி நாள் மதி மிகவும் அமைதியாக இருந்தான். “உங்களை கண்டிப்பா ரொம்ப மிஸ் பண்னுவேன் சீனியர்,” என்றான் வருத்தத்துடன்.கடைசி நாளன்று அவன் தன்னுடைய ஆசையை அவளிடம் சொல்லியிருந்தான்.அவள் கொஞ்சம் வேலையாக இருந்ததால் அவனுடன் சரியாக பேசவில்லை.அவன் அவள் கோபித்துக்கொண்டதாக எண்ணிவிட்டான்.ஆனால் பூங்குழலிக்கு அவனுடைய எண்ணம் கோபத்தை ஏற்படுத்தவில்லை.இவனுக்குள் இப்படி ஓர் ஆசை இருந்திருக்கிறதா என வியந்தாள். எதற்காக அவன் மேல் கோபப்பட வேண்டும்? அவன் அவளிடம் பழகிய வரையில் ஒரு தடவை கூட அவளிடம் அத்துமீறி பேசியதில்லை.சினிமாவில் வருவதுபோல் நட்பு என்று சொல்லிக்கொண்டு அவளுடைய கையை எல்லாம் பற்றிக்கொண்டு சுற்றியதேயில்லை.தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கூட அவளை ஏற சொன்னதில்லை.அவளுடைய கைவிரல்களை கூட அவன் தொட்டதில்லை.அந்த அளவுக்கு அவன் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டான்.அவன் அவளை அண்ணி என்ற ஸ்தானத்தில் வைத்து வணங்கியதே இதற்கு காரணம் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேளை அவளுடன் சகோதரியைப் போல் பழகியிருந்தால் அவளுடைய தலைமுடியை எல்லாம் பிடித்து இழுத்து குறும்பு செய்திருப்பானாம்.அவனுடைய பெரியம்மா மகள்களிடம் இப்படிதான் நடந்து கொள்வானாம்.இதை அவனே அவளிடம் சொன்னான்.அவன் மேல் கோபம் வரவில்லை என்றாலும் கௌசிகன் மீது அவளுக்கு அப்படிப்பட்ட எண்ணமே வரவில்லை.சிறுவயதிலிருந்து தனக்கு வேண்டியதை எல்லாம் தெரிவு செய்து கொடுத்தவன் புகழ்தான்.அவனே முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டாள்.அதே வேளையில் அவசரப்பட்டு இளையவன் மதியின் மனதைக் காயப்படுத்தவும் அவளுக்கு விருப்பமில்லை. * * * * * மெத்தையில் அமர்ந்திருந்த பூரணி தன் வயிற்றை ஆசையாக தடவிப் பார்த்தாள்.புகழுடன் வாழ்ந்த அழகான வாழ்க்கையின் அடையாளச் சின்னம் அவள் வயிற்றில் இரண்டு மாத கருவாய் முளைவிட்டிருந்தது.அவளை இரசித்துப் பார்த்தான் புகழ்.இவளே குழந்தை மாதிரி இருக்கிறாள்.இவளுக்குள் ஒரு குழந்தையா என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவளுடைய முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது.புதுவித வெட்கம் வேறு.மருத்துவர் அவள் கர்ப்பமுற்றிருப்பதாக சொன்ன இரண்டு நாட்கள் அவனுடைய முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. புகழுக்கு கர்ப்பமாக பெண்களை அதிகம் பிடிக்கும்.அவனுடன் வேலை செய்யும் சக ஆசிரியைகள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடந்து வருவதை அவன் பெரிதும் இரசிப்பான்.அந்தத் தாய்மையை அவன் இரசித்தான்.இனி தன்னுடைய பூரணியும் அப்படிதான் இருக்கப்போகிறாள். நீண்ட கவுன் அணிந்துகொண்டு, களைத்துப் போன முகத்துடன்,மாணவர்களிடம் புத்தகங்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடக்கப் போகிறாள்.நினைக்கும்போதே அவனுக்கு ஆசையாக இருந்தது.மெல்ல பூரணியின் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டான். தான் நேசித்தவனையே கணவனாக அடைந்து, அவனுக்குத் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்து, இனி நான் உனக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் அவனுடம் ஒன்றற கலந்துவிட்டது அவளுக்கு அதிக சுகத்தைத் தந்தது.அதைவிட அவனுக்குத் ‘தந்தை’ என்ற அந்தஸ்தையும் கொடுக்க முடிந்ததை எண்ணியபோது அவளுடைய காதலோடு சேர்ந்து பெண்மையும் பூரணமாய் மலர்ந்தது.பூரணி ஆத்ம திருப்தியில் உறங்கினாள். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> “புகழ், நான் சொன்னதுக்கு நீ இன்னும் ஒன்னும் சொல்லலியே? என்றபடி அவன் முன் வந்து நின்றாள் பூங்குழலி.மதிவதனனுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் பிறந்த நாள்.அவனுடைய பிறந்தநாளை தன் வீட்டில் கொண்டாடலாம் என நினைத்திருந்தாள் பூங்குழலி.கடலில் குளிக்க போகலாம் எனவும் ஏற்பாடு.புகழ் அத்திட்டத்திற்குச் சம்மதித்தான். அன்றைய தினம் அவர்களுக்கு மிக மிக சந்தோஷமாக இருந்தது.கடைசி நேரம் வரை தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றி மதிக்கு எதுவுமே தெரியாது.பூங்குழலி வேண்டுமென்றே அவனுடைய பிறந்தநாளை மறந்துவிட்டது போல் இருந்தாள். மதியின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உடனே கூலிமிற்கு கிளம்பலாமென திடீர் யோசனை ஒன்றை உதிர்த்தான் புகழ்.அங்கு மதியின் அம்மா, அண்ணனையும் அழைத்துக்கொண்டு லங்காவி கடற்கரைக்குப் போகலாமென சொன்னான்.அவனுக்கு கௌசிகனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது,அதன்படி எல்லாரும் கிளம்பினார்கள். கௌசிகன் அவசரமாக எங்கோ போகவேண்டி இருந்ததால் பிறகு வந்து அவர்களுடன் கலந்து கொள்வதாக சொன்னான்.அவன் அம்மாவும் கௌசிகனுடன் வந்து இணைந்து கொள்வதாக சொல்லி மறுத்துவிட்டாள். ஏதோ தன் குடும்பத்தினரிடமாவது கௌசிகன் நன்றாக பழகுகிறானே என்ற விதத்தில் பூங்குழலிக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.மதியின் வீட்டிலேயே சமைத்து எடுத்துக் கொண்டு போனார்கள். பள்ளி விடுமுறை சமயமென்பதால் கடற்கரையில் நிறைய பேர்.வழக்கமாக ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் புகழ் அவர்களையெல்லாம் கடற்கரைக்குதான் அழைத்து வருவான். பூங்குழலிக்குக் கடலைப் பார்த்ததும் கல்லு}ரி ஞாபகம் வந்தது.ஆசிரியத் தன்மை பயிற்சியின்போதும் (BIG). சுற்றிப் பார்க்கப் போகும்போதும் கடல்தானே அவர்களின் முக்கிய இடமாக இருந்து வந்தது?தோழிகள் எல்லாரும் பள்ளி வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருப்பதால் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென பூங்குழலி அவர்களை அழைக்கவில்லை. “வா மதி. கடலுக்குப் போகலாம்,” களைத்து உட்கார்ந்திருந்த மதிவதனனை வற்புறுத்தி அழைத்தாள். “ஐயோ, நான் இப்பதான் கடலுக்குள்ள இருந்து வர்றேன்.நீங்க போங்க சீனியர். நான் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன்,”அவளை அனுப்பிவிட்டு மணலில் மல்லாந்து படுத்தான் மதி.பூங்குழலி கடலுக்குள் இறங்கியிருந்தாள். அப்போதுதான் அந்த ஆரவாரம் எழுந்தது.திடுக்கிட்டு எழுந்தான் மதி.கடல் அலை மிக உயரத்திற்கு எழுந்து ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தது.சிலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.அந்த விபரீதம் உறைத்ததும் மதி கடலை நோக்கி ஓடினான். கரையில் இருந்த சிலர் தங்கள் உறவினர்களைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.ஆனால் சீற்றம் கொண்டு எழுந்த கடல் அலைகளை எதிர்த்துப் போராட முடியாமல் தோற்றுப்போயினர் சிலர்.சிலர் உறவினர்களைக் காப்பாற்ற போய் அவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். மதி பூரணியைக் கண்டுபிடித்துவிட்டான்.கஷ்டப்பட்டு அவளைக் கரைக்கு இழுத்து வந்தான். “மதி,என்னாச்சு மதி? என் அம்மா, அப்பா, அண்ணி, புகழ் எல்லாரும் எங்க மதி?” அழுது அரற்றியவளை பலங்கொண்ட மட்டும் பிடித்து இழுத்து கரைக்குத் தள்ளினான் மதிவதனன். தொடரும் ……..

No comments:

Post a Comment