Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 11 பேருந்து பட்டர்வர்த்தை அடைந்தபோது மணி இரண்டாகிவிட்டது.கௌசிகன் அவளுக்கு முன்பே வந்து பட்டர்வர்த்தில் காத்திருந்தான்.அவளுடைய கையிலிருந்த பொருட்களை வாங்கி கொண்டு அவளுடன் நடந்தான். வீட்டை அடைந்தவள் சாவித்திரிக்கு உதவியாக சில இனிப்பு வகைகளைத் தயார் செய்தாள்.மாலை ஆறு மணிக்கெல்லாம் சமையல் வேலை முடிந்துவிட்டிருந்தது.ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள்.வந்தவர்களை வரவேற்று ஹாலில் அமரச் செய்தாள் பூங்குழலி.மேசையில் கேக் எல்லாம் எடுத்து தயாராக வைத்தாள்.எல்லாம் தயாராக இருந்தது மதிவதனனைத் தவிர.அன்று நடந்த அந்த பயங்கரமான சம்பவம் மீண்டும் அவள் நினைவில் வந்தது. * * * * * பூங்குழலி கடலை நோக்கிப் போனபோது அவள் அண்ணனும், அண்ணியும் கரையோரத்தில் இருந்தார்கள்,அம்மாவும், அப்பாவும் மணலில் அமர்ந்திருந்தார்கள்.பூங்குழலி ஓடி வந்து அம்மாவையும், அப்பாவையும் அழைத்துப் போனாள்.கைநிறைய மணலை அள்ளிக்கொண்டு போய் புகழின் தலையில் கொட்டினாள்.அதோடு விட்டிருந்தால் அந்த விபரீதம் நடந்திருக்காது.ஆனால் அவளோ அம்மா, அப்பாவை கடலுக்குள் தள்ளிவிட்டதோடு புகழையும், அண்ணியையும் வேறு பிடித்து இழுத்தாள்.அப்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. கடல் திடீரென ஆர்ப்பரித்து எழ. பெரிய அலை ஒன்று வந்து அவள் அம்மா, அப்பா,அண்ணன், அண்ணி எல்லாரையும் கடலுக்குள் இழுத்துக்கொண்டு போனது,மக்கள் எல்லாரும் போட்ட கூச்சலில் ஓடிவந்த மதி அலறிக்கொண்டிருந்த பூரணியைக் கண்டுபிடித்து இழுத்து வந்தான்,மதி தன்னை இழுத்து வந்ததுதான் அவளுக்குத் தெரியும்,அதன்பிறகு அவள் இரண்டு நாட்கள் கழித்துதான் கண்விழித்தாள்,அவள் கண்விழித்தபோது கௌசிகன் அவள் அருகில் இருந்தான், “என் அம்மா, அப்பா, புகழ், அண்ணி, மதி,,,,எல்லாரும் எங்க?” கௌசிகன் பதில் பேசாமல் இருக்கவும் அவளுக்குப் புரிந்து போனது.இதற்கு மேல் மறைப்பது உசிதமல்ல என்று அவளிடம் உண்மையைச் சொன்னான் கௌசிகன்.கதறி கதறி அழுதாள் பூங்குழலி.அவளை மேலும் அழவிடாமல் தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினான் கௌசிகன். அன்று நடந்த சுனாமி தாக்குதலில் அவளுடைய அம்மா, அப்பா, அண்ணி எல்லாருமே பலியாகிவிட்டார்கள்,அவளைக் காப்பாற்ற முயற்சித்த வேளையில் மதியும் ஒரு பெரிய அலையில் மாட்டிக்கொண்டான்,அவனால் போராட இயலாத நிலையில் அவளைக் கரைக்குத் தள்ளிவிட்டு அலையிடம் சரணடைந்துவிட்டான் மதி,கரைக்கு மிக அருகில் வந்து விட்டவளை யாரோ இழுத்துப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய விபரீதம் நடந்தும் அவள் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் அவளுடைய அண்ணன் புகழ்தான்,அந்தச் சம்பவத்தில் புகழ் மட்டும்தான் தப்பியிருந்தான்.அது ஒன்றுதான் அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பத்திரிக்கைகளில் சுனாமி பாதிப்பு பற்றி படிக்க நேர்ந்தபோது கலங்கிப் போனாள் அவள்.குவியல் குவியலாக மனித பிணங்கள்.அவள் அம்மா, அப்பா,அண்ணி, மதி எல்லாருமே இப்படிதான் பிணக்குவியலில் ஒருவராக இருந்திருப்பார்களோ? அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.கரையோரத்தில் இருந்தவர்களைப் பிடித்து தண்ணீரில் தள்ளிவிட்டவளும் அவள்தானே அவளைக் காப்பாற்ற போய்தானே மதியும் இல்லாமல் போனான்.கௌசிகனிடம் அவள் எதையும் கேட்கவில்லை.அவன் சொல்வதைத் தாங்கி கொள்ளும் நிலையில் அவள் இல்லை.ஒரு மாதத்திற்கு எந்தப் பத்திரிக்கையையும் அவள் படிக்கவேயில்லை. ஏதோ புகழாவது அவளுக்குத் துணையாக இருக்கிறானே? எத்தனை பேர் எல்லாரையும் பறிகொடுத்துவிட்டு அனாதைகளாய் நின்றிருந்தார்கள்.அவளுக்கு அண்ணனாவது இருக்கிறானே? அப்போதுதான் அவள் அந்த முடிவை எடுத்தாள்.அவர்கள் எல்லாரும் இறந்துவிட்டதாக ஏன் எண்ண வேண்டும்?அவர்கள் எல்லாரும் உயிரோடு இருப்பதாகவே அவளாக நினைத்துக் கொண்டாள்.மதியின் பிறந்தநாளை அவன் இருப்பதாக நினைத்துக் கொண்டாட எண்ணினாள்.மதியின் பிறந்தநாளன்று யாரும் அழக்கூடாது என்று சொன்னாள்.அன்றைய தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து குழந்தைகளையும், பெரியவர்களையும் அழைத்து அன்னதானமிட முடிவு செய்தாள். விருந்து முடிந்து எல்லாரும் போனபிறகு அழ ஆரம்பித்தவள் அழுதுக்கொண்டே இருந்தாள்.அந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் மதியுடன் பழகிய நாட்கள் நினைவிற்கு வந்தது. “சீனியர்..” மதி அவளை அழைப்பதைப் போன்றதொரு பிரமை. மறுநாள் காலையிலேயே கிளம்ப தயாரானவளின் அருகில் வந்து நின்றாள் சாவித்திரி. “இது வரைக்கும் நான் கேட்டபோதெல்லாம் நீ பதில் சொல்லவே இல்ல,மதி இறந்து சரியா ஒரு வருடம் முடிஞ்சிருச்சி,இன்னைக்காச்சும் சொல்லும்மா,மதியோட விருப்பப்படி கௌசிகனைக் கல்யாணம் பண்ணிக்கலாமே?” ராமுலம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தாள் பூங்குழலி. “ஒரு வேளை மதி உயிரோடு இருந்திருந்தா இந்தக் கல்யாணம் நடந்திருக்கலாம்,அவன் இல்லாத இந்த வீட்ல என்னால இருக்கமுடியாதும்மா,உங்க வீட்டுக்கு வரப்பல்லாம் மதி இல்லையே என்ற எண்ணம்தான் எனக்கு வருது.அவன் இல்லாத வீட்ல ஒரு நாள் கூட என்னால இருக்கமுடியலையே? எப்படி காலம் பூரா இருக்கப்போறேன்?இந்த வீடு எனக்கு அவனை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்மா.அதனாலதான் வேண்டாம்கிறேன்,” அவள் சொன்னதை கேட்ட கௌசிகன் தன் அம்மாவை நெருங்கினான். “அம்மா, எனக்கும் பூங்குழலியைக் கல்யாணம் பண்ணிக்கனும் என்ற எண்ணம் எப்பவுமே இருந்ததில்லம்மா,நான் வாழ்க்கைல நிறைய சாதிக்கனும்னு இருக்கேன்மா.கல்யாணத்தைப் பத்தி எல்லாம் நான் நெனச்சி பாக்கறதே இல்ல.பூங்குழலி சொன்னமாதிரி ஒரு வேளை மதி இருந்திருந்தா அவனுக்காக நானும் இந்த கல்யாணத்துக்கு ஒரு வேளை சம்மதிச்சிருப்பேனோ என்னவோ?” என்றவன் பூங்குழலியின் பக்கம் திரும்பினான். “நான் உங்களுக்கு எப்பவுமே ஒரு நல்ல நண்பனா இருப்பேன் பூங்குழலி. வாங்க போலாம்.உங்களுக்கு மணியாகிடப் போகுது,” கார் சாவியை எடுத்துக்கொண்டு போனவனைப் பின்தொடர்ந்தாள் பூங்குழலி. * * * * * பூங்குழலி வீட்டை அடைந்தபோது புகழ் அவள் இல்லாத இரண்டு தினங்களாக எதையுமே சாப்பிடவில்லை என்றார் பூரணியின் அப்பா.புகழுடைய அறைக்குள் நுழைந்தாள் பூங்குழலி.சக்கர வண்டியில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த புகழ் அவள் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தான்.அவனைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது அவளுக்கு.அவனுடைய தலையில் பலமாக அடிபட்டிருந்ததால் அவனுடைய மூளை நரம்புகள் கொஞ்சம் பாதிப்படைந்திருந்தன.எதையும் சுயமாக செய்யவியலாத நிலையில் இருந்தான் அவன். நாட்டில் எத்தனையோ கெட்டவர்கள் இருக்கிறார்கள்.எத்தனையோ பேர் பொறுப்பில்லாமல் பல அட்டுழியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கும்போது தன் அண்ணனுக்கு மட்டும் ஏன் இந்த நிலமை? அம்மா, அப்பா, மனைவி, கருவறையிலேயே சமாதியாகிப் போன முகமறியா குழந்தை எல்லாரையும் பறிகொடுத்துவிட்டு நினைவிழந்த நிலையில்… ஆரம்பத்தில் அவனை நினைத்து வருத்தப்படாத நாளே இல்லை.அடிக்கடி பழையபடி எல்லாரும் வீட்டிலிருப்பதைப் போன்று கனவு காண்பாள்.எழுந்து பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள்.கனவென்று அறிந்து அழுவாள்.ஆனால் நாளடைவில் கொஞ்சம் தேறிவிட்டாள்.ஒரே மகளையும் பறிகொடுத்துவிட்டு துயரத்தில் இருந்த பூரணியின் பெற்றோரையும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக்கொண்டாள்.மருத்துவர்கள் சொல்வது மாதிரி என்றாவது ஒரு நாள் தன் அண்ணன் எழுந்து நடப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.அதுவரையில் அவளுடைய வாழ்க்கையில் வேறு எதற்கும் அவள் இடம் கொடுக்கப் போவதில்லை. பழைய நினைவுகளுக்கு தற்காலிகமாக விடைகொடுத்துவிட்டு, புகழுக்கு உணவு ஊட்டி மெத்தையில் படுக்கவைத்தாள் பூரணி,அவனுடைய வாழ்க்கைதான் இருண்டு போயிருக்கிறது,அறையாவது வெளிச்சமாக இருக்கட்டுமே என்று விளக்கை அணைக்காமலேயே விட்டுவிட்டு தனது அறைக்குப் போனாள் பூங்குழலி, * * * * * வானம் மெல்ல விடிய தொடங்கியிருந்தது,பூங்குழலியின் வாழ்வும் என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் தான் எழுதிய கதைக்கு ‘உன்னால்தானே நானே வாழ்கிறேன்’ என தலைப்பிட்டுவிட்டு கணினியை அடைத்துவிட்டு படுத்தாள் சரளா. முற்றும்…

No comments:

Post a Comment