Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 8 கௌசிகன் ஏறத்தாழ மதிவதனனுடைய சாயலில்தான் இருந்தான்.அவனுடைய குரலும் மதிவதனனுடைய குரலோடு ஒத்துப் போனது.ஆனால் மதியைக் காட்டிலும் நிறம் கொஞ்சம் கம்மியாக இருந்தான்.அவன் பிரபல ஆங்கில நாளேடான ‘ஸ்டார்’ பத்திரிகையின் நிருபராக இருந்தான்.பூங்குழலிக்கு அத்துறையில் நிறையவே ஆர்வம் இருந்தது.அவனிடம் அந்த வேலையைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள துடித்தாள்.ஆனால் கௌசிகன் அவள் பக்கமே திரும்பவில்லை. கௌசிகனுக்குப் பெண்களிடத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லையாம்.மதிவதனன்தான் சொன்னான்.அவளிடம் பேசாவிட்டாலும் மதிவதனனுக்கு என்ன வாங்கி வந்தாலும் அவளுக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுத்தான்.அவன் பேசாவிட்டால் என்ன?தானாவது பேசிப் பார்க்கலாமே என்று ஒரு நாள் இரவு அவளாக அவனைத் தேடிப்போனாள்.அவன் ஹாலில் அமர்ந்திருந்தான். “என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?’ எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்று தெரியாததால் அவ்விதம் கேட்டாள். “திடீர்னு வந்து என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?” அவன் அப்படி முகத்தில் அறைந்தாற்போல் கேட்பானென்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆண்கள் தங்களுக்குப் பிடிக்காத பெண்களை அல்லது தப்பான பெண்கள் என்று நினைப்பவர்களிடம்தான் இப்படி அலட்சியமாக பேசுவார்கள்.இதில் தான் என்ன ரகம் என்று பூங்குழலியால் ஊகிக்க முடியவில்லை.ஒரு வேளை தானாக போய் அவனிடம் பேசியதால் தன்னைத் தப்பாக நினைத்துவிட்டானோ என்று கூட தோன்றியது அவளுக்கு.பேசாமல் இருந்திருக்கலாம்.கடைசி நாளும் அதுவுமாக தேவையா இந்த அவமானம்?”அவள் படுக்கப் போய்விட்டாள்.ஆனால் உறங்க முடியவில்லை.கௌசிகன் பேசிய விதம் அவள் மனதைக் காயப்படுத்தியிருந்தது. நடந்ததை மதியும் அறிந்திருந்தான்.கௌசிகன் மிக நல்லவன்.மதியின் மீது உயிரையே வைத்திருப்பவன்.மிக மிக பொறுப்பானவன்.ஆனால் அவனுக்குப் பெண்களிடத்தில் எப்படி பேசுவதென்று தெரியாது.அவனுக்குத் தொழில் பக்தி அதிகம்.வீட்டில் இருக்கும்போது இணையமும், பத்திரிக்கைகளும்தான் அவனுடைய பொழுதுபோக்கு.அவ்வளவாக படம் கூட பார்க்கமாட்டான். மதிக்கு தன் அண்ணன் சராசரி ஆண்களைப் போல் இல்லாமல் மிகவும் சீரியஸாக இருப்பதில் அதிக வருத்தம்.அவனுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணை இருந்தால் அவனும் மற்றவர்களைப் போன்று சந்தோஷமாக இருப்பானோ என்று யோசித்தான். பூங்குழலியை முதன்முதலில் பார்த்தபோதே கௌசிகனுக்கு சகல விதத்திலும் பொருத்தமானவள் இவள்தான் என்று அவனுக்குள் ஒரு வெளிச்சம்.அவளுடன் பழக ஆரம்பித்த பிறகு தனக்கேற்ற சரியான அண்ணி இவள்தான் என்று அவனுக்குத் தோன்றியது.அவளுடைய கோபம், குறும்பு எல்லாமே அவனுக்குப் பிடித்திருந்தது.அவன் மீது அவள் எடுத்துக் கொள்ளும் அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது.மாலை வேளைகளில் அவனுக்காக தே ‘ஓ’ கலக்கி, ‘கார்டினியா’ ரொட்டியில் பிளாந்தா தடவி எடுத்துப் போய்க் கொடுப்பாள். எந்தவித உறவும் இல்லாமலேயே இவ்வளவு அன்பாக கவனித்துக் கொள்பவள் தனக்கு அண்ணியாக வந்தால் எவ்வளவு அன்பாக இருப்பாள் என்று ஆசைப்பட்டான்.அதனால்தான் அவனுக்கு அவளைச் சகோதரியாக ஏற்றுக்கொள்வதில் விருப்பமில்லை.மனதில் உள்ளதை அவசரப்பட்டு சொல்லி அவளுடைய நட்பை இழந்துவிடக்கூடாதென்றுதான் பொறுமையாக காத்திருக்கிறான்.ஆனால் கௌசிகன் நடந்து கொள்வதைப் பார்த்தால் காரியமே கெட்டுவிடுமோ என்ற பயம் அவனுள் வந்தது.கூடிய சீக்கிரம் பூங்குழலியிடம் தன் எண்ணத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தான்.ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.பயிற்றுப் பணியின்போது பூங்குழலியைச் சந்திப்பதே பெரும் பாடாய் இருந்தது. பூங்குழலி அலோர்ஸ்டாரில் பயிற்றுப் பணியை மேற்கொண்டிருந்தாள்.தினமும் பாடத்திட்டம் தயார் செய்து அதற்கேற்ற பயிற்றுத் துணைப் பொருட்களையெல்லாம் செய்து வைத்துவிட்டு அவள் படுக்கவே தினமும் மூன்று,நான்கு மணியாகிவிடும்.சில சமயங்களில் விடிய விடிய பாடம் தயாரித்துவிட்டு தூங்காமல் அப்படியே பள்ளிக்குப் போயிருக்கிறாள்.அதனாலேயே வார விடுமுறை நாட்களில் அவள் எங்கும் போகாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தாள்.தன் வீட்டிற்கு கூட மூன்று வாரத்திற்கொருமுறைதான் போனாள்.ஆனால் அவளுக்கு அந்த அலைச்சலும்,அசதியும் பிடித்திருந்தது, பயிற்றுப் பணியை முடித்துக்கொண்டு கல்லூரிக்குத் திரும்பியபோது அவளுக்கு எதையோ தொலைத்ததைப் போலிருந்தது.பள்ளி வாழ்க்கை கூட இனிமையாகதான் இருக்கிறதென்று தோன்றியது.ஆனால் அவளுடைய தோழிகள் நொந்து கொண்டார்கள்.ஒரு சிலர் சென்றிருந்த பள்ளிகளில் வாட்டி எடுத்துவிட்டார்களாம். “அப்பாடா, இனிமே இந்த பிராக்டிக்கம் தொல்லை எல்லாம் இல்லப்பா. நல்லா தூங்கலாம்,” கீதா சந்தோஷப்பட்டாள். “ரொம்ப அலையாத. ‘கிஸம்’ கோர்ஸ் சாயந்திரம் நாலரை மணி வரைக்கும் இருக்கு.சனிக்கிழமை கூட இருக்கு,” சரளா இடைமறித்தாள். “பரவால இருபத்தேழாம் தேதி வரைதானே? அதுக்கப்புறம் ரெண்டு மாசம் ஜாலியா இருக்கலாம்.” “ஐயோ அக்கா. உங்களுக்கெல்லாம் இருபத்தேழாம் தேதியோட முடிஞ்சிடுமா? நீங்கள்லாம் சீக்கிரமா போயிடுவீங்களா?” நீலா நிஜமான வருத்தத்தோடு சொன்னாள்.பாவம் அவள் எப்போதும் தன் சீனியர்களுடனேயே சுற்றிக்கொண்டிருப்பவள்.பருமனாக, கருப்பாக இருக்கும் அவளுக்கு இலேசான தாழ்வு மனப்பான்மை இருந்தது.தன் அத்தைப் பையன் தன்னை நிராகரித்தபோது “ஒரு வேளை நான் சிவப்பா, ரொம்ப அழகாக பிறந்திருந்தா என்னை வேண்டாம்னு சொல்லியிருப்பாரா அக்கா?” என்று அவள் கதறி அழுதபோது அவளைக் கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றியவர்கள் அவர்கள்தான்.அதனால்தான் தன் பிறந்த நாளன்று அவர்கள் அப்படி செய்வார்கள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மறந்ததுபோல் நடித்தாள் அவள். கல்லூரி வாழ்க்கை சீக்கிரமாக முடியப்போவதை எண்ணி கவலைப்படுவதா இல்லை புகழுடன் ஒன்றாக இருக்கப்போவதையெண்ணி சந்தோஷப்படுவதா?” பூங்குழலி யோசிக்க முடியாத நிலையில் இருந்தாள். இருக்கப்போகும் மூன்று வாரத்தில் கல்லூரி வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டுமென்று பல திட்டங்களைப் போட்டார்கள் அந்த ஐந்து பெண்களும்.இருபத்தேழாம் தேதியோடு இறுதியாண்டு மாணவர்களுக்குப் பயிற்சிக் காலம் முடிகிறதென்பதால் வருடந்தோறும் தனித்தனியாக நடத்தப்படும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரியாவிடை விருந்தையும்,தீபாவளி கலைநிகழ்ச்சியையும் ஒரே தேதியில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தமிழ்த்துறை. முன்னோடி மாணவர்கள் நொந்து போனார்கள்.நடனம் ஆடவிருந்த மாணவர்கள் கூட இறுதி நேரத்தில் நடனத்தை ரத்து செய்துவிட்டார்கள்.பூங்குழலியின் வகுப்பு மாணவிகள் இவ்வாண்டு வித்தியாசமாக அறுபதாம் ஆண்டு ‘ரோக் எண்ட் ரோல்’ பாடலுக்கு பெரிய கொண்டையெல்லாம் போட்டுக்கொண்டு பழைய பாணியில் தலையை ஆட்டி ஆட்டி நடனம் ஆட இருந்தார்கள்.கடைசி நேரத்தில் எல்லா திட்டமும் வீணாய்ப் போனது. பிரியாவிடை விருந்தில் சிறப்பு செய்யப்படுபவர்களே இவர்கள்தான்.வியர்த்து வடியும் முகத்தோடு எப்படி அங்கே இருக்கமுடியும்? ஆனாலும் இது வேண்டுமென்றே நடக்கவில்லையே? இன்னும் பத்து தினங்களே எஞ்சியிருக்கும் சமயத்தில் மண்டபமும் கிடைக்காத வேளையில் வேறு என்னதான் செய்யமுடியும்? அதனால் நொந்து போயிருந்த மாணவர்களும் தங்களைத் தேற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று.மதி அந்நிகழ்ச்சியில் பாடல் பாடுவதாக இருந்தான். “என்கூட நீங்களும் சேர்ந்து பாடுங்களேன் சீனியர்,” மதி அவளையும் வற்புறுத்தினான்.பூங்குழலி முடியவே முடியாதென மறுத்துவிட இறுதியில் தனக்கு மிகப் பிடித்தமான “நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலைப் பாடினான் மதி.ஏனோ அவனுக்கு அநதப் பாடல் என்றால் கொள்ளை ஆசை.பல தடவை கேட்டு, பாடி பழகிவிட்டதாலோ என்னவோ அவன் மிக இனிமையாகப் பாடினான்.அவனுக்கு ஏகப்பட்ட பூக்கள் கிடைத்தன. அன்றைய நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவே நடைபெற்றது.எந்த ஒரு நிகழ்விலும் தமிழ்த்துறை மாணவர்கள் தனித்தன்மை பெற்று திகழ வேண்டும் என்பதில் தமிழ்விரிவுரைஞர்கள் மிகவும் கெட்டியானவர்கள்.இலக்கிய நிகழ்வுகளுக்கு தமிழ்த்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது.ஒவ்வொரு வருடமும் மூன்று முறை பயிற்சி ஆசிரியர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் ‘இளவேனில்’ என்ற இதழ் வெளியீடுதான் தமிழ்த்துறையின் இலக்கியத் தாகத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்து வந்தது’அதனாலேயே எம்’பி’சா கல்லூரி என்றால் வெளியில் நல்ல மதிப்பு இருந்தது. மதிப்பு தொடரும் …….

No comments:

Post a Comment