Sunday, December 1, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 20:என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் (உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் 1992)


வளையல் பெண்ணின் உதயகீதங்கள்
கீதம் 20 : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
(உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்- 1992)
 



  

   குழந்தைப் பருவத்திலும் சரி,வாலிபப் பருவத்திலும் சரி நம் வீட்டுக்கு உறவினர்கள் வருகிறார்கள் என்றாலே மகிழ்ச்சியாக இருக்கும்.அதிலும் மாமன் மகளோ,அத்தை மகளோ வீட்டுக்கு வந்தால் அந்த ஆணுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும்,பரவசமும் சொல்லில் அடங்காது.

  வேண்டுமென்றே எதிரில் வளைய வருவது,யாருமில்லாத நேரத்தில் சீண்டிப் பார்ப்பது,மிரட்டி அழவைப்பது,நண்பர்களிடம் காட்டி பெருமைப்படுவது இப்படி அவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது.

  அந்த அத்தை,மாமன் பெண்களுக்கும் அந்தக் குறுகுறுப்பு இருக்கவே செய்யும்.மாமன் முறை உறவுள்ள ஆண்களைப் பார்த்தாலே வெட்கம் பிறக்கும்.கூச்சம் இருந்தாலும் வேண்டுமென்றே அவர்களின் கண்ணில் படவேண்டும் என தோன்றும்.உங்களில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம்.

   எனக்கு நிறைய மாமன்மார்கள் இருந்தார்கள்.தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தபோது அம்மாவின் அண்ணன் இறந்துவிட்டார்.அவரது வீட்டிற்கு கருமக்கிரியைக்குச் சென்றபோதுதான் எனக்கு அங்கு 24 வயது முதல் பதினாறு வயது வரை ஆறு முறைமாமன்கள் இருந்ததை அறிந்தேன்.அவர்களும் அப்போதுதான் என்னைப் பார்க்கிறார்கள்.

   எல்லாரும் சடங்குகளில் மூழ்கியிருக்க,என் தங்கையிடம் என் கடைசி மாமாக்கள் இருவரைக் காட்டி,”அங்கே பாரு ரெண்டு மொட்டை,” என்றேன்.அது அந்த பதினாறு வயது மாமாவின் காதில் விழுந்துவிட,என்னைப் பார்த்து சிரித்துவிட்டு திரும்பிவிட்டார்.

  அங்கே தங்கியிருந்த சில தினங்களில் மாமாவின் மகன்கள் என்னைப் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமில்லை. ஒவ்வொருவரிடமும் எப்படியோ தனியாக மாட்டிக்கொண்டேன்.

இரட்டை சடையில்,மெலிந்த உடலோடு இருந்த என்னை வழிமறித்து அழவைத்தார்கள்.மொட்டை அணிந்திருந்த அந்தக் கடைசி மாமா மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு,என் மாமன் மகள் என என்னைத் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தார்.

  அதன்பின்னர் எங்கள் வீட்டுக்குத் திருவிழா சமயத்தில் வரும்போதும்,உறவினர்களில் திருமணத்துக்கு வரும்போதும் பார்த்துக்கொள்வோம்.ஒரு பள்ளி விடுமுறையில் அவர்களின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தேன்.இரண்டு அண்ணன் தம்பிகளுக்கும் என் மீது கண் இருக்கவே செய்தது.அதில் மூத்தவர் என்னைத் தன் மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு போயிவிட,சின்னவருக்கு என் மீது கோபம்.எனக்கோ ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் அந்த விசயம் எல்லாம் புரியவேயில்லை.ஆனாலும் அவர்களைப் பார்த்தால் உடலுக்குள் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறையும்.

  சிறுவயதில் ஒருமுறை தொலைக்காட்சியில் ஒளியேறிய உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தைப் பார்த்தபோது எனக்கு என் மாமா மகன்களின் ஞாபகம்தான் வந்தது.அதனாலோ என்னவோ அந்தப் படம் என் மனதில் ஆழமாய்ப் பதிந்து போனது.

  1992-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் கார்த்திக்,மோனிஷா,சசிகலா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இளையராஜா ஐயாவின் இசையில் இடம்பெற்ற பாடல்களில் வானம் இடி இடிக்க,என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட ஆகிய இரு பாடல்களும் பலரையும் கவர்ந்த பாடலாக இருந்தன.இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் நாம் மாமன் மகன்,அத்தை மகள் உறவின் இனிமையையும்,ஏக்கத்தையும் பறைசாற்றும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி,” என்ற பாடலை அறியலாம்.

   வினுச்சக்கரவர்த்தியின் தங்கை மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயிக்கிறார் அவள் அப்பா விஜயன்.பகையை மனதில் வைத்துக்கொண்டு அவர் அவ்வாறு செய்ததை வினுச்சக்கரவர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சிங்கம் மாதிரி தனக்கு இரண்டு ஆண்மகன்கள் இருக்கும்போது வெளியூர் மாப்பிள்ளையைத் தேடுவதா என்ற கோபத்தில் நியாயம் கேட்டு போகும் வினுச்சக்கரவர்த்தியை அவமதித்து அனுப்புகிறார் விஜயன்.அவர் தன் மகன்கள் பெரியசாமியையும்(நிழல்கள் ரவி),முத்துராசுவையும்(கார்த்திக்) அனுப்பி,அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு வர சொல்கிறார்.அந்த முயற்சியில் பெரியவன் பெரியசாமி இறந்துவிடுகிறான்.

  மீனாட்சிக்கு (சசிகலா) ஏற்கனவே அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவள் தன் பாட்டியின் வீட்டில் சந்தோசமாக இருக்கிறாள்.அவளை இளையவன் முத்துராசுவுக்கு மணமுடிக்க பெரியவர்கள் தீர்மானிக்கிறார்கள்.அவன் அந்தத் திருமணம் வேண்டாம் என்கிறான்.காரணத்தைக் கேட்கும்போது அவன் தன்னால் தனத்தை மறக்கவே முடியவில்லை என்கிறான்.கதை பின்னோக்கிப் பயணிக்கிறது.

   பல வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் அத்தையை வரவேற்க செல்லும் முத்துராசு பேருந்திலிருந்து சாமான்களை இறக்கிவைக்கும்போது பாவாடை,சட்டையில் நின்றிருந்த அத்தை மகள் தனத்தையும் ஏதோ பொருள் என்ற ஞாபகத்தில் தூக்கி இறக்கிவைத்துவிட்டு நிமிர,அங்கே குறுகுறுவென தன்னையே பார்த்தபடி நிற்கும் பெண்ணை ஆச்சரியமாக பார்க்கிறான்.வெள்ளை நிற பாவாடை,சட்டை,மடக்கி ரிப்பன் கட்டப்பட்ட இரட்டைப் பின்னல்,மீன்விழிகள்,குண்டு முகம்,செழிப்பான கன்னங்கள் என குடும்பப் பாங்காக இருக்கும் பெண்ணை அவன் வியப்போடு நோக்க சிறுவயதில் அவன் பார்த்த அத்தைப் பெண்தான் அவள் என தன் அத்தையின் மூலம் தெரிந்து கொள்கிறான்.அவள் வெட்கத்தில் தலைகுனிந்து கொள்கிறாள்.

  சிறுவயதில் தான் பார்த்து இரசித்த அத்தை மகளை வளர்ந்து நிற்கும் வாலிபப் பெண்ணாக பார்த்ததும் அவள் பால் ஈர்ப்பு ஏற்படுகிறது முத்துராசுவுக்கு.எந்நேரமும் அவளை சீண்டிப் பார்க்க நினைக்கிறான்.தனிமையில் அகப்படமாட்டாளா என தவித்திருக்க,அவளோ அவனைக் கண்டால் மிரண்டு நிற்கிறாள்;மனதில் அவன்மேல் ஆசையிருந்தும் அவன் அருகில் கூப்பிட்டால் மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாள்.அவள் பாட்டி இரண்டு மாமன்களில் யாரைத் திருமணம் செய்து கொள்ள அவள் விரும்புகிறாள் என கேட்க,அவள் தன் பாட்டியின் காதில் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறாள்.

  அவள் யாரைச் சொல்லியிருப்பாள் என குறுகுறுத்து,பாட்டியிடம் விசயத்தை வாங்குகிறான்.அவள் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை அறிந்ததும் எல்லயில்லா சந்தோசத்தோடு அவன் அவளைத் தேடி போகிறான்.அப்போது பாட்டுச் சத்தம் வரவே,அங்கே தனம் இவனை நினைத்து பாட ஆரம்பிக்கிறாள்.படத்தில் அப்போது ஒலிக்கிறது இந்தப் பாடல்.

  தன் மாமன் மகனின் மீது கொண்ட ஆசையை அவனிடத்தில் வெளிப்படுத்த வெட்கம் கொண்டவள் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை என்ற சந்தோசத்தில்,மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கத்த இந்தப் பாடல் வழியாக வெளிப்படுத்துவதையும்,அவளைப் பின் தொடர்ந்து வரும் அவன் தான் பார்த்து மயங்கிய அவளது அழகை வர்ணித்து,கட்டுக்கடங்காமல் திரிந்த காளை தன்னை வீழ்த்திவிட்டதாக சொல்வதையும் தம் அழகான வரிகளால்   பிறைசூடன் புனைய,இளையராஜா ஐயாவின் இசையில் குரல் கொடுத்திருப்பார்கள் எஸ்.பி.பாலாவும்,சொர்ணலதாவும்.ஆஆஆ என்ற ஹம்மிங்கோடு எஸ்.பி.பி.தொடங்கும் இடம் வெகு அற்புதமாக இருக்கும்.இரவு நேரத்தில் கேட்பதற்கு இதமான பாடல் இது.

   இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனதில் ஓர் இனம் புரியாத வலியும் வந்து போகும்.இதற்குக் காரணம் இப்பாடலில் தன் பாட்டியின் வீட்டு உறவுகள் காட்டும் அன்பில் சொர்க்கத்தையே உணர்வதாகவும்,தன் மனதில் இருக்கும் ஆசைகளையும்,ஏக்கங்களையும் தன் கண்ணாளன் வந்து போக்கவேண்டும் எனவும் ஆசை ஆசையாய் பாடிய அந்தப் பெண் தனம் அநியாயமாய் இறந்துவிடுவாள்.அவளைத் தனியே பார்க்கும்போது தன் வேட்டி,சட்டையை அணியவைத்து அழவைத்து,அவள் தூங்கும்போது திருட்டுத்தனமாக வந்து அவள் காலில் கொலுசு மாட்டி விட்டு இபப்டி சின்ன சின்ன சேட்டைகளால் அவள் மீது இருக்கும் அலாதி அன்பை வெளிப்படுத்தும் அவனே அவளது மரணத்திற்குக் காரணமாகிவிடுவான்.ஒரு தடவை அரிசி வைக்கும் அறையில் நுழையும் அவளிடம் கன்னத்தில் முத்தம் கொடுக்குமாறு மிரட்ட,அந்நேரம் அவனது அப்பாவும்,பாட்டியும் அழைக்க,உள்ளே அறையைப் பூட்டிக்கொண்டு இருவரும் இருப்பது தெரிந்தால் பெரியவர்கள் தப்பாக எண்ணிவிடுவார்களே என்ற பயத்தில் அவள் ஓர் இரும்புப் பெட்டிக்குள் ஒளிந்து கொள்வாள்.தன் வேலையாளை மாடு முட்டிவிட்டதாக சொல்லி,மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி அவன் அப்பா சொல்ல,அவன் வேறு வழியின்றி அங்கே போக,இரும்புப் பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட தனம் கண்கள் வெறித்த நிலையில் அந்தப் பெட்டிக்குள்ளேயே இறந்துவிடுவாள்.அந்தக் காட்சிக்குப் பிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலோ,துணிவோ பலருக்கும் இருக்காது.

  இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் இப்பாடலில் இடையைத் தாண்டி நீண்டு வளர்ந்திருந்த கேசம்,குடும்ப பாங்கான அழகோடு,அழகான விழிகளோடு நம் வீட்டுப் பெண் மாதிரி மனதில் இடம்பிடித்த அந்த நாயகியும் ஒரு கார் விபத்தில் நிஜமாகவே இறந்துவிட்டவர்.அதேமாதிரி இந்தப் பாடலைப் பாடிய சொர்ணலதாவும் இவ்வுலகில் இல்லை.       எனது உதயகீதங்கள் தொடரை வாரந்தோறும் படித்துவிட்டு முதல் ஆளாக நிறைகுறைகளை அனுப்பிவைக்கும் என் மரியாதைக்குரிய ரசிகர் திரு.முருகன் சிவம்.சில வேளைகளில் நான் கண்திறக்கும் முன்னரே இவரது விமர்சனம் என்னை வந்து சேர்ந்திருக்கும்.அவருக்கும் அனிதா குமாரன் என்பவருக்கும் இன்று(01.12.2013) காலை 8:40க்குத் திருமணம்.அனிதாவும் உதயகீதங்கள் தொகுப்பின் ரசிகைதான்.அனிதா சில கதைகளையும் எழுதியுள்ளார்.இவ்வார உதயகீதத்தில் முருகனுக்குப் பிடித்த பாடலை எழுத இயன்றதில் பெருமகிழ்ச்சி.  அன்பிற்கினியவனோடு,கட்டுக்குள் நிற்காமல் திரிந்த காளை முருகனுக்கும் அவரைக் கட்டி அணைகட்டிவைத்த  அனிதாவுக்கும் இப்பாடலைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

   சொந்தம் பந்தம் உங்களைத் தாலாட்டும் தருணம்

   சொர்க்கம் உங்களைச் சீராட்ட வரனும்

புதுமணத் தம்பதிகள் இருவரும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.நீங்களும் பிரார்த்தியுங்கள் வாசகர்களே...

 

 

 

 

 

 

 

 

பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

         மன்னன் பேரும் என்னடி

        எனக்குச் சொல்லடி.... விசயம் என்னடி

        நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட

        கண்ணன் ஊரும் என்னடி

        எனக்குச் சொல்லடி....விசயம் என்னடி

        அன்பே ஓடிவா அன்பால் கூடவா

        ஓ பைங்கிளி...... நிதமும்

         என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

         மன்னன் பேரும் என்னடி

         எனக்குச் சொல்லடி ...விசயம் என்னடி

 

 

      சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்

      சொர்க்கம் சொர்க்கம் என்னைச் சீராட்ட வரனும்

      பொன்னி பொன்னி நதி நீராட வரனும்

      என்னை என்னை நிதம் நீ ஆள வரனும்

      பெண்மனசு காணாத இந்திர ஜாலத்தை

      அள்ளித் தர தானாக வந்துவிடு

      என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பானத்தை

      கண்டு கொஞ்சம் காப்பாற்றித் தந்துவிடு

      அன்பே ஓடி வா.....................

      அன்பால் கூட வா...................

      அன்பே ஓடி வா

       அன்பால் கூடவா

       ஓ பைங்கிளி..நிதமும்

       என்னைத் தொட்டு

ஆண் :நெஞ்சைத் தொட்டு......

        என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

         மங்கையின் பேரும் என்னடி

         எனக்குச் சொல்லடி....விசயம் என்னடி

         நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட

         மங்கையின் ஊரும் என்னடி

         எனக்குச் சொல்லடி.....விசயம் என்னடி

 

           ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

         மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே

         ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே

         மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே

        கண்ணன் கண்ணன் மொழி நீ பாடு குயிலே

        கட்டுக்குள்ளே நிக்காமல் திரிந்த காளையை

        கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே

        அக்கரையும் இக்கரையும் கலந்த வெள்ளத்தை

       கட்டி அணை கட்டிவைத்த பைங்கிளியே

        என்னில் நீயடி உன்னில் நானடி

        என்னில் நீயடி உன்னில் நானடி

        ஓ பைங்கிளி ...நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

மங்கையின் பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விசயம் என்னடி

என்னைத் தொட்டுப் பின்னிக் கொண்ட

மங்கையின் ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி.....விசயம் என்னடி

அன்பே ஓடி வா அன்பால் கூட வா

ஓ பைங்கிளி

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

மங்கையின் பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி....விசயம் என்னடி....


No comments:

Post a Comment