Sunday, December 8, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் :கீதம் 21:எங்கெங்கு நீ சென்றபோதும்(நினைக்கத் தெரிந்த மனமே 1987)


             

 
 
                காதல் என்பது அழகியல் நிறைந்ததோர் உணர்வு.நினைக்க நினைக்க சுகம் தரக்கூடியது.காதல் கொண்ட நெஞ்சங்கள் சரிவர உறங்குவதில்லை;உண்ணுவதில்லை.சதா கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கித் திளைக்கின்றன.தங்களை ஆதாமாக,ஏவாளாக நினைத்துக்கொண்டு சுகமான கற்பனையில் தாங்கள் மட்டுமே இந்த உலகில் வாழ்வதாய் இன்புற்று திளைக்கின்றன.எதைப் பார்த்தாலும் தங்களின் அன்புக்குரிய ஜீவன்களை எண்ணி மருகுகின்றன.எந்தப் பாடலைக் கேட்டாலும் தங்களுக்காகவே எழுதப்பட்டதைப் போன்ற மாயையில் சிக்கித் திளைக்கின்றன.எவ்வளவு பேசினாலும் ஏக்கம் தீராமலேயே இருப்பதுபோல் உணர்கின்றன.எந்த நேரமும் தங்கள் இணையோடு பேசிக்கொண்டே இருக்கவேண்டும்;அவர்களின் அருகிலேயே இருக்கவேண்டும் என்று ஏக்கத்தால் தவிக்கின்றன.

   இத்தகைய இன்பத்தைத் தரவல்ல காதல் எல்லாருக்கும் வெற்றியாய் அமைந்துவிடுவதில்லை.காதலில் தோற்று இணைசேர முடியாமல்,தவித்து துன்புற்றவர்களும் உண்டு.மரணத்தைக் காட்டிலும் கொடிய வேதனையானது காதல் தோல்வி தரும் வலி.

  காதலிக்கும்போது எந்தெந்த விசயங்கள் இன்பத்தைத் தந்தனவோ அவையே பின்னர் துன்பத்தையும் தருகின்றன.பாடல்கள் முதற்கொண்டு ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றிய இடங்கள்,பார்த்த படங்கள்,கண்ட கனவுகள் எல்லாமே தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.அந்த வேதனையைத் தாங்கி கொள்ளும் வலு இல்லாமல் இந்த உலகத்தைவிட்டே மறைந்து போன ஜீவன்களும் உண்டு.

  காதல் தரும் இன்பம்,காதல் தரும் துன்பம் இரண்டையும் அற்புதமாக காட்டிய ஒரு முக்கோண காதல் கதைதான் நினைக்கத் தெரிந்த மனமே’. இத்திரைப்படம் 1987-ஆம் ஆண்டு  சுரேஸின் இயக்கத்தில் மோகன்,சந்திரசேகர்,ரூபிணி நடிப்பில் வெளிவந்தது.

  இளையராஜாவின் இசையில் காமக்கோடியனின் வரிகளில் கண்ணுக்கும்,நெஞ்சுக்கும் மோதல் எங்கெங்கு நீ சென்றபோதும்’,’இளமை ரதத்தில் இனிக்கும் சுகத்தில்’,’சின்ன சின்ன முத்து நீரிலே போன்ற அனைத்துப் பாடல்களூமே கேட்க இனிமையானவை என்றபோதிலும் எங்கெங்கு நீ சென்றபோதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் என்ற பாடல் இந்தப் படத்தில் வரும் காதல் ஜோடிகளின் கதையோடு நாம் ஒன்றிணைந்து பயணிக்க துணை வருகிறது.வழக்கமான காதல் படமாக இருந்தாலும் கதையமைப்பு சற்று வித்தியாசமானது;சுவாரசியானது.

    தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளன் கணேஷ்(சந்திரசேகர்),வித்யா(ரூபிணி) என்ற பெண்ணை மணமுடித்து தன் ஊருக்குத் திரும்புவதற்காக இரயிலில் ஏறுகிறான்.தம்பதியர் இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர,தன் இருக்கையில் கணேஷ் அமர்ந்துவிட்டதாக சொல்லி அவர்களின் பெட்டிக்குள் ஏறுகிறான் பாபு(மோகன்).பாபுவைப் பார்த்ததும் வித்யா மிரள்கிறாள் காரணம் அவன் அவளுடைய காதலன்.

  தனக்குத் துரோகம் செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொண்ட வித்யாவை குரோதப் பார்வை பார்த்துக்கொண்டே கணேஷிடம் பேச்சுக்கொடுக்கிறான் பாபு.எழுத்தாளன் என்பதால் அவனது காதல் கதையைச் சொல்லுமாறு கணேஷ் ஆர்வமாய் கேட்க,அவன் தன் காதல் தொடங்கிய கதையை ஆரம்பிக்கிறான்.

   பாபுவுக்கு புகைப்படத்துறையில் ஆர்வம் அதிகம்.ஒரு புகைப்பட நிறுவனத்தில் வேலையும் கிடைத்துவிட,ஆர்வமாய் அந்தத் தொழிலில் ஈடுபடுகிறான்.ஒருநாள் இயற்கைக் காட்சியைப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது அங்கு தன் தோழிகளுடன் சந்தோசமாக ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்த வித்யாவைத் திருட்டுத்தனமாக புகைப்படம் எடுக்கிறான்.கண்டதும் காதல் என்பதுமாதிரி அவளிடத்தில் மனதைப் பறிகொடுக்கும் பாபுவை முதல் பார்வையில் வித்யாவுக்குப் பிடிக்காமல் போகிறது.

    ஒருதடவை தன் நிருபர் நண்பனுக்குத் துணையாக கல்லூரிப் பெண்கள் போராட்டம் நடத்துவதைப் படம் பிடிக்கப்போகிறான்.பெண்களை ஆபாசப்பொருளாக பார்க்காதீர்கள் என போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவள் வித்யாதான் என்பதை அறிபவன் அருகில் சென்று ஸ்மைல் ப்ளீஸ் என சொல்லி படம் பிடிக்கிறான்.அவளது கொள்கையும்,நற்குணங்களும் அவனுக்குப் பிடித்துப்போக, அவனுக்கு அவள் மீதான காதல் வலுக்கிறது இன்னொரு தடவை அவளைப் பார்க்கும்போது காதலர்களுக்குத் திருட்டுத்தனமாக திருமணம் செய்துவைத்து,அவளுடைய பெற்றோரிடம் காதலிப்பவர்களைப் பிரிப்பது பாவம் என எடுத்துச் சொல்லி ஒரு பெண் யாரைக் காதலிக்கிறாளோ அவனைதான் திருமணம் செய்யவேண்டும் என அவள் தத்துவமும் பேச,அவனுக்கு இன்னும் ஆசை அதிகரிக்கிறது.அவளிடம் தன் மனதிலிருப்பதைச் சொல்வதற்குச் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவளது கவர்ச்சியான புகைப்படம் ஒன்று ஒரு மாத இதழின் அட்டைப்படமாக பிரசுரமாகியிருப்பதாக அவளுடைய கல்லூரி முதல்வர் அவளை மிகவும் மோசமாக திட்டிவிடுகிறார்.அழுதுக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகரும் வித்யா தனக்குத் தெரியாமல் அந்தப் புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என யோசிக்கையில் பாபு அவளிடம் தன் கடையின் பெயரைச் சொன்னது நினைவு வர,கோபத்தோடு அங்கே போகிறாள்;பாபுவை பளார் என அறைந்தும் விடுகிறாள்.
அதன்பிறகு தன் தோழியின் மூலம் அந்தப் படத்தை பாபுவுக்குத் தெரியாமல் அவனது முதலாளிதான் எடுத்துக்கொடுத்தார் என்ற உண்மை தெரியவர,அவளுக்கு பாபுவின்மீது பரிதாபம் ஏற்படுகிறது.அவனைத் தேடிப்போகிறாள்.

   அங்கே அவன் தன் முதலாளியின் யோசனையின்பேரில் தனக்கு ஊமை அப்பா,கண்தெரியாத அம்மா,கால் ஊனமுற்ற தங்கை என ஒரு நாடகம் ஆடுகிறான்.அவளிடம் அடிவாங்கிய அவமானத்தில் வேலையைவிட்டு நின்றுவிட்டதாகவும்,குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லாமல் தூக்கில் தொங்கப்போவதாகவும் நாடகமாடுகிறான்.அவள் அவனிடம் கெஞ்சுகிறாள்.தனக்குப் புகைப்படம் கற்றுத்தரும்படியும்,அதற்கு தான் சம்பளம் கொடுத்துவிடுவதாகவும் கூறுகிறாள்.

   அவன் அவளுக்குப் புகைப்படம் எடுக்க கற்றுத் தருகிறான்.கடைசி நாளன்று அவள் பணத்தை எடுத்து நீட்ட,தான் அவளிடமிருந்து காதலை எதிர்பார்ப்பதாக அவன் சொல்ல,அவள் அதற்குப் பதில் சொல்லாமல் அவனிடம் சொலிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.வீட்டில் அவன் தன்னிடம் காதலைச் சொன்ன தருணத்தை நினைத்து இரசித்தபடி,அவனுக்குக் கடிதம் எழுதுகிறாள்.மறுநாள் மிகுந்த சந்தோசத்தோடு அவனைத் தேடிப்போக,வழியில் அவனுடைய தாய்,தந்தையாகவும்,தங்கையாகவும் நடித்தவர்களைப் பார்த்துவிடுகிறாள்.எல்லாமே வேசம் என தெரிந்ததும் அவனைத் திட்டிவிட்டு அந்தக் கடிதத்தைக் கீழே எறிந்துவிட்டுப் புறப்படுகிறாள்.

  அதன்பிறகு அவன் எப்படியெப்படியோ சமாதானப்படுத்தியும் அவள் சமாதானமடைய மறுக்கிறாள்.

  ஒருதடவை மருத்துவமனைக்கு ஒரு பிரமுகரைப் படமெடுக்க போனபோது வித்யாவைப் பார்க்கிறான்.பிறந்தநாளின்போது இரத்ததானம் செய்தால் நல்லது என வித்யா ரத்த தானம் செய்ய,அவளது தோழியும் ரத்ததானம் செய்கிறாள்;அடுத்தவர்களின் பிறந்தநாளன்று எத்தனை தடவை ரத்ததானம் செய்கிறோமோ அத்தனை வருடம் அவர்களின் ஆயுள் நீளும் என அந்தத் தோழி சொன்னதைக் கேட்ட பாபு,வித்யாவுக்காக நூறு தடவை இரத்ததானம் செய்கிறான்.அவளைச் சந்தித்து,பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்பவன் திராணியற்று அவள் மேலேயே சாய்கிறான்.அவன் அன்பைக் கண்டு மனம் நெகிழும் வித்யா அவனைத் தன் மடியில் கிடத்தி,அவனிடம் தன் காதலைச் சொல்கிறாள்.அப்போது இந்தப் பாடல் சுகமாய் ஒலிக்கிறது.

     அதன்பின்னர் தேர்வு முடிந்து ஊருக்குப் போகும் அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

    பாபு தன் கதையை நிறுத்தியதும்,”உங்க கதையை இப்படி பாதியிலயே நிறுத்திட்டீங்களே,” என கணேஷ் கேட்க,”என் காதலே பாதியில நின்னுப்போனதுதானே?” என்கிறான் விரக்தியாய். கணேஷ் தண்ணீர் வாங்க வெளியே போனதும் தனித்திருக்கும் வித்யாவிடம் தான் ரயிலில் இருந்து இறங்கும்போது அவளுடன் தான் இறங்கவேண்டும் என்ற தீர்மானத்தில் இருப்பதாக சொல்ல,அவள் செய்வதறியாது தவிக்கிறாள்.

    கணேஷ் வந்ததும் மீண்டும் பயணம் தொடர்கிறது.தான் தன் மனைவி வித்யாவைத் திருமணத்திற்குப் பின் காதலிக்க ஆரம்பித்திருப்பதாக கணேஷ் சொல்ல,வித்யா தர்மசங்கட நிலையில் இருக்கிறாள்.அவர்கள் எதார்த்தமாக பேசிக்கொள்ளும் வார்த்தைகள் கூட அவளைத் திடுக்கிட வைக்கின்றன.அவனுடைய செய்கைகள் அவளுக்கு அவனுடனான காதல் தருணங்களை நினைவுப்படுத்துகின்றன.பாபு வேறு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அவளைக் குத்திக்காட்ட,அவள் உடைந்து போகிறாள்.கழிப்பறைக்குச் சென்று அழுதுவிட்டு வருகிறாள்.

      இன்னொரு நிறுத்தத்தில் கணேஷின் ரசிகைகள் அவன் கொஞ்சநேரம் தங்களோடு இருக்கவேண்டும் என அழைத்துக்கொண்டு போக,தனியாக இருக்கும் வித்யா பாபுவிடம் நடந்ததைக் கூறுகிறாள்.

    அவளுடைய அப்பா சிகரெட் நெருப்பில் அவள் கையில் பச்சைக குத்தியிருந்த பாபுவின் பெயரைப் பொசுக்கி அழித்ததைச் சொல்லி அழுகிறாள்.அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மணமுடிக்க விருப்பமின்றி வீட்டைவிட்டு ஓடிவர முயற்சித்தபோது அவளுடைய அப்பா அவள் அம்மாவின் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி,எரித்துவிடுவதாகவும்,பாபுவையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்ட,வேறு வழியின்றி அவள் திருமணத்திற்குச் சம்மதிக்கவேண்டிய சூழலையும் விளக்குகிறாள்.அவள் தனக்குத் துரோகம் செய்துவிடவில்லை என்பதை அறிந்த பாபு அவளிடம் கணேஷை விட்டுவிட்டு ஓடிப்போய்விடலாம் என்கிறான்.

   அதேநேரத்தில் தன் ரசிகைகளிடம் தான் அடுத்து எழுதப்போகும் கதை என இவர்களின் கதையையே சொல்லும் கணேஷ்,அவளின் கணவனுக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்று சொல்கிறான்.அந்தக் கதைக்கு எப்படி முடிவு கொடுப்பீர்கள் என அவர்கள் கேட்க,புத்தகத்தில் வந்த பிறகு தெரிந்து கொள்ளுங்கள் என்கிறான்.

   மீண்டும் அடுத்த நிறுத்தத்தில் பாபுவும்,வித்யாவும் இருக்கும் பெட்டிக்குள் ஏறும் கணேஷ் தனக்கு விசயம் தெரிந்துவிட்டதைக் காட்டிக்கொள்ளாமல் இருவரையும் நோட்டமிடுகிறான்.பாபுவிடம் அவன் காதலித்தபோது பாடிய பாடலை மீண்டும் பாட சொல்கிறான்.அவன் மிகுந்த வேதனையோடு அவளைப் பார்த்தபடி பாட,அந்தப் பாடல் சோகமாய் ஒலிக்கிறது.படத்தில் சோகமான பாடல் முழுமையாக ஒலிக்காது.அவன் பாடப்பாட தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ளமுடியாமல் தவிக்கும் வித்யா அவன் முதல் சரணத்தை முடிக்கும் முன்னரே கதவைத் திறந்து வெளியே குதிக்க ஓடுவாள்.பாடல் அதோடு நின்றுவிடும்.கடைசியில் பாபு இறந்தபிறகு,”எங்கெங்கு நீ சென்றபோதும்,என் நெஞ்சமே உன்னை வாழ்த்தும் என்ற வரிகளோடு படம் நிறைவடையும்.

    
படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் அந்தக் காதல் ஜோடியின் இதயகீதமாக ஒலிக்கும் இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் சுகமாக ஒலிக்கும்போதும் சரி,சோகமாக ஒலிக்கும்போதும் சரி அதே வரிகள்தாம்.சுகமாக ஒலிக்கும் பாடலை ஜேசுதாஸ் ஐயாவோடு சித்ராவும் சேர்ந்து பாடுவார்.சோகமாக ஒலிக்கும் பாடலை ஜேசுதாஸ் தனித்துப் பாடியிருப்பார்.முடியும்போது லாலாலலா என்ற ஹம்மிங் மட்டும் சித்ராவின் குரலில் ஒலிக்கும்.சோகமாய் ஒலிக்கும்போது ஜேசுதாஸ் ஐயாவின் குரல் அழுதுக்கொண்டே பாடுவது போல் இருக்கும்.அந்தக் குரலில்தான் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்கள்.

   இந்தப் படத்தில் பெயர் ஓடும்போதும் இந்தப் பாடலின் மெட்டு வெறும் இசையாக ஒலிக்கும்.அதேமாதிரி மோகன்,ரூபிணி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் இடையிடையே இந்தப் பாடலின் இசையே ஒலித்துக்கொண்டே இருக்கும்.அதனாலோ என்னவோ நமக்கு இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

   இந்தப் பாடல் காதலர்களின் நிலையை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தும் வண்ணம் புனையப்பட்டுள்ளது.காதலின் பார்வை அம்பு போல் கூர்மையான நெஞ்சில் பாய்ந்து ஏற்படுத்தும் சுகமான காயத்திற்கும் அதே பார்வைதான் மருந்தாகிறது எனவும்,இரு நெஞ்சும் துன்பப்படுதலும் காதலில் இன்பம்தான் என்பதையும் அழகான வரிகளில் புனைந்திருக்கிறார் பாடலாசிரியர்.மாலையில் அவர்கள் இணைந்திருக்கும் நேரம் மாறவே வேண்டாம் என் வஞ்சி அவள் பாட,இயற்கையில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் பரவாயில்லை,அவளோடு சேர்ந்திருக்கும் அந்த நேரம் மட்டும் நிலையானதாக இருக்கட்டும் என அவன் பாடுவது சுகமான கற்பனை.இந்தப் பாடல் காட்சியில் இருவரும் மிக நெருக்கமாக இருப்பதாக காட்டினாலும் நம்மால் முகம் சுளிக்கமல்,சங்கடப்படாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது.காரணம் அவனைத் தன் மார்பிலும்,மடியிலும் அவள் சாய்த்துக்கொள்ளும் காட்சியில் காமம் தெரியவில்லை;தாய்மை கலந்த பரிசுத்தமான காதல்தான் தெரிகிறது.

    இப்பாடலை அன்பிற்கினியவனோடு காதலில் வெற்றியடைந்து திருமண பந்தத்தில் இணைந்தவர்களுக்கும் மட்டுமின்றி காதலில் தோல்வியுற்ற நெஞ்சங்களுக்கும் கூட சமர்ப்பணம் செய்கிறேன்.காலங்கள் யாவும் நம்மோடு பாட,பூங்காற்று தாலாட்ட,நாமும் இந்த ஆனந்த கீதத்தைப் பாடிப்பார்க்கலாம் வாருங்கள்.

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

        என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

        காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் :பூங்காற்றும் தாலாட்டும் அன்பே அன்பே

ஆண் :எங்கெங்கு நீ சென்ற போதும்

       என் நெஞ்சமே உன்னைத் தேடும்

 

ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே

        நெஞ்சினிலே பாய்வதும் ஏன்

        அம்புகள் மீண்டும் பாய்ந்திடும்போது

         காயங்களும் ஆறியதேன்

பெண்: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்

          பிரிந்தது ஏனோ உன் உறவு

         நெருங்கிடும்போதும் நீங்கிடும்போதும்

         மயங்குவதேனோ என் மனது

ஆண் :இரு நெஞ்சின் துன்பம் .....இது காதல்தான்

       அதுபோல இன்பம் எது கண்மணி

       பூங்காற்றும் தாலாட்டும் அன்பே அன்பே

 பெண்: எங்கெங்கு நீ சென்றபோதும்

        என் நெஞ்சமே உன்னைத் தேடும்

 ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

        காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண்: பூங்காற்றும் தாலாட்டும் அன்பே அன்பே

ஆண்: எங்கெங்கு நீ சென்றபோதும்

       என் நெஞ்சமே உன்னைத் தேடும்

 

பெண்: மாலை நம் நேரம் மாறிடவேண்டாம்

       மாங்குயிலே மாங்குயிலே

       காலங்கள் கூட மாறிடவேண்டாம்

       கண்மணியே கண்மணியே

ஆண்: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்

       சந்திரன் அங்கே வந்திடட்டும்

       மேகங்கள் வானத்தில் நிலைபெறட்டும்

       கடலினில் கூட அலை நிற்கட்டும்

பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே

        என்றென்றும் இங்கு நிலையாகட்டும்

        பூங்காற்றும் தாலாட்டும் அன்பே அன்பே

        எங்கெங்கு நீ சென்ற போதும்

        என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

       காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

ஆண்: எங்கெங்கு நீ சென்றபோதும்

      என் நெஞ்சமே உன்னைத் தேடும்

&பெ: லாலாலலாலலா லாலாலாலாலலா

 

  

No comments:

Post a Comment