Thursday, November 14, 2013

லவ்’ திரைப்படமும் என் சிறுவயது சல்மான்கானும்


லவ் திரைப்படமும் என் சிறுவயது சல்மான்கானும்

 


     ஓர் இரவில் அவள் அவனோடு தனித்து நின்றிருப்பாள் ஓரிடத்தில்.குறும்புத்தனமும்,குதூகலமும்,குழந்தைத்தனமும் நிறைந்த அவளின் பெயர் மேகி. அவனோ சாந்தமானவன்.சிறுவயதில் நடந்து முடிந்த ஒரு சோகம் அவன் முகத்தில் எப்போதும் உறைந்திருக்கும்.ஏதோ பேச எண்ணிய வேளையில் அவனுடைய நண்பன் ஒருவன் அழைக்க,அவளை அங்கேயே காத்திருக்க வைத்துவிட்டு தன் நண்பனுடன் செல்வான்.போன வேலை முடிய தாமதமாகவே அவன் அவளை மறந்தே போய்விடுவான்.மழை வேறு பெய்துகொண்டிருக்கும்.பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சாப்பிட போவான்.கடைக்காரர் அவனிடம் உணவு எல்லாம் தீர்ந்துவிட்டதாகவும் மேகி மட்டும் இருப்பதாகவும் சொல்வார்.மேகி என்ற வார்த்தையைக் கேட்டதும்தான் அவனுக்கு அந்தப் பெண்ணின் ஞாபகம் வரும்.பதறிப் போய் அவளைத் தேடி அதே இடத்திற்குப் போவான்.மேகி அந்த இடத்திலேயே மழையில் நனைந்து,குளிரில் நடுங்கியபடி காத்திருப்பாள் அவனுக்காக.எனக்கு மிக மிக இரசனையாக தோன்றிய அந்தக் காட்சி இடம்பெற்றது லவ் என்ற ஓர் ஹிந்தி திரைப்படத்தில்.

 

      பொதுவாகவே திரைப்படம் பார்ப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் எல்லாப் படங்களையும் நான் இரசித்துப் பார்த்துவிடமாட்டேன்.பாடல்கள் என்னை ஈர்த்தால்,படத்தின் ஆரம்பமோ,நடிகர்களோ கவர்ந்தால் மிகவும் இரசித்துப் பார்ப்பேன்.படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியோடும் என்னைப் பொருத்திக்கொண்டு மிக இரசனையோடு பார்ப்பேன்.தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி ஹிந்திப் படங்களையும் நான் விரும்பிப் பார்ப்பேன்.அப்படிப் பார்த்த படங்களில் என்னை வெகுவாய்க் கவர்ந்த ஒரு படம்தான் சல்மான்கான்,ரேவதி நடிப்பில்,சுரேஸ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த லவ் என்ற படம்.

     நடிகர் சல்மான்கான் பற்றி பத்திரிக்கைகளில் படித்திருந்தபோதும் திரையில் நான் முதன்முதலில் பார்த்தது அப்போதுதான்.வழக்கமான காதல் படம்தான்.ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனத்தில் ஆழப்பதிந்து போனது.

    படத்தில் ரேவதிக்கு துருதுரு பாத்திரம்.எப்போதும் ஏதாவது சேட்டை செய்து கொண்டே இருப்பார்.வாய் ஓயாது பேசுவது,அடிக்கடி மாத்திரையை விரும்பி சாப்பிடுவது என்று குறும்புக்காரியாக இருப்பார்.சல்மான்கானோ அப்படியே அவருக்கு நேரெதிர் பாத்திரம்.அவருடைய சிறுவயதில் நடந்த துயரமும்,அம்மாவின் மரணமும் அவரை சராசரி ஆண்கள் மாதிரி கலகலப்பாக இல்லாமல் அமைதியானவனாக மாற்றியிருக்கும்.ஒரு தடவை கடைக்கு பேனா வாங்க போகும் ரேவதி அது சிவப்புப் பேனாவா நீலப்பேனாவா என கண்டுபிடிப்பதற்காக முதுகு காட்டியபடி வெள்ளைநிற சட்டையில் நின்றிருக்கும் சல்மான் கானை நெருங்க அவர் வெடுக்கென திரும்ப ரேவதியின் குறும்பு கவர்ந்தாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருப்பார்.இப்படியே அறிமுகம் ஆனபின் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் ரேவதிக்கு சல்மான்கானை அதிகம் பிடித்துப்போய் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்.(நானும்தான்)சல்மான்கானுக்கு ரேவதியைப் பிடித்திருந்தாலும் அந்தச் சிறு வயது காயம் அவரைத் தடுக்கவே,ஆசைகளை மனத்தில் புதைத்துக்கொண்டு வெளியே காட்டாமல் இருப்பார்.

  அந்தச் சமயத்தில்தான் நான் மேலே குறிப்பிட்ட அந்த மழைக்காட்சி வரும்.தனக்காக மழையில் நனைந்து நின்றிருந்த ரேவதியின்பால் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு அவரை முத்தமிட நெருங்கும் வேளையில்,ரேவதி பயந்து போய் விலகிவிடுவார்.சல்மான்கான் அந்தக் கட்டத்தில்தான் ரேவதி மீதான காதலை உணர்வார்.

  தன் காதலை இதற்கு மேல் மறைக்கமுடியாது என உணரும் சல்மான்கான் இரவில் ரேவதியிடம் தொலைபேசி மூலம் தனது காதலைத் தெரிவிப்பார்.ரேவதிக்கு அந்த நொடி மிக மகிழ்ச்சியானதாய்த் தோன்றும்.சல்மான்கானைக் காத்திருக்க வைத்துவிட்டு தன் வீட்டிலுள்ள எல்லா விளக்குகளையும் எரியவிட்டுவிட்டு பிறகு மீண்டும் சல்மான்கானிடம் பேசுவார்.அந்தக் காட்சியும் என்னை மிக மிக கவர்ந்த காட்சி.அதன்பிறகு அவர்களின் காதல் தெரியவந்ததும்,ரேவதியின் கண்டிப்பான அம்மா அவர்களின் காதலை எதிர்க்க,காதலர்கள் போராடி கடைசியில் இணைவார்கள்.அந்தக் கடைசிக்காட்சியை நான் அழுதுக்கொண்டே பார்த்தேன்.

   ரேவதி கண்ணாடி சன்னலின் வழியே வெளியே குதிக்க முயலும்போது,உடைந்த கண்ணாடி அவரின் வயிற்றில் குத்தி மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்.அவருக்கு ஏற்கனவே கண்ட கண்ட மாத்திரைகளை விருப்பத்திற்குச் சாப்பிடும் பழக்கம் இருந்ததால் உயிர் பிழைப்பாரோ மாட்டாரோ என்வது சந்தேகமாக் இருக்கும்.சல்மான்கானுக்காக நானும் சேர்ந்து அழ,நல்லவேளையாக ரேவதி கண்விழித்துவிடுவார்.

    அந்தப் படத்தில் நடித்த சல்மான்கான் என்னை அதிகமாய்க் கவர்ந்தார்.அவரது உயரம்,குழந்தைத்தனமான முகம்,பெரிய பெரிய கண்கள்,மனதை மயக்கும் மெல்லிய சிரிப்பு என்று என்னைப் பாடாய்ப்படுத்திவிட்டார்.அவர் மீது காதல் பிறந்துவிட்டது எனக்கு.சிறு பெண்தானே?என்ன தெரியும்?

   அன்று முதல் என் கனவில் சல்மான்கான் வந்து கொண்டே இருந்தார்.லவ் படத்தில் பார்த்தமாதிரி அமைதியான குணத்தில் என்னை மிரட்டினார்.எப்படியாவது இந்தியாவுக்குப் போய் அவரை நேரில் பார்த்துவிடவேண்டும் என தோன்றியது.அந்த நினைவு என்னுள் பதிந்து போனதால் அன்றைய கனவில் நான் இந்தியாவில் சல்மான்கானோடு பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்தேன்.கண்விழித்துப் பர்த்து கனவுதான் என்றதும் அப்படி அழுதேன்.அந்தக் கனவுக்குப் பிறகு அவர் மீது இன்னும் பைத்தியமானேன்.ஏன் நான் இந்தியாவில் பிறக்கவில்லை என வருந்தினேன்.சல்மான்கானை வேறு நடிகைகளோடு படத்தில் பார்த்தால் தாங்கி கொள்ள முடியாமல் அழுதேன்.ஒருநாள் என் தோழி ஒருத்தி லவ் படக்காட்சி அடங்கிய சிறு புகைப்படத்தை எனக்குக் கொடுத்தாள்.வீடியோ கடையில் வேலை செய்த அவளுடைய மாமா மூலம் கிடைத்ததாக சொன்னாள்.அந்தக் கணம் அந்தத்தோழி எனக்குக் கடவுளாக தெரிந்தாள்.அந்தப் படத்தை யாரும் களவாடி விடுவார்களோ என்ற பயத்தில் பத்திரமாய் புகைப்பட ஆல்பத்தில் என் புகைப்படத்துக்குப் பின்னால் மறைத்து வைத்தேன்.தினமும் எடுத்துப் பார்த்து இரசித்தேன்.ஏக்கம் வரும்போதெல்லாம் அந்தப் படத்தைப் பார்த்தாலே அழுகை வரும்.சல்மான்கான் மீது இருந்த ஆசையால் குச் குச் ஹோத்தா ஹே படத்தில் எல்லாரும் ஷாருக்கான் கஜோலோடு இணைந்ததில் மகிழ,எனக்கு மட்டும் என் சல்மான்கானை ஏமாற்றிவிட்டார்களே என கோபம் வந்தது.

   நாளாக ஆக,சல்மான்கானின் மேல் இருந்த ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து,நிஜத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.அவ்வேளையில்தான் சல்மான்கான் மானை வேட்டையாடிய சம்பவம்,கார் ஏத்தி அப்பாவி மக்களைக் கொன்ற சம்பவம் என பரபரப்பாக வந்து கொண்டிருந்தது.சில சமயங்களில் நாம் மனிதர்களை வெளித்தோற்றம் பார்த்து கணிக்கும் கணிப்பு தவறாகித்தான் போகிறதல்லவா?நாம் போற்றும் மனிதரின் உண்மையான குணம் வெளிப்படும்போது நமக்கு அவர்களின் மீது கோபம் வருகிறது.அல்லது அவர்களின் மேல் இருந்த நேசம் குறைந்து போகிறது.ஆனாலும் நான் முன்பு அவரிடத்தில் இரசித்த விசயங்களை இப்போது மறுக்கக்கூடாது அல்லவா?அவரது உண்மையான குணம் என் சுபாவத்தோடு ஒத்துவரவில்லை என்பதற்காக முன்பு நான் அவரிடத்தில் இரசித்த விசயங்களையும்,நடிப்பாற்றல் திறமையையும் (அவை உண்மையானதாக இருக்கும் பட்சத்தில்) இப்போது மட்டம் தட்டினால் அது நியாயமில்லாததாகிவிடும் அல்லவா?அவ்வகையில் இன்றுவரையில் அந்தப் படத்தின் காட்சிகளும் என் சிறுவயது சல்மான்கானின் நினைவுகளும் நினைத்தால் இனிக்கவே செய்கின்றன.

 

உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

No comments:

Post a Comment