Sunday, December 15, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 22 : பூவே பூச்சூடவா.......... ( பூவே பூச்சூடவா - 1985)


  



         ஊரே அடங்கியிருக்கும் அந்த இரவில் ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிகிறது.அங்கே ஒரு வயதான அம்மாள் தன்னந்தனியே பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கிறாள்.அவள் முகத்தில் ஓர் அலட்சியம் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏதோ சோகமும்,விரக்தியும் புதைந்திருக்கிறது.அவளைத் தவிர அந்த வீட்டில் யாருமேயில்லை என்றபோதிலும் அவள் வீட்டு வாசலில் அழைப்புமணி பொருத்தப்பட்டிருக்கிறது.அடிக்கடி அந்த அழைப்பு மணியை ஒலிக்க செய்து அவளை வெறுப்பேற்றுகிறது அண்டை வீட்டு சிறுவர் பட்டாளம்.தொல்லையாக இருந்தாலும் அவள் அந்த அழைப்புமணியைக் கழற்றாமலேயே வைத்திருக்கிறாள்.அவள் யாருக்காக அந்த அழைப்புமணியை வைத்திருக்கிறாள்.அலட்சியமான முகத்தின் பின்னே மறைந்து கிடக்கும் சோகமும் எதிர்பார்ப்பும் எதனைப் பற்றியது?


   இந்தக் கேள்விக்கான விடையை பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

   1985-ஆம் ஆண்டு பத்மினி,நதியா,ஜெய்சங்கர்,எஸ்,வி,சேகர் நடிப்பில்,பாசில் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தத் திரைப்படம் பாட்டிக்கும்,பேத்திக்கும் இடையிலான உணர்ச்சிப்போராட்டம் நிறைந்த உறவில் அழகியலும்,சோகமும் கலந்து புனையப்பட்டுள்ளது.பெரும்பாலும் தாய்,மகள் பற்றிய உறவுகளையே கணிசமாக பறைசாற்றி வந்த தமிழ்த்திரையுலகில் அபூர்வமாய் பாட்டியின் குணாதிசயங்களை மிக எதார்த்தமாக,உணர்ச்சிப்பூர்வமாக,மனம் நெகிழும் வகையில் உயிரோட்டமாக எடுத்துரைத்த படம் பூவே பூச்சூடவா’.

     ஆழ்மனதில் ஆத்மராகம் மீட்டும் இப்படத்திற்கு அற்புதமாக அமைந்துவிட்ட பாடல்களும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளன.சின்னக்குயில் பாடும் பாட்டு’,’பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா’,’பூவே பூச்சூடவா ஆகிய பாடல்களை இன்றைய குழந்தைகளால் கூட ரசிக்க முடிகிறது.

   இப்படத்தில் காட்டப்பட்ட பாட்டி மிகைத்தன்மை இல்லாத எதார்த்தமான குணம் கொண்டவர்.பொங்கி வரும் விம்மலை உதட்டில் தேக்கிவைத்து கட்டுப்படுத்தும் அந்தக் காட்சியே போதும்.அந்தப் பாத்திரத்திற்கு அற்புதமாய் பொருந்தியவர் பத்மினியம்மாள்.அதேமாதிரி நதியாவும் சொல்லத் தேவையில்லை.அவரிடத்தில் அந்தத் துருதுருப்பும்,பெரிய பொட்டும்,விதவிதமான தோடுகளும் என்னை ஈர்த்தவை.

    இனி படத்தில் பூவே பூச்சூடவா பாடல் ஒலிக்கும் சூழலைக் கொஞ்சம் மீட்டுணர்ந்து வரலாமா?

   17 வருடங்கள் கழித்து பூங்காவனத்தம்மாவைப்(பத்மினி) பார்க்க வருகிறார் பேத்தி சுந்தரி (நதியா).வாசலில் அழைப்புமணி ஒலிப்பதைக் கேட்டு வழக்கம்போல் அண்டைவீட்டுக் குழந்தைகளின் வேலை என நினைத்துக்கொண்டு,”வந்துடுச்சிங்க வானரங்க!கையை உடைச்சி அடுப்புல வெச்சிடறேன் என பற்களைக் கடித்தபடி குடையை ஓங்கியபடி வரும் பூங்காவனத்தம்மா தன் சாயலில் அழகான இளம்பெண் ஒருத்தி நிற்பதைக் கண்டு வியக்க,அவளே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள்; வீட்டுக்குள் நுழைகிறாள்.

   சுந்தரியைப் பார்த்து முறைத்துவிட்டு கதவைச் சாத்திக்கொள்கிறாள் பாட்டியம்மா.அவளது விரல் கதவிடுக்கில் சிக்கிக்கொள்ள மனம் கேளாமல் கதவைத் திறக்கிறாள்.

  உங்க உறவே வேண்டாம்னு முழுக்கு போட்டு 17 வருஷம் ஆச்சே,இப்போ எதுக்காக வந்திருக்கே?” என வெறுப்பைக் காட்டுகிறாள்.அவளுக்கு உணவு கொடுக்கவும் மறுக்கிறாள்.ஆனால் பேத்தி மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து கொண்டு வரும்போது ஆசையாய் பார்க்கிறாள்.வீட்டிலிருக்கும் ஊஞ்சலை ஓடிவந்து தாண்டுவதைப் பார்த்து வியக்கிறாள்.தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த மூன்று சுட்டிப்பையன்களையும் பிடித்து வந்து,திமிராக இருந்த ஒருவனின் வாயில் கெட்டுப்போன ரொட்டியைத் திணித்து,”மூக்கை அறுக்கவா?முழியைத் தோண்டவா? என  மிரட்டுவதை பிரமிப்பாய் பார்க்கிறாள்.ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வீம்பாக இருக்கிறாள்.


   பேத்தியோ குறும்புகளின் ராணியாய் இருக்கிறாள்.சின்னஞ்சிறு குழந்தைகளோடு கும்மாளமாய் ஊர் சுற்றிவிட்டு இரவில் திரும்புகிறாள்.முகத்தில் பேய் முகமூடியை மாட்டிக்கொண்டு எதிர்வீட்டு வாலிபனைப் பயமுறுத்துகிறாள்.அவளது குறும்புகளில் மனம் மகிழ்ந்தாலும் கோபமான முகத்துடன் சுந்தரியை நெருங்கி,”உனக்கு உன் அப்பான்னா ரொம்ப பிரியமா? என கேட்கிறாள்.அவள், ஆமாம் என,அவளை ஏசி வீட்டைவிட்டு துரத்திவிடுகிறாள்.

  சுந்தரியும் முறைத்துக்கொண்டு வந்து தனியே இருட்டில் அமர்ந்திருக்க,மனம் கேளாமல் அவளை வீட்டுக்கு அழைக்கிறாள் பாட்டி.நெடுங்காலம் தனித்தே வாழ்ந்துவிட்டதாலும்,விரக்தியில் இருப்பதாலும் யாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி அவளிடம் மன்றாடி அவளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.

     அவளிடம் தன் சோகத்தைச் சொல்கிறாள்.தன் ஒரே மகள் அலமேலுவை மணமுடித்துக் கொடுத்தபிறகு அவளைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்து தனிக்குடித்தனம் போன அவளது தந்தையின்மீது உள்ள கோபத்தையும்,கர்ப்பமாக இருந்த சமயத்தில் மீண்டும் மகள் தன்னிடம் வந்தபோது அடைந்த ஆனந்தத்தையும்,ஒரு தீபாவளி சமயத்தில் பிறந்த பேத்தியைக் கையில் ஏந்தி இன்பமாக கொஞ்சிய தருணத்தையும் அவள் சொன்னபோது சுந்தரிக்கும் தன் பாட்டியின்மீது பரிதாபம் ஏற்படுகிறது.தன் மகள் இறந்தபிறகு பேத்தியை தான் வளர்ப்பதற்காக நான்கு வருடங்களாக நீதிமன்றம் வரை அலைந்து,தனக்கு வயதாகிவிட்டது என நீதிமன்றம் குழந்தையை அவள் தந்தைதான் வளர்க்கவேண்டும் என தீர்ப்பு சொன்னதையும் சொல்லி,தன் கோபத்துக்கான நியாயங்களை அவள் எடுத்துரைக்கும்போது பேத்தியின் நெஞ்சமும் கலங்கிப் போகிறது.

  எவ்வளவு தொந்தரவா இருந்தும் வாசலில் இருக்கும் அழைப்புமணியை ஏன் கழட்டாமல் வெச்சிருக்கேன் தெரியுமா?என்னைக்காவது அர்த்தராத்திரியில நீ வந்து அடிக்கமாட்டியான்னுதான்மா என பாட்டி அழுகையினூடே சொல்லிமுடிக்கும்போது தான் இனி தன் பாட்டியைவிட்டு வேறு எங்கும் போகப்போவதில்லை என சுந்தரி சத்தியம் செய்து கொடுக்கிறாள்.

   விரக்தியடைந்த தன் வாழ்வில் பாலை வார்க்க வந்த பேத்தியைப் பெருமையோடு அக்கம் பக்கத்தாரிடம் காட்டும் பாட்டி வாசலில் பொருத்தியிருந்த அழைப்புமணியை இனி தேவையில்லை என  கழற்றிவிடுகிறாள்;பேத்தியைக் கோயிலுக்கு அழைத்துப்போகிறாள்.

    தன் பேத்தி என்றைக்காவது தன்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கையில் அவளுக்குக் குழந்தைப் பருவம் முதல் மங்கையான பருவம் வரையில் தேவைப்படும் உடைகளையும்,ஆபரணங்களையும் வாங்கி வைத்திருப்பதை எடுத்துக் காட்டுகிறாள் பாட்டி.நவீன உடைகள் முதல் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் வரை எல்லாவித உடைகளையும்,ஆபரணங்களையும் காட்டி,”உனக்காக எல்லாம் சேர்த்து வெச்சிட்டேன் புருஷனைத் தவிர,” என மூத்தவள் முகம் நிறைய பூரிப்போடு எடுத்துக் காட்ட அந்த அன்பில் நெகிழும் இளையவளின் கண்கள் நீரால் அரும்புகின்றன.அப்போது ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் சுகமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

     பாட்டியும்,பேத்தியும் சுகமாய் இருக்கும் தருணத்தில் சுந்தரியின் அப்பா (ஜெய்சங்கர்) வருகிறார்.அவரைச் சந்திக்க விரும்பவில்லை என சொல்லிவிட்டு வரும்போது  சுந்தரி தன் தந்தையின் புகைப்படத்தைக் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட பாட்டிக்கு அளவில்லாத கோபம் ஏற்படுகிறது.அவள் அப்பாவைப் பற்றி தப்பாக பேச,சுந்தரிக்குக் கோபம் வருகிறது.திருமணமானபின்னும் தன் மகளிடம் அளவுக்கதிக உரிமை எடுத்துக்கொண்டது பிடிக்காமல்தான் தன் தந்தை தனிக்குடித்தனம் போனதாய்ச் சொன்னவள் திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிடம் அவளது கணவனுக்குதானே அதிக உரிமை என கேட்கிறாள்.தன் தாய் இறந்தபிறகு வேறு மணம் செய்துகொள்ளாமல்,தன்னை யாரிடமும் கொடுக்காமல் ஒரு பூ மாதிரி வளர்த்த தன் தந்தையைப் பற்றி இதற்கு மேல் ஒரு வார்த்தை கோபமாகப் பேசினாலும் தனக்குப் பிடிக்காது என சுந்தரி பேச,பாட்டியின் கோபம் அதிகரிக்கிறது.

  அப்பா மேல இவ்வளோ பாசம் வெச்சிக்கறவ எதுக்கு இங்கே வரனும்?நாடகமாடி என் சொத்தையெல்லாம் எடுத்துக்கறதுக்கா?” என பாட்டி சரமாரியாக கேட்க,சுந்தரி அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்கிறாள்.பாட்டி கதவை இடைவிடாது தட்டிக்கொண்டே இருக்க,நோயின் தீவிரத்தில் துவண்டு போயிருந்தவள்,அழுத்தம் தாளாமல் கதவைத் திறந்து வெளியே வருகிறாள்;தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகளைக் கொட்டி காண்பிக்கிறாள்.தனக்கு மூளையில் பாதிப்பு இருப்பதையும்,எந்த நேரத்திலும் தன் உயிர் பிரிந்துவிடக்கூடும் என்ற உண்மையையும் போட்டு உடைக்கிறாள்.தன்னைப் பரிதாபமாக பார்ப்பவர்களின் பார்வையிலிருந்து விலகி,தன் கடைசிக்காலத்தில் தன் அம்மா வாழ்ந்த வீட்டில் வாழ வந்திருப்பதாய் இளையவள் துவண்டு போன முகத்தோடு சொல்ல,பாட்டியால் அதைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை;பேத்தியை அன்போடு அணைத்துக்கொள்கிறாள்.

   
அறுவைச் சிகிச்சை செய்தால் ஒருவேளை அவள் பிழைக்ககூடும்.ஆனால் அந்த அறுவை சிகிச்சையில் அவள் உயிர் போய்விடவும் வாய்ப்பு இருப்பதால் அந்த அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லும் சுந்தரி தன் அப்பா அதற்காகதான் தன்னை அழைத்துப்போக வந்திருக்கிறார் என்ற விசயத்தைச் சொல்லி தன்னை அப்பாவிடம் அனுப்பவேண்டாம் என கெஞ்சுகிறாள்.பாட்டியின் நெஞ்சம் கலங்குகிறது.உன்னை எங்கும் அனுப்பமாட்டேன் என சொல்லிவிட்டு,கடவுளே என் பிள்ளையைக் காப்பாத்துப்பா என பேத்தியைக் கட்டியணைத்தவாறு கதறி அழுகிறாள்.அப்போது சோகமாக ஒலிக்கிறது இந்தப் பாடல்.

     இந்தப் பாடலில், யார் வீட்டில் அழைப்புமணி ஒலித்தாலும் தன் ஓடிவந்து பார்ப்பதாய் சொல்லும் வரிகளிலேயே அந்தப் பாட்டியின் காத்திருப்பையும்,ஏக்கத்தையும் முழுமையாய் உணரமுடிகிறது நம்மால்.தன் பேத்தியின் முகத்தில் தன் வாலிப சாயலைக் காண்பதாய் சொல்வதாகட்டும்,ஜென்மங்கள் மாறும்போது தன் பேத்திக்கே மகளாய் பிறந்து அவளைவிட்டு நீங்காமல் இருக்கவேண்டும் என சொல்வதாகட்டும், ஒரு பாட்டியின் எண்ணங்களை உயிர்ப்புள்ள வார்த்தைகளாக்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

   இப்பாடல் சுகமாய் ஒலிக்கும்போதும் சோகமாக ஒலிக்கும்போதும் அதே இசைதான்;அதே வரிகள்தான்,சோகப்பாடலை சித்ரா பாடியிருப்பார்.நான் உன் மகளாக வேண்டும் என்ற வரி மட்டும்தான் மாறியிருக்கும்.முன்பாதியில் பேத்தியுடனான குதூகலத்தைக் காட்டும் காட்சிகள்,சோகமாய் ஒலிக்கும்போது சோகத்தை மனதினுள் புதைத்து வைத்துக்கொண்டு பேத்தி குணமாவதற்காக பாட்டி மேற்கொள்ளும் செயல்களைக் காட்டி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

     தாயைப் போன்றே பாட்டி என்ற உறவும் குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான உறவு.கண்டிப்பாக இருப்பவர்கள் கூட பாட்டி என்ற நிலையை அடையும்போது சாந்தமான,பாசமே உருவானவர்களாக மாறிவிடுகிறார்கள்.உழைத்து ஓய்ந்த அந்திமப் பொழுதில் அவர்களின் வாழ்வை இனிமையாக்குவது பேரன்,பேத்திகளின் உறவுதான்.பேரன்,பேத்திகளைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் பிள்ளைகளின் சிறுவயது சாயலில் இருப்பதால் அவர்களுக்குத் தாங்கள் முதன்முதலில் தாய்மையான தருணமும்,தங்கள் சிசுவைக் கையில் ஏந்திய கணமும் நினைவுக்கு வரும்.தங்கள் பிள்ளைகளை மீண்டும் குழந்தையாக காண்பது போன்ற உணர்வின் உந்துதலில் தங்கள் பேரப்பிள்ளைகளை அதிக பாசம் காட்டி வளர்க்கிறார்கள்.

    தாயை இழந்த எத்தனையோ குழந்தைகளை அந்தப் பாட்டிதான் குறை தெரியாமல் வளர்க்கிறாள்.குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி,வேடிக்கை காட்டி சோறு ஊட்டி,தலைசீவி சடை பின்னி இதையெல்லாம் தாயைக் காட்டிலும் பாட்டியால்தான் சிறப்பாக செய்யமுடியும்.

   என் பாட்டியைக் கண்டு பயந்து நடுங்கினாலும் என் வாழ்வில் பாட்டிக்கும் முக்கிய இடம் உண்டு.அம்மா வேலைக்குப் போனபோது எங்களை ஆயாக்கொட்டகையில் விடாமல் வளர்த்தவர் பாட்டி.என் பாட்டிதான் வானம்பாடி பத்திரிக்கையின் முதல் வாசகி.அவரிடமிருந்துதான் என் அம்மாவுக்கும்,அடுத்து எனக்கும் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு என்னை எழுத்துத் துறையிலும் கால்பதிக்க வைத்துள்ளது.அதனால்தானோ என்னவோ இன்று தள்ளாத வயதில் இருக்கும் அவரைப் பார்க்கும்போது சிறுவயதில் என்னை அடித்து அழவைத்ததைத் தாண்டி பரிதாபமும்,கனிவும் தோன்றுகிறது.

  நான் சொன்ன அனைத்தும் தாத்தாமார்களுக்கும் பொருந்தும்.வயதான காலத்தில் அவர்களைக் கொண்டு போய் முதியோர் இல்லங்களில் விட்டுவிடாமல் பேரக்குழந்தைகளுக்கு அவர்களோடு வாழும் பாக்கியத்தை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது நம் கடமையாகும்.

  இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் இந்தப் பாடலை எழுதுவதற்கு ராஜசோழன் சாரும் ஒருவர்.எத்தனையோ முறை,”உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை உங்களுக்குச் சமர்ப்பணமாக எழுதப்போகிறேன்,” என சொன்னபோது அது சரியல்ல என மறுத்துவந்தவரை விடாது வற்புறுத்தியபோது, இந்தப் பாடலைப் பற்றி எழுதும்மா,”என்றார்.

  என் உதயகீதங்கள் தொடரை நான் தொடர்ந்து எழுதுவதற்கு ராஜசோழன் சார்தான் காரணம்.குழந்தையைப் போன்று அக்கறையாக,பாசமாக என்னைக் கவனித்துக்கொள்ளும் அவரது அன்பும்,ஊக்கமும்தான் நான் தினக்குரலில் எனது படைப்புகளைத் தொடர்ந்து வழங்கிவர காரணம்.

  இன்றைய உதயகீதங்கள் தொகுப்பை என் மாயலோகத்து அன்பிற்கினியவனோடு,மதிப்பிற்குரிய ராஜசோழன் சாருக்கும்,தாத்தா,பாட்டி என்ற நிலையை எட்டிப்பிடித்திருக்கும் மூத்த தலைமுறையினருக்கும் சமர்ப்பிக்க விழைகிறேன்.

 

பூவே பூச்சூடவா…..எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

பூவே பூச்சூடவா….என் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து

காத்து நின்றேன் வா..

பூவே பூச்சூடவா…….எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

 

அழைப்புமணி எந்த வீட்டில் கேட்டாலும்

ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை

கண்ணில் வெந்நீரை வார்த்தேன்

கண்களும் ஓய்ந்தது... ஜீவனும் தேய்ந்தது

ஜீப தீபங்கள் ஓயும் நேரும்

நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகம் இல்லை

இன்று ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா……..எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

 

காலம் கரைந்தாலும்…..கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

உன் முகம் பார்க்கிறேன்

அதில் என் முகம் பார்க்கிறேன்

இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே

சென்று நான் சேரவேண்டும்

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்

நீ என் மகளாக வேண்டும்

பாசராகங்கள் பாடவேண்டும்

பூவே பூச்சூடவா....எந்தன் நெஞ்சில் பல் வார்க்க வா

வாசல் பர்த்து கண்கள் பூத்து

காத்து நின்றேன் வா

பூவே பூச்சூட வா

எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

 

2 comments: