Sunday, December 29, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 23 : கொடியிலே மல்லிகைப்பூ (1986)





KING OF KINGS’ இளையராஜா ஐயாவின் இசைநிகழ்ச்சி குறித்த விளம்பரங்கள் மின்னல் பண்பலையில் ஒலிக்கும்போதெல்லாம் அவரின் மேன்மையை உணரமுடிகிறது.அவ்வளவு சிறப்புக்குரிய இசைமாமேதையின் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் எனக்கு அதிக பெருமையே.

  எத்தனை எத்தனை பாடல்களை அவர் வழங்கியிருக்கிறார்.சந்தோசமாக இருந்தாலும் சரி,சோகமாக இருந்தாலும் சரி அவரது பாடல்களைக் கேட்டால் நமக்காக எழுதப்பட்டதைப் போன்று உணரமுடிகிறது.

  பாடலாசிரியர்கள் அந்தப் பாடல்களைத் தங்கள் சுகமான கற்பனையில் அழகான வரிகளில் புனைந்தாலும் அந்தப் பாடல்கள் நம் மனதில் ஆழப்பதிந்து போவதற்கு முக்கிய காரணம் இசைதான்.

     என் அன்னையின் கருவில் இருக்கும்போதே அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் நான்.பாடல்கள் என்பதைத் தாண்டி அவரது இசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது கூட சுகமானதாய் தோன்றுகிறது எனக்கு.அவரது இசையைக் கேட்டால் அழ தோன்றுகிறது;சிரிக்க தோன்றுகிறது;எண்ணிலங்கா கற்பனைகளை என்னுள் வாரி இறைக்கிறது.எனக்குப் பிடித்த காலத்திற்கு எனக்குப் பிடித்தமானவர்களை நினைத்துக்கொண்டு பயணிக்கமுடிகிறது.சில நேரங்களில் எதுவும் செய்யாமல் வெறுமனே சுவரில் தலைசாய்த்து மணிக்கணக்கில் மௌனத்தில் கரையவைக்கிறது.அது எனக்கும் இசைஞானியின் இசைக்குமான உறவு.அந்த உறவுதான் இன்று இந்த இசைத்தொடரை எழுதும் அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

     இந்த உணர்வு நிச்சயம் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது.பலருக்கும் அவரது பாடல்கள் தாக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.சில பாடல்கள் சோகமாக இல்லாமல் போனாலும் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அதற்குக் காரணம் அப்படத்தின் கதையமைப்பும்,கதாபாத்திரங்களும்,அப்பாடல் ஒலிப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள சூழலும்தான்.அதனால்தான் என் தொடரில் பாடல்களைப் பற்றி எழுதும்போது படத்தின் கதையைப் பற்றியும் எழுதுகிறேன்.

   இந்த வாரத்தில் இடம்பெறப்போகும் பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.இப்பாடல் காதலர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்தான் என்றாலும் கேட்கும்போது ஏனோ அழுகை வருவதுபோல் இருக்கும்.

    1986-ஆம் ஆண்டு எதார்த்த இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜ்,ரேகா,ரஞ்சினி,ராஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் கடலோரக் கவிதைகள் பயமுறுத்தும் வில்லனாக நடித்துவந்த சத்யராஜின் கையில் ஆட்டுக்குட்டியைக் கொடுத்து,டீச்சர் டீச்சர் என குழைந்து பேசவைத்து கதாநாயகனாக்கியிருந்தார் பாரதிராஜா.200 நாள்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படத்தில் இளையராஜாவின் இசையில்  தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்’,’அடி ஆத்தாடி’,’பொடிநடையா போறவரே’,’போகுதே போகுதே ஆகிய பாடல்களோடு கேட்கும்போதே நெஞ்சுக்குள் என்னவோ செய்யும் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே என்ற பாடலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவை.

  கன்யாகுமரி மாவட்டத்தில் முட்டம் என்ற கடல்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் சின்னப்பதாஸ் (சத்யராஜ்).படிப்பறிவில்லாத அவன் சாராயம் குடித்துக்கொண்டும் பலரையும் அடித்துக்கொண்டும் அடிக்கடி சிறைச்சாலைக்குச் சென்றுகொண்டும் இருப்பவன்.

 அந்தக் கிராமத்தில் இயங்கும் பாரதியார் துவக்கப்பள்ளிக்கு ஆசிரியையாக வந்து சேருகிறாள் ஜெனிஃபர் (ரேகா).அம்மா இறந்தது முதல் அப்பா,தம்பிகள்,கால் ஊனமுற்ற தங்கை ஆகியோரை கரைசேர்க்கும் பொறுப்பில் இருக்கும் ஜெனிபரின் பார்வையில் முரடனாக தெரிகிறான் சின்னப்பதாஸ்.

   பள்ளியில் ஆயாவாக வேலை செய்யும் அவனது அம்மா அவனுக்குத் தன் அண்ணன் மகள் கங்கம்மாவை (ரஞ்சனி) பெண் பார்க்க அழைத்துச் செல்கிறாள்.ஊரே மிரண்டு நடுங்கும் சின்னப்பதாஸை அவள் அதட்டி,மிரட்ட ஒரு வாயாடி, வம்பு பெண்ணைத் தனக்கு மணமுடிக்க பார்க்கிறாளே என்ற ஆத்திரத்தில் தன் அம்மாவை கைநீட்டி அடித்துவிடுகிறான் சின்னப்பதாஸ்.

  ஜெனிபர் ஆயாவைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து,அவளது காயத்திற்கு ஒத்தடம் கொடுத்து,தன் வீட்டிலேயே வைத்து கவனித்துக்கொள்கிறாள்.சின்னப்பதாஸ் ஆத்திரத்தோடு அவள் வீட்டுக்கு வந்து தன் அம்மாவைக் கூப்பிட அவள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள்.

  என்னா கெழவி புட்டுக்கிச்சா?” என கிண்டலாய் கேட்க,அவனது வார்த்தைகளில் ஆத்திரமுற்றவள் அவன் கன்னத்தில் பளார் என அறைகிறாள்.அவன் பேச்சற்று திகைத்துப்போய் நிற்கிறான்.அன்றிரவு திருட்டுத்தனமாக அவள் வீட்டு கூரையின்மேல் ஏறும் அவன் ஜெனிபர் தன் அம்மாவிடம் பேசுவதைக் கேட்க நேரிடுகிறது.அவனுக்குத் தன் தம்பியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பியிருப்பதாக அவள் சொல்ல,மதியம் தன்னை அறைந்த அவளிடத்தில் உள்ள அன்பையும் எண்ணி அவன் வருந்துகிறான்.அவன் பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் உள்ளுக்குள் அவனிடம் நற்குணங்கள் நிறைந்திருப்பதை அவள் ஒருநொடியில் உணர்ந்துவிட்டதாய் சொல்ல,அவன் நெகிழ்ந்து போகிறான்.அவனுக்குள் இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.

   மறுநாள் ஜெனிபரை எதிரில் பார்க்கும்போது வணக்கம் டீச்சர் என்கிறான் பவ்யமாய்.அவள் சிரித்துக்கொண்டே நடக்கிறாள்.பள்ளிக்கூடத்து சுவரில் நானும்,ஜெனியும் நேத்து ராத்திரி ஜாலியா இருந்தோம்,இப்படிக்கு சின்னப்பதாஸ் என கிறுக்கியிருப்பதைக் கண்டதும் அவளுக்கு அவன்மேல் மீண்டும் கோபம் உண்டாகிறது.அவன் அம்மாவும் அவசரப்பட்டு அவனை அடித்துவிட,அறவே படிப்பறிவில்லாத தன்னால் எப்படி எழுதமுடியும்?” என அவன் கேட்க,அப்போதுதான் தன் மகன் அதைச் செய்யவில்லை என்ற விசயம் தாய்க்கு தெரிகிறது.

   மறுநாள் தேவாலயத்திற்குச் சென்று காத்திருக்கும் சின்னப்பதாஸ்,ஜெனிபர் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்ததும் அவளிடத்தில் தான் அந்தத் தவற்றைச் செய்யவில்லை என்பதை எடுத்துரைக்கிறான்.தனக்காகவும் அவள் பிரார்த்தனை செய்வாளா என கேட்க,அவள் உள்ளே சென்று அவனுக்காகவும் ஏசுநாதரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வருகிறாள்.தனக்காகவும் பிரார்த்திப்பதற்கு ஒரு ஜீவன் இருக்கிறதே என அவன் பூரித்துப்போகிறான்.அவளிடம் சந்தோசமாக நன்றி சொல்லி புறப்படுகிறான்.முரட்டு தோற்றத்திற்குள் புதைந்து கிடக்கும் அவனது வெள்ளந்தி மனதை அவளால் புரிந்து கொள்ளமுடிகிறது.

   அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சின்னப்பதாஸ் கடையில் இருந்த புத்தகங்களை வாங்கிகொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போகிறான்.அவனைக் கண்டதும் குழந்தைகள் அனைத்தும் மிரண்டு வெளியேற,ஜெனிபர் அவனைத் திட்டி வெளியே அனுப்புகிறாள்.தனக்குப் படித்து தரும்படி அவன் கெஞ்ச,அவள் மறுக்கிறாள்.அவன் தனக்குப் பாடம் போதிக்க ஒத்துக்கொள்ளும்வரையில் தான் ஒற்றைக்காலில் நிற்கப்போவதாய் அவன் மிரட்ட,அவள் அப்போதும் மசியவில்லை.ஆனால் அவன் பிடிவாதமாக ஒருநாள் முழுக்க வெயிலில் ஒற்றைக்காலோடு நிற்க,அவன் மனமிறங்கி பாடம் சொல்லித் தர முன்வருகிறாள்.வழக்கமான குறும்புத்தனம் அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும் அவளைத் தன் மானசீக குருவாக எண்ணும் அவன் அவளிடத்தில் நெளிந்து,குழைந்து சிறு மாணவனைப் போன்று அடங்கிப் போகிறான்.

  ஒருதடவை பாடம் படிக்கும்போது அவளிடம், திருப்பதிமலையில் யார் இருக்கிறார்?” என கேட்க,அவள், வெங்கடாஜலபதி என்கிறாள்.பழனிமலையில் யார் இருக்கிறார்?” என கேட்டபோது, முருகன் என்கிறாள்.இந்த மலையில் யார் இருக்கிறார்கள்?” என்றதற்கு, நீயும் நானும் மட்டும்தான்,” என அவள் சொல்ல,அவன் வேகமாய் ஓடி அந்த மலையைவிட்டு இறங்குகிறான்.பிறகு மூச்சிரைக்க அவளைப் பார்த்து,”டீச்சர்,இப்போ இந்த மலையில் நீங்க மட்டும்தான் இருக்கீங்க,நீங்கதான் என் தெய்வம்,” என்கிறான்.அவனது வார்த்தைகளில் நெகிழ்ந்து போகும் அவள் மனதில் அவன் மெல்ல இடம் பிடிக்கிறான்.அவனது தூய அன்பு அவள் மனதைக் கலைக்கிறது.

   அவளது வீட்டில் ஆடுகளோடு இருக்கும் ஏசுபிரானின் படத்தைப் பார்த்து அவன் கேள்வி கேட்க,அவனுக்குப் பதிலளிக்கும் அவள் அவனிடம் அந்தமாதிரி திசைமாறி போன ஓர் ஆடு அவனிடம் தஞ்சம் அடைந்தால் என்ன செய்வான் என கேட்க,”உடனே பட்டை,கிராம்பு எல்லாம் போட்டு பிரியாணிதான்,” என்கிறான்.அதுவே நானா இருந்தால்... என அவள் கேட்க அவன் வார்த்தையற்று நிற்கிறான்.மனதில் இனம்புரியாத உணர்வொன்று பரவ,உற்சாகமாக கடலோரத்தில் ஓடுகிறான்.

   ஜெனிபரின் மனதிலும் ஒரு சந்தோசம் ஊற்றெடுக்கிறது.இருவரும் ஒருவர் மீதான ஒருவர் காதலை உணர்ந்தாலும் வாய்விட்டு சொல்லிக்கொள்ளாமல் எப்போதும் போலவே பழகுகிறார்கள்.அப்போதுதான் ஜெனிபரின் குடும்ப நண்பர் லாரன்ஸ் (ராஜா) ஜெனிபரின் வீட்டில் சிலநாள் தங்கிவிட்டு போக வருகிறார்.

   லாரன்ஸ் அமெரிக்காவில் படித்தவர்;பாரிசில் வேலை செய்தவர்அவரது அப்பாவின் கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு,சென்னையில் தொழில் தொடங்கப்போகிறார்,” என அவரைப் பற்றி ஜெனிபரும்.அவள் தம்பிகளும் அறிமுகம் செய்துவைக்க சின்னப்பதாசின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.தனக்குத் தெரிந்த ஓரிரு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசும்,தாஸைப் பார்த்து லாரன்சும்,ஜெனிபரும் நகைக்கிறார்கள்.அவன் கவலையாகிறான்.எப்போதுதான் லாரன்ஸ் ஊர் திரும்புவானோ என கேட்டுக்கொண்டே இருக்கிறான்.லாரன்சோடு ஜெனிபர் அதிக நேரத்தைச் செலவழிப்பது அவனைக் காயப்படுத்துகிறது.ஒரு தடவை லாரன்சுக்கு ஒரு மலையைச் சுற்றிக் காண்பிக்கும்போது அவனுக்குப் பிடித்த பெயரைச் சத்தமாக சொல்ல சொன்னபோது,லாரன்ஸ் ஜெனிபரின் பெயரைச் சொல்ல அவனுக்குள் பொறாமை எட்டிப்பார்க்கிறது.

  ஜெனிபர் லாரன்சோடு ஒன்றாக நடந்து போகும்போது ஊரிலுள்ளவர்கள் அவர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருப்பதாகவும்,படித்தவர்கள் ஒன்று சேரும்போதுதான் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும் சொல்ல,அவன் மனம் வேதனையடைகிறது.எங்கே அவளை இன்னொருவனிடம் இழந்துவிடுவோமோ என்ற பயம் வரும்போதுதான் அவள் மீதான நேசத்தை அவன் உணர்கிறான்.எங்கே அவனைப் பார்த்தால் வாய்தவறி மனதிலிருப்பது வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவளைவிட்டு தனியே இருக்கிறான்.கடற்கரையை ஒட்டிய மலையில் பாறைகளுக்கு மத்தியில் ஆட்டுக்குட்டியோடு தனித்து உட்கார்ந்திருக்கிறான்.


      ஆட்டுக்குட்டியின் சத்தம் கேட்டு அங்குப் போகும் ஜெனிபர் சில தினங்களாய் அவன் அவளைப் பார்க்கவராமல் தனித்து இருப்பதன் காரணத்தை வினவுகிறாள்.தனக்கு ஏதோ ஆகிவிட்டதாகவும்,அவன் முகத்தைப் பார்த்து பேசமுடியாமல் இருப்பதையும் சொல்ல,தன் கண்களைப் பார்த்து பேசுமாறு அதட்டுகிறாள்.அவன் தயங்கி தயங்கி நிமிர,அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த கணம் தடுமாறி ஆட்டுக்குட்டியை கீழே போட,அது அவன் கையிலிருந்து ஓடுகிறது.அதைத் துரத்தியபடி ஓடும் அவன் காலில் எதுவோ குத்திவிட,அவள் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து தன் சங்கிலியில் இருந்த ஊக்கை எடுத்து,அவன் காலில் குத்திய எதையோ எடுக்க,மிக அருகில் இருக்கும் அவளது அன்பையும்,தாய்மை உணர்வையும் கண்டு நெகிழ்ச்சியாக அவன் பார்க்க அப்போது ஒலிக்கிறது இப்பாடல்.

  இப்பாடலில் பல்லவி முடிந்தபிறகு தொடரும் இசையில் கோயில்மணி ஒலிக்க,அதைத் தொடர்ந்து தேவாலயத்து மணியும் ஒலிக்க,அந்தக்கோர்வை அறிவார்த்தமான இசைக்கோர்ப்பு எனலாம்.

   இப்படத்திலோ,பாடலிலோ எந்த இடத்திலும் மதம் என்பது தடையாக காட்டப்படவேயில்லை.இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் அதை வெளியில் சொல்வதில் ஏனோ தயக்கம்.அதை உள்ளுக்குள் வைத்திருப்பதால் மனதில் தோன்றும் குழப்பம்,வேதனை,ஏக்கம் ஆகியவற்றை வெகு அழகாக, கவித்துவமாக இப்பாடலில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் வைரமுத்து.இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தனித்தனியே பார்த்தால் அதன் எதார்த்தத்தில் நம் மனமும் மயங்கிப்போவது திண்ணம்.இப்பாடல் காட்சியில் அந்தக் கடலோர கிராமத்தின் இயற்கைக் காட்சிகளும்,கடலும் வெகு அழகு.

   இத்தகைய அற்புதமான பாடல்களையெல்லாம் நாம் கேட்பதற்கு களம் அமைத்துக்கொடுக்கும் மின்னல் பண்பலையை இவ்வேளையில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.நேயர்களின் மனம்கவரும் வகையில் நிகழ்ச்சியை வழங்குவதற்காக அவர்கள்  மெனக்கெடுகிறார்கள்.

    ஒருதடவை மஞ்சுளா அக்காள் வானொலி நாடகத்தை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.நான்கு மணி நேரத்திற்கு மேல் உட்காராமல் நின்று கொண்டே,சரியாக வரும்வரையில் மீண்டும் மீண்டும் பேச சொல்லி அவர் ஒலிப்பதிவு செய்தபோது பணியின்பால் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும்,சிரத்தையையும் அறிந்து கொள்ளமுடிந்தது.

  மின்னல் பண்பலையில் மாலை ஐந்து தொடக்கம் எட்டுவரையில் ஒலியேறும் ஆனந்த தேன்காற்று நிகழ்ச்சிக்கு நான் ரசிகை.புனிதா சுப்ரமணியம்,கவிதா கன்னியப்பா.எஸ்.சித்ரா,சரஸ்பிஜின், ஆகியோர் ஒவ்வொருநாளும் நேயர்களின் மனம் கவரும் பாடல்களைத் தயார் செய்து நேயர்களை எங்கும் நகரவிடாமல் செய்துவிடுகிறார்கள்.

  மின்னல் பண்பலையின் ஃபேஸ்புக் பக்கத்தில் முன்கூட்டியே ஆனந்த தேன்காற்று தொகுப்பில் அன்று இடம்பெறப்போகும் பாடல்களில் சிலவற்றைப் பட்டியலிட்டு விளம்பரம் போடுவதால் ஆர்வம் அதிகமாகிறது.நமக்குப் பிடித்த பாடல்கள் பட்டியலில் இருந்தால் அந்தப் பாடல் எப்போது ஒலிக்கும் என ஏக்கத்தோடு காத்திருக்க செய்கிறது.நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் இடையிடையே நேயர்களின் கருத்துகளையும் வாசித்து,அங்கீகாரம் கொடுப்பது நன்று.

 கடந்த இரு வாரங்களாக (14&21 டிசம்பர்)ஒடிசி இசை பயிற்சி மையத்தின் மாணவர்கள் இப்படியும் பாடலாம்என்ற தலைப்பில் இளையராஜா பாடல்களை ( VOICE CULTURE)நவீன முறையில் பாடியது கூட கேட்க இனிமையாகதான் இருந்தது.கவிதா கன்னியப்பா வெகு சிறப்பாக அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.

   அவர்களின் சேவை என்றென்றும் தொடரவேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.இன்று உதயகீதங்கள் தொடரில் இடம்பெற்ற பாடலை அன்பிற்கினியவனோடு மின்னல் பண்பலையின் எஸ்.குமரன், சுமதி,சுகுமாறன்,ஹரி,பாலமுருகன்,தெய்வீகன்,புனிதா,புவனேஸ்வரி,சித்ரா,பிரேமா,புவனா,ரவின்,செல்லதுரை,ஜோன்சன்,

சரஸ்வதி,சரஸ்பிஜின்,கவிதா,திவ்யமாலினி,மஞ்சுளா,ஹேமலதா,மோகன்தாஸ் அனைவருக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.உங்களின் சேவை இனிதே தொடரட்டும்.

    வாருங்கள் தினக்குரல் அன்பர்களே ஜெயச்சந்திரன்,ஜானகியின் குரலில் கிறங்கடிக்கும் அந்த இனிய கீதத்தில் நாமும் கலந்து இலயிக்கலாம்.

ஆ : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
     எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
     பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
     நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெ : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

சரணம் : 1

பெ : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
     மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

ஆ : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பெ: பொத்திவெச்சா அன்பு இல்ல

     சொல்லிப்புட்டா வம்பு இல்ல

     சொல்லத்தானே தெம்பு இல்ல

      இந்தத் துன்பம் யாரால?

 

சரணம் : 2

ஆ : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
     உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

பெ : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
     அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

ஆ : காலம் வரும் வேளையிலே

     காத்திருப்பேன் பொன்மயிலே

பெ : தேதி வரும் உண்மையிலே

     சேதி சொல்வேன் கண்ணாலே

பெ : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
     கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
     பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
     நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
     எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே







 

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே..வாழ்க வளமுடன் :)

      Delete