Friday, December 6, 2013

காவியாவின் தி...டு...க்.... நொடிகள்......








            
      சாளரத்தின் வழி வெளியே எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவியா சட்டென திரும்பினாள்.அவள் பார்வை கட்டிலில் படுத்திருந்த அறைத்தோழி யாமினியின் முகத்தில் படிந்தது.யாமினி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

  யா..மி....னி.. வேண்டுமென்றே அமானுஷ்ய குரலில் கூப்பிட்டாள்.

   திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த யாமினி காவியாவைப் பார்த்து முறைத்தாள்.

   இந்த நேரத்துல தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?”

   எதிர்வீட்டுல பேயி,ஆவி ஏதாவது கண்ணுக்குத் தெரியுதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்,”

  திகில் உலகம் பத்திரிக்கையில் எழுத ஆரம்பிச்சதுல இருந்து நீ ஒரு மார்க்கமாதான் இருக்கே,” என்றபடி தலையணையை எடுத்து காவியாவின் மேல் வீசினாள்.

  பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்த காவியா தன் மடிக்கணினியை உயிர்ப்பித்து மெத்தையின் மேல் வைத்தாள்.தரையில் சப்பணமிட்டு அமர்ந்தபடி கணினித் திரையில் கண்களை மேயவிட்டாள்.லோஷனில் நனைந்திருந்த அவளது பஞ்சு விரல்கள் விசைப்பலகையில் விளையாடின.

  ஏய் காவியா, மணி ஒன்னாகப் போகுது,நாளைக்கு காலையிலயே பத்திரிக்கை ஆப்பிஸ்க்கு போகனும்னு சொன்னியே,படுக்க வேண்டியதுதானே?” போர்வையை இழுத்து கால்களை மூடிக்கொண்டு படுத்தாள் யாமினி.

 இந்த வாரத்து கட்டுரையை ஈமெயில் பண்ணிட்டு படுத்துடறேன்,” சொல்லிக்கொண்டே கணினியோடு ஐக்கியமானவள் படுக்கைக்கு வந்தபோது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.

 

 

   திகில் உலகம் என்ற பெயர்ப்பலகையைத் தாங்கியிருந்த கட்டிடத்துக்குள் காவியா நுழைந்தபோது பணியாளர்கள் மும்முரமாக குனிந்த தலை நிமிராமல் நவீனரக கணினிகளில் எதையோ இயக்கிக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் யாருடனும் காவியாவுக்கு அறிமுகம் இல்லை.அவள் வீட்டிலிருந்தே படைப்புகளை அனுப்பிவிடுவாள்.எப்போதாவது ஒருமுறை பொறுப்பாசிரியர் வர சொன்னால் மட்டுமே அலுவலகத்திற்கு வருவாள்.யார் வந்தாலும் அந்தப் பணியாளர்கள் நிமிர்ந்து பார்க்கவே மாட்டார்கள்.அது கூட காவியாவுக்குப் பிடிக்கவே செய்தது.

    திகில் உலகம் பத்திரிக்கை முழுக்க முழுக்க ஆவிகள்,பேய்கள்,செய்வினைகள் என அமானுஷ்ய விசயங்களை மட்டுமே கொண்டு வெளிவரும் பத்திரிக்கை.அந்தப் பத்திரிக்கையை இணையத்தின் வாயிலாகவும் படிக்கும் வசதி இருந்ததால் ஒரு வருடத்திற்குள் கணிசமான வாசகர்களைப் பெற்றிருந்தது.ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்களின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டுதான் காவியா அவர்களைத் தொடர்பு கொண்டாள்.அவள் அந்தப் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பத்திரிக்கையின் விற்பனை மேலும் அதிகரித்திருந்தது.வாரந்தோறும் திடுக் நொடிகள் என்ற தலைப்பில் அவள் எழுதிவந்த படைப்புகளுக்கு வாசகர் கடிதங்கள் குவிந்தன.

  நாசியருகே மிகப் பரிச்சயமான அந்த வாசனை வந்ததும் புன்னகையோடு திரும்பினாள்.கணேஷ் நின்றிருந்தான்.திகில் உலகம் பத்திரிக்கையின் பிரதான பக்க வடிவமைப்பாளன்;சிறந்த ஓவியனும் கூட.சாதாரண கட்டுரையைக் கூட பன்மடங்கு திகில் நிறைந்ததாய் தனது ஓவியங்கள் மூலம் காட்டிவிடுவான்.

  வா டியர்,சீப் எடிட்டர் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு,” என்றபடி அவள் தோள் மீது கை போட்டு அழைத்துப் போனான்.

   நாற்பது வயதில் நெடுநெடுவென்ற உயரத்தோடு,ஏழு மாத கொழுப்பைக் கர்ப்பம் சுமந்திருந்த  சீனிவாசனுக்கு எதிரே நின்றாள்.அவளையும்,கணேஷையும் உட்கார சொல்லிவிட்டு வெண்திரையை உயிர்ப்பித்த சீனிவாசன் திரையில் சில ஆவணங்களைக் காட்டினார்.

  இப்போ வரைக்கும் நமக்கு வந்திருக்கற படைப்புகள் இவை,” ஒவ்வொன்றாக தட்டிக் காட்டினார்.

  பட்,எனக்குத் திருப்தி இல்லை.சாதாரண வாரத்திலேயே நம்மோட படைப்புகள் பீதியைக் கிளப்பறமாதிரி இருக்கும்,முதலாமாண்டு சிறப்பிதழ் இன்னும் எவ்வளோ நுட்பமான படைப்புகளோடு இருக்கனும்,ஏம்மா காவியா,உனக்கு வேற ஏதும் ஐடியா இருக்கா?”

  யெஸ்,ஒன்னை யோசிச்சி வெச்சிருக்கேன்,நீங்க பெர்மிஷன் கொடுக்கனும்,”

  ம்ம் என்ன செய்யப்போற?”

அன்னைக்கு கணேஷ் எனக்கு ஃபேஸ்புக்ல ஒரு போட்டோ அனுப்பி இருந்தாரு,ஒரு பழைய ரெண்டுமாடி வீட்டோட படம் அது.அது பேய் வீடாம்.நான் நாளைக்கு ராத்திரி அந்த வீட்டுல தங்கியிருந்து அங்கே என்னா நடக்குதுன்னு நோட் பண்ணப்போறேன்,”

  இது ரொம்ப ரிஸ்க்கான வேலையாச்சே,” சீனிவாசனின் முகத்தில் பீதி தெரிந்தது.

  இல்லை சார்.காவியாவோட பிளான் முழுசா கேளுங்க,”

  அஞ்சு வருசமா யாரும் குடியிருக்காமல் இருக்கற அந்த வீட்டுக்குப் பக்கத்துல நான்கு வீடுகள்ல யாரும் இல்லை.ஐந்தாவது வீட்டுல எல்லாம் ஆளுங்க இருக்காங்க.அதனால் எனக்கென்னவோ அந்த வீட்டுல பேய் இருக்குன்னு சொல்லப்படற விசயம் பொய்யின்னு தோனுது.

   அப்படி சொல்லாதே காவியா,இந்தப் பத்திரிக்கையை நடத்த ஆரம்பிச்சதுல இருந்து பேய்,பிசாசுகள் எல்லாம் இருக்குன்னு நான் முழுசா நம்ப ஆரம்பிச்சிட்டேன்,நீ ஒரு பகல் பொழுதில் அந்த வீட்டுக்குள்ள போயி பார்க்க முடியாதா?”

   சார், காவியா அந்த வீட்டுக்குள்ள இருக்கும்போது நான் அந்த தாமானுக்கு எதிர்ப்புறம் இருக்கற பூங்காவுல என் கார்ல இருப்பேன்.

    ஆமாம் சார்,கணேஷ் எனக்கு கொஞ்சம் தொலைவுலதான் இருப்பாரு. நான் என்னோட லேப்டோப்ல வெப்கேம் திறந்து வெச்சிடுவேன்.வீடியோ அழைப்பும் திறந்து வெச்சிடுவேன்.சோ,அங்கே என்ன நடக்குதுன்னு கணேசும் அலர்ட்டாவே இருப்பாரு.நெட்வோர்க் கவரேஜ் எல்லாம் நல்லாவே இருக்கு அந்த ஏரியாவுல

  ஏதாவது ஆபத்துன்னா நான் உடனே அந்த வீட்டுக்குள்ள போயிடுவேன்,” கணேஷ் தொடர்ந்தான்.

  ஓகே,அப்படின்னா நான் கார்ல காத்திருக்கேன்,நீ காவியா கூட அந்த வீட்டுக்குள்ள இரேன்,” சீனிவாசனின் கண்களில் கலக்கம் குறைந்து ஆர்வம் தெரிந்தது.

  இல்லை சார்,ஒரு பேய் பங்களாவுக்குள்ள தனி ஆளா ஒரு பொண்ணு தங்கியிருந்தா என்ற செய்திதான் எல்லாரையும் பயமுறுத்தும்,கணேஷ் கார்லயே இருக்கட்டும்,நான் மட்டும் உள்ளே போறேன்,வழக்கமா நான் நேர்காணல் செய்தவங்களோட சம்பவங்கள்தான் என்னுயை திடுக் நொடிகள் பக்கத்துல வரும்.இந்த முறை காவியாவின் திடுக் நொடிகள் என்ற தலைப்புல என் சொந்த அனுபவத்தையே எழுதறேன்,நிச்சயம் அருமையா வரும்னு நம்பிக்கை இருக்கு

 
காவியா பிடிவாதக்காரி என்பதால் சீனிவாசன் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.தவிரகாவியாவிடம் ஒரு பொறுப்பை நம்பி கொடுத்தால் அவள் அதை பலமடங்கு சிறப்பாக செய்து முடிப்பதை திகில் உலகத்துக்கு வரும் வாசகர்களின் பாராட்டுக் கடிதங்கள் உணர்த்தியிருப்பதால் அவர் அவளது திட்டத்திற்கு ஒப்புதலும் அளித்தார்.

    சந்தோசத்தைக் கொண்டாட கணேஷோடு கே.எப்.சிக்குப் போனாள் காவியா.

   உன் கட்டுரைக்கு நான் வரையப்போகும் படத்தைப் பார்த்து நீ நிச்சயம் அசரப் போற காவியாம்மா,” கணேஷின் வார்த்தைகளைக் கேட்டு அவளுக்குள் மேலும் உற்சாகம் பிரவாகமானது.

   லேப்டாப் மறக்காமல் சார்ஜர்ல போட்டுடு,ஃபோன்ல கிரேடிட் போட்டு விடறேன்,உன்னோட இந்தக் கட்டுரை உன்னை இன்னும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்போகுது சொல்லிக்கொண்டே அவளுக்குப் பிடித்தமான பொரித்த உருளைக்கிழங்கை வெண்ணெய்யில் தொட்டு ஊட்டினான்.காவியாவுக்கு அன்று அவனை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாய்ப் பிடித்தது.அவனது கைகளைப் பற்றிக்கொண்டே நடந்தாள்.மாலை வரையில் அவனோடு இருந்தாள்.அவளை வீட்டில் கொண்டு போய் இறக்கிவிடும்போது,வாசல் வரை வந்தான்.

  லேப்டாப் சார்ஜ் பண்ண மறந்துடாதே,பதினோரு மணிக்கு வந்து ஏத்திக்கறேன் அதுவரையில் காதலோடு பேசிக்கொண்டிருந்தவனின் குரல் பதட்டமாய் இருந்தது.அவன் எதிர்பாராத வண்ணம் எம்பிக் குதித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு வீட்டுக்குள் துள்ளிக்குதித்து ஓடினாள் காவியா.

   தன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே காரினுள் அமர்ந்தவன் மீண்டும் திகில் உலகம் பத்திரிக்கை அலுவலகத்துக்கு காரை விட்டான்.

 

  ண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனை பெரும் ஆவலோடு வரவேற்றார் சீனிவாசன்.

 எல்லாம் திட்டமிட்ட மாதிரி நடக்கும்லே,காவியாவுக்கு உன் மேல எந்த சந்தேகமும் வரலையே?” என்றபடி அவனைப் பார்த்து சிரித்தார் சீனிவாசன்.அவரது பற்கள் கோரமாய் நீண்டிருந்தன.கணேஷ் பதிலேதும் பேசாமல் சிரிக்க,அதுவரையில் குனிந்த தலை நிமிராமல் கணினியில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் நிமிர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.அவர்களது நகங்கள் நீண்டு வளர்ந்திருக்க,முகத்தில் சதை அழுகி தொங்கி கொண்டிருந்தது.பற்களில் சற்று முன்னர் குடித்திருந்த ரத்தத்தின் சிவப்பு ஒட்டியிருந்தது.

   இதெல்லாமே ஒரு வருசமா நாம் நடத்துன நாடகம்னு பாவம் அந்தக் காவியாவால் கண்டுபிடிக்கவே முடியலை,”

  எப்படி கண்டுபிடிக்க முடியும்?இந்தத் திகில் உலகம் பத்திரிக்கையை நடத்தி வந்ததே பேய்கள்தான் என்ற விசயம் காவியாவுக்குத் தெரியாமல் இருக்கறதுக்காக நாம் எவ்வளவு பொய்யான மேஜிக் எல்லாம் காட்டவேண்டி இருந்துச்சி?பத்திரிக்கை அலுவகம்,வாசகர் கடிதம்,இணையத்தளம் இப்படி எல்லாமே நாம் காவியாவோட கண்களுக்கு மட்டும் தெரியும்படி காட்டியிருந்த கண்கட்டு வித்தை என்பதும்,அப்படியே வேறு யாருக்காவது காவியா காட்டினால்,அவங்களோட கண்ணுக்கும் தெரியும்படி நாம் செஞ்சது காவியாவுக்குத் தெரிய வாய்ப்பே இல்லையே?பேய்களை மிஞ்சும் சக்தி இந்த மனுசப் பூச்சிங்களுக்கு எங்கே இருக்கு?” சீனிவாசன் சிரிக்க,கணேஷ் நீண்டு வெளியில் தொங்கிய தன் நாக்கை மடித்து உள்ளே விட்டபடி  பதில் சொன்னான்.

  ஆமாம்,நாம் கூட ஃபேஸ்புக் வெச்சிருப்போம் என்பதை அந்த மனுசப்பூச்சிங்களால எப்படி அறிய முடியும்?,”

  நாம் நெடுநாள் தேடியிருந்த,ஆடி மாசம்,வெள்ளிக்கிழமை,பதிமூனாம் தேதி பிறந்த கன்னிப்பெண்னோட ரத்தம் இன்னைக்கு நமக்குக் கிடைக்கப்போகுது,இனிமேல் நம்மை எந்த மந்திரவாதிகளாலும் நெருங்கவே முடியாது; அந்த இளம் கன்னி ரத்தத்தை இந்த யாகத்தை நல்லபடி செய்து முடிச்சிட்டா,நம்மை யாராலும் வெல்லமுடியாது,அப்புறம் இந்தப் பூமியில மட்டுமில்லை இந்தப் பிரபஞ்சத்துலயே நம்ம ஆட்சிதான்,”சொல்லிவிட்டு சீனிவாசன் வேடத்திலிருந்த பேய்களின் தலைமைப்பேய் சிரிக்க,பணியாளராய் வேசம் போட்டிருந்த குட்டிப் பேய்களும் குட்டிக்கரணம் அடித்து சிரித்தன.அப்போது அங்கு வந்த வயதான பேய் ஒன்று சந்தோச மிகுதியால் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியது;மனித ரத்தம் நிரப்பப்பட்ட பால்போத்தலை வாயில் கௌவிக்கொண்டிருந்த குட்டிப் பேய் ஒன்று அதைக்கண்டு குலுங்கி குலுங்கி சிரித்தது.திடீரென தலைமைப் பேயின் முகம் மாறியது.

  சரி,சரி கும்மாளமெல்லாம் போதும், எல்லாரும் போயி கொஞ்சநேரம் படுங்க,பதினொன்றரை  மணிக்கு எல்லாரும் அந்த கோனர் வீட்டுக்குப் போயி காவியாவுக்காக காத்திருக்கலாம்,” தலைமைப்பேய் உத்தரவிட்டதும் எல்லா பேய்களும் விழுந்தடித்து ஓடின; தத்தம் பிணப்பெட்டியைத் தேடிப்போய் அதில் படுத்து உறங்க ஆரம்பித்தன.


          

  காவியா அந்த இரண்டு மாடி வீட்டிற்குள் நுழைந்தபோது மணி இரவு 11:40 ஆகியிருந்தது.தன் கைபேசியின் வெளிச்சத்தைக் கொண்டு சில மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துவிட்டு,வீடியோ அழைப்பைத் திறந்து வைத்துவிட்டு,மடிக்கணினியில் ஸ்கைப் திறந்து வைத்தாள்.கணேஷின் முகம் பன்மடங்கு கவலையோடும்,பதட்டத்தோடும் இருந்தது.பேப்பரும்,பேனாவும் எடுத்துக்கொண்டு மெழுகுவர்த்திக்குப் பக்கத்தில் அமர்ந்தபோது மணி 11:55 ஆகியிருந்தது. கைபேசியில் நேரத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

11: 56...

11:57...

11:58..

11:59..

12:00....

   அந்த வீட்டையே அதிரவைக்கும் சிரிப்புடன் தலைமைப் பேய்களோடு எல்லா பேய்களும் காவியாவை நெருங்கி வந்தன.மிரண்டு நடுங்கிய அவளைச் சூழ்ந்துகொண்டு அவள் கழுத்தில் வாய்வைத்து ரத்தம் பருகின.காவ்யா வெளிறிப்போன உடலோடு பிணமாய்ச் சரிந்தாள்.

 

  திகில் உலகம் பத்திரிக்கை அலுவலகத்தை அடைந்த பேய்கள் கும்மாளத்தின் உச்சியில் இருந்தன.அப்போது தலைமைப் பேய் அங்கு எதையோ கண்டு மிரள,ஏனைய பேய்களும் அங்கே பார்த்தன.அங்கே காவியா உயிரோடு நின்று கொண்டிருந்தாள்.

     பேய்த்தின்னி ஜந்துகளின் இளவரசிதான் காவியா ரூபத்தில் இருந்தவள்  என்பதையும்,அவளுடைய ரத்தம் உடலில் கலந்தாலே பேய்களுக்கு அழிவு என்பதையும் அறியும் முன்னரே செத்து மடிந்திருந்தன அத்தனை பேய்களும்..........

 

 ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்...

 

 

No comments:

Post a Comment