Wednesday, October 9, 2013

இரட்டை பூரான் சடையும் கோணல் தலை பேயும்


இரட்டை பூரான் சடையும் கோணல் தலை பேயும்

 

இரட்டை பூரான் சடையும்
சீட்டுத் துணி பாவாடையுமாய்
துள்ளித் திரிந்திருந்த பொழுதில்
என்னைப் பின்தொடர்ந்து வந்த
கோணல் தலை பேயைப் பற்றி
வகுப்பில் இருந்த ஐம்பெரும் வாண்டுகளிடம்
கதையாய்ச் சொல்லியபோது
அறைக்குள் இலேசாய்
அமானுஷ்யத்தின் வாசம் வீசத் தொடங்கியிருந்தது.
 
 

முதல்நாள் கனவிலும்
இரண்டாம் நாள் குளியலறையிலும்
மூன்றாம் நாள் பள்ளிக் கழிப்பறையிலும்
நான்காம் நாள் என் காலுடைந்த கட்டிலுக்கடியிலும்
என்னைப் பின்தொடர்ந்து வந்த
அந்தப் பேயின் மொட்டைத்தலை செங்குத்தாக
பாதி மட்டுமே இருந்ததாக வர்ணித்தபோது
முதலாமவள் வாய்க்குள்ளேயே
கந்த சஷ்டி கவசம் பாடினாள்
இரண்டாமவள் அந்தப் பேயின்
பாதி கோணல் தலையை எண்ணிச் சிரித்தாள்
மூன்றாமவள் தன் சிலுவையை இறுகப் பற்றியிருந்தாள்
நான்காமவள் என்னிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள்
ஐந்தாமவள் அந்தப் பேய்
தன் கணக்கு டீச்சரை மாதிரி இருக்குமோ
என்ற யோசனையில் நெற்றி சுருக்கினாள்
 
 

நான் கோணல் தலை பேயின்
கதையைத் தொடர்ந்தேன்
ஐந்தாம் நாள் நள்ளிரவில்
நான் புரண்டு படுத்தபோது
அந்தக் கோணல் தலை பேய்
என் பக்கத்தில் மல்லாந்து படுத்திருந்ததைச்
சொல்லி முடித்தபோது
வீச் என அலறினாள் ஆறாமவள்

 
நொடிக்குள் வகுப்பறையின் சாளரத்து வழியே
எகிறி குதித்து
தன் தந்தையைத் தேடி ஓடிக்கொண்டிருந்த அவள்
இரட்டை பூரான் சடையும்
சீட்டுத் துணி பாவாடையும் அணிந்திருந்தாள்!!!!!!!

 

 

ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

No comments:

Post a Comment