Sunday, October 20, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் :கீதம் 18:ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு


கீதம் 18: ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
(வைதேகி காத்திருந்தாள் 1984)
 
 
 
 
 
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

பொழுதாகிப் போச்சு.... விளக்கேத்தியாச்சு

பொன்மாலை உன்னைத் தேடுது

 

    பாடகர் ஜெயச்சந்திரனின் ஈர்க்கும் குரலில் காற்றோடு கலந்து வரும் அந்த இனிய கீதத்தைக் கேட்டு நீங்கள் உருகியிருக்கிறீர்களா?வைதேகி காத்திருந்தாள் திரைப்பட பாடல் அது.

    1984-ஆம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த்,ரேவதி,பிரமிளா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த அருமையான கதையம்சம் கொண்ட படம் வைதேகி காத்திருந்தாள்.இளையராஜா ஐயாவின் இசையில் இப்படத்தில் ராசாத்தி உன்னை,ராசாவே உன்னை,காத்திருந்து காத்திருந்து,இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, மேகம் கருக்கையிலே,அழகு மலர் ஆட போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

   அனைத்து பாடல்களுமே ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்ந்தன என்றபோதிலும் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு என்ற பாடலே முதன்மையில் நிற்கிறது.உடுமலைப்பேட்டையில் இருந்த ஒரு திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் ஆற்றுக்குத் தண்ணீர் குடிக்க வரும் யானைக்கூட்டம் ஒன்று இப்பாடல் முடியும்வரை கேட்டு ரசித்துவிட்டுதான் செல்லுமாம்.தினமும் இந்தப் பாடல் ஒலிக்கும் வேளையில் அவை தவறாது வந்துவிடுமாம்.இது ஓர் இதழில் நான் படித்து வியந்த விசயம்.இனி பாடலுக்கு வருவோம்.

   தாடி,மீசை, ஒட்டுத்துணி வைத்து தைக்கப்பட்டிருக்கும் கிழிந்து போன ஜிப்பா சட்டை,காற்சட்டையோடு இருக்கும் வெள்ளைச்சாமி (விஜயகாந்த்) அந்த ஊருக்கு வந்து சில மாதங்களாகின்றன.யாருடனும் அவன் பேசுவதில்லை;ஊராருக்கு தினமும் தண்ணீர் இறைத்துக் கொடுக்கும் அவன் தினமும் இரவு எட்டு மணியானால் தன் கையில் இருக்கும் ஒரு ஜோடி சிலம்புகளைக் கொண்டு இசைத்தபடி பாட ஆரம்பிக்கிறான்.

  ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு என அவன் பாடுவதை ஒட்டுமொத்த கிராமமே கேட்டு இலயித்துப்போகிறது;அவனது பாடலில் வழிந்து ஓடும் சோகம் அனைவரையும் ஏதோ செய்கிறது.அந்தப் பாடலைக் கேட்கும்போது ஒரு பெண்ணின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருக்கும் ஆணின் உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.ஆனால் அது ஓர் அப்பாவிப் பெண்ணின் ஆழமான நேசத்தையும்,ஏக்கத்தையும் சுமந்து நிற்கும் இதயகீதம்.

  அவள் பெயர் வைதேகி (பிரமிளா).ஆரம்பத்தில் அவளைக் காட்டும்போது ஒலிக்கும் லாலா லாலா என்ற இசையே நம்மை ஒருவித இலயிப்புக்குள் கொண்டு போய் சேர்த்துவிடுகிறது.அதைத் தொடர்ந்து வரும் பாடலான ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு என பி.சுசிலா அம்மாவின் குரலில் ஒலிக்கும் ஏக்கமும்,காதலும் நிரம்பி வழியும் கீதம்தான் பின்னர் அதே ராகத்தில் ராசாத்தி உன்னை என ஒலிக்கிறது.

  அவள் பிறந்தது முதலே தன் மாமன் வெள்ளைச்சாமிக்குதான் என பெரியவர்களால் பேசி முடிக்கப்பட,அவள் மனதில் அவனையே கணவனாக எண்ணி கல்யாணக் கனவுகளில் மூழ்கி கிடக்கிறாள்;எந்நேரமும் அவன் நினைவாக வாடுகிறாள்.தன் மாமனை ஸ்ரீராமனாக உயர்வான இடத்தில் வைத்து நேசிக்கும் அவன் மீது அதீத அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திக்கொண்டேஇருக்கிறாள்.ஆனால் அவனுக்கோ அவளைச் சீண்டி வம்பிழுப்பதில்தான் அலாதிப் பிரியமாக இருக்கிறது.

        ஒருநாள் எதிரில் வரும் அவளைக் கண்டதும் ஓடி ஒளிகிறான் அவன்.அவளோ அவனைக் கண்டுபிடித்து விடுவதோடு அவனுக்காக வாங்கி வந்ததாக சொல்லி ஒரு ஜிப்பா சட்டையையும்,காற்சட்டையையும் எடுத்து வைக்கிறாள்.

  "உங்கப்பனுக்குக் கொண்டு போயி கொடு,” என்கிறான் வெறுப்பாக.

  இந்தச் சட்டையை வாங்கிக்கலன்னா காலைல நாலு மணிக்கே வீட்டுக்கு வந்து நிற்பேன்,” என அவள் மிரட்ட,துணியை வாங்கி கொள்ளும் அவன்,

 இனிமேல் நீ வரவேமாட்டேன்னு சொல்லு,இந்தச் சட்டையை அன்னாடம் போட்டுக்கறேன்,” என அவளைக் கடுப்பேத்துகிறான்.

 மறுநாள் அவன் தன் அறையில் படுத்துக்கொண்டே ஒரு நாவலில் மூழ்கியிருக்கிறான்.பட்டப்பகலில் கொலையா?அப்போ கதை ரொம்ப சுவாரஸ்யமாதான் இருக்கும்,” என்றபடி ஆவலாக படிக்க ஆரம்பித்த வேளையில் வைதேகி துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வீட்டைக் கூட்டுவதற்காக உள்ளே நுழைகிறான்.

 ஒன்னும் கூட்டவேணாம் என கடுப்போடு அவளைத் துரத்தும் வெள்ளைச்சாமி அவள் தலையில் சூடியிருந்த கனகாம்பரத்தைப் பார்த்ததும் பதறிப்போகிறான்.

அடிப்பாவி,பூ வியாபாரத்துக்காக தோட்டத்துல நட்டு வெச்சிருந்த என் கனகாம்பரத்தையெல்லாம் உன் தலையில வெச்சிக்கிட்டியே?” என திட்டுகிறான்.

  அவன் தோட்டத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் தனக்குதானே சொந்தம் என்பதுபோல் அவள் அதைப் பெரிதுப்படுத்தாமல் முந்தானை முடிச்சு படம் பார்க்கப்போவதற்காக அவனிடம் பணம் கேட்க அவன் தலையில் அடித்துக்கொள்கிறான்.

 அந்தப் படத்தையெல்லாம் நீ பார்க்கக்கூடாதுடி அறிவுகெட்டவளே,” என திட்ட,அவள்,” ஊரிலிருக்கும் எல்லா பொண்ணுங்களும் பார்க்கறங்களே?” என வாய் பேசுகிறாள்.

  மூஞ்சியைப் பாரு,இருட்டுல பிடிச்ச கொழுக்கட்டை மாதிரி,” என அவளைத் திட்டி வெளியே தள்ளுகிறான்.ஆனாலும் அவனது உதாசீனமோ, வார்த்தைகளோ அவளைக் காயப்படுத்தவே இல்லை.அவன் மீது வைத்திருந்த நேசம் அவளுக்குக் கொஞ்சமும் குறையவில்லை.

  ஒரு தடவை யானையின் நிறம் கருப்பு என அவள் ஒரு சிறுவனுக்குப் பாடம் சொல்லித்தர,அச்சிறுவன்,” நம்ம மாமா மாதிரியா?” என கேட்டுவிடுகிறான்.உடனே அவனை அடித்துவிடுகிறாள்.

  அவனை மாதிரி மற்றவர்களும் தன் மாமனின் கருப்பு நிறத்தைக் கிண்டல் செய்துவிடுவார்களோ என தவிக்கும் அவள் தினமும் மலையுச்சியில் கொளுத்தும் பாறையின் மேல் ஏறி வெயிலில் மணிக்கணக்கில் நின்று தன் நிறத்தையும் கருப்பாக்கிக் கொள்ள முயல்கிறாள்.ஊராருக்கு அது வேடிக்கையாகவும்,பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது.அவளுக்குப் பேய் பிடித்துவிட்டதோ என பலவிதமாக பேசுகிறார்கள்.கேட்பவர்களிடத்தில் இடக்கு முடக்காக பதில் சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் வெயிலில் நிற்கிறாள்.

   ஊரில் எல்லாரும் அதைப் பற்றியே பேச,வெள்ளைச்சாமிக்குக் கோபம் உண்டாகிறது.அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளக்கைத் துடைப்பதிலேயே மும்முரமாக இருக்கும் தன் அம்மாவிடம்,”அதென்னா அலாவுடின் விளக்கா?இப்படி துடைக்கற,அதுல இருந்து பூதம் வராது;பிசாசுதான் வரும்.உன் மருமக வைதேகிதான் அது,” என கடுப்பாக சொல்லி புலம்புகிறான்.வைதேகி தினமும் வெயிலில் நின்று கொண்டிருப்பதன் காரணத்தைக் கேட்க சொல்கிறான்.

 மாமா என்னைவிட கலரு கம்மியா இருக்காருஅவரு மாதிரி வரனும்னுதான் நானும் அன்னாடம் வெயிலில் நிக்கிறேன்,” என அவள் சொல்வதை மறைந்திருந்து கேட்கும் வெள்ளைச்சாமியின் முகத்தில் அவளின் வார்த்தைகளைக் கேட்டதும் சிரிப்பு உண்டாகிறது.இருந்தாலும் தனது ஆசையை மறைத்துக்கொண்டு கோபமாக வெளியில் வருகிறான்.

 இவ ஒன்னும் நல்லதுக்காக இப்படி செய்யலம்மா,என் மாமன் கருப்பு என்று ஊருக்கெல்லாம் சொல்லனும்,அதுதான் இவளது ஆசை,” என அவளைத் தொடர்ந்து சீண்டுகிறான்.

     தன் மாமன் எந்நேரமும் திட்டிக்கொண்டே இருப்பதால் வைதேகி இரண்டு தினங்களாக வீட்டுக்கு வராமல் இருக்கிறாள்.அவனால் அதைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை.தன் அம்மாவிடம் அவள் ஏன் வரவில்லை என கேட்டுக்கொண்டே இருக்கிறான்.

 மனதில் அவள் மீது இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு ஏன் இப்படி வெளியில் எரிந்து விழுகிறாய்?” என கேட்கும் அம்மாவிடம், என் மாமன் மகளிடம் நான் விளையாடாமல் வேறு யார் விளையாடுவது?” என சொல்லிவிட்டு அவளைத்தேடிப் போகிறான்.

    வயலில் வெலை செய்து கொண்டிருக்கும் வைதேகியை நெருங்கி ஏன் இரண்டு தினங்களாக வீட்டுக்கு வரவில்லை என்கிறான்.

  சும்மாதான்...நீங்கதான் வரவேண்டாம்னு சொன்னீங்களே?”அவன் முகத்தைப் பார்க்காமல் சொல்லும் அவள் குரலில் சோகத்தோடு செல்லக்கோபமும் எட்டிப் பார்க்கிறது ,

  ஒழுங்கா வீட்டுப் பக்கம் வா,” என மிரட்டும் தொனியிலேயே சொல்லிவிட்டு போகிறான்.

  மறுநாள் அவனுடைய இன்னொரு மாமாவும்,அத்தையும் அவன் வீடு தேடி வருகிறார்கள்.முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தங்கள் மகளை முறைமாமனான அவனுக்குக் கட்டித்தர எண்ணம் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.தன் அத்தை மகள் வைதேகியைத் தவிர வேறு யாரையும் மணக்க தனக்கு விருப்பமில்லை என அவன் மறுத்துவிடுகிறான்.   முகம் கருத்து,சாப்பிடாமல் புறப்பட்டுப் போகிறார்கள் அவனது அத்தையும்,மாமாவும்.

   அந்நேரம் வெள்ளைச்சாமி தான் எதிர்பார்த்ததுபோல் வைதேகி அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறான்.தன் அம்மாவிடம் அவளிடம் விளையாடிப் பார்க்கலாம் என்கிறான்.அவள் பயப்பட,”கல்யாணத்துக்கு முன்னாடி அவகூட விளையாடப் போற கடைசி விளையாட்டு இதுதான் அம்மா,” என்கிறான் அவன்.

  எதிரில் தென்பட்ட தன் உறவுக்காரர்களிடம்,”எதுக்காக இந்தப் பக்கம் வந்துட்டுப் போறீங்க?” என வைதேகி கேட்க,”எங்க மகளை வெள்ளைச்சாமிக்கு கல்யாணம் பண்ணறது சம்பந்தமாதான்,” என அவர்கள் கடுப்பாக சொல்லிவிட்டுப் போகும் வார்த்தைகளின் தொனியில் இருக்கும் மாறுபாட்டை உணராத அவள் வயிற்றில் அந்த வார்த்தைகள் புளியைக் கரைக்கின்றன.இருந்தாலும் அவள் எதையும் கேட்காமல் மௌனமாக வீட்டிற்குள் நுழைகிறாள்.

    உள்ளே போனவள் தேங்காய்த் துருவியை எடுத்துக்கொண்டு வந்து தரையில் அமர்கிறாள்.தேங்காயைத் துருவிக்கொண்டே,”அவங்க எதுக்காக வந்துட்டுப் போறாங்க?” என கேட்கிறாள்.அவள் அப்படி எப்போது கேட்பாள் என எதிர்பார்த்து காத்திருந்தவன் அவளது சோகத்தை இரசிக்கிறான்.

  அவர்கள் வெள்ளைச்சாமிக்கு தங்கள் மகளை கேட்க வந்த விசயத்தை அத்தை சொன்னதும் ஒருகணம் சோர்ந்து போகும் வைதேகி விசும்பிக்கொண்டே, இருக்கும் கொஞ்ச நம்பிக்கையை நெஞ்சில் சுமந்தவாறு ,”அதுக்கு இந்த மாப்பிள்ளை என்ன சொன்னாரு?என கேட்கிறாள்.அவள் வேதனை அவனுக்கு விளையாட்டாகவே இருக்க,

     வெள்ளைச் சாமி தான் அந்தப் பெண்ணை மணப்பதற்கு சம்மதித்துவிட்டதாய் பொய் சொல்லிவிட்டு தன் சட்டைப் பையில் வைத்திருந்த வைதேகியின் படத்தை தன் அம்மாவிடம் காட்டிவிட்டு,” இவதான் என் மாமன் பொண்ணு,நான் கட்டிக்கப்போறவ,அவ கண்ணைப் பார்த்தா வண்னக்கிளி,பாடினா வண்ணக்குயில்,மொத்தத்துல அவ ஒரு வஞ்சிக்கொடி,” என முன்பு அவள் தன்னை வர்ணித்துக்கொண்ட வார்த்தைகளையே கொண்டு வர்ணிக்க,கண்கள் கலங்கி துடிக்கும் அவளால் அவன் தன்னைத் தான் குறிப்பிடுகிறான் என அறியமுடியவில்லை.  

  இந்தா நான் கட்டிக்கப்போற பொண்ணோட படத்தைப் பாரு,” என அவளது புகைப்படத்தை அவளிடமே நீட்டிவிட்டுப் போகிறான்.அவள் அத்தையும் தன் பங்குக்கு,”என் மருமகளோட படத்தை நீயும் ஒருதடவை பார்த்துக்கோ,” என சொல்லிவிட்டுப் போகிறார்.அவள் மனமுடைந்து போகிறாள்.

   தான் அளவுக்கதிகமாய் அன்பு வைத்திருக்கும் தன் அன்பிற்கினியவன் இன்னொரு பெண்ணை இரசிப்பதை எந்தப் பெண்ணால் தாங்கி கொள்ள இயலும்?? துண்டு துண்டாய் உடைந்து போகும் அவள் அந்த ஏமாற்றத்தைத் தாங்கி கொள்ள முடியாமல் அழுது தவிக்கிறாள்.தான் ஆழமாய் நேசிப்பவன் தனக்கில்லை என்ற உண்மை அவளை இரணமாய் கொல்ல,வஞ்சி அவள் அரளிவிதையை அரைத்து சாப்பிட்டுவிடுகிறாள்.இறப்பதற்கு முன் மாமன் சொன்ன வார்த்தைக்காக அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவள் மறுகணம் தலையில் அடித்துக்கொள்கிறாள்.தன் அவசர புத்தியை நொந்துகொள்பவள் தண்ணீர் தேடிப்போக,தடுமாறி தண்ணீர்க்குடத்தைத் தட்டிவிடுகிறாள்;தண்ணீர் முழுதும் சிந்திவிடவே சாமி படத்தின் முன் நின்று,தன் மாமன் வரும்வரையில் தன் உயிர் போய்விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டு நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்கிறாள்.

   திருமணத்திற்குத் தேவையான சேலை,துணிமணிகள்,நகைகள்,தாலியோடு வீடு திரும்புகிறான் வெள்ளைச்சாமி.தன் அம்மா சொன்னபடி அவளிடம் சேலை,துணிமணிகள்,தாலி அடங்கிய பையை நீட்டுபவன் அவளைத் தன் காலில் விழுந்து வணங்க சொல்கிறான்.இரண்டு முறை தள்ளி நின்று விளையாட்டு காட்டும் அவன் முகத்தைச் சோகமாய் பார்த்தபடி அவன் காலைத் தொட்டு முத்தமிடும் அவள் அப்படியே சுருண்டு விழ,அவன் பதறிப் போகிறான்.அவளை வாரியெடுக்க,அவள் வாயில் நுரை தள்ளியிருப்பதைக் கண்டு பயந்து போகிறான்.தண்ணீர் எடுக்கப் போகிறான்;தண்ணீர் எல்லாம் கிழே சிந்தி கிடக்க,அவன் அமமவின் அலறல் கேட்கிறது.வைதேகி இறந்துவிட்டாள் என்பதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

  அவள் இறந்தபிறகு அந்த ஊரில் எதைப் பார்த்தாலும் அவள் நினைவாகவே இருக்கிறது.தன் எல்லா துணிகளையும் தூக்கி எறிந்துவிட்டு அவள் வாங்கி தந்த ஜிப்பா சட்டையையும்,கால்சட்டையையும் நிரந்தரமா அணிந்து கொள்கிறான்.அவள் நினவாக பத்திரப்படுத்தி வைத்திருந்த அவளது கால் சிலம்புகளை எடுத்துக்கொண்டு வேறொரு ஊருக்கு வருகிறான்.தண்ணீர் இல்லாமல்தானே தன் வைதேகி இறந்துபோனாள்;அந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று அந்த ஊருக்கே தண்ணீர் இறைத்துக்கொடுக்கிறான்.தன் எண்ணங்களையும்,ஏக்கத்தையும்,தனிமையையும் அந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறான்.

   வாலியின் வரிகளில்,ஜெயச்சந்திரன் ஐயாவின் குரலில் இதமாய் வருடிப்போகும் அந்தப் பாடலை நாமும் பாடிப்பார்க்கலாமா?என் மாய உலகில் என்னோடு உறவாடிக்கொண்டிருக்கும் அன்பிற்கினியவனுக்கும்,அனைத்து தினக்குரல் வாசகர்களுக்காகவும் இப்பாடல் சமர்ப்பணம்.

 

 

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

பொழுதாகிப் போச்சு.. விளக்கேத்தியாச்சு

பொன்மாலை உன்னைத் தேடுது

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

 

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே

பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே

முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாகவேண்டும் வா வா கண்ணே

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

பொழுதாகிப் போச்சு.. விளக்கேத்தியாச்சு

பொன்மாலை உன்னைத் தேடுது

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது
 



மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

அத்தை மகளோ மாமன் மகளோ

சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட

அம்மாடி நீதான் இல்லாத நானும்

வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

பொழுதாகிப் போச்சு.. விளக்கேத்தியாச்சு

பொன்மாலை உன்னைத் தேடுது

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போல் ஆடுது

காத்தாடி போல் ஆடுது

 

No comments:

Post a Comment