Tuesday, October 8, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 16 : ராஜா மகள் (பிள்ளை நிலா)


     
 
 
            
இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் ஒரு திகில் பாடலை எழுதலாம் என எண்ணம் கொண்டுள்ளேன்.காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டு,பழி உணர்ச்சியோடு அலையும் ஆவிகளுக்கென தமிழ்ப்படங்களில் சில கீதங்கள் உண்டு.அவற்றில் ஒன்றுதான் ராஜாமகள் ரோஜாமகள் என்ற பாடல்.பழிவாங்கும் வெறியோடு சுற்றிக்கொண்டிருந்த ஓர் ஆவியின் சோககீதம் இது.

  நடிகர் மோகன்,ராதிகா,நளினி,பேபி ஷாலினி,ஜெயசங்கர் ஆகியோரின் நடிப்பில் 1985- ஆம் ஆண்டு,மனோபாலாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பிள்ளை நிலா.திகில் படமான இதில் அழகே அழகே,ராஜாமகள் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

  ராஜாமகள் ரோஜாமகள் என்ற பாடல் இப்படத்தில் மூன்று கட்டங்களில் ஒலிக்கிறது.

  இப்படத்தில் ஆவியாக நடித்திருக்கும் ராதிகா திமிர் பிடித்த பணக்கார பெண்ணான டோலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

  டோலியின் பெற்றோர் இறந்த பிறகு அவளுடைய அண்ணன் டேவிட்(ஜெய்சங்கர்) அவளை எந்தக் குறையும் இல்லாது வளர்க்கிறான். அவனுடைய கண்மூடித்தனமான பாசம் அவளைக் கெடுக்கிறது.ஆணவம் கொண்டு எல்லாரையும் எடுத்தெறிந்து பேசும் டோலி தன்னிடம் வீம்பாக நின்ற கல்லூரி முதல்வரை வேலையைவிட்டு மாற்றல் செய்வதற்காக அந்தக் கல்லூரியை உடனே விலைக்கு வாங்கி விடுகிறாள்.

    அக்கல்லூரியில் கண்துடைப்புக்காக தன்னை எதிர்த்துப் போட்டியிட செய்த சேகருக்கு(சின்னி ஜெயந்த்) ஓட்டுப்போட்ட மோகனின்(மோகன்) மேல் கோபம் கொள்கிறாள்.ஓட்டுப்போடுவது தன் உரிமை என சொன்ன மோகனை தன் ஆட்கள் மூலம் நைய புடைக்கிறாள்.

    தன் கல்லூரிக்கு நல்ல பெயர் கிடைக்கவேண்டும் என்ற அண்ணனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு தேர்வில் சிறந்த புள்ளியைப் பெறும் மாணவரை 15 நாள் தன் சொந்த செலவில் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துப் போவதாய் சொல்கிறாள்.அவள் எதிர்பாரவிதமாக மோகன் தேர்வில் அதிக புள்ளிகளைப் பெறுகிறான். 

  அவனைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் இடத்தில் வேண்டுமென்றே அவனை சீட்டாடிக்கொண்டிருக்கும் கும்பலிடம் மாட்டி விடுகிறாள்.அவர்கள் அவனை அடித்துவிட்டு அவளையும் பலவந்தமாக கற்பழிக்க முயல,உடனே அவளுடைய அண்ணனிடம் தகவல் சொல்கிறான்.அவள் அண்ணன் விரைந்து வந்து காப்பாற்றும் வேளையில் அவளுக்காக சண்டை போடுகிறான்.அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவள் திருந்துகிறாள்.

அவன் செய்த உதவி அவளைப் பாடாய்ப்படுத்த,அவன் மீது அவளுக்கு அபிப்ராயம் வருகிறது.அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

  அவன் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.என்னதான் திமிர் பிடித்தவங்களா இருந்தாலும் கூட யாராவது ஒருவரிடம் அன்பாக இருப்பார்கள்.உங்களுக்கு அந்த அன்பு என் மேல வந்திருக்கு,” என்றதும் அவனிடம்,’ என்னைப் பற்றி என்ன நினைக்கறீங்க?” என கேட்கிறாள்.உடனே அவன் ராஜா மகள்,ரோஜா மகள் என பாடுகிறான்.அப்போது இந்தப் பாடல் சந்தோசமாய் ஒலிக்கிறது.அவன் அவளைப் புகழ்ந்து பாடுவது அவள் மனதை மகிழ்ச்சிப்படுத்தவே அவன் மீதான நேசம் வளர்கிறது.


  அவன் ஊரிலிருக்கும் தன் அம்மாவிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்காக தொலைபேசி வசதி செய்து கொடுக்கிறாள்.அவனுக்கு படிப்பு முடிந்ததும் தனக்குச் சொந்தமான ஒரு பிரபல விடுதியில் மேலாளர் பதவி கொடுக்கிறாள்.அவன் உணர்ச்சிப் பெருக்கோடு அவளுக்கு நன்றி சொல்கிறான்.நல்ல வேலை கிடைத்துவிட்ட சந்தோசத்தோடு வீட்டுக்குச் செல்கையில் அங்கே அவனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது.ஆதரவின்றி இருக்கும் அவனுடைய அத்தை மகள் புவனா (நளினி) அங்கு இருக்கிறாள்.அவன் அம்மாவின் தூண்டுதலின் பேரில் புவனாவைத் திருமணம் செய்துகொண்டாலும் அவனுக்கும் அவள்மேல் ஆசை இருக்கவே செய்தது.சந்தோசமான தாம்பத்தியத்தின் பலனாக புவனா கர்ப்பம் அடைகிறாள்.

   புவனா நிறைமாத கர்ப்பமாய் இருக்கும் சமயத்தில் மோகனைத் தேடி வரும் டோலி அவனிடம் தன் காதலைத் தெரிவிக்கிறாள்.அதிர்ச்சி அடையும் அவன் தனக்குத் திருமணமாகிவிட்ட விசயத்தை சொல்கிறான்.அவள் அவனுடைய அம்மாவை வரவழைத்து பணத்தைக் காட்டி தன்னைத் திருமணம் செய்துகொள்ள சொல்கிறாள்.தன் மருமகளுக்கு தன்னால் துரோகம் செய்ய முடியாது என அவன் அம்மா எழுந்து போக,அவனும் மறுக்கிறான்.

  மறுநாள் வானில் பௌர்ணமி நிலா பெரியதாக இருந்த வேளையில் கிறிஸ்துவ மணப்பெண் மாதிரி வெள்ளை நிற கவுனில் டோலி அவனை நெருங்குகிறாள்.சில வினாடிகளுக்காவது அவனுக்கு மனைவியாக இருக்க ஆசைப்படுவதாக சொல்லி,தன் கையில் மோதிரத்தை மாட்ட சொல்கிறாள்.அவன் அமைதி காக்கிறான்.டோலியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை.அவனை மிரட்டிப் பார்த்தும் அவன் வழிக்கு வராததால் அவள் அந்த விடுதியின் மாடியிலிருந்து குதித்து இறந்து போகிறாள்.அவள் உயிர்விட்ட நேரத்தில் புவனாவுக்கு குழந்தை பிறக்க,மருத்துவமனை ஒரு கணம் இருட்டாகிறது.அந்தக் கணத்தில் குழந்தையின் உடலில் புகுந்து கொள்கிறது டோலியின் ஆவி.

   நான்கு வருடங்களுக்குப் பிறகு குழந்தை ஷாலினியின் (பேபி ஷாலினி) பிறந்தநாள் விழாவில் யாராவது பாடுங்களேன் என புவனா கேட்க,குழந்தையே பாடுகிறது.ராஜாமகள் ரோஜாமகள் என அதே பாட்டை குழந்தை பாட,மோகன் உறைந்து போகிறான்.அவன் மனதில் குழப்பம் தோன்றுகிறது.குழந்தையின் கண்களிலோ ஒரு வெறி தோன்றுகிறது.அதன் பிறகு அவன் வீட்டில் சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கின்றன.பியானோ சொந்தமாக இசைக்கிறது.

  மோகன் ஒரு மனநல மருத்துவரிடம் தனது மகளை அழைத்துப்போய் காட்டுகிறான்.அவரிடத்தில் குழந்தை தனக்கு பெரிய நிலா என்றால் அதிகம் பிடிக்கும் என்கிறாள்.சிவப்பு நிறம்தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என்கிறாள்.தன் அம்மாவையும்,பாட்டியையும் பிடிக்கவே பிடிக்காது என குரோதத்தோடு சொல்கிறாள்.அந்த மனநல மருத்துவராலும் முழுமையாய் எதையும் கணிக்க முடியவில்லை.

  அன்றிரவு பெரிய நிலா வந்ததும் குழந்தையின் கண்கள் கோபமாய் மாறுகின்றன.பாட்டியுடன் தனித்திருக்கும் குழந்தை அவள் கழுத்தை இறுக்கி கொல்ல நினைக்கையில் மோகன் வந்து காப்பாற்றிவிடுகிறான்; ஆத்திரத்தில் குழந்தையை அடித்தும் விடுகிறான்.

  அவன் மீண்டும் மனநல மருத்துவரைப் போய் பார்க்க,அவர் ஆவிக்குப் பேய் பிடித்தால் ஆபத்து என சொல்லி குழந்தையைக் கொஞ்சநாள் தனியாக ஒரு விடுதியில் சேர்த்து படிக்க வைக்க சொல்கிறார்.அவன் மருத்துவரைச் சந்தித்து பேசிவிட்டு வருவதற்குள் குழந்தை தன் தாயாரோடு இரயிலில் சென்றிருப்பதாக மனைவி சொல்ல,அவன் பதறிப்போய் காரை எடுத்துக்கொண்டு இரயில் பாதையில் போகிறான்.

  பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தை பெரிய நிலாவைக் கண்டதும் வெறி பிடித்தாற்போல் வெறித்துப் பார்க்கிறது.தன் பாட்டியைக் கொன்றுவிடுகிறது.

  மோகன் குழந்தையை கண்டபடி திட்டுகிறான்.அதுவோ ஒன்றுமே தெரியாதது மாதிரி அவனிடம் அழுகிறது.அவன் மந்திரவாதியை நாடி செல்கிறான்.எல்லா விசயத்தையும் சொல்கிறான்.கிறிஸ்துவ பெண் என்றதும் தன்னால் அந்த ஆவியை எதுவும் செய்யமுடியாது என அவனை அனுப்பிவிடுகிறார் மந்திரவாதி.அவர் தமது சீடனிடம் பேசுவது மோகனின் காதில் விழுகிறது.

இந்து பெண்ணாக இருந்திருந்தால் கல்லறையைத் தோண்டி பிணத்தை எரித்துவிட சொல்லலாம்.கிறிஸ்துவ பெண் என்பதால் அவர்களது மத சம்பிரதாயங்களை மீறி எப்படி எரிப்பது ;அதனால்தான் அவனுக்கு உதவ முடியாது,” என மறுத்துவிட்டதாக சொல்கிறார்.அந்தப் பிணப்பெட்டிக்குள் வெறும் எலும்பு மட்டும் இருந்தாலும் கூட,அதில் இருக்கும் ஒரு சிறு புழு பூச்சியைக் கூட எரித்துவிடுவதுதான் நல்லது,அதன்பிறகு அந்த ஆவியால் எதையும் செய்யமுடியாது,” என்கிறார்.

  
அன்றிரவு மோகன் யாருக்கும் தெரியாமல் கடப்பாரை,மண்வெட்டி முதலியவற்றை எடுத்துக்கொண்டு இடுகாட்டுக்குப் போகிறான்.டோலியின் கல்லறையைத் தோண்டி,அவளது பிணப்பெட்டியை எடுக்கிறான்.அந்த பிணப்பெட்டியை உடைக்க முயலும்போது அவனது காரில் விளக்குகள் எரிய,கார் சொந்தமாக நகர்ந்து அவனை நோக்கி வருகிறது.அவனைத் துரத்துகிறது.அவன் பயந்து ஓடுகிறான்.கொஞ்சதூரம் சென்றதும் காரின் விளக்குகள் அணைந்து கார் நிற்கிறது.இவன் பயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு காரின் அருகே செல்கையில் மீண்டும் அது விளக்குகளை உயிரூட்டிக்கொள்கிறது;கார் சுழல ஆரம்பிக்கிறது;டோலியின் சிரிப்பு சத்தம் பயங்கரமாக ஒலிக்கிறது.பின் அவனை கார் மீண்டும் துரத்தவே,அவன் வேகமாய் ஓடுகிறான்.அருகில் ஒரு கோயில் தெரிய,அக்கோயிலுக்குள் நுழைந்து விடுகிறான்.ஆவியால் கோயிலுக்குள் நுழைய முடியாததால் கோயிலுக்கு வெளியே நிற்கிறது.

   டோலியின் ஆவி அங்கு தோன்றுகிறது.இறக்கும்போது அணிந்திருந்த வெள்ளை நிற கவுன் அணிந்து கொண்டு சோகமாய் நிற்கும் ஆவி,ராஜாமகள் பாடலின் சரணத்தை அழுதுக்கொண்டே சோகமாய் பாடுகிறது.

   இளையராஜா இசையமைத்துள்ள இப்பாடலைப் பி.ஜெயச்சந்திரன்,எஸ் ஜானகி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.குழந்தைப் பாடலையும்,ஆவி பாடும் பாடலையும் ஜானகியம்மா தனித்து பாடியுள்ளார்.இப்பாடலை எழுதியவர் வாலி.

  திமிரும்,கோபமும் கொண்டவளை கூட ரசித்துப் பாடுவதாய் அழகாய் எழுதியிருப்பார்.அதே மாதிரி பிறந்தநாளின்போது குழந்தை அதே பாடலைப் பாடும்போது,

கட்டில் வர எண்ணமிட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள்

மன்னவனே உன் நினைவில் வெந்நிலவாய் தேய்ந்தவள்

என்ற வரிகளை அதே மெட்டில் கொடுத்திருப்பார்.பின்னர் ஆவி பாடும்போது சரணத்தை,

உன்னோடுதான் பின்னோடுதான் ஓடிவரும் நாளிலே

பொன்னழகை பூவழகை அள்ளியெடு தோளிலே

வந்தவளை தீயிலிட எண்ணுவது நியாயமா?

தீயிலிட தீயிலிட தோன்றிடுவேன் மாயமா

வாழ வரும் மாது தேடி வரும்போது

கோபம் வரலாமா? வேறு இடம் ஏது? மாலையிட வா

என அந்த ஆவியின் நிலையையும் அழகாய் அதே மெட்டில் எழுதியிருப்பார்.நாம் சந்தோசமான சூழலில் ஒலிக்கும் பாடல் வரிகளைப் பார்ப்போமா?

     இப்பாடலை அன்பிற்கினியவனுக்கும்,தினக்குரல் ஆசிரியர் குழுவுக்கும்,நிருபர் குழுக்கும்,வாசகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

 

 

  ராஜாமகள் ..........ரோஜாமகள்  .....
    ராஜாமகள்...... ரோஜாமகள்
   வானில் வரும் வெண்ணிலா
   வாழும் இந்தக் கண்ணிலா
   கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா?
   ராஜாமகள்....... ரோஜாமகள்

 

பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடுதான் பார்க்கிறேன்
பூவென்பதா பெண்ணென்பதா
நெஞ்சோடு நான் கேட்கிறேன்
முள்ளோடுதான் கண்ணோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
வண்ணமலரே......
ராஜாமகள்....... ரோஜாமகள்.......

 

ஆடைகளும் ஜாடைகளும்
கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும்
கைவணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணையிட
பொங்கும் கடல் ஓயலாம்
காலை முதல் மாலை வரை
சூரியனும் காயலாம்
தெய்வமகள் என்று
தேவன் படைத்தானோ
தங்க சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ
மஞ்சள் நிலவே....

 
ராஜாமகள் ரோஜாமகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா?
ராஜாமகள் ரோஜாமகள்

 

 

 

 

No comments:

Post a Comment