Monday, October 28, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்:கீதம் 19:கேளடி கண்மணி பாடகன் சங்கதி (புதுப்புது அர்த்தங்கள் - 1989)


   கீதம் 19 : கேளடி கண்மணி பாடகன் சங்கதி (புதுப்புது அர்த்தங்கள்)
 
 
 
 
         என் அம்மாவுக்கு இளையராஜாவின் பாடல்கள் என்றால் கொள்ளை ஆசை.தோட்டப்புறத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்தாலும் மாதந்தோறும் இளையராஜாவின் பாடல் ஒலிநாடாவை வாங்கத் தவறியதேயில்லை.90-ஆம் ஆண்டுகளின் பல பாடல்களை அம்மா வாங்கி குவித்திருந்தார்.

   என் அம்மா வீட்டில் சிறிய வானொலி வைத்திருந்தார்.அதில் அம்மா வாங்கி வைத்திருக்கும் ஒலிநாடாவில் உள்ள பாடல்களைக் கேட்டு இரசிப்பதில் அலாதி இன்பம் எனக்கு.எங்கள் வீட்டு வரிசையில் இருந்த லில்லி அக்காளும் என்னோடு இணைந்து கொள்வார்.

  பதின்ம வயதின் இறுதியில் இருந்த லில்லி அக்காள் தினமும் இரவில் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்.இரவில் நிலா ஒளியில் வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில் அமர்ந்து அந்தச் சிறிய வானொலியில் இளையராஜா ஐயாவின் பாடல்களைக் கேட்டு இரசிப்போம்.அக்காள் அந்தப் பாடல்களை இரசித்துப் பாடுவார்.நான் ரேடியோவுல வர மாதிரியே பாடறேனா பாரு,” என்பார்.லில்லி அக்காளின் குரல் ஜானகியம்மாவின் குரல் மாதிரியே இருக்கும்.அந்தப் பாடல் எந்தப் படத்தில் ஒலித்தது,எந்தச் சூழலில் ஒலித்தது,அப்படத்தில் யாரெல்லாம் நடித்தார்கள் போன்ற விசயங்களையெல்லாம் லில்லி அக்காள்தான் எனக்கு சொல்வார்.

   லில்லி அக்காளுடன் கேட்டு இரசித்த பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இடம்பெற்ற கேளடி கண்மணி பாடல்.அந்தப் பாடலைக் கேட்க கேட்க எனக்கு பரவசமாக இருந்தது.சீக்கிரமாக நானும் லில்லி அக்காள் மாதிரி பெரிய பிள்ளையாகிவிடவேண்டும் என நினைத்துக்கொள்வேன்.தூங்கும்போதும் அந்தப் பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

  இன்றைய உதயகீதங்கள் தொடரில் லில்லி அக்காளுக்குப் பிடித்தமான கேளடி கண்மணி பாடலைப் பற்றி பகிர்வதில் மகிழ்கிறேன்.

  கே.பாலச்சந்தர் ஐயாவின் இயக்கத்தில் 1989-ஆம் ஆண்டு ரகுமான்,கீதா,சித்தாரா,ஜெயசித்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்புது அர்த்தங்கள்.இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார்.இப்படத்தில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே,குருவாயூரப்பா,எடுத்து நான் விடவா என் பாட்டை,எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடனும்,’ போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

  மணிபாரதி (ரகுமான்) புகழ்ப்பெற்ற பாடகன்.திரைப்படத்திலும் பாடல்களைப் பாடும் அவனுக்கு இரசிகைகள் அதிகம்.அவன் எங்குச் சென்றாலும் அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்கள்;கையொப்பம் கேட்டு வரிசையில் நிற்பவர்கள்,அவனது புகைப்படம் அட்டைப்படத்தில் வந்தால் யாருக்கும் தெரியாமல் முத்தம் கொடுப்பவர்கள் இப்படி பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு அவன் பிரபலமாக இருந்தான்.அவனது பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள் வெள்ளிவிழாவை எட்டின.

  பணக்கார திமிரும்,அகம்பாவமும் கொண்ட ஜெயசித்ராவின் மகளான கௌரி (கீதா) பணக்காரி என்ற இறுமாப்பு கொண்டவள்.ஒரு தடவை அவளுடைய தோழி தொலைக்காட்சியில் ஒலியும்,ஒளியும் நிகழ்ச்சிக்கு முன் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் மணிபாரதி தோன்றும்போது முத்தம் கொடுப்பதோடு, தான் அவனது தீவிர இரசிகை என்கிறாள்.

  பணத்தாசை பிடித்த கௌரிக்கு எப்போதும் மற்றவர்களால் அடைய முடியாததை தான் அடைந்துவிடவேண்டும் என்ற திமிர் அதிகம்.அவள் தன் அம்மாவிடம் தனக்கு மணிபாரதி வேண்டுமென கேட்க,அவள் அம்மாவும் சிறு நாடகம் ஒன்றை அரங்கேற்றி மணிபாரதியிடம் நல்ல பெயர் வாங்கி கொள்கிறாள்.மணிபாரதி தன் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்பும்போது அவனது குளிர்க்கண்ணாடியை எடுத்து மறைத்துவைத்துக்கொள்ளும் கௌரி அதைக் கொடுக்கும் சாக்கில் பெங்களூருக்கு விமானத்தில் பறந்து போய் மணிபாரதி தங்கியிருந்த விடுதியின் கதவைத் தட்டுகிறாள்.தன் கண்னாடியைக் கொடுப்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளே என்ற சின்ன உறுத்தலோடு அவன் நன்றி கூற,’அவ்வளோதானா?” என கேட்கும் அவள் அழுகையினூடே தான் அவனை அளவுக்கதிகமாக நேசிப்பதாக சொல்கிறாள்.அவள் அழுகையையும்,தொடர்ந்து வரும் கூச்சத்தையும் அவன் படம்பிடிக்க,இருவருக்கும் காதல் ஆரம்பமாகிறது;ஒருநாள் எல்லை மீறிவிடுகிறார்கள்.

  மணிபாரதியை உடனடியாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்தில் தன் அம்மாவை அனுப்பி கர்ப்பமாக இருக்கும் தன் மகளுக்கு நல்ல பதில் சொல்லவேண்டும் என கேட்கவைக்கிறாள்.

  மணிபாரதியை காதலோடு மணப்பது என்பதைக் காட்டிலும் பல பெண்கள் விரும்பும் அவனை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம்தான் அவளுக்குள் நிறைந்து இருக்கிறது.தொலைக்காட்சியில் மணிபாரதி தோன்றினால் ஆசையோடு முத்தமிடும் தோழியிடம்,தாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படத்தைக் காட்டி,இப்போ அவரு என் கைக்குள்ள என்கிறாள்.

  திருமணம் முடிந்து முதலிரவன்று கௌரி சொன்னது பொய் என அறியும் மணிபாரதிக்குக் கோபம் வருகிறது.இருந்தபோதிலும் நாளடைவில் அவன் கௌரியோடு ஒத்துப் போய்விடுகிறான்.

  ஆனால் கௌரியோ நாளுக்கு நாள் அவனை அதிகம் கட்டுப்படுத்த நினைக்கிறாள்.அவன் தனக்கு மட்டுமே முதலிடம் தரவேண்டும் என வம்பு செய்கிறாள்.அவனை எந்தப் பெண்ணும் இரசிக்கவும் கூடாது என சண்டை போடுகிறாள்.அவன் நிம்மதி கெடும் வண்ணம் நடந்து கொள்கிறாள்.

  தான் குளித்துவிட்டு வருவதற்குள் அவன் எங்கும் போய்விடக்கூடாது;யாரிடமும் பேசிவிடக்கூடாது என அவனை மெத்தையில் கட்டிப்போட்டு வைக்கிறாள்.

  தன் அன்பிற்கினியவனின் மேல் அதீத அன்பு வைக்கலாம்.தப்பில்லை.அவன் தன்னை விட்டுவிட்டு பிற பெண்களிடம் பேசினால் சிறு பொறாமை கூட கொள்ளலாம்.தவறில்லை.ஆனால் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகப்பட்டு,அடிமை மாதிரி ஒவ்வொரு கணமும் அவனை வாட்டி எடுத்தால் ஓர் ஆண்மகனால் எவ்வளவுதான் பொறுத்துப்போக முடியும்?அவன் மனதில் பெரும் வருத்தம் கொள்கிறான்.பாடலில் கூட அவனால் கவனம் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.

  தன் மனைவி அன்பானவளாக இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும் என அவன் ஏக்கம் கொள்கிறான்.சில சமயங்களில் தாங்கமுடியாமல் அவளிடம் முகம் காட்டிவிட்டாலும் அவள் காயப்பட்டுப்போனால் உடனே அவளிடம் சமாதானமாகிவிடுகிறான்.அவளோ அதிகாரப் போக்கு கொண்டவளாகவே இருக்கிறாள்.கோபம் வந்தால் அவன் மீது கறியை ஊற்றிவிடுகிறாள்.அவன் தேநீர் குடிக்கும்போது கோப்பையைத் தட்டிவிடுகிறாள்.ஒரு சினிமா நிகழ்ச்சியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நடிகை அவன் காதில் என்னவோ சொல்லி கிசுகிசுக்க,கௌரி முறைத்தபடி அந்த மண்டபத்திலிருந்து வெளியேறுகிறாள்.

  பொறுமையாக இருந்தாலும் சில வேளைகளில் அவள் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்ட அவன் தவறுவதில்லை.ஒரு தடவை வீட்டு சமையல்காரியின் மகளை தொலைபேசியைப் பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு அவள் சாவகாசமாக பேசுவதைப் பார்த்துவிட்டு,”இதென்னா எனக்குப் பிடிக்காத முதலாளித்துவம்?” என திட்டிவிடவே,அவள் கோபத்தில் வெடிக்கிறாள்.

 ஒரு வேலைக்காரி முன்னாடி என்னைக் கேவலப்படுத்தறீங்களா?” என அந்தச் சிறு பெண்ணோடு தொடர்புப்படுத்தி பேசுகிறாள்.

 அவளால் நிம்மதி இழக்கும் அவன் ஒருநாள் அவளிடம் சொல்லாமல் ஒரு விழாவுக்கு செல்கிறான்.அந்த விழாவில் அவனைக் கட்டியணைக்க வரும் ஒரு ரசிகையை அவன் பிடித்து தள்ளிவிட,அவள் அவன் கன்னத்தில் திடீர் முத்தம் கொடுக்க,அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கௌரி அதைப் பார்த்து கோபமாகிறாள்.

  அவன் இனிமேல் பாடவே கூடாது என கண்டிப்பாக சொல்ல,அவன் மறுக்கிறான்.அவள் கோபமாக அவனது புகைப்படத்தைக் கிழித்துப்போட்டுவிட்டு,அவன் பாடிய பாடல் குறுவட்டையும் உடைத்து எறிகிறாள்.மிகுந்த மனபாரத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பனின் வீட்டில் தங்குகிறான்.

  கௌரி பத்திரிக்கையாளர்களிடம் இனிமேல் தன் கணவன் பாடவே போவதில்லை என சொல்ல,அந்தச் செய்தி பத்திரிக்கையில் பிரசுரமாகிறது.கோபத்தோடு வீட்டுக்கு வந்து, வாக்குவாதம் செய்யும் கௌரியிடம்,”உனக்கு புருசனா இருக்கறது மட்டும்தான் என் வேலையா?: என கேட்டு,அறைந்துவிட்டு ஒலிப்பதிவு கூடத்திற்கு வருகிறான்.அதற்குள் அவன் தன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக அவன் மனைவி புகார் கொடுத்ததாக காவல் துறை அதிகாரி ஒலிப்பதிவு கூடத்திற்கே வந்து அ வனை விசாரித்துவிட்டுப்போக,அவனால் பாடவே முடியவில்லை.இன்னொருநாள் வந்து பாடிக்கொடுப்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.

  மறுநாள் டெல்லியில் தமிழ்ச்சங்க  கச்சேரி இருப்பதாக அவன் உதவியாளன் சொல்ல,அவன் மட்டும் தனியாக புறப்படுகிறான்.ஆனால் விமானத்தில் போகாமல் ஒரு பேருந்தில் ஏறி கோவாவுக்குப் புறப்படுகிறான்.அதே பேருந்தில் ஓடிவந்து ஏறுகிறாள் ஜோதி (சித்தாரா).

  அவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வரும் அவள் தன் கணவனின் சித்திரவதையில் இருந்து தப்பித்து வந்தவள்.அவள் ஏதோ இக்கட்டில் இருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொள்கிறான்.பேருந்து கொஞ்சநேரம் நிற்கும்போது கழிப்பறைக்குச் செல்லும் அவள் திரும்பி வருவதற்குள் பேருந்து புறப்பட்டுவிட,அவனும் அவளுக்காக பேருந்தில் இருந்து இறங்கிவிடுகிறான்.இருவரும் ஒன்றாக நடக்கிறார்கள்.அவள் எதற்கோ பயந்து வருகிறாள் என அவனுக்கும் புரியவே,அவள் மேல் இயல்பான பரிவு உண்டாகிறது.

   மழையில் நன்கு நனைந்துவிட்டதாலும்,இரவுப் பொழுது என்பதாலும் இருவரையும் குளிர் வாட்ட,ஆபத்துக்குப் பாவமில்லை என சொல்லி அவளைத் தன் குளிர் சட்டைக்குள் வந்து நுழைந்து கொள்ள சொல்கிறான்.கண்ணியமான முறையில் அவளும் தன் முதுகுப் பகுதியை அவன் நெஞ்சின் ஓரம் நுழைத்து குளிர்சட்டைக்குள் நுழைந்து கொள்கிறாள்.இருவரும் நடந்து போகும்போது தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள்.மழை நின்றுவிட்டாலும் இருட்டிவிட்டதால் விடியும்வரை அந்தப் பள்ளத்திலேயே இருக்கலாம் என்கிறான்.

  சேற்று மண்ணைக் குழைத்து அவள் விரல்களில் மருதாணி மாதிரி இட்டவாறு அவள் சோகத்தைப் பற்றி கேட்கிறான்.அவள் தன் கதையைச் சொல்கிறாள்.தன் கணவனே தன்னை துப்பாக்கி முனையில் காபரே நடனம் ஆடவைத்த அவலத்தைச் சொல்கிறாள்.அதையும் தாண்டி அவளை பணத்துக்காக இன்னொருவனுக்கு கூட்டிக்கொடுக்க நினைத்தபோது தாலியைக் கழற்றி விட்டெறிந்துவிட்டு அவனிடமிருந்து தப்பித்து ஓடிவந்த கதையைச் சொல்லி முடிக்கும் அவள் தன் கையில் அவன் இட்ட சேற்று மருதாணியைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறாள்.அவன் அன்பு அவளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது,அவனுக்கும் அதே நிலைதான்.அன்பும்,அமைதியும்,கனிவும் கொண்ட பெண்ணின் அருகாமை அவனை நிம்மதியடைய செய்கிறது.தன்னைப் போன்றே பலரது வாழ்க்கையிலும் சோகம் இருக்கிறது என புரிந்து கொள்ளும் அவனுக்குள் ஒரு நிம்மதி பிறக்கிறது.சிரித்த முகமய் இருக்கும் அவள் உடன் இருப்பதால் ஏதோ ஆனந்தம் உண்டாகிறது அவனுக்கு.

  மறுநாள் விடியலின்போது அவனது வாழ்வும் இதமாய் மலர்கிறது.பள்ளத்திலிருந்து சேறு பூசிய உடலோடு வெளியே வரும் அவர்களின் மேனியில் படும் மழைத்துளிகள் சேற்றைத் துடைக்கின்றன.வாழ்வில் இருந்த துன்பமும் துடைக்கப்பட்டதைப் போன்றதொரு விடுதலை உணர்வு இருவருக்கும் தோன்றுகிறது.இதுவரையில் மற்றவர்களை மகிழ்விக்க பாடியவன் முதன்முதலாக தனக்காக பாடுகிறான்.கானல் நீரால் தீராமல் இருந்த தாகம் கங்கை நீரான அவளால் தீர்ந்ததாக பாடுகிறான்.தான் தேடும் சுமைதங்கி அவள்தான் எனவும்,தன் மார்பில் தாயென அவனைத் தாலாட்டுபவள் அவள்தான் எனவும் அவன் அந்தப் பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகிறான்.அவனின் இதயகீதமாக எஸ்.பி.பாலா ஐயாவின் குரலில் ஒலிக்கும் அந்தக் கானத்தைக் கேட்டு நாமும் நம் கவலைகளை மறந்து,நம் சோகத்தைக் கலைத்துப்போட வந்த உறவுகளை எண்ணி குழந்தை மனதோடு குதூகலிக்கலாம் வாருங்கள்.

   .உங்கள் மனதுக்குப் பிடித்தமானவர்களை நினைத்துக்கொண்டு இந்தப் பாடல் வரிகளைப் பாடிப்பாருங்கள்.ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உண்டாகும் நிச்சயமாய்.எந்த எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடலைக் கேட்டாலும் எனக்குள் ஆனந்த ராகம் மீட்ட செய்யும் என் அன்பிற்கினியவனோடு,என் பால்ய வயது இரசனையில் இணைந்திருந்த லில்லி அக்காளுக்கும்,வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு சோகத்தோடும்,பிரச்சனையோடும் கடந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் சமர்ப்பணம்.

 


ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹ ஹா ஹ ஹ ஹா

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

ஆ ஆ ஆ ஆ

நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

 

எந்நாளும் தானே தேன் விருந்தாவது

பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்

இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா

எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்

கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீயிதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

 

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்

நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது

கால் போன பாதைகள் நான் போனபோது

கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

ஆ ஆ ஆ ஆ

நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நி..ம்..ம..தி
 
 

No comments:

Post a Comment