Tuesday, October 15, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 17 :பூங்காவியம் பேசும் ஓவியம்(கற்பூரமுல்லை)


        
 
 
      மாயாவினோதினி என்பது அவள் பெயர்.கொஞ்சம் திமிர்,நிறைய பிடிவாதம்.அதீத துணிச்சல் கொண்டவள்.பணப்பிரச்சனை என்பது அறவே இல்லாததால் அவளுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. சினிமா,கடற்கரை,ஷாப்பிங் என பல இடத்திற்கும் போய் சுற்றிவிட்டு கல்லூரிக்கு அடிக்கடி மட்டம் போடுபவள்.கண்ட நேரத்தில் கல்லூரி விடுதியின் சுவரேறி குதிப்பவள்.இப்படி சகல வாலுத்தனத்திற்கும் பெயர் போனவளின் வாழ்க்கை மருத்துவர் சீனிவாசனைப் பார்த்த பிறகு திசைமாறுகிறது.

  மாயா படிக்கும் கல்லூரியில் சக மாணவி ஒருத்தி தற்கொலைக்கு முயலவே,மருத்துவமனையில் தீவிரப் பிரிவில் சேர்க்கப்படுகிறாள்.அவளை யாரும் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என மருத்துவர் சீனிவாசன் கண்டிப்பாக சொல்லிவிட்டுப் போகிறான்.

  மாயா தன் பட்டாளங்களுடன் அந்த மருத்துவமனைக்குப் போகிறாள்.உள்ளே விடமாட்டேன் என்று சொல்லும் காவலாளியைக் கண்ணடித்து கவிழ்க்கிறாள்.மேலே சிகிச்சை அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்திருக்கும் சக மாணவியை எழுப்புகிறாள்.அந்த நேரத்தில் அங்கே வரும் மருத்துவர் சீனிவாசனுக்கு அவளது செய்கை கோபத்தை உண்டாக்க திட்டிவிடுகிறான்.அவள் வாய்க்கு வாய் பதில் வார்த்தை பேசுகிறாள்.அவனிடம் கண்ணடித்து,கொஞ்சலாக பேசி மயக்க முயல்கிறாள்.அதற்கெல்லாம் மயங்காத அவன்,காவலாளிகளை அழைத்து அவளையும்,அவளது தோழிகளையும் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனை வளாகத்தைவிட்டு அனுப்ப சொல்கிறான்.இனி இந்தப் பக்கம் அவளைப் பார்க்கவே கூடாது என எச்சரித்து அனுப்புகிறான்.

  மாயாவுக்கு கோபம் தலைக்குமேல் ஏறுகிறது.முதன்முதலில் தன் அழகுக்கும்,திமிருக்கும் அடங்காத ஒருத்தனா?அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என சபித்துவிட்டுப் போகிறாள்.தன்னை அவமானப்படுத்தி அனுப்பிய மருத்துவர் சீனிவாசனை எப்படி பழிவாங்குவது என தீவிரமாக யோசிக்கையில் அவனது அம்மா ஊரிலிருந்து வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது; அவளுக்கு ஒரே கொண்டாட்டம்.தன் தோழிகளுக்குச் சொல்லிக்கொடுத்து ஒவ்வொருவராக சீனிவாசனின் வீட்டுக்குப் போய் அவனது அம்மாவிடம் அவனது காதலி போல் நடிக்க சொல்கிறாள்.தோழிகள் தங்கள் உடைகளை வேண்டுமென்றே சீனிவாசனின் வீட்டில் ஒளித்துவைத்துவிட்டு சீனிவாசனின் அம்மாவின் முன் எடுப்பதுபோல் நடிக்கவே,சீனிவாசனின் அம்மா அதை நம்பிவிடுகிறார்.போதாததற்கு மாயாவும் வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகம் ஆட,சீனிவாசனின் அம்மா மனம் வெறுத்து சாவியைக் கொடுத்துவிட்டு தன் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறார்.

 ஒரு முதியவரைப் பரிசோதித்துக்கொண்டிருக்கும் சீனிவாசனிடம் அவனது வீட்டுச் சாவியைக் கொடுக்க,அவன் திகைப்படைகிறான்.நாக்கை நீட்டிக்கொண்டிருந்த அந்தப் பெரியவரை விட்டுவிட்டு,உடனே எழுந்து போய் வீட்டுக்கு அழைக்கிறான்.யாரும் அழைப்பை எடுக்காததால் மாயா சொன்னது நிஜமென அவனுக்குத் தெரிய வருகிறது.மாயாவின் மேல் கோபம் வருகிறது.


    கடுமையான வயிற்றுவலி என பொய் சொல்லி நடிக்கும் அவளை தோழிகள் தள்ளுவண்டியில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறார்கள்.அவள் நாடகமாடுகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட சீனிவாசன் ஓர் ஊசி போட்டால் சரியாகும் என கைகளைப் பற்றுகிறான்.அவள் தனக்கு கையில் ஊசி போடவேண்டாம் என்கிறாள்.பிறகு வேறு எங்கே போடுவது என அவன் கேட்க,அவள் தன் பிட்டத்தைக் காட்டி அங்கே ஊசி போடுமாறு வேண்டுமென்றே முகத்தை ஒருமாதிரி போதையாக வைத்துக்கொண்டு சொல்கிறாள்.

 சரி வா,உள்ளே போயி போட்டுக்கலாம்,” என அவளை உள்ளே அழைத்துப் போகும் சீனிவாசன் உள்ளே நுழைந்ததும் அவளது கையைப் பிடித்து முறுக்கி திட்டுகிறான்.

  எனக்கு உங்க மேல மோகம்,” என்கிறாள் குறும்பாய்.அவனைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்கிறாள்.அவன் அவளது கையை விட்டுவிட்டு உற்று நோக்குகிறான் ஒருகணம்.

 ம்ம் உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை,ஆனால் நான் உன்னைப் பற்றி நிறைய மோசமான விசயங்களைக் கேள்விப்பட்டிருக்கேனே?நீ கண்டமாதிரி சுத்தற பொண்ணு,கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாதவள்,கஞ்சா பழக்கமெல்லாம் உண்டு,ஆபாசமா நடந்துக்கறவ,அர்த்தராதிரியி விடுதி சுவரேறி குதிக்கறவ,” என அவன் வேண்டுமென்றே இல்லாததையெல்லாம் சொல்ல,அவள் திடுக்கிட்டு நிற்கிறாள்.

 அதெல்லாம் கூட பரவாலை,ஆனா வேற ஒன்னு கேள்விப் பட்டேனே?” என்கிறான்.

 என்ன?” என்கிறாள்.

மாயா வினோதினி ஓர் அனாதை!அப்பா யாரு,அம்மா யாருன்னே தெரியாத ஒருத்தி,இன்னும் பச்சையா சொல்லனும்னா எங்கே,எப்போ,யாருக்குப் பொறந்தோம்னே தெரியாதவ,” என அவன் கடுமையாய் பேச,அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன;உதடுகள் வெம்பித் துடிக்கின்றன.

 எங்க அம்மாவையும்,அப்பாவையும் கண்டுபிடிச்சி வந்து உங்க முன்னாடி நிறுத்தினா என்னைக் கல்யாணம் பண்ணிக்குவீங்க இல்லே?” என அழுதுக்கொண்டே கோபத்தோடு சொல்லிவிட்டுப் போகிறாள்.

  மறுநாள் அவள் மருத்துவமனையில் அத்து மீறி நடந்ததாக அவள் மீது சீனிவாசன் புகார் கொடுத்திருந்ததில் கல்லூரி நிர்வாகம் அவளைக் கல்லூரியை விட்டு நீக்கும் முடிவை எடுக்க,அவளது பாதுகாவலராக இருக்கும் சிவபிரசாத் கல்லூரி முதல்வரிடம் இனிமேல் மாயா அப்படி செய்யமாட்டாள் என வாக்குறுதி கொடுத்து அவளை அழைத்து வருகிறார்.

 மாயா சிவபிரசாத்திடம் தனது அம்மாவைப் பற்றிய விசயங்களைச் சொல்லுமாறு வற்புறுத்துகிறாள்.அவர் மௌனமாக இருக்கவே,அவளது பிடிவாதம் அதிகரிக்கிறது.கல்லூரியின் மாடியிலிருந்து கீழே குதிக்கிறாள்.அவளுடைய தோழிகள் பதறிப் போய் அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

  சீனிவாசன் ரத்தக்காயத்தோடு அவளைப் பார்த்ததும் பதறிப்போகிறான்.அவளுக்குச் சிகிச்சை அளித்து அவள் கண்விழிக்கும்வரை அவள் அருகிலேயே இருக்கிறான்.அவள் கண்விழித்ததும் அவனிடம் மீண்டும் வம்பு செய்கிறாள்.நான் இன்னும் சாகலையா?அடுத்த முறை இன்னும் கொஞ்சம் உயரமான இடத்திலிருந்து குதிக்கனும்,” என்கிறாள்.இப்போ உங்களுக்கு என் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்திருக்குதானே?” என கேட்கிறாள்.இம்முறை அவன் கோபப்படவில்லை என்றாலும் சிறு புன்னகையோடு மறுக்கிறான்.

  சிவபிரசாத் அவளைப் பார்க்க வருகிறார்.இனியும் மறைத்தால் அவள் விபரீதமான முடிவை எடுத்தாலும் எடுப்பாள் என்ற அச்சத்தில் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்ல முன்வருகிறார்.பிரபல கர்நாடக பாடகியான வசுந்தராதேவிதான் அவளது தாய் எனவும்,16 வருடங்களுக்கு முன்னர் மூன்று வயது குழந்தையாக இருந்த அவளைத் தன்னிடத்தில் கொடுத்து வளர்க்கும்படி சொன்னதாகவும் மாதந்தோறும் அவளுடைய செலவுக்கென கணிசமான தொகையை அனுப்பிவைப்பதாகவும் சொல்கிறார்.அவளுடைய தந்தையைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாதெனவும் அவர் சொல்ல,அவளுக்கு தன் தாயைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது.மறைந்திருந்து தன் தாயைப் பார்க்கிறாள்; தன் தாயின் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.

  தன் தாயைப் பற்றி தெரிந்து கொண்ட மாயா தன் தோழிகளை அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்கும் பாவனையில் அனுப்பிவைப்பதோடு தானும் தனியே போய் ஆட்டோகிராஃப் வாங்குகிறாள்.

 
அஞ்சு மகேந்திரா என்ற பொய்யான பெயரைச் சொல்லி தொலைபேசியில் அழைத்துப் பேசும் மாயா,நான் எங்கம்மாவை வந்து பார்க்கலாமா?” என கேட்டுவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு அழுகிறாள் தனிமையில்.

  மாயா செய்ததெல்லாம் வசுந்தராதேவியின் வயிற்றில் அமிலத்தைக் கரைக்க,உடனே தன் மானேஜர் பலராமையும்,சிவபிரசாத்தையும் சந்தித்துப் பேசுகிறார்.சிவபிரசாத்திடம் மாயாவிடம் தான் சொன்னதெல்லாம் பொய் என சொல்லி அவளைத் தன்னைவிட்டு விலக செய்யுமாறு கேட்கிறார்.

  சிவபிரசாத் மாயாவிடம் வசுந்தராதேவி எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாயாவை மகளாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என சொல்லிவிட்டதாகவும்,அவளுக்கு வேண்டிய பாசத்தை தானும்,தன் மனைவியும் கொடுப்பதாக சொல்ல,அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவளது குறும்புத்தனம் மறைந்து சோகம் அவளை ஆட்கொள்கிறது.தாய் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் தன்னை அவமானமாய் உணர்ந்து துவண்டு போகிறாள்.

  இந்நிலையில் சீனிவாசன் மீண்டும் அவளைத் தேடி வருகிறான்.அவளது நிலை உண்மையிலேயே அப்படிதான் இருக்கிறது என தெரியாமல் சொல்லிவிட்டதாக சொல்வதோடு இப்போதெல்லாம் அவளது வாலுத்தனங்கள் குறைந்துவிட்டதையும் சுட்டிக்காட்டி அவள் மனதை நோகடித்ததற்காக மன்னிப்பு கேட்கிறான்.தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்கிறான்.அவளோ மறுக்கிறாள்.தனக்கு இப்போது திருமணத்தில் ஆர்வம் இல்லையெனவும்,தன் பெற்றோரைத் தேடி கண்டு பிடிப்பதுதான் தன் முக்கிய பணி என்கிறாள்.

   இந்த ஜென்மத்துல உன் அம்மா,அப்பாவைக் கண்டுபிடிக்க முடியாது,போடி பைத்தியக்காரி என சொல்லிவிட்டு அவனும் கோபமாக புறப்பட்டு போகிறான்.

  மாயாவுக்குள் தன் அன்னையிடம் போய் சேரவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிறது.தன் அன்னை தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என்ற கோபத்தில் தன் தாயாரின் கச்சேரி நடக்கும் சபையில் மாயா கலாட்டா செய்கிறாள்.விசிலடித்தபடி நடனமும் ஆடுகிறாள்.அவளைக் காவல்துறை பிடித்துக்கொண்டு போக,அரைமணி நேரத்திற்குள் அவளைக் கொண்டுவந்து தன்முன் நிறுத்தும்படி பணிக்கிறார் வசுந்தராதேவி.

  தன் முன் நிற்பவளிடம் தான் தான் அவளது அம்மா என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் வசுந்தரா இத்தனை நாள் என்ன காரணத்திற்காக அவளை மகள் என ஊரறிய ஒப்புக்கொள்ளவில்லையோ அதே காரணத்துக்காக இனியும் கூட அவளைத் தன் மகள் என ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறாள்.அவளுக்கு என்ன வேண்டுமானால் செய்துகொடுக்க முடியும்;ஆனால் ஒரு தாயிடமிருந்து கிடைக்கும் அன்பு,அரவணைப்பை மட்டும் தரமுடியாது என்கிறாள்.மாயாவுக்கு கோபமும்,அழுகையும் ஒருசேர வருகிறது.

 அப்படின்னா எதுக்காக என்னைப் பெத்தீங்க,தெருநாயை விட கேவலமான என்னை எதுக்காக இத்தனை வருசம் வரைக்கும் வளர வெச்சி இவ்வளோ அவமானம் படவைக்கறீங்க?நான் உங்களை பலமடங்கு வெறுக்கிறேன்,” என கோபமாய்ச் சொல்லிவிட்டு ஆண்களுடன் கண்டபடி சுற்ற ஆரம்பிக்கிறாள்.அதைப் பொறுக்கமாட்டாமல் தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள் வசுந்தரா.தான் அவளை ஊரறிய மகளாக ஏற்றுக்கொண்டால் அவளது தந்தை யாரென சொல்லவேண்டி வரும்.சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் அவரது நற்பெயர் கெடக்கூடும் என்ற ஒரே காரணத்துக்காகதான் அவளைத் தன் மகளாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்ற காரணத்தை அவளிடம் சொல்கிறார்.அதுமட்டுமின்றி தான் கர்ப்பமடைந்தது தெரிந்ததும் அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்,தான் தன் மனைவியிடம் சொல்லி வசுந்தராவையும் திருமணம் செய்துகொள்வதாக அவர் சொல்ல,அவருடைய நல்ல உள்ளத்திற்காகவே அவரது பெயர் கெடவிரும்பாமல் குழந்தையைக் கலைத்துவிட்டதாக அவரிடம் பொய் சொல்லிவிட்டு மும்பையில் தனித்து வாழ்ந்ததாக வசுந்தரா சொல்ல,மாயாவுக்கு தன் தாயின் இக்கட்டான நிலை புரிகிறது.

  இதை நீ எப்பவோ சொல்லியிருந்தா நான் இவ்வளோ கஷ்டப்பட்டிருக்கமாட்டேனே,எதுக்கும்மா இத்தனை நாளா என்னைத் தவிக்க வெச்சே?ஊரறிய வேண்டாம்,யாருக்கும் தெரியாமல் நாலு சுவத்துக்குள்ளயாவது என்னை மகளா கொஞ்சக்கூடாதா?” என அவள் விசும்பியபடி கேட்க,வசுந்தராவின் தாய்மை ஊற்றெடுக்க மகளை உச்சிமுகர்ந்து கொஞ்சுகிறாள்.அப்போது ஒலிக்கும் தாலாட்டுப் பாடல்தான்பூங்காவியம் பேசும் ஓவியம்’.

  1991-ஆம் ஆண்டு வெளிவந்த கற்பூர முல்லை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது.தாயின் பாசத்தை போராடி பெறும் ஒரு பெண்ணின் கதை.இயக்குனர் பாசில் இயக்கி,அமலா,ஸ்ரீவித்யா,ராஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் கதாநாயகி அமலாவின் பெயர் மாயாவினோதினி.ஒரு கர்நாடக இசையின் பெயர் என்பதால் இப்படத்தின் பின்னணி இசையையும் மாயாவினோதினி ராகத்தில் வழங்கியிருப்பார் இளையராஜா.

  இப்பாடலை பி.சுசிலா தனித்தும் பாடியிருப்பார்.தாயும் மகளும் சேரும் காட்சியில் ஜேசுதாஸ் குரலில் நெகிழ்வாய் ஆரம்பிக்கும் பாடலை பின்னர் சுசிலா அம்மாவும்,சித்ரா அம்மாவும் தொடர்ந்து பாடியிருப்பார்கள்.முடிவில் மீண்டும் ஜேசுதாஸ் அய்யா தாலாட்டுவார்.அற்புதக் குரல்களின் சங்கமமாய் இப்பாடல் ஒலிக்கும். தாயின் முதல் ஸ்பரிசத்தில் நெகிழும் மகளின் உணர்வையும்,தாய்மை ஊற்றெடுக்கும் தாயின் உணர்வையும் வெகு அழகாக இப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்கள்.தாலாட்டு கேட்பதற்காக இந்தப் பெண் எவ்வளோ போராடினாள்;வாடினாள் எனவும் இனி இப்பூகள் யார் மகள் என எவராவது கேட்கக்கூடுமா எனவும் கவிஞர் வாலியின் இப்பாடல் வரிகள் சொல்கின்றன.வயலின் இசையோடு கலந்து நெஞ்சை வருடும் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் சுகமாய் கண்மூடி உறங்க முடிகிறது.இந்த இனிய தாலாட்டை என் அன்புக்கு முழுமுதற் சொந்தமான அன்பிற்கினியவனோடு தாயின் முகம் கூட பார்த்தறியாமல் ஆதரவற்ற இல்லங்களில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும்,தாயை இழந்து தவிக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

 

பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ

வெள்ளிப் பன்னீரோ ஆரிரோ ஆரோ

பூங்காவியம் பேசும் ஓவியம்

 

பாட்டுதான் தாலாட்டுதான்

கேட்கக்கூடும் என நாளும்

வாடினாள் போராடினாள்

வண்ணத்தோகை நெடுங்காலம்

தாய்முகம் தரிசனம் தரும் நாளிது

சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

பாசம் மீறும்போது

பேசும் வார்த்தை ஏது

பாசம் மீறும்போது

பேசும் வார்த்தை ஏது

ஓ ஓ ஓ ஓ

மயக்கத்தில் மனம் சேர்ந்தது

பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ

வெள்ளிப் பன்னீரோ ஆரிரோ ஆரோ


யார் மகள் இப்பூமகள்

ஏது இனி இந்தக் கேள்வி

கூட்டிலே தாய்வீட்டிலே

வாழும் இனி இந்தக் குருவி

பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்

நாளெல்லாம் தளிர்விடும் இந்தப் பூவனம்

வானம் பூமி வாழ்த்தும்

வாடைக் காற்றும் போற்றும்

வானம் பூமி வாழ்த்தும்

வாடைக் காற்றும் போற்றும்

ஓ ஓ ஓ ஓ புதுக்கதை அரங்கேறிடும்...

பூங்காவியம் பேசும் ஓவியம்

பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ

வெள்ளிப் பன்னீரோ ஆரிரோ ஆரோ

பூங்காவியம் பேசும் ஓவியம்
 
 

No comments:

Post a Comment